அவளுடைய விசுவாசம் மற்றவர்களையும் ஊக்கப்படுத்துகிறது
சில்வியா டிசம்பர், 1992-ல் பிறந்தபோது, முற்றிலும் ஆரோக்கியமானவளாகவே தோன்றினாள். ஆனால் இரண்டு வயதானபோது, ‘நீர்க்கட்டி நார்மிகு நோய்’ (cystic fibrosis) என்ற குணமாக்க முடியாத நோய் அவளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; இது, நாட்கள் செல்லச்செல்ல கடுமையாகும் சுவாசத் தொல்லையையும், ஜீரணச் சிக்கலையும் உண்டாக்கும். இந்த நோயைச் சமாளிக்க, அவள் தினமும் 36 மாத்திரைகளை விழுங்குகிறாள், அவள் சுவாசிக்கும் மூச்சிலும் மருந்தை உள்ளிழுக்கிறாள். அதோடு, அவளுக்கு உடற்பயிற்சி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அவளுடைய நுரையீரலின் ஆற்றல் 25 சதவிகிதம் மட்டுமே இயல்பாக இருப்பதால், ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர் எப்போதும்—வெளியே சென்றாலும்கூட—அவளோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.
“எப்படித்தான் இந்த நோயை சமாளிக்கிறாளோ, ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. பைபிளைப் பற்றி அவளுக்கு இருக்கும் அறிவினால் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறாள். இந்த விசுவாசம்தான் துன்பத்தைத் தாங்கவும், மன உளைச்சலைச் சமாளிக்கவும் அவளுக்கு உதவுகிறது. நோயே இல்லாத புதிய உலகைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியை அவள் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்” என்கிறார் அவளுடைய அம்மா, டேரேசா. (வெளிப்படுத்துதல் 21:4) சில நேரங்களில் அவளுடைய குடும்பம் சோர்வாக உணரும்போது, சில்வியாவின் நம்பிக்கை ததும்பம் புன்னகை அவர்களை உற்சாகப்படுத்துகிறது. “இப்பொழுது நாம் படுகிற எந்தக் கஷ்டமும் புதிய உலகத்தில் இருக்காது” என்று தன் பெற்றோரிடமும், அண்ணனிடமும் சொல்கிறாள்.
சில்வியா, கடவுளுடைய வார்த்தையின் நற்செய்தியை தவறாமல் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறாள்; அவள் பேசும்போது அவளுடைய முகத்தில் சந்தோஷம் பிரகாசிப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவள் செல்கிற கெனாரி தீவுகளில் உள்ள கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களும், அவளுடைய பதில்களைக் கேட்பதிலும், கூட்டத்தில் அவள் பங்கேற்பதைப் பார்ப்பதிலும் மிகுந்த சந்தோஷமடைகிறார்கள். ஒவ்வொரு கூட்டமும் முடிந்த பிறகு, அவளுடைய கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுடன் பேசுவதற்கு அங்கேயே இருக்க விரும்புகிறாள். அவளுடைய உற்சாகமான, சிநேகமான குணம் அவள்மீது அன்பு செலுத்த சபையிலுள்ள ஒவ்வொருவரையும் தூண்டுகிறது.
“சில்வியா ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறாள். பிரச்சினைகள் மத்தியில் நாம் வாழ்ந்தாலும், உயிர் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு பரிசு, அதற்காக நாம் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்” என்கிறார் அவளுடைய அப்பா, ஆன்டோன்யா. அவளைப்போல, கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும்—இளைஞர்களும், முதியவர்களும்—‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ காலத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள்.—ஏசாயா 33:24.
[பக்கம் 31-ன் படம்]
அவளுடைய அம்மா ஆக்ஸிஜன் சிலிண்டரை பிடித்திருக்க சில்வியா பைபிளிலிருந்து வாசிக்கிறாள்