கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்படுகின்றனர்
“உங்களைக் குறித்தும் மந்தை முழுவதையும் குறித்தும் கவனமாக இருங்கள்; . . . பரிசுத்த ஆவியே உங்களை கண்காணிகளாக நியமித்தது.”—அப்போஸ்தலர் 20:28, NW.
1, 2. ஏசாயா 60:22 எவ்வாறு இன்று நிறைவேறுகிறது?
கடைசி காலத்தில், கவனத்தைக் கவரும் ஒரு சம்பவம் நடக்கும் என்பதாக யெகோவா பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனம் உரைத்தார். “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் சொன்னார்.—ஏசாயா 60:22.
2 இந்தத் தீர்க்கதரிசனம் தற்காலத்தில்தான் நிறைவேறுகிறது என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா? நிச்சயமாகவே! அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் பென்ஸில்வேனியாவில் உள்ள அல்லெகெனியில் 1870-களில் யெகோவா தேவனுடைய ஜனங்களின் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டது. அது ஒரு சிறிய ஆரம்பம்தான். ஆனால் அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சபைகள் உலகம் முழுவதும் தோன்றின. அவை இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று, இது ஒரு வல்லமை வாய்ந்த தேசமாக ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். இதைச் சேர்ந்த லட்சக்கணக்கான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் 235 நாடுகளில், 91,000-த்திற்கும் அதிகமான சபைகளில் கூடிவருகின்றனர். உண்மை வணக்கத்தாரை கூட்டிச் சேர்க்கும் வேலையை யெகோவா தேவனே விரைவாக்குகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஏனெனில், “மிகுந்த உபத்திரவம்” திடீரென்று, வெகு சீக்கிரத்தில் ஆரம்பமாகப்போகிறது.—மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 7:9-14.
3. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவது என்றால் என்ன?
3 இந்த லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்கு தாங்களாகவே மனமுவந்து தங்களை ஒப்புக்கொடுத்திருக்கின்றனர்; இவர்கள் இயேசுவின் கட்டளைக்கு இணங்க “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். (மத்தேயு 28:19) ‘பிதாவின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது என்றால் என்ன? யெகோவாவே தங்களுடைய பரலோக தந்தை என்பதையும் அவரே தங்களுக்கு உயிரை அளித்தவர் என்பதையும் புரிந்துகொண்டு அவரது பேரரசுரிமைக்கு கீழ்ப்படிவதை அர்த்தப்படுத்துகிறது. ‘குமாரனுடைய நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது என்றால், இயேசு கிறிஸ்துவே மீட்கும் பொருளை அளித்தவர், தலைவர், ராஜா என்பதை அறிந்து ஒப்புக்கொள்வதை குறிக்கிறது. ‘பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது என்பது, தங்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்த கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தி தேவை என ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது.
4. கிறிஸ்தவ ஊழியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்?
4 இந்தப் புதிய சீஷர்கள் முழுக்காட்டப்படும்போது யெகோவா தேவனுடைய ஊழியர்களாக நியமிக்கப்படுகின்றனர். யார் அவர்களை நியமிப்பது? 2 கொரிந்தியர் 3:5-ல் (பொ.மொ.) சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை விதி இவர்களுக்குப் பொருந்தும்: “[ஊழியர்களாக] எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.” யெகோவா தேவனாலேயே நியமிக்கப்படுவதைவிட சிறந்த மதிப்பு இருக்க முடியுமா? அவர்கள் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு “நற்செய்தியின்” பிரசங்கிப்பாளர்களாக ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேறுவார்கள். இந்த முன்னேற்றம் கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதையும், கடவுளுடைய வார்த்தையை பொருத்தி பிரயோகிப்பதையும் சார்ந்திருக்கிறது.—மத்தேயு 24:14, NW; அப்போஸ்தலர் 9:31.
ஜனநாயகத்தின்படி அல்ல தேவராஜ்ய அடிப்படையில் நியமனம்
5. கிறிஸ்தவ கண்காணிகளும் உதவி ஊழியர்களும் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனரா? விளக்கவும்.
5 இவ்வாறு ஊழியர்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவர்களின் ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அநேக முதிர்ச்சிவாய்ந்த கண்காணிகளும் திறமையான உதவி ஊழியர்களும் அவசியம். (பிலிப்பியர் 1:1) ஆன்மீகத்தில் தகுதி பெற்ற இந்த ஆண்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்? கிறிஸ்தவ மண்டலத்தின் வழிமுறைகள் இங்கே பின்பற்றப்படுவதில்லை. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ கண்காணிகள் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதாவது, சபையில் உள்ள அங்கத்தினருடைய பெரும்பான்மை ஓட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு பதில் இவர்கள் தேவராஜ்ய அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். இதன் அர்த்தம் என்ன?
6. (அ) உண்மையான தேவராஜ்ய முறை என்றால் என்ன? (ஆ) கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தேவராஜ்ய அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் என்று ஏன் சொல்லலாம்?
6 உண்மையான தேவராஜ்ய முறை என்பதன் பொருள் கடவுளுடைய ஆட்சி என்பதே. யெகோவாவின் சாட்சிகள் மனமுவந்து அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிகின்றனர்; அவருடைய சித்தத்தை செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கின்றனர். (சங்கீதம் 143:10; மத்தேயு 6:9, 10) பரிசுத்த வேதாகமத்தில் கடவுள் கொடுத்திருக்கும் வரைமுறைகளுக்கு ஏற்ப கிறிஸ்தவ கண்காணிகள் அல்லது மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்; அவர்கள் பரிந்துரைக்கப்படுவதும் பின்னர் கண்காணிகளாக நியமிக்கப்படுவதும் வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுவதால் அவர்கள் தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறோம். “எல்லாருக்கும் தலைவராய்” இருப்பவர் யெகோவா தேவனே, எனவே தம்முடைய காணக்கூடிய அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கே இருக்கிறது.—1 நாளாகமம் 29:11; சங்கீதம் 97:9.
7. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணப்படும் நிர்வாக முறை என்ன?
7 கிறிஸ்தவ மண்டல மதத் தொகுதிகளுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் மத்தியில் வித்தியாசங்கள் ஏராளம். அவர்கள் கடைப்பிடிக்கும் மத அமைப்புமுறைகளை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுவதில்லை. மத அமைப்பைப் பொருத்தவரை இந்த உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் தராதரங்களையே பின்பற்றுகின்றனர், சொந்த தராதரங்களை அல்ல. அவர்களுடைய சபைகளில் இருக்கும் கண்காணிகள் சர்ச்சுகளிலுள்ள முறைகளின்படி நியமிக்கப்படுவதில்லை; அதாவது, அவர்களை சபை அங்கத்தினர்களோ, உயர்ந்த பதவியில் இருப்பவர்களோ சபையில் இருக்கும் மூப்பர்களின் ஒரு குழுவோ நியமிப்பதில்லை. இப்படிப்பட்ட நியமிப்புகளில் உலகப்பிரகாரமான செல்வாக்குகள் தலையிடுவதையும் யெகோவாவின் ஜனங்கள் அனுமதிப்பதில்லை. ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியம்’ என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தைரியமாக சொல்லி, தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருந்தனர்; இவர்களைப்போல யெகோவாவின் சாட்சிகளும் தங்களுடைய தீர்மானத்தில் நிலையாக இருக்கின்றனர். (அப்போஸ்தலர் 5:29, NW) எனவே, சாட்சிகள் எல்லா விஷயங்களிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிகின்றனர். (எபிரெயர் 12:9; யாக்கோபு 4:7) இவர்கள் தேவராஜ்ய முறைகளைப் பின்பற்றுவதால் தேவனுடைய அங்கீகரிப்பைப் பெறுகின்றனர்.
8. ஜனநாயக முறைகளும் தேவராஜ்ய ஏற்பாடுகளும் எவ்வாறு வேறுபடுகின்றன?
8 மிகப் பெரிய தேவாட்சியாளரான யெகோவா தேவனுடைய ஊழியர்களாகிய நாம் ஜனநாயக முறைகளுக்கும் தேவராஜ்ய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்திருக்க வேண்டும். ஜனநாயக முறை என்றால், அதில் எல்லா தரப்பு மக்களும் சரிசமமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும், ஒரு பொறுப்புள்ள ஸ்தானத்திற்கு வருவதற்கு தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டும், அதிகப்படியான ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பட்ட முறைகள் தேவராஜ்ய நியமிப்புகளில் பின்பற்றப்படுவதில்லை. இந்த நியமிப்புகள் மனிதர்களால் செய்யப்படும் நியமிப்புகள் அல்ல. அதே போல அவை ஒரு சட்டப்பூர்வ நிறுவனத்தில் இருந்து வருவதும் கிடையாது. பவுல், தான் ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக’ யெகோவாவாலும் இயேசுவாலும் நியமிக்கப்பட்டதாக கலாத்தியர்களிடம் சொன்னார்; ‘மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிறேன்’ என்று அவர் சொன்னார்.—ரோமர் 11:13; கலாத்தியர் 1:1.
பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுதல்
9. கிறிஸ்தவ கண்காணிகளின் நியமனம் பற்றி, அப்போஸ்தலர் 20:28 குறிப்பிடுவது என்ன?
9 எபேசு பட்டணத்தில் வாழ்ந்த மூப்பர்கள், கடவுளால் பரிசுத்த ஆவியின் மூலம் கண்காணிகளாக நியமிக்கப்பட்டார்கள் என்ற உண்மையை பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டினார். “உங்களைக் குறித்தும் மந்தை முழுவதையும் குறித்தும் கவனமாக இருங்கள்; தேவன் தம்முடைய குமாரனுடைய ரத்தத்தால் விலைகொடுத்து வாங்கிய தேவனுடைய சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவியே உங்களை கண்காணிகளாக நியமித்தது.” (அப்போஸ்தலர் 20:28, NW) தேவனுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்பளிக்கப்பட்ட கிறிஸ்தவ கண்காணிகள் தொடர்ந்து பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட பொறுப்பான வேலையை செய்யும் ஒருவர் தெய்வீக தராதரங்களை பின்பற்றவில்லை என்றால் அந்த ஸ்தானத்தில் இருந்து பரிசுத்த ஆவியாலேயே ஏற்ற சமயத்தில் நீக்கப்படுவார்.
10. தேவராஜ்ய நியமிப்புகளில் பரிசுத்த ஆவி எவ்வாறு ஒரு முக்கிய பங்காற்றுகிறது?
10 இந்த விஷயத்தில் பரிசுத்த ஆவி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று எப்படி சொல்லலாம்? முதலாவதாக, ஆன்மீக விஷயங்களில் கண்காணிப்பு செய்வதற்கான தகுதிகள் அடங்கிய பதிவுகள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவை. தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் எழுதிய கடிதங்களில் கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்கும் இருக்கவேண்டிய தகுதிகளை பவுல் விவரிக்கிறார். அவற்றில் மொத்தமாக 16 இன்றியமையா தேவைகளை வரிசைப்படுத்துகிறார். உதாரணத்திற்கு, கண்காணிகள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவர்களாகவும், தங்களுடைய பழக்கங்களில் ஜாக்கிரதை உள்ளவர்களாகவும், தெளிந்த புத்தி உள்ளவர்களாகவும், கட்டுப்பாடுகளை மதித்து நடப்பவர்களாகவும், உபசரிப்பவர்களாகவும், கற்பிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாகவும், நல்ல குடும்பத் தலைவர்களாகவும் இருக்க வேண்டும். மதுபானங்களை உட்கொள்ளுவதில் சமநிலையைக் காத்துக்கொள்பவர்களாகவும், பண ஆசை இல்லாதவர்களாகவும், தன்னடக்கம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். இதைப்போலவே, உதவி ஊழியர்களாக இருப்பதற்கும் உயர்ந்த தராதரங்கள் உள்ளன.—1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:5-9, NW.
11. சபையில் பொறுப்புகளை நாடுகிற ஆண்களிடம் இருக்க வேண்டிய சில தகுதிகள் யாவை?
11 இந்தத் தகுதிகளை ஆராய்கையில், யெகோவாவின் வணக்கத்தில் மற்றவர்களை வழிநடத்துபவர்கள் கிறிஸ்தவ குணங்களில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. சபையில் பொறுப்புகளை நாடுபவர்கள் பரிசுத்த ஆவி தங்களில் கிரியை செய்கிறது என்பதற்கு அத்தாட்சி அளிக்க வேண்டும். (2 தீமோத்தேயு 1:14) இந்த ஆண்களின் மீது கடவுளுடைய பரிசுத்த ஆவி, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற கனிகளை பிறப்பிப்பது தெளிவாய் இருக்க வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) சபையில் இருக்கும் கிறிஸ்தவர்களோடும் மற்றவர்களோடும் இவர்கள் பழகும்போது இந்தக் கனிகள் இவரிடம் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிய வேண்டும். ஆவியின் கனிகள் சிலவற்றில் சிலர் சிறந்து விளங்குவர் என்பதும் மற்றவர்கள் கண்காணிகளுக்கான மற்ற தகுதிகளில் சிறந்து விளங்குவர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், இவர்களது வாழ்க்கை முழுவதையும் எடுத்துக்கொண்டால் இவர்கள் ஆன்மீகத்தில் அக்கறை மிக்க ஆண்கள் என்பதற்கும் கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் தராதரங்கள் இவர்களிடம் இருக்கின்றன என்பதற்கும் அத்தாட்சி காணப்பட வேண்டும். மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட விரும்பும் அனைவரிடமும் இது எதிர்பார்க்கப்படுகிறது.
12. யார் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டதாக சொல்லலாம்?
12 இயேசு கிறிஸ்து, “தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. பவுல் அந்தளவிற்கு இயேசுவை நெருக்கமாக பின்பற்றியதால் தன்னைப் பின்பற்றும்படி மற்றவர்களிடம் எவ்வித தயக்கமுமின்றி சொல்ல முடிந்தது. (1 பேதுரு 2:21; 1 கொரிந்தியர் 11:1) கண்காணிகளாக அல்லது உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்கள் வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் தராதரங்களை பூர்த்தி செய்கின்றனர்; எனவே அவர்கள் நியமிக்கப்படும்போது பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்வது பொருத்தமானதே.
13. சபையில் சேவை செய்வதற்காக ஒருவர் பரிந்துரை செய்யப்படும்போது, பரிந்துரை செய்யும் கண்காணிகளுக்கு பரிசுத்த ஆவி எவ்வாறு உதவியளிக்கிறது?
13 கண்காணிகளை நியமிப்பதற்காக பரிந்துரை செய்வதிலும் நியமிப்பதிலும் பரிசுத்த ஆவி எவ்வாறு செயல் புரிகிறது என்பதை இன்னொரு முக்கிய விஷயமும் சுட்டிக்காட்டுகிறது. ‘பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார்’ என்பதாக இயேசு சொன்னார். (லூக்கா 11:13) சபை பொறுப்புகளை கையாளுவதற்கு சகோதரர்களை நியமிக்க வேண்டி இருக்கிறது; இந்த நோக்கத்திற்காக சபையின் மூப்பர்கள் கூடும்போது கடவுளுடைய ஆவி தங்களை வழிநடத்தும்படி ஜெபிக்கின்றனர். தங்களுடைய பரிந்துரைகளை அவர்கள் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் அடிப்படையில் செய்கின்றனர்; வேதவார்த்தைகளின் தராதரங்கள் ஒரு நபரிடம் இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்கு பரிசுத்த ஆவி உதவியளிக்கிறது. பரிந்துரை செய்பவர்கள் ஒரு சகோதரனுடைய வெளித் தோற்றம், கல்வித் தகுதிகள் அல்லது தனிப்பட்ட திறமைகளைப் பார்த்து தவறாக எடை போட்டுவிடக்கூடாது. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் அந்த சகோதரன் ஆவிக்குரியத்தன்மை உள்ளவரா என்பதும், ஆவிக்குரிய வழிநடத்துதலுக்காக சபையார் அவரிடம் தாராளமாக அணுகுவார்களா என்பதும்தான்.
14. அப்போஸ்தலர் 6:1-3-லிருந்து எதைக் கற்றுக்கொள்கிறோம்?
14 மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்வதற்கு சபையின் மூப்பர் குழுக்கள் பயணக் கண்காணிகளோடு சேர்ந்து பரிந்துரை செய்கின்றனர்; ஆனால், முதல் நூற்றாண்டின் மாதிரியின்படிதான் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு சமயத்தில் சபையில் முக்கியமான வேலை செய்வதற்கு ஆவிக்குரிய தகுதி வாய்ந்த ஆண்களின் தேவை ஏற்பட்டது. அப்போதிருந்த ஆளும் குழு பின்வரும் புத்திமதியை அளித்தது: “நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.” (அப்போஸ்தலர் 6:1-3, பொ.மொ.) அங்கு இருந்த சகோதரர்களே தகுதிவாய்ந்தவர்களை பரிந்துரை செய்தனர், ஆனாலும் எருசலேமிலிருந்த பொறுப்பு மிக்க சகோதரர்கள்தான் அவர்களை நியமித்தனர். இன்றும் இதே போன்ற வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது.
15. சகோதரர்களை நியமிப்பதில் ஆளும் குழு எவ்வாறு உட்பட்டிருக்கிறது?
15 யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு, கிளை அலுவலக குழுவினர்களை நேரடியாக நியமிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பில் யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்யும்போது ஆளும் குழுவினர் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை மனதில் வைத்து செயல்படுகின்றனர்: “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.” (லூக்கா 12:48) கிளை அலுவலக குழுவினர்களை நியமிப்பதைப்போல பெத்தேல் மூப்பர்களையும், பயணக் கண்காணிகளையும் ஆளும் குழுவே நியமிக்கிறது. அதோடு ஆளும் குழுவினர், தங்களை பிரதிநிதித்துவம் செய்து தகுதிவாய்ந்த மற்றவர்களை நியமிக்கும் பொறுப்பை நம்பிக்கையான சில சகோதரர்களிடம் கொடுத்திருக்கின்றனர். இதற்கும் வேத பூர்வ ஆதாரம் இருக்கிறது.
‘நான் கட்டளையிட்டபடி நியமிப்புகளை செய்’
16. தீத்துவை எதற்காக பவுல் கிரேத்தாவில் விட்டுவந்தார், அதற்கும் தேவராஜ்ய அடிப்படையில் இன்று செய்யப்படும் நியமிப்புகளுக்கும் சம்பந்தம் என்ன?
16 தன்னோடு ஊழியத்தில் ஈடுபட்ட தீத்துவிடம் பவுல் பின்வருமாறு சொன்னார்: “நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.” (தீத்து 1:5) மூப்பர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பவுல் பட்டியலிட்டார்; இந்தத் தகுதிகள் அவர்களுக்கு இருக்கின்றனவா என்பதை தீத்து கவனித்து செயல்பட வேண்டும். இதைப்போலவே இன்று ஆளும்குழு தகுதி வாய்ந்த சகோதரர்களை கிளை அலுவலகங்களில் நியமிக்கிறது; அவர்கள் ஆளும் குழுவை பிரதிநிதித்துவம் செய்து, மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கின்றனர். இவ்வாறு ஆளும் குழுவை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் வேதப்பூர்வ நியமங்களை நன்றாக புரிந்துகொண்டு அவற்றிற்கு இணங்க நியமிப்புகளை செய்வதற்கு விழிப்புடன் செயல்படுகின்றனர். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் ஆளும்குழுவின் அறிவுரைக்கு இணங்க தகுதிவாய்ந்த சகோதரர்கள் நியமிக்கப்பட்டு சேவை செய்கின்றனர்.
17. மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்பட வேண்டியவர்களது சிபாரிசு கடிதங்கள் கிளை அலுவலகத்திற்கு வரும்போது அவை எவ்வாறு கையாளப்படுகின்றன?
17 மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவதற்கான சிபாரிசுக் கடிதங்கள் காவற்கோபுர சங்கத்தின் கிளை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகின்றன; அங்கிருக்கும் அனுபவம் வாய்ந்த சகோதரர்கள் நியமிப்பு செய்யும்போது வழிநடத்துதலுக்காக கடவுளுடைய ஆவியையே சார்ந்திருக்கின்றனர். இதில் தாங்களும் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றனர். அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தக்கூடாது என்றும், ஒருவேளை அவ்வாறு நியமித்தால் அவர்களுடைய பாவங்களில் பங்கு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் உணர்ந்திருக்கின்றனர்.—1 தீமோத்தேயு 5:22, பொ.மொ.
18, 19. (அ) எவ்வாறு சில நியமிப்புகள் சபைக்கு தெரிவிக்கப்படுகின்றன? (ஆ) பரிந்துரை செய்வதிலிருந்து நியமிக்கப்படுவது வரை எல்லா வழிமுறைகளும் எவ்வாறு செய்யப்படுகின்றன?
18 சில நியமிப்புகள் சட்டப்பூர்வ ஸ்தாபனத்தின் முத்திரையிட்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட கடிதம் அநேக சகோதரர்களை சபையில் நியமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
19 யெகோவா தேவனே இயேசு கிறிஸ்துவின் மூலமாக, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பையும்’ அதன் ஆளும் குழுவையும் பயன்படுத்தி இந்த தேவராஜ்ய நியமிப்புகளை செய்கிறார். (மத்தேயு 24:45-47) சிபாரிசு செய்வதிலிருந்து நியமிக்கப்படுவது வரை எல்லா வழிமுறைகளுமே பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறது. தகுதிகள் என்ன என்பது பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் நியமிக்கப்படும் சகோதரர் ஆவியின் கனிகளை பிறப்பிப்பதாலும் இவை அனைத்தும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் என்பது தெளிவாகிறது. அதனால் இந்த நியமிப்புகள் எல்லாம் பரிசுத்த ஆவியால் செய்யப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். முதல் நூற்றாண்டில் கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தேவராஜ்ய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்; இன்றும் அதே விதமாகவே நியமிக்கப்படுகின்றனர்.
கடவுளுடைய வழிநடத்துதலுக்கு நன்றியோடு இருத்தல்
20. சங்கீதம் 133:1-ல் உள்ள தாவீதின் உணர்ச்சிகளை நாமும் ஏன் பகிர்ந்துகொள்கிறோம்?
20 தற்போது ஆவிக்குரிய செழுமையையும் ராஜ்ய பிரசங்கிப்பின் மூலம் தேவராஜ்ய அதிகரிப்பையும் கவனிக்கிறோம்; இப்படிப்பட்ட சமயத்தில் கண்காணிகளையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதற்கு முக்கிய காரணம் யெகோவா தேவனே என்பதால் நாம் அவருக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இதனால் யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் உயர்வான நீதியின் தராதரங்களை பின்பற்றுவதற்கு இந்த வேதப்பூர்வ ஏற்பாடுகள் உதவுகின்றன. யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் காணப்படும் அருமையான சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் இந்த சகோதரர்களின் ஊக்கமான வேலைகளும் கிறிஸ்தவ பண்புகளும் அதிகம் உதவுகின்றன. சங்கீதக்காரனாகிய தாவீதைப்போல நாமும் மனப்பூர்வமாக பின்வருமாறு சொல்கிறோம்: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”—சங்கீதம் 133:1.
21. இன்று ஏசாயா 60:17 எவ்வாறு நிறைவேற்றம் அடைகிறது?
21 யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாகவும் வார்த்தையின் மூலமாகவும் நம்மை வழிநடத்துவதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! ஏசாயா 60:17-ல் (பொ.மொ.) சொல்லப்பட்ட பின்வரும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.” யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் தேவராஜ்ய ஏற்பாடுகள் படிப்படியாக முழுமையான விதத்தில் பிரயோகிக்கப்படுவதால் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பு முழுவதிலும் இந்த ஆசீர்வாதமான நிலைமைகளை அனுபவித்து வருகிறோம்.
22. நாம் எதற்காக நன்றியோடு இருக்கிறோம், எதை செய்வதற்கு தீர்மானமாக இருக்க வேண்டும்?
22 இன்று நம் மத்தியில் இருக்கும் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு நாம் அதிக நன்றியோடு இருக்கிறோம். தேவராஜ்ய ஏற்பாடுகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட கண்காணிகளும் உதவி ஊழியர்களும் செய்யும் திருப்தி அளிக்கும், கடின ஊழியத்தை நாம் அதிகம் போற்றுகிறோம். நம்மை அபரிமிதமாக ஆசீர்வதித்து நமக்கு ஆவிக்குரிய செழுமையை அளித்த நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனை நம் முழு இருதயத்தோடு துதிக்கிறோம். (நீதிமொழிகள் 10:22) எனவே யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுவதற்கு தீர்மானமாக இருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவா தேவனுடைய மகத்துவமான பரிசுத்த நாமத்தின் மேன்மைக்காகவும், மகிமைக்காகவும் துதிக்காகவும் நாம் அனைவரும் ஐக்கியமாக சேவை செய்வோமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• கண்காணிகளும் உதவி ஊழியர்களும் ஜனநாயக அடிப்படையில் அல்ல தேவராஜ்ய அடிப்படையிலேயே நியமிக்கப்படுகின்றனர் என்று ஏன் சொல்லலாம்?
• பொறுப்புள்ள கிறிஸ்தவ சகோதரர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகிறார்கள் என்று எவ்வாறு குறிப்பிடலாம்?
• மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதில் ஆளும் குழு எவ்வாறு உட்பட்டிருக்கிறது?
• தேவராஜ்ய நியமிப்புகளுக்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க வேண்டிய அவசியம் என்ன?
[பக்கம் 15-ன் படங்கள்]
மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு இணங்க நியமிக்கப்பட்டு சேவிப்பதால் பாக்கியம் பெற்றவர்கள்