ஆபத்தான உலகில் பாதுகாப்பு
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இடத்தில் நடமாடுவது நரபலி வாங்கிவிடும். ஆனால் அந்தக் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன என்பதை காட்டும் வரைபடம் உங்களிடம் இருந்தால்? பல்வேறு கண்ணி வெடிகளை இனம் கண்டுகொள்ள பயிற்சியும் பெற்றிருந்தால்? கவலையே இல்லை! கண்ணி வெடியில் சிக்கி காலும் போகாது கையும் போகாது, ஏன் உயிரே உங்களைவிட்டுப் போகாது.
கண்ணி வெடிகளை கண்டுகொள்ள உதவும் வரைபடத்திற்கும் பயிற்சிக்கும் பைபிளை ஒப்பிடலாம். வாழ்க்கைப் பாதையில் வரும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் உதவும் மிகச் சிறந்த ஞானம் பைபிளில் இருக்கிறது.
நீதிமொழிகள் 2:10, 11-ல், உறுதியளிக்கும் இந்த வாக்குறுதியை கவனியுங்கள்: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி [“பகுத்துணர்வு,” NW] உன்னைப் பாதுகாக்கும்.” இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஞானமும் பகுத்துணர்வும் மனிதரிடமிருந்து வருவதல்ல, ஆனால் கடவுளிடமிருந்து வருவதாகும். “[தெய்வீக ஞானத்திற்குச்] செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” (நீதிமொழிகள் 1:33) பைபிள் எவ்வாறு நம் பாதுகாப்பை பலப்படுத்தி, அநேக பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உதவும் என்பதை இப்பொழுது ஆராயலாம்.
உயிரை பறிக்கும் விபத்துக்களை விரட்டுதல்
சாலை விபத்துக்களால் சாகிறவர்கள் மட்டுமே வருடத்திற்கு சுமார் 11,71,000 பேர் என உலக சுகாதார நிறுவனம் (WHO) சமீபத்தில் பிரசுரித்த கணக்கெடுப்பு காட்டுகிறது. கிட்டத்தட்ட நான்கு கோடி ஜனங்கள் காயமடைகிறார்கள், 80 லட்சத்திற்கும் சற்று அதிகமானோர் உடல் ஊனத்தால் வாழ்நாள் பூராவும் அவதிப்படுகிறார்கள்.
வாகனம் ஓட்டும்போது நூறு சதவிகித பாதுகாப்பு சாத்தியமில்லைதான் என்றாலும், சாலை விதிகளை பின்பற்றினால் நம்முடைய உயிர் இன்னும் கொஞ்சம் காலம் நம்மோடு உறவாடும். சாலை விதிகளை விதித்து அவற்றை அமல்படுத்தும் அரசாங்க அதிகாரிகளைப் பற்றி பேசுகையில், “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்” என பைபிள் சொல்கிறது. (ரோமர் 13:1) வாகனங்களை ஓட்டுபவர்கள் இந்த அறிவுரைக்கு கீழ்ப்படிந்தால், பெரும்பாலும் பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் விபத்துக்கள் குறையும்.
பாதுகாப்பாக ஓட்டுவதற்கு மற்றொரு உந்துவிப்பு உயிர் மீது மதிப்பு. யெகோவா தேவனைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது.” (சங்கீதம் 36:9) ஆகவே உயிர் என்பது கடவுள் தந்த பரிசு. அந்தப் பரிசை யாரிடமிருந்தும் பறிக்கவோ அல்லது உயிருக்கு அவமதிப்பை காட்டவோ—அது நம்முடைய உயிராக இருந்தாலும்சரி—நமக்கு எந்த உரிமையும் இல்லை.—ஆதியாகமம் 9:5, 6.
மனித உயிருக்கு மதிப்பு காட்டுவோம் என்றால் நம்முடைய காரும் வீடும் நியாயமான அளவுக்கு பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வோம். பூர்வ இஸ்ரவேலில், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு வீட்டை கட்டும்போது, குடும்பமாக கூடிமகிழும் இடமாகிய மாடிக்கு கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டும் என கடவுளுடைய சட்டம் கூறியது. “ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப் பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்ட வேண்டும்.” (உபாகமம் 22:8) இந்தப் பாதுகாப்பு சட்டத்தை கடைப்பிடிக்காததன் காரணமாக யாராவது விழுந்துவிட்டால், அந்த வீட்டு சொந்தக்காரரிடம் கடவுள் கணக்குக் கேட்பார். இந்தச் சட்டத்தில் பொதிந்துள்ள அன்பான நியமத்தைப் பின்பற்றுவது—வேலை செய்யும் இடங்களாக இருந்தாலும்சரி விளையாடும் இடங்களாக இருந்தாலும்சரி—விபத்துக்களைக் குறைக்கும்.
உயிரை உறிஞ்சும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்த்தல்
புகைபிடிப்பவர்கள் இந்த உலகில் இப்பொழுது நூறு கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் பேர் இறக்கிறார்கள். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைபிடிக்கும் கோடிக்கணக்கான மற்றவர்களும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களும் தங்களுடைய ஆரோக்கியத்தையும் வாழ்க்கை தரத்தையும் சீரழித்துக் கொள்கிறார்கள்.
புகையிலையை பயன்படுத்துவதைப் பற்றியோ போதைப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்வதைப் பற்றியோ பைபிள் நேரடியாக குறிப்பிடாதபோதிலும், அதிலுள்ள நியமங்கள் இப்படிப்பட்ட பழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உதாரணமாக, 2 கொரிந்தியர் 7:1 இவ்வாறு புத்திமதி கூறுகிறது: ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொள்ளக்கடவோம்.’ புகையிலையும் போதை மருந்துகளும் தீங்கு விளைவிக்கும் அநேக ரசாயனங்களால் நம்முடைய சரீரத்தை பாதிக்கின்றன அல்லது அசுசிப்படுத்துகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. அதோடு, நம்முடைய சரீரம் ‘பரிசுத்தமாக’ இருக்கும்படி கடவுள் விரும்புகிறார்; இது, நம் சரீரத்தை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (ரோமர் 12:1) இந்த நியமங்களைப் பின்பற்றுவது உயிருக்கு உலை வைக்கும் பேரளவான ஆபத்துக்களைக் குறைக்கும் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?
ஆபத்தான பழக்கங்களை மேற்கொள்ளுதல்
அநேகர் பெருந்தீனிக்கும் பெருங்குடிக்கும் அடிமைகளாகிவிடுகிறார்கள். வயிறுமுட்ட சாப்பிடுவதால் நீரிழிவு நோய், புற்று நோய், இருதய நோய் போன்றவை ஏற்படுகின்றன. மதுபான துஷ்பிரயோகம் இன்னும் அநேக பிரச்சினைகளுக்கு, அதாவது குடிவெறி, கரணை நோய் (cirrhosis), பிளவுபட்ட குடும்பங்கள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. மிகவும் குறைவாக சாப்பிடுவதால் ஏற்படும் இதைவிட பயங்கரமான விளைவு என்னவென்றால், உயிரையே குடிக்கும் அனோரெக்ஸியா நர்வோஸா போன்ற நோய்கள் தாக்கும்.
பைபிள் ஒரு மருத்துவ நூல் அல்ல, என்றாலும் சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் மிதமாக இருப்பதன் அவசியத்தைக் குறித்து ஒளிவுமறைவில்லாத நேரடியான புத்திமதியைக் கொடுக்கிறது. “என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல் வழியிலே நடத்து. மதுபானப் பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப் பிரியனும் தரித்திரராவார்கள்.” (நீதிமொழிகள் 23:19-21) என்றபோதிலும், புசிப்பதும் குடிப்பதும் இன்பமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:13.
உடற்பயிற்சி சம்பந்தமாக சமநிலையான மனப்பான்மையுடன் இருக்க பைபிள் உற்சாகப்படுத்துகிறது, “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது” என்பதை அது உறுதிப்படுத்துகிறது. அதேசமயம், “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்றும் அது கூறுகிறது. (1 தீமோத்தேயு 4:8) ‘எந்த விதத்தில் தேவபக்தி இப்பொழுதே பிரயோஜனமுள்ளது?’ என்று நீங்கள் கேட்கலாம். பல்வேறு வழிகளில் அது பிரயோஜனமுள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆன்மீகத்தை அளிப்பதோடு, தேவபக்தியானது அன்பு, சந்தோஷம், சமாதானம், தன்னடக்கம் போன்ற பயனுள்ள குணங்களை ஊட்டி வளர்க்கிறது—இவையனைத்தும் நம்பிக்கையான மனநிலைக்கும் நல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன.—கலாத்தியர் 5:22, 23.
ஒழுக்கயீனத்தின் கசப்பான விளைவுகள்
இன்று, கோடிக்கணக்கானோர் ஒழுக்க சம்பந்தமான எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டார்கள். பெருவாரியாக பரவிவரும் எய்ட்ஸ் நோய் இதன் விளைவுகளில் ஒன்று. எய்ட்ஸ் பரவ ஆரம்பித்தது முதற்கொண்டு 1.6 கோடிக்கும் அதிகமானோர் இறந்துவிட்டார்கள் என்றும், தற்பொழுது சுமார் 3.4 கோடி பேருக்கு எய்ட்ஸ் நோயை உண்டுபண்ணும் ஹெச்ஐவி வைரஸ் தொற்றியிருக்கிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அநேகர் தறிகெட்ட பாலுறவு பழக்கத்தாலும், போதை மருந்துகளுக்கு அடிமையானோரின் சிரஞ்சிகளை பயன்படுத்தியதாலும் அல்லது இரத்தத்தை ஏற்றிக்கொண்டதாலும் இந்த எய்ட்ஸ் நோய்க்கு பலியாகியிருக்கிறார்கள்.
படர்தாமரை (herpes), வெட்டை நோய் (gonorrhea), கல்லீரல் அழற்சி பி மற்றும் சி (hepatitis), கிரந்தி நோய் (syphilis) ஆகியவை ஒழுக்கயீனத்தால் வரும் மற்ற விளைவுகளாகும். இப்படிப்பட்ட மருத்துவ பெயர்களை பைபிள் பயன்படுத்தாதபோதிலும், பாலுறவால் கடத்தப்படும் நோய்களுக்கு இலக்காகும் சில உறுப்புகள் அந்தக் காலத்திலும் அறியப்பட்டிருந்தன. உதாரணமாக, வேசித்தனத்தால் வரும் பயங்கர விளைவை நீதிமொழிகள் 7:23 இவ்வாறு வருணிக்கிறது: “அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.” (நீதிமொழிகள் 7:23) கல்லீரல் அழற்சி நோயைப் போலவே, கிரந்தி நோய் என்பதும் பொதுவாக ஈரலைத்தான் பாதிக்கிறது. ஆம், கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருக்கும்படி’ பைபிள் கொடுக்கும் அறிவுரை காலத்திற்கேற்ற அறிவுரை!—அப்போஸ்தலர் 15:28, 29.
பண ஆசை எனும் கண்ணி
திடீர் பணக்காரராகும் ஆசையில், அநேகர் தங்களுடைய பணத்தை ஆபத்தான திட்டங்களில் துணிந்து முதலீடு செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான செயல்கள் பெரும்பாலும் பணத்தை இழப்பதற்கும் அழிவுக்குமே வழிநடத்துகின்றன. ஆனால் கடவுளுடைய ஊழியருக்கு பைபிள் இவ்வாறு சொல்கிறது: “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) கடினமாக உழைப்பவர் எப்பொழுதும் செல்வந்தராக ஆகிவிடுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு நிம்மதியும் சுயமரியாதையும் இருக்கிறது, நல்ல காரியத்திற்காக நன்கொடை வழங்குவதற்கு தேவையான பணமும்கூட இருக்கலாம்.
பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்” அநேகர் ஐசுவரியவான்களாகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் விளைவு? அவர்களுடைய ஆரோக்கியமும் ஆன்மீகமும் குடும்பமும் நிம்மதியான உறக்கமும் பறிபோய்விடுவது உண்மையல்லவா?—பிரசங்கி 5:12.
“திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்பதை ஞானவான் உணர்ந்திருக்கிறான். (லூக்கா 12:15) பெரும்பாலான சமுதாயங்களில் பணமும் ஆஸ்தியும் அவசியம்தான். சொல்லப்போனால், ‘திரவியம் கேடகம்’ என பைபிள் சொல்கிறது, ஆனால், “ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும். இதுவே அறிவின் மேன்மை” என்றும் சொல்கிறது. (பிரசங்கி 7:12) சரியான அறிவும் ஞானமும் எல்லா சமயங்களிலும், முக்கியமாக நம்முடைய உயிரை பாதிக்கும் சமயங்களில் நமக்கு கைகொடுக்கும், ஆனால் பணம் அப்படியல்ல.—நீதிமொழிகள் 4:5-9.
ஞானம் மட்டுமே நம்மை பாதுகாக்கும்போது
விசேஷமாய், மெய்யான ‘ஞானம் அதை உடையவர்களுக்கு ஜீவனை தரும்.’ ஆம், கடவுள் இந்தப் பொல்லாத ஜனங்களை அழிக்கும்போது, மிக வேகமாக நெருங்கிவரும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ அது நம்மை பாதுகாக்கும். (மத்தேயு 24:21) அந்தச் சமயத்தில் ஜனங்கள் தங்களுடைய பணத்தை “வேண்டா வெறுப்பாயிருக்கும்” பொருளாக வீதியில் வீசியெறிவார்கள் என பைபிள் சொல்கிறது. ஏன்? ஏனென்றால் “யெகோவாவுடைய கடுங்கோபத்தின் நாளிலே” (திருத்திய மொழிபெயர்ப்பு) பொன்னும் வெள்ளியும் தங்களுக்கு ஜீவனை தராது என்பதை அறிந்திருப்பார்கள். (எசேக்கியேல் 7:19) மறுபட்சத்தில், விவேகமாக ‘தங்களுடைய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்துவைத்த’ ‘திரள் கூட்டத்தாரோ,’ தங்களுடைய முதலீட்டினால் முழுப் பயனை அடைவார்கள்; பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 21:3, 4; மத்தேயு 6:19, 20.
நாம் எப்படி இந்தப் பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழலாம்? இயேசு பதிலளிக்கிறார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து லட்சக்கணக்கானோர் இந்த அறிவை பெற்றிருக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய மகத்தான எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது; அது மட்டுமல்லாமல், இப்பொழுதேயும் ஓரளவு சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கிறார்கள். “இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்” என்று சங்கீதக்காரன் சொன்னது போலவே இருக்கிறது.—சங்கீதம் 4:8, பொது மொழிபெயர்ப்பு.
உங்களுடைய ஆரோக்கியத்தையும் உயிரையும் காவுகொள்ளும் ஆபத்தைக் குறைக்க பைபிளைப் போல் வேறெதும் உங்களுக்கு உதவுமா? வேறெந்த புத்தகத்திற்கும் பைபிளுக்கு இருக்கும் செல்வாக்கு இல்லை, ஆபத்தான இன்றைய உலகில் மெய்யான பாதுகாப்பை கண்டடைய வேறெந்த புத்தகமும் உங்களுக்கு உதவ முடியாது. அதை ஏன் நீங்கள் இன்னும் கூடுதலாக ஆராய்ந்து பார்க்கக் கூடாது?
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
பைபிள் தரும் நல் ஆரோக்கியம், பாதுகாப்பு
வாழ்க்கையின் கவலைகளிலிருந்து விடுபடுவதற்கு, ஜேன்a என்ற இளம் பெண் மாரிஜுவானா, புகையிலை, கொக்கேய்ன், ஆம்பிடேமைன்ஸ், எல்எஸ்டி, இன்னும் இதுபோன்ற மற்ற போதைப் பொருட்களை பழக்கமாக உட்கொள்ள ஆரம்பித்தாள். பயங்கரமாக குடிக்கவும் ஆரம்பித்தாள். புருஷனும் எந்தவிதத்திலும் சரியில்லை என அவள் கூறுகிறாள். அவர்களுடைய எதிர்காலம் இருண்டிருந்தது. ஜேன் பின்பு ஒருநாள் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தாள். அதுமுதல் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தாள், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை படிக்க துவங்கினாள், அவற்றை தன்னுடைய கணவனுக்கும் வாசிக்க கொடுத்தாள். அதன்பின் அவர்கள் இருவருமே சாட்சிகளுடன் பைபிளை படிக்க ஆரம்பித்தார்கள். யெகோவாவின் உயர்ந்த தராதரங்களுக்கு அதிக போற்றுதல் காண்பித்தார்கள், அதனால் போதைப் பொருட்களை உட்கொள்வதை அடியோடு நிறுத்தினார்கள். விளைவு? “இந்தப் புதிய வாழ்க்கை எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கிறது. யெகோவாவின் வார்த்தை என்னை அடியோடு மாற்றியிருக்கிறது, எனக்கு இப்பொழுது ஆரோக்கியமான வாழ்க்கையை தந்திருக்கிறது, அதற்காக நான் யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜேன் எழுதினாள்.
குர்ட் என்பவர் வேலையில் நேர்மையானவர். இந்த குணத்தின் மதிப்பை அவருடைய விஷயத்தில் பார்க்கலாம். கம்ப்யூட்டர் சிஸ்டம்களை கவனித்துக்கொள்வது அவருடைய வேலை. புதிய கருவிகள் தேவைப்பட்டன, அவற்றை நியாயமான விலைக்கு வாங்கும் பொறுப்பை முதலாளி இவரிடம் ஒப்படைத்தார். இந்தக் கருவிகளை சப்ளை செய்பவரை குர்ட் விசாரித்தறிந்தார். விலையும் நிர்ணயிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சப்ளையருடைய கிளார்க் செய்த தவறினால் கொட்டேஷனில் அந்தக் கருவிகளின் விலையில் சுமார் 20,00,000 குறைந்துவிட்டது. இந்தத் தவறை கவனித்து, அந்தக் கம்பெனிக்கு குர்ட் தெரிவித்தார். தன்னுடைய 25 வருட சர்வீஸில் இப்பேர்ப்பட்ட நேர்மையை கண்டதே இல்லை என அந்த மேனேஜர் சொன்னார். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி தனக்கு இருப்பதாக குர்ட் தெரிவித்தார். இதனால், வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்வதைப் பற்றி அலசி ஆராயும் விழித்தெழு! பத்திரிகையில் 300 பிரதிகளை தன்னுடைய சக ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக அந்த மேனேஜர் கேட்டார். குர்ட்-க்கு அவருடைய நேர்மைக்கு பரிசாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 7-ன் படம்]
“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதி[க்கிற] . . . உன் தேவனாகிய கர்த்தர் நானே.” ஏசாயா 48:17