கண்ணாடி கடைக்காரர் விதைத்த விதை
உக்ரேனிலுள்ள லவோவிலிருக்கும் கண்ணாடி கடைக்காரரின் முயற்சிகளுக்கும் பல நாடுகளுக்கு அப்பால் சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் இஸ்ரேலிலுள்ள ஹைஃபாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய ரஷ்ய மொழி சபை உருவாவதற்கும் என்ன சம்பந்தம்? ‘காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; . . . எது வாய்க்குமோ என்று . . . நீ அறியாயே’ என பைபிளில் பிரசங்கி 11:6 சொல்வதை உண்மையென நிரூபிக்கும் கதைதான் இது.
இந்த கதை 1990-ல் தொடங்கியது. யூத பின்னணியை உடைய இளம் பெண் எலா. அவள் லவோவில் வாழ்ந்துவந்தாள். எலாவும் அவள் குடும்பத்தாரும் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அவர்கள் செல்வதற்கு சற்று முன், கண்ணாடி கடைக்காரரிடம் அப்பாய்ண்ட்மென்ட் இருந்ததால் எலா அவரை சந்திக்க சென்றாள். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. உக்ரேனில் யெகோவாவின் சாட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது. இருந்தாலும்கூட, அந்த கண்ணாடி கடைக்காரர் எலாவிடம் பைபிள் நம்பிக்கைகளைப் பற்றி பேசினார். கடவுளுக்கென்று ஒரு பெயர் இருக்கிறது என்று அவர் சொன்னது எலாவுக்கு புதுமையாக இருந்தது. அது எலாவின் ஆர்வத்தை கிளறியது. அதன் விளைவாக விறுவிறுப்பான பைபிள் கலந்தாலோசிப்பு நடந்தது.
அந்தக் கலந்தாலோசிப்பு எலாவுக்கு ரொம்ப பிடித்ததால் அடுத்த வாரமும் அதற்கு அடுத்த வாரமும் அதைத் தொடர விரும்பினாள். அவளுடைய ஆர்வம் வளர்ந்து வந்தது. ஆனால் ஒரு பிரச்சினை. குடும்பமாக இஸ்ரேலுக்கு செல்லும் நாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. எலாவுக்கோ கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருந்தது! மீதமிருந்த நேரத்தையும் வீணாக்காமல், போகும்வரை தினமும் பைபிள் படிப்பை நடத்தும்படி கேட்டுக்கொண்டாள். இஸ்ரேலுக்குப் போனதும் எலா உடனடியாக பைபிள் படிப்பை தொடரவில்லை. ஆனால் சத்தியத்தின் விதை அவளுடைய இருதயத்தில் வேரூன்றி இருந்தது. அந்த ஆண்டின் முடிவிற்குள் மீண்டும் உற்சாகத்துடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தாள்.
பெர்சிய வளைகுடாவில் போர் மூண்டது. இஸ்ரேல்மீது ஈராக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போதைய பரபரப்பான செய்தி அதுதான். ஒருமுறை சூப்பர்மார்க்கெட்டில், ஒரு குடும்பம் ரஷ்ய மொழியில் பேசிக்கொண்டிருந்தது எலாவின் காதில் விழுந்தது. அவர்கள் ரஷ்யாவிலிருந்து புதிதாக குடிபெயர்ந்து வந்திருந்தார்கள். தானே இன்னும் பைபிள் படித்துக்கொண்டிருந்தாலும் எலா, அந்த குடும்பத்தினரை அணுகி சமாதானமான உலகைப் பற்றிய பைபிள் வாக்குறுதியை அவர்களிடம் பகிர்ந்தாள். அதன் பலனாக, அந்த குடும்பத்திலிருந்த பாட்டி கலினா, அம்மா நாட்டாஷா, மகன் ஸாஷா (ஆரியெல்), மகள் இலானா ஆகிய அனைவரும் எலாவுடன் சேர்ந்து பைபிளை படிக்க ஆரம்பித்தார்கள்.
பல சோதனைகள் மத்தியிலும் அந்த குடும்பத்தில் முழுக்காட்டுதலைப் பெற்ற முதல் நபர் ஸாஷா. அவன் பள்ளியில் மிகச் சிறந்த மாணவனாக திகழ்ந்தான். என்றபோதிலும், பள்ளி பாடத்திட்டத்தில் இருந்த இராணுவ சேவைக்கான பயிற்சிகளில் கிறிஸ்தவ மனசாட்சியின் காரணமாக பங்கெடுக்க மறுத்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான். (ஏசாயா 2:2-4) ஸாஷாவின் வழக்கு எருசலேமிலுள்ள இஸ்ரேல் உயர்நீதி மன்றம் வரை சென்றது. அந்த வருட பள்ளி படிப்பை முடிப்பதற்காக ஸாஷாவை மறுபடியும் பள்ளியில் சேர்க்கும்படி அது தீர்ப்பு வழங்கியது பாராட்டத்தக்கது. இந்த வழக்கு நாடெங்கும் பிரபலமானது. இதன் விளைவாக, இஸ்ரேலில் இருந்த அநேகர் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை தெரிந்துகொண்டனர்.a
உயர்நிலை பள்ளி படிப்பை முடித்ததும், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டார் ஸாஷா. இப்போது விசேஷ பயனியராகவும் சபை மூப்பராகவும் சேவிக்கிறார். அவருடைய தங்கை இலானாவும் முழுநேர ஊழியத்தில் சேர்ந்துகொண்டாள். அவர்களுடைய அம்மாவும் பாட்டியும் முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளாய் இருக்கிறார்கள். கண்ணாடி கடைக்காரர் விதைத்த விதை இன்னும் பலன் தந்துகொண்டிருந்தது!
இதற்கிடையில், எலா தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் முன்னேற்றம் செய்தாள். விரைவில் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பங்கெடுத்து வந்தாள். எலா முதல்முதல் தட்டிய வீட்டிலேயே, உக்ரேனிலிருந்து சமீபத்தில் வந்திருந்த ஃபெய்னாவை சந்தித்தாள். ஃபெய்னா மனச்சோர்வால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள். எலா கதவை தட்டுவதற்கு கொஞ்சம் முன்னர்தான், மனச்சோர்வில் வருந்திய அந்தப் பெண் கடவுளிடம், “நீர் யார் என்று எனக்கு தெரியாது; ஆனால் நான் கூப்பிடுவது கேட்டால், எனக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்திருந்தது பின்னர் தெரிய வந்தது. அவளும் எலாவும் உற்சாகமாக உரையாடினர். ஃபெய்னா பல கேள்விகளை கேட்டாள். பதில்களை உன்னிப்பாக கவனித்தாள். பைபிளின் சத்தியத்தை யெகோவாவின் சாட்சிகள் போதிக்கிறார்கள் என்பதை நாளடைவில் அவள் நன்கு உணர்ந்தாள். சபையிலும் பிரசங்க வேலையிலும் அதிக நேரத்தை செலவிடுவதற்கு ஏற்றவாறு பல்கலைக்கழக படிப்பில் மாற்றங்கள் செய்துகொண்டாள். மே 1994-ல் ஃபெய்னா முழுக்காட்டுதல் எடுத்தாள். தன்னை கவனித்துக்கொள்ள கம்ப்யூட்டர் துறையில் பகுதி நேர வேலை செய்துகொண்டு, பயனியர் ஊழியத்தையும் செய்தாள்.
நவம்பர் 1994-ல், பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, எலா திடீரென்று மிகவும் பலவீனமாக உணர்ந்தாள். எனவே மருத்துவமனைக்கு சென்றாள். குடற்புண்ணில் இரத்த கசிவு ஏற்படுவதை பரிசோதனைகள் காண்பித்தன. சாயங்காலத்திற்குள் எலாவின் ஹீமோகுளோபின் எண்ணிக்கை 7.2-ஆக குறைந்திருந்தது. மருத்துவமனை இணைப்பு ஆலோசனைகுழுவின் (HLC) சேர்மனாக இருந்த எலாவின் சபை மூப்பர், இரத்தம் தேவைப்படாத மருத்துவ சிகிச்சைமுறைகள் பலவற்றைப் பற்றிய தகவல்களை டாக்டர்களுக்கு அளித்தார்.b இரத்தமேற்றாமலேயே அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. எலா முற்றிலும் குணமடைந்தாள்.—அப்போஸ்தலர் 15:28, 29.
எலாவின் மருத்துவர் கார்ல் மிகவும் ஆச்சரியப்பட்டார். பெண்நோயியல் மருத்துவராகிய கார்ல் ஜெர்மனியில் பிறந்த யூதர். யூத படுகொலையில் தப்பித்த இவருடைய பெற்றோர், சித்திரவதை முகாம்களில் யெகோவாவின் சாட்சிகளை அறிந்திருந்ததை நினைவுகூர்ந்தார். கார்ல் பல கேள்விகளைக் கேட்டார். தன் மருத்துவ தொழில் காரணமாக நேரம் கிடைப்பது அரிதாய் இருந்தாலும், தவறாமல் பைபிள் படிக்க கார்ல் நேரத்தை ஒதுக்கினார். அதற்கடுத்த வருடத்திற்குள், வாராந்தர கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் செல்ல தொடங்கினார்.
கண்ணாடி கடைக்காரர் விதைத்த விதையின் பலன் என்ன? ஸாஷாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன நடந்தது என்று ஏற்கெனவே பார்த்தோம். எலா இன்று விசேஷ பயனியர். எலாவின் மகள் அய்னா, இப்போதுதான் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தாள். அவளும் பயனியர் சேவையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். ஃபெய்னாவும் விசேஷ பயனியராக இருக்கிறாள். எலாவின் மருத்துவர் கார்ல் இப்போது முழுக்காட்டப்பட்ட சாட்சி, உதவி ஊழியரும்கூட; இப்போது பைபிள் சத்தியத்தின் குணப்படுத்தும் சக்தியை நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறார்.
குடிபெயர்ந்து வந்தவர்களாலான சிறிய ரஷ்ய மொழி தொகுதி ஒன்று, ஹைஃபாவிலுள்ள எபிரெயு சபையின் பாகமாக தொடங்கியது. இப்போதோ இந்த சிறிய தொகுதி 120-க்கும் மேலான ராஜ்ய பிரஸ்தாபிகளை கொண்ட வைராக்கியமான ரஷ்ய சபையாக உருவாகியிருக்கிறது. லவோவிலுள்ள கண்ணாடி கடைக்காரர் ஒரு விதையை விதைப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியதால் இந்த அதிகரிப்பில் ஓரளவுக்கு அவருடைய பங்கும் இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான விளக்கங்களுக்கு, 1994, நவம்பர் 8, விழித்தெழு!-வில் பக்கங்கள் 12-15-ஐ பார்க்கவும்.
b HLC-கள் நோயாளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கருத்து பரிமாற்றத்திற்காக உதவி செய்யும் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளடங்கிய குழுக்களைக் குறிக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகளை சார்ந்த மாற்றுவகை சிகிச்சை முறைகளைப் பற்றிய தகவலையும் அவை கொடுக்கின்றன.
[பக்கம் 29-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உக்ரேன்
இஸ்ரேல்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 30-ன் படங்கள்]
எலாவும் மகள் அய்னாவும்
[பக்கம் 31-ன் படங்கள்]
ஹைஃபாவில் ரஷ்ய மொழி பேசும் மகிழ்ச்சியான ஒரு தொகுதி. இடமிருந்து வலம்: ஸாஷா, இலானா, நாட்டாஷா, கலினா, ஃபெய்னா, எலா, அய்னா, கார்ல்