யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4.
1, 2. ஒரு சகோதரரும் அவருடைய குடும்பத்தாரும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் இழந்தபோதிலும் எப்படி சந்தோஷத்தைக் காத்துக்கொண்டனர்?
சியர்ரா லியோனில் வாழும் 70 வயது கிறிஸ்தவராகிய ஜேம்ஸ் வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்திருந்தார். கடைசியில், நான்கு அறைகளுடைய எளிமையான வீட்டை வாங்கும் அளவுக்குப் பணத்தைச் சேர்த்தபோது, எந்தளவுக்கு மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! எனினும், ஜேம்ஸும் அவருடைய குடும்பத்தாரும் அந்த வீட்டில் குடியேறிய கொஞ்ச நாட்களில் அங்கு உள்நாட்டு போர் மூண்டது; அவர்களுடைய வீடு எரிந்து தரைமட்டமானது. அவர்கள் தங்கள் வீட்டை இழந்தார்கள், ஆனால் சந்தோஷத்தை இழக்கவில்லை. ஏன்?
2 ஜேம்ஸும் அவருடைய குடும்பத்தாரும், தாங்கள் இழந்தவற்றின் மீதல்ல இருப்பவற்றின் மீதே மனதை ஒருமுகப்படுத்தினர். ஜேம்ஸ் இவ்வாறு விளக்குகிறார்: “பயங்கர காலகட்டத்திலும் நாங்கள் கூட்டங்களை நடத்தினோம், பைபிளை வாசித்தோம், ஒன்றாக சேர்ந்து ஜெபித்தோம், எங்களுக்கிருந்த கொஞ்சத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோம். யெகோவாவுக்கும் எங்களுக்கும் இடையே நிலவும் அருமையான உறவின்பேரில் மனதை ஊன்ற வைத்திருந்ததனால் எங்கள் சந்தோஷத்தை காத்துக்கொள்ள முடிந்தது.” தங்களுக்கிருந்த ஆசீர்வாதங்களைக் குறித்து, பிரதானமாய் யெகோவாவிடமுள்ள நெருங்கிய உறவு என்ற தலைசிறந்த ஆசீர்வாதத்தைக் குறித்து சிந்தித்ததால் ‘தொடர்ந்து களிகூர’ அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் முடிந்தது. (2 கொரிந்தியர் 13:11, NW) வேதனையான சூழ்நிலைமைகளை சகிப்பது நிச்சயமாகவே எளிதாக இல்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து யெகோவாவில் சந்தோஷமாய் இருந்தனர்.
3. பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர் எவ்வாறு தங்கள் சந்தோஷத்தைக் காத்துவந்தார்கள்?
3 ஜேம்ஸும் அவருடைய குடும்பத்தாரும் அனுபவித்ததைப் போன்ற கடுந்துன்பங்களை பூர்வ கிறிஸ்தவர்களும் எதிர்ப்பட்டனர். இருந்தாலும், ‘உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்’ என அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். பின்னர், “பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்[திருக்கிறீர்கள்]” என அவர்களுடைய சந்தோஷத்திற்கான காரணத்தை பவுல் விளக்கினார். (எபிரெயர் 10:34) ஆம், அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு உறுதியான ஒரு நம்பிக்கை இருந்தது. கொள்ளையிடப்பட முடியாத ஒன்றை, மங்காத “ஜீவகிரீடத்தை” கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் பெறுவதை நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார்கள். (வெளிப்படுத்துதல் 2:10) இன்று நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கை பரலோகத்துக்குரியதோ பூமிக்குரியதோ, எதுவாயினும் துன்பங்களை சந்திக்கையிலும் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள அது நமக்கு உதவலாம்.
“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”
4, 5. (அ) ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்’ என்ற பவுலின் அறிவுரை ஏன் ரோமர்களுக்கு காலத்துக்கேற்றதாய் இருந்தது? (ஆ) எது ஒரு கிறிஸ்தவரின் நம்பிக்கையை மறந்துவிட செய்யலாம்?
4 நித்திய ஜீவ ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கும்படி’ அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த உடன் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். (ரோமர் 12:12) அது ரோமர்களுக்கு காலத்துக்கேற்ற அறிவுரையாக இருந்தது. பவுல் அக்கடிதத்தை எழுதி பத்தாண்டுகளுக்குள் அவர்கள் கடும் துன்புறுத்துதலை அனுபவித்தார்கள். பேரரசன் நீரோவின் கட்டளையால் சிலர் சித்திரவதைப்பட்டு செத்தார்கள். கடவுள் தங்களுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்த ஜீவ கிரீடத்தை தருவார் என்ற அவர்களுடைய விசுவாசம், துன்பப்படுகையில் சோர்ந்துபோகாமல் அவர்களைக் காத்ததில் சந்தேகமில்லை. இன்று நம்முடைய நிலைமை என்ன?
5 கிறிஸ்தவர்களாக நாமும் துன்புறுத்துதலை எதிர்பார்க்கிறோம். (2 தீமோத்தேயு 3:12) மேலும், “சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்” நம்மெல்லாருக்கும் நேரிடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (பிரசங்கி 9:11, NW) நமக்குப் பிரியமானவரின் உயிரை விபத்து கொள்ளையாடலாம். சாவுக்கேதுவான நோய், பெற்றோரையோ நெருங்கிய நண்பரையோ மரணத்தில் தள்ளலாம். நம்முடைய ராஜ்ய நம்பிக்கையை எப்போதும் கவனத்தில் வைக்காவிட்டால் அத்தகைய சோதனைகள் நேரிடுகையில் ஆவிக்குரிய வகையில் நமக்கு ஆபத்து ஏற்படலாம். ஆதலால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: “இந்த ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கிறேனா’? அதைக் குறித்து சிந்திக்க எவ்வளவு நேரம் செலவழிக்கிறேன்? வரவிருக்கிற பரதீஸ் நிஜமானதாக எனக்கு தோன்றுகிறதா? நான் அங்கிருப்பதை மனக்கண்களால் காண்கிறேனா? சத்தியத்தைக் கற்ற புதிதில் இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு வரவிருந்த முடிவில் எவ்வளவு ஆர்வம் காட்டினேனோ, அதே ஆர்வத்தை இப்போதும் காட்டுகிறேனா?” இந்தக் கடைசி கேள்வியை கவனமாய் சிந்திப்பது நல்லது. ஏன்? ஏனென்றால், ஒருவேளை நமக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கலாம், வசதியாய் வாழும் அளவுக்குப் போதிய பணம் சம்பாதிக்கலாம், போர், உணவு குறைபாடு, இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றால் அந்தளவுக்குப் பாதிக்கப்படாத பகுதியில் வாழலாம். இதனால் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரம் வரவேண்டும் என்ற நம்பிக்கையை அப்போதைக்கு மறந்துவிட நேரிடலாம்.
6. (அ) பவுலும் சீலாவும் உபத்திரவத்தை அனுபவித்தபோது, தங்கள் சிந்தனைகளை எவற்றின்மீது ஒருமுகப்படுத்தினர்? (ஆ) பவுலும் சீலாவும் வைத்த முன்மாதிரி இன்று நம்மை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
6 “உபத்திரவத்தை சகித்திருங்கள்” என்றும் பவுல் ரோமருக்கு அறிவுரை கூறினார். (ரோமர் 12:12, NW) உபத்திரவங்கள் பவுலுக்குப் பழகிப்போனவையே. “மக்கெதோனியாவுக்கு வந்து” யெகோவாவைப் பற்றி கற்றறிய அங்குள்ளவர்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று ஒருவன் தன்னை அழைத்ததை அவர் ஒருமுறை தரிசனத்தில் கண்டார். (அப்போஸ்தலர் 16:9) அதனால் லூக்கா, சீலா, தீமோத்தேயு ஆகியோருடன் பவுல் ஐரோப்பாவுக்கு கப்பலில் பயணப்பட்டார். அந்த ஆர்வமுள்ள மிஷனரிகளுக்கு என்ன காத்திருந்தது? கடுந்துன்பம்தான்! மக்கெதோனிய பட்டணமாகிய பிலிப்பியில் பவுலும் சீலாவும் பிரசங்கித்த பின்பு, அடித்து, சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். பிலிப்பி பட்டணத்தாரில் சிலர் ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காட்டாததோடுகூட கடுமையாய் எதிர்க்கவும் செய்தார்கள் என்பது தெளிவானதே. சூழ்நிலை இப்படி மாறியது அந்த ஆர்வமுள்ள மிஷனரிகளின் சந்தோஷத்தைப் பறித்துவிட்டதா? இல்லை. அடித்து, சிறையில் தள்ளப்பட்ட பின்பு, ‘நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்.’ (அப்போஸ்தலர் 16:25, 26) அடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை பவுலுக்கும் சீலாவுக்கும் நிச்சயமாகவே சந்தோஷத்தைக் கொடுக்கவில்லைதான். ஆனால் அந்த இரண்டு மிஷனரிகளின் மனம் முழுவதும் அதில் இல்லை. தங்கள் சிந்தனைகளை யெகோவாவின்மீதும், அவர் தங்களை ஆசீர்வதித்துவரும் விதத்தின்மீதுமே ஒருமுகப்படுத்தி இருந்தனர். பவுலும் சீலாவும், சந்தோஷத்தோடு ‘உபத்திரவத்தை சகித்திருந்ததன்’ மூலம் பிலிப்பியிலும் மற்ற இடங்களிலும் இருந்த தங்கள் சகோதரர்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாய் விளங்கினர்.
7. நம்முடைய ஜெபத்தில் ஏன் நன்றியையும் தெரிவிக்க வேண்டும்?
7 “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என பவுல் எழுதினார். (ரோமர் 12:12) கஷ்டமான சமயங்களில் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? ஜெபத்தில் எதைக் கேட்கிறீர்கள்? ஒருவேளை உங்களுடைய பிரச்சினையை குறிப்பாக சொல்லி உதவியளிக்குமாறு யெகோவாவைக் கேட்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியையும் தெரிவிக்கலாம் அல்லவா? பிரச்சினைகள் தலைதூக்குகையில் யெகோவா நமக்குச் செய்திருக்கும் நன்மைகளில் வெளிப்படும் அவரது நற்குணத்தைப் பற்றி சிந்திப்பது, ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்க’ உதவுகிறது. சதா தொல்லைகளை அனுபவித்து வந்த தாவீது இவ்வாறு எழுதினார்: “என் கடவுளாகிய யெகோவாவே, நீர் செய்த அதிசயங்களும் எங்கள் பொருட்டு நீர் பண்ணின யோசனைகளும் அநேகம்; உமக்கு நிகரானது ஒன்றுமில்லை; நான் அவைகளை அறிவித்துச் சொல்லப் புகுந்தால் அவைகள் எண்ணமுடியாதவைகள்.” (சங்கீதம் 40:5, தி.மொ.) தாவீதைப்போல், யெகோவாவிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்களைக் குறித்து தவறாமல் சிந்திப்போமானால் நிச்சயமாக சந்தோஷமாயிருப்போம்.
நம்பிக்கையான மனநிலையுடன் இருங்கள்
8. துன்புறுத்தப்படுகையில் சந்தோஷமாய் நிலைத்திருக்க ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவுகிறது?
8 பல்வேறு இக்கட்டுகளை எதிர்ப்படுகையில் நம்பிக்கையான மனநிலையுடன் இருக்க இயேசு தம்மைப் பின்பற்றுவோரை ஊக்குவிக்கிறார். அவர் சொல்கிறார்: “என்னிமித்தம் உங்களை [கிறிஸ்தவர்களை] நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [“சந்தோஷமுள்ளவர்களாயிருப்பீர்கள்,” NW].” (மத்தேயு 5:11) அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சந்தோஷமாயிருப்பதற்கு என்ன காரணம் நமக்கு இருக்கிறது? எதிர்ப்பை சகிப்பதற்கான திறமையே யெகோவாவின் ஆவி நம்மிடம் இருப்பதற்கு நிரூபணம் அளிக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு தன் நாளிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கிறிஸ்துவின் பெயரினிமித்தம் நிந்திக்கப்பட்டால், சந்தோஷமுள்ளவர்கள், ஏனெனில் மகிமையின் ஆவி, கடவுளின் ஆவிதானே உங்கள்மீது தங்கியிருக்கிறது.” (1 பேதுரு 4:13, 14, NW) சகித்து நிலைத்திருப்பதற்கும், அதன் விளைவாக சந்தோஷத்தைக் காத்துக்கொள்வதற்கும் யெகோவா தம்முடைய ஆவியைத் தந்து நமக்கு உதவுவார்.
9. தங்கள் விசுவாசத்தினிமித்தம் சில சகோதரர்கள் சிறையில் இருக்கையில், சந்தோஷப்படுவதற்கு காரணங்கள் இருப்பதைக் காண எது உதவியது?
9 நம் சூழ்நிலை எத்தனை மோசமானதாக இருந்தாலும் சந்தோஷப்படுவதற்கு காரணங்கள் இருப்பதை நாம் காணலாம். அதை அடால்ஃப் என்ற கிறிஸ்தவர் அனுபவத்தில் கண்டார். பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் தடை செய்யப்பட்டிருந்த ஒரு நாட்டில் அவர் வாழ்கிறார். அடால்ஃபும் அவருடைய நண்பர்களில் பலரும் பைபிள் சார்ந்த தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மறுத்ததால் கைது செய்யப்பட்டு, நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டார்கள். சிறைவாசம் கடினமாக இருந்தது. ஆனால் பவுலையும் சீலாவையும் போலவே கடவுளுக்கு நன்றிசெலுத்த அநேக காரணங்கள் இருப்பதை அடால்ஃப்பும் அவருடைய நண்பர்களும் கண்டார்கள். தங்கள் சிறைவாசம், விசுவாசத்தைப் பலப்படுத்தி, தயாளம், மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் ஒத்துணர்வு, சகோதர பாசம் போன்ற பெரும் மதிப்புவாய்ந்த கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள உதவியதை அவர்கள் கவனித்தார்கள். உதாரணமாக, ஒரு கைதிக்கு வீட்டிலிருந்து ஏதாவது பொட்டலம் வந்தால் அதிலுள்ளதை உடன் விசுவாசிகளோடு பகிர்ந்துகொண்டார். இப்படிக் கிடைத்த கூடுதல் உணவை அந்த உடன்விசுவாசிகள், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” அளிக்கும் மூலகாரணராகிய யெகோவாவிடமிருந்தே வந்ததாக கருதினர். இத்தகைய தயவான செயல்கள், பகிர்ந்துகொள்பவருக்கும் சந்தோஷத்தைத் தந்தன; பெற்றுக்கொள்பவருக்கும் சந்தோஷத்தைத் தந்தன. ஆகவே, அவர்கள் விசுவாசத்தை அழித்துப்போட செய்யப்பட்ட முயற்சி, உண்மையில் ஆவிக்குரிய விதமாய் இன்னும் அதிகமாக பலப்படும்படியே செய்தது.—யாக்கோபு 1:17; அப்போஸ்தலர் 20:35.
10, 11. இரக்கமற்ற குறுக்கு விசாரணையையும் நீண்ட கால சிறைவாசத்தையும் ஒரு சகோதரி எவ்வாறு சமாளித்தாள்?
10 எல்லா என்ற சகோதரி நீண்ட காலம் ஊழியம் தடை செய்யப்பட்டிருந்த நாட்டில் வாழ்கிறாள். தன் கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு கைதுசெய்யப்பட்டாள். எட்டு மாதங்கள் அவள் இரக்கமற்ற விதத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டாள். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் இல்லாத இடத்தில் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாள். அந்தச் சமயத்தில் எல்லாவுக்கு வயது இருபத்துநான்குதான்.
11 தன் வாலிப காலத்தின் பெரும்பகுதியை சிறையில் தனி அறையில் கழிக்க நேரிடும் என எல்லா உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. ஆனால், நிலைமையை தன்னால் மாற்ற முடியாததனால் நோக்குநிலையை மாற்றிக்கொள்ள தீர்மானித்தாள். அதனால் சிறைச்சாலையையே தன் ஊழிய பிராந்தியமாக கருத ஆரம்பித்தாள். “அங்கு பெருமளவு ஊழியம் செய்ய வேண்டியிருந்ததால், ஆண்டுகள் வெகு சீக்கிரத்தில் உருண்டோடிவிட்டன” என அவள் சொல்கிறாள். ஐந்துக்கும் அதிக ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் எல்லாவை குறுக்கு விசாரணை செய்தனர். சிறைவாசம் அவளுடைய விசுவாசத்தை அழித்துப்போடவில்லை என்பதைக் கண்ட விசாரணையாளர்கள், “நீ மாறவேயில்லை; நாங்கள் உன்னை விடுதலை செய்ய முடியாது” என அவளிடம் சொன்னார்கள். “உண்மையில் நான் மாறியிருக்கிறேன். நான் சிறைக்குள் வந்தபோது இருந்ததைவிட இப்போது என் மனப்பான்மையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் என் விசுவாசம் முன்னிலும் அதிக உறுதியாயிருக்கிறது!” என எல்லா திட்டவட்டமாக பதிலளித்தாள். “என்னை விடுதலை செய்ய விருப்பமில்லை என்றால் யெகோவா எப்போது என்னை விடுவிக்க விரும்புகிறாரோ அதுவரை இங்கிருப்பேன்” என்றும் அவள் சொன்னாள். ஐந்தரை ஆண்டு சிறைவாசம் எல்லாவின் சந்தோஷத்தைப் பறித்துவிடவில்லை! எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் திருப்தியாக இருக்க கற்றுக்கொண்டாள் எல்லா. அவளுடைய முன்மாதிரியிலிருந்து நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?—எபிரெயர் 13:5.
12. இக்கட்டான சூழ்நிலைமைகளில் இருக்கும் கிறிஸ்தவருக்கு எது மன சமாதானத்தைத் தரலாம்?
12 இப்படிப்பட்ட சவால்களை சமாளிக்க எல்லாவிற்கு ஏதோ விசேஷித்த திறமை இருந்ததால்தான் முடிந்தது என நினைக்க வேண்டாம். தனக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னான மாதங்களில் அவளிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையைப் பற்றி எல்லா இவ்வாறு சொல்கிறாள்: “நடுக்கத்தால் என் பற்கள் கிடுகிடுவென ஆட ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. சிக்கித் தவிக்கும் சிட்டுக்குருவிபோல் நான் உணர்ந்தேன்.” எனினும், எல்லாவுக்கு யெகோவாவிடம் உறுதியான விசுவாசம் இருக்கிறது. அவரில் நம்பிக்கை வைக்க கற்றிருக்கிறாள். (நீதிமொழிகள் 3:5-7) கடவுள் நிஜமானவர் என்பது அவளுக்கு இன்னும் ஊர்ஜிதமானது. அவள் இவ்வாறு விளக்குகிறாள்: “குறுக்கு விசாரணை அறைக்குள் நுழையும் போதெல்லாம் மன சமாதானத்தை உணர்ந்தேன் . . . நிலைமை எந்தளவுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தியதோ அந்தளவுக்கு சமாதானமும் அதிகரித்தது.” யெகோவாவே அந்தச் சமாதானத்தின் மூலகாரணர். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
13. நமக்குத் துன்பம் வந்தாலும் அதைச் சகிப்பதற்கு பலம் கிடைக்கும் என்று எது நமக்கு உறுதியளிக்கிறது?
13 விடுதலை பெற்றதிலிருந்து எல்லா, கஷ்டங்கள் மத்தியிலும் தன் சந்தோஷத்தைக் காத்துவந்திருக்கிறாள். இதை தன் சொந்த பலத்தால் அல்ல, ஆனால் யெகோவா அளித்த பலத்தாலேயே அவளால் செய்ய முடிந்தது. அப்போஸ்தலன் பவுலின் விஷயத்திலும் இதுவே உண்மை. “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” என அவர் எழுதினார்.—2 கொரிந்தியர் 12:9, 10.
14. கஷ்டமான சூழ்நிலைமைகளில் ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு நம்பிக்கையான மனநிலையோடு இருக்கலாம், அதனால் விளையும் பலன் என்ன?
14 இன்று நீங்கள் தனிப்பட்ட வகையில் அனுபவிக்கும் பிரச்சினைகள் இங்கு கலந்தாலோசித்தவற்றிலிருந்து சற்று வேறுபடலாம். இருப்பினும், எப்படிப்பட்டவையாக அவை இருந்தாலும், தொல்லைகளைச் சமாளிப்பது கஷ்டமே. உதாரணமாக, உங்கள் முதலாளி உடன் வேலை செய்யும் பிற மதத்தினரின் வேலையில் குறைகாண்பதைவிட உங்கள் வேலையில் தொட்டதற்கெல்லாம் குறைகண்டுபிடிக்கலாம். உங்களால் வேறு வேலை தேடவும் முடியாமல் இருக்கலாம். அப்போது உங்கள் சந்தோஷத்தை எப்படி காத்துக்கொள்வீர்கள்? அடால்ஃபையும் அவருடைய தோழர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய சிறை அனுபவம் முக்கிய பண்புகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவியது. உங்கள் முதலாளி, ‘முரட்டு குணமுள்ளவராக’ இருந்தாலும், அவருக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் மனதார உழைக்க நீங்கள் முயற்சிசெய்தால் சகிப்புத்தன்மை, நீடிய பொறுமை போன்ற கிறிஸ்தவ பண்புகளை வளர்த்துக்கொள்வீர்கள். (1 பேதுரு 2:18) மேலும், அதிக பயனுள்ள வேலையாளாக நீங்கள் ஆவீர்கள். இது, எதிர்காலத்தில் இன்னும் திருப்தியான வேலையைப் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம். யெகோவாவின் சேவையில் நம் சந்தோஷத்தைக் காத்துக்கொள்வதற்கான மற்ற வழிகளை இப்போது ஆராயலாம்.
எளிதாக்கினால் மகிழ்ச்சி
15-17. நெருக்கடிகளுக்கு அடிப்படையாய் உள்ள பிரச்சினைகளை முழுமையாய் நீக்க முடியாவிட்டாலும் பாரத்தைக் குறைக்கலாம் என்பதைப் பற்றி ஒரு தம்பதியினர் எதை கற்றார்கள்?
15 எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுக்கலாம், எங்கு வேலை செய்யலாம் போன்ற தெரிவுகளை செய்ய உங்களுக்கு அதிக வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அதேசமயத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அம்சங்களில் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்பிருக்கலாம். பின்வரும் அனுபவத்தைக் கவனியுங்கள்.
16 ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் மூப்பர் ஒருவரை தங்கள் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்தார்கள். அந்த மாலை வேளையில், சமீப காலமாக வாழ்க்கை பிரச்சினைகள் தங்களை ஒரேயடியாக நெருக்குவதாக அந்த தம்பதியினர் அவரிடம் கூறினார்கள். அவர்கள் இருவருமே பார்த்துவந்த முழுநேர வேலை, சக்கையாகப் பிழிந்தெடுத்தது, இருந்தாலும் வேறு வேலை தேடும் நிலையில் அவர்கள் இல்லை. இன்னும் எவ்வளவு காலம் தங்களால் சமாளிக்க முடியுமோ என யோசித்தார்கள்.
17 ஆலோசனை கேட்டபோது அந்த மூப்பர், “எளிதாக்குங்கள்” என பதிலளித்தார். எவ்வாறு? வேலைக்குப் போய்வர அந்த தம்பதியினருக்கு ஏறக்குறைய மூன்று மணிநேரம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களை அந்த மூப்பர் நன்கு அறிந்திருந்ததால், நாள்தோறும் வேலைக்கு செலவிடும் பயண நேரத்தைக் குறைக்க வேலைசெய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே குடிமாறிச் செல்வதைப் பற்றி சிந்திக்க சொன்னார். இப்படி மிச்சப்படுத்தும் நேரத்தை மற்ற முக்கியமான காரியங்களுக்கு அல்லது சற்று இளைப்பாறுவதற்கு பயன்படுத்தலாம். வாழ்க்கை நெருக்கடிகள் சந்தோஷத்தை ஓரளவு கெடுக்குமானால் சில சரிப்படுத்துதல்களைச் செய்வதன்மூலம் சற்று பாரத்தைக் குறைக்க முடியுமா என்று ஏன் பார்க்கக்கூடாது?
18. தீர்மானங்களை எடுப்பதற்கு முன், கவனமாய் சீர்தூக்கிப் பார்ப்பது ஏன் முக்கியம்?
18 பாரத்தைக் குறைக்க மற்றொரு வழி, தீர்மானங்களைச் செய்வதற்கு முன்பு கவனமாய் சிந்திப்பதாகும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் வீட்டைக் கட்ட தீர்மானித்தார். இதற்கு முன்பு அவர் வீட்டைக் கட்டியதில்லை, என்றாலும் வெகு சிக்கலான கட்டிட டிஸைனை தேர்ந்தெடுத்தார். தன் வீட்டுக்கு அந்த டிஸைனை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ‘தன் நடையின்மேல் கவனமாயிருந்திருந்தால்’ அநாவசியமான பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாமே என்பதாக அவர் இப்போது கவலைப்படுகிறார். (நீதிமொழிகள் 14:15) இன்னொரு கிறிஸ்தவர், உடன்விசுவாசி ஒருவருக்காக கடன் ஒப்பந்தத்தில் உத்தரவாத கையெழுத்திட ஒப்புக்கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, கடன்வாங்குபவர் கடனைச் செலுத்த முடியாமற்போனால் இவர்தான் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று கடனை அடைக்க வேண்டும். ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்தது. ஆனால் போகப்போக கடன்வாங்கினவர் ஒப்பந்தப்படி கடனை செலுத்தத் தவறினார். கடன் கொடுத்தவர் பயந்துபோய் உத்தரவாத பொறுப்பேற்றவரை கடனை அடைக்கும்படி வற்புறுத்தினார். அப்படி பொறுப்பேற்றவர் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த கடனுக்கு உத்தரவாத கையெழுத்திடுவதற்கு முன் உட்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் கவனமாக சீர்தூக்கிப் பார்த்திருந்தால் அவர் இதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?—நீதிமொழிகள் 17:18.
19. நம்முடைய வாழ்க்கையில் பளுவைக் குறைப்பதற்கான சில வழிகள் யாவை?
19 நாம் களைப்பாக இருக்கையில், பைபிள் படிக்க செலவிடும் நேரத்தைக் குறைப்பதன் மூலமும், வெளி ஊழியத்திற்கும் கூட்டத்திற்கும் போகாதிருப்பதன் மூலமும் நமக்கு இருக்கும் பளுவை குறைத்து சந்தோஷத்தை பெற்றுவிடலாம் என தப்புக்கணக்குப் போட்டுவிடாதிருப்போமாக. ஏனெனில், யெகோவாவின் பரிசுத்த ஆவியின் கனியில் ஒன்றான சந்தோஷத்தைப் பெறுவதற்கு இவை முக்கிய வழிகளாயிற்றே! (கலாத்தியர் 5:22) கிறிஸ்தவ நடவடிக்கைகள் எப்போதும் புத்துயிரளிக்குமே தவிர பொதுவாக அதிக களைப்பை ஏற்படுத்தாது. (மத்தேயு 11:28-30) ஆவிக்குரிய நடவடிக்கைகள் அல்ல, ஆனால் உலகப்பிரகாரமான அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளே பெரும்பாலும் களைப்பை ஏற்படுத்துபவை. நேரத்தோடு தூங்க போவது களைப்பைப் போக்கி சக்தி பெற உதவலாம். கூடுதலாக கொஞ்சம் ஓய்வெடுப்பது பயனுள்ளதாக இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் உறுப்பினராக தன் மரணம் வரையில் சேவித்த என். எச். நார் மிஷனரிகளுக்கு இவ்வாறு சொல்வார்: “உங்களுக்கு சோர்வு ஏற்படுகையில் முதலாவதாக சற்று ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாக தூங்கி எழுந்த பின்பு, பெரும்பாலும் எந்தப் பிரச்சினையையும் எளிதில் தீர்க்க முடிவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்!”
20. (அ) நம்முடைய சந்தோஷத்தை காத்துக்கொள்வதற்கான சில வழிகளை சுருக்கமாய்க் கூறுங்கள். (ஆ) சந்தோஷமாய் இருப்பதற்கு என்ன காரணங்களை நீங்கள் சிந்திக்கலாம்? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
20 கிறிஸ்தவர்கள், ‘நித்தியானந்த தேவனைச்’ சேவிக்கும் தனிப்பட்ட சிலாக்கியம் பெற்றவர்கள். (1 தீமோத்தேயு 1:11) பெரும் பிரச்சினைகள் வந்தாலும் நம் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை நாம் பார்த்தோம். ராஜ்ய நம்பிக்கையை நம் முன் வைத்து, தேவைப்படுகையில் நம் நோக்குநிலையை சரிசெய்துகொண்டு, வாழ்க்கையை எளிமையாய் வைப்போமாக. அப்போது எந்த சூழ்நிலை வந்தாலும் அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகளுக்கு இசைய நடப்போம்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4.
இக்கேள்விகளுக்கு ஆழ்ந்த சிந்தனை செலுத்துங்கள்:
• ராஜ்ய நம்பிக்கையிடம் கிறிஸ்தவர்கள் ஏன் ஆர்வத்துடன் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்?
• கஷ்டமான சூழ்நிலைமைகளில் நம் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவலாம்?
• நம் வாழ்க்கையை எளிதாக்க ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
• என்ன அம்சங்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறார்கள்?
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
சந்தோஷத்திற்கு மேலுமான காரணங்கள்
கிறிஸ்தவர்களாக நாம் சந்தோஷப்பட பல காரணங்கள் உள்ளன. பின்வருபவற்றைக் கவனியுங்கள்:
1. நாம் யெகோவாவை அறிந்திருக்கிறோம்.
2. கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கற்றிருக்கிறோம்.
3. இயேசுவின் பலியின் மீதான விசுவாசத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படலாம்.
4. கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்கிறது—சீக்கிரத்தில் புதிய உலகம் வரும்!
5. யெகோவா நம்மை ஆவிக்குரிய பரதீஸுக்கு வழிநடத்தியிருக்கிறார்.
6. நன்மை தரும் கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவித்து மகிழ்கிறோம்.
7. ஊழியத்தில் பங்குகொள்ளும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்.
8. நாம் உயிரோடிருக்கிறோம், ஓரளவு பலத்தையும் பெற்றிருக்கிறோம்.
சந்தோஷத்திற்கான வேறு என்னென்ன காரணங்களை நீங்கள் சொல்லலாம்?
[பக்கம் 13-ன் படம்]
பவுலும் சீலாவும் சிறையில்கூட சந்தோஷமாயிருந்தார்கள்
[பக்கம் 15-ன் படங்கள்]
கடவுளுடைய புதிய உலகம் பற்றிய சந்தோஷமான எதிர்பார்ப்பில் உங்கள் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறதா?