சவக்கடல் சுருள்கள்—ஏன் இத்தனை ஆர்வம்?
சவக்கடல் சுருள்கள் கண்டெடுக்கப்படுவதற்கு முன் கைவசம் இருந்த எபிரெய வேதாகமத்தின் பழமையான கையெழுத்துப் பிரதிகள் கிட்டத்தட்ட பொ.ச. ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுக்குரியவை. இதற்கு ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே எபிரெய வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த கையெழுத்துப்பிரதிகள் கடவுளுடைய வார்த்தையை கலப்பின்றி அப்படியே நம் கையில் கொடுத்திருக்கின்றன என சொல்ல முடியுமா? “ஆயிரத்திற்கும் அதிக ஆண்டு காலமாக நகல் எடுக்கப்பட்டு, இன்று நம் கைவசம் இருக்கும் பைபிள் வாசகங்கள் மிகத் துல்லியமாகவும் மூலப் பிரதியிலிருந்து வேறுபடாமலும் உள்ளன; [கும்ரானில் கண்டெடுக்கப்பட்ட] ஏசாயா சுருள் இதற்கு மறுக்க முடியாத சான்றாகும்” என சவக்கடல் சுருள்களின் சர்வதேச பதிப்பாசிரியர்கள் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஹூல்யோ ட்ரிபோயே பாரேரா குறிப்பிடுகிறார்.
பாரேரா குறிப்பிடும் சுருளில் ஏசாயா புத்தகம் முழுமையாக உள்ளது. கும்ரானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 200-க்கும் அதிகமான கையெழுத்துப்பிரதிகளில், எஸ்தர் புத்தகத்தைத் தவிர எபிரெய வேதாகமத்தின் எல்லா புத்தகங்களின் பாகங்களும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. இவை ஏசாயா புத்தகத்தைப் போலன்றி, பெரும்பாலும் துண்டு துண்டுகளாகவே இருக்கின்றன; ஆகவே எந்தவொரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் பத்தில் ஒரு பாகத்திற்கும் குறைவான பகுதியே இந்த துண்டுளில் காணப்படுகிறது. கும்ரானில் கிடைத்தவற்றில் மிகப் பிரபலமான பைபிள் புத்தகங்கள் இவையே: சங்கீதம் (36 பிரதிகள்), உபாகமம் (29 பிரதிகள்), ஏசாயா (21 பிரதிகள்). கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களும் இவையே.
பைபிளின் அடிப்படை கருத்துக்களில் மாற்றம் ஏதுமில்லை என்பதை இந்த சுருள்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. என்றாலும், எபிரெய பைபிள் புத்தகங்களின் வித்தியாசமான பிரதிகள் இரண்டாம் ஆலயம் இருந்த காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தன. இந்தப் பிரதிகளில் உள்ள எழுத்துநடைகளும் வார்த்தைகளும் மஸோரெட்டிக் வாசகத்திலிருந்து வேறுபடுகின்றன. சில, கிட்டத்தட்ட கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிற்கு இணையாக இருக்கின்றன. தவறுதலாகவோ, மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டுமென்றே புதிய கருத்துக்களை புகுத்தியதாலோ செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக வல்லுநர்கள் முதலில் கருதினர். ஆனால், எபிரெய பிரதிகளில் இருக்கும் வித்தியாசங்கள்தான் இதற்கு காரணம் என்பதை இச்சுருள்கள் இப்போது தெளிவாக்குகின்றன. எனவேதான், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டிய எபிரெய வாசகங்கள், மஸோரெட்டிக் வாசகங்களிலிருந்து சில சமயங்களில் வித்தியாசப்படுகின்றன.—யாத்திராகமம் 1:5; அப்போஸ்தலர் 7:14.
பைபிள் சுருள்களும் அதன் பாகங்களும் அடங்கிய இந்தக் கண்டுபிடிப்பு, அரிய, மதிப்பு வாய்ந்த ஒன்று. எபிரெய பைபிள் வாசகம் எப்படி இன்று நம் கைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு இது மிகச் சிறந்த ஏதுவாக அமைகிறது. வாசகங்களை ஒப்பிட்டு ஆராய, செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பும் சமாரிய ஐந்தாகமமும் (Samaritan Pentateuch) அருமையானவை என்பதை சவக்கடல் சுருள்கள் உறுதிப்படுத்துகின்றன. மஸோரெட்டிக் வாசகத்தில் செய்யத்தக்க திருத்தங்களைப் பற்றி பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆராயவும் இந்த சுருள்கள் அதிகம் உதவுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில், மஸோரெட்டிக் மொழிபெயர்ப்பு யெகோவாவின் பெயரை நீக்கிய எல்லா இடங்களிலும் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டுமென புதிய உலக மொழிபெயர்ப்பு குழு எடுத்த தீர்மானம் சரியென இவை உறுதிப்படுத்துகின்றன.
இயேசுவின் காலத்தில், வித்தியாசமான யூத முறைமைகள் பின்பற்றப்பட்டதை கும்ரான் மதப்பிரிவின் சட்டங்களையும் நம்பிக்கைகளையும் விவரிக்கும் இந்தச் சுருள்கள் சுட்டிக்காட்டுகின்றன. கும்ரான் மதப்பிரிவு பின்பற்றிய பாரம்பரியங்கள், பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களுடைய பாரம்பரியங்களிலிருந்து வித்தியாசமானவை. இந்த வித்தியாசங்களால்தான் இந்த மதப்பிரிவினர் தனித்து வனாந்தரத்திற்கு சென்றதுபோல் தோன்றுகிறது. யெகோவாவின் பாதையை செவ்வை பண்ணுங்கள் என வனாந்தரத்தில் கேட்கும் குரலைப் பற்றி ஏசாயா 40:3-ல் சொல்லப்பட்டது தங்களில் நிறைவேறுவதாக அவர்கள் தவறாக கருதினர். அந்த சுருள்களின் பாகங்கள் மேசியாவைப் பற்றி கூறியதால், அவர் வருகை மிக சமீபத்தில் இருப்பதாக அச்சுருள்களை எழுதியவர்கள் நம்பினர் என்பது தெரிகிறது. இது ஆர்வத்தைத் தூண்டும் விஷயமல்லவா! ஏனென்றால், மேசியாவின் வருகையை ‘மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்’ என லூக்கா குறிப்பிடுகிறார்.—லூக்கா 3:15, பொது மொழிபெயர்ப்பு.
இயேசுவின் ஊழிய காலத்தில் இருந்த யூத வாழ்க்கை முறையை ஓரளவு புரிந்துகொள்ள இந்த சவக்கடல் சுருள்கள் உதவுகின்றன. பூர்வ எபிரெய மொழியையும் பைபிள் வாசகங்களையும் ஒப்பிட்டு ஆராய தேவையான தகவல்களை இவை அளிக்கின்றன. ஆனால், சவக்கடல் சுருள்களில் பெரும்பாலானவை இன்னும் நன்கு ஆராயப்பட வேண்டியவை. அப்படி ஆராயும்போது, இன்னும் பல புதிய உட்கருத்துக்கள் தெரிய வரலாம். இருபதாம் நூற்றாண்டின் தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளிலேயே இது தலைசிறந்த கண்டுபிடிப்பு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இருபத்தோராம் நூற்றாண்டில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த சமயத்திலும் பைபிள் மாணாக்கர் மற்றும் கல்விமான்களின் ஆர்வத்தை இவை தொடர்ந்து தூண்டுகின்றன.
[பக்கம் 7-ன் படங்களுக்கான நன்றி]
Qumran excavations: Pictorial Archive (Near Eastern History) Est.; manuscript: Courtesy of Shrine of the Book, Israel Museum, Jerusalem