சவக்கடல் சுருள்களைப் பற்றிய உண்மைகள் யாவை?
ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் நடந்த சம்பவம் இது. அரேபிய நாடோடி இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவன் ஒருவன், தற்செயலாக எறிந்த கல் ஒரு குகையில் இருந்த அரிய பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அவன் எறிந்த கல் ஒரு மண் ஜாடியை உடைத்தது. அதிலிருந்து நிறைய சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவையே இன்று மிகப் பிரபலமாக அறியப்படும் சவக்கடல் சுருள்களின் முதல் ஏழு சுருள்கள்.
இச்சுருள்கள் மெத்தப் படித்த கல்விமான்கள், செய்தித்துறை வட்டாரங்கள் ஆகிய இரு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தன. பொதுமக்களிடையே குழப்பத்தையும் தவறான கருத்துக்களையும் பரப்பின. வதந்திகளுக்கும் குறைவில்லை. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் குலைக்கும் விஷயங்கள் இவற்றில் இருக்கலாம் என்பதால், பொதுமக்களுடைய பார்வைக்கு வராதபடி இச்சுருள்களை மூடிமறைக்க பிரயத்தனங்கள் செய்யப்பட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், இந்தச் சுருள்கள் எவ்வளவு முக்கியமானவை? இவை கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்தோடிய பிறகும், உண்மைகளை தெரிந்துகொள்வது சாத்தியமா?
சவக்கடல் சுருள்கள் என்ன?
பூர்வ யூத கையெழுத்துப்பிரதிகளே இந்த சவக்கடல் சுருள்கள். அவற்றில் பெரும்பாலானவை எபிரெய மொழியிலும், சில அரமிய மொழியிலும், ஒரு சில பகுதிகள் கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டவை. இந்தச் சுருள்களும் இவற்றோடு கண்டெடுக்கப்பட்ட சில பாகங்களும் 2000-க்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானவை. அதாவது, இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. இச்சுருள்களில் சில அரேபிய நாடோடிகளிடமிருந்து வாங்கப்பட்டன. அவற்றுள் முதலாவது பெறப்பட்டவை நீளமான ஏழு சுருள்களாகும். இந்த கையெழுத்துப்பிரதிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான நிலையில் இருந்தன; அதாவது சில நல்ல நிலையிலும் சில மிகவும் சிதைந்த நிலையிலும் இருந்தன. இன்னும் பல குகைகளை ஆராய்ந்ததில், வேறு சில சுருள்களும் ஆயிரக்கணக்கான சுருள் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. 1947-56 வரையான காலப்பகுதியில், இப்படிப்பட்ட சுருள்கள் அடங்கிய குகைகள் மொத்தம் 11 கண்டுபிடிக்கப்பட்டன. இவை சவக்கடல் பகுதியிலுள்ள கும்ரான் என்ற இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சுருள்களும் அவற்றோடு கிடைத்த சுருள் பாகங்களும் வகைப்படுத்தப்பட்டன; அப்போது, சுமார் 800 கையெழுத்துப்பிரதிகள் பிரித்தெடுக்கப்பட்டன. இதில் சுமார் கால்பாகம் அல்லது 200-க்கும் சற்று அதிகமானவை, பைபிளின் எபிரெய புத்தகங்களுடைய பாகங்களின் பிரதிகள். மற்றவையோ, தள்ளுபடியாகமம் (Apocrypha), பழைய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் எழுதியதாக கூறப்படும் எழுத்துச் சுவடிகள் (Pseudepigrapha) என்றழைக்கப்படும் பைபிள் சாராத பூர்வ யூத புத்தகங்கள் அடங்கியவை.a
சில சுருள்கள் கல்விமான்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தன; அவை அதற்கு முன் அறியப்பட்டிராதவை. இவற்றில் யூத சட்டங்களைப் பற்றிய விளக்கங்கள், கும்ரானில் வாழ்ந்த ஒரு மதப் பிரிவினருக்கான திட்டவட்டமான சட்டங்கள், வணக்கத்திற்கான பாடல்கள் மற்றும் ஜெபங்கள், பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தையும் கடைசி நாட்களையும் விவரிக்கும் இறையியல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். அதுமட்டுமல்ல, தனிச்சிறப்புமிக்க பைபிள் விளக்கவுரைகளும் அவற்றில் இருந்தன. மிகப் பழமையான இவை, வசனம் வசனமாக விளக்கவுரை தரும் நவீன நாளைய புத்தகங்களுக்கு முன்னோடியாய் விளங்குகின்றன.
சவக்கடல் சுருள்களை எழுதியது யார்?
பூர்வ ஆவணங்கள் எழுதப்பட்ட காலத்தை நிர்ணயிக்க பல விதமான முறைகள் கையாளப்படுகின்றன. இவற்றின்படி, இந்தச் சுருள்கள் பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நகல் எடுக்கப்பட்டவையாக அல்லது தொகுக்கப்பட்டவையாக இருக்கலாம். பொ.ச. 70-ல் ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன் எருசலேமிலிருந்த யூதர்களால் இந்தக் குகைகளில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சில கல்விமான்கள் கருத்து தெரிவிக்கின்றனர். என்றாலும், இந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருப்பவை இந்த கருத்திற்கு சற்றும் பொருந்தாதவை என இவற்றை ஆராய்ந்த வல்லுநர்களில் பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். ஏனெனில், எருசலேமின் மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறான கருத்துக்களையும் பழக்கங்களையும் இந்த சுருள்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, எருசலேமின் ஆசாரியர்களையும் ஆலய சேவையையும் கடவுள் நிராகரித்து விட்டார் என்பதையும் ஆலய வணக்கமுறைக்கு பதிலாக வனாந்தர வணக்க முறையையே அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் நம்பிய ஒரு மதப் பிரிவினரையே இந்த சுருள்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இப்படிப்பட்ட சுருள்கள் அடங்கிய தொகுப்பை எருசலேமின் ஆலய நிர்வாகிகள் ஒளித்து வைத்திருப்பார்கள் என்பது ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.
கும்ரானில் நகல் எடுப்பவர்களின் ஒரு குழுவினர் இருந்திருக்கலாம்; என்றாலும், பெரும்பாலான சுருள்கள், அவற்றை நம்பியவர்களால் மற்ற இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு கும்ரானுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். ஒருவிதத்தில், சவக்கடல் சுருள்களை ஒரு நூலகத் தொகுப்பு என்றே சொல்லலாம். எந்தவொரு நூலகத்திலுமே பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் புத்தகங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது; அவை அனைத்துமே அவற்றை வாசிப்போரின் மத நம்பிக்கையை தெரிவிப்பவையாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அதுபோலவே, இந்தச் சுருள்களும் பல கருத்துக்களைத் தெரிவிக்கும் நூலகத் தொகுப்பே. என்றாலும், எந்த புத்தகங்களுக்கு நிறைய பிரதிகள் உள்ளனவோ, அவை கும்ரான் மதப்பிரிவினருடைய நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் பெரும்பாலும் தெரிவிக்கின்றன.
கும்ரானில் வசித்தோர் யூதத்துறவியரா?
இந்த சுருள்கள் கும்ரான் நூலகமாய் இருந்ததென்றால், அங்கு வசித்தோர் யார்? இந்தச் சுருள்கள் யூதத்துறவிகளுடையது (Essenes) என்ற கருத்தை முதன்முதலில் தெரிவித்தவர் பேராசிரியர் எலியேசர் சூகனிக். இவர் 1947-ல், எருசலேமிலுள்ள எபிரெய பல்கலைக்கழகத்திற்காக மூன்று சுருள்களை பெற்றுக்கொண்டவர்.
முதல் நூற்றாண்டு எழுத்தாளர்களான ஜொஸிஃபஸ், அலெக்சாந்திரியாவின் ஃபிலோ, மூத்த பிளைனி ஆகியோர் இந்த யூத மதத் தொகுதியினரைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகுதியினர் தோன்றிய கதை யாருக்கும் சரியாக தெரியவில்லை. அதைக் குறித்து பல்வேறு கருத்துக்களும் ஊகங்களும்தான் நிலவுகின்றன. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் மக்கபேயர்களுடைய புரட்சியைத் தொடர்ந்து நிலவிய கலவரமான காலப்பகுதியில் இந்தத் தொகுதியினர் தோன்றியிருக்கலாம்.b பரிசேயர்கள், சதுசேயர்களுடைய மத நம்பிக்கைகளிலிருந்து இவர்களுடைய நம்பிக்கைகள் எப்படி வேறுபட்டிருக்கின்றன என்பதை விளக்குகையில், அந்தக் காலப்பகுதியில் அவர்கள் வாழ்ந்ததாக ஜொஸிஃபஸ் தெரிவிக்கிறார். சவக்கடல் பகுதியில் எரிகோவுக்கும் என்கேதிக்கும் இடையே யூதத் துறவியர் வசித்ததாக பிளைனி குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ஜேம்ஸ் வான்டர்காம் என்பவர் சவக்கடல் சுருளை ஆராய்ச்சி செய்த வல்லுநர். “யூதத் துறவியர்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு சிறிய தொகுதியினரே கும்ரானில் வாழ்ந்தவர்கள்” என இவர் கருத்து தெரிவிக்கிறார். இவர்கள் மொத்தம் நாலாயிரம் பேர் இருந்ததாக ஜொஸிஃபஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கள் எதுவும் யூதத் துறவியருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தவில்லை; என்றாலும், கும்ரான் பிரதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த வேறெந்த யூதப் பிரிவினரையும்விட இந்த துறவியருக்கே அதிகம் பொருந்துகிறது.
கும்ரானில்தான் கிறிஸ்தவம் தோன்றியது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளுக்கும் கும்ரான் மதப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும் இடையே பல குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன. மிகவும் கறாரான ஓய்வுநாள் சட்டதிட்டங்களையும் புனிதத்தைக் காத்துக்கொள்வதற்கான எக்கச்சக்கமான சடங்குகளையும் பாரம்பரியங்களையும் கும்ரான் பிரதிகள் குறிப்பிடுகின்றன. (மத்தேயு 15:1-20; லூக்கா 6:1-11) மனித சஞ்சாரமற்ற இடத்தில் அவர்கள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டனர்; விதி, ஆத்துமா அழியாமை போன்றவற்றை நம்பினர்; திருமணம் செய்யாதிருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்; தூதர் வணக்கத்தைப் பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகளையும் வைத்திருந்தனர். இயேசு மற்றும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் போதனைகளுக்கு இவை முற்றிலும் முரணானவை.—மத்தேயு 5:14-16; யோவான் 11:23, 24; கொலோசெயர் 2:19; 1 தீமோத்தேயு 4:1-3.
மூடிமறைத்தோ, ஒளித்தோ வைக்கப்படவில்லை
சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட வருடத்திற்குப் பின், அவற்றின் பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுருள்களின் தகவல்களை உலகம் முழுவதிலுமுள்ள வல்லுநர்கள் பெற முடிந்தது. ஆனால், குகை 4 என அறியப்பட்டதிலிருந்து கிடைத்த ஆயிரக்கணக்கான சுருள் பாகங்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாயின. கிழக்கு எருசலேமிலுள்ள (யோர்தானின் பாகமாக இருந்த) பாலஸ்தீன தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் நியமித்த சர்வதேச வல்லுநர்களின் ஒரு சிறிய குழுவினிடம் இந்த சுருள்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்தக் குழுவில் யூத கல்விமான்களோ அல்லது இஸ்ரேலிய கல்விமான்களோ சேர்க்கப்படவில்லை.
தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்வரை இந்தச் சுருள்களை யாருடைய கண்ணிலும் இந்தக் குழு காட்டவில்லை. அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான வல்லுநர்களே இந்த ஆராய்ச்சிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், ஓர் உறுப்பினர் இறந்துவிட்டால், அவருக்குப் பதிலாக ஒரேவொரு புதிய வல்லுநரே நியமிக்கப்பட்டார். ஆனால், முடிக்க வேண்டிய வேலையோ அதிகமாக இருந்ததால், ஒரு பெரிய குழு தேவைப்பட்டது. சில சமயங்களில், பூர்வ எபிரெய, அரமிய மொழியில் கைதேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமும் இருந்தது. “எவ்வளவுதான் திறமைசாலிகளாக இருந்தபோதிலும், பல ஆயிரக்கணக்கான சுருள்களின் பாகங்களை ஆராய எட்டு வல்லுநர்கள் போதவே போதாது” என ஜேம்ஸ் வான்டர்காம் குறிப்பிட்டுள்ளார்.
1967-ல் நடந்த ஆறு நாள் யுத்தத்தால், கிழக்கு எருசலேமும் அதன் சுருள்களும் இஸ்ரேலிய ஆதிக்கத்தின் வசம் வந்தது. ஆனால், அந்தச் சுருள்களை ஆராய்ந்த குழுவின் செயல்பாட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, அந்தச் சுருளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் மேலும் பல பத்தாண்டுகள் நீடித்தது. இதை எதிர்த்து வல்லுநர்கள் அநேகர் கண்டனக்குரல் எழுப்பினர். இருபதாம் நூற்றாண்டில், கல்வித்துறை சார்ந்த மோசடிகளிலேயே மாபெரும் மோசடி என இதை 1977-ல், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேஸா வெர்மெஷ் அழைத்தார். கிறிஸ்தவத்திற்கு சாதகமற்ற தகவல்கள் இந்தச் சுருள்களில் இருப்பதால் இதை மூடிமறைக்க கத்தோலிக்க சர்ச் வேண்டுமென்றே பிரயத்தனங்கள் செய்ததாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
1980-களில், 20 வல்லுநர்களுடன் அந்தக் குழு விரிவாக்கப்பட்டது. பின்னர் 1990-ல், எருசலேமின் எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பதிப்பாசிரியருமான இம்மானுவேல் டோவ் கொடுத்த ஆலோசனையின்படி, அந்தக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. 50-க்கும் அதிகமான வல்லுநர்கள் அதில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள சுருள்களைக் குறித்த விரிவான குறிப்புகளும் விளக்கங்களும் அடங்கிய பிரதிகள் வெளியிடுவதற்கு திட்டவட்டமான அட்டவணைகள் போடப்பட்டன.
1991-ல், இந்த முயற்சி சற்றும் எதிர்பாராதவிதமாக, ஒரு மைல்கல்லை எட்டியது. முதலாவதாக, பிரசுரிக்கப்படாத சவக்கடல் சுருள்களின் ஆரம்பப் பதிப்பு (ஆங்கிலம்) வெளியிடப்பட்டது. அந்தக் குழு ஏற்கெனவே தயாரித்த அகரவரிசை அட்டவணையின் அடிப்படையில், கம்ப்யூட்டர் உதவியுடன் இந்தப் பதிப்பு பிரசுரிக்கப்பட்டது. அடுத்தபடியாக, இந்த சுருள்களின் எல்லா புகைப்படங்களும் எந்த வல்லுநருக்கும் கிடைக்கும் என கலிபோர்னியாவின் சான் மேரினோவிலுள்ள ஹன்டிங்டன் நூலகம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அதுவரை பிரசுரிக்கப்படாத சுருள்களின் புகைப்படங்கள் அடங்கிய சவக்கடல் சுருள்களின் மறுபதிப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
எனவே, கடந்த பத்தாண்டுகளில், சவக்கடல் சுருள்கள் எல்லாம் ஆராய்ச்சிக்கு “கைமேல்” கிடைத்தன. அதனால், அவற்றில் ஏதும் மூடிமறைக்கப்படவோ, ஒளித்து வைக்கப்படவோ இல்லை என்பதை இந்த ஆராய்ச்சி தெளிவாக்குகிறது. அந்த சுருள்களின் அதிகாரப்பூர்வ பதிப்பு பிரசுரிக்கப்பட்டிருப்பதால், முழு அளவிலான ஆராய்ச்சியை இப்போது துவங்கலாம். அதாவது, சுருள்களை ஆராயும் கல்விமான்களின் புதிய தலைமுறை பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், பைபிள் மாணாக்கர்களுக்கு இந்த ஆராய்ச்சி உண்மையிலேயே முக்கியமானதா?
[அடிக்குறிப்புகள்]
a (“ஒளித்து வைக்கப்பட்டது” என்ற சொல்லர்த்தமான அர்த்தத்தையுடைய) தள்ளுபடியாகமமும் (“பொய்யான எழுத்துக்கள்” என்ற சொல்லர்த்தமான அர்த்தத்தையுடைய) எழுத்துச் சுவடிகளும் பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த யூத புத்தகங்கள். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் தள்ளுபடியாகமத்தை ரோமன் கத்தோலிக்க சர்ச் சேர்த்துள்ளது. ஆனால், இந்தப் புத்தகங்களை யூதர்களோ, புராட்டஸ்டண்டினரோ ஏற்றுக் கொள்ளவில்லை. எழுத்துச் சுவடிகள் என்பவை பைபிள் கதைகளைப் பற்றி விரிவான விவரங்களைத் தருபவை. இவை, பைபிளிலுள்ள பிரபலமான சில ஆட்களுடைய பெயரில் எழுதப்பட்டவை.
b காவற்கோபுரம், நவம்பர் 15, 1998, பிரதியில் பக்கங்கள் 21-4-ல் வெளிவந்துள்ள “மக்கபேயர் யார்?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 3-ன் படம்]
சவக்கடல் அருகே பூர்வ சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட குகைகள்
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
சுருள்களின் பாகங்கள்: பக்கங்கள் 3, 4, 6: Courtesy of Israel Antiquities Authority
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Shrine of the Book, Israel Museum, Jerusalem