உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 6/15 பக். 18-19
  • ‘சுருள்களை எடுத்துக்கொண்டு வா’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘சுருள்களை எடுத்துக்கொண்டு வா’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிறிஸ்தவர்கள் சுருள்களைப் பயன்படுத்திய விதம்
  • பவுலுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • சவக்கடல் சுருள்களைப் பற்றிய உண்மைகள் யாவை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • தோல் சுருள்
    சொல் பட்டியல்
  • சவக்கடல் சுருள்கள் ஏன் இத்தனை ஆர்வம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • பைபிள் புத்தக எண் 55—2 தீமோத்தேயு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 6/15 பக். 18-19

‘சுருள்களை எடுத்துக்கொண்டு வா’

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் தன் சக மிஷனரியான தீமோத்தேயுவுக்கு எழுதினார்; சில பதிவுகளை எடுத்துவரும்படி அவரிடம் சொன்னார். எப்படிப்பட்ட சுருள்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார்? எதனால் அவற்றை எடுத்து வரச் சொன்னார்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கி.பி. முதல் நூற்றாண்டின் மத்திபத்தில் இந்த வார்த்தைகளை பவுல் எழுதியபோது, எபிரெய வேதாகமத்திலுள்ள 39 புத்தகங்களும் 22 அல்லது 24 புத்தகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன; அவற்றில் பெரும்பாலானவை தனித்தனி சுருள்களாக இருந்தன. அவை விலையுயர்ந்தவையாக இருந்தபோதிலும் ‘ஓரளவு வசதி படைத்தவர்களால் வாங்க முடிந்தவையாகவே’ இருந்தன என்று பேராசிரியர் ஆலன் மீலர்ட் என்பவர் குறிப்பிட்டார். சிலர் ஒரு சுருளையாவது வைத்திருந்தார்கள். உதாரணத்திற்கு, எத்தியோப்பிய அதிகாரி ஒருவர் தன் ரதத்தில் வைத்திருந்த ஒரு சுருளை எடுத்து ‘ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தைச் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தார்.’ அவர் ‘எத்தியோப்பியருடைய ராணியின் செல்வம் அனைத்தையும் நிர்வகித்து’ வந்தார். வேதாகமச் சுருள்கள் சிலவற்றைத் தனக்கென வைத்திருக்கும் அளவுக்கு அவர் வசதியுள்ளவராக இருந்திருக்க வேண்டும்.—அப். 8:27, 28.

பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியபோது, “துரோவாவில் உள்ள கார்புவிடம் நான் விட்டுவந்த என் அங்கியையும் சுருள்களையும், முக்கியமாகத் தோல் சுருள்களையும், நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா” என்று கேட்டுக்கொண்டார். (2 தீ. 4:13) இது, பவுலிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்ததை அர்த்தப்படுத்துகிறது. அவரிடமிருந்த புத்தகங்களிலேயே மிக முக்கியமானது கடவுளுடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவாக இருந்திருக்க முடியும்? இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “தோல் சுருள்களை” குறித்து ஏ. டி. ராபர்ட்ஸன் என்ற பைபிள் அறிஞர் இவ்வாறு சொன்னார்: “இவை முக்கியமாக பழைய ஏற்பாட்டு புத்தகங்களின் நகல்களாக, நாணற்புல் சுருள்களைவிட அதிக விலையுயர்ந்த [நீடித்து உழைக்கக்கூடிய] தோல் சுருள்களாக இருந்திருக்கலாம்.” இளம் வயதிலிருந்தே பவுல் ‘கமாலியேலின் காலடியில் உட்கார்ந்து கல்வி பயின்றிருந்தார்’; இந்த கமாலியேல் திருச்சட்ட போதகராகவும் எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். எனவே, கடவுளுடைய வார்த்தையின் சுருள்களை பவுல் தனக்கென வைத்திருந்ததில் ஆச்சரியமில்லை.—அப். 5:34; 22:3.

கிறிஸ்தவர்கள் சுருள்களைப் பயன்படுத்திய விதம்

என்றாலும், பரிசுத்த வேதாகமத்தின் சுருள்கள் ஒரு சிலரிடமே இருந்தன. அப்படியென்றால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளவற்றை எப்படி அறிந்துகொண்டார்கள்? தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்திலுள்ள ஒரு குறிப்பு இதற்குப் பதிலளிக்கிறது. ‘நான் வரும்வரை, சபையார்முன் வாசிப்பதில் . . . முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிரு’ என்று அவர் எழுதினார். (1 தீ. 4:13) கிறிஸ்தவக் கூட்டங்களில் வேதவசனங்களைச் சபையார்முன் வாசிப்பது வழக்கமாக இருந்தது; இது, மோசேயின் காலம் முதற்கொண்டே கடவுளுடைய மக்கள் மத்தியில் வழிவழியாகப் பின்பற்றப்பட்ட ஒரு பழக்கமாக இருந்தது.—அப். 13:15; 15:21; 2 கொ. 3:15.

ஒரு மூப்பராக தீமோத்தேயு சத்தமாக வாசிப்பதில் ‘முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்க’ வேண்டியிருந்தது; இது, வேதாகமப் பிரதிகளை வைத்திராதவர்கள் பயனடைவதற்கு உதவியது. வேதாகமம் சபையார்முன் சத்தமாக வாசிக்கப்பட்டபோது, ஒரு வார்த்தையைக்கூட தவறவிடாதபடி எல்லாரும் கவனமாகக் கேட்டிருக்க வேண்டும்; பின்னர், வீடு திரும்பியதும் வாசிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பெற்றோரும் பிள்ளைகளும் கலந்துபேசியிருக்க வேண்டும்.

சவக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபலமான ஏசாயா சுருள், கிட்டத்தட்ட 24 அடி (7.3 மீட்டர்) நீளமுள்ளது. பொதுவாக, சுருள்களின் இருமுனைகளிலும் ஒரு கோல் இணைக்கப்பட்டு, அவை சேதமடையாதிருக்க உறைக்குள் வைக்கப்பட்டிருந்ததால் கனமாக இருந்தன. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவற்றை ஊழியத்திற்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது. பவுல் தனக்கென வேதாகமச் சுருள்கள் சிலவற்றை வைத்திருந்தபோதிலும் அவை எல்லாவற்றையும் போன இடங்களுக்கெல்லாம் அவரால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. ஆகவே, அவற்றில் சிலவற்றை துரோவாவில் இருந்த அவருடைய நண்பரான கார்புவிடம் அவர் விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

பவுலுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இரண்டாவது முறையாக ரோமாபுரியில் சிறைப்பட்டிருந்த பவுல் சுருள்களை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்வதற்கு முன்பு இவ்வாறு எழுதினார்: “சிறந்த போராட்டத்தை நான் போராடியிருக்கிறேன்; என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், . . . இப்போதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.” (2 தீ. 4:7, 8) இதை அவர் சுமார் கி.பி. 65-ல் எழுதியிருக்கலாம்; அப்போது, ரோம அரசனான நீரோ கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தான். இந்த முறை பவுலுக்குக் கிடைத்த சிறைதண்டனை கடுமையாக இருந்தது. சொல்லப்போனால், தான் சீக்கிரத்தில் கொல்லப்படப்போவதை அவர் அறிந்திருந்தார். (2 தீ. 1:16; 4:6) எனவேதான், தன்னுடைய சுருள்களைக் கைவசம் வைத்திருக்க பவுல் அதிகம் ஆசைப்பட்டார். தான் சிறந்த போராட்டத்தைப் போராடி முடித்திருந்ததாக அவர் நம்பியபோதிலும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் தொடர்ந்து தன்னைப் பலப்படுத்திக்கொள்ள ஏங்கினார்.

பவுலுடைய கடிதம் கிடைத்தபோது தீமோத்தேயு இன்னும் எபேசுவில் இருந்திருக்க வேண்டும். (1 தீ. 1:3) எபேசுவிலிருந்து துரோவா வழியாக ரோமாபுரிக்குச் செல்வதற்குரிய தூரம் கிட்டத்தட்ட 1,000 மைலாக (1,600 கிலோமீட்டராக) இருந்தது. அதே கடிதத்தில் பவுல், “குளிர்காலத்திற்குமுன் இங்கு வந்துசேர உன்னால் முடிந்த அனைத்தையும் செய்” என்று தீமோத்தேயுவுக்கு எழுதியிருந்தார். (2 தீ. 4:21) பவுல் ஆசைப்பட்ட சமயத்திற்குள் தீமோத்தேயு கப்பலேறி ரோமாபுரி போய்ச் சேர்ந்தாரா என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை.

“சுருள்களையும், முக்கியமாகத் தோல் சுருள்களையும்” எடுத்து வரும்படி பவுல் கேட்டுக்கொண்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? வாழ்க்கையின் மிக இக்கட்டான அந்தக் காலகட்டத்தில்கூட கடவுளுடைய வார்த்தையிடம் அவருக்கிருந்த தீராத ஆவல் தணியாதிருந்தது. அவர் எப்போதும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தம் வைத்திருக்கவும், அவருக்கு ஊக்கமாகச் சேவை செய்யவும், மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் முடிந்ததற்கான ரகசியத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

நமக்கென ஒரு முழு பைபிளை இன்று நாம் வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! நம்மில் சிலர் பைபிளின் பல பிரதிகளையும் பல மொழிபெயர்ப்புகளையும்கூட வைத்திருக்கிறோம். பவுலைப் போல, பைபிளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான பேரார்வத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் எழுதிய 14 கடிதங்களில், தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதமே கடைசியானது. சுருளை எடுத்து வரும்படி அவர் கேட்டுக்கொண்டது அதன் இறுதி பாகத்தில் காணப்படுகிறது. சொல்லப்போனால், “சுருள்களையும், முக்கியமாகத் தோல் சுருள்களையும்” எடுத்து வரும்படி தீமோத்தேயுவிடம் அவர் கேட்டுக்கொண்டதே அவர் எழுதிய கடைசி ஆசைகளில் ஒன்று.

பவுலைப் போல், விசுவாசத்திற்கான சிறந்த போராட்டத்தைப் போராடி முடிப்பதே உங்களுடைய உள்ளான ஆசையா? யெகோவாவின் சேவையில் தொடர்ந்து சுறுசுறுப்பாய் ஈடுபடவும், போதும் என்று அவர் சொல்லும்வரை ஊழியம் செய்யவும் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், கிறிஸ்தவர்களை என்ன செய்யும்படி பவுல் உற்சாகப்படுத்தினாரோ அதைச் செய்யுங்கள். ஆம், ‘உங்கள் மீதும் உங்கள் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்துங்கள்’; இதற்காக, இன்று எத்தனை எத்தனையோ மக்களின் கைகளில் சுருள்களைவிட அதிக சௌகரியமான வடிவங்களில் தவழ்கிற பைபிளை ஊக்கமாகவும் தவறாமலும் படியுங்கள்.—1 தீ. 4:16.

[பக்கம் 18, 19-ன் தேசப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எபேசு

துரோவா

ரோமாபுரி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்