ஆவிக்குரிய பரதீஸ் என்றால் என்ன?
பிரேஸிலில் உள்ள ஒரு சிறிய நகரில் கூஸ்டாவூ வளர்க்கப்பட்டார்.a மரணத்திற்குப் பின்பு நல்லவர்கள் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்றுதான் சிறு வயதிலேயே அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் உண்மையுள்ள மனிதகுலம் ஒரு நாள் பூமியில் பரதீஸில் பரிபூரண ஜீவனை அனுபவிப்பதே கடவுளுடைய நோக்கம் என்பதை அவர் அறியவே இல்லை. (வெளிப்படுத்துதல் 21:3, 4) இன்னொன்றைப் பற்றியும் அவர் அறியாதிருந்தார். அதுதான் ஆவிக்குரிய பரதீஸ். இப்பொழுதேயும்கூட அப்படியொரு பரதீஸில் தான் இருக்க முடியும் என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாது.
இந்த ஆவிக்குரிய பரதீஸைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? உண்மையில் அது என்ன, அதில் இருப்பதற்கு என்ன தேவை என்றெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? சந்தோஷத்தை விரும்புகிற எவரும், அந்தப் பரதீஸைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
ஆவிக்குரிய பரதீஸை கண்டுபிடித்தல்
இன்றே வேண்டுமானாலும் ஒருவர் பரதீஸில் வாழலாம் என்று சொன்னால் அது நம்ப முடியாததாக இருக்கும். இன்றைய பூமி துளியும் பரதீஸை போல் இல்லை. ஏராளமானோர் அனுபவிக்கும் துயர சூழலை, “இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை” என பூர்வ எபிரெய அரசர் ஒருவர் விவரித்தார். (பிரசங்கி 4:1) ஊழல் நிறைந்த அரசியல், மத, பொருளாதார அமைப்புகளால் எண்ணற்றோர் துன்பப்படுகின்றனர். அவர்களுக்கு விடுதலையும் இல்லை, அவர்களை ‘தேற்றுவாரும்’ இல்லை. இன்னும் பலர், வாங்கிய பொருட்களுக்குப் பணம் கட்டுவது, பிள்ளைகளை வளர்ப்பது, இன்னும் இதுபோன்ற அநேக காரியங்களின் மத்தியில் வாழ்க்கை போராட்டத்தில் சிக்கியிருக்கின்றனர். தங்களுடைய பாரத்தை சுலபமாக்கி தங்களை தேற்றுவார் யாரேனும் வரமாட்டார்களா என இவர்களும் ஏங்குகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை துளிகூட பரதீஸாக இல்லை.
அப்படியானால், ஆவிக்குரிய பரதீஸ் எங்குள்ளது? “பாரடைஸ்” என்ற இந்த ஆங்கில சொல், புத்துணர்ச்சியூட்டும் அமைதலான இடமாகிய பூங்கா அல்லது தோட்டம் என்ற அர்த்தத்தைத் தரும் கிரேக்க, பெர்சிய, எபிரெய சொற்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூமி நிஜமாகவே சொல்லர்த்தமான பரதீஸாக, பாவமற்ற மனிதகுலத்திற்கு தோட்ட வீடாக ஆகப் போகிறதென்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (சங்கீதம் 37:10, 11) இதை மனதில் வைத்து சிந்திக்கையில், சக மனிதனுடனும் கடவுளுடனும் சமாதானத்தை அனுபவிக்க முடிவதோடு கண்களுக்கு இனிமையையும் மனதுக்கு சாந்தத்தையும் அளிக்கும் சூழ்நிலைமைதான் ஆவிக்குரிய பரதீஸ் என்பதாகவே தோன்றுகிறது. கூஸ்டாவூ கண்டுபிடித்தவாறே, அத்தகைய பரதீஸ் இன்று இருக்கிறது, அது திரளான அநேகரை உட்படுத்துகிறது.
தன் 12 வயதில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாக ஆவதற்கு கூஸ்டாவூ தீர்மானித்தார். தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் இறையியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருக்கையில் இசை, சினிமா, அரசியல் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டார். இவை இளைஞரை வசீகரிப்பதற்கு சர்ச்சு செய்த முன்னேற்பாடுகள். பாதிரிமாரின் முழு அக்கறையும் ஜனங்களின் நலனில் இருக்க வேண்டும், அவர் திருமணம் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தார். எனினும், கூஸ்டாவூக்குத் தெரிந்த சில பாதிரிமாரும், இறையியல் கல்லூரியைச் சேர்ந்த சிலரும் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டனர். இந்த சூழலில் கூஸ்டாவூ எக்கச்சக்கமாக குடிக்க ஆரம்பித்தார். ஆவிக்குரிய பரதீஸை அவர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பூமிக்குரிய பரதீஸைப் பற்றி பைபிள் விவரிக்கும் துண்டுப்பிரதி ஒன்றை கூஸ்டாவூ ஒருநாள் வாசித்தார். அது, வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அவரைச் சிந்திக்க தூண்டியது. “நான் அடிக்கடி பைபிளை வாசித்தேன், ஆனால் புரிந்துகொள்ளவில்லை. கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பதும்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை” என அவர் சொல்லுகிறார். எனவே அந்த இறையியல் கல்லூரியை விட்டு வெளியேறினார்; பைபிளைப் புரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியை நாடினார். அதன்பின் நன்கு முன்னேறி, சீக்கிரத்தில் தன் வாழ்க்கையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆவிக்குரிய பரதீஸைப் பற்றி கூஸ்டாவூ கற்றுவந்தார்.
கடவுளின் பெயருக்கான ஜனம்
யெகோவா என்ற கடவுளுடைய பெயர், பைபிள் மாணாக்கர்களுக்கு வெறுமனே ஒரு சுவாரசியமான விஷயம் மட்டுமே அல்ல என்பதை கூஸ்டாவூ கற்றறிந்தார். (யாத்திராகமம் 6:3) அது, உண்மை வணக்கத்தின் முக்கிய பாகம். “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) பிற ஜனத்தாரிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு சொன்னார்: ‘புறஜாதிகளிலிருந்து தமது நாமத்திற்காகக் கடவுள் ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்துக்கொள்ள . . . கருணைகூர்ந்தார்.’ (அப்போஸ்தலர் 15:14, திருத்திய மொழிபெயர்ப்பு) முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபை ‘தமது நாமத்திற்கான ஜனமாக’ இருந்தது. இன்று கடவுளின் பெயருக்கான ஜனம் இருக்கிறதா? இருக்கிறது, அவர்களே யெகோவாவின் சாட்சிகள் என்பதை கூஸ்டாவூ கண்டுபிடித்தார்.
யெகோவாவின் சாட்சிகள் 235 தேசங்களில் சுறுசுறுப்பாய் இயங்கி வருகின்றனர். அவர்கள் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். அதோடு ஆர்வம் காட்டும் இன்னும் 80 லட்சம் பேர் அவர்களுடைய கூட்டங்களுக்கு வருகின்றனர். உலகம் அறிந்த அவர்களுடைய ஊழியத்தின் மூலம் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை அவர்கள் நிறைவேற்றுகின்றனர்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” (மத்தேயு 24:14) யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு வைத்ததால் ஆவிக்குரிய பரதீஸை கண்டறிந்ததாக கூஸ்டாவூ ஏன் சொன்னார்? அவரே சொல்லட்டும்: “உலகில், முக்கியமாய் இறையியல் கல்லூரியில் நான் கண்டவற்றை யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் கண்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். சாட்சிகள் காட்டும் அன்பு பெரும் வேறுபாட்டை உண்டு பண்ணுகிறது.”
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்களும் இதைப் போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். “சந்தோஷம் என்றால் என்ன என தெரியாமலே வளர்ந்தேன். என் குடும்பத்திலுங்கூட அதை நான் அனுபவித்ததில்லை. யெகோவாவின் சாட்சிகளுக்கு மத்தியில் அன்பை செயலில் நான் முதன்முறை கண்டேன்” என பிரேஸிலைச் சேர்ந்த மீரீயம் என்ற இளம் பெண் சொன்னாள். “நான் அவ்வப்போது ஆவியுலகத் தொடர்பு காரியங்களில் ஈடுபடுவேன், மதம் எனக்கு ஒரு பொருட்டாய் இருக்கவில்லை. எனக்கு என் அந்தஸ்தும் என்ஜினியர் வேலையும்தான் ரொம்ப முக்கியமானவையாய் தோன்றின. எனினும், யெகோவாவின் சாட்சிகளோடு என் மனைவி பைபிள் படிக்க ஆரம்பித்த போது அவளில் ஏதோ மாற்றம் தெரிந்தது. மேலும், அவளுக்கு பைபிள் சொல்லிக் கொடுக்க வந்த அந்த பெண்ணிடம் காணப்பட்ட மகிழ்ச்சியும் ஆர்வமும் என்னைக் கவர்ந்தன” என கிறிஸ்டியன் என்பவர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களை ஜனங்கள் தெரிவிக்கின்றனர்?
ஆவிக்குரிய பரதீஸ் என்றால் என்ன?
யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து பெறும் அறிவுக்கு காட்டும் போற்றுதல் எல்லாரிலிருந்தும் அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பைபிள் சொல்வது உண்மை, அது கடவுளுடைய வார்த்தை என்று அவர்கள் நம்புகின்றனர். ஆகையால், மதத்தின் அடிப்படை கருத்துகளைத் தெரிந்துகொள்வதில் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடுவதில்லை. பைபிளையும் பைபிள் சம்பந்தப்பட்ட பிரசுரங்களையும் தவறாமல் வாசிக்க அட்டவணை வைத்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளோடு ஒருவர் எவ்வளவு அதிக காலம் கூட்டுறவு வைத்திருக்கிறாரோ அவ்வளவு அதிகமாக கடவுளையும் பைபிளின்படியான அவருடைய சித்தத்தையும் பற்றி கற்றுக்கொள்கிறார்.
இத்தகைய அறிவு, சந்தோஷத்தைக் கெடுத்துப்போடும் மூட நம்பிக்கைகள், தவறான கருத்துக்கள் போன்றவற்றின் பிடியிலிருந்து யெகோவாவின் சாட்சிகளை விடுவிக்கிறது. “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) இதன் நிஜத்தை யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கின்றனர். ஒரு காலத்தில் ஆவியுலகத் தொடர்பு வைத்திருந்த ஃபெர்னான்டூ சொல்கிறதாவது: “நித்திய ஜீவனைப் பற்றி கற்றறிந்தது பெரும் நிம்மதி அளித்தது. என் பெற்றோரையோ என்னையோ மரணம் விழுங்கிவிடும் என பயந்துகொண்டிருந்தேன்.” ஆவியுலக தொடர்பு, மரணத்திற்குப் பின் வாழ்க்கை போன்ற பயங்களிலிருந்து ஃபெர்னான்டூவை சத்தியம் விடுதலையாக்கினது.
பைபிளில், கடவுளைப் பற்றிய அறிவுக்கும் பரதீஸுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, சங்காரம் செய்வாருமில்லை; சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொன்னார்.—ஏசாயா 11:9, தி.மொ.
ஏசாயா முன்னறிவித்த சமாதானம் நிலவ வேண்டுமானால் அறிவு மட்டுமே போதாது. ஒருவர் தான் கற்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். “ஒருவன் ஆவியின் கனிகளை வளர்த்துக்கொள்கையில் ஆவிக்குரிய பரதீஸுக்கு தன் பங்கை செய்கிறான்” என்ற குறிப்பை ஃபெர்னான்டூ சொன்னார். அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைத்தான் ஃபெர்னான்டூ குறிப்பிட்டார். கிறிஸ்தவன் வளர்க்க வேண்டிய நற்பண்புகளை, ‘ஆவியின் கனிகள்’ என பவுல் அழைத்தார். அவற்றை “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என அவர் வரிசையாக குறிப்பிட்டார்.—கலாத்தியர் 5:22, 23.
இத்தகைய பண்புகளைப் பெற முயலும் சமுதாயத்தாருடன் கூட்டுறவுகொள்வது ஏன் உண்மையிலேயே பரதீஸைப்போல் இருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தீர்க்கதரிசி செப்பனியா முன்னறிவித்த ஆவிக்குரிய பரதீஸ் இத்தகையவர்களின் மத்தியில் இருக்கும். அவர் சொன்னதாவது: “இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.”—செப்பனியா 3:13.
அன்பின் முக்கிய பாகம்
பவுல் குறிப்பிட்ட ஆவியின் கனிகளில் முதலில் உள்ளது அன்பு என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது, பைபிளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு குணம். அதன் காரணமாகவே இயேசு, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று சொன்னார். (யோவான் 13:35) யெகோவாவின் சாட்சிகள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பது உண்மைதான். இயேசுவின் அப்போஸ்தலர் மத்தியில் எழுந்ததுபோல், சில சமயங்களில் அவர்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் எழலாம். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மை அன்பை காட்டுகின்றனர். மேலும் இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்வதில் பரிசுத்த ஆவியின் உதவிக்காக ஜெபிக்கின்றனர்.
இதன் காரணமாக, அவர்களுடைய கூட்டுறவு தனித்தன்மை பெற்று விளங்குகிறது. இன பிரச்சினையோ தேசிய பிரிவினையோ அவர்களுக்குள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முடிவான ஆண்டுகளில், இனம், அரசியல், அல்லது குலம் ஆகியவற்றால் வேறுபட்டவர்களை பூண்டோடு அழிக்க முயன்றவர்களின் மத்தியில் வாழ்ந்த சாட்சிகள் தங்கள் உயிரையே பணயம் வைத்து ஒருவருக்கொருவர் அடைக்கலம் கொடுத்தனர். “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” அவர்கள் வருகிறபோதிலும் ஒற்றுமை காக்கின்றனர். இதை சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்.—வெளிப்படுத்துதல் 7:9.
கடவுளின் சித்தத்தைச் செய்வோர் மத்தியில் பரதீஸ்
பேராசை, ஒழுக்கக்கேடு, தன்னலம் ஆகியவற்றிற்கு ஆவிக்குரிய பரதீஸில் இடமில்லை. அப்படியானால், கிறிஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும்? இப்படித்தான்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) சுத்தமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்து, மற்ற காரியங்களிலும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நடக்கையில், ஆவிக்குரிய பரதீஸைக் கட்ட உதவுவதோடு சந்தோஷத்தையும் அனுபவிக்கிறோம். இதன் நிஜத்தை கார்லா தன் வாழ்க்கையில் கண்டாள். “பண உதவிக்கு யார் கையையும் எதிர்பார்க்காமல் கடினமாக உழைக்க என் அப்பா எனக்குக் கற்பித்தார். என் பல்கலைக்கழக படிப்பு எனக்கு ஓரளவு பாதுகாப்பளித்த போதிலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெறும் அறிவு மட்டுமே தரக்கூடிய குடும்ப ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அப்போது நான் பெறவில்லை” என அவள் சொல்கிறாள்.
ஆவிக்குரிய பரதீஸ், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்கிவிடாது என்பது உண்மைதான். இப்போதும் கிறிஸ்தவர்கள் வியாதியில் விழலாம். அவர்கள் வாழும் பகுதியில் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்படலாம். பலர் வறுமையை சகிக்கின்றனர். இருப்பினும், யெகோவா தேவனிடம் நெருங்கிய உறவு வைத்திருப்பது, உதவிக்காக அவரை அணுகலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்த நெருங்கிய உறவே ஆவிக்குரிய பரதீஸின் முக்கிய அம்சம். ‘நம்முடைய பாரங்களை அவர்மீது வைத்துவிடும்படி’ அவர் உண்மையிலேயே நம்மை அழைக்கிறார். மிகக் கடினமான சூழ்நிலைமைகளில் யெகோவா எப்படி தங்களை ஆதரித்தார் என்பதற்கு பலர் அத்தாட்சி அளிக்கின்றனர். (சங்கீதம் 55:22; 86:16, 17) ‘மரண இருளின் பள்ளத்தாக்கிலுங்கூட’ தம்முடைய வணக்கத்தாருடன் இருப்பதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 23:4) நம்மை ஆதரிக்க கடவுள் எப்போதும் தயாராய் இருப்பதில் உறுதியான நம்பிக்கை வைப்பது, ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தைக்’ காத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது; இது ஆவிக்குரிய பரதீஸுக்கு வழியாய் அமைகிறது.—பிலிப்பியர் 4:7.
ஆவிக்குரிய பரதீஸில் நம் பங்கு
எழில் கொஞ்சும் ஒரு பூங்காவுக்கோ தோட்டத்திற்கோ போகையில் பெரும்பாலானோர் மகிழ்ச்சி அடைகின்றனர். உள்ளே உலாவுவதற்கு அல்லது பெஞ்சில் உட்கார்ந்து சுற்றுச்சூழலை ரசிப்பதற்கு ஆசைப்படுகின்றனர். இதைப் போலவே, பலர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டுறவில் மகிழ்ச்சி காண்கின்றனர். அவர்கள் அனுபவிக்கும் தோழமை இதமாகவும், அமைதி தருவதாயும், புத்துணர்ச்சி அளிப்பதாயும் உணர்கின்றனர். பொதுவாக ஓர் அழகிய தோட்டம், எப்போதும் பரதீஸாக இருப்பதற்கு அது பராமரிக்கப்பட வேண்டும். இப்படி இருக்கையில், பரதீஸ் இல்லாத இந்த உலகில், ஆவிக்குரிய பரதீஸ் இருப்பதற்கு காரணம், யெகோவாவின் சாட்சிகள் அதைப் பண்படுத்துவதாலும், அவர்களுடைய முயற்சிகளில் கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதாலுமே. அப்படியானால், அந்தப் பரதீஸுக்கு ஒருவர் எவ்வாறு பயனுள்ள விதத்தில் பங்களிக்க முடியும்?
முதலாவதாக, யெகோவாவின் சாட்சிகளுடைய சபையுடன் நீங்கள் கூட்டுறவுகொள்ள வேண்டும்; பைபிளைப் படிப்பதன் மூலம் ஆவிக்குரிய பரதீஸுக்கு அடிப்படையாக இருக்கும் அறிவை பெற வேண்டும். “ஆவிக்குரிய உணவில்லையேல் ஆவிக்குரிய பரதீஸ் இல்லை” என கார்லா குறிப்பிட்டாள். இது எதை அர்த்தப்படுத்துகிறது? தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அவற்றின் பேரில் சிந்திப்பதையே. இவ்வாறு அறிவைப் பெறுகையில் அது யெகோவா தேவனிடம் நெருங்கிவரவும் அவரை நேசிக்கவும் உதவும். அவருடைய சித்தத்தைச் செய்கையில் வழிநடத்துதலையும் உதவியளிக்கும் அவருடைய ஆவியையும் தரும்படி ஜெபத்தில் அவரிடம் கேட்கவும் கற்றுக்கொள்வீர்கள். ஜெபத்தில் விடாது தரித்திருக்கும்படி இயேசு நமக்குச் சொன்னார். (லூக்கா 11:9-13) “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 5:17) கடவுள் செவிகொடுக்கிறார் என்ற முழுநம்பிக்கையுடன் அவருடன் ஜெபத்தில் பேசும் சிலாக்கியம் ஆவிக்குரிய பரதீஸின் முக்கிய பாகம்.
போகப் போக நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களால் ஏற்படும் முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். பின்னர் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச விரும்புவீர்கள். அப்போது, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய உங்களால் முடியும். (மத்தேயு 5:16) யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும், மனிதகுலத்திடம் அவர்கள் காட்டிய ஈடிணையற்ற அன்பை ஆர்வமாக மற்றவர்களிடம் புகழ்ந்து பேசுவதும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பூமி முழுவதும் இயற்கை அழகு மிளிரும் பரதீஸாக, தூய்மைக்கேட்டின் சுவடு தெரியாமல், உண்மையுள்ள மனிதகுலத்திற்கு பொருத்தமான வீடாக மாறும் காலம் வரவிருக்கிறது. ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ ஆவிக்குரிய பரதீஸ் இருப்பது கடவுளின் வல்லமைக்கும், எதிர்காலத்தில் அவரால் என்ன செய்ய முடியும், என்ன செய்யப் போகிறார் என்பதற்கும் சிறிய அளவில் அத்தாட்சி அளிக்கிறது.—2 தீமோத்தேயு 3:1, NW.
ஆவிக்குரிய பரதீஸில் இருப்பவர்கள், “பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார்” என்று சொல்லும் ஏசாயா 49:10-ன் ஆவிக்குரிய நிறைவேற்றத்தை இப்போதே அனுபவிக்கின்றனர். ஜூஸீ இந்த உண்மைக்கு உயிருள்ள சாட்சி. பிரபல இசை கலைஞராக வேண்டும் என்பதே அவருடைய இலட்சியமாக இருந்தது. ஆனால், கிறிஸ்தவ சபையில் கடவுளைச் சேவிப்பதில் அதிக திருப்தி அடைந்தார். “இப்போது அர்த்தமுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். கிறிஸ்தவ சகோதரர்களுக்கு மத்தியில் பாதுகாப்பை உணருகிறேன். யெகோவா நம் நம்பிக்கைக்குரிய அன்பான தகப்பன் என்பதையும் புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார். ஜூஸீயும் அவரைப் போலவே ஆவிக்குரிய பரதீஸிலுள்ள லட்சக்கணக்கான மற்றவர்களும் அனுபவிக்கும் சந்தோஷத்தை சங்கீதம் 64:10 (தி.மொ.) தெளிவாக விவரிக்கிறது: “நீதிமான் யெகோவாவில் மகிழ்ந்து அவரில் நம்பிக்கை வைப்பான்.” ஆவிக்குரிய பரதீஸைப் பற்றிய எத்தகைய சிறந்த விவரிப்பு!
[அடிக்குறிப்பு]
a குறிப்பிடப்படும் ஆட்கள் கற்பனை பாத்திரங்களல்ல, நிஜமானவர்கள். ஆனால் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 10-ன் படம்]
ஆவிக்குரிய பரதீஸை அனுபவிக்கையில், அதை விரிவுபடுத்துவதிலும் உதவுங்கள்!