உண்மை கிறிஸ்தவம் வெற்றி கொள்கிறது!
“இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது [“வெற்றி கொண்டது,” NW].”—அப்போஸ்தலர் 19:20.
1. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை விவரிக்கவும்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தணியாத வைராக்கியத்தோடு கடவுளுடைய வார்த்தையை பிரசங்கித்தனர். ஒரு சரித்திராசிரியர் பின்வருமாறு எழுதினார்: “ரோம சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவம் படுவேகமாக பரவியது. 100-ம் ஆண்டிற்குள், மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கிறிஸ்தவ சமுதாயம் இருந்தது.”
2. சாத்தான் எவ்வாறு நற்செய்தியின் பலன்களைக் கெடுக்க முயன்றான், இது எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தது?
2 ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வளர்ச்சியை பிசாசாகிய சாத்தானால் தடைசெய்ய முடியவில்லை. ஆகவே, விசுவாச துரோகத்தை தூண்டிவிட்டு நற்செய்தியினால் விளைந்த நல்ல பலன்களைக் கெடுக்க முயன்றான். கோதுமையும் களைகளும் பற்றிய தம் உவமையில் இயேசு இதை முன்னறிவித்திருந்தார். (மத்தேயு 13:24-30, 36-43) சபைக்குள்ளும் பொய் போதகர்கள் எழும்பி அழிவுக்கு செல்லும் பிரிவினைகளை உண்டாக்குவார்கள் என அப்போஸ்தலன் பேதுருவும் எச்சரித்திருந்தார். (2 பேதுரு 2:1-3) அதைப் போலவே, யெகோவாவின் நாள் வருவதற்கு முன்பு விசுவாச துரோகம் தலைதூக்கும் என அப்போஸ்தலன் பவுலும் குறிப்பாக எச்சரித்திருந்தார்.—2 தெசலோனிக்கேயர் 2:1-3.
3. அப்போஸ்தலர்களின் மரணத்திற்கு பிறகு என்ன நடந்தது?
3 அப்போஸ்தலர்களின் மரணத்திற்கு பிறகு, புறமத போதகங்களும் தத்துவங்களும் பெருகியதால் நற்செய்தி மங்கிப்போனது. முன்னறிவித்தபடியே சத்தியத்தின் தூய்மையான செய்தியை பொய் போதகர்கள் திரித்து, களங்கப்படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவமண்டலம் என்ற போலி அமைப்பு உருவாகி உண்மை கிறிஸ்தவத்தை மூடி மறைத்தது. பொது மக்களின் பார்வையிலிருந்து பைபிளை மறைக்க முயன்ற பாதிரிவர்க்கம் ஒன்று முளைத்தெழுந்தது. கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அவர்களுடைய வணக்கம் சுத்தமானதாக இல்லை. கிறிஸ்தவமண்டலம் பல தேசங்களுக்கு பரவி, மேற்கத்திய கலாச்சாரத்தில் சக்தியும் செல்வாக்கும் மிக்க ஓர் அமைப்பாக உருவானது. ஆனால், கடவுளுடைய ஆசீர்வாதமோ அவருடைய ஆவியோ அதற்கில்லை.
4. கடவுளுடைய நோக்கத்தை முறியடிப்பதற்கான சாத்தானின் சதிகள் ஏன் வெற்றி பெறவில்லை?
4 யெகோவாவின் நோக்கத்தை முறியடிப்பதற்கான சாத்தானின் சதிகள் அனைத்தும் நிச்சயம் தோல்வியடையும். விசுவாச துரோகம் உச்சக்கட்டத்திலிருந்த மிகவும் இருண்ட காலங்களில்கூட உண்மை கிறிஸ்தவத்தின் ஒளி அணைந்துவிடவில்லை. பைபிளைப் பிரதியெடுத்தவர்கள் அதன் துல்லியத்தைக் காக்க பெரும்பாடுபட்டனர். ஆகவே, பைபிளை போதிக்க உரிமையிருப்பதாக சொல்லிக் கொண்ட அநேகர் அதை திரித்து போதித்தபோதிலும், பைபிள் கலப்படமின்றி பாதுகாக்கப்பட்டது. அதுமட்டுமா, பல நூற்றாண்டுகளாக ஜெரோம், டின்டேல் போன்ற அறிஞர்கள் தைரியமாக கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்த்து, விநியோகித்தனர். இவ்வாறு கோடிக்கணக்கானோர் பைபிளை அறிய வந்தனர்; போலியாக இருந்ததென்றாலும் கிறிஸ்தவத்திற்கு அறிமுகமாயினர்.
5. ‘உண்மை அறிவைப்’ பற்றி தானியேல் தீர்க்கதரிசி என்ன முன்னறிவித்தார்?
5 கடைசியாக, தானியேல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி ‘உண்மை அறிவு பெருகியது.’ நாம் வாழும் ‘முடிவு காலத்தில்’ இது நடந்துள்ளது. (தானியேல் 12:4, NW) உலகம் முழுவதும் உள்ள சத்தியத்தை நேசிப்போர், உண்மை கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற பரிசுத்த ஆவி அவர்களுக்கு உதவியுள்ளது. விசுவாச துரோகம் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருந்தும் கடவுளுடைய வார்த்தையே வெற்றி கொண்டுள்ளது! சந்தோஷமான புதிய உலகம் பற்றிய நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் நற்செய்தி இன்று எங்கும் பிரசங்கிக்கப்படுகிறது. (சங்கீதம் 37:11) இவ்வாறு, நவீன காலங்களில் கடவுளுடைய வார்த்தை பரவியதை இப்போது நாம் கலந்தாராயலாம்.
இன்று வார்த்தை பரவுதல்
6. பைபிள் மாணாக்கர்கள் 1914-ம் வருடத்திற்குள் என்ன சத்தியங்களை புரிந்துகொண்டனர்?
6 பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசியில், இன்று யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கப்படும் பைபிள் மாணாக்கர்களின் ஒரு சிறிய தொகுதியை பைபிள் சத்தியம் தூண்டிவிட்டது. 1914-க்குள் பைபிள் மீது அவர்களுக்கிருந்த ஆர்வம் அதிகரித்தது. கடவுளுடைய நோக்கம் பற்றிய அருமையான சத்தியங்களை புரிந்துகொண்டனர். தமது குமாரனை பூமிக்கு அனுப்பிய யெகோவாவின் அன்பு அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வாறு நித்திய ஜீவனுக்கான வழி திறக்கப்பட்டது. கடவுளுடைய பெயரையும் அவருடைய குணங்களையும் அறிந்து, மதித்துணர ஆரம்பித்தனர். அதோடு, “புறஜாதியாரின் காலம்” முடிந்துவிட்டதையும், மனிதர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் கடவுளுடைய ராஜ்யம் சமீபித்துவிட்டதை அது சுட்டிக்காட்டுவதையும் அறிந்தனர். (லூக்கா 21:24) என்னே அருமையான நற்செய்தி! அநேகரின் உயிர் ஆபத்தில் இருப்பதால் இந்த சக்தி வாய்ந்த சத்தியங்கள் எங்குமுள்ள எல்லாரிடமும் அறிவிக்கப்பட வேண்டும்.
7. நவீன காலங்களில் பைபிள் சத்தியம் எவ்வாறு வெற்றி கொண்டுள்ளது?
7 சொற்ப எண்ணிக்கையாயிருந்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட அந்த கிறிஸ்தவர்களை யெகோவா ஆசீர்வதித்தார். அதன் விளைவாகவே இன்று உண்மை கிறிஸ்தவத்தை ஏற்றிருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் அதிகமாகிவிட்டது. இப்போது யெகோவாவின் சாட்சிகள் 235 நாடுகளில் இருப்பதால் கடவுளுடைய வார்த்தை பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. மேலும், மத தடைகள் உட்பட எல்லா தடைகள்மீதும் பைபிள் சத்தியம் வல்லமையோடு வெற்றி கொண்டுள்ளது. இயேசு இப்போது ராஜாவாக இருப்பதற்கு உலகம் முழுவதிலும் செய்யப்படும் பிரசங்க வேலையே அசைக்க முடியாத அத்தாட்சியளிக்கிறது.—மத்தேயு 24:3, 14.
8. யெகோவாவின் சாட்சிகளுடைய வளர்ச்சி பற்றி சிலர் என்ன கூறியுள்ளனர்?
8 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் படுவேகமான வளர்ச்சியைப் பாராட்டிய சரித்திராசிரியர்களைப் போலவே, இன்று யெகோவாவின் ஜனங்களுடைய வளர்ச்சியையும் பல நிபுணர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். ஐக்கிய மாகாணங்களில் உள்ள இரண்டு அறிஞர்கள் இணைந்து எழுதியதாவது: “கடந்த 75 வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுடைய வளர்ச்சி விகிதம் வியக்கத்தக்கதாக உள்ளது . . . பூமி முழுவதிலும் இதே நிலைதான்.” கிழக்கு ஆப்பிரிக்க பத்திரிகை ஒன்று சாட்சிகளைப் பற்றி, “உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும், உயர்வாக மதிக்கப்படும், பைபிள் போதனைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும், சர்வதேச அளவில் அறியப்பட்ட மதம்” என்று கூறுகிறது. ஐரோப்பாவில் பிரசுரமாகும் பழமைவாத கத்தோலிக்க பத்திரிகை ஒன்று, “யெகோவாவின் சாட்சிகளின் மாபெரும் வளர்ச்சி” பற்றி குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு காரணம்?
இன்று பரிசுத்த ஆவி செயல்படுகிறது
9. (அ) இன்று கடவுளுடைய வார்த்தை வெற்றி கொள்வதற்கு ஓர் அடிப்படை காரணம் என்ன? (ஆ) யெகோவா ஜனங்களை தம்மிடம் எவ்வாறு கவர்ந்திழுக்கிறார்?
9 இன்று கடவுளுடைய வார்த்தை வெற்றி கொள்வதற்கு ஓர் அடிப்படை காரணம், முதல் நூற்றாண்டில் இருந்ததுபோலவே இன்றும் யெகோவாவின் ஆவி வல்லமையோடு செயல்படுவதே. “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என இயேசு கூறினார். (யோவான் 6:44) சரியான மனநிலை உள்ளவர்களின் இருதயங்களை கடவுள் மென்மையாக கவர்ந்திழுக்கிறார் என்றே இந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. தமது சாட்சிகளின் பிரசங்க வேலை மூலமாக, “எல்லா தேசங்களிலும் உள்ள விரும்பப்பட்டவற்றை” தம்மை வணங்குவதற்காக யெகோவா கூட்டிச் சேர்க்கிறார். இவர்களே பூமியிலுள்ள மனத்தாழ்மையான, செம்மறியாடு போன்ற ஜனங்கள்.—ஆகாய் 2:6, 7, NW.
10. எப்படிப்பட்ட மக்கள் கடவுளுடைய வார்த்தைக்கு செவிசாய்த்திருக்கின்றனர்?
10 கடவுளுடைய வார்த்தையை பூமியின் எல்லைகள் வரைக்கும் பரப்ப பரிசுத்த ஆவி கடவுளுடைய ஜனங்களுக்கு உதவியுள்ளது. அதுமட்டுமல்ல, எல்லா விதமான மக்களும் நற்செய்தியைக் கேட்கவும், ஏற்றுக்கொள்ளவும் அது தூண்டுகிறது. அதன் காரணமாகவே கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்போர், “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:9; 7:9, 10) அவர்களுள் பணக்காரரும் ஏழைகளும், கல்விமான்களும் கல்லாதோரும் உண்டு. யுத்தம், கொடூரமான துன்புறுத்துதல் போன்ற சமயங்களில் சிலர் சத்தியத்தை ஏற்றிருக்கின்றனர், இன்னும் சிலர் அமைதியும் சமாதானமும் நிலவிய காலத்தில் ஏற்றிருக்கின்றனர். எல்லா விதமான அரசாங்கத்திலும், கலாச்சாரத்திலும், சூழ்நிலையிலும், கான்சன்ட்ரேஷன் முகாமாக இருந்தாலும் சரி, மாளிகையாக இருந்தாலும் சரி ஆண்களும் பெண்களும் நற்செய்திக்கு செவிசாய்த்திருக்கின்றனர்.
11. கடவுளுடைய ஜனங்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவி எவ்வாறு செயல்படுகிறது, என்ன வித்தியாசம் தெளிவாக தெரிகிறது?
11 கடவுளுடைய ஜனங்கள் பலதரப்பட்டவர்களாக இருக்கிறபோதிலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். (சங்கீதம் 133:1-3) கடவுளை சேவிப்போரின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவி செயல்படுவதற்கு இதுவும் ஓர் அத்தாட்சி. கடவுளுடைய ஆவி, நன்மை செய்ய உதவும் வல்லமையுள்ள சக்தியாகும். அவரது ஊழியர்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு போன்ற அருமையான குணங்களை வெளிக்காட்டவும் இது உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23) அதனால்தான், தீர்க்கதரிசியாகிய மல்கியா பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறியதை இன்று நாம் கண்ணார காண்கிறோம். “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை . . . காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.—மல்கியா 3:18.
வைராக்கியமுள்ள ஊழியர்களில் கடவுளுடைய வார்த்தை வெற்றி கொள்கிறது
12. பிரசங்க வேலையை யெகோவாவின் சாட்சிகள் எப்படி கருதுகின்றனர், அதற்கு என்ன பிரதிபலிப்பை எதிர்பார்க்கின்றனர்?
12 யெகோவாவின் சாட்சிகள், சர்ச்சுக்கு வெறுமனே போய் வருபவர்கள் போலல்ல. மாறாக, பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே இவர்களும் கடவுளுடைய சித்தத்தை மனப்பூர்வமாய் செய்கின்றனர். ராஜ்யம் சம்பந்தமான யெகோவாவின் வாக்குறுதிகளை கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுகின்றனர். பரிசுத்த ஆவியின் உதவியோடு, கடவுளுடைய உடன் வேலையாட்களாகிய இவர்கள் யெகோவாவை வணங்க மற்றவர்களையும் கூட்டிச் சேர்க்கின்றனர். இவ்வாறு, விசுவாசமற்ற மனிதவர்க்கத்தின் மீது யெகோவா வைத்துள்ள அன்பையும் இரக்கத்தையும் வெளிக்காட்டுகின்றனர். அசட்டை மனப்பான்மை, கிண்டல், துன்புறுத்துதல் போன்ற பிரச்சினைகளின் மத்தியிலும் இவ்வேலையைத் தொடருகின்றனர். நற்செய்திக்கு பலர் பல விதமாக பிரதிபலிப்பர் என்பதால் இயேசு தம் சீஷர்களை அதற்காக தயார்படுத்தினார். “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்” என்று கூறினார்.—யோவான் 15:20.
13. கிறிஸ்தவமண்டலத்தில் இல்லாத என்ன அம்சங்கள் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் ஏராளம் உள்ளன?
13 முதல் நூற்றாண்டில் உண்மை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கும் மத்தியிலுள்ள ஒற்றுமைகளைக் கண்டு நாம் அசந்துபோகிறோம். அதைப் போலவே இன்று, யெகோவாவின் சாட்சிகளுக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கும் இடையிலுள்ள வேற்றுமைகளும் மிக தெளிவாக உள்ளன. நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கிருந்த வைராக்கியத்தை பற்றி எழுதிய பிறகு ஓர் அறிஞர் பின்வருமாறு புலம்பினார்: “சர்ச்சின் தற்போதைய கொள்கை மாற்றப்பட வேண்டும்; நற்செய்தியைப் பிரசங்கிப்பது முழுக்காட்டுதல் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை என்று உணர வேண்டும்; அதோடு, விசுவாசம் இல்லாதவர்களிலிருந்து பளிச்சென்று வித்தியாசப்படும் உயர்தர வாழ்க்கை வாழ வேண்டும்; இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தால் மட்டுமே நாம் கொஞ்சமாவது முன்னேற முடியும்.” கிறிஸ்தவமண்டலத்தில் இல்லாத இந்த அம்சங்கள் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் ஏராளம்! அவர்களுடைய விசுவாசம் உயிருள்ளது, உண்மையானது, பைபிள் சத்தியங்களை ஆதாரமாக கொண்டது. ஆகவே, கேட்க விருப்பமுள்ள யாவரிடமும் அதைப் பற்றி பேச அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.—1 தீமோத்தேயு 2:3, 4.
14. இயேசு தம் ஊழியத்தை எவ்வாறு கருதினார், இன்று அவருடைய சீஷர்களின் மனநிலை என்ன?
14 இயேசு தம் ஊழியத்தை மிக முக்கியமானதாக கருதியதால் அதற்கே முதலிடம் கொடுத்தார். அவர் பிலாத்துவிடம், “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று கூறினார். (யோவான் 18:37) கடவுளுடைய ஜனங்களும் இயேசுவைப் போலவே உணருகின்றனர். பைபிள் சத்தியம் அவர்கள் இருதயத்தில் பதிந்திருப்பதால் முடிந்தவரை அதை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள பல வழிகளில் முயலுகின்றனர். அந்த வழிகளில் சில புதுமையானவை.
15. நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் சிலர் எவ்வாறு புதுமையான முறைகளைப் பயன்படுத்தி உள்ளனர்?
15 தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாட்டில், சாட்சிகள் அமேசான் நதியின் கிளை நதியில் பிரயாணம் செய்து அங்குள்ள மக்களுக்கு சத்தியத்தை பிரசங்கித்து வந்தனர். ஆனால் 1995-ல் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டபோதோ அந்த நதியில் பொதுமக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. என்றாலும் சாட்சிகள் விடுவதாக இல்லை. ஆர்வமுள்ளவர்களுக்கு பைபிள் பிரசுரங்களை தொடர்ந்து அளிக்க ராஜ்ய செய்தியை ஆற்றில் மிதக்கவிட முடிவு செய்தனர். கடிதங்களையும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்து அவற்றை ஆற்றில் வீசியெறிந்தனர். மறுபடியும் அந்த ஆற்றில் போக்குவரத்து ஆரம்பிக்கும் வரை நாலரை வருடங்களாக இவ்வாறே செய்து வந்தனர். இந்த சமயத்தில், அந்த ஆற்றங்கரை நெடுக வசித்தோர் தாங்கள் பெற்ற பிரசுரங்களுக்காக சாட்சிகளுக்கு நன்றி செலுத்தினர். பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி கண்களில் கண்ணீர் மல்க அவர்களை அணைத்துக்கொண்டு கூறியதாவது: “இனி உங்களை பார்க்கவே முடியாது என நினைத்தேன். ஆனால், பத்திரிகைகளை பாட்டில்களில் பெற்றபோது நீங்கள் இன்னும் என்னை மறக்கவில்லை என்பதை அறிந்துகொண்டேன்!” ஆற்றினருகில் வசித்த மற்றவர்கள், பத்திரிகைகளை திரும்பத் திரும்ப வாசித்ததாக கூறினர். அநேக குடியிருப்புகளில் ஒரு “போஸ்ட் ஆபீஸ்” இருந்தது. அதாவது, ஆற்றில் ஒரு சிறிய நீர்சுழற்சி இருந்தது; எனவே மிதந்துவரும் பொருட்கள் யாவும் கொஞ்ச நேரத்திற்கு அங்கு வந்து குவியும். ஆர்வம் காட்டியவர்கள் தங்களுக்கு ஏதாவது “தபால்” வந்திருக்கிறதா என்பதைக் காண அந்த இடத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர்.
16. நாம் தயாராக இருந்தால் சீஷராக்குவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு கிடைக்கலாம்?
16 நற்செய்தியைப் பிரசங்கிப்பதை யெகோவா தேவனும் அவருடைய வல்லமையுள்ள தேவ தூதர்களும் ஆதரித்து, வழிநடத்தி வருகின்றனர். (வெளிப்படுத்துதல் 14:6) நாம் எப்போதும் தயாராக இருந்தால் சீஷராக்குவதற்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கலாம். கென்யாவிலுள்ள நைரோபியில் இரண்டு சகோதரிகள் வெளி ஊழியத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தனர். திடீரென்று ஓர் இளம் பெண் அவர்களை அணுகி, “உங்களைப் போன்றவர்களை சந்திக்க வேண்டும் என்றுதான் ஜெபம் செய்து வந்தேன்” என உணர்ச்சிபொங்க கூறினாள். அவர்களோடு பேச வேண்டும் என சொல்லி உடனே தன் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினாள். அன்றைய தினமே அவளோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த இரண்டு சகோதரிகளிடம் பேசுவதற்கு அந்தப் பெண் ஏன் அந்தளவுக்கு ஆர்வம் காட்டினாள்? காரணம் இதுவே: சுமார் இரண்டு வாரத்திற்கு முன்புதான் அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. ஆகவே, “மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?” என்ற துண்டுப்பிரதியை ஒரு வாலிபன் வைத்திருந்ததைப் பார்த்த உடனே அதை வாசிக்க துடியாய் துடித்தாள். அதை தரும்படி அவனிடம் கேட்டாள். அவனோ கொடுக்க மறுத்துவிட்டான், ஆனால் அதை தனக்கு கொடுத்த சாட்சிகளை அடையாளம் காட்டினான். பின்னர், அந்தப் பெண் பைபிள் படிப்பில் நல்ல முன்னேற்றம் செய்தாள். குழந்தையை இழந்த சோகத்தை சமாளிக்கவும் கற்றுக்கொண்டாள்.
கடவுளுடைய அன்பு வெற்றி கொள்ளும்
17-19. மீட்கும் பலி மூலமாக யெகோவா மனிதர்கள் மீது எப்படிப்பட்ட அன்பைக் காண்பித்திருக்கிறார்?
17 கடவுளுடைய வார்த்தை உலகளாவ பரவுவதற்கும், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. மீட்கும் பலியைப் போலவே பிரசங்க வேலையும் எல்லோர்மீதும் யெகோவா வைத்திருக்கும் அன்பிற்கு அத்தாட்சியாகும். அப்போஸ்தலன் யோவான் ஆவியால் ஏவப்பட்டு, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் [மனிதவர்க்கத்தில்] அன்புகூர்ந்தார்” என்று எழுதினார்.—யோவான் 3:16.
18 மீட்கும் பலியை ஏற்பாடு செய்கையில் யெகோவா காண்பித்த அன்பை சற்று சிந்தித்துப் பாருங்கள். பல யுகங்களாக கடவுள் தம்முடைய அருமை குமாரனுடன், “தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற” ஒரேபேறான குமாரனுடன் மிகவும் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்ந்தார். (வெளிப்படுத்துதல் 3:14) இயேசு தம் பிதாவை நெஞ்சார நேசிக்கிறார், யெகோவாவும் ‘உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்தே’ தம் குமாரனிடம் அன்பு காட்டினார். (யோவான் 14:31; 17:24) ஆனாலும் மனிதர்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்காக தம் அருமை குமாரனையே மரிக்கும்படி யெகோவா அனுமதித்தார். மனிதர்மீது அவர் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை பார்த்தீர்களா!
19 “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” என யோவான் 3:17 கூறுகிறது. ஆகவே, இவ்வுலகை நியாயந்தீர்க்கவோ கண்டனம் செய்யவோ அல்ல, மாறாக ஓர் அன்பான சேவைக்காகவே யெகோவா தம் குமாரனை அனுப்பினார். இது, “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, [யெகோவா] நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என கூறிய பேதுருவின் வார்த்தைகளுக்கு இசைவாக உள்ளது.—2 பேதுரு 3:9.
20. மீட்பிற்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
20 மீட்பிற்கான சட்டப்பூர்வ ஏற்பாட்டை செய்வது யெகோவாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. என்றாலும், எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேரும் அதிலிருந்து பயனடைய வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?”—ரோமர் 10:13, 14.
21. பிரசங்க வேலையில் பங்குகொள்ளும் வாய்ப்பை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
21 உலகம் முழுவதும் நடைபெறும் பிரசங்கித்து போதிக்கும் இந்த வேலையில் பங்குகொள்வது என்னே அருமையான சிலாக்கியம்! இது சுலபமான வேலை இல்லைதான். என்றாலும், தம்முடைய மக்கள் சத்தியத்திற்கு இசைவாக உண்மையுடன் வாழ்ந்து, மற்றவர்களிடம் நற்செய்தியை பிரசங்கிப்பதைப் பார்க்கையில் யெகோவா எவ்வளவாய் சந்தோஷப்படுகிறார்! ஆகவே, உங்களுடைய சூழ்நிலை என்னவாயிருந்தாலும் சரி, இந்த வேலையில் பங்குகொள்ள கடவுளுடைய ஆவியும் உங்கள் இருதயத்தின் அன்பும் உங்களை தூண்டுவதாக. அதுமட்டுமல்ல, நற்செய்தி பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்படுவது, ‘நீதி வாசமாயிருக்கும் மகிமையான புதிய வானங்களும் புதிய பூமியும்’ பற்றிய தமது வாக்குறுதியை யெகோவா வெகு சீக்கிரம் நிறைவேற்றுவார் என்ற நிச்சய நம்பிக்கையை அளிக்கிறதையும் மறந்துவிடாதீர்கள்.—2 பேதுரு 3:13.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• விசுவாச துரோகத்தால், நற்செய்தியை பிரசங்கித்தோரை ஏன் தடுத்துநிறுத்த முடியவில்லை?
• கடவுளுடைய வார்த்தை நம் நாட்களில் எவ்வாறு வெற்றி கொண்டுள்ளது?
• கடவுளுடைய ஆவி என்ன வழிகளில் இன்று செயல்படுகிறது?
• நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் மீட்கும் பலிக்கும் என்ன சம்பந்தம்?
[பக்கம் 16-ன் வரைபடம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
20-ம் நூற்றாண்டில் ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
சராசரி பிரஸ்தாபிகள் (லட்சத்தில்)
60
55
50
45
40
35
30
25
20
15
10
5
1900 1910 1920 1930 1940 1950 1960 1970 1980 1990 2000
[பக்கம் 15-ன் படங்கள்]
ஜெரோம்
டின்டேல்
குட்டன்பர்க்
ஹஸ்
[படத்திற்கான நன்றி]
குட்டன்பர்க் மற்றும் ஹஸ்: From the book The Story of Liberty, 1878
[பக்கம் 15-ன் படம்]
1920-களில் நற்செய்தியைப் பிரசங்கித்த பைபிள் மாணாக்கர்கள்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
உலகமுழுவதிலும் மக்கள் நற்செய்திக்கு செவிசாய்க்கின்றனர்
[பக்கம் 18-ன் படம்]
இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியைப் போலவே, பிரசங்க வேலையும் கடவுள் காண்பித்த அன்பை மேன்மைப்படுத்திக் காட்டுகிறது