வளர்ப்பு எப்படியிருந்தாலும் வாழ்வில் வெற்றிபெறலாம்
சிறுவயது முதலே மிகவும் முரண்டு பிடிக்கும் சுபாவம் நிக்கொலஸுக்கு இருந்து வந்தது.a வளர்ந்து வருகையில் தன் மனப்போராட்டத்தால் போதைப்பொருளை துஷ்பிரயோகம் செய்யவும் அளவுக்கு மீறி குடிக்கவும் ஆரம்பித்தார். “என் அப்பா ஒரு குடிகாரர். அவர் எனக்கும் என் தங்கைக்கும் மிகுந்த தொல்லை கொடுத்தார்” என நிக்கொலஸ் விளக்குகிறார்.
வெளிப்பார்வைக்கு, மெலின்டாவின் அம்மா அப்பா தவறாமல் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவர்கள். அக்கம்பக்கத்தாரின் நன்மதிப்பை பெற்றவர்கள். ஆனால் ஏதோ ஒரு மதப்பிரிவிலும் கருத்துவேறுபாட்டுக் குழுவிலும் அவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. “அவர்களுடைய கருத்துவேறுபாட்டுக் குழுவின் பழக்கவழக்கங்கள் சில எனக்கு இழிவானதாய் தோன்றின. என் சின்னஞ்சிறு மனதை அவை சிதைத்துவிட்டன” என இப்போது 30 வயதைக் கடந்துவிட்ட மெலின்டா வருத்தத்துடன் நினைவுகூருகிறாள். “நான் பிரயோஜனமில்லாதவள், எதற்கும் தகுதியில்லாதவள் என்று எனக்குள் ஏற்பட்ட உணர்வு, நினைவு தெரிந்த நாள் முதல் என்னை எப்போதும் வாட்டி வதைத்தது.”
அநேகருடைய பிள்ளைப்பருவம், வன்முறை, துஷ்பிரயோகம், பெற்றோரின் அலட்சியம், இன்னுமநேக எதிர்மறையான பாதிப்புகளால் பாழாய் போயிருக்கிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்? சோகமான பிள்ளைப்பருவ காயங்கள் ஆழமானவையாக இருக்கலாம். ஆனால் அத்தகைய பாதிப்புகள், ஒருவர் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை ஏற்று, ஓரளவு சந்தோஷத்தை அனுபவிக்கும் சாத்தியத்தை நித்தியத்திற்கும் தடைசெய்ய வேண்டுமா? வளர்ப்பு எப்படியிருந்தாலும், நிக்கொலஸும் மெலின்டாவும் உத்தமத்தைக் காப்பவர்களாய் வாழ்வில் வெற்றி பெற முடியுமா? யூதேய அரசனாகிய யோசியாவின் உதாரணத்தை முதலில் சிந்திப்போம்.
பைபிளிலிருந்து ஒரு உதாரணம்
பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டில் யூதாவை யோசியா 31 ஆண்டுகள் (பொ.ச.மு. 659-629) ஆட்சி செய்தார். அவருடைய தகப்பன் கொல்லப்பட்ட பின்பு யோசியா அரியணை ஏறுகையில் யூதாவில் நிலைமை படுமோசமாக இருந்தது. யூதாவிலும் எருசலேமிலும் திரும்பிய பக்கமெல்லாம் பாகால் வணக்கம் தென்பட்டது. மேலும் அம்மோனியரின் பிரதான தெய்வமாகிய மல்காமின் பேரில் ஆணையிடுபவர்கள் அங்கிருந்தனர். அப்போது வாழ்ந்துவந்த கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியா குறிப்பிட்டபடி, யூதாவின் பிரபுக்கள் ‘கெர்ச்சிக்கிற சிங்கங்களாகவும்’ அவர்களுடைய நியாயாதிபதிகள் ‘சாயங்காலத்தில் புறப்படுகிற ஓநாய்களாகவும்’ இருந்தனர். இதன் காரணமாக வன்முறையும் வஞ்சகமும் எங்கும் மலிந்து கிடந்தன. “கர்த்தர் [யெகோவா] நன்மை செய்வதும் இல்லை தீமை செய்வதும் இல்லை” என்பதே அநேகரின் நினைப்பாக இருந்தது.—செப்பனியா 1:3–2:3; 3:1-5.
யோசியா எப்படிப்பட்ட அரசனாக திகழ்ந்தார்? “அவன் [யோசியா] கர்த்தருடைய [யெகோவாவுடைய] பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்” என பைபிள் காலவரிசை பட்டியலிடும் எஸ்றா எழுதுகிறார். (2 நாளாகமம் 34:1, 2) யோசியா கடவுளுக்குப் பிரியமானதை செய்து, வெற்றியும் கண்டார் என்பது தெளிவாய் இருக்கிறது. ஆனால் அவருடைய குடும்பம் எப்படிப்பட்டது?
பிள்ளைப்பருவம்—சுகமானதா, சுமையானதா?
பொ.ச.மு. 667-ல் யோசியா பிறந்தபோது, அவருடைய அப்பா ஆமோனுக்கு 16 வயதுதான். அவருடைய தாத்தா மனாசே, யூதாவின் ராஜா. யூதாவின் ராஜாக்களிலே மிக பொல்லாத ராஜாக்களில் ஒருவர்தான் இந்த மனாசே. பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, “அவர் [யெகோவா] பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.” தன் மகன்களில் சிலரை தீ மிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஆவிக்கொள்கை சம்பந்தமான பழக்கங்களை அனுமதித்து, குற்றமற்றவர்களின் இரத்தத்தை மிகுதியாக சிந்தினார். தான் உருவாக்கிய மரச்சிலை விக்கிரகத்தை மனாசே யெகோவாவின் ஆலயத்தில் வைத்தார். யெகோவா “இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய் மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான்.”—2 நாளாகமம் 33:1-9.
மனாசே செய்த பொல்லாப்புக்கு அளவே இல்லாமல் போனதால், அசீரிய ராஜாவின் பிரதான நகரங்களில் ஒன்றான பாபிலோனுக்கு அவரை சங்கிலிகளால் கட்டி கொண்டுபோகும்படி யெகோவா அனுமதித்தார். சிறைப்பட்டிருந்தபோது அவர் மனந்திரும்பி, தன்னைத்தானே தாழ்த்தி, யெகோவாவிடம் மன்னிப்புக்காக கெஞ்சினார். ஆதரவுக்காக அவர் மன்றாடியதை கடவுள் கேட்டு, மீண்டும் எருசலேமில் அவரை ராஜாவாக்கினார். அதன் பிறகு மனாசே ஒருசில சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார், ஓரளவு வெற்றியும் பெற்றார்.—2 நாளாகமம் 33:10-17.
மனாசேயின் பொல்லாப்பும், பின்னர் அவர் மனந்திரும்பியதும் அவருடைய மகன் ஆமோனை எப்படி பாதித்தது? அவன் மிக பொல்லாதவனாக வளர்ந்தான். தன்னுடைய முந்தைய செயல்களால் கறைபட்டிருந்த தேசத்தை சுத்திகரிக்க மனந்திரும்பிய மனாசே நடவடிக்கை எடுத்தபோது, ஆமோன் அவரோடு ஒத்துழைக்கவில்லை. 22 வயதில் ராஜாவான ஆமோன் “தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் [யெகோவாவின்] பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.” யெகோவாவுக்கு முன் தன்னைத் தாழ்த்துவதற்கு பதிலாக, ஆமோன் “மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.” (2 நாளாகமம் 33:21-23) ஆமோன் யூதாவின் ராஜாவாக பொறுப்பேற்கையில் யோசியா ஆறு வயது நிரம்பிய சிறுவன். யோசியாவின் பிள்ளைப்பருவம் எந்தளவு சுமையானதாக இருந்திருக்கும் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்!
ஆமோனுடைய ஊழியர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, கொன்றுபோட்டபோது அவனுடைய இரண்டு ஆண்டுகால பொல்லாத ஆட்சி முடிவடைந்தது. ஆனால் தேசத்தாரோ, ஆமோனுக்கு எதிராக சதிசெய்தவர்களை வெட்டிப்போட்டு, அவனுடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினர்.—2 நாளாகமம் 33:24, 25.
தன் சிறுவயதில் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைமைகளில் வளர்ந்தாலும், யோசியா யெகோவாவுக்குப் பிரியமானதையே செய்ய தொடங்கினார். அவருடைய ஆட்சியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்ததால், பைபிள் கூறுகிறதாவது: “கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.”—2 இராஜாக்கள் 23:19-25.
மோசமான சூழலில் பிள்ளைப்பருவத்தைக் கழித்தவர்களுக்கு யோசியாவின் முன்மாதிரி எவ்வளவு உற்சாகம் அளிப்பதாய் இருக்கிறது! அவருடைய முன்மாதிரியிலிருந்து நமக்கு என்ன பாடம்? சரியான பாதையைத் தெரிந்துகொள்ளவும் அதில் தொடரவும் யோசியாவுக்கு எது உதவியது?
யெகோவாவை அறிந்துகொள்ள நாடுங்கள்
யோசியாவின் சிறுவயதில் அவர்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியவர் மனந்திருந்திய அவருடைய தாத்தா மனாசே. தாத்தாவும் பேரனும் எவ்வளவு அன்னியோன்யமாக இருந்தனர், மனாசே திருந்தி வாழ ஆரம்பிக்கையில் யோசியாவுக்கு என்ன வயது போன்ற தகவல்கள் பைபிளில் இல்லை. யூத குடும்பங்கள் பெரும்பாலும் மிகவும் பின்னிப்பிணைந்திருந்தன; எனவே, தன் பேரனாகிய யோசியாவைச் சூழ்ந்திருந்த மோசமான செல்வாக்குகளிலிருந்து அவரைப் பாதுகாத்து, அவருடைய இருதயத்தில் உண்மை கடவுளாகிய யெகோவாவிடமும் அவருடைய வார்த்தையிடமும் மதிப்பையும் மரியாதையையும் மனாசே வளர்த்திருக்க வேண்டும். யோசியாவின் இருதயத்தில் அவர் விதைத்த சத்தியத்தின் விதைகளாலும் ஒருவேளை வேறு சில தாக்கங்களாலும் கடைசியில் அருமையான பலன்கள் கிடைத்தன. யூதாவை ஆட்சிசெய்த எட்டாம் வருடத்தில், யோசியா தன் 15-ம் வயதில் யெகோவாவின் சித்தத்தை அறிந்துகொள்ளவும் அதை செய்யவும் நாடினார்.—2 நாளாகமம் 34:1-3.
தூரத்து உறவினர், அறிமுகமான ஒருவர், அல்லது பக்கத்து வீட்டுக்காரர் என்று யாரோ ஒருவர் மூலமாகத்தான் சிலர் தங்கள் சிறுவயதில் ஆவிக்குரிய விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆர்வத்தை வளர்த்துவந்தால், அவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் பின்னால் நல்ல பலன்களைத் தரலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட மெலின்டாவுக்கு, தவறாமல் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வீட்டுக்கு வந்து தந்துகொண்டிருந்த, பாசமாக பழகிய பக்கத்து வீட்டு தாத்தா ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி பிரியமாக நினைவுகூர்ந்து அவள் இவ்வாறு கூறுகிறாள்: “அவர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடாதது என் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தியது. என் அப்பா அம்மாவின் கருத்துவேறுபாட்டுக் குழுவில், ஹாலோவீன் மற்றும் வேறுசில பண்டிகை நாட்களில் சடங்காச்சார பழக்கங்கள் பின்பற்றப்பட்டதால் இது என் அக்கறையைத் தூண்டியது.” பத்து ஆண்டுகளுக்குப்பின், ஒரு தோழி யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு வரும்படி மெலின்டாவை அழைத்தாள்; உடனடியாக அந்த தாத்தாவின் ஞாபகம் வந்ததால் மறுக்காமல் போனாள். சத்தியத்தை கண்டடைவதற்கான தேடலில் அது அவளுக்கு உதவியது.
கடவுளுக்கு முன்பாக தாழ்மையாயிருங்கள்
யோசியா ராஜாவாக இருக்கையில், யூதா தேசத்தில் வணக்க சம்பந்தமாக பல சீர்திருத்தங்களைச் செய்தார். விக்கிரகாராதனையை துடைத்தழிக்க யோசியா ஆறு வருட காலம் போராடி யூதா தேசத்தை சுத்திகரித்தபின், யெகோவாவுடைய ஆலயத்தை பழுதுபார்க்க ஆரம்பித்தார். அந்த வேலை நடைபெறுகையில் பிரதான ஆசாரியன் இல்க்கியா அரும்பெரும் பொக்கிஷம் ஒன்றைக் கண்டுபிடித்தார்! அதுதான் ‘யெகோவாவுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம்.’ உணர்ச்சிகளைத் தூண்டும் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானிடத்தில் கூற, அவன் அதை ராஜாவிடம் தெரிவித்தான். இப்படிப்பட்ட சாதனைகள் 25 வயது நிரம்பிய யோசியா ராஜாவை பெருமை கொள்ள செய்தனவா?—2 நாளாகமம் 34:3-18.
‘நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்’ என்று எஸ்றா எழுதுகிறார். அது அவருடைய மன துக்கத்துக்கு அடையாளம், ஏனென்றால் அவருடைய முன்னோர்கள் கடவுள் கொடுத்த கட்டளைகள் அனைத்தையும் பின்பற்றாமல் போனதை அவர் புரிந்துகொண்டார். ஆம், அது மனத்தாழ்மைக்கு அடையாளமாக இருந்தது! ராஜா உடனடியாக உல்தாள் மூலம் யெகோவாவிடத்தில் விசாரிக்க ஐவர் குழுவை அனுப்பி வைத்தார். பின்வரும் அறிக்கையை அவளிடமிருந்து அவர்கள் பெற்று வந்தனர்: ‘யெகோவாவின் பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல் போனபடியால் பொல்லாப்பு வரும். ஆனால் யோசியா ராஜாவாகிய நீ உன்னைத் தாழ்த்தியபடியால் எந்தப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடி நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்படுவாய்.’ (2 நாளாகமம் 34:19-28) யோசியாவின் மனநிலை யெகோவாவுக்கு பிடித்திருந்தது.
நாம் வளர்ந்து வந்த விதம் எப்படியிருந்தாலும், உண்மை கடவுள் யெகோவாவுக்கு முன்பாக நம்மைநாமே தாழ்த்தலாம், அவரிடமும், அவருடைய வார்த்தையாகிய பைபிளிடமும் மரியாதையை வளர்த்துக்கொள்ளலாம். இதைத்தான் ஏற்கெனவே சொல்லப்பட்ட நிக்கொலஸ் செய்தார். அவர் கூறுகிறதாவது: “போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தினதாலும் மிதமீறிய குடிவெறியினாலும் என் வாழ்க்கை குளறுபடியாக இருந்தபோதிலும், பைபிளில் எனக்கு ஆர்வம் இருந்தது; வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை பெற மிகவும் ஆசைப்பட்டேன். முடிவில், யெகோவாவின் சாட்சிகளோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது; என் வாழ்க்கைப் போக்கை மாற்றி, சத்தியத்தை ஏற்றேன்.” ஆம், நம்முடைய வளர்ப்பு சூழல் எப்படி இருந்தாலும், கடவுளிடமும் அவருடைய வார்த்தையிடமும் மரியாதையான மனநிலையோடு இருக்கலாம்.
யெகோவாவின் ஏற்பாட்டிலிருந்து நன்மை பெறுங்கள்
யெகோவாவின் தீர்க்கதரிசிகளிடம் யோசியாவுக்கு ஆழ்ந்த மரியாதை இருந்தது. தீர்க்கதரிசியாகிய உல்தாளிடம் விசாரித்தது மட்டுமல்லாமல், அப்போது வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகளின் செல்வாக்கும் இவர்மீது இருந்தது. உதாரணமாக, அப்போது யூதாவில் பின்பற்றப்பட்ட விக்கிரகாராதனையை வெளிப்படையாக கண்டிப்பதில் எரேமியாவும் செப்பனியாவும் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில்தான் பொய் வணக்கத்துக்கு எதிராக யோசியாவும் நடவடிக்கை எடுத்து வந்தார். இந்தத் தீர்க்கதரிசிகளின் செய்தி இவருக்கு எவ்வளவு ஊக்கமூட்டுவதாய் இருந்திருக்கும்!—எரேமியா 1:1, 2; 3:6-10; செப்பனியா 1:1-6.
‘எஜமானராகிய’ இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய உணவை ஏற்ற நேரத்தில் அளிக்க அபிஷேகம் பண்ணப்பட்டவர்களால் ஆன ஒரு வகுப்பை, ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனை’ நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) பைபிள் சார்ந்த பிரசுரங்கள், சபை கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம், பைபிளின் அறிவுரைகளைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் மீது இந்த அடிமை வகுப்பு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. அந்த அறிவுரைகளை நித்தம் நம் வாழ்க்கையில் பின்பற்ற நடைமுறையான ஆலோசனைகளையும் அளிக்கிறது. மனதில் ஆழமாக பதிந்துவிட்ட தவறான மனப்பான்மைகளை சரிசெய்துகொள்வதற்கு யெகோவா ஏற்பாடு செய்திருப்பவற்றை பயன்படுத்திக் கொள்வது எத்தனை பொருத்தமானது! சிறுவயதிலிருந்தே நிக்கொலஸுக்கு அதிகாரத்தின்மீது அளவுகடந்த வெறுப்பு. கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தைக் கற்ற பின்பும் அந்த பலவீனம் யெகோவாவை முழுமையாக சேவிக்க அவருக்கு தடையாக இருந்தது. இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் போகப்போக அதை சமாளித்து வெற்றி கண்டார். எப்படி? “புரிந்துகொள்ளும் இரண்டு மூப்பர்களின் உதவியால், என் பிரச்சினையை நான் ஒப்புக்கொண்டு, அவர்களுடைய அன்புள்ள வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கினேன்” என்று நிக்கொலஸ் கூறுகிறார். “அவ்வப்போது கோபம் சற்றே தலைதூக்குகிறபோதிலும், என் கலகத்தன இயல்பை இப்போது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்” என்று மேலுமாக சொன்னார்.
மெலின்டாவும்கூட வாழ்க்கையில் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டங்களில் மூப்பர்களிடம் ஆலோசனை கேட்கிறாள். சிறுவயதிலேயே தான் பிரயோஜனமில்லாதவள், எதற்கும் தகுதியில்லாதவள் என்று அவளுக்குள் வேரூன்றியிருந்த உணர்வை கிள்ளியெறிய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பல்வேறு கட்டுரைகள் பெரிதும் உதவியதை உணர்கிறாள். அவள் இப்படிச் சொல்கிறாள்: “சில சமயங்களில் கட்டுரையிலுள்ள ஒரே ஒரு பாரா அல்லது ஒரு வாக்கியம் என ஏதாவது ஒரு சிறிய குறிப்புக்கூட என் மனதைத் தொட்டிருக்கிறது. சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தக் கட்டுரைகளையெல்லாம் பத்திரிகையிலிருந்து தனியாக பிரித்து தேவைப்படும்போது படிப்பதற்கு வேண்டி தனியாக தொகுத்து வைக்கிறேன்.” இன்று அவளுடைய சிறிய மூன்று புத்தக தொகுப்புகளில் சுமார் 400 கட்டுரைகள் உள்ளன!
குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததற்காக மக்கள் எப்போதுமே கஷ்டப்பட தேவையில்லை. யெகோவாவின் உதவியோடு அவர்கள் ஆன்மீகத்தில் வெற்றி பெறலாம். நன்றாக வளர்க்கப்பட்ட ஒருவர் உத்தமத்தைக் காப்பவராக இருப்பார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லாதது போலவே சரியாக வளர்க்கப்படாத ஒருவர் கடவுள் பயமுள்ளவராக ஆவதற்கும் எந்தத் தடையுமில்லை.
ஆலயத்தை பழுதுபார்க்கையில் நியாயப்பிரமாணப் புஸ்தகம் கிடைத்த போது, யோசியா ‘யெகோவாவைப் பின்பற்றி நடப்பேன் என்றும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பேன் என்றும் அவருடைய சந்நிதியில் உடன்படிக்கைப்பண்ணினார்.’ (2 நாளாகமம் 34:31) தன் கடைசி மூச்சுவரை இந்தத் தீர்மானத்திலிருந்து அவர் துளியும் வழுவவில்லை. அதேவிதமாகத்தான் மெலின்டாவும் நிக்கொலஸும் யெகோவா தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க உறுதிபூண்டிருக்கின்றனர். உத்தமத்தைக் காப்பவர்களாக வெற்றி பெறவும் தீர்மானித்திருக்கின்றனர். கடவுளிடம் நெருங்கி இருக்கவும், அவரை உண்மையுடன் சேவிக்கவும் நீங்களும் தீர்மானமாக இருக்கலாம். வெற்றி உங்களை வந்து சேரும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், ஏனென்றால் யெகோவா உங்களுக்கு இவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10, 13.
[அடிக்குறிப்பு]
a ஒருசில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் படங்கள்]
மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட போதிலும், யோசியா யெகோவாவைத் தேடினார், வாழ்வில் வெற்றியும் பெற்றார்
[பக்கம் 28-ன் படம்]
ஆழமாக வேரூன்றிய ஒரு சுபாவத்தை மாற்றிக்கொள்ள மூப்பர்கள் உங்களுக்கு உதவலாம்
[பக்கம் 28-ன் படம்]
“காவற்கோபுரம்,” “விழித்தெழு!” பத்திரிகைகள் உத்தமத்தைக் காத்துக்கொள்ள உங்களுக்கு உதவலாம்