வாழ்க்கை சரிதை
யெகோவாவின் வழியில் முன்னேறுவதே எங்கள் பெலனும் மகிழ்ச்சியும்
லூயீஜி டி. வாலன்டினோசொன்னபடி
“வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று யெகோவா அறிவுறுத்துகிறார். (ஏசாயா 30:21) 60 ஆண்டுகளுக்கு முன்பாக நான் முழுக்காட்டுதல் பெற்றது முதல் இந்த அறிவுரையின்படி நடக்க வேண்டும் என்பதே என் இலக்காக இருந்திருக்கிறது. என் பெற்றோர் வைத்த முன்மாதிரியே இதற்கு காரணம். அவர்கள் இத்தாலியிலிருந்து வந்து அ.ஐ.மா., ஒஹாயோ, கிளீவ்லாண்டில் 1921-ல் குடியேறினார்கள். அங்கேதான் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார்கள்—நான், என் அண்ணன் மைக், என் தங்கை லிடியா.
பல்வேறு மதங்களையும் ஆராய்ந்தபின் என் பெற்றோர் விரக்தியடைந்து எதுவும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதன் பிறகு ஒரு நாள் 1932-ல் அப்பா வானொலியில் ஒலிபரப்பப்பட்ட இத்தாலிய மொழி நிகழ்ச்சி ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பியவர்கள் யெகோவாவின் சாட்சிகள். கேட்ட காரியங்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தன. அதிக தகவல் பெற விருப்பம் தெரிவித்து அப்பா கடிதம் எழுதினார், நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்திலிருந்து இத்தாலிய சாட்சி ஒருவர் எங்களை வந்து சந்தித்தார். விடியற்காலை வரை நீடித்த அந்த சுவாரசியமான உரையாடலுக்குப்பின் என்னுடைய பெற்றோருக்கு உண்மை மதத்தைக் கண்டுபிடித்துவிட்ட உறுதியான நம்பிக்கை பிறந்துவிட்டது.
அம்மாவும் அப்பாவும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தார்கள், பிரயாண கண்காணிகள் வரும்போது எங்கள் வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார்கள். அப்போது நான் சிறுவன், இருந்தாலும் அந்தக் கண்காணிகள் பிரசங்க ஊழியத்திற்கு என்னையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். யெகோவாவுக்கு முழுநேரம் ஊழியம் செய்வதைக் குறித்து என்னை சிந்திக்க வைத்தார்கள். அவர்களில் ஒருவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவின் உறுப்பினராக இருக்கும் கேரி டபிள்யு. பார்பர். அதற்கு கொஞ்ச நாட்களுக்குப் பின்பு, பிப்ரவரி 1941-ல் 14 வயதில் முழுக்காட்டுதல் பெற்றேன்; பிறகு 1944-ல் கிளீவ்லாண்டில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். மைக்கும் லிடியாவும்கூட பைபிள் சத்தியத்திற்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தார்கள். மரணம் வரையாக மைக் யெகோவாவை சேவித்தார், லிடியா பிரயாண ஊழியத்தில் அவளுடைய கணவர் ஹரால்ட் வீட்னரோடு 28 ஆண்டுகள் சேவை செய்தாள். இப்போது அவர்கள் விசேஷ முழு நேர ஊழியர்களாக சேவித்து வருகிறார்கள்.
முன்னேறும் தீர்மானத்தைப் பலப்படுத்திய சிறைவாசம்
1945-ன் ஆரம்பத்தில், பைபிளின்படி பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி ஏசாயா 2:4-க்கு இசைவாக நடக்க என்னைத் தூண்டியதால் ஒஹாயோவின் சில்லிக்கோத் ஃபெடரல் சிறையில் அடைக்கப்பட்டேன். அந்த வசனம் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பதைப் பற்றி குறிப்பிடுகிறது. ஒருசமயத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் பிரசுரங்களில் ஓரளவை மட்டுமே சாட்சிகளாக இருக்கும் கைதிகள் வைத்திருக்க அதிகாரிகள் அனுமதித்தார்கள். எனினும் அருகிலிருந்த ஒரு சபையின் சாட்சிகள் உதவினார்கள். சிலசமயங்களில் அவர்கள் சிறைச்சாலைக்கு அருகே இருந்த வயல்வெளிகளில் சில பிரசுரங்களை அங்குமிங்குமாக போட்டுவிட்டு போனார்கள். மறுநாள் காலை வேலை செய்ய கைதிகளை அழைத்துச் சென்றபோது அந்தப் பிரசுரங்களை தேடிக் கண்டுபிடித்து சிறைச்சாலைக்கு எப்படியோ கொண்டுவந்து விட்டார்கள். என்னை சிறைச்சாலையில் போட்ட சமயத்தில், அநேக பிரசுரங்களை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் யெகோவா நமக்கு அளித்துவரும் ஆவிக்குரிய உணவு எவ்வளவு மதிப்புள்ளது என்பதை கற்றுக்கொண்டேன். இன்றும் ஒவ்வொரு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும்போது அன்று கற்ற அந்தப் பாடத்தை மறப்பதில்லை.
கொஞ்ச நாட்களுக்குப் பின் சிறையில் சபை கூட்டங்களை நடத்த எங்களுக்கு அனுமதி கிடைத்தது, ஆனால் சாட்சிகளாக இல்லாதவர்கள் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும் சிறை அதிகாரிகள் சிலரும் கைதிகளும் இரகசியமாக இதில் கலந்துகொண்டார்கள்; சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். (அப்போஸ்தலர் 16:30-34) சகோதரர் ஏ. எச். மேக்மில்லனின் சந்திப்புகள் எங்களுக்கு மிகவும் ஆறுதலளித்தன. சிறையில் நாங்கள் செலவிடும் நேரம் வீணாகாது என்றும், அது எங்கள் எதிர்கால வேலைக்கு பயிற்சியாக அமையும் என்றும் அவர் எப்போதும் எங்களுக்குச் சொல்வார். வயதான அந்த அருமை சகோதரர் என் இருதயத்தைத் தொட்டுவிட்டார், யெகோவாவின் வழியில் நடக்க வேண்டும் என்ற என் மனவுறுதியை அவர் இன்னும் பலப்படுத்திவிட்டார்.
எனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டாள்
இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது, சிறைச்சாலை கதவுகள் திறக்கப்பட்டன, நான் பயனியராக என்னுடைய முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். ஆனால் 1947-ல் என் அப்பா இறந்துபோனார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்துகொண்டேன். அத்துடன், மருத்துவ ரீதியில் மசாஜ் செய்யும் பயிற்சியை முறையாக கற்று தேர்ச்சியும் பெற்றேன். சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் நானும் என் மனைவியும் கஷ்டமான நிலைமையை எதிர்ப்பட்ட போது இந்தத் தொழில்தான் எங்களுக்கு கைகொடுத்தது. நடந்ததை கோர்வையாக சொல்லவில்லையே! முதலில் என் மனைவியைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1949-ல் ஒரு நாள் பிற்பகலில் ராஜ்ய மன்றத்தில் இருக்கையில் ஃபோன் அடித்தது. நான் எடுத்தபோது மறுமுனையில் இனிமையான ஒரு குரல்: “என் பேர் கிறிஸ்டீன் ஜென்ச்சர். நான் ஒரு யெகோவாவின் சாட்சி. வேலை தேடி கிளீவ்லாண்ட் வந்திருக்கிறேன். இங்குள்ள சபையில் கூட்டங்களுக்கு வர விரும்புகிறேன்.” எங்கள் ராஜ்ய மன்றம் அவளிருந்த வீட்டிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது, ஆனால் அவளது இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, ஆகவே எங்களுடைய ராஜ்ய மன்றத்திற்கு எப்படி வருவதென்று வழி சொல்லிவிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று வரும்படி சொன்னேன். அன்று நான்தான் பொதுப் பேச்சை கொடுக்கவிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக ராஜ்ய மன்றத்துக்குப் போயிருந்தேன். ஆனால் ஒரு புதுமுகம்கூட வந்த மாதிரி தெரியவில்லை. பேச்சு கொடுக்கையில், அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டேன். ஆனால் யாரும் வரவில்லை. மறுநாள் அவளுக்கு ஃபோன் செய்தேன். பஸ் ரூட் தனக்கு பிடிபடவில்லை என்று சொன்னாள். பிறகு, நானே நேரில் வந்து விளக்குவதாக சொன்னேன்.
அவளுடைய பெற்றோர் செக்கோஸ்லோவாகியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள்; மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற ஆங்கில சிறுபுத்தகத்தை வாசித்தபின் பைபிள் மாணாக்கரோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தவர்கள். அவளுடைய பெற்றோர் 1935-ல் முழுக்காட்டப்பட்டார்கள். 1938-ல் கிறிஸ்டீனின் அப்பா அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவிலுள்ள கிளைமரிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் கம்பெனி செர்வன்ட்டாக (இப்போது நடத்தும் கண்காணி) ஆனார். 1947-ல் தன் 16-ம் வயதில் கிறிஸ்டீன் முழுக்காட்டுதல் பெற்றாள். தன் அழகாலும் ஆன்மீக சிந்தையாலும் என் மனதைக் கொள்ளைகொண்ட இந்தப் பெண்ணை உடனடியாக காதலிக்க ஆரம்பித்தேன். ஜூன் 24, 1950-ல் எங்கள் திருமணம் இனிதே நடந்தது. அப்போது முதற்கொண்டு கிறிஸ்டீன் எனக்கு உண்மையுள்ள துணைவியாய் தோள்கொடுத்து வருகிறாள், எப்போதும் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்க மனமுள்ளவள். இப்படிப்பட்ட திறமைசாலி என்னோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டதற்கு நான் யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.—நீதிமொழிகள் 31:10.
மிகப் பெரிய ஆச்சரியம்
நவம்பர் 1, 1951-ல் நாங்கள் இருவரும் பயனியர் செய்ய ஆரம்பித்தோம். இரண்டு வருடங்களுக்குப்பின், ஒஹாயோவில், டாலீடோவில் நடந்த ஒரு மாநாட்டில் மிஷனரி ஊழியத்தில் ஆர்வம் காட்டிய பயனியர்களிடம் சகோதரர்கள் ஹியூகோ ரீமரும் ஆல்பர்ட் ஷ்ரோடரும் பேசினார்கள். அப்பயனியர்களில் நாங்களும் இருந்தோம். கிளீவ்லாண்டில் ஊழியத்தைத் தொடரும்படி எங்களிடம் சொன்னார்கள், ஆனால் அடுத்த மாதமே எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது, பிப்ரவரி 1954-ல் துவங்க இருந்த உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 23-வது வகுப்புக்கு வரும்படியான அழைப்பு!
அப்போது நியூ யார்க், செளத் லான்சிங்கிலிருந்த கிலியட் பள்ளிக்கு நாங்கள் போகையில் கிறிஸ்டீன் பயத்தால் மிகவும் நடுங்கிவிட்டாள். “மெதுவாக ஓட்டுங்க!” என்று சொல்லிக்கொண்டே வந்தாள், “கிறிஸ்டீன், இன்னும் மெதுவாக ஓட்டினால் கார் நின்றே போய்விடும், போகவே முடியாது” என்று நான் சொன்னேன். அந்தக் கட்டிட வளாகத்துக்கு போய் சேர்ந்தபின் எங்களுக்கு ‘அப்பாடா . . . ’ என்றிருந்தது. சகோதரர் நேதன் நார் எங்களை வரவேற்று சுற்றிக் காண்பித்தார். தண்ணீரையும் மின்சாரத்தையும் எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதை அவர் எங்களுக்கு விளக்கினார். ராஜ்ய அக்கறைகளுக்காக சேவிக்கும்போது சிக்கனமாக இருப்பது ஒரு சிறந்த குணம் என்பதை எங்களுக்கு வலியுறுத்தினார். அந்த அறிவுரை எங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இன்றும் அப்படித்தான் வாழ்ந்துவருகிறோம்.
ரியோவுக்கு விமானத்தில்
கிலியட்டில் படித்து பட்டம் பெற்றோம்; 1954, டிசம்பர் 10-ஆம் தேதி குளிரில் நடுங்கியவாறே நியூ யார்க் நகரிலிருந்து ஒரு விமானத்தில் பயணப்பட்டோம். பிரேஸிலிலுள்ள ரியோ டி ஜனீரோவிற்கு, எங்களுடைய புதிய பிராந்தியத்துக்கு செல்லும் குஷியில் பறந்தோம். சகமிஷனரிகளான பீட்டரும், பில்லி கார்பெல்லோவும் எங்களோடு பிரயாணம் செய்தார்கள். 24 மணிநேர பயணம். பியூர்டோ ரிகோ, வெனிசுவேலா, வட பிரேஸிலைச் சேர்ந்த பெலேம் ஆகிய இடங்களில் நிற்கும் விமானத்தில் பயணித்தோம். ஆனால் இயந்திர கோளாறின் காரணமாக ரியோ டி ஜனீரோவை சென்றடைய எங்களுக்கு 36 மணிநேரம் எடுத்தது. அது கொள்ளைகொள்ளும் கண்கொள்ளாக் காட்சி! நகரின் விளக்குகள் கறுப்புக் கம்பளத்தில் பதிக்கப்பட்ட வைரம் போல ஜொலித்தன, பளபளப்பான நிலவொளி குவானபாரா வளைகுடாவில் பட்டு மினுமினுத்தது.
பெத்தேல் குடும்பத்தார் பலர் எங்களுக்காக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள். எங்களை அன்பாக வரவேற்று, கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள், அதிகாலை சுமார் மூன்று மணிக்கு நாங்கள் தூங்கப் போனோம். ஒரு சில மணிநேரத்திற்குப்பின் காலை மணி ஒலித்தது, அது மிஷனரி ஊழியத்தின் முதல் நாள் என்பதை எங்களுக்கு நினைப்பூட்டியது!
ஆரம்பத்தில் கற்றுக்கொண்ட பாடம்
முக்கியமான ஒரு பாடத்தை சீக்கிரத்தில் கற்றுக்கொண்டோம். சாட்சிகளாயிருந்த ஒரு குடும்பத்தாரின் வீட்டில் ஒரு மாலை பொழுதை கழிக்க சென்றிருந்தோம். கிளை அலுவலகத்துக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்தபோது அவர்கள் “இப்போ நீங்க போக வேண்டாம், மழை பெய்கிறதே” என்றார்கள். இரவு அங்கே தங்கிவிடும்படி எங்களை வற்புறுத்தினார்கள். மழை கொட்டும் ஊரிலிருந்துதான் நாங்களும் வந்திருக்கிறோம் என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பிவிட்டோம்.
ரியோவைச் சுற்றி மலைகள் இருப்பதால், மழைநீர் வேகமாக கீழ் நோக்கி ஓடிவந்து நகரத்தை சீக்கிரத்தில் வெள்ளக் காடாக்கிவிடுகிறது. கொஞ்ச நேரத்தில் நாங்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்துகொண்டிருந்தோம். கிளை அலுவலகத்தின் பக்கத்தில் தண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது, மார்புவரை தண்ணீர். ஒருவழியாக பெத்தேலுக்குள் நுழையும்போது நாங்கள் தொப்பலாக நனைந்துவிட்டோம். அடுத்த நாள் கிறிஸ்டீனுக்கு டைஃபாயிட் ஜுரம் வந்துவிட்டது, மிகவும் பலவீனமாகி ரொம்ப நாட்களுக்குக் கஷ்டப்பட்டாள். புதிய மிஷனரிகளாக நாங்கள் உள்ளூரிலுள்ள அனுபவமுள்ள சாட்சிகளின் அறிவுரையை கேட்டு நடந்திருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றோம்.
மிஷனரி மற்றும் பிரயாண வேலையின் ஆரம்பம்
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் போக போக ஆர்வத்தோடு வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தோம். போர்ச்சுகீஸிய மொழியில் ஒரு பிரசங்கத்தை எழுதி வைத்துக்கொண்டு நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அதை வாசித்துக் காண்பிப்போம். அம்மொழியை கற்பதில் நாங்கள் இருவருமே ஒரே வேகத்தில்தான் முன்னேறினோம். ஆனால், “நீங்க சொல்றது புரியுது, அவர் சொல்றதுதான் புரியலை” என்று என்னைக் காட்டி ஒரு வீட்டுக்காரர் கிறிஸ்டீனிடம் சொல்வார். இன்னொரு வீட்டுக்காரர் என்னிடம், “நீங்க சொல்றது புரியுது, ஆனா அவர்கள் சொல்றதுதான் புரியலை” என்பார். நிலைமை இப்படி இருந்தாலும் அந்த முதல் சில வாரங்களில் எங்களுக்கு காவற்கோபுரம் பத்திரிகைக்கு 100-க்கும் மேல் சந்தா கிடைத்தபோது நாங்கள் பூரித்துப்போனோம். சொல்லப்போனால், பிரேஸிலில் நாங்கள் தங்கியிருந்த முதல் வருடத்திலேயே எங்கள் பைபிள் மாணாக்கரில் பலர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இந்த மிஷனரி நியமிப்பில் அதிக பலன் கிடைக்கும் என்பது எங்களுக்கு ஓரளவு புரிந்துவிட்டது.
தகுதியுள்ள சகோதரர்கள் குறைவாக இருந்ததால், 1950-களின் மத்திபத்தில் பிரேஸிலில் இருந்த அநேக சபைகளில் வட்டார கண்காணியின் சந்திப்பு சரிவர நடக்கவில்லை. நான் இன்னும் போர்ச்சுகீஸிய மொழியைக் கற்றுக்கொள்ளும் “மாணவன்”தான், அந்த மொழியில் இன்னும் ஒரு பொதுப் பேச்சுகூட கொடுக்கவில்லை. ஆனாலும் 1956-ல் சாவோ பாலோ மாநிலத்தில் வட்டார ஊழியத்துக்கு நியமிக்கப்பட்டேன்.
நாங்கள் சந்தித்த முதல் சபையில், வட்டார கண்காணியின் சந்திப்பு நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்ததால், பொதுப் பேச்சைக் கேட்க எல்லாரும் ஆவலாய் காத்திருந்தார்கள். அந்தப் பேச்சைத் தயாரிக்கையில், அந்த மொழி காவற்கோபுர பத்திரிகையில் வந்த கட்டுரைகளிலிருந்து பாராக்களை வெட்டி அவற்றை பேப்பரில் ஒட்டி வைத்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மன்றம் நிரம்பி வழிந்தது. மேடையில்கூட சிலர் உட்கார்ந்துகொண்டு அந்த நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்திருந்தார்கள். பேச்சு, இல்லை இல்லை வாசிப்பு ஆரம்பமானது. எப்போதாவது சபையாரை நான் பார்த்தபோது, பிள்ளைகள் உட்பட அனைவரும் அசையாமல் உட்கார்ந்து பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வைத்தவிழி வாங்காமல் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘வாலன்டினோ, பரவாயில்லை, எப்படியோ இந்த மொழியில் நன்றாக பேச கற்றுக்கொண்டுவிட்டாய்! இந்த சகோதரர்கள் எல்லாரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்களே’ என்று மனதுக்குள் என்னையே மெச்சிக்கொண்டேன். பல வருடங்களுக்குப்பின், அந்த சபைக்கு திரும்ப போனபோது முதல் சந்திப்பின்போது அங்கிருந்த ஒரு சகோதரர் என்னிடம், “நீங்கள் கொடுத்த அந்த பொதுப் பேச்சு உங்களுக்கு நினைவிருக்கா? அதிலே ஒரு வார்த்தைகூட எங்களுக்கு புரியலை” என்று சொன்னார். அந்தப் பேச்சில் பெரும்பகுதி எனக்குமே புரியவில்லை என்று சொல்லி அசடுவழிந்தேன்.
வட்டார ஊழியத்தின் முதல் ஆண்டில் நான் அடிக்கடி சகரியா 4:6-ஐ வாசித்துப் பார்த்துக் கொண்டேன். ‘பலத்தினால் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே’ என்ற வார்த்தைகள் ராஜ்ய வேலை முன்னேறியதற்கு ஒரே காரணம் யெகோவாவின் ஆவியே என்பதை எனக்கு நினைப்பூட்டின. ஆம், உண்மையாகவே எங்கள் குறைகளின் மத்தியிலும் ராஜ்ய வேலை முன்னேறியது.
வழி நெடுக சவால்களும் ஆசீர்வாதங்களும்
வட்டார ஊழியம் என்றால் டைப்ரைட்டர், புத்தகங்கள், சூட்கேசுகள், பிரீஃப்கேசுகள் இவற்றையெல்லாம் சுமந்துகொண்டு நாடு முழுக்க பிரயாணம் செய்ய வேண்டும். கிறிஸ்டீன் எங்கள் சாமான்களையெல்லாம் சரியாக எண்ணி வைத்துக்கொள்வாள், ஆகவே ஒரு பஸ் மாறி அடுத்த பஸ்ஸுக்குச் செல்லும்போது எதையும் நாங்கள் தவறவிடாமல் இருந்தோம். நாங்கள் போக வேண்டிய அடுத்த இடத்துக்குச் செல்ல பஸ்ஸில் 15 மணிநேரம் தூசிபடிந்த சாலைகளில் பயணம் செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. சில நேரங்களில், ஆட்டங்கண்ட சிறிய பாலத்தில் இரண்டு பஸ்கள் எதிர் எதிரே வரும்போது அப்படியே உரசிக்கொண்டு போவது போல இருக்கும், அப்போதெல்லாம் எங்களுக்கு மிகவும் நடுக்கமாகத்தான் இருக்கும். நாங்கள் இரயிலில், கப்பலில், குதிரையிலும் பயணம் செய்திருக்கிறோம்.
1961-ல் நாங்கள் மாவட்ட ஊழியத்தைத் துவங்கினோம். சபை சபையாக போவதற்கு பதிலாக இப்போது நாங்கள் வட்டாரம் வட்டாரமாக போக வேண்டும். வாரத்தில் பல மாலை நேரங்களில் யெகோவாவின் அமைப்பு தயாரித்த படங்களை போட்டுக் காட்டினோம். ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு இடங்களில் போட்டுக் காட்டினோம். இந்தப் படக்காட்சிகளை தடைசெய்ய முயன்ற உள்ளூர் பாதிரிமார்களை சமாளிக்க நாங்கள் வேகமாக செயல்பட வேண்டியிருந்தது. ஒரு பட்டணத்தில் எங்களுக்கு மன்றத்தை வாடகைக்கு ஒப்பந்தம் செய்திருந்த அதன் சொந்தக்காரரை ஒரு பாதிரியார் மிரட்டி கொடுக்கவிடாதபடி செய்துவிட்டார். பல நாட்கள் மன்றத்துக்காக தேடி அலைந்தோம், மற்றொரு இடம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால் இதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை, முதலில் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கே வரும்படி எல்லாருக்கும் அழைப்புக் கொடுத்தோம். நிகழ்ச்சிநிரல் ஆரம்பிக்கும் முன், கிறிஸ்டீன் அந்த மன்றத்துக்குப் போய் படக்காட்சியை பார்க்க விரும்புகிறவர்களிடம் சத்தமில்லாமல் புதிய இடத்துக்கு போகும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். அந்த மாலை பொழுதில் 150 பேர் அந்தப் படக்காட்சியைப் பார்த்தார்கள். புதிய உலக சமுதாயம் செயலில் என்ற அதன் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது.
தூர இருந்த இடங்களில் இந்தப் பிரயாண ஊழியம் மிகவும் கஷ்டமாக இருந்தபோதிலும், அங்கிருந்த மனத்தாழ்மையுள்ள சகோதரர்கள் எங்கள் சந்திப்புகளுக்கு பெரும் போற்றுதல் காட்டினார்கள். அவர்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்து அன்பாக உபசரித்தார்கள். நாங்கள் அவர்களோடு இருந்ததற்காக யெகோவாவுக்கு எப்போதும் நன்றிசெலுத்தினோம். அவர்களோடு அன்பாக பழகியதால் எங்களுக்கு ஆசீர்வாதம்தான்! (நீதிமொழிகள் 19:17; ஆகாய் 2:7) ஆகவே, பிரேஸிலில் நாங்கள் செய்துவந்த 21 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மிஷனரி சேவை முடிவுக்கு வந்தபோது எங்களுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை!
நெருக்கடியில் யெகோவா வழிகாட்டினார்
1975-ல், கிறிஸ்டீனுக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு நாங்கள் பிரயாண ஊழியத்தை தொடர்ந்தோம், ஆனால் கிறிஸ்டீனின் உடல்நிலை மோசமானது. அவள் மருத்துவ கவனிப்பைப் பெற ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்புவதுதான் நல்லது என்று பட்டது. ஏப்ரல் 1976-ல் கலிபோர்னியாவிலுள்ள லாங் பீச் என்ற இடத்திலிருந்த என் அம்மாவோடு தங்கினோம். இருபது ஆண்டுகளாக அயல்நாட்டில் வாழ்ந்துவிட்ட எங்களுக்கு இந்த சமயத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனக்குத் தெரிந்த மசாஜ் தொழிலை செய்து சம்பாதித்து ஏதோ சமாளித்தோம். கலிபோர்னியா அரசு, ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற கிறிஸ்டீனுக்கு இடமளித்தது, ஆனால் இரத்தம் ஏற்றாமல் அவளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் அவள் மிகவும் பலவீனமடைய ஆரம்பித்தாள். என்ன செய்வதென்று அறியாமல் வழிகாட்டும்படி யெகோவாவிடம் ஜெபித்தோம்.
ஒரு நாள் பிற்பகல் வெளி ஊழியம் செய்கையில் ஒரு கிளினிக் கண்ணில்பட்டது, கொஞ்சம்கூட யோசிக்காமல் உள்ளே போனேன். டாக்டர் வீட்டுக்குப் போக கிளம்பிவிட்டார், ஆனாலும் என்னை உள்ளே வரச் சொன்னார். இரண்டு மணிநேரம் நாங்கள் பேசினோம். அதன் பிறகு அவர், “நீங்கள் செய்யும் இந்த மிஷனரி வேலையை பாராட்டுகிறேன். பணமில்லாமலும் இரத்தமில்லாமலும் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளிக்க நான் தயார்” என்று சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை.
இளகிய மனம்படைத்த இந்த டாக்டர் பிரபலமான ஒரு ஸ்பெஷலிஸ்டாகவும் இருந்தார். அவர் வேலை செய்துவந்த ஹாஸ்பிட்டலுக்கு கிறிஸ்டீனை மாற்றினார், அவர் நன்றாக கவனித்துக் கொண்டதால் அவளுடைய உடல்நிலை தேறியது. அந்தக் கஷ்டமான சமயத்தில் எங்களுக்கு யெகோவா வழிகாட்டியதற்காக நாங்கள் அவருக்கு கோடி நன்றி சொன்னோம்!
புதிய நியமிப்புகள்
கிறிஸ்டீனுக்கு தெம்பு வந்தப்பின் நாங்கள் பயனியர்களாக ஊழியம் செய்தோம், லாங் பீச்சில் யெகோவாவை வணங்க பலருக்கு உதவிசெய்து அந்த சந்தோஷத்தை அனுபவித்தோம். 1982-ல் ஐக்கிய மாகாணங்களில் வட்டார வேலை செய்யும்படி அழைப்பு வந்தது. எங்களுக்குப் பிரியமான இந்த பிரயாண வேலையில் யெகோவா எங்களை மறுபடியும் உபயோகிப்பதற்காக யெகோவாவுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொன்னோம். கலிபோர்னியாவிலும், அதன்பிறகு நியூ இங்கிலாந்திலும் நாங்கள் சேவித்தோம், போர்ச்சுகீஸிய மொழி பேசிய சில சபைகளும் எங்கள் வட்டாரத்தில் இருந்தன. பின்னால் பெர்முடாவும் சேர்க்கப்பட்டது.
புத்துயிரளித்த ஊழியத்தை நான்கு வருடங்கள் அனுபவித்தபின் மற்றொரு நியமிப்பு எங்களுக்குக் கிடைத்தது. எங்களுக்கு விருப்பமான இடத்தில் விசேஷ பயனியர்களாக சேவிக்கும்படியான அழைப்பு. பிரயாண வேலையை விட்டுவிடுவதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் எங்களுடைய புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்ள நாங்கள் தீர்மானமாயிருந்தோம். ஆனால் எங்கே போவது? பிரயாண வேலை செய்யும்போது மாஸசூஸெட்ஸில் போர்ச்சுகீஸிய மொழி பேசிய நியூ பெட்ஃபோர்டு சபையில் தேவை இருப்பது என் நினைவுக்கு வந்தது. ஆகவே நாங்கள் நியூ பெட்ஃபோர்டுக்கு கிளம்பினோம்.
அங்கு போய் சேர்ந்தபோது சபையில் எங்களுக்கு தடபுடலான வரவேற்பு கிடைத்தது. எங்களை அவர்கள் மனதார வரவேற்றபோது நாங்கள் நெகிழ்ந்து போனோம்! ஆனந்த கண்ணீர் வடித்தோம். ஒரு வீட்டை கண்டுபிடிக்கும்வரை இரண்டு சிறு குழந்தைகளை உடைய தம்பதியினர் அவர்களுடைய வீட்டில் எங்களுக்கு இடம் கொடுத்தார்கள். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே யெகோவா இந்த விசேஷ பயனியர் நியமிப்பை உண்மையில் ஆசீர்வதித்தார். 1986 முதற்கொண்டு இந்தப் பட்டணத்தில் சுமார் 40 பேர் சாட்சிகளாவதற்கு நாங்கள் உதவியிருக்கிறோம். அவர்களே எங்கள் ஆவிக்குரிய குடும்பம். மேலுமாக உள்ளூர் சகோதரர்களில் ஐந்து பேர் மூப்பர்களாகும் அளவுக்கு வளர்ந்திருப்பதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆம், உண்மையிலேயே பலனளிப்பதாய் இருந்திருக்கிறது எங்கள் மிஷனரி சேவை.
கடந்தோடிய காலத்தை எண்ணிப் பார்க்கையில், இளமை பருவத்திலிருந்தே யெகோவாவை சேவிக்க ஆரம்பித்து சத்தியத்தை எங்கள் வாழ்க்கைப் பாதையாக ஆக்கியிருப்பதை குறித்து ஆனந்தமே. வயோதிபமும் உடல் பலவீனமும் இப்போது எங்களை பாதித்தாலும் யெகோவாவின் வழியில் முன்னேறுவதே எங்கள் பெலனும் மகிழ்ச்சியும்.
[பக்கம் 26-ன் படம்]
ரியோ டி ஜனீரோவில் வந்திறங்கிய சமயம்
[பக்கம் 28-ன் படம்]
எங்களுடைய ஆவிக்குரிய குடும்பம்—மாஸசூஸெட்ஸிலுள்ள நியூ பெட்ஃபோர்டு போர்ச்சுகீஸ் சபை