காலத்தின் பரீட்சையை தாங்கிநிற்கும் மரங்கள்
உங்களுடைய வீட்டை கட்டுவதற்கு ஒரு செங்குத்தான மலையுச்சி சிறந்த இடமாக இருக்காது. ஆனால் அசௌகரியங்கள் மத்தியிலும் ஆல்ப்ஸ் போன்ற உயர்ந்த மலைப்பகுதியில் வளரும் மரங்கள் சில, செங்குத்தான பாறைகளையே மிக உறுதியாக பற்றிக்கொள்கின்றன. பனிக்கட்டி மிகுந்த கடும் குளிரை கண்டு அஞ்சுவதுமில்லை, வாட்டியெடுக்கும் கோடையின் வறட்சியை கண்டு துவண்டுவிடுவதுமில்லை.
பொதுவாக, வலுமிக்க இந்த மரங்கள் தாழ்நிலப் பகுதியில் வளரும் இவற்றின் இனத்தாரை போல கம்பீரமாக காட்சியளிப்பதில்லை. இவற்றின் அடிமரங்கள் முண்டு முடிச்சுகளோடும் வளைந்து நெளிந்தும் வளர்ச்சியில்லாமல் மிகக் குட்டையாக இருக்கலாம். அவற்றில் சில, இயற்கையான ‘போன்ஸை’ போலவும் காட்சியளிக்கின்றன. மோசமான சீதோஷ்ண நிலையும் குறைந்தளவு மண்ணும் அவற்றை அவ்வாறு வடிவமைத்துவிடுகின்றன.
பூமியிலேயே மிக மோசமான ஒரு சூழலை சகித்திருப்பதால், இப்படிப்பட்ட மரங்களுக்கு ஆயுசு கம்மிதான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்கு நேர்மாறானதே உண்மை. கலிபோர்னியாவிலுள்ள வொய்ட் மௌன்டென்ஸில் 3,000 மீட்டர் உயரத்தில் வளரும் மெத்தூசலா என்ற பிரிஸல்கோன் பைன் மரத்திற்கு 4,700 வயதாகிறது என சிலர் கூறுகின்றனர். இதுவே இன்றுள்ள மரங்களிலேயே மிகவும் வயதான மரம் என 1997 கின்னஸ் புத்தகம் (ஆங்கிலம்) சொல்கிறது. இப்படிப்பட்ட பூர்வீக மரங்களை ஆராயும் எட்மண்ட் ஷூல்மன் இவ்வாறு விளக்கினார்: “இந்த பிரிஸல்கோன் பைன் மரம் . . . மோசமான சூழலால் பிழைத்து வருவதாக தெரிகிறது. வொய்ட் மௌன்டென்ஸில் காணப்படும் அதிக வயதான [பைன் மரங்கள்] எல்லாமே சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் வறட்சியான, பாறை மிகுந்த வனத்தில் காணப்படுகின்றன.” இவற்றைப் போலவே, பைன் இனத்தைச் சேர்ந்த மிக வயதான வேறு சில மரங்களும் மோசமான சூழல்களில் வளருவதை ஷூல்மன் கண்டுபிடித்தார்.
மோசமான சூழலை சமாளிக்க வேண்டியதாக இருந்தாலும், சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த மரங்கள் அவற்றிற்கு கிடைக்கும் இரண்டு அனுகூலங்களை மிகவும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. முதலாவது, தாவரங்கள் அடர்த்தியாக இல்லாத தனிமையான இடத்தில் அவை வளர்கின்றன. எனவே முதிர்ந்த மரங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாவதாக, அவை அந்தளவுக்கு மிக உறுதியாக பாறையில் வேரூன்றி இருப்பதால் பூமியதிர்ச்சி மட்டுமே அவற்றை அசைக்க முடியும்.
பைபிளில் கடவுளுடைய ஊழியர்கள் மரங்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். (சங்கீதம் 1:1-3; எரேமியா 17:7, 8) தாங்கள் வாழும் சூழ்நிலைமைகளால் அவர்களும் இன்னல்களை எதிர்ப்படலாம். துன்புறுத்துதல், மோசமான உடல்நிலை, அல்லது வாட்டி வதைக்கும் வறுமை, மிக முக்கியமாக இப்படிப்பட்ட சோதனைகள் வருஷக்கணக்காக தொடரும்போது அவர்களுடைய விசுவாசத்தை மிக கடுமையாக பரீட்சிக்கலாம். என்றபோதிலும், மோசமான சூழலை மிக நன்றாக தாங்கிநிற்கும் மரங்களை வடிவமைத்தவராகிய அவற்றின் படைப்பாளர் தம்மை வணங்குகிறவர்களையும் தாங்குவதாக உறுதியளிக்கிறார். உறுதியாக நிலைத்து நிற்பவர்களுக்கு பைபிள் இந்த வாக்குறுதியை தருகிறது: ‘அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்.’—1 பேதுரு 5:9, 10.
பைபிளில் ‘சகித்திரு’ என பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வினைச்சொல்லில் மறைந்திருக்கும் கருத்தே இதுதான்: ‘விழாமல் இருத்தல், உறுதியாக நிலைத்திருத்தல், அல்லது விடாமுயற்சியோடு இருத்தல்.’ ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் வளரும் மரங்களைப் போலவே, நன்கு வேரூன்றியிருப்பதே சகித்திருப்பதற்கு தேவையான முக்கிய அம்சமாகும். கிறிஸ்தவர்கள் உறுதியாக நிலைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்துவில் உறுதியாக வேரூன்றியவர்களாக இருக்க வேண்டும். “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” என பவுல் எழுதினார்.—கொலோசெயர் 2:6, 7.
ஆவிக்குரிய விதத்தில் பலமாக வேரூன்றியிருப்பதன் அவசியத்தை பவுல் உணர்ந்திருந்தார். அவர்தாமே “மாம்சத்திலே ஒரு முள்”ளுடன் போராடினார், தம்முடைய ஊழியக்காலம் முழுவதும் கடும் துன்புறுத்துதலை சகித்து நிலைத்திருந்தார். (2 கொரிந்தியர் 11:23-27; 12:7) ஆனால், கடவுளுடைய பலத்தால் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என கூறினார்.—பிலிப்பியர் 4:13, பொ.மொ.
பவுலின் உதாரணம் காட்டுகிறபடி, ஒரு கிறிஸ்தவன் வெற்றிகரமாக சகித்திருப்பது சாதகமான சூழ்நிலையின் மீது சார்ந்தில்லை. பல நூற்றாண்டுகளுக்கு மோசமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதியிலுள்ள மரங்களைப் போலவே, கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருந்து கடவுள் அருளும் வல்லமையில் சார்ந்திருந்தால் நாமும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க முடியும். மேலும், நாம் முடிவுவரை சகித்திருந்தால், “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்” என்ற தெய்வீக வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிக்கும் பாக்கியத்தையும் பெறுவோம்.—ஏசாயா 65:22; மத்தேயு 24:13.