உங்கள் முன்னேற்றத்தின் தடைகளை வெல்லுங்கள்!
உங்கள் காரில் கியர் போட்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்; என்ஜின் இயங்குகிறது; ஆனால் கார் முன்னோக்கி செல்ல மறுக்கிறது. ஏதாவது இயந்திர கோளாறா? இல்லை, ஒரு சக்கரத்தின்முன் பெரிய கல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்லை எடுத்துவிட்டால் போதும், கார் முன்னால் நகர தொடங்கும்.
அதே விதமாகவே, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கும் சிலருக்கும், அவர்களது ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகள் உள்ளன. உதாரணமாக, ‘உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம்’ போன்றவை சத்திய ‘வசனத்தை நெருக்கிப் போட்டு’ வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்பதாக இயேசு எச்சரித்தார்.—மத்தேயு 13:22.
வேறு சிலருக்கு, ஆழமாக பதிந்துள்ள பழக்கங்கள் அல்லது பலவீனங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றன. யூடாகா என்ற ஜப்பானியருக்கு பைபிள் செய்தி பிடித்திருந்தது. ஆனாலும் சூதாட்டம் அவருக்கிருந்த பெரிய பிரச்சினை. இந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிட அடிக்கடி முயன்றும் வெற்றி பெறவில்லை. இதற்கு அடிமையானதால் ஏராளமான பணத்தையும் மூன்று வீடுகளையும் குடும்ப கௌரவத்தையும் தன் சுய மரியாதையையும் இழந்தார். இந்த முட்டுக்கட்டையை நீக்கிவிட்டு அவர் ஒரு கிறிஸ்தவராக முடியுமா?
கேகோ என்ற பெண்ணைப் பற்றி சிந்தித்து பாருங்களேன். பைபிளின் உதவியுடன் சிலை வழிபாடு, ஒழுக்கக்கேடு, குறி சொல்லுதல் போன்ற எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டாள். என்றாலும், “எனக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது புகைத்தல். எத்தனையோ முறை அதை விட்டுவிட முயன்றேன், ஆனால் முடியவில்லை” என்று கேகோ ஒத்துக்கொள்கிறாள்.
இதேபோல், உங்கள் முன்னேற்ற பாதையிலும் நகர்த்த முடியாததாக தோன்றும் ஒரு தடை குறுக்கே நிற்கலாம். அது என்னவாக இருந்தாலும், கடவுளுடைய உதவியால் அதை வென்றுவிடலாம் என்பதைக் குறித்து நிச்சயமாய் இருங்கள்.
காக்காய்வலிப்பினால் அவதிப்பட்ட ஒருவனிடமிருந்து பிசாசை விரட்ட முடியாத சீஷர்களிடம் இயேசு சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் தவறிய விஷயத்தில் இயேசு வெற்றி கண்ட பிறகு, தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” (மத்தேயு 17:14-20; மாற்கு 9:17-29) நம் முன் பெரிய மலைபோல உருவெடுக்கும் பிரச்சினை சர்வ வல்லமையுள்ள படைப்பாளருக்கு முன் ஒன்றுமே இல்லை.—ஆதியாகமம் 18:14; மாற்கு 10:27.
முன்னேற்றத்தின் தடைகளை கண்டுபிடித்தல்
உங்கள் தடைகளை வெல்லுவதற்கு முன், அந்த தடைகள் என்னவென்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? சில சமயங்களில், ஒரு மூப்பர், உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துபவர் போன்ற யாராவது ஏதாவது ஒரு விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம். அப்படிப்பட்ட அன்பான அறிவுரையை கேட்டு கோபமடைவதற்கு மாறாக, மனத்தாழ்மையுடன் “புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்.” (நீதிமொழிகள் 8:33) வேறு சில சமயங்களில், நீங்கள் தனிப்பட்ட விதத்தில் பைபிள் படிக்கையில் உங்கள் பலவீனங்கள் உங்களுக்கே தெரிய வருகின்றன. ஆம், கடவுளுடைய வார்த்தை ‘ஜீவனும் வல்லமையும்’ உள்ளது. (எபிரெயர் 4:12) பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசிக்கையில் உங்களுடைய ஆழ்ந்த சிந்தனைகளும், உணர்வுகளும், உள்நோக்கங்களும் தெளிவாக தெரிய வரும். யெகோவாவின் உயர்ந்த தராதரங்களின் அடிப்படையில் உங்களை நீங்களே மதிப்பிட அது உதவுகிறது. உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய காரியங்களை வெளிப்படுத்தி, அவற்றை அடையாளம் காட்டுகிறது.—யாக்கோபு 1:23-25.
உதாரணமாக, ஒரு பைபிள் மாணவர் ஒழுக்கக்கேடான கற்பனைகளில் மிதப்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் உண்மையில் தவறு ஏதும் செய்வதில்லை என்பதால் அவ்வாறு கற்பனை செய்வதில் கெடுதல் ஏதும் ஏற்படாது என நினைக்கலாம். ஆனால் பைபிள் படிக்கும்போது யாக்கோபு 1:14, 15-ன் வார்த்தைகளை பார்க்கிறார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” அவர் அதே போக்கை தொடருவது அவருடைய முன்னேற்றத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது காண்கிறார்! இந்த தடையை அவர் எவ்வாறு முறியடிக்கலாம்?—மாற்கு 7:21-23.
தடைகளை வெல்லுதல்
ஒருவேளை ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரின் உதவியுடன், உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-ஐ பயன்படுத்தி அந்த மாணவர் கடவுளுடைய வார்த்தையை கூடுதலாக ஆராயலாம்.a உதாரணமாக, “சிந்தனைகள்” என்ற தலைப்பு, கேடு விளைவிக்கும் கற்பனைகளை முறியடிக்க உதவுவதற்காக ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்ட பல கட்டுரைகளுக்கு வாசிப்பவரின் கவனத்தை திருப்புகிறது. பிலிப்பியர் 4:8 போன்ற உதவியளிக்கும் பைபிள் வசனங்களை இந்த கட்டுரைகள் சிறப்பித்துக் காட்டுகின்றன. அது சொல்வதாவது: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” ஆம், ஒழுக்கக்கேடான சிந்தைகளுக்கு பதிலாக கற்புள்ள, கட்டியெழுப்பும் சிந்தைகளால் நிரப்ப வேண்டும்!
இவ்வாறு ஆராய்ச்சி செய்யும்போது, பிரச்சினை இன்னும் மோசமடையாமல் இருக்க உதவியளிக்கும் மற்ற பைபிள் நியமங்களையும் அந்த மாணவர் நிச்சயமாக கண்டுபிடிப்பார். உதாரணமாக, நீதிமொழிகள் 6:27-ம் மத்தேயு 5:28-ம் பாலியல் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களால் மனதை நிரப்புவதற்கு எதிராக எச்சரிக்கின்றன. “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்” என்று சங்கீதக்காரன் ஜெபித்தார். (சங்கீதம் 119:37) நிச்சயமாகவே, இந்த பைபிள் வசனங்களை வெறுமனே வாசிப்பது போதாது. “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்” என்று ஞானவான் சொல்கிறார். (நீதிமொழிகள் 15:28) கடவுள் எதை கட்டளையிடுகிறார் என்று மட்டுமல்லாமல் ஏன் அவ்வாறு கட்டளையிடுகிறார் என்றும் ஆழ்ந்து யோசிப்பதன் மூலம் யெகோவாவின் வழிகளில் இருக்கும் ஞானத்தையும் நியாயத்தன்மையையும் பற்றி ஒரு மாணவர் ஆழமாக புரிந்துகொள்ள முடியும்.
முடிவாக, இப்படி தன் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதை வெல்ல முயல்கிறவர் தாராளமாக யெகோவாவின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால், நாம் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும், நாம் அபூரணர் என்பதையும், மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் என்பதையும் நன்றாக அறிந்திருப்பவர் கடவுளே. (சங்கீதம் 103:14) உதவிக்காக கடவுளிடம் இடைவிடாமல் ஜெபிப்பதும், ஒழுக்கக்கேடான கற்பனைகளில் ஈடுபடுவதை தவிர்க்க விடாமுயற்சி செய்வதும், முடிவில் மிகவும் விரும்பத்தக்க பலனை தரும். அதாவது சுத்தமான சுமையற்ற மனசாட்சியை தரும்.—எபிரெயர் 9:14.
சோர்ந்துவிடாதீர்கள்
நீங்கள் எந்தவிதமான பிரச்சினையுடன் போராடிக் கொண்டிருந்தாலும்சரி, சில வேளைகளில் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடும் என்பதை மனதில் வையுங்கள். அப்போது வருத்தமடைவதும் ஏமாற்றமடைவதும் இயல்பானதே. இருந்தாலும், கலாத்தியர் 6:9-ன் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களான தாவீது, பேதுரு போன்றவர்களும் கூனிக்குறுகும் விதத்தில் அவ்வப்போது தவறினார்கள். ஆனால் அவர்கள் சோர்ந்துபோய் முயற்சியை கைவிட்டுவிடவில்லை. அவர்கள் மனத்தாழ்மையுடன் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, கடவுளின் மிகச் சிறந்த ஊழியர்களாக தங்களை நிரூபித்து வந்தனர். (நீதிமொழிகள் 24:16) தாவீது தவறுகளைச் செய்தபோதிலும், யெகோவா அவரை ‘என் இருதயத்துக்கு ஏற்றவன், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்’ என்றார். (அப்போஸ்தலர் 13:22) அதேவிதமாக பேதுருவும் தன் தவறுகளிலிருந்து மீண்டுவந்து கிறிஸ்தவ சபையில் தூணாக ஆனார்.
தடைகளை முறியடிப்பதில் இன்று அநேகர் அதேபோல வெற்றி கண்டிருக்கின்றனர். ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யூடாகா, பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். அவர் சொல்வதாவது: “முன்னேற்ற பாதையில் நான் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் யெகோவாவின் ஆதரவும் ஆசீர்வாதமும் சூதாட்ட பழக்கத்தை விட்டுவிட எனக்கு உதவின. விசுவாசத்தால் ‘மலைகளையும்’ அசைவிக்கலாம் என்ற இயேசுவின் வார்த்தைகள் என் வாழ்க்கையில் நிஜமாவதை காண்பதில் அதிக சந்தோஷத்தை பெற்றிருக்கிறேன்.” காலப்போக்கில், யூடாகா சபையில் உதவி ஊழியரானார்.
புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கேகோவைப் பற்றி என்ன? புகைத்தலுக்கு அடிமைப்பட்டிருத்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விழித்தெழு! கட்டுரைகளை வாசிக்கும்படி பைபிள் படிப்பு நடத்திய சகோதரி ஆலோசனை கூறினார்கள். யெகோவாவின் பார்வையில் சுத்தமாக இருக்க தினசரி நினைப்பூட்டுதலாக இருக்கட்டும் என்று நினைத்து, தன் வண்டியில்கூட 2 கொரிந்தியர் 7:1-ஐ தன் பார்வையில் படும்படி வைத்திருந்தாள் கேகோ. இதற்குப் பின்னும், அவளால் அந்த பழக்கத்தை விடமுடியவில்லை. “என்மீதே எனக்கு கோபம் கோபமாக வந்தது” என்பதாக நினைவுகூருகிறாள் கேகோ. “உண்மையில் எனக்கு என்னதான் வேண்டும், நான் யாரை சேவிக்க விரும்புகிறேன், யெகோவாவையா அல்லது சாத்தானையா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.” யெகோவாவையே அவள் சேவிக்க விரும்புவதை தீர்மானித்தவுடன் உதவி கேட்டு ஊக்கமாக ஜெபித்தாள். “எனக்கே ஆச்சரியமாக இருந்தது, அதிக வேதனையில்லாமல் புகைப்பழக்கத்தை என்னால் நிறுத்த முடிந்தது. இதை முன்னரே செய்யாமல் போய்விட்டோமே என்றுதான் வருத்தப்படுகிறேன்” என்கிறாள் அவள்.
உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவற்றை முறியடிப்பதில் நீங்களும் வெற்றி பெறலாம். நீங்கள் எந்தளவுக்கு உங்கள் சிந்தனைகளையும், ஆசைகளையும், சொற்களையும், செயல்களையும் பைபிள் தராதரங்களுக்கு இசைவாக வைத்துக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு சுயமரியாதை மற்றும் நம்பிக்கை உணர்வையும் பெறுவீர்கள். உங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளும், குடும்ப அங்கத்தினரும் உங்களுடன் கூட்டுறவு கொள்கையில் புத்துணர்ச்சி பெற்று, உற்சாகமடைவார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவோடுள்ள உங்கள் உறவு மேன்மேலும் வளரும். சாத்தானுடைய பிடியிலிருந்து விலகி ஓடுகையில் ‘இடறல்களை தம் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுவதாக’ அவர் வாக்குறுதி அளித்தார். (ஏசாயா 57:14) உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகளை நீக்கவும் வெல்லவும் நீங்கள் முயற்சி எடுத்தால், நிச்சயமாக யெகோவா உங்களை செழுமையாக ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பல மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 28-ன் படம்]
விசுவாசம் இருந்தால், மலைபோன்ற தடைகளையும் வென்றுவிடலாம் என்று இயேசு வாக்குறுதி அளித்தார்
[பக்கம் 30-ன் படம்]
பைபிளை வாசிப்பது, ஆவிக்குரிய குறைபாடுகளை சரிசெய்வதற்கான நம் முயற்சிகளை பலப்படுத்துகிறது