எது உண்மையான மதிப்புள்ளது?
உண்மையான மதிப்புள்ள ஏதோவொன்று நம்மிடம் இருந்தால் அளவிலா ஆனந்தம் அடைகிறோம். ஆனால் அந்த ஏதோவொன்று என்னவாக இருக்கலாம்? எக்கச்சக்கமான பணமா? விலையுயர்ந்த அல்லது தினுசுதினுசான ஆபரணங்களா? பெயரும் புகழுமா? அநேகருக்கு இவையெல்லாம் பெரும் மதிப்புமிக்கவையே. இவையெல்லாம் இருந்தால், நன்கு வாழலாம், வாழ்க்கையை அதிக அர்த்தமுள்ளதாக ஆக்கலாம், அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கும் சாதனை புரிவதற்கும் நமக்கிருக்கும் உள்ளான தேவையை திருப்தி செய்து கொள்ளலாம். எதிர்காலத்திற்கான நம் இலக்குகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் இப்படிப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள பெரும் பாடுபடுகிறோமா?
பொ துவாக, ஒரு காரியம் தங்களுடைய தேவைகளை எப்படி பூர்த்தி செய்கிறது அல்லது தங்கள் தனிப்பட்ட ஆசைகளை எவ்வாறு திருப்திப்படுத்துகிறது என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அதை மதிப்பிடுகிறார்கள். நலமாக இருக்கும் உணர்வையும் தந்து, பாதுகாப்பான எதிர்காலத்தையும் அளிக்கும் சாத்தியமுடைய காரியங்களை நாம் மிகவும் நேசிக்கிறோம். உடனடியாக நமக்கு நிவாரணமளிக்கும், ஆறுதல் செய்யும் அல்லது அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் காரியங்களை நாம் பொன் போல போற்றுகிறோம். மாறிக்கொண்டே இருக்கும் ஆசைகள் அல்லது அக்கறைகளின் அடிப்படையில் ஏதாவதொன்றை மதிப்புள்ளதாக கருதுவது, மேலோட்டமானதாகவும் குறுகிய கால நோக்குள்ளதாகவுமே இருக்கும். நடைமுறையில், நம்முடைய மிகப் பெரிய தேவையாக நாம் நினைப்பது எது என்பதன் அடிப்படையிலேயே உண்மையான மதிப்புள்ளது எதுவென்று தீர்மானிக்கப்படுகிறது.
நம்முடைய மிகப் பெரிய தேவை என்ன? முக்கியமான அம்சமாகிய உயிர் மட்டும் இல்லாவிட்டால் எதற்குமே எந்த மதிப்புமில்லை. உயிரில்லையேல் நாமில்லை. பூர்வ இஸ்ரவேலின் அரசன் இவ்வாறு எழுதினார்: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) நாம் இறந்துபோகையில் நம்மிடமுள்ள அனைத்தையும் கட்டாயமாகவே விட்டுச்செல்ல வேண்டியுள்ளது. அப்படியென்றால் நம்முடைய உயிரைப் பாதுகாக்கும் ஏதோவொன்றுதான் நம் முக்கிய தேவையாக இருக்கிறது. நம் உயிரை எது பாதுகாக்கும்?
நம் உயிரை எது பாதுகாக்கும்?
“திரவியமும் கேடகம்” என்று சாலொமோன் ராஜா கூறினார். (பிரசங்கி 7:12) போதிய பணமிருந்தால், நாம் நல்ல உணவையும் வசதியான வீட்டையும் பெறலாம். பணமிருந்தால் தூர இடங்களுக்கு பிரயாணம் செய்து வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்கலாம். முதுமையோ சுகவீனமோ ஏற்பட்டு இனிமேலும் உழைத்து பாடுபட முடியாத காலத்தில் பணமிருந்தால் நம் தேவைகளைக் கவனித்துக்கொள்ளலாம். பணமிருந்தால் ஆதாயங்கள் பல. ஆனாலும் பணத்தால் நம் உயிரை பாதுகாக்க முடியாது. அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: ‘இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், . . . ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கும்படி கட்டளையிடு.’ (1 தீமோத்தேயு 6:17, 19) உலகிலுள்ள எல்லா பணமும் சேர்ந்தாலும் நமக்கு உயிரை வாங்கித்தர முடியாது.
ஹிட்டோஷி என்பவரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்ததால் பணக்காரராகும் வெறி அவருக்கு இருந்தது. பணத்தின் அபார சக்தியில் அவர் அந்தளவுக்கு நம்பிக்கை வைத்ததால் பணத்தால் மனிதரைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்தார். ஒரு நாள் ஹிட்டோஷியின் வீட்டுக்கு ஒருவர் வந்தார்; அவருக்காக இயேசு கிறிஸ்து மரித்திருப்பதைப் பற்றி தெரியுமா என கேட்டார். இந்தக் கேள்வி ஹிட்டோஷியை யோசிக்க வைத்தது. ஏனென்றால் தன்னைப் போன்ற ஒருவனுக்காக மரிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என அவர் நினைத்தார். பைபிள் அடிப்படையிலான பொதுப் பேச்சைக் கேட்க சென்றார். ‘கண்ணை தெளிவாக வைத்துக்கொள்ளும்படி’ அந்தப் பேச்சில் அறிவுரை கூறப்பட்ட போது ஆச்சரியப்பட்டார். “தெளிவான” கண் என்பது தொலை நோக்குடையது, ஆன்மீக காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது என பேச்சாளர் விளக்கமளித்தார். (லூக்கா 11:34) பணத்துக்காக பாடுபடுவதை விட்டுவிட்டு ஹிட்டோஷி தன் வாழ்க்கையில் ஆன்மீக ரீதியில் மதிப்புமிக்கவற்றிற்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்தார்.
பொருள் செல்வம் நமக்கு ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் ஓரளவுக்கு அளிக்கிறது. இவை நம்மிடம் ஏராளமாக இருந்தால் அன்றாட தேவைகளைக் குறித்து கவலையின்றியும் இருக்கலாம். மிகவும் நேர்த்தியான ஒரு சுற்றுவட்டாரத்தில் நமக்கு அழகான வீடிருந்தால் எதையோ சாதித்துவிட்ட உணர்வு ஏற்படலாம். நவநாகரிகமாக உடுத்திக் கொண்டு, சொகுசு காரில் பவனி வருகையில் மற்றவர்களின் பாராட்டை பெறலாம்.
‘நம்முடைய சகலப் பிரயாசத்துக்கும் பலன் அநுபவிப்பதைப்’ பார்ப்பது ஆசீர்வாதமே. (பிரசங்கி 3:13) தேவைக்கு அதிகமாக நம்மிடமிருந்தால், நம் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள் ‘இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிருக்க’ முடியும். ஆனால் பொருள் உடைமைகளின் மதிப்பு கணநேரமே நீடிக்கும். பொருளாசையைக் குறித்து எச்சரிப்பவராய் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15-21) எவ்வளவு மிகுதியாக பொருளுடைமைகள் இருந்தாலும் அவை எவ்வளவு மதிப்புள்ளவையாக இருந்தாலும் அவை நம் உயிருக்கு உத்தரவாதமளிக்க முடியாது.
உதாரணமாக, லிஸ் என்ற பெண் பெரும் பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “எங்களுக்கு ஓர் அழகான வீடும், இரண்டு கார்களும் இருந்தன. பணத்தால் இந்த உலகத்தில் கிடைக்கும் எதையும் அனுபவிக்கும் அளவுக்கு பொருளாதார வசதியிருந்தது. . . . ஆனால் நானோ இன்னமும் பணத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.” அவள் மேலும் விளக்குகிறாள்: “இழப்பதற்கு எங்களிடம் ஏராளம் இருந்தன. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைவான பாதுகாப்பே இருப்பதாக தோன்றுகிறது.”
பேரும் புகழும் பாராட்டையும் கெளரவத்தையும் கொண்டுவருவதாலும் அநேகர் அதை மிக உயர்வாக மதிக்கிறார்கள். இன்றைய உலகில், வெற்றி தரும் வாழ்க்கைத் தொழில் மற்றவரின் பொறாமைக்கு காரணமாகும் சாதனையாகிவிடுகிறது. விசேஷ திறமைகளை வளர்த்துக்கொள்வதால் நாம் பிரபலமாகலாம். நாலுபேர் நம்மை பாராட்டலாம், நம்முடைய கருத்துக்களை உயர்வாக மதிக்கலாம், நம் தயவை நாடி வரலாம். இதெல்லாமே நமக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கலாம். ஆனால் எல்லாம் கடைசியில் மறைந்துவிடுகிறது. ஒரு ராஜாவாக சாலொமோனுக்கு எல்லா மகிமையும் அதிகாரமும் இருந்தது. ஆனால் அவர் இவ்வாறு புலம்பினார்: “ஞானிகளையோ மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர்.” (பிரசங்கி 2:16, பொ.மொ.) பேரும் புகழும் ஒருவருக்கு உயிரைக் கொடுக்காது.
செலோ என்ற சிற்பி, பெயரையும் புகழையும்விட பெரும் மதிப்புமிக்க ஒன்று இருப்பதை புரிந்துகொண்டார். சிற்ப வேலை அவருக்கு கைவந்த கலையாக இருந்ததால் தன் திறமைகளை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கான பள்ளியில் சேர தகுதி பெற்றார். செய்தித்துறையும் கலை விமர்சகர்களும் இவரது படைப்புகளை புகழ்ந்து தள்ளினார்கள். இவருடைய சிற்பங்கள் பல ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் காட்சி பொருளாக வைக்கப்பட்டன. செலோ இவ்வாறு கூறுகிறார்: “ஒரு காலத்தில் கலையே என் வாழ்க்கையில் உயிர்மூச்சாக இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டால் அது இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்வதைப் போல இருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். (மத்தேயு 6:24) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதே நான் செய்ய முடிந்த மிக முக்கியமான வேலை என்பதை உறுதியாக நம்பினேன். ஆகவே ஒரு சிற்பியாக இருக்கும் என் தொழிலை விட்டுவிட நானே தீர்மானித்தேன்.”
பெரும் மதிப்புமிக்கது எது?
உயிரில்லாவிட்டால் எதற்குமே அர்த்தமோ மதிப்போ இல்லை என்பதால், நாம் தொடர்ந்து உயிர்வாழ உத்தரவாதம் அளிக்கத்தக்கதாக எதை நாம் பெற்றுக் கொள்ளலாம்? எல்லா உயிருக்கும் ஊற்றுமூலர் யெகோவா தேவனே. (சங்கீதம் 36:9) ஆம், “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:28) அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை பரிசாக அளிக்கிறார். (ரோமர் 6:23) இந்தப் பரிசுக்கு தகுதி பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
யெகோவாவோடு நெருங்கிய உறவை காத்துக்கொள்வதிலேயே நித்திய ஜீவனாகிய பரிசு சார்ந்திருக்கிறது. ஆகவே நம்மிடமுள்ள எதையும்விட பெரும் மதிப்புமிக்கது அவருடைய தயவு. அந்த தயவு நமக்கு கிடைத்தால் உண்மையான, நித்திய சந்தோஷத்தைப் பெறும் நம்பிக்கை நமக்கு இருக்கும். ஆனால் அவருடைய தயவு கிடைக்காவிட்டால் நாம் நித்திய அழிவையே எதிர்ப்படுவோம். அப்படியென்றால், யெகோவாவோடு நல்ல உறவை காத்துக்கொள்ள நமக்கு உதவும் எதுவும் ஈடற்ற மதிப்புமிக்கது.
நாம் என்ன செய்ய வேண்டும்
நம்முடைய வெற்றி, அறிவைப் பெற்றுக்கொள்வதையே சார்ந்திருக்கிறது. யெகோவாவின் வார்த்தையாகிய பைபிள் திருத்தமான அறிவின் ஊற்றுமூலம். அது மட்டுமே கடவுளை பிரியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்கிறது. ஆகவே நாம் பைபிளை கவனமாக படிப்பது அவசியம். யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி நம்மால் முடிந்த அனைத்தையும் அறிந்துகொள்ள ஊக்கமாக முயன்றால் ‘நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தும் அறிவை’ பெற்றுக்கொள்ளலாம். (யோவான் 17:3, NW) இப்படிப்பட்ட அறிவு நாம் போற்றி காக்க வேண்டிய பொக்கிஷம்!—நீதிமொழிகள் 2:1-5.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் பெறும் அறிவு அடுத்த அடி எடுத்து வைக்க நமக்கு உதவும். அதுவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும். அனைவரும் தம்மிடம் இயேசுவின் மூலமாகவே வர வேண்டுமென யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். (யோவான் 14:6) உண்மையில், “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) நாம் ‘வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், . . . கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே’ மீட்கப்படுகிறோம். (1 பேதுரு 1:18, 19) இயேசுவின் உபதேசங்களின்மீது நம்பிக்கை வைத்து அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்ட வேண்டும். (எபிரெயர் 12:1-3; 1 பேதுரு 2:21) அவருடைய பலி எவ்வளவு மதிப்புமிக்கது! மனிதகுலம் முழுவதன் நித்திய எதிர்காலமும் அதன் நன்மைகளைப் பொருத்துவதில் சார்ந்திருக்கிறது. நமக்காக அது பொருத்தப்படும்போது உண்மையிலேயே பெரும் மதிப்புமிக்க பரிசாகிய நித்திய ஜீவனை நாம் பெறுவோம்.—யோவான் 3:16.
இயேசு இவ்வாறு கூறினார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37) யெகோவாவிடத்தில் அன்புகூருவதென்பது ‘அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே.’ (1 யோவான் 5:3) இவ்வுலகிலிருந்து விலகியிருப்பது, நேர்மையான நடத்தையைக் காத்துக்கொள்வது, அவருடைய ராஜ்யத்தை முழுமையாக ஆதரிப்பது ஆகியவை அவருடைய கட்டளைகளாகும். இப்படித்தான் நாம் மரணத்துக்குப் பதிலாக “ஜீவனைத் தெரிந்து” கொள்கிறோம். (உபாகமம் 30:19) நாம் ‘தேவனிடத்தில் நெருங்கிவந்தால் அவர் நம்மிடத்தில் நெருங்கிவருவார்.’—யாக்கோபு 4:8, NW.
கடவுளுடைய தயவைப் பெறும் உறுதி உலகிலுள்ள எல்லா பொக்கிஷங்களைக் காட்டிலும் பெரும் மதிப்புமிக்கதாகும். அவருடைய தயவைப் பெற்றவர்களே உலகில் பெரும் செல்வ சீமான்கள்! அப்படியென்றால், உண்மையான மதிப்புள்ள பொக்கிஷமாகிய யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள பாடுபடுவோமாக. அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியை மனதார ஏற்றுக்கொள்வோமாக: “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்.”—1 தீமோத்தேயு 6:11, 12.
[பக்கம் 21-ன் படங்கள்]
எதை நீங்கள் பெரும் மதிப்புள்ளதாக கருதுகிறீர்கள்? பணத்தையா, பொருளுடைமைகளையா, பெயரையும் புகழையுமா, அல்லது வேறு எதையாவதா?
[பக்கம் 23-ன் படம்]
நாம் பைபிளை கவனமாக படிப்பது அவசியம்