உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 11/15 பக். 4-7
  • அர்த்தமுள்ள வாழ்க்கை சாத்தியமே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அர்த்தமுள்ள வாழ்க்கை சாத்தியமே!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பணத்திற்கும் இன்பத்திற்கும் தனி இடம் உண்டு
  • பெயரைச் சம்பாதிப்பது முக்கியமா?
  • கலாபூர்வ சாதனைகள், மனிதாபிமான செயல்கள் —திருப்தியளிப்பதில்லை
  • பூர்த்தி செய்தே ஆகவேண்டிய இயல்பான ஒரு தேவை
  • எது உண்மையான மதிப்புள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • திருப்தியான வாழ்க்கை—இன்றும் என்றும்!
    திருப்தியான வாழ்க்கைக்கு வழி
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 11/15 பக். 4-7

அர்த்தமுள்ள வாழ்க்கை சாத்தியமே!

ப ணத்திற்காகவும் பணத்தால் வாங்க முடிந்தவற்றிற்காகவுமே பலர் வாழ்கிறார்கள். சிலர், இவ்வுலகில் பெயரைச் சம்பாதிக்க வேண்டுமென வாழ்கிறார்கள். இன்னும் சிலர், தங்கள் கலைத் திறன்களை விருத்தி செய்வதற்காக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அநேகருக்கு தாங்கள் ஏன், எதற்காக வாழ்கிறார்கள் என்றே தெரிவதில்லை.

உங்களைப்பற்றி என்ன? நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் என்பதைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக மக்கள் நாடித்தேடும் சில இலட்சியங்கள், நிஜமாகவே எதையோ சாதித்த உணர்வையும் திருப்தியையும் அளிக்கின்றனவா என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாமா? வாழ்க்கையை உண்மையில் அர்த்தமுள்ளதாக்குவது எது?

பணத்திற்கும் இன்பத்திற்கும் தனி இடம் உண்டு

பிரசங்கி 7:12-ல் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” ஆம், திரவியம், அதாவது பணம், மதிப்புள்ளதுதான். நாம் வாழ்வதற்கு பணம் அவசியமே. அதுவும் ஒரு குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருந்தால் பணம் ரொம்பவே அவசியம்.—1 தீமோத்தேயு 5:8.

பணம் இல்லை என்றால் வாழ்க்கையில் சில இன்பங்களை நம்மால் அனுபவிக்க முடியாதுதான். கிறிஸ்தவத்தை தோற்றுவித்தவராகிய இயேசு கிறிஸ்து, தனக்கென்று தலை சாய்க்க ஓர் இடம் இல்லை என்று ஒத்துக்கொண்டது உண்மையே. ஆனாலும், சிறந்த உணவையும் திராட்சை மதுவையும் அவர் அவ்வப்போது அனுபவித்து மகிழ்ந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, விலையுயர்ந்த வஸ்திரத்தையும் அவர் உடுத்தியிருக்கிறார்.—மத்தேயு 8:20; யோவான் 2:1-11; 19:23, 24.

ஆனால், இன்பங்களைத் தேடுவதையே முக்கிய குறியாக வைத்து இயேசு வாழவில்லை. எந்த விஷயத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதை அவர் தெளிவாக வரையறுத்திருந்தார். “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு சொன்னார். அதற்குப் பிறகு ஐசுவரியமுள்ள ஒருவனைப் பற்றிய உவமையைச் சொன்னார். அவனுடைய நிலம் அதிக விளைச்சலைத் தந்தபோது அவன் தனக்குள்ளே இப்படி யோசித்துப் பார்க்கிறான்: “நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; . . . என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்.” இந்த மனிதன் இப்படிச் சிந்தித்ததில் என்ன தவறு இருந்தது? அந்த உவமை தொடர்ந்து சொல்வதாவது: “தேவனோ அவனை [ஐசுவரியவானை] நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.” அந்த மனிதன் தன் விளைச்சலைச் சேகரித்து வைத்தாலும், அவன் இறந்துபோன பிறகு அதை அனுபவிக்க முடியாதே. இந்த உவமையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இயேசு முடிவாகத் தெரிவித்த பாடம் இதுதான்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:13-21.

நமக்கு ஓரளவு பணம் தேவைதான். அதேசமயம், ஓரளவுக்கு இன்பத்தையும் நாம் அனுபவிக்கலாம். ஆனால், பணத்திற்கோ இன்பத்திற்கோ நம் வாழ்க்கையில் ஒருபோதும் மிக முக்கியமான இடத்தைக் கொடுக்க முடியாது. தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இருப்பது, அதாவது, கடவுளுடைய தயவைப் பெறும் வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.

பெயரைச் சம்பாதிப்பது முக்கியமா?

அநேகர் தங்களுக்கென ஒரு பெயரைச் சம்பாதிப்பதை இலட்சியமாக வைத்திருக்கிறார்கள். பெயர் சம்பாதிப்பதில், மற்றவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை. “பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது” என்கிறது பைபிள்.—பிரசங்கி 7:1.

சொல்லப்போனால், ஒருவருடைய மரண நாளன்று அவருடைய வாழ்க்கை சரிதையே எழுதப்படுகிறது எனலாம். நல்ல காரியங்களை அவர் வாழ்க்கையில் சாதித்திருந்தால், அவருடைய மரண நாள் அவருடைய பிறந்த நாளைவிட மேலானது. ஏனென்றால், பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்குமென தீர்மானிக்கப்படவில்லையே.

பிரசங்கி புத்தகத்தை எழுதியவர் அரசனாகிய சாலொமோன். அவருடைய ஒன்றுவிட்ட அண்ணனாகிய அப்சலோம் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ள முயன்றான். அவனுடைய மூன்று மகன்கள் வழியாகத்தான் அவனுடைய பெயர் நிலைத்திருக்க வாய்ப்பிருந்தது. என்றாலும், அவர்கள் சிறு வயதிலேயே இறந்துபோனார்கள். ஆகவே, அப்சலோம் என்ன செய்தான்? வேத வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன: “என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்.” (2 சாமுவேல் 14:27; 18:18) அந்தத் தூணின் எஞ்சிய பகுதிகள் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அப்சலோம் என்ன பெயரைப் பெற்றிருக்கிறான்? தன் தந்தையாகிய தாவீதின் சிங்காசனத்தைப் பறித்துக்கொள்ள சதி திட்டம் தீட்டிய பெயர்போன கலகக்காரனாகவே பைபிளைப் படிப்பவர்கள் அவனைத் தெரிந்துகொள்கிறார்கள்.

இந்தக் காலத்தில் அநேகர், தங்களுடைய சாதனைகளுக்காக மற்றவர்கள் தங்களை நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறார்கள். காலத்தால் மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை உடைய மக்களின் பார்வையில் பெயர் பெற்றவராய் விளங்கவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், அப்படிப்பட்ட புகழும் கீர்த்தியும் எதில் முடிவடைகிறது? த கல்சர் ஆஃப் நார்ஸஸிஸம் என்ற புத்தகத்தில் கிறிஸ்டஃபர் லாஷ் இவ்வாறு எழுதுகிறார்: “இப்பொழுதெல்லாம் இளமை, மிடுக்கு, புதுமை ஆகியவற்றை வைத்தே பெரும்பாலும் ஒருவருடைய வெற்றி எடைபோடப்படுகிறது; இவ்வாறு கிடைக்கும் பெயரும் புகழும் நெடுநாள் நிலைத்திருப்பதுமில்லை; அப்படியே மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களும், பெற்ற பெயரை எங்கே இழந்துவிடுமோ என்று ஓயாமல் கவலைப்படுகிறார்கள்.” இதனால், பிரபலமானவர்கள் பலரும் போதைபொருள்களையும் மதுபானத்தையும் நாடி பெரும்பாலும் அகால மரணம் அடைகிறார்கள். பெயரைத் தேடுவது உண்மையில் பயனற்றதாகவே இருக்கிறது.

அப்படியானால், யாருடைய பார்வையில் நற்பெயரைச் சம்பாதிக்க வேண்டும்? தம்முடைய நியாயப்பிரமாண சட்டங்களைக் கடைப்பிடித்து வந்த சிலரைக் குறித்து யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலமாக இவ்வாறு சொன்னார்: “என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; . . . சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.” (ஏசாயா 56:4, 5, பொது மொழிபெயர்ப்பு) கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால், அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கென்று ‘ஒரு நினைவுச்சின்னமும் சிறந்ததொரு பெயரும்’ இருக்கும். அவர்கள் ஒருபோதும் அழியாதபடி அவர்களுடைய பெயரைக் கடவுள் ‘என்றென்றும்’ நினைவுகூருவார். அப்படிப்பட்ட ஒரு பெயரைச் சம்பாதிக்க வேண்டுமென்றே பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஆம், நம்முடைய படைப்பாளராகிய யெகோவாவின் பார்வையில் சிறந்ததொரு நற்பெயரைச் சம்பாதிப்பது அவசியம்.

உண்மையுள்ளவர்கள் பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் சமயத்தைக் குறித்து ஏசாயா அந்தத் தீர்க்கதரிசனத்தில் உரைத்தார். பூங்காவனம் போன்ற அந்த பரதீஸில் ‘நித்திய ஜீவனை’ பெறுவதுதான் ‘உண்மையான வாழ்க்கை’; மனிதரைப் படைத்தபோது அவர்களுக்காக கடவுள் மனதில் வைத்திருந்த வாழ்க்கை அதுவே. (1 தீமோத்தேயு 6:12, 19; பொ.மொ.) தற்காலிகமான, திருப்தியற்ற வாழ்க்கையை வாழ்வதற்கு மாறாக நித்திய ஜீவனை நாம் தேடுவதல்லவா மேல்?

கலாபூர்வ சாதனைகள், மனிதாபிமான செயல்கள் —திருப்தியளிப்பதில்லை

அநேக கலைஞர்கள், தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு கலையின் சிகரமென்று தாங்கள் கருதும் உயரத்தை எட்டவே விரும்புகிறார்கள். அதைச் செய்வதற்கு தற்போதைய ஆயுசு காலம் மிகவும் குறுகியது. முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கலைஞராகிய ஹீடியோ 90 வயதைத் தாண்டிய பிறகும் தன் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்காகப் பாடுபட்டார். தன் சொந்த படைப்பில் திருப்தி காணும் நிலையை ஒரு கலைஞர் எட்டினாலும், இளமையின் துடிப்பும் ஆரோக்கியமும் இருந்த சமயத்தில் அவரால் செய்ய முடிந்த அளவுக்கு இப்போது அவரால் செய்ய முடிவதில்லை. ஆனால், அவருக்கு நித்தியகால ஜீவன் இருந்தால்? அவரது கலைத் திறன்களில் கரைகாண்பதற்கு எத்தனை அநேக வாய்ப்புகள் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!

மனிதாபிமான செயல்களைக் குறித்து என்ன சொல்லலாம்? ஏழைகளுக்கு இரங்கி, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரென்றால் அது பாராட்ட வேண்டிய விஷயம்தான். “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 20:35) மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவது அதிக திருப்தி அளிப்பதாக இருக்கலாம். ஆனாலும், ஒருவர் அதற்காக தன் முழு வாழ்க்கையை அர்ப்பணித்தாலும் அவரால் எவ்வளவுதான் சாதிக்க முடியும்? மற்றவர்களுடைய வேதனைகளைப் போக்குவதைப் பொறுத்தவரையில் மனிதர்களாகிய நம்மால் ஓரளவிற்கே உதவி செய்ய முடியும். பொருள் அளவில் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி செய்ய முடியாத வேறொரு அடிப்படை தேவை மனிதனுக்கு உள்ளது. இதற்கு அநேகர் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. எனவே, அது திருப்தி செய்யப்படாமலே விடப்படுகிறது. அது என்ன தேவை?

பூர்த்தி செய்தே ஆகவேண்டிய இயல்பான ஒரு தேவை

பிறப்பிலிருந்து இயல்பாகவே அமைந்துள்ள ஓர் அடிப்படை தேவையைக் குறித்து இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் சுட்டிக் காண்பித்தார். அவர் சொன்னார்: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், ஏனென்றால், பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5:3, NW) அப்படியென்றால், மெய்யான சந்தோஷம் என்பது செல்வம், புகழ், கலாபூர்வ சாதனைகள், மனிதாபிமான செயல்கள் ஆகியவற்றைப் பொறுத்ததல்ல என்றே பைபிள் சொல்கிறது. மாறாக, அது நம் ஆன்மீகத் தேவையை திருப்தி செய்வதை, அதாவது, கடவுளை வணங்க வேண்டும் என்ற உணர்வைப் பூர்த்தி செய்வதைச் சார்ந்துள்ளது.

படைப்பாளரை அறியாதவர்கள் அவரைத் தேடும்படி அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். பவுல் இவ்வாறு சொன்னார்: “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”—அப்போஸ்தலர் 17:26-28.

மெய்யான கடவுளை வணங்க வேண்டும் என்ற உணர்வைப் பூர்த்தி செய்வதே வாழ்க்கையில் மெய்யான சந்தோஷத்தைப் பெறுவதற்கு வழி. நம் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்வது, ‘உண்மையான வாழ்க்கையை’ அனுபவிப்பதற்கும் வழிநடத்தும். தன்னுடைய நாட்டில், டிவி நட்சத்திரமாக மக்கள் மனதில் உலாவந்த டரீஸா என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தனது ஒரு மணி நேர நாடகத் தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை இவர் என்பதால் மிகவும் பிரபலமடைந்தார். சீக்கிரத்தில் இவை அனைத்தையும் விட்டுவிட்டார். ஏன்? “கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை” என்றார் அவர். செக்ஸையும் வன்முறையையும் சிறப்பித்துக் காட்டும் டெலிவிஷன் தொடரில் நடிப்பதன்மூலம் கடவுளுடன் தனக்கிருக்கும் உறவைக் கெடுத்துக்கொள்ள டரீஸா விரும்பவில்லை. மக்கள் பார்வையில் டிவி நட்சத்திரமாக அவர் இனியும் ஜொலிக்கவில்லை. ஆனால், உண்மையிலேயே திருப்தி அளிக்கும் ஒரு வாழ்க்கை பாதையில் அடியெடுத்து வைத்தார். எப்படியெனில், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை முழுநேரமாகப் பிரசங்கித்து, மற்றவர்களும் கடவுளிடம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவி செய்தார்.

டரீஸா நடிப்பதை நிறுத்த தீர்மானித்தபோது, அவளுடன் வேலை பார்த்த ஒருவர் இவ்வாறு சொன்னாராம்: “வெற்றிகரமான ஒரு தொழிலை தூக்கி எறிந்துவிட்டு போகிறாரே என நான் மிகவும் விசனப்பட்டேன். ஆனால், அவரோ உண்மையிலேயே அதைவிட அதிக முக்கியமான ஒன்றை, அதிக திருப்தி தரும் ஒன்றை கண்டுபிடித்திருக்க வேண்டும்.” டரீஸா பின்னர் ஒரு விபத்தில் இறந்துபோனார். முன்பு டரீஸாவைக் குறித்து அப்படிச் சொன்ன நபர் அவரது மரணத்திற்குப் பின் இவ்வாறு சொன்னார்: “அவர் சந்தோஷமாக இருந்தார். வாழ்கையில் அதைவிட வேறென்ன தேவை? நம்மில் எத்தனை பேரால் அப்படிச் சொல்ல முடியும்?” கடவுளுடன் தங்களுக்கிருக்கும் உறவை முதலிடத்தில் வைத்திருப்பவர்கள், மரணமடைந்தாலும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் உயிர்த்தெழுதலைப் பெறும் அருமையான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.—யோவான் 5:28, 29.

பூமிக்கும் அதிலிருக்கும் மனிதகுலத்திற்கும் படைப்பாளர் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். இந்த நோக்கத்தை நீங்கள் புரிந்துகொண்டு, பூமியில் பரதீஸான நிலைமையில் நித்திய ஜீவனை அனுபவிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (சங்கீதம் 37:10, 11, 29) வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவைப் பற்றியும் அவர் உங்களுக்காக வைத்திருக்கும் நோக்கத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு இதுவே காலம். இந்த அறிவைப் பெற்றுக்கொள்ள உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்ய ஆவலாய் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு எழுதுங்கள்.

[பக்கம் 5-ன் படம்]

இயேசுவின் உவமையில், அந்த ஐசுவரியவான் சிந்தித்த விதத்தில் என்ன தவறு இருந்தது?

[பக்கம் 7-ன் படம்]

பரதீஸாக மாறப்போகும் பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்க விரும்புகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்