உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைதல்
“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.”—சங்கீதம் 150:6.
1. அர்த்தமுள்ள வாழ்க்கையை கண்டடைய விரும்பிய ஓர் இளைஞரைப்பற்றி சொல்லுங்கள்.
“ம க்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற இலட்சியத்திலேயே நான் மருத்துவம் பயின்றேன். டாக்டர் என்ற அந்தஸ்தும் கைநிறைய பணமும் எனக்கு சந்தோஷத்தைத் தருமென்றும் நினைத்தேன்” என சொல்கிறார் கொரியாவில் வளர்ந்த சங் ஜின்.a “ஒரு டாக்டரால் மற்றவர்களுக்கு ஓரளவுக்குத்தான் உதவ முடியும் என்பதை அறிந்தபோது ஏமாற்றமடைந்தேன். அதன் பிறகு ஓவியக்கலையைப் பயிலத் துவங்கினேன்; ஆனால் நான் வரைந்த ஓவியங்களால் மற்றவர்களுக்குப் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. எனக்கு மட்டுமே சந்தோஷத்தைத் தந்த வேலையைச் செய்ததால் சுயநலக்காரனென்று என்னை நானே நொந்துகொண்டேன். பிறகு, ஆசிரியர் பணியில் ஈடுபட்டேன். இந்த வேலையில், மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்களை என்னால் சொல்லிக்கொடுக்கத்தான் முடியுமே தவிர, உண்மையான சந்தோஷத்தை அடைவதற்கு வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதைச் சீக்கிரத்திலேயே உணர்ந்தேன்” எனவும் அவர் சொல்கிறார். அநேக ஆட்களைப்போல சங் ஜின்னும் உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைய விரும்பினார்.
2. (அ) அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது எதைக் குறிக்கிறது? (ஆ) கடவுள் நம்மை ஒரு நோக்கத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
2 உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, ஒரு குறிக்கோளோடு வாழ்வதையும் திட்டவட்டமான இலக்கு வைத்து வாழ்வதையும் அதற்காக முயற்சி எடுப்பதையும் குறிக்கிறது. மனிதரால் நிஜமாகவே அத்தகைய வாழ்க்கையை வாழ முடியுமா? நிச்சயமாக முடியும்! புத்தி, மனசாட்சி, பகுத்தறியும் திறமை ஆகியவற்றை நாம் பெற்றிருப்பதுதானே படைப்பாளர் நம்மை பூமியில் வாழ வைத்திருப்பதற்கு ஒரு நல்ல நோக்கமிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அப்படியானால் நியாயமாகவே, அந்தப் படைப்பாளருடைய நோக்கத்திற்கு இசைவாக வாழும்போது மட்டும்தான் உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையை கண்டடையவும் முடியும், வாழவும் முடியும்.
3. மனிதரைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தில் உட்பட்டிருப்பவை யாவை?
3 நம்மைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தில் பல விஷயங்கள் உட்பட்டிருப்பதாக பைபிள் தெரிவிக்கிறது. உதாரணமாக, நாம் அற்புதமாய்ப் படைக்கப்பட்டிருப்பதுதானே கடவுளுடைய தன்னலமற்ற அன்பின் வெளிக்காட்டாகும். (சங்கீதம் 40:5; 139:14) ஆகவே, கடவுளுடைய நோக்கத்தின்படி வாழ்வதென்பது கடவுளைப்போல தன்னலமற்ற விதத்தில் பிறரிடம் அன்பு காட்டுவதைக் குறிக்கிறது. (1 யோவான் 4:7-11) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும் இது குறிக்கிறது; இக்கட்டளைகள் அவருடைய அன்பான நோக்கத்திற்கு இசைவாக வாழ நமக்கு உதவுகின்றன.—பிரசங்கி 12:13; 1 யோவான் 5:3.
4. (அ) உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைவதற்கு எது அவசியம்? (ஆ) வாழ்க்கையில் ஒருவர் அடைய முடிந்த மிக உயர்ந்த இலட்சியம் என்ன?
4 மனிதர் ஒருவரோடொருவரும் மற்ற படைப்புகளோடும் சந்தோஷமாக, சமாதானமாக வாழ்வதும்கூட கடவுளுடைய நோக்கத்தில் உட்பட்டிருந்தது. (ஆதியாகமம் 1:26; 2:15) அப்படியானால், சந்தோஷமாயும் பாதுகாப்பாயும் சமாதானமாயும் வாழ நாம் செய்ய வேண்டியதென்ன? பெற்றோர் அருகில் இருப்பதை ஒரு குழந்தை அறியும்போது அது சந்தோஷமாயும் பாதுகாப்பாயும் உணருகிறது. அதுபோல, உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைவதற்கு நாமும்கூட நம் பரலோகத் தகப்பனிடம் நல்ல பந்தத்தை வைத்திருப்பது அவசியம். (எபிரெயர் 12:9) அதற்கு அவர் வாய்ப்பளிக்கிறார்; தம்மிடம் நெருங்கிவர நம்மை அனுமதிப்பதன் மூலமும் நம் ஜெபங்களைக் கேட்பதன் மூலமும் அதற்கு வாய்ப்பளிக்கிறார். (யாக்கோபு 4:8; 1 யோவான் 5:14, 15) நாம் விசுவாசத்தோடு ‘கடவுளுடன் நடந்து’ அவருடைய நண்பர்களாகும்போது, நம் பரலோகத் தகப்பனை சந்தோஷப்படுத்தவும் துதிக்கவும் முடியும். (ஆதியாகமம் 6:9, NW; நீதிமொழிகள் 23:15, 16; யாக்கோபு 2:23) இதுவே வாழ்க்கையில் ஒருவர் அடைய முடிந்த மிக உயர்ந்த இலட்சியமாகும். “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 150:6.
உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன?
5. சொத்துப்பத்துக்கு முதலிடம் கொடுப்பது ஏன் ஞானமற்றது?
5 நம்மையும் நம் குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்வது, நம்மைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தின் ஒரு பாகமாகும். நம் சரீர தேவைகளையும் ஆன்மீக தேவைகளையும் கவனிப்பது இதில் உட்பட்டிருக்கிறது. என்றாலும், இவ்விஷயத்தில் சமநிலை அவசியம். அப்போதுதான், பொருள் சம்பந்தமான காரியங்களும் நாட்டங்களும் அதிமுக்கியமான ஆன்மீக காரியங்களை பின்னுக்குத் தள்ளிவிடாதபடி பார்த்துக்கொள்ள முடியும். (மத்தேயு 4:4; 6:33) வருத்தகரமான விஷயம் என்னவெனில், அநேகர் சொத்துப்பத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இருந்தாலும், வெறும் சொத்துப்பத்தை வைத்தே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய நினைப்பது ஞானமற்ற செயலாகும். ஆசியாவிலுள்ள கோடீஸ்வரர்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டுவது என்னவென்றால், அநேகர் “தங்களிடமுள்ள செல்வத்தால் ஒருபக்கம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தையும், சாதனை உணர்வையும் அனுபவித்தாலும்கூட மறுபக்கம் பாதுகாப்பற்ற உணர்ச்சியையும் மனக்கலக்கத்தையும் அனுபவிக்கிறார்கள்.”—பிரசங்கி 5:11.
6. செல்வத்தை நாடுவது சம்பந்தமாக இயேசு என்ன ஆலோசனை கொடுத்தார்?
6 ‘ஐசுவரியத்தின் மயக்கத்தைப்’பற்றி இயேசு குறிப்பிட்டார். (மாற்கு 4:18) ஐசுவரியம் அதாவது, செல்வம் மயக்கும் தன்மையுள்ளதென எப்படிச் சொல்லலாம்? எக்கச்சக்கமான செல்வமிருந்தால் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கமுடியும் என்பதுபோன்ற தோற்றத்தை அது தருகிறது; ஆனால் உண்மையில் அப்படியில்லை. “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என ஞானியாகிய சாலொமோன் ராஜா குறிப்பிட்டார். (பிரசங்கி 5:10) ஆனால், ஒருவர் செல்வத்தைக் குவிப்பதை இலக்காக வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் கடவுளையும் முழு ஆத்துமாவோடு சேவிக்க முடியுமா? முடியவே முடியாது. அதை இயேசு இவ்வாறு விளக்கினார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.” பூமியிலே சொத்துப்பத்தைச் சேர்த்து வைக்கும்படி அல்ல, ஆனால் ‘பரலோகத்திலே பொக்கிஷங்களை’ சேர்த்து வைக்கும்படியே இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுறுத்தினார். இது கடவுளிடத்தில் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்வதை அர்த்தப்படுத்துகிறது; ஏனென்றால் ‘நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று கடவுள் அறிந்திருக்கிறார்.’—மத்தேயு 6:8, 19-25.
7. “உண்மையான வாழ்வைப்” பற்றிக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
7 தன் சக ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் இதன் சம்பந்தமாக உறுதியான ஆலோசனை கொடுத்தார். தீமோத்தேயுவிடம் அவர் இவ்வாறு சொன்னார்: ‘இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் . . . நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், . . . தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் [“உண்மையான வாழ்வை,” NW] பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.’—1 தீமோத்தேயு 6:17-19.
‘உண்மையான வாழ்வு’—அது என்ன?
8. (அ) செல்வத்தையும் அந்தஸ்தையும் அடைவதில் அநேகர் ஏன் குறியாய் இருக்கிறார்கள்? (ஆ) அவர்கள் எதைப் புரிந்துகொள்வதில்லை?
8 ‘உண்மையான வாழ்வு’ என்றாலே ஆடம்பரமும் ஆனந்தமுமான வாழ்க்கைதான் பெரும்பாலோருடைய மனத்திரையில் நிழலிடுகிறது. ஓர் ஆசியச் செய்திப் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “திரைப்படங்களை அல்லது டிவியைப் பார்ப்பவர்கள், தாங்கள் பார்ப்பதையெல்லாம் விரும்பக் கற்றுக்கொள்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று கனவு காணவும் கற்றுக்கொள்கிறார்கள்.” செல்வத்தைக் குவிப்பதையும் அந்தஸ்தைப் பெறுவதையுமே வாழ்க்கை இலட்சியமாக அநேகர் வைக்கிறார்கள். இவற்றை அடைவதற்காக, பலர் தங்களுடைய இளமையையும், ஆரோக்கியத்தையும் குடும்ப வாழ்க்கையையும் ஆன்மீக நெறிகளையும் தொலைத்திருக்கிறார்கள். ஆடம்பரமும் ஆனந்தமுமான வாழ்க்கையைச் சித்தரிக்கும் காட்சிகள் எல்லாம் ‘உலகத்தின் ஆவியை’ அல்லது மனப்பான்மையைப் பிரதிபலிக்கின்றன என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலோரின் சிந்தனையை ஆட்டிப்படைக்கும் இந்த மனப்பான்மை, மனிதரைக் குறித்த கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட அவர்களைத் தூண்டுகிறது. (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2) ஆகவே, இன்று அநேகர் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை!—நீதிமொழிகள் 18:11; 23:4, 5.
9. மனிதரால் எதை ஒருபோதும் சாதிக்க முடியாது, ஏன்?
9 பிறருடைய நலனுக்காக உழைப்பவர்களை அதாவது பசி, நோய், அநீதி ஆகியவற்றை ஒழிப்பதற்காக தன்னலமின்றி பாடுபடுகிறவர்களைக் குறித்து என்ன சொல்லலாம்? தங்களையே தியாகம் செய்து அவர்கள் எடுக்கிற மெச்சத்தக்க முயற்சிகளால் பலரும் நன்மை அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்தாலும்கூட, இந்த உலகை நீதியுள்ள ஓர் உலகமாக மாற்றவே முடியாது. ஏன்? ஏனென்றால், உண்மையில் இந்த ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [சாத்தானுக்குள்] கிடக்கிறது’; அதைச் சரிப்படுத்த அவன் விரும்புவதில்லை.—1 யோவான் 5:19.
10. “உண்மையான வாழ்வை” கிறிஸ்தவர்கள் எப்போது அனுபவித்து மகிழ்வார்கள்?
10 எதிர்காலத்திற்கான எந்த நம்பிக்கையும் இல்லாமல் இந்தத் தற்போதைய வாழ்க்கையையே ஒருவர் பெரிதாகக் கருதுவாரென்றால், அது எவ்வளவு வருத்தத்திற்குரிய விஷயம்! “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” என பவுல் எழுதினார். இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றிருப்போரின் மனப்பான்மை “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்பதே. (1 கொரிந்தியர் 15:19, 32) ஆனால், ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. ஆம், “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று [நாம்] காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) அப்போது, கிறிஸ்தவர்கள் பரலோகத்திலோ கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான ஆட்சியின்கீழோ பரிபூரணர்களாக “உண்மையான வாழ்வை,” அதாவது “நித்திய ஜீவனை” முழுமையாக அனுபவித்து மகிழ்வார்கள்.—1 தீமோத்தேயு 6:12.
11. கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுவது ஏன் உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கிறது?
11 கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே மனிதகுலத்தின் பிரச்சினைகளை முற்றிலுமாகத் தீர்த்து வைப்பதில் வெற்றிவாகை சூடும். ஆகவே, கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுவதன்மூலம் அவருடைய சித்தத்தைச் செய்வதே உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகும். (யோவான் 4:34) அந்த வேலையில் ஈடுபடுகையில், நம் பரலோகத் தகப்பனோடு அருமையான பந்தத்தை அனுபவித்து மகிழ்கிறோம். அதுமட்டுமல்ல, இதே இலட்சியத்தோடு வாழ்கிற லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சேவை செய்யும் சந்தோஷத்தையும் நாம் பெறுகிறோம்.
சரியான தியாகங்களைச் செய்தல்
12. தற்கால வாழ்க்கையையும் ‘உண்மையான வாழ்வையும்’ வேறுபடுத்திக் காட்டுங்கள்.
12 தற்போதைய இந்த உலகமும் “அதின் இச்சையும் ஒழிந்துபோம்” என பைபிள் சொல்கிறது. இந்த சாத்தானிய உலகத்திலிருந்து கிடைக்கும் புகழ், செல்வம் என அனைத்துமே அழிந்துவிடும்; ஆனால், “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:15-17) இன்றைய உலகத்தின் நிலையற்ற செல்வம், மங்கிவிடும் புகழ், கணநேர இன்பம் ஆகியவற்றிற்கு நேர்மாறாக, ‘உண்மையான வாழ்வோ,’ அதாவது கடவுளுடைய ராஜ்யத்தில் பெறும் நித்திய ஜீவனோ நிலையானதாக இருக்கும்; நாம் சரியான தியாகங்களைச் செய்யும் பட்சத்தில், நித்திய ஜீவனைப் பெறுவதற்கு அவை அனைத்தும் தகுதியானவையே.
13. ஒரு தம்பதி எப்படிச் சரியான தியாகங்களைச் செய்தார்கள்?
13 ஹென்றி, சூஸன் தம்பதியை எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய ராஜ்யத்தை வாழ்க்கையில் முதலாவது வைக்கிற எல்லாருமே அவருடைய உதவியைப் பெறுவார்கள் என்ற கடவுளுடைய வாக்குறுதியில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. (மத்தேயு 6:33) அதனால், குறைந்த வாடகையுள்ள வீட்டில் குடியிருக்கவும் தங்களுடைய இரண்டு பெண்பிள்ளைகளுடன் ஆன்மீகக் காரியங்களில் அதிக நேரம் செலவிடவும் விரும்பினார்கள்; எனவே இருவரும் வேலைக்குப்போய் சம்பாதிப்பதற்குப் பதிலாக ஒருவர் மட்டுமே சம்பாதிக்கத் தீர்மானித்தார்கள். (எபிரெயர் 13:15, 16) சூஸனுடைய நெருங்கிய தோழிக்கு அவர்கள் ஏன் இப்படியொரு தீர்மானம் எடுத்தார்களென புரிந்துக்கொள்ள முடியவில்லை. சூஸனிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நல்ல வசதியான வீட்டில் குடியிருக்க எதையாவது தியாகம் செய்துதான் ஆக வேண்டும், சூஸன்.” என்றாலும், யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பது ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாய் இருப்பதை’ ஹென்றியும் சூஸனும் அறிந்திருந்தார்கள். (1 தீமோத்தேயு 4:8; தீத்து 2:12) அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்களும் பக்திவைராக்கியமுள்ள முழுநேர ஊழியர்களானார்கள். ஒரு குடும்பமாக, தாங்கள் எதையோ இழந்துவிட்டதாக அவர்கள் யாருமே உணருவதில்லை; மாறாக, “உண்மையான வாழ்வை” தங்களுடைய இலட்சியமாக வைத்ததன்மூலம் பெருமளவில் நன்மை அடைந்திருக்கிறார்கள்.—பிலிப்பியர் 3:8; 1 தீமோத்தேயு 6:6-8.
‘உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாதீர்கள்’
14. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை மறந்துவிடுவதால் எத்தகைய நஷ்டங்கள் ஏற்படலாம்?
14 என்றாலும், வாழ்க்கையின் அர்த்தத்தையே மறந்துவிட்டு, ‘உண்மையான வாழ்வின்’ மீதுள்ள நம் பிடியைத் தளர்த்தினால் ஆபத்துதான். ஆம், ‘இப்பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நாம் நெருக்கப்பட்டு விடுவோம்.’ (லூக்கா 8:14) பொருள் செல்வத்தின் மீதுள்ள கட்டுப்படுத்த முடியாத மோகமும் ‘வாழ்க்கைக்குரிய கவலைகளும்,’ இவ்வுலகக் காரியங்களில் மிதமிஞ்சி மூழ்கிவிடுவதற்கு வழிவகுக்கலாம். (லூக்கா 21:34, பொது மொழிபெயர்ப்பு) வருத்தகரமான விஷயம் என்னவென்றால், எப்படியும் பணக்காரராகிவிட வேண்டும் என்ற வலைக்குள் சிலர் சிக்கி, “விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” யெகோவாவோடு வைத்திருந்த அருமையான பந்தத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள். ‘நித்திய ஜீவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாததால்’ ஏற்பட்ட பெரும் நஷ்டத்தைப் பாருங்கள்!—1 தீமோத்தேயு 6:9, 10, 12; நீதிமொழிகள் 28:20.
15. இந்த ‘உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாததால்’ ஒரு குடும்பத்தினர் எப்படி நன்மை அடைந்தார்கள்?
15 “இந்த உலகத்தைப் பயன்படுத்துபவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தாதவர்கள்போல இருங்கள்” என பவுல் ஆலோசனை கொடுத்தார். (1 கொரிந்தியர் 7:31, NW) கீத், பான்னி தம்பதியர் இந்த ஆலோசனையைப் பின்பற்றத் தீர்மானித்தார்கள். கீத் இவ்வாறு சொல்கிறார்: “நான் பல் மருத்துவம் படித்து முடித்த சமயத்தில்தான் யெகோவாவின் சாட்சியாக ஆனேன். அப்போது ஒரு தீர்மானம்செய்ய வேண்டியிருந்தது. நான் நிறைய நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தால் நிறைய பணம் கிடைக்கும், ஆனால் ஆன்மீக வாழ்க்கைக்காக அதிக நேரம் செலவழிக்க முடியாமல் போகும். அதோடு, எனக்கு ஐந்து மகள்கள் இருந்தார்கள். ஆகவே, என் குடும்பத்தினருக்கு ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உதவுவதற்காக குறைவான நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத் தீர்மானித்தேன். எங்களிடம் கைநிறைய காசு இல்லாததால், நாங்கள் சிக்கனமாக வாழ கற்றுக்கொண்டோம்; அத்தியாவசியமான பொருட்கள் எங்களிடம் எப்போதும் குறைவில்லாமல் இருந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாகவும் அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தோம். பிற்பாடு, நாங்கள் எல்லாருமே முழுநேர ஊழியத்தில் இறங்கினோம். இப்போது என்னுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் கல்யாணமாகி விட்டது. மூன்று பேருக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும்கூட யெகோவாவின் நோக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதால் குடும்பமாக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.”
உங்கள் வாழ்வில் கடவுளுடைய நோக்கத்திற்கு முதலிடம் கொடுங்கள்
16, 17. திறமை படைத்த ஆட்களாக பைபிளில் குறிப்பிடப்படுகிறவர்கள் யார், அவர்கள் எப்படி அறியப்படுகிறார்கள்?
16 கடவுளுடைய நோக்கத்தின்படி வாழ்ந்தவர்களையும், வாழாதவர்களையும் பற்றிய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அதிலுள்ள பாடங்கள் வயது, கலாச்சாரம், சூழ்நிலைகள் என எந்த வித்தியாசமுமின்றி எல்லாருக்குமே பொருந்துகின்றன. (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:6, 11) நிம்ரோத் பெரிய பெரிய நகரங்களைக் கட்டினான்; ஆனால் கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராக அப்படிச் செய்தான். (ஆதியாகமம் 10:8, 9) என்றாலும், சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, மோசேயை எடுத்துக்கொள்ளலாம்; எகிப்தின் உயர்குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பது அவருடைய இலட்சியமாக இருக்கவில்லை. மாறாக, கடவுள் கொடுத்த பொறுப்புகளையே அவர் உயர்வாகக் கருதினார்; அவற்றை ‘எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் அதிக பாக்கியமானதாக’ கருதினார். (எபிரெயர் 11:26) மருத்துவராகிய லூக்கா, பவுலுக்கும் மற்றவர்களுக்கும் நோயைக் குணப்படுத்தி உதவியிருக்கலாம். ஆனால், ஒரு சுவிசேஷகராகவும் பைபிள் எழுத்தாளராகவும் இருந்ததுதான் மற்றவர்களுக்கு அவர் செய்த மிகச்சிறந்த சேவை. பவுலைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு சட்ட வல்லுநராக அல்ல, ஆனால் ஒரு மிஷனரியாக ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகவே’ அறியப்பட்டார்.—ரோமர் 11:13.
17 தாவீது, ஒரு ராணுவ தளபதியாகவோ இசைக்கலைஞராகவோ இசையமைப்பாளராகவோ அறியப்படவில்லை; மாறாக, ‘[கடவுளுடைய] இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதராகவே’ அறியப்பட்டார். (1 சாமுவேல் 13:14) தானியேலை பாபிலோனின் அரசவை அதிகாரியாக அல்ல, ஆனால் யெகோவாவுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகவே நாம் அறிந்திருக்கிறோம். எஸ்தர், பெர்சிய நாட்டு ராணியாக இருந்தபோதிலும் விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் சிறந்த முன்னுதாரணமாய் திகழ்ந்ததை நாம் அறிவோம். பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் மீன்பிடிப்பதில் திறம்பட்டவர்களாக அல்ல, இயேசுவின் அப்போஸ்தலர்களாகவே அறியப்பட்டனர். உன்னத உதாரணமாகத் திகழ்பவர், இயேசு. அவரும்கூட ஒரு ‘தச்சனாக’ அல்ல, ஆனால் ‘கிறிஸ்துவாகவே’ அறியப்படுகிறார். (மாற்கு 6:3; மத்தேயு 16:16) இவர்கள் எல்லாருமே திறமைகளையும் செல்வத்தையும் அந்தஸ்தையும் பெற்றிருந்தபோதிலும், உலகப்பிரகாரமான வேலைகள் அல்ல, கடவுளுடைய சேவையே தங்களுடைய வாழ்க்கையின் மையமாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். தேவபயமுள்ள ஆணாக அல்லது பெண்ணாக இருப்பதே வாழ்க்கையின் உன்னத நோக்கம், அதுதான் மிகுந்த பலனளிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
18. ஓர் இளம் கிறிஸ்தவர் தன்னுடைய வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்தத் தீர்மானித்தார், அவர் எதை உணர்ந்துகொண்டார்?
18 ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சங் ஜின்னும்கூட இதைப் புரிந்துகொண்டார். “என்னுடைய சக்தியை எல்லாம் மருத்துவத்திலோ, ஓவியத்திலோ, கற்பிப்பதிலோ விரயமாக்குவதற்குப் பதிலாக, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தபடி வாழத் தீர்மானித்தேன். பைபிளைக் கற்பிப்பதற்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுகிற இடத்தில் இப்போது நான் சேவை செய்து வருகிறேன்; நித்திய ஜீவ பாதையில் நடக்க மற்றவர்களுக்கு உதவுகிறேன். முழுநேர ஊழியனாக சேவை செய்வது அப்படியொன்றும் சவாலானதாக இருக்காது என ஒருசமயம் நினைத்திருக்கிறேன். ஆனால், இப்போது என் வாழ்க்கை ரொம்பவே சவால்மிக்கதாய் இருக்கிறது; ஏனெனில், என்னுடைய சுபாவத்தை மாற்ற வேண்டியிருக்கிறது, வித்தியாசமான கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும், யெகோவாவுடைய நோக்கத்தின்படி வாழ்வதே உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை என்னால் உணர முடிகிறது.”
19. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நாம் எப்படிக் கண்டுகொள்ளலாம்?
19 கிறிஸ்தவர்களாகிய நாம் உயிர்காக்கும் செய்தியையும் இரட்சிப்புக்குரிய நம்பிக்கையையும் பெற்றிருக்கிறோம். (யோவான் 17:3) அப்படியானால், நாம் ‘கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்காதிருப்போமாக.’ (2 கொரிந்தியர் 6:1, பொ.மொ.) மாறாக, நம்முடைய வாழ்க்கையின் அருமையான நாட்களையும் வருடங்களையும் யெகோவாவைத் துதிப்பதற்குப் பயன்படுத்துவோமாக. வாழ்க்கைக்கு இப்போது உண்மையான சந்தோஷத்தைத் தருவதும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவதுமான செய்தியை நாம் அறிவிப்போமாக. அவ்வாறு செய்கையில், இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் உண்மை என்பதை அறிந்துகொள்வோம்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதாவது சந்தோஷம்].” (அப்போஸ்தலர் 20:35) அதோடு, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும் கண்டுகொள்வோம்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உங்களால் விளக்க முடியுமா?
• வாழ்க்கையில் நாம் அடைய முடிந்த மிக உயர்ந்த இலட்சியம் என்ன?
• செல்வத்தைக் குவிப்பதற்காகவே வாழ்வது ஏன் ஞானமற்றது?
• கடவுள் வாக்குறுதி அளிக்கிற ‘உண்மையான வாழ்வு’ எது?
• கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய நம் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்தலாம்?
[பக்கம் 18-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் சரியான தியாகங்களைச் செய்வது அவசியம்