இன்று கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்தல்
‘பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராதபடி . . . அவர் [கிறிஸ்து] எல்லாருக்காகவும் மரித்தார்.’—2 கொரிந்தியர் 5:15.
1. ஒரு மிஷனரிக்கு கிடைத்த அனுபவத்தைக் கூறுங்கள்.
“ஆ ப்பிரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு முதன்முதலாகச் சென்ற படைத்துறைச் சாராத வாகனம் எங்களுடையதுதான்” என ஏரன் என்ற மிஷனரி சொன்னார்.a “அங்கிருந்த சிறிய சபையோடு எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் தேவையிலிருந்த அந்தச் சகோதரர்களுக்கு உதவவும் விரும்பினோம். எனவே, உணவு, உடை, பைபிள் பிரசுரங்கள் ஆகியவற்றையும், யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோ கேஸட்டையும் நாங்கள் எடுத்துச் சென்றோம்.b அங்கே, புற்களால் வேயப்பட்ட ஒரு பெரிய குடிலில் விசிஆர்-ரும் டிவியும் இருந்தன; ஆர்வமுள்ளோர் அநேகர் வீடியோவைப் பார்க்க அந்தத் ‘தியேட்டருக்கு’ திரண்டு வந்திருந்ததால், அதை இரண்டு காட்சிகளாகப் போட்டுக் காட்டினோம். அதன் விளைவாக, அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. நாங்கள் எடுத்த முயற்சிக்குத் தக்க பலன் கிடைத்தது” என்றும் அவர் சொன்னார்.
2. (அ) கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க ஏன் உறுதிபூண்டிருக்கிறார்கள்? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?
2 இந்தக் கடினமான பணியில் ஏரனும் அவருடைய தோழர்களும் ஈடுபட்டதற்குக் காரணம் என்ன? ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பலிக்கு நன்றியுள்ளவர்களாய் அவர்கள் தங்களையே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார்கள்; இப்போது தங்கள் வாழ்க்கையை கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்களைப் போலவே, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் “இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல்” ‘சுவிசேஷத்தின் நிமித்தம்’ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதிபூண்டிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:15; 1 கொரிந்தியர் 9:23) இந்தத் துன்மார்க்க உலகம் தன் இறுதி மூச்சை விடுகையில், அதன் பணம், அந்தஸ்து எல்லாமே ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே, கடவுளிடமிருந்து பெற்ற சொத்துக்களான உயிரையும் நல்லாரோக்கியத்தையும் அவருடைய நோக்கத்திற்கு இசைவாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். (பிரசங்கி 12:1) இதை நாம் எப்படிச் செய்யலாம்? அதற்கான தைரியத்தையும் பலத்தையும் நாம் எங்கிருந்து பெறலாம்? அவ்வாறு செய்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன?
படிப்படியான, நடைமுறையான படிகளை எடுத்தல்
3. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் என்ன முக்கியப் படிகள் உட்பட்டுள்ளன?
3 உண்மை கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, கடவுளுடைய சித்தத்தைச் செய்வது என்பது வாழ்நாளெல்லாம் நீடிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம், பொதுவாக பைபிளைத் தினமும் வாசிப்பது, தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சேர்வது, பிரசங்க வேலையில் ஈடுபடுவது, முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெறுவது ஆகிய முக்கியப் படிகளோடு ஆரம்பமாகிறது. அவ்வாறு முன்னேறி வருகையில் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளை நாம் மனதில் கொள்கிறோம்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.” (1 தீமோத்தேயு 4:15) இப்படித் தேறுவது தற்பெருமையை அல்ல, மாறாக தன்னலமின்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாம் உறுதிபூண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இவ்வாறு செய்வது, வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் சரியான வழியை காண்பிக்கும்படி கடவுளை அனுமதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது; நம்மால் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு சிறந்த விதத்தில் அவர் நமக்கு வழிகாட்டுகிறார்.—சங்கீதம் 32:8.
4. தேவையற்ற பயத்தை நாம் எப்படி ஓரங்கட்டலாம்?
4 என்றாலும், நம்மைப்பற்றி அளவுக்குமீறி கவலைப்படுவதோ தீர்மானமெடுக்கத் தயங்குவதோ கடவுளுக்குச் செய்யும் சேவையில் முன்னேற நமக்குத் தடையாக இருக்கலாம். (பிரசங்கி 11:4) ஆகவே, கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் சேவையில் உண்மையான சந்தோஷத்தைக் காண்பதற்கு முதலில் நம்முடைய பயத்தைப் போக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, எரிக் என்பவர் அயல்மொழி சபையில் சேவை செய்வதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால், ‘அந்தச் சபையில் உள்ளவர்களோடு என்னால் ஒத்திணங்கிப்போக முடியுமா? அந்தச் சகோதரர்களை எனக்குப் பிடிக்குமா? அவர்களுக்கு என்னைப் பிடிக்குமா?’ என நினைத்து கவலைப்பட்டார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “என்னைப் பற்றியே நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக சகோதரர்கள் மீதுதான் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதை கடைசியில் புரிந்துகொண்டேன். அநாவசியமாக கவலைப்படுவதை விட்டுவிட்டு, தன்னலமின்றி மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்தேன். உதவிக்காக ஜெபம் செய்த பிறகு, நான் போட்ட திட்டத்தின்படி செய்ய ஆரம்பித்தேன். இப்போது என் சேவையில் அளவிலா சந்தோஷத்தை நான் அனுபவித்து வருகிறேன்.” (ரோமர் 4:20, 21) ஆம், கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் நாம் எந்தளவுக்கு தன்னலமின்றி சேவை செய்கிறோமோ அந்தளவுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் காண்போம்.
5. கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்வதற்கு கவனமாகத் திட்டமிடுவது ஏன் அவசியம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
5 கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக சிறந்த முறையில் வாழ்வதற்கு நாம் காரியங்களை கவனமாகத் திட்டமிடுவதும் அவசியம். எக்கச்சக்கமாக கடன் வாங்குவதை நாம் ஞானமாகத் தவிர்க்கிறோம். ஏனென்றால், கடன் வாங்குவது இந்த உலகுக்கு நம்மை அடிமையாக்கிவிடும்; அதோடு கடவுளுடைய வேலையில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் செய்துவிடும். பைபிள் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.” (நீதிமொழிகள் 22:7) யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதும் கடவுளுடைய சேவைக்கு முன்னுரிமை கொடுப்பதும் ஆன்மீக காரியங்களில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகின்றன. உதாரணமாக, க்வாமிங் என்பவர் அவருடைய அம்மா, அக்கா, தங்கை ஆகியோருடன் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்; அப்பகுதியில் வீட்டு வாடகை அதிகம்; அதோடு நிரந்தரமான வேலை கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது. அவர்கள் பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, செலவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்; அப்படிச் செய்வதன்மூலம் அவர்களில் ஓரிருவருக்கு வேலை இல்லாத சமயத்திலும்கூட அத்தியாவசியமான காரியங்களுக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். “சில சமயங்களில் ஓரிருவருடைய சம்பளத்தை வைத்து சமாளிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், பயனியர் ஊழியத்தில் எங்களால் தொடர்ந்து ஈடுபட முடிகிறது, எங்களுடைய அம்மாவையும் நன்கு கவனித்துக்கொள்ள முடிகிறது. வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக ஆன்மீக காரியங்களை விட்டுவிடும்படி அம்மா எங்களிடம் ஒருபோதும் சொல்வதில்லை; அதை நினைக்கும்போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது” என க்வாமிங் கூறுகிறார்.—2 கொரிந்தியர் 12:14; எபிரெயர் 13:5.
6. கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய நம் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
6 நீங்கள் உலகப்பிரகாரமான காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்தால், அது பணம் சம்பாதிப்பதாக இருந்தாலும்சரி, அல்லது வேறு காரியமாக இருந்தாலும்சரி, கடவுளுடைய நோக்கத்தை முதலிடத்தில் வைப்பதற்கு பெரியளவில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். அந்த மாற்றங்களை எல்லாம் ஒரே நாளில் செய்துவிட முடியாது. ஆரம்பக் கட்டத்தில் நீங்கள் சறுக்கிவிழ நேர்ந்தாலும் அதைத் தோல்விக்கு அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கோயீச்சி என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கில் மிதமிஞ்சி ஈடுபடுவது அவருடைய பிரச்சினையாக இருந்தது. அவர் டீனேஜராக இருந்தபோது சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்தார். ஆனால், பல வருடங்களாக வீடியோ கேம்ஸே கதியென்று இருந்து வந்தார். ஒரு நாள் கோயீச்சி தனக்குத்தானே இவ்வாறு கேட்டுக்கொண்டார்: ‘நீ என்ன செய்கிறாய்? உனக்கு 30 வயதுக்கு மேலாகிவிட்டது. உன்னுடைய வாழ்க்கையில் உருப்படியாக நீ எதையும் செய்யவில்லையே!’ அவர் மீண்டும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார், சபையாரின் உதவியையும் பெற்றுக்கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாகவே மாற்றங்களைச் செய்தபோதிலும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அதிகமாக ஜெபித்ததாலும் மற்றவர்களிடமிருந்து கிடைத்த அன்பான உதவியாலும் ஒருவழியாக இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டார். (லூக்கா 11:9) இப்போது கோயீச்சி உதவி ஊழியராக சந்தோஷமாய் சேவைசெய்து வருகிறார்.
சமநிலையோடிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
7. கடவுளுடைய வேலையைச் செய்வதில் நாம் சமநிலையோடு இருப்பது ஏன் அவசியம்?
7 கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்வதற்கு முழு ஆத்துமாவோடு முயற்சி செய்வது அவசியம். கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாம் கடினமாக உழைக்க மனமில்லாதவர்களாகவோ சோம்பேறிகளாகவோ இருக்கக்கூடாது. (எபிரெயர் 6:11, 12) என்றாலும், சரீர ரீதியிலும், மன ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் நம்மைநாமே வருத்திக்கொள்ள யெகோவா விரும்புவதில்லை. நம்முடைய சொந்த பலத்தில் கடவுளுடைய வேலையைச் செய்ய முடியாது என்பதை நாம் தாழ்மையோடு ஒப்புக்கொள்ளும்போது அது அவருக்கு மகிமை சேர்க்கிறது; அதுமட்டுமல்ல, நாம் சமநிலையோடு காரியங்களைச் செய்வதையும் அது காட்டுகிறது. (1 பேதுரு 4:11) தமது சித்தத்தைச் செய்வதற்குப் போதுமான பலத்தைத் தருவதாக யெகோவா உறுதி அளிக்கிறார். அதே சமயத்தில் நம்முடைய சக்திக்கு மிஞ்சி செய்ய நம்மைநாமே வருத்திக்கொள்ளக் கூடாது; கடவுள் நம்மிடம் எதிர்பார்க்காத காரியங்களைச் செய்ய முயலக்கூடாது. (2 கொரிந்தியர் 4:7) நாம் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து கடவுளுக்குச் சேவை செய்வதற்கு நம்முடைய சக்தியை ஞானமான விதத்தில் செலவிட வேண்டும்.
8. ஓர் இளம் கிறிஸ்தவர் யெகோவாவுக்கும் இந்த உலகத்திற்கும் தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை செய்ய நினைத்தபோது என்ன நடந்தது, அவர் என்ன மாற்றத்தைச் செய்தார்?
8 உதாரணமாக, கிழக்கு ஆசியாவில் வசித்து வருகிற ஜீ ஹெ என்ற பெண் இரண்டு வருடங்களாக சக்தியை உறிஞ்சிவிடுகிற வேலையையும் செய்துகொண்டு அதே சமயத்தில் பயனியராகவும் சேவைசெய்து வந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் யெகோவாவுக்கும் அதே சமயத்தில் இந்த உலகத்திற்கும் என்னால் முடிந்த மிகச் சிறந்ததை செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், இரவில் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்கினேன். போகப்போக ஆன்மீக விஷயங்களைப்பற்றி யோசிப்பதற்கும்கூட சக்தி இல்லாமற்போனது; அதனால், யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவைசெய்ய முடியாமல் போனது.” யெகோவாவை ‘முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும்’ சேவிப்பதற்காக ஜீ ஹெ வேலைப் பளு குறைந்த ஒரு வேலையைத் தேடினார். (மாற்கு 12:30) அவர் இவ்வாறு சொல்கிறார்: “நிறைய சம்பாதிக்க வேண்டுமென வீட்டிலுள்ளவர்கள் என்னை வற்புறுத்தியபோதிலும், கடவுளுடைய நோக்கத்திற்கு முதலிடம் கொடுக்கவே நான் முயற்சி செய்தேன். இப்போதும்கூட, கண்ணியமான உடையையும் இதுபோன்ற அத்தியாவசிய காரியங்களையும் வாங்குவதற்குப் போதுமான பணத்தைச் சம்பாதிக்கிறேன். அதே சமயத்தில், அதிக நேரம் தூங்க முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஊழியத்தில் சந்தோஷமாக ஈடுபடுகிறேன், ஆன்மீக ரீதியிலும் இப்போது பலமாக இருக்கிறேன். அதற்கெல்லாம் காரணம், இந்த உலகத்தின் கவர்ச்சிகளுக்கும் கவனச்சிதறல்களுக்கும் இப்போது நான் அதிக நேரம் கொடுக்காததே.”—பிரசங்கி 4:6; மத்தேயு 6:24, 28-30.
9. ஊழியத்திற்காக நாம் எடுக்கும் முயற்சி, நாம் சந்திக்கும் மக்களை எப்படிப் பாதிக்கலாம்?
9 எல்லாராலுமே முழுநேர ஊழியர்களாக சேவை செய்ய முடியாது. ஒருவேளை முதிர்வயதாலோ, சுகவீனத்தாலோ நீங்கள் அவதிப்படலாம்; அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது வரம்புகள் இருக்கலாம். என்றாலும், உங்களுடைய உண்மைத்தன்மையையும் உங்களால் முடிந்தளவு முழு இருதயத்தோடு நீங்கள் செய்யும் சேவையையும் யெகோவா மனமாரப் பாராட்டுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (லூக்கா 21:2, 3) ஆகவே, நாம் கடவுளுடைய சேவைக்காக எடுக்கும் முயற்சி, கொஞ்சமாகவே இருந்தாலும்கூட மற்றவர்கள்மீது அது ஏற்படுத்தும் பாதிப்பை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. உதாரணமாக, ஊழியத்தில் ஒருசில வீடுகளை நாம் சந்தித்ததாக வைத்துக்கொள்வோம்; அங்கிருந்த யாருமே நம் செய்திக்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அந்த வீட்டுக்காரர்கள் யாருமே கதவைக்கூட திறக்காமல் இருந்திருக்கலாம்; ஆனாலும்கூட நாம் வந்த பிறகு, பல மணிநேரம் அல்லது பல நாட்களுக்கு நம்மைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கலாம்! நற்செய்தியைக் கேட்கிற எல்லாருமே அதை ஏற்றுக்கொள்வார்களென நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சிலர் ஏற்றுக்கொள்வார்கள். (மத்தேயு 13:19-23) இன்னும் சிலர், உலக நிலைமையோ தங்களுடைய வாழ்க்கையோ மாறுகையில் செவிகொடுக்கலாம். எப்படியானாலும், வெளி ஊழியத்தில் நம்மால் முடிந்ததைச் செய்வதன்மூலம் நாம் கடவுளுடைய வேலையைச் செய்கிறோம். ஆம், நாம் “தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 3:9.
10. சபையிலுள்ள எல்லாருக்கும் என்ன வாய்ப்புகள் உள்ளன?
10 அதுமட்டுமல்ல, நம் குடும்ப அங்கத்தினர்களுக்கும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கும் நம் எல்லாராலுமே உதவ முடியும். (கலாத்தியர் 6:10) மற்றவர்கள்மீது நம்முடைய நல்ல செல்வாக்கு ஆழ்ந்த, நிலையான பாதிப்பை ஏற்படுத்தலாம். (பிரசங்கி 11:1, 6) மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களுடைய கடமைகளை முழுமூச்சோடு செய்யும்போது, சபையிலுள்ளவர்கள் யெகோவாவோடு நல்ல, ஸ்திரமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது; அதோடு கிறிஸ்தவ நடவடிக்கைகளில் அதிகமதிகமாய் ஈடுபடவும் முடிகிறது. ‘கர்த்தருடைய கிரியையிலே பெருகுகிறவர்களாய்’ இருக்கும்போது நம்முடைய பிரயாசம் ‘விருதாவாயிராது’ என நமக்கு உறுதி அளிக்கப்படுகிறது.—1 கொரிந்தியர் 15:58.
கடவுளுடைய நோக்கத்தை மையமாக வைத்து வாழ்தல்
11. நம் சபையில் சேவை செய்வதோடுகூட என்னென்ன வாய்ப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்?
11 கிறிஸ்தவர்களாக நாம், நம்முடைய வாழ்க்கையை நேசிக்கிறோம்; அதனால், எதைச் செய்தாலும் கடவுளுடைய மகிமைக்கென்று செய்ய விரும்புகிறோம். (1 கொரிந்தியர் 10:31) ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதிலும் இயேசு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிப்பதிலும் நாம் உண்மையோடு ஈடுபடும்போது கடவுளுக்குச் சேவை செய்வதற்கான அநேக வழிகளைக் காண்போம்; அவை நமக்கு மகிழ்ச்சி தருவதாய் இருக்கும். (மத்தேயு 24:14; 28:19, 20) சபையாருடன் சேர்ந்து சேவைசெய்வது தவிர, பிரஸ்தாபிகள் குறைவாக இருக்கிற வேறு பிராந்தியத்திலோ, வேறு மொழியிலோ, வேறு நாட்டிலோ சேவை செய்வதற்கான வாய்ப்பும் நமக்கு இருக்கலாம். மணமாகாத தகுதிவாய்ந்த மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஊழியப் பயிற்சி பள்ளிக்கு அழைக்கப்படலாம். அதில் பட்டம்பெற்ற பிறகு, அவர்களுடைய சொந்த நாட்டிலோ வெளிநாட்டிலோ முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் உதவி தேவைப்படுகிற சபைகளில் சேவை செய்யலாம். முழுநேர ஊழியம் செய்கிற தம்பதியர், கிலியட் மிஷனரி பயிற்சியைப் பெற்று அயல் நாடுகளில் சேவை செய்வதற்கு அழைக்கப்படலாம். பெத்தேலில் பல்வேறு வேலைகளுக்கு வாலண்டியர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள்; வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கிளை அலுவலகங்களின் கட்டுமானப் பணிக்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள்.
12, 13. (அ) எப்படிப்பட்ட சேவையில் ஈடுபட வேண்டுமென்பதை நீங்கள் எப்படித் தீர்மானிக்கலாம்? (ஆ) ஒரு நியமிப்பில் பெற்ற அனுபவம் மற்றொரு நியமிப்புக்குக் கைகொடுக்கும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
12 மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளில் எதை நீங்கள் செய்வீர்கள்? யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஓர் ஊழியராக, வழிநடத்துதலுக்காக எப்போதும் அவரையும் அவரது அமைப்பையும் நோக்கியிருங்கள். சரியான தீர்மானம் எடுக்க அவருடைய “நல் ஆவி” உங்களுக்குத் துணைபுரியும். (நெகேமியா 9:20) ஒரு நியமிப்பு மற்றொரு நியமிப்பைப் பெறுவதற்கு வழிவகுக்கும். ஒரு நியமிப்பில் நீங்கள் பெற்ற அனுபவமும் திறமைகளும், பிற்பாடு வேறு நியமிப்பைப் பெறும்போது அதற்கும் கைகொடுக்கலாம்.
13 உதாரணமாக, டென்னஸ்ஸும் அவருடைய மனைவி ஜென்னியும் ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் வாலண்டியர்களாக சேவை செய்கிறார்கள். அமெரிக்காவின் தென்பகுதியை கட்ரீனா சூறாவளி தாக்கியதையொட்டி, மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு அவர்கள் முன்வந்தார்கள். டென்னஸ் இவ்வாறு அறிவிக்கிறார்: “ராஜ்ய மன்றங்களைக் கட்டும் பணியில் நாங்கள் பெற்ற திறமைகளைப் பயன்படுத்தி சகோதரர்களுக்கு உதவினோம்; அது எங்களுக்கு அளவிலா சந்தோஷத்தைத் தந்தது. அந்தச் சகோதரர்கள் எங்களுக்குக் காட்டிய நன்றி மனதை நெகிழ வைக்கிறது. சேதமடைந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில் பெரும்பாலான மற்ற நிவாரணக் குழுக்கள் ஓரளவுக்குத்தான் சாதித்திருக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் ஏற்கெனவே 5,300-க்கும் அதிகமான வீடுகளையும் அநேக ராஜ்ய மன்றங்களையும் ரிப்பேர் செய்து அல்லது திரும்பக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஆட்கள் கவனிக்கிறார்கள், அதோடு ராஜ்ய செய்தியை அவர்கள் இப்போது அதிக ஆர்வமாகக் கேட்கிறார்கள்.”
14. முழுநேர ஊழியத்தில் ஈடுபட விரும்பினால் நீங்கள் என்ன செய்யலாம்?
14 முழுநேர ஊழியத்தை வாழ்க்கைப்பணியாகத் தேர்ந்தெடுப்பதன்மூலம் கடவுளுடைய நோக்கத்திற்கிசைய நீங்கள் செயல்படுவீர்களா? அப்படிச் செய்வீர்களென்றால், அளவிலா ஆசீர்வாதங்களைப் பெறுவது உறுதி. உங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் அதற்கேற்ப இல்லையெனில், ஒருவேளை சிறு மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். நெகேமியா ஜெபித்ததைப் போல நீங்கள் ஜெபிக்கலாம்; ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பியபோது அவர் இவ்வாறு ஜெபித்தார்: ‘ஆண்டவரே, . . . உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணியருளும்.’ (நெகேமியா 1:11) அடுத்ததாக, ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’மீது நம்பிக்கை வைத்து, ஜெபம் செய்ததற்கு ஏற்பச் செயல்படுங்கள். (சங்கீதம் 65:2) யெகோவாவுக்கு முழுமையாகச் சேவைசெய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டுமானால், முதலாவது நீங்கள் அந்த முயற்சிகளை எடுக்க வேண்டும். முழுநேர ஊழியத்தில் ஈடுபட நீங்கள் தீர்மானித்த பிறகு, அந்தத் தீர்மானத்தில் உறுதியாயிருங்கள். நாட்கள் செல்லச்செல்ல, அனுபவத்தில் நீங்கள் வளருவீர்கள், உங்களுடைய சந்தோஷமும் அதிகரிக்கும்.
உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கை
15. (அ) நீண்ட காலமாக கடவுளுக்குச் சேவை செய்துவருவோரிடம் பேசுவதாலும் அவர்களுடைய வாழ்க்கைச் சரிதைகளைப் படிப்பதாலும் நாம் எப்படிப் பயனடைகிறோம்? (ஆ) உங்களுடைய மனதைத் தொட்ட ஒரு வாழ்க்கைச் சரிதையைக் குறிப்பிடுங்கள்.
15 கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்ந்தால் என்ன நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்? நீண்ட காலமாய் யெகோவாவுக்குச் சேவை செய்துவருவோரிடம் பேசுங்கள்; முக்கியமாக முழுநேர ஊழியத்தில் அநேக ஆண்டுகள் ஈடுபட்டவர்களிடம் பேசுங்கள். அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வாதமானதாயும் அர்த்தமுள்ளதாயும் இருக்கிறது! (நீதிமொழிகள் 10:22) கஷ்டமான சூழ்நிலைகளிலும்கூட தங்களுக்குத் தேவையானவற்றையும் அதற்கும் அதிகமானவற்றையும் பெற்றுக்கொள்ள யெகோவா எப்போதும் உதவினார் என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். (பிலிப்பியர் 4:11-13) கடந்த பத்தாண்டுகளில், நூற்றுக்கணக்கான வாழ்க்கைச் சரிதைகள் காவற்கோபுர பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாழ்க்கைச் சரிதைகள் அவர்களுடைய பக்திவைராக்கியத்தையும் சந்தோஷத்தையும் தெரிவிக்கின்றன; இது அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள பதிவை நமக்கு நினைவுபடுத்துகிறது. அத்தகைய விறுவிறுப்பூட்டும் பதிவுகளை வாசிப்பது, ‘அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் நான் வாழ விரும்புகிறேன்!’ என்று சொல்ல உங்களைத் தூண்டும்.
16. ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாயும் சந்தோஷமுள்ளதாயும் ஆக்குவது எது?
16 இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரன் இவ்வாறு கூறுகிறார்: “ஆப்பிரிக்காவில், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி நாடெங்கும் அலைந்து திரிந்த இளைஞர்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நாங்களோ இங்கு ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதன்மூலம் கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக வாழ்ந்துகொண்டிருந்தோம்; அதோடு, சவால்நிறைந்த, அர்த்தமுள்ள வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்ந்தோம். வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம்.”—அப்போஸ்தலர் 20:35.
17. நாம் ஏன் இப்போதே கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்?
17 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன? உங்களுடைய வாழ்க்கையில் திட்டவட்டமான ஆன்மீக இலக்குகளை வைக்கவில்லை என்றால், பிற விஷயங்கள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும். சாத்தானுடைய இந்த மாய உலகில் உங்களுடைய அருமையான வாழ்க்கையை ஏன் வீணாக்க வேண்டும்? “மிகுந்த உபத்திரவம்” சீக்கிரத்தில் வரவிருக்கிறது; அப்போது இந்த உலகின் செல்வமும் அந்தஸ்தும் ஒன்றுக்கும் உதவாமல் போகும். யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தமே முக்கியமானதாக இருக்கும். கடவுளுக்கும் பிறருக்கும் சேவைசெய்து, முழுக்க முழுக்க கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்ந்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருப்போம்!—மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 7:14, 15.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையை அவர் எப்படிக் கருதுகிறார்?
• நடைமுறையாகவும் சமநிலையாகவும் இருப்பது கடவுளுக்கும் பிறருக்கும் சேவைசெய்ய எப்படி உதவுகிறது?
• கடவுளுக்குச் சேவைசெய்ய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
• உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கையை இப்போதே வாழ நாம் என்ன செய்யலாம்?
[பக்கம் 23-ன் படங்கள்]
முழு இருதயத்தோடு எப்போதும் யெகோவாவுக்குச் சேவைசெய்ய சமநிலை அவசியம்
[பக்கம் 24-ன் படங்கள்]
பல வழிகளில் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்யலாம்