பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் யெகோவாவை பின்பற்றுங்கள்
“எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைத் திருத்துகிறார்கள் அல்லவா?”—எபிரெயர் 12:7, கான்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.
1, 2. இன்று பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு பிரச்சினைகள் இருப்பதேன்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பேச்சுத்தொடர்பு பெருமளவு குறைவுபடுவதாகவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மனம்போனபோக்கில் விட்டுவிடுவதாகவும் பேட்டி காணப்பட்ட பெரியவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் உணர்ந்ததை அந்தச் சுற்றாய்வு காட்டியது. பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்வதென்றே தங்களுக்குத் தெரியவில்லை என்பதை அந்நாட்டில் நடத்தப்பட்ட மற்றொரு சுற்றாய்விற்கு பதிலளித்த ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் ஒப்புக்கொண்டனர். இது கிழக்கத்திய நாடுகளில் மட்டுமே காணப்படும் போக்கல்ல. “அதிக திறம்பட்ட பெற்றோராக இருப்பது எப்படி என்பதைப் பற்றி நிச்சயமற்றவர்களாய் இருப்பதாக கனடா நாட்டிலுள்ள பெற்றோர் பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர்” என த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிவித்தது. உலகத்தில் எங்கு பார்த்தாலும், பிள்ளைகளை வளர்ப்பதை பெற்றோர் கடினமாகவே காண்கிறார்கள்.
2 பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு ஏன் இத்தனை பிரச்சினைகள்? நாம் ‘கடைசி நாட்களில்,’ ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதே அதற்கு முக்கிய காரணம். (2 தீமோத்தேயு 3:1, NW) மேலும், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) அதோடு, முக்கியமாக இளைஞர்கள் சாத்தானின் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். அவன் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்,” அனுபவமில்லாதவர்களை தனக்கு இரையாக்கிக் கொள்கிறான். (1 பேதுரு 5:8) தங்கள் பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பதற்கு பிரயாசப்படும் கிறிஸ்தவ பெற்றோர் நிச்சயமாகவே பல இடையூறுகளை சந்திக்கின்றனர். (எபேசியர் 6:4) “நன்மை தீமையின்னதென்று” பகுத்தறியத்தக்கவர்களாய், யெகோவாவை வணங்குகிற முதிர்ச்சியுள்ள ஆட்களாக வளர பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?—எபிரெயர் 5:14.
3. பிள்ளைகளை வெற்றிகரமாய் வளர்ப்பதற்கு, பெற்றோரின் பயிற்றுவிப்பும் வழிநடத்துதலும் ஏன் முக்கியம்?
3 “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்று ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 13:1; 22:15) அத்தகைய மதியீனத்தை அவர்களுடைய இருதயங்களிலிருந்து நீக்குவதற்கு, இளைஞர்களுக்கு பெற்றோரின் அன்பான திருத்தம் தேவை. ஆனால் அப்படிப்பட்ட திருத்தத்தை இளைஞர்கள் எப்போதும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதில்லை. சொல்லப்போனால், யார் புத்திமதி சொன்னாலும் பெரும்பாலும் மனக்கசப்புதான் அடைகிறார்கள். ஆகையால், ‘பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்துவதற்கு’ பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 22:6) அத்தகைய சிட்சையை கேட்டு நடக்கையில், பிள்ளைகளுக்கு அது ஜீவனைத் தரும். (நீதிமொழிகள் 4:13) பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை பெற்றோர் அறிந்திருப்பது எவ்வளவு முக்கியம்!
சிட்சை—அது எதை குறிக்கிறது
4. பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, “சிட்சை” என்பதன் முக்கிய அர்த்தம் என்ன?
4 உடல் ரீதியாகவோ, திட்டுவதாலோ, உணர்ச்சி ரீதியாகவோ கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டப்படலாம் என்ற பயத்தில், பெற்றோர் சிலர் பிள்ளைகளைத் திருத்துவதே கிடையாது. அப்படி பயப்பட வேண்டியதில்லை. பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள “சிட்சை” என்ற வார்த்தை, எந்த விதத்திலும் மோசமாக நடத்துவதையோ கொடுமைப்படுத்துவதையோ குறிப்பதில்லை. “சிட்சை” என்பதற்குரிய கிரேக்க சொல், முக்கியமாய் போதனை, கல்வி, திருத்தம் ஆகியவற்றோடு, சில சமயங்களில் கறாராக ஆனால் அன்பாக தண்டிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது.
5. யெகோவா தம்முடைய ஜனங்களை நடத்தும் விதத்தை கவனிப்பது ஏன் பயனுள்ளது?
5 அத்தகைய சிட்சையை அளிப்பதில், யெகோவா தேவன் பரிபூரண முன்மாதிரி வைக்கிறார். யெகோவாவை ஒரு மனித தகப்பனுக்கு ஒப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைத் திருத்துகிறார்கள் அல்லவா? . . . இவ்வுலகத் தந்தைமார் தங்களுக்கு நல்லதாக தோன்றுகிற வகையில் கொஞ்ச காலத்திற்கு நம்மை திருத்துகிறார்கள். ஆனால் கடவுள் நம்முடைய நன்மைக்காக நம்மை திருத்துகிறார், ஏனென்றால் நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.” (எபிரெயர் 12:7-10, கான்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) ஆம், தம்முடைய ஜனங்கள் பரிசுத்தமானவர்களாக அல்லது சுத்தமானவர்களாக இருப்பதற்காகவே யெகோவா அவர்களைச் சிட்சிக்கிறார். யெகோவா தம்முடைய ஜனங்களை எப்படி பயிற்றுவித்திருக்கிறார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் பிள்ளைகளை சிட்சிப்பது சம்பந்தமாக நாம் நிச்சயமாகவே நிறைய கற்றுக்கொள்ளலாம்.—உபாகமம் 32:4; மத்தேயு 7:11; எபேசியர் 5:1.
அன்பு—தூண்டுவிக்கும் சக்தி
6. யெகோவாவின் அன்பை பின்பற்றுவது பெற்றோருக்கு ஏன் கடினமாக இருக்கலாம்?
6 “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். ஆகையால், யெகோவா தரும் பயிற்றுவிப்பு எப்போதும் அன்பால் தூண்டப்பட்டதே. (1 யோவான் 4:8; நீதிமொழிகள் 3:11, 12) இந்த விஷயத்தில் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது இயல்பாகவே தங்கள் பிள்ளைகளிடம் பாசமுள்ள பெற்றோருக்கு எளிதாக இருக்கும் என்பதை இது அர்த்தப்படுகிறதா? அவ்வாறு சொல்வதற்கில்லை. கடவுளுடைய அன்பு, நியமங்களை அடிப்படையாக கொண்ட அன்பு. அத்தகைய அன்பு, “இயல்பான மனச்சாய்வுகளுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை” என ஒரு கிரேக்க அறிஞர் குறிப்பிடுகிறார். கடவுள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறதில்லை. தம்முடைய ஜனங்களுக்கு மிகச் சிறந்தது எதுவோ அதையே அவர் எப்போதும் சிந்திக்கிறார்.—ஏசாயா 30:20, NW; 48:17.
7, 8. (அ) தம்முடைய ஜனங்களை நடத்துகையில், நியமங்கள் சார்ந்த அன்புக்கு என்ன முன்மாதிரியை யெகோவா வைத்தார்? (ஆ) பைபிள் நியமங்களைப் பின்பற்றும் திறமையை பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள உதவுவதில், பெற்றோர் எவ்வாறு யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம்?
7 இஸ்ரவேலரை யெகோவா நடத்திய விதத்திலிருந்து அவர் காண்பித்த அன்பை சற்று சிந்தித்துப் பாருங்கள். புதிதாக பிறந்த அந்த இஸ்ரவேல் ஜனத்தாரிடம் யெகோவா வைத்திருந்த அன்பை விவரிக்க, மோசே அழகிய ஒப்புமையைப் பயன்படுத்தினார். நாம் வாசிப்பதாவது: “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை [யாக்கோபை] வழிநடத்தினார்.” (உபாகமம் 32:9, 11, 12) தன் குஞ்சுகளுக்குப் பறக்க கற்றுக்கொடுப்பதற்காக, தாய் கழுகு தன் இறக்கைகளை படபடவென சிறகடித்து ‘தன் கூட்டைக் கலைக்கிறது,’ தன் குஞ்சுகளைப் பறப்பதற்குத் தூண்டுவிக்கிறது. பெரும்பாலும் உயரமான, செங்குத்து பாறையில் இருக்கும் அந்தக் கூட்டிலிருந்து தன் இளம் குஞ்சு கடைசியாக வெளியேறுகையில், அந்தத் தாய்ப் பறவை குஞ்சுகளின் ‘மேலாக அசைவாடுகிறது.’ அந்தச் சின்னஞ்சிறு பறவை தரையில் மோதிக்கொள்ள இருந்தால், தாய் பறவை ஒரே பாய்ச்சலில் அதன் கீழாக பறந்து சென்று, ‘தன் செட்டைகளின்மேல்’ அதைச் சுமந்து செல்கிறது. இதே விதமாக புதிதாக பிறந்த அந்த இஸ்ரவேல் ஜனத்தை யெகோவா அன்புடன் பராமரித்தார். அந்த ஜனத்திற்கு மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்தார். (சங்கீதம் 78:5-7) பின்னும் கடவுள் தம்முடைய ஜனத்தைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தார். தம்முடைய ஜனம் கஷ்டங்களையோ இக்கட்டுகளையோ எதிர்ப்படுகையில் உடனே அவர்களுடைய உதவிக்கு வர அவர் தயாராக இருந்தார்.
8 யெகோவாவின் அன்பை கிறிஸ்தவ பெற்றோர்கள் எவ்வாறு பின்பற்றலாம்? முதலாவதாக, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நியமங்களையும் தராதரங்களையும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். (உபாகமம் 6:4-9) பைபிள் நியமங்களுக்கு இசைவாக தீர்மானமெடுப்பதற்கு இளைஞர்கள் கற்றுக்கொள்ள உதவி செய்வதே குறிக்கோளாகும். இதைச் செய்வதற்கு, அடையாள அர்த்தத்தில் சொன்னால், பிள்ளைகள் மேல் அசைவாடுகிறார்கள், அதாவது கற்ற நியமங்களை பிள்ளைகள் எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை அன்பான பெற்றோர் கூர்ந்து கவனிக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், அவர்களுக்கு படிப்படியாக அதிக சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ஆபத்து வரும்போதெல்லாம், அக்கறையுள்ள பெற்றோர் ‘ஒரே பாய்ச்சலில் கீழாக பறந்து சென்று,’ ‘தங்கள் இளம் பிள்ளைகளை செட்டைகளின்மேல் சுமந்துசெல்ல’ தயாராக இருக்கிறார்கள். என்ன விதமான ஆபத்து?
9. முக்கியமாய் எந்த ஆபத்தைப் பற்றி அன்பான பெற்றோர் கவனமாய் இருக்க வேண்டும்? உதாரணத்துடன் விளக்கவும்.
9 மோசமான கூட்டுறவுகளால் வரும் பாதிப்புகளைப் பற்றி இஸ்ரவேலரை யெகோவா தேவன் எச்சரித்தார். (எண்ணாகமம் 25:1-18; எஸ்றா 10:10-14) தகாத ஜனங்களுடன் கூட்டுறவு கொள்வது பொதுவாக இன்றும் எதிர்ப்படும் ஆபத்தாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 15:33) இந்தக் காரியத்தில் யெகோவாவின் மாதிரியை கிறிஸ்தவ பெற்றோர் பின்பற்ற வேண்டும். தன் குடும்பத்தாரை போல் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றாத ஒரு பையனை லீஸா என்ற 15 வயது பெண் விரும்பினாள். “என் போக்கில் ஏற்பட்ட உடனடி மாற்றத்தை என் பெற்றோர் கவனித்தார்கள், கவலைப்பட்டார்கள். சில சமயங்களில் என்னை திருத்தினார்கள், மற்ற சமயங்களில் என்னை கனிவுடன் ஊக்குவித்தார்கள்” என லீஸா சொல்கிறாள். அவர்கள் லீஸாவுடன் உட்கார்ந்து, அவள் சொல்வதை பொறுமையாக கேட்டார்கள். அவளுடைய சகாக்கள் அவளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அதைச் சமாளிக்க அவளுக்கு உதவினார்கள்.a
நல்ல பேச்சுத்தொடர்பு வைத்திருங்கள்
10. இஸ்ரவேலரோடு பேச்சுத்தொடர்பு கொள்வதில் என்ன வழிகளில் யெகோவா சிறந்த முன்மாதிரியை வைத்தார்?
10 பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் வெற்றி காண பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் எப்போதும் சகஜமாக பேச்சுத்தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம் இருதயத்தில் இருப்பதை யெகோவா முழுமையாக அறிந்திருக்கிற போதிலும் அவரோடு பேச்சுத்தொடர்பு கொள்ளும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார். (1 நாளாகமம் 28:9) இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்த பின்பு, அவற்றை போதிப்பதற்கு லேவியரை யெகோவா நியமித்தார்; அவர்களுக்கு நியாயமாக எடுத்து சொல்லி திருத்துவதற்கு அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். மேலும், அவர்களுடைய ஜெபங்களுக்கு செவிசாய்க்க மனமுள்ளவராகவும் இருந்தார்.—2 நாளாகமம் 17:7-9; சங்கீதம் 65:2; ஏசாயா 1:1-3, 18-20; எரேமியா 25:4; கலாத்தியர் 3:22-24.
11. (அ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு நல்ல பேச்சுத்தொடர்பை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்? (ஆ) பிள்ளைகளுடன் பேசுகையில், பெற்றோர் கவனமாக செவிசாய்ப்பது ஏன் முக்கியம்?
11 பிள்ளைகளுடன் பேச்சுத்தொடர்பு கொள்கையில் பெற்றோர் எவ்வாறு யெகோவாவின் மாதிரியை பின்பற்றலாம்? மிக முக்கியமாக பிள்ளைகளுக்காக அவர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். “சே இவ்வளவுதானா, நான் ஏதோ என்னமோன்னு நினைச்சேன்,” “அது அற்ப விஷயம்,” “வேறென்னத்த எதிர்பார்க்கிற? உனக்கு வயசு பத்தாது” என்பதைப் போன்று கேலியாக, யோசிக்காமல் பேசுவதைப் பெற்றோர் தவிர்ப்பது நல்லது. (நீதிமொழிகள் 12:18) பிள்ளைகள் தங்களுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லும்படி ஊக்குவிப்பதற்கு, ஞானமுள்ள பெற்றோர் கவனமாக செவிசாய்ப்பவர்களாக இருக்க முயலுகிறார்கள். பிள்ளைகள் சிறுவர்களாய் இருக்கும்போது பெற்றோர் அவர்களை அசட்டை செய்தால், பிள்ளைகள் பெரியவர்களாய் வளரும்போது தங்களை அசட்டை செய்வதைக் காண்பார்கள். யெகோவா எப்போதும் தம்முடைய ஜனங்கள் சொல்வதைக் கேட்க மனமுள்ளவராக இருந்திருக்கிறார். தாழ்மையுடன் ஜெபத்தில் தம்மை அணுகுகிறவர்களுக்கு அவர் செவிசாய்க்கிறார்.—சங்கீதம் 91:15; எரேமியா 29:12; லூக்கா 11:9-13.
12. பெற்றோர் என்ன பண்புகளை காட்டினால் பிள்ளைகள் அவர்களை எளிதாக அணுகுவார்கள்?
12 கடவுளுடைய குணங்களிலுள்ள சில அம்சங்கள் அவருடைய ஜனங்கள் சகஜமாக அவரை அணுகுவதை எப்படி எளிதாக்கியது என்பதை கவனியுங்கள். உதாரணமாக, பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது பத்சேபாளுடன் விபசாரத்தில் ஈடுபடுவதன் மூலம் பெரும் பாவத்தைச் செய்தார். அபூரண மனிதராக இருந்த காரணத்தால் தாவீது தன் வாழ்க்கையில் மற்ற மோசமான பாவங்களையும் செய்தார். எனினும், அவர் யெகோவாவை அணுகி, அவருடைய மன்னிப்பை நாடி, கடிந்துகொள்ளுதலை ஏற்கவும் ஒருபோதும் தவறவில்லை. கடவுளுடைய அன்புள்ள தயவும் இரக்கமும், யெகோவாவிடம் திரும்புவதை தாவீதுக்கு எளிதாக்கின என்பதில் சந்தேகமில்லை. (சங்கீதம் 103:8) பரிவு, இரக்கம் போன்ற கடவுளுடைய பண்புகளை பெற்றோர் காட்டுகையில், பிள்ளைகள் தவறு செய்கிறபோதுகூட, சகஜமாக அணுகி, பேச்சுத்தொடர்பு கொள்ள அவர்களுக்கு உதவலாம்.—சங்கீதம் 103:13; மல்கியா 3:17.
நியாயமானவர்களாய் இருங்கள்
13. நியாயமானவர்களாக இருப்பது எதை உட்படுத்துகிறது?
13 பிள்ளைகள் சொல்வதை காதுகொடுத்து கேட்கும்போது பெற்றோர் நியாயமானவர்களாக இருந்து, ‘பரத்திலிருந்து வரும் ஞானத்தை’ வெளிக்காட்ட வேண்டும். (யாக்கோபு 3:17) “உங்கள் நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:5, NW) நியாயமாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? ‘நியாயமாக இருப்பது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல்லிற்கான ஒரு விளக்கம், “சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும்படி வற்புறுத்தாதிருப்பது.” ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய தராதரங்களை உறுதியாக கடைப்பிடிக்கும் அதே சமயத்தில் பெற்றோர் எவ்வாறு நியாயமானவர்களாக நடந்துகொள்ள முடியும்?
14. லோத்துவின் விஷயத்தில் யெகோவா எப்படி நியாயமானவராக நடந்துகொண்டார்?
14 நியாயமாக நடந்துகொள்வதில் யெகோவா ஒப்பற்ற முன்மாதிரி வைக்கிறார். (சங்கீதம் 10:17) அழிவுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சோதோம் பட்டணத்தை விட்டு வெளியேறும்படி லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் அவர் துரிதப்படுத்துகையில், லோத்து ‘தாமதித்துக்கொண்டிருந்தார்.’ பின்னர், மலைப் பிரதேசத்திற்குத் தப்பி ஓடும்படி யெகோவாவின் தூதன் சொன்னபோதிலும் லோத்து இவ்வாறு சொன்னார்: “மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, . . . அதோ, அந்த ஊர் [சோவார்] இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; . . . நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே” என்றார். யெகோவா இதற்கு எவ்வாறு பிரதிபலித்தார்? அதற்கு அவர்: “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப் போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்” என்றார். (ஆதியாகமம் 19:16-21, 30) லோத்து கேட்டுக்கொண்டதற்கு அனுமதி கொடுக்க யெகோவா மனமுள்ளவராக இருந்தார். ஆம், தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் யெகோவா தேவன் குறிப்பிடுகிற தராதரங்களை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும், பைபிள் நியமங்கள் மீறப்படாதிருக்கையில், பிள்ளைகளின் விருப்பத்திற்கு இணங்கிப் போகலாம்.
15, 16. ஏசாயா 28:24, 25-ல் காணப்படும் உதாரணத்திலிருந்து, பெற்றோர் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
15 நியாயமாக இருப்பது என்பது அறிவுரையை ஏற்க பிள்ளைகள் தயாராக இருப்பதற்கு அவர்கள் இருதயத்தை பக்குவப்படுத்துவதையும் உட்படுத்துகிறது. அடையாள அர்த்தத்தில், யெகோவாவை ஒரு விவசாயிக்கு ஒப்பிட்டு ஏசாயா இவ்வாறு உரைக்கிறார்: “உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? அவன் அதை மேலாக நிரவின பின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் [“கருஞ்சீரகத்தைத்,” NW] தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?”—ஏசாயா 28:24, 25.
16 யெகோவா ‘விதைக்கிறதற்காக உழுகிறார்,’ ‘தன் நிலத்தைக் கொத்தி பரம்படிக்கிறார்.’ இவ்வாறு, சிட்சிப்பதற்கு முன் அவர் தம்முடைய ஜனங்களின் இருதயத்தை தயார்படுத்துகிறார். தங்கள் பிள்ளைகளைத் திருத்துவதில், பெற்றோர் எவ்வாறு அவர்களுடைய இருதயத்தை ‘உழ’ முடியும்? தன் நான்கு வயது பையனை திருத்துவதற்கு ஒரு தகப்பன் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றினார். பக்கத்து வீட்டு பையனை தன் மகன் அடித்துவிட்டபோது, தகப்பன் முதலாவதாக தன் மகன் சொன்ன காரணங்களை எல்லாம் பொறுமையாக கேட்டார். பின்பு, மகனின் இருதயத்தை ‘உழுவதுபோல்,’ வம்பு செய்யும் ஒரு முரடன் கைகளில் சிக்கித் தவித்த ஒரு சிறுவனின் கதையைத் தகப்பன் சொன்னார். அந்தக் கதையைக் கேட்டு நெகிழ்ந்த மகன் அந்த முரடன் தண்டிக்கப்பட வேண்டும் என சொன்னான். அவ்வாறு ‘உழுதது’ அந்தப் பிள்ளையின் இருதயத்தைப் பக்குவப்படுத்தியது. பக்கத்து வீட்டு பையனை அடித்தது, வம்பு செய்யும் முரடனின் செயல், அது தவறு என எளிதில் புரிந்துகொள்ள அவனுக்கு உதவியது.—2 சாமுவேல் 12:1-14.
17. பெற்றோர் திருத்துவதைக் குறித்ததில் ஏசாயா 28:26-29 என்ன பாடம் புகட்டுகிறது?
17 யெகோவா திருத்தும் முறையை விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு செயலுக்கும், அதாவது போரடிப்பதற்கும் ஏசாயா ஒப்பிட்டார். தானிய உமியின் தன்மைக்கு ஏற்ப போரடிப்பதற்கு வெவ்வேறு கருவிகளை விவசாயி பயன்படுத்துகிறான். மென்மையான கருஞ்சீரகத்திற்கு ஒரு கோலும் சீரகத்திற்கு பருமனுள்ள கைத்தடியும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தானியங்களின் உமி கெட்டியானதாக இருந்தால், ‘ஸ்லெட்ஜ்’ அல்லது வண்டி சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கெட்டியான உமி மூடிய தானியங்கள் நொறுங்கிப் போகும் அளவுக்கு அவன் அவற்றை அடிக்க மாட்டான். அவ்வாறே யெகோவா தம்முடைய ஜனங்களில் காணப்படும் விரும்பத்தகாத ஏதோவொன்றை நீக்க நினைக்கையில், அப்போதைய தேவைகளுக்கும் சூழ்நிலைமைகளுக்கும் ஏற்ப அவர்களை கையாளும் முறையை மாற்றிக்கொள்கிறார். அவர் ஒருபோதும் கொடுங்கோலராகவோ ஒடுக்குபவராகவோ இருப்பதில்லை. (ஏசாயா 28:26-29) சில பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் ஒரு பார்வை பார்த்தாலே போதும், வேறெதுவும் தேவையில்லை. சிலருக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்; இன்னும் சிலருக்கு அதிக கண்டிப்பு தேவையாயிருக்கலாம். நியாயமாக இருக்கும் பெற்றோர் ஒவ்வொரு பிள்ளையின் தேவைகளுக்கேற்ப அதை திருத்துவார்கள்.
குடும்ப கலந்தாலோசிப்புகளை மகிழ்ச்சியுள்ளதாக்குங்கள்
18. தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்துவதற்கு நேரத்தை பெற்றோர் எவ்வாறு கண்டடையலாம்?
18 தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்துவதும், தினந்தோறும் வேதவசனத்தை கலந்தாலோசிப்பதும் உங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் அடங்கும். குடும்பப் படிப்பு தவறாமல் நடத்தப்படுகையில் அது பெரும் பயனளிக்கிறது. திட்டமிடாமலோ நினைத்த நேரத்திலோ திடீரென நடத்தினால், அது பெரும்பாலும் ஒழுங்கு தவறியதாகவே இருக்கும். ஆகவே, படிப்புக்காக பெற்றோர் ‘நேரத்தை வாங்க வேண்டும்.’ (எபேசியர் 5:15-17, NW) எல்லாருக்கும் வசதியாக இருக்கும் திட்டவட்டமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலாக அமையலாம். பிள்ளைகள் வளர்ந்து வருகையில், அவர்களுடைய அட்டவணைகள் வேறுபட்டதால், முழு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து படிப்பது கடினமாக இருப்பதை ஒரு குடும்பத்தின் தகப்பன் கண்டார். எனினும், கூட்ட நாட்களில் குடும்பத்தார் அனைவரும் இரவில் ஒன்றாகவே இருந்தார்கள். ஆகையால் அப்படிப்பட்ட ஓர் இரவு நேரத்தில் குடும்பப் படிப்பை நடத்த அந்தத் தகப்பன் தீர்மானித்தார். இந்த ஏற்பாடு பயனளிப்பதாக இருந்தது. அக்குடும்பத்திலுள்ள மூன்று பிள்ளைகளும் இப்போது யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்கள்.
19. குடும்பப் படிப்பை நடத்துகையில் பெற்றோர் எவ்வாறு யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம்?
19 எனினும், படிப்பின்போது பைபிளில் ஏதோவொரு பகுதியை வாசித்து முடிப்பது மட்டுமே போதாது. திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேலரை ஆசாரியர்களின் மூலமாய் யெகோவா போதித்தார். அவர்கள் “தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.” (நெகேமியா 8:8) யெகோவாவை நேசிப்பதற்கு தன் ஏழு பிள்ளைகளுக்கும் உதவி செய்வதில் வெற்றி கண்ட ஒரு தகப்பன், எப்போதும் குடும்ப படிப்புக்கு முன்பாக தன் அறைக்கு சென்று, கலந்தாலோசிக்கப் போகும் விஷயத்தை ஒவ்வொரு பிள்ளையின் தேவைக்கேற்ப தயாரித்து அளிப்பதற்காக நேரத்தை செலவழிப்பது வழக்கம். அந்தப் படிப்பை தன் பிள்ளைகள் அனுபவிக்கத்தக்கதாக ஆக்கினார். பெரியவராக வளர்ந்த அவருடைய ஒரு மகன் இவ்வாறு நினைவுபடுத்தி சொல்கிறார்: “அந்தப் படிப்பு எப்போதும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. குடும்பப் படிப்புக்காக அழைக்கப்படுகையில் நாங்கள் பின்புறத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தால், அப்படியே பந்தை போட்டுவிட்டு படிப்புக்காக உள்ளே ஓடிவருவோம். ஒரு வாரத்தில் மிக சந்தோஷமாக அனுபவித்த மாலைப்பொழுதுகளில் ஒன்று அதுதான்.”
20. பிள்ளைகளை வளர்க்கையில் ஒருவேளை ஏற்படக்கூடிய பிரச்சினை என்ன?
20 “இதோ, பிள்ளைகள் யெகோவாவினால் வரும் சுதந்தரம்; கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 127:3, தி.மொ.) நம்முடைய பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. ஆனால் அதை சரிவர செய்கையில் நம் பிள்ளைகள் நித்திய ஜீவனையே பெறலாம். அது எத்தகைய சிறந்த பரிசு! அப்படியானால், நம்முடைய பிள்ளைகளைப் பயிற்றுவிக்கையில் யெகோவாவின் மாதிரியை ஆர்வத்துடன் பின்பற்றுவோமாக. ஆனால், பிள்ளைகளை ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க’ வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அளிக்கப்பட்டிருக்கிற போதிலும், அது வெற்றியையே தரும் என உத்தரவாதம் அளிப்பதற்கில்லை. (எபேசியர் 6:4) மிகக் கவனமாக வளர்க்கப்பட்ட பிள்ளையும் அடங்காதவனாகி, யெகோவாவை சேவிப்பதையே நிறுத்திவிடலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் என்ன செய்வது? இது அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a இதிலும் அடுத்த கட்டுரையிலும் உள்ள அனுபவங்கள் உங்கள் கலாச்சாரத்திலிருந்து வேறுபடும் நாடுகளைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அவற்றில் உட்பட்டுள்ள நியமங்களைக் கண்டறிந்து அவற்றை உங்கள் கலாச்சார பின்னணிக்கு பொருத்துங்கள்.
உங்கள் பதில் என்ன?
• உபாகமம் 32:11, 12-ல் விவரிக்கப்பட்டுள்ள யெகோவாவின் அன்பை பெற்றோர் எவ்வாறு பின்பற்றலாம்?
• இஸ்ரவேலரோடு யெகோவா தொடர்புகொண்ட முறையிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• லோத்தின் வேண்டுதலுக்கு யெகோவா செவிசாய்த்ததில் நமக்கு என்ன படிப்பினை?
• பிள்ளைகளைத் திருத்துவதைக் குறித்ததில் ஏசாயா 28:24-29-லிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?
[பக்கம் 8, 9-ன் படம்]
யெகோவா தம் ஜனங்களைப் பயிற்றுவிக்கும் விதத்தை கழுகு தன் குஞ்சைப் பயிற்றுவிப்பதற்கு மோசே ஒப்பிட்டார்
[பக்கம் 10-ன் படங்கள்]
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்
[பக்கம் 12-ன் படம்]
“ஒரு வாரத்தில் மிக சந்தோஷமாக அனுபவித்த மாலைப்பொழுதுகளில் ஒன்று அதுதான்”