“கெட்ட குமாரனை” போன்ற பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
“காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, . . . மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே.”—லூக்கா 15:32.
1, 2. (அ) கிறிஸ்தவ சத்தியத்திடம் இளைஞர்கள் சிலர் எப்படிப்பட்ட மனநிலையை காண்பித்திருக்கிறார்கள்? (ஆ) அத்தகைய சூழ்நிலைமைகளில் பெற்றோரும் பிள்ளைகளும் எவ்வாறு உணரலாம்?
“சத்தியத்தை விட்டு நான் விலகப் போறேன்!” “எனக்கு சத்தியத்தில் இருக்க பிடிக்கல!” கடவுளுடைய வழியில் பிள்ளைகளை அரும் பாடுபட்டு வளர்க்க முயன்ற கடவுள் பயமுள்ள பெற்றோர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கையில் அது எவ்வளவு பேரிடியாக இருக்கும்! இன்னும் சில இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை வாய்விட்டு சொல்லாமலேயே ‘விட்டு விலகிவிடுகிறார்கள்.’ (எபிரெயர் 2:1) இவர்களில் பலர், இயேசு தம் உவமையில் குறிப்பிட்ட கெட்ட குமாரனுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு வெளியேறி தன் ஆஸ்திகள் அனைத்தையும் தூர தேசத்தில் வீணான காரியங்களில் விரயமாக்கினான்.—லூக்கா 15:11-16.
2 இந்தப் பிரச்சினையை பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்காத போதிலும், இதை அனுபவிப்பவர்களுக்கு எத்தனை ஆறுதல் சொன்னாலும் அது அவர்களுடைய துக்கத்தை முற்றிலும் ஆற்றும் அருமருந்தாகாது. மேலும், தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் அந்த இளைஞன் அனுபவிக்கும் சந்தோஷமற்ற நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது. உள்ளுக்குள் அவனுடைய மனசாட்சி அவனை உறுத்தலாம். இயேசுவின் உவமையில், அந்தக் கெட்ட குமாரன் கடைசியில் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் ‘புத்தி தெளிந்தவனானான்.’ கெட்ட குமாரனைப் போன்றவர்கள் ‘புத்தி தெளிந்தவர்களாக’ ஆவதற்கு பெற்றோரும் சபையிலுள்ள மற்றோரும் எப்படி உதவலாம்?—லூக்கா 15:17.
ஏன் சிலர் சத்தியத்தை விட்டு விலகுகிறார்கள்
3. இளைஞர்கள் கிறிஸ்தவ சபையை விட்டு விலகுவதற்கு சில காரணங்கள் யாவை?
3 கிறிஸ்தவ சபையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள். அப்படியிருக்கையில் மற்ற இளைஞர்கள் ஏன் விட்டு விலகுகிறார்கள்? இந்த உலகம் அளிக்கும் ஏதோ நல்வாய்ப்பை இழப்பதாக ஒருவேளை நினைக்கலாம். (2 தீமோத்தேயு 4:10) அல்லது, யெகோவாவின் பாதுகாப்பான தொழுவம் மிதமீறிய கட்டுப்பாடு விதிப்பதாக கருதலாம். குற்றத்தால் குறுகுறுக்கும் மனசாட்சி, எதிர்பாலார் மீது அளவுக்குமீறி ஆர்வம் காட்டுவது, அல்லது சகாக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஆகியவை ஓர் இளைஞனை யெகோவாவின் மந்தையிலிருந்து மெல்ல மெல்ல வெளியேற செய்யலாம். பெற்றோரோ எந்த கிறிஸ்தவரோ மாய்மாலமாக நடப்பதுபோல் தோன்றுவதாலும்கூட ஓர் இளைஞன் கடவுளைச் சேவிப்பதை விட்டு விலகலாம்.
4. இளைஞர் வழிவிலகிப் போவதற்கு பெரும்பாலும் எது அடிப்படை காரணம்?
4 ஒரு பிள்ளையின் கலகத்தனமான மனப்பான்மையும் நடத்தையும் பொதுவாக ஆவிக்குரிய பலவீனத்தின் அறிகுறிகளாகவும், அவனுடைய இருதயத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் இருக்கின்றன. (நீதிமொழிகள் 15:13; மத்தேயு 12:34) ஓர் இளைஞன் எந்தக் காரணத்திற்காக வழிவிலகிச் சென்றாலும், ‘சத்தியத்தின் திருத்தமான அறிவு’ அவனிடத்தில் இல்லாததே பெரும்பாலும் அப்பிரச்சினைக்கு அடிப்படை காரணம். (2 தீமோத்தேயு 3:7, NW) இயந்திரத்தனமாக யெகோவாவை வணங்காமல், அவருடன் நெருங்கிய தனிப்பட்ட உறவை இளைஞர் வளர்த்துக்கொள்வது அவசியம். அதை செய்ய எது அவர்களுக்கு உதவும்?
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
5. கடவுளுடன் தனிப்பட்ட நெருங்கிய உறவை வளர்ப்பதற்கு ஓர் இளைஞனுக்கு எது முக்கியம்?
5 “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:8, NW) கடவுளிடம் நெருங்கி வர ஒரு சிறுவனுக்கு உதவி செய்ய வேண்டும், அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை மீது வாஞ்சையை வளர்த்துக்கொள்வான். (சங்கீதம் 34:8) ஆரம்பத்தில் அவனுக்கு பைபிளின் அடிப்படை போதகங்களாகிய ‘பால்’ தேவைப்படும். ஆனால், கடவுளுடைய வார்த்தையில் மகிழ்ச்சியை காண ஆரம்பித்து, மெல்ல மெல்ல ‘பலமான ஆகாரத்திடம்,’ அதாவது ஆழமான ஆவிக்குரிய விஷயங்களிடம் ஆர்வத்தை அதிகரிக்கையில் சீக்கிரத்தில் அவன் ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவான். (எபிரெயர் 5:11-14; சங்கீதம் 1:2) இந்த உலக வாழ்க்கைப் போக்கில் முற்றிலும் மூழ்கிவிட்டிருந்ததை ஒப்புக்கொண்ட ஓர் இளைஞன், ஆவிக்குரிய மதிப்பீடுகளை உயர்வாக மதிக்க ஆரம்பித்தான். இப்படி திருந்தி வருவதற்கு அவனுக்கு எது உதவியது? முழு பைபிளையும் வாசிக்கும்படி சொல்லப்பட்ட ஆலோசனையை ஏற்று, தவறாமல் பைபிள் வாசிக்க அட்டவணை போட்டு அதைப் பின்பற்றினான். ஆம், யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதற்கு, கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிப்பது மிக முக்கியம்.
6, 7. கடவுளுடைய வார்த்தை மீது வாஞ்சையை வளர்த்துக்கொள்ள தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?
6 பிள்ளைகள் கடவுளுடைய வார்த்தையின் மீது பிரியத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோர் உதவுவது எவ்வளவு முக்கியம்! தவறாமல் குடும்பப் படிப்பு நடத்தப்பட்ட போதிலும், பருவ வயது பெண் ஒருத்தி போக்கிரிகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டாள். குடும்பப் படிப்பைப் பற்றி அவள் இவ்வாறு சொல்கிறாள்: “அப்பா கேள்விகள் கேட்கையில், அவர் முகத்தைக்கூட பார்க்காமல், பதில்களை அப்படியே வாசித்தேன்.” குடும்பப் படிப்பின்போது, மேலோட்டமாக அப்பகுதியை படித்து முடிப்பதற்கு பதிலாக, ஞானமுள்ள பெற்றோர் கற்பிக்கும் கலையைப் பயன்படுத்துகிறார்கள். (2 தீமோத்தேயு 4:2, NW) அந்தப் படிப்பை ஓர் இளைஞன் அனுபவித்து மகிழ்வதற்கு, அது அவனுடைய அக்கறைகளோடும் தனிப்பட்ட வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டிருப்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும். அவனிடம் நோக்குநிலைக் கேள்விகளைக் கேட்டு, அவன் மனதில் உள்ளவற்றை சொல்ல வைக்கலாம் அல்லவா? சிந்திக்கப்படும் காரியங்களை நடைமுறையில் எப்படி பயன்படுத்தலாம் என சொல்லும்படி இளைஞனை ஊக்குவியுங்கள்.a
7 மேலும், பைபிள் கலந்தாலோசிப்பை சுவாரஸ்யமாக்குங்கள். பொருத்தமான சந்தர்ப்பங்களில் பைபிள் சம்பவங்களையும் நாடகங்களையும் இளைஞர்கள் நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். சிந்திக்கப்படும் சம்பவங்கள் நடந்த இடத்தையும் அதன் அம்சங்களையும் அவர்கள் மனதில் கற்பனை செய்து பார்க்க அவர்களுக்கு உதவுங்கள். வரைபடங்களையும் விளக்கப்படங்களையும் பயன்படுத்துவது உதவியாக இருக்கலாம். ஆம், கொஞ்சம் கற்பனை வளத்தோடு செயல்பட்டால் குடும்பப் படிப்பை உயிரூட்டமுள்ளதாகவும் வித்தியாசப்பட்டதாகவும் ஆக்கலாம். பெற்றோரும், யெகோவாவுடன் தங்களுக்குள்ள உறவைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள்தாமே யெகோவாவிடம் நெருங்கி வருகையில், தங்கள் பிள்ளைகளும் அவ்வாறு நெருங்கி வர அவர்களுக்கு உதவலாம்.—உபாகமம் 6:5-7.
8. கடவுளிடம் நெருங்கி வர ஒருவருக்கு ஜெபம் எவ்வாறு உதவுகிறது?
8 கடவுளிடம் நெருங்கி வர ஒருவருக்கு ஜெபமும் உதவுகிறது. பருவ வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் பெண், கிறிஸ்தவ வாழ்க்கை முறையையா, தன் நம்பிக்கைகளை மதிக்காத நண்பர்களின் கூட்டுறவையா, எதைத் தேர்ந்தெடுப்பது என தெரியாமல் தடுமாறினாள். (யாக்கோபு 4:4) அதைக் குறித்து என்ன செய்தாள்? “வாழ்க்கையில் முதல் முதலாக, என் மனதிலுள்ளதை எல்லாம் கொட்டி உண்மையிலேயே யெகோவாவிடம் ஜெபித்தேன்” என அவள் ஒப்புக்கொண்டாள். முடிவில், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தோழியை கிறிஸ்தவ சபையில் கண்டடைந்தபோது, அது தன் ஜெபத்திற்கு கிடைத்த பதில் என புரிந்துகொண்டாள். யெகோவா தன்னை வழிநடத்துவதை உணர்ந்தவளாய், கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தாள். பெற்றோர் தாங்கள் செய்யும் ஜெபங்களின் தரத்தை முன்னேற்றுவிப்பதன் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம். பெற்றோருக்கும் யெகோவாவுக்கும் இடையில் நிலவும் தனிப்பட்ட உறவை பிள்ளைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் குடும்பமாக சேர்ந்து ஜெபிக்கையில், தங்கள் இருதயத்திலுள்ள அனைத்தையும் பெற்றோர் வெளிப்படுத்தலாம்.
பொறுமையுடன் ஆனால் கண்டிப்புடன் இருங்கள்
9, 10. தான்தோன்றித்தனமாக சென்ற இஸ்ரவேலரிடம் நீடிய பொறுமையுடன் இருந்ததில் யெகோவா என்ன முன்மாதிரியை வைத்தார்?
9 ஓர் இளைஞன் வழிவிலகி செல்ல ஆரம்பிக்கையில் தனிமையில் ஒதுங்கியிருக்க முயலலாம், தன்னோடு ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி பேசுவதற்கு பெற்றோர் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் எதிர்க்கவும் செய்யலாம். இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் பெற்றோர் என்ன செய்யலாம்? பூர்வ இஸ்ரவேலை யெகோவா கையாண்ட விதத்தை கவனியுங்கள். “வணங்காக் கழுத்துள்ள” அந்த இஸ்ரவேலரை தான்தோன்றித்தனமான போக்கில் விட்டுவிடுவதற்கு முன்பாக, 900 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களிடம் பொறுமையாக இருந்தார். (யாத்திராகமம் 34:9; 2 நாளாகமம் 36:17-21; ரோமர் 10:21) அவர்கள் திரும்பத் திரும்ப அவரைப் ‘பரீட்சை பார்த்தபோதிலும்,’ யெகோவா அவர்களிடம் “இரக்கமுள்ளவராய்” இருந்தார். “அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.” (சங்கீதம் 78:38-42) கடவுள் அவர்களை கையாண்ட விதத்தில் தவறேதும் இல்லை. அன்புள்ள பெற்றோர் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். பிள்ளைக்கு உதவ தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடனடியாக பலன் கிடைக்காதபோது, அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.
10 நீடிய பொறுமையுடன் இருப்பது, நெடுங்காலம் துன்பத்தை பொறுத்துக்கொண்டிருப்பதை குறிப்பதில்லை; ஓர் உறவு பாதிக்கப்பட்டிருந்தாலும் அது சரியாகும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருப்பதையும் குறிக்கிறது. நீடிய பொறுமையுடன் இருப்பதில் யெகோவா முன்மாதிரி வைத்தார். இஸ்ரவேலரிடம் ஸ்தானாபதிகளை “திரும்பத் திரும்ப” அனுப்புவதன்மூலம் தாமே முதலாவது முயற்சி எடுத்தார். “அவர்களோ கடவுளின் ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி அவருடைய திருவார்த்தைகளை அசட்டை செய்”தார்கள், இருந்தபோதிலும் யெகோவா ‘தமது ஜனத்தின்மீது . . . இரக்கமுள்ளவராய்’ இருந்தார். (2 நாளாகமம் [தினவர்த்தமானம்] 36:15, 16, தி.மொ.) “ஒவ்வொருவனும் தன்தன் தீய வழியை . . . விட்டுத் திரும்புங்கள்” என்று இஸ்ரவேலரிடம் வேண்டுகோள் விடுத்தார். (எரேமியா 25:4, 5, தி.மொ.) எனினும், யெகோவா தம்முடைய நீதியுள்ள நியமங்களை விட்டுக்கொடுக்கவில்லை. கடவுளிடமும் அவருடைய தராதரங்களிடமும் ‘திரும்பும்படி’ இஸ்ரவேலருக்கு புத்திமதி கூறப்பட்டது.
11. வழிவிலகிச் செல்லும் பிள்ளையின் விஷயத்தில் பெற்றோர் எவ்வாறு நீடிய பொறுமையுடன் ஆனால் கண்டிப்புடன் இருக்கலாம்?
11 வழிவிலகிச் செல்லும் பிள்ளையின் மீதுள்ள நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடுவதற்குப் பதிலாக நீடிய பொறுமையுடன் இருப்பதில் பெற்றோர் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம். பேச்சுத் தொடர்பு தடைபடாமல் காத்துக்கொள்வதற்கு அல்லது அதை மீண்டும் தொடங்குவதற்கு நம்பிக்கை இழந்துவிடாமல் அவர்களே முதலாவது முயற்சி எடுக்கலாம். நீதியுள்ள நியமங்களைக் கடைப்பிடிக்கும் அதேசமயத்தில், சத்தியப் பாதையில் வரும்படி பிள்ளையை “திரும்பத் திரும்ப” தூண்டுவிக்கலாம்.
வயது வராத பிள்ளை சபைநீக்கம் செய்யப்படுகையில்
12. தங்களுடன் வாழும் வயது வராத பிள்ளை சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்படுகையில் பெற்றோருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
12 பெற்றோருடன் வாழ்கிற வயது வராத பிள்ளை படுமோசமான தவறில் ஈடுபட்டு, மனந்திரும்புதலைக் காட்டாததால் சபை நீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது? அந்தப் பிள்ளை தன் பெற்றோருடன் வாழ்வதால், கடவுளுடைய வார்த்தைக்கு இசைய அந்த பிள்ளைக்குப் போதித்து, சிட்சிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இன்னமும் இருக்கிறது. இதை எப்படி செய்யலாம்?—நீதிமொழிகள் 6:20-22; 29:17.
13. தவறு செய்த பிள்ளையின் இருதயத்தை பெற்றோர் எப்படி எட்ட முயலலாம்?
13 தனிப்பட்ட விதத்தில் பைபிளைக் கற்றுக்கொடுக்கையில் இத்தகைய போதனையும் சிட்சையும் அளிக்க முடியலாம், உண்மையில் அது மிகச் சிறந்த வழி. பிள்ளையின் இறுகிய மனநிலையைப் பார்க்காமல் அவனுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு கவனம் செலுத்த பெற்றோர் முயல வேண்டும். அவன் எந்தளவுக்கு ஆவிக்குரிய விதத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்? (நீதிமொழிகள் 20:5) அவனுடைய இருதயத்தின் கனிவான பாகத்தை எட்டக்கூடுமா? எந்த வேதவசனங்களை பலன்தரத்தக்க முறையில் பயன்படுத்தலாம்? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு நமக்கு உறுதியளிக்கிறார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஆம், இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யாதிருக்கும்படி தங்கள் பிள்ளைகளுக்கு சொல்வதோடு பெற்றோர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாது. குணமடையும் வழிமுறையைத் தொடங்கி வைத்து அதை தொடர்வதற்கு அவர்கள் பிரயாசப்படலாம்.
14. தவறு செய்த இளைஞன் யெகோவாவுடன் வைத்திருந்த உறவை மீண்டும் தொடருவதற்கு முதலாவதாக என்ன செய்ய வேண்டும், அதை செய்ய பெற்றோர் அந்தப் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?
14 தவறு செய்த ஓர் இளைஞன் யெகோவாவுடன் வைத்திருந்த உறவை மீண்டும் தொடர வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் முதலாவதாக, ‘மனந்திரும்பி குணப்பட’ வேண்டும். (அப்போஸ்தலர் 3:20; ஏசாயா 55:6, 7) மனந்திரும்புவதற்கு தங்கள் வீட்டிலுள்ள இளைஞனுக்கு உதவி செய்கையில், பெற்றோர் ‘தீமையைச் சகிக்கிறவர்களாயும்’ சாதகமாய் பிரதிபலிக்காத பிள்ளைக்கு ‘சாந்தமாய் உபதேசிக்கிறவர்களாயும்’ இருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 2:24-26) பைபிள் சொல்கிற விதத்தில் அவர்கள் அவனைக் ‘கடிந்துகொள்ள’ வேண்டும். ‘கடிந்துகொள்ளுதல்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையை “உணர வைப்பதற்கு அத்தாட்சியைக் கொடுத்தல்” எனவும் மொழிபெயர்க்கலாம். (வெளிப்படுத்துதல் 3:19; யோவான் 16:8) ஆகையால், கடிந்துகொள்ளுதல் என்பது பிள்ளையுடைய போக்கின் பாவத்தன்மையை அவனுக்கு உணர்த்துவதற்கு போதிய அத்தாட்சியைக் காட்டுவதை உட்படுத்துகிறது. அவ்வாறு செய்வது எளிதல்ல. முடிந்தால், அவனை உணர வைப்பதற்கு வேதப்பூர்வமாய் பொருத்தமாயுள்ள எல்லா வழிவகைகளையும் பயன்படுத்தி இருதயத்தை கனிவிக்கலாம். ‘தீமையை வெறுத்து நன்மையை விரும்புவதன்’ அவசியத்தைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவிசெய்ய வேண்டும். (ஆமோஸ் 5:15) ‘பிசாசின் கண்ணியிலிருந்து தப்பி’ மீண்டும் அவன் ‘மனத் தெளிவு பெறலாம்.’
15. தவறு செய்தவன் யெகோவாவுடன் வைத்திருந்த உறவை மீண்டும் தொடருவதில் ஜெபம் என்ன பங்கை வகிக்கிறது?
15 யெகோவாவுடன் வைத்திருந்த தன் உறவை மீண்டும் தொடர ஒருவருக்கு ஜெபம் இன்றியமையாதது. முன்பு கிறிஸ்தவ சபையிலிருந்த ஒருவர், மனந்திரும்புதலை காட்டாமல் வெளிப்படையாக அந்தப் பாவத்தை தொடருகையில் நிச்சயமாகவே எவரும் அவருக்காக ‘வேண்டுதல் செய்யக்’ கூடாது. (1 யோவான் 5:16, 17; எரேமியா 7:16-20; எபிரெயர் 10:26, 27) என்றபோதிலும், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க தங்களுக்கு ஞானத்தை அருளும்படி யெகோவாவிடம் பெற்றோர் கேட்கலாம். (யாக்கோபு 1:5) சபைநீக்கம் செய்யப்பட்ட ஓர் இளைஞன் மனந்திரும்புவதற்கு அத்தாட்சியை காண்பிக்கிறபோதிலும், ‘கடவுளிடமாக பேச்சு சுயாதீனம்’ இல்லாதவனாக உணரலாம். அப்போது, பிள்ளையின் தவறை மன்னிப்பதற்கான ஆதாரத்தைக் கடவுள் கண்டால் அவருடைய சித்தத்தின்படி செய்வதற்கு பெற்றோர் ஜெபிக்கலாம். (1 யோவான் 3:21, NW) அந்த இளைஞன் இத்தகைய ஜெபங்களை கேட்கையில் யெகோவா இரக்கமுள்ள கடவுள் என்பதை புரிந்துகொள்ள உதவும்.b—யாத்திராகமம் 34:6, 7; யாக்கோபு 5:16.
16. சபைநீக்கம் செய்யப்பட்ட வயது வராத பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
16 முழுக்காட்டப்பட்ட ஓர் இளைஞன் சபைநீக்கம் செய்யப்படுகையில் அவனோடு ‘உறவு வைத்துக் கொள்ளாதிருக்கும்படி’ சபையார் எதிர்பார்க்கப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 5:11, பொ.மொ.; 2 யோவான் 10, 11) இது, முடிவில் அவன் ‘புத்தி தெளிந்து’ கடவுளுடைய பாதுகாப்பான தொழுவத்திற்குத் திரும்புவதற்கு உதவலாம். (லூக்கா 15:17) எனினும், அவன் மனந்திரும்பி வந்தாலும்சரி வராவிட்டாலும்சரி, சபைநீக்கம் செய்யப்பட்ட இளைஞனின் குடும்பத்தாருக்கு சபையார் தைரியம் சொல்லி உற்சாகமூட்டலாம். அவர்களுக்கு ‘அனுதாபம்’ காட்டுவதற்கும் அவர்களிடம் ‘உருக்கமுள்ளோராக’ இருப்பதற்கும் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் அனைவருமே எதிர்நோக்கி இருக்கலாம்.—1 பேதுரு 3:8, 9, தி.மொ.
மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்
17. வழிவிலகிப் போகும் பிள்ளைக்கு உதவ முயற்சி செய்கையில், சபை அங்கத்தினர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?
17 ஓர் இளைஞன் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்படாதிருக்கலாம், ஆனால் அவன் விசுவாசத்தில் பலவீனமாகி இருந்தால் என்ன செய்வது? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் [அவனோடு] கூடப் பாடுபடும்.” (1 கொரிந்தியர் 12:26) அத்தகைய இளைஞனிடம் மற்றவர்கள் அதிக அக்கறை காட்டலாம். ஆனாலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம், ஏனென்றால் ஆவிக்குரிய விதத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் இளைஞனால் மற்ற இளைஞர்களும் மோசமாக பாதிக்கப்பட்டு விடலாம். (கலாத்தியர் 5:7-9) ஒரு சபையில் ஆவிக்குரிய விதமாய் பலவீனமடைந்திருந்த சில இளைஞர்களுக்கு உதவி செய்ய விரும்பிய நல்மனம் படைத்த பெரியவர்கள், பிரபலமான இன்னிசைகளை தங்களோடு சேர்ந்து இசைக்கருவிகளில் இசைக்க அவர்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அத்தகைய கூட்டுறவுகளில் கலந்துகொள்ள உடனடியாக ஒப்புக்கொண்டு, அவற்றை அந்த இளைஞர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். என்றபோதிலும், அவர்கள் ஒருவர் பேரில் ஒருவர் செலுத்திய செல்வாக்கு இறுதியில் சபைக் கூட்டங்களுக்கு வருவதை அவர்கள் அடியோடு நிறுத்திவிடும்படி செய்தது. (1 கொரிந்தியர் 15:33; யூதா 22, 23) ஆவிக்குரிய விதமாய் நோய்ப்பட்டிருக்கும் பிள்ளைக்கு, ஆவிக்குரிய வழிநடத்துதல் இல்லாத சமூக கூட்டுறவுகளல்ல, ஆவிக்குரிய காரியங்களிடம் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள உதவும் கூட்டுறவுகளே குணப்படுவதற்கு உதவும்.c
18. இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட கெட்ட குமாரனுடைய தகப்பனின் மனப்பான்மையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
18 சபையை விட்டு விலகிப்போன ஓர் இளைஞன் ராஜ்ய மன்றத்திற்கு மீண்டும் வருகையில் அல்லது ஒரு மாநாட்டில் கலந்துகொள்கையில் எப்படி உணருவான் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட கெட்ட குமாரனின் தகப்பனைப் போல் வரவேற்கும் மனப்பான்மையை நாம் வெளிக்காட்ட வேண்டுமல்லவா? (லூக்கா 15:18-20, 25-32) கிறிஸ்தவ சபையை விட்டு விலகிய பின்பு, ஒரு மாவட்ட மாநாட்டிற்கு வந்திருந்த இளைஞன் ஒருவன் இவ்வாறு சொன்னான்: “என்னைப் போன்ற ஒருவனை யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தேன்; ஆனால் சகோதர சகோதரிகள் வந்து பேசி என்னை வரவேற்றார்கள். நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்.” அவன் மீண்டும் பைபிளை படிக்க தொடங்கி, பின்னர் முழுக்காட்டப்பட்டான்.
முயற்சியை கைவிடாதீர்கள்
19, 20. கெட்ட குமாரனை போன்ற ஒரு பிள்ளையைக் குறித்ததில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்?
19 “கெட்ட குமாரனை” போன்ற ஒரு பிள்ளை ‘புத்தி தெளிந்தவனாவதற்கு’ உதவி செய்வதில் பொறுமை தேவை; பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் அது சவாலாக இருக்கலாம், ஆனால் முயற்சியைக் கைவிடாதீர்கள். “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) ஆட்கள் மனந்திரும்பி உயிர்வாழும்படியே யெகோவா விரும்புகிறார் என்று பைபிள் வசனங்கள் நமக்கு உறுதியளிக்கின்றன. சொல்லப்போனால், மனிதர்கள் தம்முடன் ஒப்புரவாவதற்கான ஏற்பாட்டை அவரே முன்வந்து செய்திருக்கிறார். (2 கொரிந்தியர் 5:18, 19) அவருடைய பொறுமை, லட்சக்கணக்கானோர் புத்தி தெளிந்தவர்களாக ஆவதை சாத்தியமாக்கியிருக்கிறது.—ஏசாயா 2:2, 3.
20 எனவே, கெட்ட குமாரனை போலாகியிருக்கும் வயது வராத தங்கள் பிள்ளையும் புத்தி தெளிந்தவனாக ஆகும்படி உதவுவதற்கு, பெற்றோர் தங்களால் முடிந்த வேதப்பூர்வ முறைகள் அனைத்தையும் முயன்று பார்க்க வேண்டும் அல்லவா? யெகோவாவிடம் திரும்பி வரும்படி உங்கள் பிள்ளைக்கு உதவுவதில் திட்டவட்டமான முயற்சிகளை எடுக்கையில் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றி நீங்கள் நீடிய பொறுமையுடன் இருங்கள். பைபிள் நியமங்களை உறுதியாய் பின்பற்றி, யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிக்கையில், அன்பு, நீதி, ஞானம் ஆகிய அவருடைய குணங்களை வெளிக்காட்ட முயற்சி செய்யுங்கள். கடினமான கலகக்காரர் பலர், திரும்பி வரும்படியான யெகோவாவின் அன்பான அழைப்பை ஏற்றிருப்பது போல, கெட்ட குமாரனைப் போன்ற உங்கள் மகனோ மகளோ கடவுளுடைய பாதுகாப்பான மந்தையிடம் திரும்பி வரலாம்.—லூக்கா 15:6, 7.
[அடிக்குறிப்புகள்]
a பலன்தரத்தக்க முறையில் இளைஞர்களுக்கு கற்பிப்பது சம்பந்தமாக கூடுதலான ஆலோசனைகளுக்கு, காவற்கோபுரம், ஜூலை 1, 1999, பக்கங்கள் 13-17-ஐக் காண்க.
b சபைநீக்கம் செய்யப்பட்டவனின் நிலைமையை மற்றவர்கள் அறியாதிருப்பதால், வயது வராத பிள்ளையின் சார்பாக செய்யப்படும் அப்படிப்பட்ட ஜெபங்கள் சபை கூட்டங்களில் வெளிப்படையாக செய்யப்படுவதில்லை.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), அக்டோபர் 15, 1979, பக்கம் 31-ஐக் காண்க.
c திட்டவட்டமான ஆலோசனைகளுக்கு, ஆங்கில விழித்தெழு!, ஜூன் 22, 1972, பக்கங்கள் 13-16; செப்டம்பர் 22, 1996, பக்கங்கள் 21-3 ஆகியவற்றைக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இளைஞர் சபையை விட்டுவிலகுகையில் அந்தப் பிரச்சினைக்கு எது அடிப்படை காரணமாக இருக்கலாம்?
• யெகோவாவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள இளைஞருக்கு எவ்வாறு உதவலாம்?
• கெட்ட குமாரனை போன்ற பிள்ளைக்கு உதவுவதில் பெற்றோர் ஏன் நீடிய பொறுமையுடன் ஆனால் கண்டிப்புடன் இருக்க வேண்டும்?
• கெட்ட குமாரனை போன்ற இளைஞன் திரும்பி வருவதற்கு சபையிலுள்ளோர் எவ்வாறு உதவலாம்?
[பக்கம் 15-ன் படம்]
பெற்றோரின் இருதயப்பூர்வமான ஜெபம், பெற்றோருக்கும் யெகோவாவுக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட உறவை பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவலாம்
[பக்கம் 15-ன் படம்]
யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதற்கு கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது முக்கியம்
[பக்கம் 17-ன் படம்]
கெட்ட குமாரனை போன்ற பிள்ளை ‘புத்தி தெளிந்தவனாகையில்’ அவனுக்கு வரவேற்பளியுங்கள்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவிடம் திரும்பி வர உங்கள் பிள்ளைக்கு உதவுவதில் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுங்கள்