உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பது என்றால் என்ன?
உண்மைப்பற்றுறுதிக்கு இலக்கணமாய் விளங்குபவர்கள் தாங்களே என பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத ஹசிடிம் நினைத்தனர். ஏனெனில் அவர்கள் வைத்திருக்கும் இந்தப் பெயர், “உண்மைப்பற்றுறுதி” என்பதன் எபிரெய வேர் சொல்லாகிய ஹாசிட் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இது ஹிசெட் என்ற பெயர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. “அன்புள்ள தயவு,” “பற்றுமாறா அன்பு,” “தயவு,” “நற்குணம்,” “இரக்கம்” என்றெல்லாம் இது அடிக்கடி மொழிபெயர்க்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) கூறுகிறபடி, ஹிசெட் “சுறுசுறுப்பானது, கூடிப்பழகும் இயல்புடையது, சகிக்கும் தன்மையுடையது; இது வெறும் மனித மனப்பான்மை மட்டுமல்ல, ஆனால் அந்த மனப்பான்மை தூண்டுவிக்கும் செயலையும் குறிக்கிறது. இது உயிரை பாதுகாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு செயல். ஒருவருக்கு இன்னலோ துன்பமோ நேரிடுகையில் உதவிக்கு வருவது. இது நட்பின் வெளிக்காட்டு.”
பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த எபிரெய பதத்திற்கு ஒத்த முழுமையான அர்த்தத்தை கொடுக்கும் ஒரு வார்த்தை அநேக மொழிகளில் இல்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை. எப்படியிருந்தபோதிலும், பைபிள் சொல்கிறபடி, உண்மைப்பற்றுறுதி என்பது வாக்குறுதிகளை உண்மையோடு கடைப்பிடிப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் எதார்த்தமாக செயல்படுவதை மட்டுமல்லாமல் அன்பான பற்றுதலையும் உட்படுத்துகிறது. மெய்யான உண்மைப்பற்றுறுதி எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அறிய ஆபிரகாம், மோசே, தாவீது, இஸ்ரவேலர் மற்றும் பொதுவில் மனிதகுலத்திடம் யெகோவா இதை எப்படி மெய்ப்பித்துக் காட்டினார் என்பதை கவனியுங்கள்.
உண்மைப்பற்றுறுதியை யெகோவா மெய்ப்பித்துக் காட்டினார்
தம் நண்பனாகிய ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: ‘நான் உனக்குக் கேடகம்.’ (ஆதியாகமம் 15:1; ஏசாயா 41:8) இவை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆபிரகாமையும் அவருடைய வீட்டாரையும் பார்வோனிடமிருந்தும் அபிமெலேக்கிடமிருந்தும் பாதுகாத்து, விடுவித்தார். நான்கு ராஜாக்களின் கைகளிலிருந்து லோத்தை விடுவிக்க ஆபிரகாமுக்கு அவர் உதவினார். 100 வயதான ஆபிரகாம் மற்றும் 90 வயதான சாராள் மூலமாக வாக்குப்பண்ணப்பட்ட வித்து வருவதற்காக அவர்களுக்கு பிள்ளை பிறப்பிக்கும் சக்தியை யெகோவா திரும்ப கொடுத்தார். தரிசனங்கள், சொப்பனங்கள், தூதர்கள் மூலமாக யெகோவா ஆபிரகாமிடம் தவறாமல் தொடர்பு கொண்டார். சொல்லப்போனால், ஆபிரகாம் உயிருடன் இருக்கும்போதும் அவருடைய மரணத்திற்கு வெகுகாலத்திற்கு பிற்பாடும் அவரோடுள்ள உண்மைப்பற்றுறுதியை யெகோவா மெய்ப்பித்துக் காட்டினார். பல நூற்றாண்டுகளாகவே, ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரவேலரிடம்—அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டபோதிலும்—யெகோவா தம் வாக்குறுதிகளை நிறைவேற்றினார். ஆபிரகாமுடன் யெகோவா வைத்திருந்த உறவு மெய்யான உண்மைப்பற்றுறுதிக்கு வெளிக்காட்டாக இருந்தது—அன்பு செயலில் வெளிப்பட்டது.—ஆதியாகமம் 12 முதல் 25 அதிகாரங்கள்.
‘ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, [யெகோவா] மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்’ என சொல்லப்பட்டது. (யாத்திராகமம் 33:11) ஆம், இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த எந்தத் தீர்க்கதரிசியும் அனுபவித்திராத அளவுக்கு மிகவும் நெருக்கமான உறவை யெகோவாவுடன் மோசே வைத்திருந்தார். மோசேயிடம் உண்மைப்பற்றுறுதியை யெகோவா எப்படி நிரூபித்துக் காட்டினார்?
பலமும் திறமையும் படைத்த 40 வயதான மோசே, தகாத துணிவுடன் தன்னுடைய ஜனங்களை விடுவிப்பதற்கான பொறுப்பை தானே எடுத்துக்கொண்டார். ஆனால் அதற்குரிய நேரம் இன்னும் வராதிருந்தது. தன் உயிரை பாதுகாத்துக்கொள்ள அவர் தப்பியோட வேண்டியிருந்தது. 40 வருடங்கள் மீதியான் தேசத்தில் ஆடுகளை மேய்த்து வந்தார். (அப்போஸ்தலர் 7:23-30) இருந்தாலும், அவரை யெகோவா புறக்கணித்துவிடவில்லை. தக்க சமயம் வந்தபோது இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிப்பதற்கு மோசே மீண்டும் அழைத்து வரப்பட்டார்.
அவ்வாறே, இஸ்ரவேலில் புகழ்பெற்ற இரண்டாவது ராஜாவாகிய தாவீதினிடமும் யெகோவா உண்மைப்பற்றுறுதியை மெய்ப்பித்துக் காட்டினார். தாவீது இளைஞனாக இருக்கும்போதே, “இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு” என்று தீர்க்கதரிசியாகிய சாமுவேலிடம் யெகோவா கூறினார். அப்போதிலிருந்து இஸ்ரவேல் முழுவதையும் ஆளும் ராஜாவாக ஆவதற்குரிய பக்குவம் வரும்வரையில் யெகோவா உண்மைப்பற்றுறுதியுடன் தாவீதை பாதுகாத்து வழிநடத்தினார். “சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும்” பெலிஸ்த இராட்சதனான கோலியாத்தின் கைக்கும் அவரை யெகோவா தப்புவித்தார். இஸ்ரவேலின் எதிரிகளை முறியடிப்பதில் தாவீதுக்கு வெற்றிமேல் வெற்றியை தேடித் தந்தார்; பொறாமையும் பகைமையும் கொண்ட சவுலின் ஈட்டிக்கும் தாவீதை யெகோவா தப்புவித்தார்.—1 சாமுவேல் 16:12; 17:37; 18:11; 19:10.
உண்மையில் தாவீது பரிபூரண மனிதர் அல்ல. சொல்லப்போனால், அவர் பெரும் பாவத்தை செய்தார். இருந்தாலும், உள்ளப்பூர்வமாக மனந்திரும்பிய தாவீதை புறக்கணிப்பதற்குப் பதிலாக பற்றுமாறா அன்பை யெகோவா அவரிடம் காண்பித்தார். தாவீதின் வாழ்நாள் பூராவும் யெகோவா பல சந்தர்ப்பங்களில் அவருடைய உயிரை பாதுகாத்து மேம்படச் செய்தார். துன்பப்படுபவரின் சார்பாக உதவிக்கு வந்தார். உண்மையில், இதுவே அன்புள்ள தயவு!—2 சாமுவேல் 11:1–12:25; 24:1-17.
சீனாய் மலை அருகே மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி செய்வதாக ஒப்புக்கொண்டபோது இஸ்ரவேல் தேசம் முழுவதும் யெகோவாவுடன் விசேஷித்த ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் வந்தது. (யாத்திராகமம் 19:3-8) ஆகவே, இஸ்ரவேலர் யெகோவாவுடன் திருமண உறவுக்குள் இணைக்கப்பட்டிருப்பதைப் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். இஸ்ரவேலைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது: ‘மனைவியைப் போல இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார்.’ மேலும் “நித்திய கிருபையுடன் [“அன்புள்ள தயவுடன்,” NW] உனக்கு இரங்குவேன்” என அவளிடம் யெகோவா சொன்னார். (ஏசாயா 54:6, 8) இந்த விசேஷித்த உறவில் யெகோவா எப்படி உண்மைப்பற்றுறுதியை மெய்ப்பித்து காட்டினார்?
இஸ்ரவேலர்களின் தேவைகளை கவனித்து, தம்மோடுள்ள பிணைப்பை வலுப்படுத்த யெகோவாவே முன்வந்தார். அவர்களை அவர் எகிப்திலிருந்து விடுவித்து, ஒரு தேசமாக ஒழுங்கமைத்து, “பாலும் தேனும் ஓடுகிற” தேசத்திற்கு அழைத்து சென்றார். (யாத்திராகமம் 3:8) ஆசாரியர்கள், லேவியர்கள், அடுத்தடுத்து வந்த பல தீர்க்கதரிசிகள், இன்னும் தூதுவர்கள் மூலமாக அவர் தவறாமல் ஆவிக்குரிய போதனையை அளித்து வந்தார். (2 நாளாகமம் 17:7-9; நெகேமியா 8:7-9; எரேமியா 7:25) அவர்கள் வேறு கடவுட்களை சேவிக்கத் தொடங்கியபோது, அவர் கண்டித்தார். அவர்கள் மனந்திரும்பியபோது அவர்களை மன்னித்தார். இஸ்ரவேல் தேசம், அடங்காத ‘மனைவியாகவே’ இருந்தது வாஸ்தவம்தான். எனினும், யெகோவா அவசரப்பட்டு அவளை புறக்கணித்துவிடவில்லை. ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் காரணமாக, அவற்றோடு சம்பந்தப்பட்ட தம் நோக்கங்கள் நிறைவேறுமட்டும் அவர் இஸ்ரவேலரோடு உண்மைப்பற்றுறுதியை காத்து வந்தார். (உபாகமம் 7:7-10) இன்றைய தம்பதிகளுக்கு இது எப்பேர்ப்பட்ட அருமையான எடுத்துக்காட்டு!
பொதுவில் மனிதகுலத்திடமும் யெகோவா உண்மைப்பற்றுறுதியை மெய்ப்பித்துக் காட்டுகிறார். நீதியுள்ளவர்கள், அநீதியுள்ளவர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லாருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து தம் உண்மைப்பற்றுறுதியைக் காட்டியிருக்கிறார். (மத்தேயு 5:45; அப்போஸ்தலர் 17:25) எல்லாவற்றிற்கும் மேலாக மனிதகுலம் முழுவதும் பாவம் மற்றும் மரணத்தின் கட்டிலிருந்து விடுபட்டு, பரிபூரணமாக பரதீஸில் என்றென்றும் வாழும் மகத்தான எதிர்பார்ப்புகளை அனுபவிப்பதற்காக தம் குமாரனையே மீட்கும் பலியாக கொடுத்திருக்கிறார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) உயிரை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அவர் எடுத்த உச்சக்கட்ட நடவடிக்கையே மீட்கும் பொருளின் இந்த ஏற்பாடு. இது உண்மையில், “ஒருவருக்கு இன்னலோ துன்பமோ நேரிடுகையில் உதவிக்கு வருவதாக” இருந்தது.
உண்மைப்பற்றுறுதியை செயலில் காட்டுங்கள்
அன்புள்ள தயவை போன்றே உண்மைப்பற்றுறுதிக்கும் பலமான பரஸ்பர உணர்வு உள்ளது. உங்களிடம் அன்புள்ள தயவு காட்டப்படுகிறதென்றால், அதையே நீங்களும் வெளிக்காட்டும்படி எதிர்பார்க்கப்படலாம். உண்மைப்பற்றுறுதி என்ற குணம் பதிலுக்கு திரும்ப காட்டப்படுகிறது. ஹிசெட் என்பதோடு சம்பந்தப்பட்டுள்ள இந்த வார்த்தையின் அர்த்தத்தை தாவீது நன்கு அறிந்திருந்தார் என்பது அவருடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது: ‘உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, . . . உமது நாமத்தைத் துதிப்பேன்.’ ஏன்? ‘உமது கிருபையினிமித்தமும் [“அன்புள்ள தயவினிமித்தமும்,” NW] உமது உண்மையினிமித்தமுமே.’ (சங்கீதம் 138:2) யெகோவாவிடமிருந்து அன்புள்ள தயவைப் பெற்றதால் அது அவரை வணங்குவதற்கும் துதிப்பதற்கும் தாவீதை தூண்டியது. ஆகவே, நம்மிடம் யெகோவா காண்பிக்கிற அன்புள்ள தயவை தியானிக்கையில் அதற்குப் பிரதிபலனாக நாமும் அவ்வாறே செயல்படும்படி தூண்டப்படுகிறோமா? உதாரணமாக, யெகோவாவின் பெயர் நிந்திக்கப்படுகிறதென்றால், அவரது பெயரின் பேரிலான உங்கள் அக்கறை அவருக்கு ஆதரவாக பேசும்படி உங்களை தூண்டுகிறதா?
புதிதாக கிறிஸ்தவரான ஒருவரும் அவருடைய மனைவியும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த உறவினர் ஒருவரின் சவ அடக்க நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில் நடந்தது இதுதான். அது மதசார்பற்ற நிகழ்ச்சியாக இருந்தது. அங்கு வந்திருந்தவர்கள் மரித்தவரை பற்றி ஏதாகிலும் சொல்ல விரும்பினால் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த இளைஞனுடைய அகால மரணத்திற்கு காரணம், ‘கடவுளுக்கு அவர் வேண்டும், அதனால் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார்’ என கடவுளை பழித்து பேச ஆரம்பித்தார் ஒரு பேச்சாளர். அதைக் கேட்டுக்கொண்டு அந்த கிறிஸ்தவ சகோதரரால் சும்மா இருக்க முடியவில்லை. அவரிடம் பைபிளும் இல்லை, எந்த குறிப்புத்தாளும் இல்லை. இருந்தாலும் மேடையில் ஏறினார். “இரக்கமும் பரிவும் உள்ள சர்வவல்லமையுள்ள கடவுள் இப்படிப்பட்ட காரியங்களை அனுமதிக்கிறார் என நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேட்டார். அதைத் தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு நாம் ஏன் மரிக்கிறோம், மனிதகுலத்தை மரணத்திலிருந்து விடுவிக்க கடவுள் என்ன செய்திருக்கிறார், உயிர்த்தெழுந்து பரதீஸிய பூமியில் என்றென்றுமாக வாழ்வதற்கான அருமையான எதிர்பார்ப்பு ஆகியவற்றை பற்றிய வேத வசனங்களைக் குறிப்பிட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஒரு பேச்சைக் கொடுத்தார். கூடிவந்திருந்த 100-க்கும் மேற்பட்டோரின் கரவொலி வெகு நேரத்திற்கு நீடித்தது. பிற்பாடு அந்த சகோதரர் இவ்வாறு சொன்னார்: “அப்படிப்பட்ட உள்ளான மகிழ்ச்சியை அதுவரை அடைந்ததே இல்லை. அவருடைய ஞானத்தை எனக்கு போதித்து அவருடைய பரிசுத்த பெயரின் சார்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அளித்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன்.”
யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவது, அவருடைய வார்த்தையாகிய பைபிளுக்கு உண்மைப்பற்றுறுதி காட்டுவதையும் உட்படுத்துகிறது. ஏன்? ஏனென்றால் எப்படி வாழ வேண்டும் என்பதை பைபிள் வாயிலாக அவர் நமக்கு போதிக்கிறார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டங்களும் நியமங்களும் உண்மையில் தரமானவையும் வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமானவையுமாகும். (ஏசாயா 48:17) மற்றவர்கள் தரும் கஷ்டங்களோ உங்களுடைய சொந்த பலவீனங்களோ உங்களை யெகோவாவின் கட்டளைகளைவிட்டு விலகிப்போவதற்கு அனுமதிக்காதீர்கள். கடவுளுடைய வார்த்தைக்கு எப்போதும் உண்மைப்பற்றுறுதி உள்ளவர்களாக இருங்கள்.
கடவுளுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பது அவருடைய அமைப்புக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதையும் குறிக்கிறது. கடந்த பல வருடங்களில், சில வசனங்களை புரிந்துகொள்வதில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் போன்று யாருமே ஆவிக்குரிய விதத்தில் நன்கு போஷிக்கப்படவில்லை என்பதே உண்மை. (மத்தேயு 24:45-47) தம்முடைய நவீன நாளைய அமைப்பை யெகோவா உண்மையுடன் ஆதரித்து வந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நாமும் அவ்வாறு ஆதரிக்கலாம் அல்லவா? ஏ. எச். மேக்மிலன் அவ்வாறே செய்தார். அவருடைய மரணத்திற்கு சற்று முன்பு அவர் இவ்வாறு சொன்னார்: “செப்டம்பர் 1900-ம் ஆண்டில் என்னுடைய 23-ம் வயதில் கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்தபோது சிறியளவில் ஆரம்பித்த யெகோவாவின் அமைப்பு, அவருடைய சத்தியங்களை வைராக்கியமாக அறிவிக்கும் மகிழ்ச்சியான ஜனங்களின் உலகளாவிய சமுதாயமாக வளர்ச்சியடைந்திருப்பதை கண்டிருக்கிறேன். . . . என்னுடைய பூமிக்குரிய சேவையின் முடிவு நெருங்க நெருங்க, யெகோவா தம்முடைய ஜனங்களை வழிநடத்தி அவர்களுக்கு உண்மையில் தேவையானவற்றை தகுந்த நேரத்தில் கொடுத்திருப்பதை எப்போதையும்விட உறுதியாக நம்புகிறேன்.” சகோதரர் மேக்மிலன் ஆகஸ்ட் 26, 1966-ல் மரிக்கும் வரை சுமார் 66 ஆண்டுகள் விசுவாசத்துடனும் உண்மைப்பற்றுறுதியுடனும் சேவை செய்தார். அவர் கடவுளுடைய காணக்கூடிய அமைப்புக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருந்ததற்கு மிகச் சிறந்த முன்மாதிரி.
அமைப்புக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதோடு ஒருவருக்கொருவர் நாம் உண்மைப்பற்றுறுதியோடு இருப்போமா? கடுமையான துன்புறுத்துதலின் அபாயத்தை எதிர்ப்படுகையில் நம் சகோதர சகோதரிகளிடம் உண்மைப்பற்றுறுதியோடு இருப்போமா? இரண்டாம் உலகப்போரின்போது நெதர்லாந்திலுள்ள நம் சகோதரர்கள் உண்மைப்பற்றுறுதிக்கு உதாரண புருஷர்களாக திகழ்ந்தார்கள். க்ரோனிங்கன் சபையைச் சேர்ந்த க்லாஸ் ட வ்ரிஸ் என்ற மூப்பரை நாசி கெஸ்டாப்போ ஆட்கள் ஈவிரக்கமின்றி கொடுமையாக விசாரணை செய்து, 12 நாட்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே கொடுத்து தனி அறையில் அடைத்து வைத்தனர். பின்பு மறுபடியும் விசாரணை செய்தனர். அவருக்கு நேராக ரிவால்வரை நீட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டி, பொறுப்புள்ள சகோதரர்களின் விலாசத்தையும் அதோடு மற்ற முக்கிய தகவல்களையும் சொல்லும்படி அவருக்கு இரண்டு நிமிட அவகாசம் கொடுத்தனர். க்லாஸ் சொன்ன ஒரே விஷயம் இதுதான்: “நீங்கள் என்னிடமிருந்து கூடுதலாக எதையும் தெரிந்துகொள்ளப் போவதில்லை. . . . நான் நம்பிக்கை துரோகியாக மாறப்போவதில்லை.” ரிவால்வரை நீட்டி மூன்று முறை அவரை பயமுறுத்தினர். கடைசியில் கெஸ்டாப்போ ஆட்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு க்லாஸை மற்றொரு சிறைக்கு அனுப்பினர். அவர் தன்னுடைய சகோதரர்களை காட்டிக்கொடுக்கவே இல்லை.
நமக்கு வெகு நெருங்கிய பந்தத்திலுள்ள மணத்துணையிடம் உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவோமா? இஸ்ரவேலருடன் செய்த உடன்படிக்கையின் உறவை யெகோவா உயர்வாக மதித்தார். அதுபோல நாம் நம்முடைய திருமண வாக்குறுதிகளுக்கு உண்மைப்பற்றுறுதியைக் காட்டுகிறோமா? நம் கடமையில் தவறாமல் இருப்பதோடு துணையுடன் நெருங்கிய உறவையும் ஊக்கமாக வளர்த்துவர வேண்டும். உங்கள் மண வாழ்க்கையை பாதுகாக்க முயலுங்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவழியுங்கள்; இயல்பாக ஒளிவுமறைவின்றி பேசுங்கள்; ஒருவரையொருவர் ஆதரித்து, ஊக்குவியுங்கள்; பேசுகையில் காதுகொடுத்து கேளுங்கள்; சிரித்தாலும், அழுதாலும், விளையாடினாலும் சேர்ந்தே செய்யுங்கள். பரஸ்பர இலக்குகளை அடைவதற்காக சேர்ந்து உழையுங்கள், ஒருவரையொருவர் சந்தோஷப்படுத்துங்கள், நண்பர்களாயிருங்கள். மற்றவர்கள் மீது காதலுணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ளாதவாறு மிகவும் கவனமாயிருங்கள். திருமண பந்தத்திற்குள் இல்லாத மற்றவர்களுடன் நன்கு பழகுவதும், நெருங்கிய நட்புறவுகளை வளர்த்துக் கொள்வதும்கூட சரியானதாகவும் தகுந்ததாகவும் இருந்தாலும் காதலுணர்ச்சிகளை உங்கள் துணையுடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வேறு யாரும் நுழைய இடமளிக்காதீர்கள்.—நீதிமொழிகள் 5:15-20.
விசுவாசத்திலுள்ள நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் உண்மைப்பற்றுறுதியுடன் இருங்கள். வருடங்கள் செல்லச் செல்ல அவர்களை மறந்துவிடாதீர்கள். அவர்களோடு எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்; கடிதம் எழுதுங்கள், தொலைபேசி மூலம் பேசுங்கள், சென்று சந்தியுங்கள். வாழ்க்கையில் உங்களுடைய சூழ்நிலை எதுவாயினும் அவர்களுக்கு ஏமாற்றமளிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றி முழுக்க தெரிந்தவர்கள் அவர்களே அல்லது உங்களுக்கு அவர்கள் வேண்டியவர்கள் என்று சொல்வதன் மூலம் அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உண்மைப்பற்றுறுதியுடன் நடந்துகொள்வது சரியானதை செய்வதற்கான மனபலத்தை உங்களுக்கு அளிக்கும்; அது உங்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுமூலமாகவும் இருக்கும்.—எஸ்தர் 4:6-16.
ஆம், உண்மைப்பற்றுறுதி மதிப்புள்ள உறவை காத்துக்கொள்வதற்கு உதவும் திட்டவட்டமான செயல்களையும் அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் அன்புள்ள தயவுக்கு பிரதிபலனாக நீங்கள் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். கிறிஸ்தவ சபையிலும், துணையிடமும், குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் யெகோவாவின் உண்மைப்பற்றுறுதியைப் பின்பற்றி நடவுங்கள். யெகோவாவின் நற்குணங்களைப் பற்றி உண்மைப்பற்றுறுதியுடன் அக்கம்பக்கத்தாருக்கு அறிவியுங்கள். சங்கீதக்காரன் சரியாகவே இவ்வாறு சொன்னார்: “கர்த்தரின் கிருபைகளை [“அன்புள்ள தயவின் செயல்களை,” NW] என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.” (சங்கீதம் 89:1) இப்படிப்பட்ட கடவுளிடம் நாம் ஈர்க்கப்படவில்லையா? நிச்சயமாகவே, “அவருடைய கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றென்றைக்கும் . . . உள்ளது.”—சங்கீதம் 100:5.
[பக்கம் 23-ன் படம்]
ஏ. எச் மேக்மிலன்