உங்களால் உலகை மேம்படுத்த முடியுமா?
“அரசியலால் கட்டுக்கோப்பான சமுதாயத்தை மீண்டும் ஏற்படுத்த முடியாது. பாரம்பரிய ஒழுக்க நெறிகளை மீண்டும் ஸ்தாபிக்க அதற்கு சக்தி இல்லை. உயர்ந்த கொள்கைகளால்கூட, காதலீடுபாடு அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட பழைய நெறிமுறைகளை மீண்டும் நிலைநாட்ட முடியாது, பொறுப்புள்ள அப்பாக்களை உருவாக்க முடியாது, மக்களை கொதித்தெழவோ வெட்கப்படவோ செய்ய முடியாது. . . . நம்மை தொல்லைபடுத்தும் பெரும்பாலான ஒழுக்கநெறி பிரச்சினைகளை சட்டத்தால் ஒழிக்கவே முடியாது.”
ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் அரசாங்க உதவியாளர் கூறிய இந்த வார்த்தைகளை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், பேராசை, குடும்பப் பாசமின்மை, கட்டுப்பாடற்ற நெறிமுறை, அறியாமை ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சினைகளுக்கும், சமுதாயத்தின் கட்டுக்கோப்பை அரித்துத் தின்னும் வேறுபல காரணிகளுக்கும் பரிகாரம்தான் என்ன? இதற்கு பரிகாரமே இல்லை என சிலர் நினைக்கிறார்கள். ஆகவே தங்களால் முடிந்தளவு வாழ்க்கையை சிறப்பாக ஓட்டப் பார்க்கிறார்கள். வசீகரமும் திறமையுமிக்க ஒரு தலைவர்—ஒருவேளை மதத் தலைவர்—என்றாவது ஒரு நாள் தோன்றி அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவார் என வேறு சிலர் நம்புகிறார்கள்.
சொல்லப்போனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை தங்களுடைய ராஜாவாக்க ஜனங்கள் விரும்பினார்கள். அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் ஆட்சி செய்ய அவரே தகுதியானவர் என்றும் உணர்ந்ததால் அவ்வாறு விரும்பினார்கள். இருந்தாலும், அவர்களுடைய உள்நோக்கங்களை இயேசு அறிந்தபோது அவர் உடனடியாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார். (யோவான் 6:14, 15) “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என பிற்பாடு ரோம அதிபதியிடத்தில் அவர் கூறினார். (யோவான் 18:36) இருந்தாலும், இன்று பெரும்பாலானோர்—அவருடைய சீஷர்கள் என சொல்லிக்கொள்ளும் மதத் தலைவர்களும்கூட—இயேசுவைப் போல் உறுதியாக நிற்பதில்லை. இவர்களில் சிலர் ஆட்சியாளர்களை தூண்டிவிடுவதன் மூலமோ தாங்களே அரசாங்க பொறுப்பை வகிப்பதன் மூலமோ இந்த உலகை மேம்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். 1960 மற்றும் 1970-களில் நடந்த சம்பவங்களிலிருந்து இவற்றை காணலாம்.
உலகை மேம்படுத்த மதத்தின் முயற்சிகள்
1960-களின் கடைசி வருடங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த சில இறையியலாளர்கள் ஏழைகளுக்காகவும் கொடுமைப்படுத்தப்பட்ட ஜனங்களுக்காகவும் போராடினார்கள். இதற்காக விடுதலை இறையியல் (liberation theology) என்பதை உருவாக்கினார்கள். பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமல்ல, அரசியல் மற்றும் பொருளாதார அம்சத்திலும்கூட கிறிஸ்து இரட்சகராக இருக்கிறார் என அதில் சுட்டிக்காட்டப்பட்டது. ஐக்கிய மாகாணங்களில், சீரழிந்து வரும் ஒழுக்க தராதரத்தைக் குறித்து அதிகம் கவலைகொண்ட எண்ணற்ற சர்ச் தலைவர்கள் மாரல் மெஜாரிட்டி (Moral Majority) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். சிறந்த குடும்ப நெறிமுறைகளை சட்டங்களாக வகுத்துக் கொடுக்கும் அரசாங்க அதிகாரிகளை பதவியில் ஏற்றுவதே அதன் இலட்சியமாக இருந்தது. அவ்வாறே அநேக இஸ்லாமிய தேசங்களிலுள்ள குழுக்களும், குர்ஆனை முழுமையாக கடைப்பிடிக்க ஊக்குவிப்பதன் மூலம் ஊழலையும் அட்டூழியத்தையும் கட்டுப்படுத்த முயற்சி செய்திருக்கின்றன.
இப்படிப்பட்ட முயற்சிகளால் இந்த உலகம் மேம்பட்டுவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா? விடுதலை இறையியல் பிரபலமாக இருந்த நாடுகள் உட்பட, எல்லா நாடுகளிலும் ஒழுக்க தராதரங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதையும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவு விரிவடைந்து கொண்டிருப்பதையுமே உண்மைகள் காட்டுகின்றன.
மாரல் மெஜாரிட்டியின் இலட்சியங்கள் ஐக்கிய மாகாணங்களில் தோல்வியடைந்ததால், அந்த அமைப்பை உருவாக்கிய ஜெரி ஃபால்வெல் 1989-ல் அதைக் கலைத்துவிட்டார். மற்ற அமைப்புகள் அதன் இடத்தை எடுத்துக்கொண்டன. இருந்தாலும், “மாரல் மெஜாரிட்டி” என்ற பெயரை முதன்முதலில் உருவாக்கிய பால் வேரிச் இன்றைய கிறிஸ்தவம் (ஆங்கிலம்) என்ற பத்திரிகையில் இவ்வாறு எழுதினார்: “அரசியலில் நாங்கள் வெற்றிகள் பெற்றாலும் நாங்கள் முக்கியமாக கருதிய திட்டங்களை செயல்படுத்த முடியாமல் அந்த வெற்றிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.” அவர் மேலும் எழுதியதாவது: “நாகரிகம் இன்னும் பெரிய சாக்கடையாக மாறிவருகிறது. முன்னொருபோதும் இல்லாத மாபெரும் நாகரிக வீழ்ச்சியில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்; இப்பேர்ப்பட்ட வீழ்ச்சி அரசியலையும் திக்குமுக்காட செய்கிறது.”
அரசியலின் துணையால் சமுதாயத்தை உயர்த்த முயலுவதில் காணப்படும் அடிப்படை தவறை பத்திரிகை எழுத்தாளரும் நூலாசிரியருமான கால் தாமஸ் இவ்வாறு அறிவித்தார்: “உண்மையான மாற்றம் அரசியல் சீர்திருத்தங்களால் ஏற்படுவது அல்ல, ஆனால் தனிநபர்களின் மாற்றத்தால் ஏற்படுவதே. ஏனெனில் நம்முடைய முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரம் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்டவை அல்ல, ஆனால் ஆன்மீகம் மற்றும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை.”
ஆனால் எந்தவொரு தராதரமும் இல்லாத, எது சரி எது தவறு என்பதை ஜனங்களே தீர்மானிக்கும் இந்த உலகில், ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி பிரச்சினைகளை நீங்கள் எப்படி தீர்ப்பீர்கள்? செல்வாக்குமிக்கவர்களாலும் நல்நோக்குடையவர்களாலும்—அவர்கள் மதத்தை சார்ந்தவர்களோ இல்லையோ—இந்த உலகை மேம்படுத்த முடியாமல் போகையில், யாரால்தான் முடியும்? அடுத்த கட்டுரையை ஆராய்கையில் இதற்கான விடையை நாம் காணலாம். சொல்லப்போனால், தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என இயேசு சொன்னதற்கு முக்கிய காரணமே இதற்கான விடையை தருகிறது.
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
COVER: Dirty water: WHO/UNICEF photo; globe: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
குழந்தைகள்: UN photo; பூமி: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.