வகுப்புவாத பிரச்சினைகள்
“சமத்துவம் ஒருவேளை நியாயமான உரிமையாக இருக்கலாம். ஆனால் உலகிலுள்ள எந்த சக்தியாலும் அதை சாதிக்க முடியாது.”
இவ்வாறு சொன்னவர் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு நாவலாசிரியர் ஆனாரேடா பால்ஸாக். இதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு என இயல்பாகவே அநேகர் உணருகின்றனர். ஆனால் இந்த 21-ம் நூற்றாண்டிலும் மனிதகுலம் பல்வேறு சமூக அந்தஸ்துகளின் அடிப்படையில் பிரிவுற்றுதான் இருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதியாக 1923 முதல் 1929 வரை பதவி வகித்த கால்வின் கூலிட்ஜ் என்பவர் சமுதாயத்தில் காணப்படும் வகுப்புவாத பிரச்சினையைக் குறித்து கவலைப்பட்டார். “சமுதாயத்தில் சலுகை பெற்ற மேல்மட்ட வகுப்புகள் அனைத்தும் மறைந்துபோக வேண்டும்” என்று பேசினார். ஆனால் கூலிட்ஜின் பதவிக்காலம் முடிந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்பும், ஐக்கிய மாகாணங்கள் இரண்டு சமுதாயங்களாக பிளவுபடும் பயத்தை, இனங்களின் உறவுகளை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட கெர்னர் கமிஷன் வெளிப்படுத்தியது: “ஒருபுறம் கருப்பர், மறுபுறம் வெள்ளையர். இவர்கள் தனித்தனியாகவும் ஏற்றத்தாழ்வுடனுமே வாழ்வார்கள்.” இந்த முன்னறிவிப்பு ஏற்கெனவே நிஜமாகிவிட்டது, அந்நாட்டில் “பொருளாதார மற்றும் இன அடிப்படையில் இடைவெளி விரிவடைந்து கொண்டே வருகிறது” என்றும் சிலர் கூறுகின்றனர்.
மனிதர் மத்தியில் சமத்துவத்தை ஸ்தாபிப்பது ஏன் இத்தனை கடினமாயுள்ளது? இதற்கு முக்கிய காரணம் மனித இயல்பு. முன்னாள் ஐ.மா. காங்கிரஸ் உறுப்பினர் வில்லியம் ரான்டால்ஃப் ஹெர்ஸ்ட் ஒரு சமயம் இவ்வாறு சொன்னார்: “குறைந்தபட்சம் ஒரு அம்சத்திலாவது மனிதர்கள் அனைவரும் சமமாக படைக்கப்பட்டுள்ளனர். மற்றவருக்கு சமமாக இருக்கக் கூடாது என்று அவர்கள் விரும்புவதே அந்த அம்சம்.” அவர் என்ன சொல்ல வந்தார்? ஒருவேளை 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு நாடக ஆசிரியர் ஆன்றி பெக் சொன்னது இன்னும் தெளிவாக இருக்கலாம்: “சமத்துவத்தை அடைவது கடினமாக இருப்பதற்கு காரணம், நாம் எப்போதும் நமக்கு மேலே இருப்பவர்களோடு மட்டுமே சமமாக இருக்க விரும்புகிறோம்.” வேறு விதமாக சொன்னால், சமுதாயத்தில் தங்களைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்களோடு சரிசமானமாய் இருக்க மக்கள் விரும்புகிறார்களே தவிர தங்களைவிட குறைந்தவர்களாக கருதப்படுகிறவர்களுக்கு சமத்துவம் அளிக்க தங்கள் சலுகைகளையும் நன்மைகளையும் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை.
கடந்த காலங்களில், சாமானியராக, உயர் குடிமகனாக, அல்லது அரச குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக மக்கள் பிறந்தார்கள். இன்னும் சில இடங்களில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இன்று பெரும்பாலான நாடுகளில், பணம் இருப்பதும் இல்லாதிருப்பதுமே ஒருவர் கீழ் வர்க்கமா நடுத்தர வர்க்கமா அல்லது மேல் வர்க்கமா என்பதை தீர்மானிக்கும் அளவுகோல். இனம், கல்வி, படிப்பறிவு போன்றவையும்கூட இதைத் தீர்மானிக்கலாம். இன்னும் சில இடங்களில் பெண்களை ஆண்களைவிட கீழானவர்களாக கருதுவதால் பால் பாகுபாடும் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.
நம்பிக்கை ஒளிக்கீற்று உண்டா?
வகுப்புவாதங்கள் எனும் சுவர்களை தகர்த்தெறிய மனித உரிமைகள் சட்டம் ஓரளவு உதவி செய்திருக்கிறது. பிறரிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வதைக் கண்டிக்கும் சட்டங்களை ஐக்கிய மாகாணங்கள் பிறப்பித்திருக்கின்றன. இன ஒதுக்கீட்டுக் கொள்கை தென் ஆப்பிரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. அடிமைத்தனத்தின் வேர்கள் இன்னும் சில இடங்களில் அழியாமல் இருந்துவருகிற போதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அது சட்டப்படி குற்றமாகும். சில பழங்குடியினரின் நில உரிமைகளை அங்கீகரிக்கும்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன; வகுப்புவாதங்களுக்கு எதிரான சட்டங்கள் பின்தங்கிய வகுப்பார் சிலருக்கு சலுகைகளும் அளித்துள்ளன.
அப்படியென்றால் சமூக வகுப்புவாதங்கள் அடியோடு ஒழிந்துவிட்டனவா? இல்லவே இல்லை. சமூக வகுப்புவாதங்கள் சில இப்போது வலுவிழந்துவிட்டாலும் புதிய பாகுபாடுகள் தலைதூக்கியுள்ளன. தகவல் யுகத்தில் வகுப்புவாத போராட்டம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பொதுவாக மக்களை முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்று வகைப்படுத்துவது இன்று பொருத்தமற்றதாக தோன்றுகிறது. இது ஏனென்றால் இந்த இரு பெரும் தொகுதிகளும் கோபக்காரர்களாலான பல்வேறு சிறுசிறு தொகுதிகளாக சிதைந்துவிட்டன.”
வகுப்புவாதம் எப்போதும் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கிக் கொண்டுதான் இருக்குமா? அடுத்த கட்டுரை காண்பிக்கப் போகும் விதமாக நம்பிக்கை எனும் சுடர் ஒளிராமல் இல்லை.