சமத்துவமின்மை தற்கால அவலம்
“ஆண்டவனின் படைப்பில் எல்லா மனிதரும் சமமானவர்களே. வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சிக்கான நாட்டம் போன்ற மாற்றமுடியாத சில உரிமைகளை படைப்பாளரிடமிருந்து வரமாக பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் விளக்கம் தேவைப்படாத உண்மைகள் என நாம் நம்புகிறோம்.”—1776-ல் ஐக்கிய மாகாணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திர உறுதிமொழி.
“பிறக்கும்போதே எல்லா மனிதரும் சுதந்திரத்தோடும் சம உரிமைகளோடும் பிறந்திருக்கிறார்கள்.”—1789-ல் பிரான்ஸ் தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித மற்றும் பிரஜா உரிமைகளின் உறுதிமொழி.
“எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் ஜனித்திருக்கின்றனர்.”—1948-ல் ஐக்கிய நாடுகளின் பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளுக்கான சர்வதேச உறுதிமொழி.
இதைப் பற்றி இம்மியளவும் சந்தேகமில்லை. சமத்துவத்திற்கான ஆசை மனிதகுலத்திற்கே உள்ள இயல்பான ஆசை. சமத்துவத்திற்கான குரல் இன்று எங்கும் ஒலிக்கிறது. இது எதை காட்டுகிறது? மனிதரிடமிருந்து சமத்துவம் மறைந்து விட்டதையே.
ஆனால் இப்பொழுது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் கண்டுவிட்டன என இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில் வாழும் எவரும் மார்தட்ட முடியுமா? அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் வாழும் அனைத்து பிரஜைகளோ அல்லது ஐக்கிய நாட்டு சபையில் அங்கம் வகிக்கும் 185 அங்கத்தினர்களோ உண்மையிலேயே சம உரிமைகளை அனுபவிக்கிறார்களா?
எல்லா மனிதருக்கும் சமத்துவம்—இது “விளக்கம் தேவைப்படாத” விஷயமே. ஆனால், ‘வாழ்க்கைக்கான, விடுதலைக்கான, மகிழ்ச்சியை நாடுவதற்கான’ உரிமைகள் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைப்பதில்லையே. உதாரணமாக, ஐரோப்பாவில் 290 பேருக்கு ஒரு டாக்டர் என்றால், ஆப்பிரிக்காவிலோ 2,570 பேருக்கு ஒரேவொரு டாக்டர்தான். இதை சமத்துவம் என்று எப்படி சொல்ல முடியும்? இந்தியாவிலுள்ள சிறுவர்களில் மூவரில் ஒருவரும், சிறுமிகளில் மூவரில் இருவரும் கல்வியறிவு இல்லாமல் வளருகிறார்கள். ஆனால் ஜப்பான், ஜெர்மனி, கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளிலோ கிட்டத்தட்ட எல்லா பிள்ளைகளுக்கும் கல்வி உத்திரவாதம். ஆகையால், விடுதலைக்கான, மகிழ்ச்சியை நாடுவதற்கான உரிமைகளில் சமத்துவம் இருப்பதாக எப்படி சொல்ல முடியும்?
மத்திய அமெரிக்க நாடுகளில் வாழும் ஒரு நபருடைய வருமானம் 1,380 டாலர். ஆனால் பிரான்ஸில் வாழும் ஒரு நபருடைய வருமானமோ 24,990 டாலர். ஆகவே, பிரான்ஸில் உள்ளவர்களைப் போலவே மத்திய அமெரிக்க நாடுகளில் இருப்பவர்களும் அதே “சமத்துவத்தையும் உரிமைகளையும்” பெறுகிறார்கள் என சொல்ல முடியுமா? ஆப்பிரிக்க பெண் குழந்தையின் ஆயுட்காலம் 56 வருடங்கள், வட அமெரிக்க பெண் குழந்தையின் ஆயுட்காலமோ 79 வருடங்கள். எங்கே வாழ்கிறது சமத்துவம்?
சமத்துவமின்மை—இதற்கு பல ‘முகங்கள்’ உண்டு. அவை அனைத்துமே தார்மீக ரீதியில் ஆட்சேபணைக்கு உரியவை. அவற்றில் சில: வாழ்க்கைத் தரங்களிலும், ஆரோக்கியமாய் வாழ்வதற்கான வாய்ப்பு வளங்களிலும், கல்வியிலும் சமத்துவமின்மை. மக்களுடைய சமத்துவத்தையும் விடுதலையையும் பறிப்பதில், சிலசமயங்களில் அரசியலோ இனமோ அல்லது மத வேறுபாடுகளோ கைவரிசையை காட்டுகின்றன. சமத்துவத்தைப் பற்றி வாய்கிழிய எவ்வளவோ பேசப்பட்டபோதிலும், சமத்துவமற்ற ஓர் உலகிலேயே நாம் சஞ்சரிக்கிறோம். ஓர் அவலத்தைப் போல சமத்துவமின்மை மனித சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் ஊடுருவியிருக்கிறது. அவலம் என்பது “பரவலான, பெரும் துன்பத்திற்கு காரணம்” என வரையறுக்கப்படுகிறது. வறுமை, வியாதி, அறியாமை, வேலை வாய்ப்பின்மை, பாகுபாடு போன்றவற்றின் வடிவில் அது உண்டாக்கும் வேதனை எல்லா இதயங்களையும் உருவக் குத்தியிருக்கிறது.
“இறைவனின் படைப்பில் எல்லா மனிதரும் சமமானவர்களே.” கேட்பதற்கும் படிப்பதற்கும் என்னே அழகான கருத்து! ஆனால் நிஜ வாழ்க்கையில் அது வெறும் சோகக் கதையே!
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 152113/SHELLEY ROTNER