சமத்துவமின்மை—கடவுள் காரணரா?
ஒரே வார்த்தையில் சொன்னால் இல்லை என்பதே பதில். ஏன் என்பதை அலசி ஆராயலாம்.
எல்லா மனிதரும் வாழ்க்கை எனும் இன்பக் கடலில் இனிமை காண வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம். மனித படைப்பைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.” பூமிக்குரிய படைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:26, 31.
சமத்துவமின்மை எனும் துன்பக் கடலில் வாழும் இன்றைய நிலைமையை பார்த்து ‘மிகவும் நன்றாயிருக்கிறது’ என கடவுள் சொல்வாரா? நிச்சயமாகவே சொல்ல மாட்டார், ஏனெனில் “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) ‘ஒருவருக்கும் பாரபட்சம் காட்டுகிறவரல்ல.’ ‘அவருடைய செயல் பூரணமானது, அவருடைய வழிகளெல்லாம் நீதியானது. அவரே உண்மையுள்ள கடவுள், அவரிடம் எந்த அநீதியும் இல்லை, நீதியும் நேர்மையும் உள்ளவர்.’ (உபாகமம் 10:17; 32:4; NW; ஒப்பிடுக: யோபு 34:19.) அப்போஸ்தலன் பேதுரு இந்த முடிவுக்கு வந்தார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
கடவுள் அன்புள்ளம் படைத்தவர், பாரபட்சமற்றவர், நீதி, நேர்மை, நியாயம் நிறைந்தவர். இத்தகைய கடவுள், வாழ்வை மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் உரிமையை குறித்ததில் சமத்துவமற்ற இயல்போடு மனிதர்களை எப்படி படைத்திருக்க முடியும்? சற்று யோசித்துப் பாருங்கள்! மக்கள் மத்தியில் வேற்றுமையை வேரூன்ற செய்வதும் சமத்துவமற்ற ஓர் உலகில் அவர்களை வாழ வைப்பதும் அவருடைய குணத்துக்கு நேர்மாறானதாகவே இருக்கும். ‘சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் சம உரிமைகளோடும் பிறக்க வேண்டும்’ என்றே அவர் எண்ணங்கொண்டார். ஆனால் இன்று துளிகூட நிலைமைகள் அப்படி இல்லை. ஏன் இல்லை?
சமத்துவமின்மை—அதன் ஆணிவேர்
சமமாக இருப்பதற்கு மனிதர்களை கடவுள் படைத்தது, எல்லா அம்சங்களிலும் அவர்கள் அனைவரும் சமமாக இருப்பதற்கு அவர் எண்ணங்கொண்டார் என்று அர்த்தமாகாது. திறமைகளில், விருப்பங்களில், குணங்களில் வித்தியாசம் இருக்கலாம். ஸ்தானத்தை வகிப்பதிலும் அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதிலும் அவர்களிடம் வித்தியாசம் இருக்கலாம். உதாரணமாக, ஆணும் பெண்ணும் எல்லா அம்சங்களிலும் சமமாக இல்லை. ஆனால், ஆணுக்கு ‘பூர்த்திசெய்யும் துணையாக’ பெண்ணை படைத்தார் கடவுள். (ஆதியாகமம் 2:18, NW) பெற்றோர்களும் பிள்ளைகளும் அதிகாரத்தில் நிச்சயமாகவே வித்தியாசப்படுகிறார்கள். ஆனால் இந்த வித்தியாசங்களின் மத்தியிலும் அனைவருமே—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகிய அனைவருமே—மகிழ்ச்சிக்கான சம வாய்ப்புகளை கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமையாக அனுபவித்து மகிழ வேண்டும். கடவுளுக்கு முன்பாக அவர்கள் அனைவரும் சம அந்தஸ்தில் இருக்க வேண்டும்.
அதைப் போலவே, மனிதர்களுக்கு முன்பு படைக்கப்பட்ட கடவுளுடைய ஆவி குமாரர்களுக்கு வித்தியாசமான நியமிப்புகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. (ஆதியாகமம் 3:24; 16:7-11; ஏசாயா 6:6; யூதா 9) இருப்பினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வரம்புக்குள்ளாகவே, வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் அளிக்கப்பட்ட தெய்வீக ஏற்பாடுகளை சம அளவில் அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, கடவுளுடைய பாரபட்சமற்ற பண்பை வியக்கத்தக்க விதத்தில் பிரதிபலித்தார்கள்.
ஆனால் கடவுளுடைய பாரபட்சமற்ற ஏற்பாட்டில் ஓர் ஆவி சிருஷ்டி திருப்தியுடன் இல்லை. கடவுள் அவனுக்கு கொடுத்ததைவிட அதிகம் ஆசைப்பட்டான். உயர்ந்த ஸ்தானத்தை, மிக மேலான ஸ்தானத்தை அடைய ஏங்கினான். இப்படிப்பட்ட தவறான ஆசையை மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்தான். அதனால், யெகோவாவுக்கு—படைப்பாளராக அனைத்தின்மீதும் அதிகாரம் செலுத்தும் உரிமை உள்ளவருக்கு—விரோதியாக தன்னை ஆக்கிக்கொண்டான். கலகத்தனமான மனப்பான்மை கொண்ட கடவுளுடைய இந்த ஆவி குமாரன், மனிதருக்கு கடவுள் தந்ததற்கும் மேலாக கேட்கும்படி அவர்களையும் பிற்பாடு தூண்டினான். (ஆதியாகமம் 3:1-6; ஒப்பிடுக: ஏசாயா 14:12-14.) இவ்வாறாக, வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியோடிருக்க மனிதர்களுக்கு செய்யப்பட்ட யெகோவாவின் ஏற்பாடு சமநிலை இழந்தது. ஆவி ரூபத்தில் இருக்கும் இந்தக் கலகக்காரன் யார் என்று சொல்லாமலே விளங்கும். வெளிப்படுத்துதல் 20:2-ல் “பிசாசென்றும் சாத்தானென்றும்” வர்ணிக்கப்படுபவனே அவன். மனித சமத்துவமின்மை எனும் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்பவனாக அவன் மாறினான்.
நிலைமை என்றாவது மாறுமா?
ஒரே வார்த்தையில் சொன்னால் மாறும் என்பதே பதில்!
ஆனால் மனம் ஏங்கும் மாற்றங்களை யார் கொண்டுவர முடியும்? இதைச் செய்வதற்கு பெருந்தலைவர்கள் சிலர் காலம் காலமாக போராடியிருக்கின்றனர்—உண்மையோடுதான். ஆனால் அவர்களுடைய வெற்றி கடுகளவே. சமத்துவமின்மை எனும் அவலத்தை மனிதர்கள் என்றாவது போக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆகாச கோட்டையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கே அநேகர் வந்திருக்கின்றனர். ஆனால் கடவுளுடைய நோக்கு ஏசாயா 55:10, 11-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது: “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லா மனிதருக்கும் சம வாய்ப்புகளை தருவதற்கான தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதாக யெகோவா அறிவித்திருப்பது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! அவர் சத்தியத்தின் கடவுள். அதனால் தாம் வாக்குறுதி அளித்திருப்பதை நிறைவேற்ற தம்மையே கடமையாளராக்கியிருக்கிறார். இதைச் செய்ய அவருக்கு விருப்பமும் இருக்கிறது, வல்லமையும் இருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா? ஆனால் இதை அவர் எப்படி நிறைவேற்றுவார்?
இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுவோர் ஜெபிப்பதற்கு கற்றுக்கொடுத்த ராஜ்யத்தில்தான் அதற்கான பதில் இருக்கிறது: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) ஆம், ‘இந்த [தற்போதைய] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்பதற்கு’ யெகோவா பயன்படுத்தும் அந்தக் கருவியே கடவுளுடைய ராஜ்யம்.—தானியேல் 2:44.
பரலோகத்தை சிம்மாசனமாக கொண்டு ஆளப்படும் அந்த ராஜ்ய ஆட்சியில், ஒரு புதிய மனித சமுதாயம் பூக்கும். இதைக் குறித்து பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் அப்போஸ்தன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” (வெளிப்படுத்துதல் 21:1) சமத்துவமின்மையின் கோர முகங்களாகிய வறுமை, வியாதி, அறியாமை, பாகுபாடு, மனிதனின் மற்றெல்லா துயரங்களும் இனிமேலும் இரா. a
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த ராஜ்யத்தின்மீது மக்களின் கவனத்தை யெகோவாவின் சாட்சிகள் திருப்பி வந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:14) பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள கடவுளின் நோக்கத்தைப் பற்றிய அறிவை மக்கள் பெறுவதற்காக, புத்தகங்களின் வாயிலாகவும் தனிப்பட்ட உதவியின் மூலமாகவும் அவர்கள் முழுமூச்சோடு உழைத்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உலகளாவிய வேலை, எதிர்காலத்தில் மக்கள் சமத்துவமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நம்பிக்கையை கொடுத்திருப்பது மட்டுமின்றி, தற்காலத்திலேயே சமத்துவமின்மை என்ற அவலத்தை கட்டுப்படுத்தவும் உதவியிருக்கிறது. எப்படி என்பதை காண்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு அனைவருக்கும் சமத்துவத்தை கொண்டுவரும் என்பதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் தயவுசெய்து 10 மற்றும் 11-ம் அதிகாரங்களைப் பார்க்கவும். இது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் தயாரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
எல்லா மனிதரும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம்