Kim Steele/The Image Bank via Getty Images
பணப் பிரச்சினை—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?
இன்று உலகம் முழுவதும் நிறைய மக்கள், தினம் தினம் பிழைப்பை ஓட்டுவதற்கே திண்டாடுகிறார்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது.
சமீபத்தில் உலகம் முழுவதுமிருந்து வந்த ஒரு அறிக்கையில்a இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “செய்யும் வேலைக்குத் தகுந்த சம்பளம் மக்களுக்குக் கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் அது குறைந்துகொண்டே போகிறது.” இன்னொரு பக்கம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இந்த நிலைமைக்கு மாற்றம் எதுவும் வரவில்லை என்றால், “ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக்கொண்டே போவார்கள், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகிக்கொண்டே போவார்கள்.” “நிறைய தொழிலாளிகளும் அவர்களுடைய குடும்பங்களும் முன்பு இருந்ததைவிட மோசமான நிலைமைக்குப் போவார்கள்” என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
அதிகமாகி வரும் இந்தப் பணப் பிரச்சினையை அரசாங்கங்களால் முழுமையாகச் சரிசெய்ய முடியுமா? அல்லது இந்தப் பிரச்சினையைக் குறைக்கவாவது முடியுமா?
ஒரு அரசாங்கம் வரப்போவதாக பைபிள் சொல்கிறது. அந்த அரசாங்கத்தால் எல்லா பணப் பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும், அது சரிசெய்யவும் போகிறது. அப்போது, ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசமே இருக்காது. அந்த அரசாங்கத்தை, ‘பரலோகத்தின் கடவுள் ஏற்படுத்துவார்.’ இந்த ஒரு அரசாங்கத்தினாலேயே பூமியில் இருக்கிற எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும். (தானியேல் 2:44) கடவுளுடைய அரசாங்கம் அதன் குடிமக்களை அம்போவென்று விட்டுவிடாது, யாரையும் மறந்தும் போகாது. (சங்கீதம் 9:18) அவர்கள் சந்தோஷமாக வாழ என்ன தேவையோ அதைக் கண்டிப்பாகச் செய்யும். மக்கள் தங்களுடைய கடின உழைப்புக்குக் கிடைக்கிற பலனை சந்தோஷமாக அனுபவிப்பார்கள்.—ஏசாயா 65:21, 22.
a சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உலகளாவிய சம்பள அறிக்கை 2022-23