சமத்துவமின்மை இந்த அவலத்தை அடக்குதல்
சமத்துவம்! மனிதர் வாஞ்சிக்கும் இந்நிலைமையை படைப்பாளர் விரைவில் கொண்டுவருவார்! அதுவரை, நம்மையும் நம் சொந்த பந்தங்களையும் பாதிக்கும் சமத்துவமின்மை எனும் அவலத்தை அடக்கி வைப்பதற்காவது நடவடிக்கைகள் எடுக்கலாம் அல்லவா? தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பிரெஸிடென்ட் நெல்சன் மண்டேலா கூறியபடி, “நமக்கு என்ன கொடுப்பினை இருக்கிறதோ அதனால் அல்ல, நம்மிடம் இருப்பதை வைத்து நாம் என்ன செய்கிறோமோ அதுவே ஒரு நபரை வேறொருவரிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.”
அவருடைய சொல்லை சரித்திரம் மெய்ப்பிக்கிறது. விசேஷ கொடுப்பினை எதுவுமின்றி பிறந்த அநேக ஆண்களும் பெண்களும் தங்களிடம் இருந்ததைப் பயன்படுத்தி சாதனைகள் புரிந்திருக்கிறார்கள், வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு, இயல்பாகவே அதிக திறமை பெற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்து விளங்கினார்கள். மாறாக, பிறப்பிலேயே அனுகூலங்களால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் இருந்ததை வீணாக்கிவிட்டு தங்களுடைய முழு திறமையை பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.
உங்களிடம் இருப்பதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
பைபிளை படிப்பதன் மூலம் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய அறிவைப் பெற மக்களுக்கு உதவி செய்வதில் யெகோவாவின் சாட்சிகள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் பைபிளில் உள்ள தகவல்களிலிருந்து முழுமையாக பயனடைய மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறார்கள். அதற்காக, ஆயிரக்கணக்கானோருக்கு யெகோவாவின் சாட்சிகள் போதித்திருக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டில் மட்டுமே 23,000 பேருக்கு (1990-களின் மத்திபத்தில்) எழுதப் படிக்க கற்பித்திருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் செய்யும் குறிப்பிடத்தக்க சமூக சேவையை குறிப்பிட்டு, சான் ஃபிரான்சிஸ்கோ எக்ஸாமினர் இவ்வாறு கூறியது: “நீங்கள் அவர்களை ஆதர்ச பிரஜைகளாக கருதலாம். அவர்கள் ஊக்கம் தளராமல் வரி செலுத்துகிறார்கள், வியாதியஸ்தரை கவனித்துக்கொள்கிறார்கள், கல்வி அறிவின்மையை போக்குகிறார்கள்.”
அதோடுகூட, மேடையில் பேசுவதற்கு கொடுக்கப்படும் படிப்படியான பயிற்சியின் வாயிலாக லட்சக்கணக்கானோர் தகுதிவாய்ந்த பேச்சாளர்களாவதற்கும், பொது மக்களிடத்தில் சரளமாக பேசுவதற்கும் யெகோவாவின் சாட்சிகள் பழக்குவித்திருக்கிறார்கள். இந்த லட்சக்கணக்கானோரில் சிலருக்கு இயல்பாக பேசவே முடியாத அளவுக்கு குறைபாடு இருந்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த மனிதர் எழுதுவதை சற்று கவனியுங்கள்: “நான் ரொம்ப திக்கித்திக்கி பேசினேன். அதனால் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும்சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் என்னைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் ஓர் ஆளானேன். என் சார்பாக பேசுவதற்கு பொதுவாக மற்றவர்களையே நம்பியிருந்தேன். . . . நான் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொண்ட சமயம் வந்தது. ஒரு சிறிய கூட்டத்தாருக்கு முன் பைபிளை வாசிக்க வேண்டியிருந்தது. எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வாசிப்பை முடிக்க முடியாத அளவுக்கு நான் ரொம்ப திக்கித்திக்கி பேசினேன். கூட்டம் முடிந்தபின், [ஆலோசகர்] நடைமுறையான அறிவுரையை எனக்கு தயவாக கொடுத்தார். நானாகவே சத்தமாக வாசித்துப் பார்ப்பதற்கு எனக்கு ஆலோசனை கொடுத்தார். அப்படியே நான் செய்தேன். ஒவ்வொரு நாளும் இதற்காக நேரம் செலவழித்தேன். பைபிளிலிருந்தும் காவற்கோபுர பத்திரிகையிலிருந்தும் சத்தமாக வாசித்தேன்.” இந்த நபர் மிக நன்றாக முன்னேறியதால், இப்பொழுது நூற்றுக்கணக்கான பேருக்கு முன்பாக, ஏன் ஆயிரக்கணக்கான பேருக்கு முன்பாகவும்கூட, பொதுப் பேச்சுக்கள் கொடுக்கிறார்.
சகோதரர்கள் மத்தியில் சமத்துவம்
கல்வி, ஆரோக்கியம், பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சூழ்நிலைகள் மிகவும் வித்தியாசப்படுகின்றன. இதெல்லாம் அவர்கள் வாழும் மோசமான உலக நிலைமைகளையே படம்பிடித்து காட்டுகின்றன. ஆனால் மற்ற மதங்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக, இவர்கள் மத்தியில் இன, சமூக, பொருளாதார தப்பெண்ணங்கள் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன.
பைபிளிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க தங்களால் இயன்ற முயற்சியெடுப்பதால் இதை அவர்கள் சாதித்திருக்கிறார்கள். “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்ற பைபிள் நியமத்தை இருதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். (1 சாமுவேல் 16:7) “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . , எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவ[ன்].” (அப்போஸ்தலர் 10:34, 35) “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”—ரோமர் 12:17, 18; இதையும் காண்க: 1 தீமோத்தேயு 6:17-19; யாக்கோபு 2:5, 9.
ஒற்றுமையை வளர்க்கும் இந்த பைபிள் நியமங்களை யெகோவாவின் சாட்சிகள் நெருங்க பின்பற்றுவதால், சமூக, இன, பொருளாதார வித்தியாசங்களின் அடிப்படையிலான எந்தவொரு சமத்துவமின்மையும் தங்களுக்குள் தலைதூக்காதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, கிறிஸ்தவ சபையில் ஊழிய சிலாக்கியங்கள் கொடுக்கையில் இந்த அம்சங்களுக்கு கொஞ்சம்கூட இடமில்லை. போதித்தல், கண்காணித்தல் போன்ற பொறுப்புள்ள ஸ்தானங்கள் முற்றிலும் ஆவிக்குரிய தகுதிகளின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகின்றன.—1 தீமோத்தேயு 3:1-13; தீத்து 1:5-9.
மற்றவர்களை சகோதர சகோதரிகளாக பாவித்து தங்களது படைப்பாளருக்கு முன் சமத்துவமாக நடத்துவது—ஆஹா, பாரபட்சமிக்க இவ்வுலகில் சமத்துவமின்மை என்ற அவலத்தால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு இது எவ்வளவு புத்துணர்ச்சியூட்டுகிறது! மார்ட்டினா இதற்கு ஓர் உதாரணம். அவளுடைய குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டு தகப்பன் வெளியேறிய பிறகு, ஓர் ஏழ்மையான குடும்பத்தில், தனிமரமாய் விடப்பட்ட தாயால் வளர்க்கப்பட்டாள். அவள் பெரும்பாலும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டாள், அவளது தன்னம்பிக்கையோ காற்றோடு பறந்துபோனது, மற்றவர்களுடன் ஒத்துப்போவதை கடினமாக கண்டாள். ‘யார் எக்கேடு கெட்டா நமக்கென்ன’ என்பதைப் போன்ற மனப்பான்மையையே வளர்த்துவந்தாள். ஆனால், பைபிளை படிக்க ஆரம்பித்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியான பிறகு நிலைமை மாறியது. அவள் சொல்கிறாள்: “எதற்கெடுத்தாலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாதகமான அம்சத்தையே நினைத்துப்பார்க்கும் மனப்பான்மையை நான் இன்னும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இப்பொழுது பிரச்சினைகளை என்னால் நன்கு சமாளிக்க முடிகிறது. என்னுடைய தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது, அதிக நம்பிக்கையோடு பேசுகிறேன். சத்தியம் எனக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. யெகோவா என்னை நேசிக்கிறார், வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானதே என்பதை இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன்.”
சர்வதேச கிறிஸ்தவ தொகுதியாக, 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் உள்ள யெகோவாவின் சாட்சிகள், இந்த உலகிலேயே தனித்தன்மைமிக்க சமத்துவத்தை தங்கள் மத்தியில் அனுபவித்து மகிழுகிறார்கள். வேறெந்த மத அமைப்பாவது இப்படி உரிமை பாராட்ட முடியுமா? அதை சான்றுகளோடு நிரூபிக்க முடியுமா?
ஆனால் யெகோவாவின் சாட்சிகள் யதார்த்தமானவர்களே. இந்த மோசமான உலக சூழலில் பிறந்திருப்பதால், மற்றவர்களைப் போலவே தங்களாலும் மனித சமத்துவமின்மையை அடியோடு ஒழிக்க முடியாது என்பதை மனமார ஒத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், சமத்துவமின்மை எனும் மேடுபள்ளங்களை அவர்கள் தங்கள் மத்தியில் வெட்டி சீராக்கியிருக்கிறார்கள். கடவுளுடைய வாக்குறுதியில் உறுதியான நம்பிக்கையோடு, நீதி வாசம் செய்யும் புதிய பூமியை எதிர்நோக்கியிருக்கிறார்கள், அங்கே சமத்துவமின்மை அறவே ஒழிக்கப்பட்டுவிடும்.
ஆம், கீழ்ப்படிதலுள்ள மனிதர் அனைவரும் அனுபவிப்பதற்கு தங்களுடைய படைப்பாளர் தங்களுக்காக நோக்கம் கொண்டுள்ள “சமத்துவத்தையும் சம உரிமையையும்” வெகுசீக்கிரத்திலேயே பெறுவார்கள். அது எப்பேர்ப்பட்ட இனிய கருத்து! இது கனவல்ல, நனவு!
[பக்கம் 7-ன் படம்]
வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் ஆயிரக்கணக்கானோருக்கு கற்பிப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் கல்வியறிவின்மையை போக்கியிருக்கிறார்கள்
[பக்கம் 8-ன் படம்]
இன, சமூக, பொருளாதார தப்பெண்ணங்களை அடியோடு அழிக்க பைபிள் உதவுகிறது