“என்னிடத்தில் வாருங்கள்; . . . நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
‘திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவது’ புத்துணர்ச்சி அளிக்கிறது
அவர் ஒரு பரிபூரண மனிதர், முக்கிய வேலையாக வந்திருந்தார். அவர் போதிக்கும் முறைகள் அவ்வளவு திறம்பட்டவையாக இருந்ததால், “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:29) அவர் அயராத பிரசங்கியும்கூட. தம் நேரம், முயற்சி, வாய்ப்பு வளங்கள் ஆகியவற்றை முக்கியமாக கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பதற்கே உபயோகித்தார். உண்மையில், இயேசு கிறிஸ்து ஒப்பற்ற பிரசங்கியாகவும் போதகராகவும் தாம் பிறந்த தேசம் முழுவதும் பயணித்தார்.—மத்தேயு 9:35.
தமது காலத்தில் வாழ்ந்தவர்களிடம் “ராஜ்யத்தின் சுவிசேஷத்தை” பிரசங்கிப்பதும், அதே வேலையை உலகம் முழுவதிலும் செய்வதற்காக தமது சீஷர்களை பயிற்றுவிப்பதுமே இயேசுவின் அவசரமான வேலைகளாக இருந்தன. (மத்தேயு 4:23; 24:14; 28:19, 20) அந்தப் பிரசங்க வேலை அதிக பொறுப்புமிக்கது, அவசரமாக செய்யப்பட வேண்டியது, பரந்த பரப்பெல்லையை உட்படுத்தியது. அதைக் கண்ட குறைபாடுகளுள்ள, அவருடைய அபூரணமான சீஷர்கள் மலைத்துப் போனார்களா?
இல்லவே இல்லை! அதிக வேலையாட்களுக்காக ‘அறுப்புக்கு எஜமானாகிய’ யெகோவா தேவனிடம் ஜெபிக்கும்படி தமது சீஷர்களுக்கு கற்பித்த பிறகு மக்களிடம் போதிக்க இயேசு அவர்களை அனுப்பினார். (மத்தேயு 9:38; 10:1) பிறகு, பிரசங்கிப்பது உட்பட அவரை பின்பற்றும் பொறுப்பு உண்மையான நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கும் என்ற வாக்குறுதியை அவர்களுக்குக் கொடுத்தார். “என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் [“புத்துணர்ச்சி அளிப்பேன்,” NW] என இயேசு கூறினார்.—மத்தேயு 11:28.
சந்தோஷத்தின் ஊற்றுமூலம்
அந்த அழைப்பு இரக்கமும், அன்பும், தயவும் நிறைந்த ஒன்றல்லவா? தம்மை பின்பற்றுகிறவர்களிடம் இயேசுவிற்கிருந்த ஆழமான உணர்ச்சிகளை அது படம்பிடித்து காட்டுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் “சுவிசேஷத்தை” பிரசங்கிக்கும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுகையில் அவருடைய சீஷர்கள் நிச்சயமாகவே புத்துணர்ச்சியை கண்டடைகின்றனர். இது அவர்களுக்கு உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது.—யோவான் 4:36.
இயேசு பூமிக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, சந்தோஷத்தோடுதான் கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்ய வேண்டும் என வேதவசனங்கள் வலியுறுத்தின. சங்கீதக்காரன் பின்வருமாறு பாடியபோது இது தெளிவாக இருந்தது: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள்.” (சங்கீதம் 100:1, 2) இன்று அனைத்து தேசங்களிலும் உள்ளவர்கள் யெகோவாவில் சந்தோஷப்படுகின்றனர். அவர்களுடைய துதிகள் வெற்றி பெற்ற சேனையின் வீர முழக்கத்திற்கு சமமாகும். உண்மையோடு கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்போர் “ஆனந்த சத்தத்தோடே” அவருக்கு முன் வருகிறார்கள். அது மிகவும் பொருத்தமானதே, ஏனெனில் யெகோவா “நித்தியானந்த தேவ[ன்].” அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் தமது ஊழியர்களும் சந்தோஷத்தோடு ஊழியம் செய்யும்படியே அவர் விரும்புகிறார்.—1 தீமோத்தேயு 1:11.
புத்துணர்ச்சி பெற்ற ஊழியர்கள்
வெளி ஊழியத்தில் கடினமாக உழைப்பது சோர்ந்து போக செய்யாமல் உண்மையில் புத்துணர்ச்சி தருகிறது என்றால் அது எப்படி சாத்தியம்? யெகோவாவின் வேலையை செய்வதே இயேசுவிற்கு புத்துணர்வூட்டும் உணவைப் போல இருந்தது. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என அவர் கூறினார்.—யோவான் 4:34.
அதைப் போலவே, இன்று “திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு”கிற ஆர்வமுள்ள கிறிஸ்தவ பிரசங்கிகளும் சந்தோஷத்தை காண்கின்றனர். (2 தீமோத்தேயு 4:2) நடுத்தர வயது கானீ என்ற கிறிஸ்தவ பெண் மாதத்தில் 70-ற்கும் அதிக மணிநேரம் பிரசங்க ஊழியத்தில் செலவழிக்கிறார். அவர் கூறுவதாவது: “அந்த நாளின் முடிவில் அதிக களைப்பாக இருந்தாலும், ஊழியம் முடிந்து திரும்புகையில் திருப்தியாகவும் மனநிறைவாகவும் உணருவேன்.”
ராஜ்ய செய்தியை யாருமே கேட்கவில்லை என்றால் அப்போது என்ன செய்வது? கானீ தொடர்கிறார்: “மக்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி ஊழியம் செய்ததற்காக வருத்தப்பட்டதே கிடையாது. யெகோவாவிற்கு மகிழ்ச்சி தரும் ஒன்றை செய்கிறேன் என்று அறிவதோடுகூட சத்தியத்தை பற்றி பேசும் வாய்ப்பிற்காக சந்தோஷப்படுகிறேன். ஏனெனில் அதைப் பற்றி பேசுகையில் பைபிளிலுள்ள அந்த மகத்தான நம்பிக்கை என் இருதயத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றுகிறது.”
கடவுளைப் பற்றி திருத்தமான அறிவை பெற மற்றவர்களுக்கு உதவுவதே தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதாய் சிலர் காண்கின்றனர். ஒவ்வொரு மாதமும் 50-க்கும் அதிக மணிநேரத்தை ஊழியத்தில் செலவிடும் மெலனீ என்ற இளம் பெண் இவ்வாறு கூறுகிறார்: “என் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளையும் நோக்கத்தையும் தருவதால் ஊழியம் உண்மையில் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஊழியத்தில் பங்குகொள்கையில் சொந்த பிரச்சினைகளும் அன்றாட கவலைகளும் அவ்வளவு பெரிதாக தோன்றுவதில்லை.”
யெகோவாவின் சாட்சிகளில் ஆர்வமுள்ள மற்றொரு ஊழியரான மில்லசன்ட் கூறுவதாவது: “மனிதனுக்கான கடவுளுடைய நோக்கத்தையும் இந்த பூமியில் பரதீஸ் எவ்வாறு திரும்ப நிலைநாட்டப்படும் என்பதையும் மற்றவர்களிடம் பேசுவதால் ஊழியமே ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாக்குகிறது. இதனால் யெகோவா நிஜமானவர் என்பதை ஒவ்வொரு நாளும் உணருகிறேன். வேறு எதை செய்தாலும் கிடைக்காத மன அமைதியையும் உள்ளான சந்தோஷத்தையும் அது எனக்கு தருகிறது.”
கேட்போரும் புத்துணர்ச்சி அடைகின்றனர்
கிறிஸ்தவ ஊழியத்தின் காரணமாக ராஜ்யத்தை பிரசங்கிப்போர் உண்மையில் புத்துணர்ச்சி அடைகின்றனர், ஜீவனளிக்கும் அந்த செய்தியை கேட்டு ஏற்போரும் ஆறுதல் அடைகின்றனர். போர்ச்சுகலில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியை கன்னியாஸ்திரீகளாலும் பாதிரியார்களாலும் பயிற்சி பெற்றும் தன் ஆவிக்குரிய தேவைகளை தனது சர்ச் பூர்த்தி செய்யவில்லை என உணர்ந்தார். பைபிள் சம்பந்தமாக அவருக்கிருந்த கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவருக்கு பைபிள் படிப்பு நடத்துகையில் பைபிளைப் பற்றிய அறிவில் அவர் தொடர்ந்து முன்னேறினார். அந்த ஆசிரியை கிளர்ச்சியடைந்தார். “எனது கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் நம்பகமான, பைபிள் ஆதாரத்துடன் பதில்கள் கிடைத்ததால் ஒவ்வொரு புதன்கிழமையும் படிப்பிற்காக ஆவலோடு காத்திருந்தேன்” என அவர் கூறினார். இன்று அந்தப் பெண்மணி யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியராக இருக்கிறார், பைபிள் சத்தியத்தால் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியளித்து வருகிறார்.
தங்கள் பிரசங்க நியமிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டோ உலகளாவிய பிராந்தியத்தின் அளவைக் கண்டோ யெகோவாவின் சாட்சிகள் பயந்துவிடவில்லை என்பது தெளிவாக உள்ளது. அக்கறையின்மையோ எதிர்ப்போகூட அவர்களை உற்சாகமிழக்க செய்வதில்லை. ராஜ்யத்தை பிரசங்கிக்கும் தங்களது நியமிப்பை நிறைவேற்ற அவர்கள் கடுமையாக பிரயாசப்படுகிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் டிரக்குகள் நிறுத்துமிடத்தில் (1), கொரிய விமான நிலையத்தில் (2), ஆண்டிஸில் (3), அல்லது லண்டனிலுள்ள ஒரு கடையில் (4) என ஜனங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். இன்று இயேசுவை பின்பற்றுவோர் பலனளிக்கும் தங்கள் வேலையை உலகமுழுவதும் சந்தோஷத்தோடு செய்கிறார்கள். இயேசு அவருடைய வாக்குறுதிக்கு இசைவாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறார், மற்ற அநேகருக்கு புத்துணர்ச்சியளிக்க அவர்களை உபயோகித்தும் வருகிறார்.—வெளிப்படுத்துதல் 22:17.