யெகோவாவின் அன்புள்ள தயவிலிருந்து நன்மையடைதல்
‘எவன் ஞானமுள்ளவன்? அவன் . . . யெகோவாவுடைய அன்புள்ள தயவின் செயல்களை உணர்ந்துகொள்வான்.’—சங்கீதம் 107:43, NW.
1. ‘அன்புள்ள தயவு’ என்று மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தை பைபிளில் முதன்முதல் எப்பொழுது பயன்படுத்தப்பட்டது, இந்தப் பண்பு சம்பந்தமாக என்னென்ன கேள்விகளை நாம் கலந்தாராய்வோம்?
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரகாமின் சகோதரன் மகனான லோத்து யெகோவாவைக் குறித்து இவ்வாறு சொன்னார்: ‘உம் கிருபையை [“அன்புள்ள தயவை,” NW] பெரிதாக விளங்கப் பண்ணுகிறீர்.’ (ஆதியாகமம் 19:19) ஆங்கில பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் ‘அன்புள்ள தயவு’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை இங்குதான் முதன்முதல் பயன்படுத்தப்படுகிறது; இந்த பைபிளில் ‘அன்புள்ள தயவு,’ ‘அன்புள்ள தயவுகள்’ என்ற வார்த்தைகள் சுமார் 250 தடவை காணப்படுகின்றன. ஆனால் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிளில் இவை பொதுவாக ‘கிருபை,’ ‘தயவு,’ ‘தயை,’ ‘நற்கிரியைகள்’ என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றன. யாக்கோபு, நகோமி, தாவீது ஆகியோரும், கடவுளுக்கு சேவை செய்து வந்த இன்னும் மற்றவர்களும்கூட யெகோவாவின் இந்தக் குணத்தைப் பற்றி குறிப்பிட்டனர். (ஆதியாகமம் 32:10; ரூத் 1:8; 2 சாமுவேல் 2:6) ஆனால் யெகோவாவின் அன்புள்ள தயவு என்பது என்ன? முற்காலத்தில் அது யாரிடம் காட்டப்பட்டது? அதனால் இன்று நாம் எவ்வாறு நன்மை அடைகிறோம்?
2. ‘அன்புள்ள தயவு’ என்று மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தையை வரையறுப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது, அதற்கு இணையான, பொருத்தமான சொல்லாக்கம் எது?
2 பைபிளில், ‘அன்புள்ள தயவு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கான அர்த்தம் பொருள் பொதிந்தது; இந்தப் பொருள் முழுவதையும் ஒரே சொல்லில் உள்ளடக்கும் வார்த்தை பெரும்பாலான மொழிகளில் இல்லை. எனவே, ‘அன்பு,’ ‘இரக்கம்,’ ‘உண்மைத்தன்மை’ ஆகிய வார்த்தைகள், அதற்கே உரிய அர்த்தத்தை திருத்தமாகவும் முழுமையாகவும் வரையறுக்க முடிவதில்லை. என்றாலும், ‘அன்புள்ள தயவு’ என்ற சொல்லாக்கத்தால் அதை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது; இது அர்த்தத்தை பெருமளவு திருத்தமாகவும் முழுமையாகவும் தெரிவிக்கிறது. பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்) என்ற பைபிள், ‘அன்புள்ள தயவு’ என்று மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தையை, ‘பற்றுமாறா அன்பு’ என்றும் சில இடங்களில் பொருத்தமாகவே மொழிபெயர்க்கிறது.—யாத்திராகமம் 15:13; சங்கீதம் 5:7; NW அடிக்குறிப்பு.
அன்பிலிருந்தும் உண்மைப் பற்றுறுதியிலிருந்தும் வேறுபட்டது
3. அன்புள்ள தயவு எவ்வாறு அன்பிலிருந்து வேறுபடுகிறது?
3 அன்பு, உண்மைப் பற்றுறுதி ஆகிய பண்புகளுடன் அன்புள்ள தயவு அல்லது பற்றுமாறா அன்பு நெருங்கிய தொடர்புடையது. இருந்தாலும், அவற்றிலிருந்து முக்கியமான விதங்களில் அது வேறுபடுகிறது. அன்புள்ள தயவும் அன்பும் ஒன்றுக்கொன்று வேறுபடும் விதத்தை கவனியுங்கள். சில மொழிகளில், அன்பை பொருட்களுடனும் கருத்துக்களுடனும்கூட இணைத்துச் சொல்லலாம். ‘உலகத்திலுள்ளவைகளில் அன்புகூருதல்’ என்றும், ‘ஞானத்தில் பிரியப்படுதல்’ என்றும் பைபிளில் குறிப்பிடப்படுகிறது. (1 யோவான் 2:15; நீதிமொழிகள் 29:3) ஆனால் அன்புள்ள தயவோ ஆட்களுக்கே பொருந்துகிறது; கருத்துக்களுக்கோ உயிரற்ற பொருட்களுக்கோ பொருந்துவதில்லை. உதாரணமாக, யெகோவா ‘ஆயிரம் தலைமுறைமட்டும் அன்புள்ள தயவை காட்டுகிறவர்’ என்று யாத்திராகமம் 20:6 (NW) குறிப்பிடுகையில், அது ஆட்களை உட்படுத்துகிறது.
4. அன்புள்ள தயவு எவ்வாறு உண்மைப் பற்றுறுதியிலிருந்து வேறுபடுகிறது?
4 ‘அன்புள்ள தயவு’ என்பதற்கான எபிரெய வார்த்தை ‘உண்மைப் பற்றுறுதி’ என்பதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. சில மொழிகளில், ‘உண்மைப் பற்றுறுதி’ என்பது, உயர்ந்த நிலையிலுள்ள ஒருவரிடம் தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவர் காட்ட வேண்டிய மனப்பான்மையை குறிப்பிடுவதற்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஓர் ஆராய்ச்சியாளரின்படி, பைபிளின் கண்ணோட்டத்திலிருந்து, அன்புள்ள தயவு, ‘பெரும்பாலும் அதற்கு எதிர்மாறான உறவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது; அதாவது, உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் தாழ்ந்த நிலையில் அல்லது தேவையில் உள்ளவர்களிடம் உண்மைப் பற்றுறுதி காட்டுவதைக் குறிக்கிறது.’ ஆகவேதான் தாவீது ராஜாவால் யெகோவாவிடம் இவ்வாறு விண்ணப்பிக்க முடிந்தது: “நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே [“அன்புள்ள தயவினாலே,” NW] என்னை இரட்சியும்.” (சங்கீதம் 31:16) உன்னத நிலையிலிருக்கும் யெகோவா, தேவையில் இருக்கும் தனக்கு அன்புள்ள தயவை அல்லது பற்றுமாறா அன்பை காட்டும்படி தாவீது கேட்கிறார். தாழ்ந்த நிலையிலுள்ளவர்களுக்கு உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் மேல் அதிகாரம் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள்மீது அன்புள்ள தயவு கட்டாயத்தினால் அல்லாமல் மனமுவந்து காட்டப்படுகிறது.
5. (அ) கடவுளுடைய அன்புள்ள தயவின் என்ன அம்சங்கள் அவருடைய வார்த்தையில் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன? (ஆ) யெகோவாவின் அன்புள்ள தயவின் என்ன வெளிக்காட்டுகளை நாம் கலந்தாராய்வோம்?
5 ‘எவன் ஞானமுள்ளவன்?’ என்று கேட்ட சங்கீதக்காரன், ‘அவன் . . . யெகோவாவுடைய அன்புள்ள தயவின் செயல்களை உணர்ந்துகொள்வான்’ என்றார். (சங்கீதம் 107:43, NW) யெகோவாவின் அன்புள்ள தயவால் மீட்பு கிடைக்கிறது, உயிர் காப்பாற்றப்படுகிறது. (சங்கீதம் 6:4; 119:88, 159) அது பாதுகாப்பு தருகிறது, துன்பங்களிலிருந்து விடுபட வழிவகுக்கும் முக்கிய அம்சமாகவும் இருக்கிறது. (சங்கீதம் 31:16, 21; 40:11; 143:12) இந்தப் பண்பினால் பாவத்திலிருந்து விடுதலை சாத்தியமாகிறது. (சங்கீதம் 25:7) பைபிளிலுள்ள குறிப்பிட்ட சம்பவங்களையும் மற்ற வசனங்களையும் கவனிக்கையில், யெகோவாவின் அன்புள்ள தயவு, (1) திட்டவட்டமான செயல்களால் வெளிக்காட்டப்படுகிறது என்றும், (2) அவருடைய உண்மையுள்ள ஊழியர்களால் அனுபவிக்கப்படுகிறது என்றும் காண்போம்.
மீட்பு—அன்புள்ள தயவின் ஒரு வெளிக்காட்டு
6, 7. (அ) லோத்துவின் விஷயத்தில் அன்புள்ள தயவை யெகோவா எவ்வாறு பெரிதாக விளங்கப் பண்ணினார்? (ஆ) யெகோவாவின் அன்புள்ள தயவைப் பற்றி லோத்து எப்பொழுது குறிப்பிட்டார்?
6 யெகோவாவின் அன்புள்ள தயவு எந்தளவுக்கு விஸ்தாரமானது என்பதைக் கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி, இந்தப் பண்பை விவரிக்கும் பைபிள் பதிவுகளை ஆராய்வதாகும். ஆதியாகமம் 14:1-16-ல், பகைவர்கள் படை திரண்டு வந்து ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்துவை சிறைபிடித்துச் செல்வதைப் பற்றி வாசிக்கிறோம். அப்போது ஆபிரகாம் லோத்துவை விடுவித்தார். லோத்துவும் அவருடைய குடும்பமும் குடியிருந்த, அக்கிரமம் மலிந்து கிடந்த சோதோம் பட்டணத்தை அழிக்க யெகோவா தீர்மானித்தபோது, மறுபடியும் லோத்து ஆபத்தை எதிர்ப்பட்டார்.—ஆதியாகமம் 18:20-22; 19:12, 13.
7 சோதோமை அழிப்பதற்கு சற்று முன்பு யெகோவாவின் தூதர்கள் லோத்துவையும் அவருடைய குடும்பத்தினரையும் பட்டணத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது லோத்து, “உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை [“அன்புள்ள தயவு,” NW] கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் [“அன்புள்ள தயவை,” NW] பெரிதாக விளங்கப்பண்ணினீர்” என்று சொன்னார். (ஆதியாகமம் 19:16, 19) இவ்வாறு, தன்னை விடுவிப்பதன் மூலம் பிரத்தியேகமாக அன்புள்ள தயவை யெகோவா தனக்குக் காட்டியதை லோத்து ஒப்புக்கொண்டார். ஆகவே மீட்பளித்ததிலும், உயிரைக் காத்ததிலும் கடவுளின் அன்புள்ள தயவு இச்சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டப்பட்டது.—2 பேதுரு 2:8.
யெகோவாவின் அன்புள்ள தயவும் வழிநடத்துதலும்
8, 9. (அ) ஆபிரகாமின் ஊழியக்காரனிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான வேலை என்ன? (ஆ) கடவுளுடைய அன்புள்ள தயவிற்காக அந்த ஊழியக்காரன் ஏன் ஜெபித்தார், அப்போது என்ன நடந்தது?
8 ஆதியாகமம் 24-ம் அதிகாரத்தில், கடவுளுடைய அன்புள்ள தயவு, அல்லது பற்றுமாறா அன்பு வேறொரு விதத்தில் வெளிக்காட்டப்படுவதை வாசிக்கிறோம். தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும் முக்கியமான வேலையை ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம் ஒப்படைத்து, அவரை தன் உறவினர்கள் வாழும் நாட்டிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடப்படுகிறது. (வசனங்கள் 2-4) அது சிரமமான வேலையாக இருந்தாலும் யெகோவாவின் தூதன் வழிநடத்துவார் என அந்த ஊழியக்காரனுக்கு உறுதி அளிக்கப்பட்டது. (வசனம் 7) கடைசியில் அந்த ஊழியக்காரன் “நாகோருடைய ஊரில்,” (ஆரான், அல்லது அதற்குப் பக்கத்திலுள்ள ஓர் இடம்) நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு கிணற்றண்டைக்கு, தண்ணீர் மொள்ள பெண்கள் வரும் வேளையிலே போய்ச் சேர்ந்தார். (வசனங்கள் 10, 11) பெண்களெல்லாம் கிணற்றடிக்கு வருவதைக் கண்டபோது, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும் முக்கிய கட்டம் வந்திருப்பதை அந்த ஊழியக்காரன் உணர்ந்தார். ஆனால் பொருத்தமான பெண்ணை அவரால் எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?
9 கடவுளின் உதவி தனக்குத் தேவைப்படுவதை உணர்ந்த ஆபிரகாமின் ஊழியக்காரன் இவ்வாறு ஜெபித்தார்: “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும் [“அன்புள்ள தயவு காட்டியருளும்,” NW].” (வசனம் 12) தம் அன்புள்ள தயவை யெகோவா எப்படி வெளிக்காட்டுவார்? கடவுள் தேர்ந்தெடுக்கும் அந்தப் பெண்ணை தான் கண்டுணர்ந்து கொள்ளும் வகையில், திட்டவட்டமான ஓர் அடையாளத்தை அந்த ஊழியக்காரன் அவரிடம் கேட்டார். (வசனங்கள் 13, 14) யெகோவாவிடம் அவர் கேட்டதற்கு இணங்க ஒரு பெண் நடந்துகொண்டாள். சொல்லப்போனால், அவர் செய்த ஜெபத்தை ஒட்டுக்கேட்டது போலவே அவளுடைய செய்கைகள் இருந்தன! (வசனங்கள் 15-20) அந்த ஊழியக்காரன் இதைக் கண்டு ‘வாயடைத்துப் போய் . . . அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.’ (பொ.மொ.) இன்னும் சில முக்கியமான உண்மைகளை அவர் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த அழகான பெண், ஆபிரகாமின் சொந்தக்காரப் பெண்தானா? அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? ஆகவே, “கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தா[ர்].”—வசனங்கள் 16, 21.
10. தன் எஜமானுக்கு யெகோவா அன்புள்ள தயவு காட்டியிருந்ததாக ஆபிரகாமின் ஊழியக்காரன் ஏன் முடிவு செய்தார்?
10 அதற்குப் பின்னர் விரைவிலேயே, அந்தப் பெண் தன்னை, “[ஆபிரகாமின் சகோதரனாகிய] நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள்” என அறிமுகம் செய்துகொண்டாள். (ஆதியாகமம் 11:26; 24:24) யெகோவா தன் ஜெபத்திற்கு பதிலளித்திருப்பதை அந்தக் கணமே அந்த ஊழியக்காரன் உணர்ந்துகொண்டார். பிரமித்துப் போனவராய், “என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும் [“அன்புள்ள தயவையும்,” NW] தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை. நான் பிரயாணம்பண்ணி வருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார்” என்று சொல்லி தலைவணங்கினார். (வசனம் 27) காரியங்களை வழிநடத்துவதன் மூலம் அந்த ஊழியக்காரனின் எஜமானாகிய ஆபிரகாமுக்கு கடவுள் அன்புள்ள தயவு காட்டினார்.
கடவுளுடைய அன்புள்ள தயவு மீட்கிறது, காக்கிறது
11, 12. (அ) என்னென்ன கஷ்டங்களின்போது யோசேப்பு யெகோவாவின் அன்புள்ள தயவை அனுபவித்தார்? (ஆ) யோசேப்பின் விஷயத்தில் கடவுளின் அன்புள்ள தயவு எப்படி வெளிக்காட்டப்பட்டது?
11 அடுத்து, ஆதியாகமம் 39-ம் அதிகாரத்தை கலந்தாராய்வோம். அது ஆபிரகாமின் கொள்ளுப்பேரன் யோசேப்பைப் பற்றியது; அவர் எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார். எனினும், “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.” (வசனங்கள் 1, 2) எகிப்தில் யோசேப்புக்கு எஜமானாய் இருந்த போத்திபாரே, யெகோவா யோசேப்புடன் இருந்ததைக் கண்டுணர்ந்தார். (வசனம் 3) என்றாலும், யோசேப்பு மிக பயங்கரமான சோதனையை எதிர்ப்பட்டார். அவர் போத்திபாரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வசனங்கள் 7-20) அந்தக் “காவல் கிடங்கில்,” “அவன் கால்களை விலங்கு போட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.”—ஆதியாகமம் 40:15; சங்கீதம் 105:18.
12 சோதனைமிக்க அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? ‘கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்தார் [“அன்புள்ள தயவு காட்டினார்,” NW].’ (வசனம் 21அ) யோசேப்பு பட்டுக்கொண்டிருந்த துன்பங்கள் அனைத்திலிருந்தும் அவரை மீட்பதற்கு வழிநடத்திய தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாக, அன்புள்ள தயவை உட்படுத்திய ஒரு குறிப்பிட்ட செயல் அமைந்தது. “சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி” யெகோவா செய்தார். (வசனம் 21ஆ) அதனால் சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பை பொறுப்பான பதவியில் வைத்தார். (வசனம் 22) அடுத்து, எகிப்தை ஆண்ட பார்வோனுடைய கவனத்திற்கு கடைசியில் தன்னைக் கொண்டுவரவிருந்த ஒருவரை யோசேப்பு சந்தித்தார். (ஆதியாகமம் 40:1-4, 9-15; 41:9-14) பின்பு, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் இரண்டாம் அதிகாரியாக இருக்கும்படி உயர்த்தினார்; அது, பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட எகிப்து தேசத்தில் உயிர்களைக் காக்கும் வேலையை அவர் செய்ய வழிவகுத்தது. (ஆதியாகமம் 41:37-55) யோசேப்புக்கு 17 வயதாய் இருந்தபோது ஆரம்பித்த துன்பங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்தன! (ஆதியாகமம் 37:2, 4; 41:46) துன்பமும் ஒடுக்குதலும் நிறைந்த அந்தக் காலம் முழுவதிலும் யெகோவா தேவன் தம் அன்புள்ள தயவை யோசேப்பினிடம் காட்டினார்; எப்படியெனில் பெருந்துன்பத்திலிருந்து அவரை பாதுகாத்தார், கடவுளுடைய நோக்கத்தில் அரியதோர் வாய்ப்பை பெறுவதற்காக அவருடைய உயிரை காப்பாற்றினார்.
கடவுளின் அன்புள்ள தயவு அழிவதில்லை
13. (அ) யெகோவாவின் அன்புள்ள தயவு எவ்வாறெல்லாம் வெளிக்காட்டப்பட்டதாக சங்கீதம் 136 விவரிக்கிறது? (ஆ) அன்புள்ள தயவு என்பது உண்மையில் என்ன?
13 ஒரு ஜனமாக இஸ்ரவேலரிடம் யெகோவா திரும்பத் திரும்ப அன்புள்ள தயவை வெளிக்காட்டினார். தம் அன்புள்ள தயவால் அவர்களை மீட்டார் (வசனங்கள் 10-15), வழிநடத்தினார் (வசனம் 16), காத்தார் (வசனம் 17-20) என்றெல்லாம் சங்கீதம் 136 விவரிக்கிறது. தனி நபர்களிடமும் தம் அன்புள்ள தயவை கடவுள் வெளிக்காட்டியிருக்கிறார். சக மனிதனுக்கு அன்புள்ள தயவைக் காட்டும் ஒருவர் அவருடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் மனமுவந்து எதையாவது செய்கிறார். அன்புள்ள தயவு சம்பந்தமாக, பைபிள் விஷயங்களில் தகவல்தரும் புத்தகம் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “அது உயிரை காக்கும் அல்லது ஆதரிக்கும் ஒரு செயல். துன்பத்தை அனுபவிக்கும் ஒருவரின் சார்பாக தலையிடுவது.” ஓர் அறிஞர் அதை, “செயலில் வெளிப்படும் அன்பு” என்று விளக்குகிறார்.
14, 15. கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஊழியராக லோத்து இருந்தார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
14 யெகோவா தம்மை நேசிப்பவர்களிடம் அன்புள்ள தயவை காட்ட தவறுவதே இல்லை என்று நாம் ஆராய்ந்த ஆதியாகம பதிவுகள் காட்டுகின்றன. லோத்து, ஆபிரகாம், யோசேப்பு ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வித்தியாசமான சோதனைகளை எதிர்ப்பட்டார்கள். அவர்கள் அபூரண மனிதர்கள், ஆனாலும் யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள்; அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட்டது. அப்படிப்பட்ட தனி நபர்களிடம் நம் அன்பான பரம தகப்பன் அன்புள்ள தயவை வெளிக்காட்டுகிறார் என்பதை அறிந்து நாம் ஆறுதல் பெறலாம்.
15 தொல்லைகளுக்கு வழிநடத்திய ஞானமற்ற சில தீர்மானங்களை லோத்து செய்தார். (ஆதியாகமம் 13:12, 13; 14:11, 12) இருந்தாலும், மெச்சத்தக்க குணங்களும் அவரிடம் இருந்தன. கடவுளுடைய தூதர்களில் இருவர் சோதோமுக்கு வந்திருந்தபோது, அவர்களை லோத்து வரவேற்று உபசரித்தார். (ஆதியாகமம் 19:1-3) விசுவாசத்தால் சோதோமுக்கு வரவிருந்த அழிவைப் பற்றி சொல்லி தன் மருமகன்களை எச்சரித்தார். (ஆதியாகமம் 19:14) லோத்துவைப் பற்றிய கடவுளுடைய எண்ணத்தை 2 பேதுரு 2:7-9-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க . . . அறிந்திருக்கிறார்.” சந்தேகமின்றி, லோத்து நீதிமானாய் இருந்தார், இங்கு அவர் விவரிக்கப்படும் விதமும் தேவபக்தியுள்ள நபராக அவரை அடையாளம் காட்டுகிறது. நாம் ‘பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாய்’ இருக்கையில், அவரைப் போலவே, நாமும் கடவுளின் அன்புள்ள தயவை அனுபவிக்கிறோம்.—2 பேதுரு 3:11, 12.
16. ஆபிரகாமையும் யோசேப்பையும் குறித்து மெச்சத்தக்க வகையில் பைபிள் என்ன சொல்கிறது?
16 ஆதியாகமம் 24-ம் அதிகாரத்தில் உள்ள பதிவு, யெகோவாவுடன் ஆபிரகாம் வைத்திருந்த நெருங்கிய பந்தத்தை தெளிவாக காட்டுகிறது. “கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்” என முதல் வசனம் சொல்கிறது. “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவ[ன்]” என யெகோவாவை ஆபிரகாமின் ஊழியக்காரன் குறிப்பிட்டார். (வசனங்கள் 12, 27) ஆபிரகாம் ‘கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டார்’ என்றும், ‘தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டார்’ என்றும் சீஷனாகிய யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 2:21-23) யோசேப்பின் விஷயத்திலும் பெரும்பாலும் அதுவே உண்மை. யெகோவாவுக்கும் யோசேப்புக்கும் இடையே நிலவிய நெருங்கிய பந்தம் ஆதியாகமம் 39-ம் அதிகாரம் முழுவதிலும் வலியுறுத்திக் காட்டப்படுகிறது. (வசனங்கள் 2, 3, 21, 23) மேலும், யோசேப்பைக் குறித்து, ‘தேவனோ அவனுடனேகூட இருந்தார்’ என சீஷனாகிய ஸ்தேவான் கூறினார்.—அப்போஸ்தலர் 7:10.
17. லோத்து, ஆபிரகாம், யோசேப்பு ஆகியோரின் உதாரணங்களிலிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளலாம்?
17 நாம் இப்போது கலந்தாலோசித்தபடி, யெகோவா தேவனின் அன்புள்ள தயவைப் பெற்ற நபர்கள், அவருடன் நல்லுறவை காத்துக்கொண்டவர்கள்; அவருடைய நோக்கத்தை வெவ்வேறு வழிகளில் நிறைவேற்றினவர்கள். தாங்களாகவே சமாளித்திருக்க முடியாத பிரச்சினைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள். லோத்தின் உயிர் காப்பாற்றப்படுவது, ஆபிரகாமின் வம்சாவளி தொடர்வது, யோசேப்பு வகிக்கும் பாகத்தை காத்துக்கொள்வது ஆகியவை ஆபத்தில் இருந்தன. தேவபக்தியுள்ள இந்த ஆட்களின் தேவைகளை யெகோவா மட்டுமே தீர்த்து வைக்க முடியும்; அவ்வாறே அவரும் குறுக்கிட்டு அன்புள்ள தயவின் செயல்களால் அவற்றை தீர்த்து வைத்தார். யெகோவா தேவனின் அன்புள்ள தயவை என்றென்றும் அனுபவிப்பதற்கு, நாமும் அவருடன் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும், அவருடைய சித்தத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.—எஸ்றா 7:27, 28; சங்கீதம் 18:50.
கடவுளின் ஊழியர்கள் தயவு பெற்றவர்கள்
18. யெகோவாவின் அன்புள்ள தயவைப் பற்றி வெவ்வேறு பைபிள் வசனங்கள் என்ன காட்டுகின்றன?
18 யெகோவாவின் அன்புள்ள தயவினால் “பூமி . . . நிறைந்திருக்கிறது”; ஆகவே கடவுளின் இந்தப் பண்பிற்காக நாம் எவ்வளவாய் நன்றிக் கடன் பட்டுள்ளோம்! (சங்கீதம் 119:64) சங்கீதக்காரனின் பின்வரும் பல்லவிக்கு இசைவாக நாமும் முழு இருதயத்தோடு பிரதிபலிக்கிறோம்: “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் [ஜனங்கள்] அவரைத் துதிப்பார்களாக.” (சங்கீதம் 107:9, 16, 21, 31) யெகோவா தம் அன்புள்ள தயவை தனி நபர்களாகவும், தொகுதியாகவும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தம் ஊழியர்களுக்கு காட்டுவதால் நாம் மகிழ்கிறோம். ஜெபத்தில், தானியேல் தீர்க்கதரிசி யெகோவாவை, “ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் [“அன்புள்ள தயவையும்,” NW] காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவ”ன் என்று அழைத்தார். (தானியேல் 9:4) தாவீது ராஜா இவ்வாறு ஜெபித்தார்: “உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையை [“அன்புள்ள தயவை,” NW] . . . பாராட்டியருளும்.” (சங்கீதம் 36:10) தம் ஊழியர்களிடம் யெகோவா அன்புள்ள தயவு காட்டுவதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—1 இராஜாக்கள் 8:23; 1 நாளாகமம் 17:13.
19. அடுத்த கட்டுரையில் என்னென்ன கேள்விகளை நாம் கலந்தாராய்வோம்?
19 நிஜமாகவே, யெகோவாவின் ஜனங்களாக, நாம் தயவு பெற்றவர்கள்! பொதுவாக மனிதகுலத்திடம் யெகோவா காட்டியிருக்கும் அன்பால் நன்மை பெறுவதுடன், நம் பரலோக தகப்பனின் அன்புள்ள தயவால் அல்லது பற்றுமாறா அன்பால் இன்னும் விசேஷித்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். (யோவான் 3:16) முக்கியமாக, தேவைப்படும் சமயத்தில் யெகோவாவின் இந்த மதிப்பு வாய்ந்த பண்பினால் நன்மை அடைகிறோம். (சங்கீதம் 36:7) ஆனால் யெகோவா தேவனின் அன்புள்ள தயவை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? இந்த விசேஷித்த பண்பை தனி நபர்களாக நாம் வெளிக்காட்டுகிறோமா? இவையும் இது சம்பந்தப்பட்ட கேள்விகளும் அடுத்த கட்டுரையில் கலந்தாராயப்படும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பைபிளில் ‘அன்புள்ள தயவு’ என்பதற்கு இணையாக வேறு எதுவும் பயன்படுத்தப்படுகிறது?
• அன்பிலிருந்தும், உண்மைப் பற்றுறுதியிலிருந்தும் அன்புள்ள தயவு எவ்வாறு வேறுபடுகிறது?
• லோத்து, ஆபிரகாம், யோசேப்பு ஆகியோருக்கு யெகோவா என்னென்ன விதங்களில் அன்புள்ள தயவு காட்டினார்?
• முற்காலத்தில் யெகோவா வெளிக்காட்டியிருக்கும் அன்புள்ள தயவிலிருந்து என்ன உறுதியை நாம் பெறுகிறோம்?
[பக்கம் 13-ன் படம்]
கடவுள் எவ்வாறு லோத்துக்கு அன்புள்ள தயவு காட்டினார் என்று தெரியுமா?
[பக்கம் 15-ன் படங்கள்]
தம் அன்புள்ள தயவால், ஆபிரகாமின் ஊழியக்காரனை யெகோவா வழிநடத்தினார்
[பக்கம் 16-ன் படங்கள்]
யோசேப்பை பாதுகாப்பதன் மூலம் யெகோவா அன்புள்ள தயவை வெளிக்காட்டினார்