முடிவு நெருங்கி வருகையில் தொடர்ந்து கீழ்ப்படியுங்கள்
“[ஷைலோவுக்கே] ஜனங்களின் கீழ்ப்படிதல் உரியதாயிருக்கும்.”—ஆதியாகமம் 49:10, Nw.
1. (அ) பூர்வ காலங்களில், யெகோவாவுக்கு கீழ்ப்படிவது பெரும்பாலும் எதையும் அர்த்தப்படுத்தியது? (ஆ) கீழ்ப்படிதல் சம்பந்தமாக என்ன தீர்க்கதரிசனத்தை யாக்கோபு முன்னறிவித்தார்?
யெகோவாவின் பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படிவது அவருக்கு கீழ்ப்படிவதை பெரும்பாலும் அர்த்தப்படுத்தியிருக்கிறது. தூதர்கள், முற்பிதாக்கள், நியாயாதிபதிகள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் ஆகிய பலரும் அவருடைய பிரதிநிதிகளாக இருந்திருக்கிறார்கள். இஸ்ரவேலின் ராஜாக்கள் வீற்றிருந்த சிங்காசனம் யெகோவாவின் சிங்காசனம் என்றும் அழைக்கப்பட்டது. (1 நாளாகமம் 29:23) என்றாலும், இஸ்ரவேலில் ஆட்சி செய்தவர்கள் பலரும் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனதே வேதனையிலும் வேதனையான விஷயம். அதனால் அவர்கள் தங்களுக்கும் தங்களுடைய குடிமக்களுக்கும் துன்பத்தை வரவழைத்தனர். ஆனால் தமக்கு விசுவாசமாக இருந்த ஜனங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் அளிக்காமல் அவர்களை யெகோவா கைவிட்டுவிடவில்லை. அழியாத அரசரை அமர்த்துவதைக் குறித்த வாக்குறுதியை அவர்களுக்கு கொடுத்து ஆறுதலளித்தார்; அவருக்கு கீழ்ப்படிவதில் நீதிமான்கள் மகிழ்ச்சி காண்பார்கள். (ஏசாயா 9:6, 7) மரண தறுவாயில் இருந்த முற்பிதாவாகிய யாக்கோபு, இந்த வருங்கால அரசரைக் குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “ஷைலோ வரும்வரை, செங்கோல் யூதாவை விட்டு விலகிப் போகாது, அதிகாரியின் கோலும் அவன் பாதங்களுக்கிடையிலிருந்து நீங்கிப் போகாது; அவருக்கே ஜனங்களின் கீழ்ப்படிதல் உரியதாயிருக்கும்.”—ஆதியாகமம் 49:10, NW.
2. “ஷைலோ” என்பதன் அர்த்தம் என்ன, அவர் யாரையும் ஆட்சி செய்வார்?
2 “ஷைலோ” என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம் “உரியவருடையது” அல்லது “எவருக்கு சொந்தமோ அவருக்கே உரியது” என்பதாகும். செங்கோல் அடையாளப்படுத்துவதற்கு ஏற்ப ஆட்சி செய்வதற்கான முழு உரிமையை ஷைலோ பெறுவார், அதிகாரியின் கோல் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஏற்ப ஆணையிடுவதற்கான அதிகாரத்தையும் அவர் பெறுவார். அதோடு, அவர் யாக்கோபின் சந்ததியாரை மட்டுமல்ல சகல ‘ஜனங்களையும்’ ஆட்சி செய்வார். இது, ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக உள்ளது; “உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும் . . . உன் சந்ததிக்குள் [“வித்தின் மூலமாக,” NW] பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும்” அவரிடம் யெகோவா வாக்குறுதி அளித்தார். (ஆதியாகமம் 22:17, 18) பொ.ச. 29-ல் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை யெகோவா பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தபோது அந்த ‘வித்துவின்’ அடையாளத்தை தெளிவுபடுத்தினார்.—லூக்கா 3:21-23, 34; கலாத்தியர் 3:16.
இயேசுவின் முதல் ராஜ்யம்
3. இயேசு பரலோகத்திற்கு சென்ற போது என்ன ஆட்சியுரிமையை பெற்றார்?
3 இயேசு பரலோகத்திற்கு சென்ற உடனேயே உலகிலுள்ள ஜனங்களை ஆளுவதற்கு செங்கோலை பெறவில்லை. (சங்கீதம் 110:1) என்றாலும், கீழ்ப்படிகிற குடிமக்களைக் கொண்ட ஒரு ‘ராஜ்யத்தை’ அவர் பெற்றார். அந்த ராஜ்யத்தை அப்போஸ்தலனாகிய பவுல் அடையாளம் காட்டி இவ்வாறு எழுதினார்: ‘இருளின் அதிகாரத்தினின்று [கடவுள்] நம்மை [ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை] விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார்.’ (கொலோசெயர் 1:13) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் இயேசுவின் உண்மையுள்ள சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட போது அந்த விடுதலை ஆரம்பமானது.—அப்போஸ்தலர் 2:1-4; 1 பேதுரு 2:9.
4. இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் என்ன வழிகளில் தங்கள் கீழ்ப்படிதலை காண்பித்தார்கள், ஒரு குழுவாக அவர்களை இயேசு எப்படி அடையாளம் காட்டினார்?
4 ‘கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளான’ ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்கள் அந்த ஆவிக்குரிய ராஜ்யத்தின் ‘உடன் குடிமக்களாக’ ஆகவிருக்கும் மற்றவர்களை கீழ்ப்படிதலோடு கூட்டிச் சேர்க்க ஆரம்பித்தனர். (2 கொரிந்தியர் 5:20; எபேசியர் 2:19, NW; அப்போஸ்தலர் 1:8) அதுமட்டுமல்ல, தங்கள் அரசராகிய இயேசு கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர்கள் “ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்க” வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 1:10) ஒரு குழுவாக, அவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ அல்லது உண்மையுள்ள விசாரணைக்கார வகுப்பாக ஆனார்கள்.—மத்தேயு 24:45, NW; லூக்கா 12:42.
கடவுளின் ‘விசாரணைக்காரனுக்கு’ கீழ்ப்படிந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்
5. பூர்வ காலங்கள் முதற்கொண்டு யெகோவா தம் மக்களுக்கு எப்படி கற்பித்து வந்திருக்கிறார்?
5 யெகோவா தம் ஜனங்களுக்காக எப்போதுமே போதகர்களை அளித்திருக்கிறார். உதாரணமாக, பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வந்த பின்பு, எஸ்றாவும் தகுதி பெற்ற எண்ணற்ற மற்ற மனிதரும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு வெறுமனே வாசித்துக் காட்டவில்லை; “அர்த்தஞ்சொல்லி” கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்கு “விளங்கப்பண்ணினார்கள்.”—நெகேமியா 8:8.
6, 7. ஆளும் குழுவின் வாயிலாக இந்த அடிமை காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவை எவ்வாறு அளித்திருக்கிறது, இந்த அடிமைக்கு கீழ்ப்பட்டிருப்பது ஏன் பொருத்தமானது?
6 முதல் நூற்றாண்டில், அதாவது பொ.ச. 49-ல் விருத்தசேதனத்தைக் குறித்த விவாதம் எழும்பியபோது, ஆரம்ப கால அடிமை வகுப்பின் பாகமான ஆளும் குழுவினர் அந்த விஷயத்தைக் கலந்தாலோசித்து வேதப்பூர்வமாக முடிவெடுத்தனர். அவர்கள் தங்கள் முடிவை கடிதம் மூலமாக அறிவித்தபோது, சபைகள் அந்தத் தீர்மானத்திற்கு கீழ்ப்படிந்தன; கடவுளிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்ந்தன. (அப்போஸ்தலர் 15:6-15, 22-29; 16:4, 5) அவ்வாறே நவீன காலங்களிலும் கிறிஸ்தவ நடுநிலைமை, இரத்தத்தின் பரிசுத்தத்தன்மை, போதைப்பொருட்களையும் புகையிலையையும் பயன்படுத்துவது போன்ற முக்கியமான விவாதங்களை ஆளும் குழுவின் மூலமாக உண்மையுள்ள அடிமை தெளிவாக்கியிருக்கிறது. (ஏசாயா 2:4; அப்போஸ்தலர் 21:25; 2 கொரிந்தியர் 7:1) தம் வார்த்தைக்கும் உண்மையுள்ள அடிமைக்கும் கீழ்ப்படிந்ததால் யெகோவா தம் ஜனங்களை ஆசீர்வதித்தார்.
7 கடவுளுடைய ஜனங்கள் அடிமை வகுப்புக்கு தங்களை கீழ்ப்படுத்துவதன் மூலம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் கீழ்ப்படிதலை காட்டுகிறார்கள். மரணப் படுக்கையில் யாக்கோபு முன்னுரைத்த தீர்க்கதரிசனத்தின்படி, நவீன காலங்களில் இயேசு மிகுந்த அதிகாரம் உடையவராக இருப்பதால், அவ்வாறு கீழ்ப்படிவது இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
ஷைலோ பூமியின் உரிமையுள்ள ஆட்சியாளர் ஆகிறார்
8. கிறிஸ்துவின் அதிகாரம் எப்போது, எப்படி விரிவடைந்தது?
8 யாக்கோபுவின் தீர்க்கதரிசனம் முன்னறிவித்த விதமாக ஷைலோ ‘ஜனங்களின் கீழ்ப்படிதலை’ பெறுவார். ஆகவே, கிறிஸ்துவின் ஆட்சி ஆவிக்குரிய இஸ்ரவேலரை மட்டுமே உட்படுத்துவதில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் அவருடைய ஆட்சி யாரையெல்லாம் உட்படுத்தும்? வெளிப்படுத்துதல் 11:15 இவ்வாறு பதிலளிக்கிறது: ‘உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.’ இயேசு அந்த அதிகாரத்தை 1914-ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட ‘ஏழு காலங்களின்’ அதாவது, ‘புறஜாதிகளுக்கு குறிக்கப்பட்ட காலங்களின்’ முடிவில் பெற்றார் என பைபிள் தெரியப்படுத்துகிறது.a (தானியேல் 4:16, 17; லூக்கா 21:24) அந்த வருடத்தில் மேசியானிய அரசராக, கிறிஸ்துவின் காணக்கூடாத ‘பிரசன்னம்’ ஆரம்பமானது; அப்போதுதான் அவர் “[தம்] சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்” காலம் ஆரம்பமானது.—மத்தேயு 24:3, NW; சங்கீதம் 110:2.
9. இயேசு ராஜ்யத்தைப் பெற்றதும் என்ன செய்தார், இதனால் மனிதகுலத்திற்கு, முக்கியமாக அவருடைய சீஷர்களுக்கு மறைமுகமான என்ன பாதிப்பு ஏற்பட்டது?
9 ராஜ்ய வல்லமையை இயேசு பெற்றதும் முதலாவதாக கீழ்ப்படியாமையே உருவான சாத்தானை, அவனுடைய பேய்களோடுகூட ‘பூமிக்கு விழத் தள்ளினார்.’ அப்போது முதற்கொண்டு இந்தப் பொல்லாத ஆவிகள், இதுவரை பார்த்திராத அளவுக்கு பயங்கரமான கஷ்டங்களை மனிதகுலத்திற்கு கொண்டுவந்திருக்கின்றன; தவிர யெகோவாவுக்கு கீழ்ப்படிவதை கடினமாக்கும் சூழலையும் உருவாக்கியிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:7-12; 2 தீமோத்தேயு 3:1-5) சொல்லப்போனால், சாத்தானுடைய காணக்கூடாத போரில் முக்கிய குறியிலக்காக இருப்பவர்கள் “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” யெகோவாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய ‘வேறே ஆடுகளுமாவர்.’—வெளிப்படுத்துதல் 12:17; யோவான் 10:16.
10. உண்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான சாத்தானுடைய போரின் தோல்விக்கு எந்த பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்கள் உறுதியளிக்கின்றன?
10 என்றாலும் சாத்தானுடைய முயற்சி தோல்வியையே குறிக்கும்; ஏனெனில் இது ‘கர்த்தருடைய நாள்,’ இயேசு ‘முற்றிலும் வெற்றி சிறப்பதை’ எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. (வெளிப்படுத்துதல் 1:10; 6:2, NW) உதாரணமாக, 1,44,000 பேராகிய ஆவிக்குரிய இஸ்ரவேலர் கடைசியாக முத்திரை போடப்படுவதை அவர் பார்த்துக்கொள்வார். ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களையும்’ அவர் பாதுகாப்பார். (வெளிப்படுத்துதல் 7:1-4, 9, 14-16) இவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட தங்கள் கூட்டாளிகளைப் போலில்லாமல், இயேசுவின் கீழ்ப்படிதலுள்ள பூமிக்குரிய குடிமக்களாவார்கள். (தானியேல் 7:13, 14) அவர்கள் ஏற்கெனவே இந்த பூமியில் இருப்பதுதானே ஷைலோ இந்த ‘உலக ராஜ்யங்களை’ ஆளுபவர் என்பதற்கு காணக்கூடிய அத்தாட்சியை அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:15.
‘நற்செய்திக்கு கீழ்ப்படிவதற்கான’ காலம் இதுவே
11, 12. (அ) தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவிலிருந்து யார் மட்டுமே தப்பிப்பிழைப்பர்? (ஆ) இந்த ‘உலகத்தின் ஆவியில்’ மூழ்கிப்போகிறவர்களிடம் என்ன குணங்கள் உருவாகின்றன?
11 நித்திய ஜீவனைப் பெற விரும்புகிற அனைவரும் கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் ‘தேவனை அறியாதவர்களும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் [“நற்செய்திக்குக்,” NW] கீழ்ப்படியாதவர்களும்’ கடவுளுடைய பழிவாங்கும் நாளை தப்பிப்பிழைக்க மாட்டார்கள் என பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (2 தெசலோனிக்கேயர் 1:7) என்றாலும், தற்போதைய பொல்லாத உலக நிலவரமும் பைபிள் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் எதிரான அதன் கலக மனப்பான்மையும் நற்செய்திக்கு கீழ்ப்படிவதை கடினமாக்குகின்றன.
12 கடவுளுக்கு எதிரான இந்தக் கலக மனப்பான்மையை “உலகத்தின் ஆவி” என பைபிள் விவரிக்கிறது. (1 கொரிந்தியர் 2:12) அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அவர் கூறியதாவது: “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.”—எபேசியர் 2:2, 3.
13. கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் ஆவியை எவ்வாறு திறம்பட்ட முறையில் எதிர்க்கலாம், என்ன சிறந்த பலன்களோடு?
13 எபேசிய கிறிஸ்தவர்கள் கீழ்ப்படியாமையின் ஆவிக்கு அடிமைகளாக தொடர்ந்து இருக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மாறாக, அவர்கள் கடவுளுடைய ஆவிக்கு தங்களை கீழ்ப்படுத்துவதன் மூலமும் அதன் ஏராளமான, சிறந்த கனிகளை அறுவடை செய்வதன் மூலமும் அவருடைய கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளானார்கள். (கலாத்தியர் 5:22, 23) அவ்வாறே இன்றும், யெகோவாவின் ஆவி—இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் வல்லமையான சக்தி—அவருக்குக் கீழ்ப்படிய லட்சோப லட்சம் ஜனங்களுக்கு உதவுகிறது. அதன் விளைவாக, ‘முடிவுபரியந்தம் நம்பிக்கையின் பூரண நிச்சயத்தை’ அவர்கள் கொண்டிருக்கலாம்.—எபிரெயர் 6:12; சகரியா 4:6.
14. கடைசி நாட்களில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரின் கீழ்ப்படிதலுக்கும் சோதனையாக வரும் திட்டவட்டமான பிரச்சினைகளைக் குறித்து இயேசு எப்படி எச்சரித்தார்?
14 ஷைலோவின் வல்லமையான பக்கபலம் நமக்கு இருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எந்த எதிரியும்—பேயோ மனிதனோ யாராக இருந்தாலும்—நம் சக்திக்கும் மிஞ்சிய அளவில் நம்முடைய கீழ்ப்படிதலை சோதிப்பதற்கு ஷைலோவும் அவருடைய பிதாவும் அனுமதிக்க மாட்டார்கள். (1 கொரிந்தியர் 10:13) சொல்லப்போனால், ஆவிக்குரிய போரில் நமக்கு உதவுவதற்காக, இந்த கடைசி நாட்களில் நாம் எதிர்ப்படும் எண்ணற்ற திட்டவட்டமான பிரச்சினைகளை இயேசு குறிப்பிட்டார். அவர் இதை ஏழு கடிதங்கள் மூலமாக குறிப்பிட்டார்; இவற்றை ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அவர் கொடுத்தார். (வெளிப்படுத்துதல் 1:10, 11) அவற்றில் அடங்கியிருந்த ஆலோசனைகள் அன்றிருந்த கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானவையாய் இருந்தன என்பது உண்மையே; ஆனால் அந்த ஆலோசனைகள் ‘கர்த்தருடைய நாளுக்கு,’ அதாவது 1914 முதற்கொண்டு முக்கியமாக பொருந்துகின்றன. அப்படியானால், இந்த விஷயங்களுக்கு கவனம் செலுத்துவது எவ்வளவு பொருத்தமானது!b
அசட்டை மனப்பான்மை, ஒழுக்கக்கேடு, பொருளாசை ஆகியவற்றை தவிருங்கள்
15. எபேசு சபைக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எதிராக நம்மை ஏன் காத்துக்கொள்ள வேண்டும், அதை நாம் எப்படி செய்யலாம்? (2 பேதுரு 1:5-8)
15 இயேசுவின் முதல் கடிதம் எபேசு சபைக்கு எழுதப்பட்டது. அந்த சபையின் சகிப்புத்தன்மையைக் குறித்து பாராட்டிய பின்பு, “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என இயேசு குறிப்பிட்டார். (வெளிப்படுத்துதல் 2:1-4) இன்றும்கூட ஒரு சமயம் வைராக்கியமாக இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் கடவுளிடம் தாங்கள் முன்பு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை விட்டுவிட்டிருக்கிறார்கள். இவ்வாறு அன்பை இழந்துவிடுதல் கடவுள் மீதுள்ள ஒருவரின் உறவை பலவீனப்படுத்தலாம்; அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த அன்பை மீண்டும் அபிவிருத்தி செய்வது எப்படி? தவறாமல் பைபிள் படிப்பது, கூட்டங்களுக்கு செல்வது, ஜெபம் செய்வது, தியானிப்பது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தி செய்யலாம். (1 யோவான் 5:3) இதற்கு ‘ஊக்கமான முயற்சி’ தேவை என்பது உண்மைதான், ஆனால் பலன் நிச்சயம். (2 பேதுரு 1:5-8, NW) சுயபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்கள் அன்பு தணிந்துவிட்டிருப்பது தெரியவருமேயானால், இயேசுவின் அறிவுரைக்கு கீழ்ப்படிந்து நிலைமையை உடனடியாக சரிசெய்யுங்கள். “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்பதே இயேசுவின் அறிவுரை.—வெளிப்படுத்துதல் 2:5.
16. ஆவிக்குரிய தன்மைக்கு அச்சுறுத்தலாக இருந்த என்ன பாதிப்புகள் பெர்கமு மற்றும் தியத்தீரா சபைகளில் இருந்தன, அவர்களுக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் இன்று ஏன் பொருத்தமாக இருக்கின்றன?
16 உத்தமத்தன்மை, பொறுமை, வைராக்கியம் போன்ற குணங்களுக்காக பெர்கமு மற்றும் தியத்தீரா சபைகளிலிருந்த கிறிஸ்தவர்கள் பாராட்டப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 2:12, 13, 18, 19) ஆனாலும் பிலேயாமையும் யேசபேலையும் போல் தீய மனப்பான்மையை காண்பித்த குறிப்பிட்ட சிலரால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்; அந்த இருவரும் பூர்வ இஸ்ரவேலில் பாலியல் ஒழுக்கக்கேடு, பாகால் வணக்கம் போன்றவை வாயிலாக தவறான செல்வாக்கு செலுத்தியவர்கள். (எண்ணாகமம் 31:16; 1 இராஜாக்கள் 16:30, 31; வெளிப்படுத்துதல் 2:14, 16, 20-23) ஆனால் நம்முடைய நாளில், அதாவது ‘கர்த்தருடைய நாளில்’ என்ன நடக்கிறது? அதே மோசமான பாதிப்புகள் இருக்கின்றனவா? ஆம், கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் சபை நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாலியல் ஒழுக்கக்கேடுதான். அப்படியானால், சபைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்க விஷயங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது எவ்வளவு முக்கியம்! (1 கொரிந்தியர் 5:9-11; 15:33) ஷைலோவின் கீழ்ப்படிதலுள்ள பிரஜைகளாக இருக்க விரும்புகிறவர்கள் பைபிளின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களுக்குப் புறம்பான பொழுதுபோக்குகளையும் அதோடு, அச்சு வடிவிலோ இன்டர்நெட் வடிவிலோ உருவெடுக்கும் ஆபாசமான காரியங்களையும் தவிர்ப்பர்.—ஆமோஸ் 5:15; மத்தேயு 5:28, 29.
17. சர்தை மற்றும் லவோதிக்கேயா சபைகளின் எண்ணமும் மனப்பான்மையும் அவற்றின் ஆவிக்குரிய நிலையைக் குறித்த இயேசுவின் எண்ணத்தோடு ஒப்பிட எப்படி இருந்தன?
17 சர்தை சபையிலுள்ள சிலரைத் தவிர மற்றவர்கள் எந்தப் பாராட்டையும் பெறவில்லை. அந்தச் சபை ‘பெயருக்கு’ உயிருள்ளதுபோல் இருந்தது; ஆனால், ஆவிக்குரிய காரியங்களில் கொஞ்சமும் அக்கறையில்லாமல் போயிருந்ததால் இயேசுவின் பார்வையில் அது ‘செத்ததாய்’ இருந்தது. நற்செய்திக்கு பெரும்பாலும் மேலோட்டமாகவே கீழ்ப்படிந்தது. எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டு! (வெளிப்படுத்துதல் 3:1-3) லவோதிக்கேயா சபையும் இதே நிலையில்தான் இருந்தது. அது தன் செல்வ செழிப்பினால் பெருமையோடு, ‘நான் ஐசுவரியவான்’ என கூறியது; ஆனால் கிறிஸ்துவின் பார்வைக்கு ‘நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருந்தது.’—வெளிப்படுத்துதல் 3:14-17.
18. கடவுளுடைய பார்வையில் ஆவிக்குரிய விதத்தில் வெதுவெதுப்பான நிலைக்கு ஆளாவதை ஒருவர் எப்படி தவிர்க்கலாம்?
18 இன்றும், ஒருசமயத்தில் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாக இருந்த சிலர் இதேவிதமான கீழ்ப்படியாமைக்குள் வீழ்ந்திருக்கிறார்கள். ஒருவேளை காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்துகொள்ளாத அளவுக்கு உலகத்தின் மனப்பான்மைக்கு அவர்கள் இடமளித்திருக்கலாம்; இவ்வாறு பைபிளை படிப்பது, ஜெபம் செய்வது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் செல்வது போன்ற காரியங்களில் ஆவிக்குரிய விதத்தில் வெதுவெதுப்பான மனநிலையை காண்பிக்கிறார்கள். (2 பேதுரு 3:3, 4, 11, 12) அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய செல்வங்களை முதலீடு செய்வதன் மூலம்—“நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை [கிறிஸ்துவிடமிருந்து] . . . வாங்கிக்கொள்”வதன் மூலம்—கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம்! (வெளிப்படுத்துதல் 3:18) அப்படிப்பட்ட உண்மையான சொத்தில், ‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக, தாராளமாய்க் கொடுக்கிறவர்களாக, உதார குணமுள்ளவர்களாக’ இருப்பதும் உட்படுகிறது. உண்மையிலேயே மதிப்புமிக்க இந்த சொத்துக்களுக்காக முதலீடு செய்வதன் மூலம் ‘மெய் வாழ்க்கையை பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நமக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்.’—1 தீமோத்தேயு 6:17-19; NW.
கீழ்ப்படிதலுக்கு பாராட்டைப் பெற்றன
19. சிமிர்னா மற்றும் பிலதெல்பியாவில் உள்ளவர்களுக்கு இயேசு என்ன பாராட்டுகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்?
19 சிமிர்னா மற்றும் பிலதெல்பியா சபைகள் கீழ்ப்படிதலுக்கு தலைசிறந்த மாதிரிகளாக திகழ்ந்தன; ஏனெனில் அந்த சபைகளுக்கு எழுதப்பட்ட இயேசுவின் கடிதங்களில் எந்தக் கடிந்துகொள்ளுதல்களும் இல்லை. சிமிர்னாவைக் குறித்து, “உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும் . . . அறிந்திருக்கிறேன்” என்று அவர் கூறினார். (வெளிப்படுத்துதல் 2:9) உண்மையில் தரித்திரராக இருந்தும் உலக செல்வங்களால் பெருமை கொண்ட லவோதிக்கேயா கிறிஸ்தவர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு! யாருமே கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் பிசாசு நிச்சயம் விரும்பவில்லை. ஆகவே, “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என இயேசு எச்சரித்தார். (வெளிப்படுத்துதல் 2:10) அவ்வாறே, பிலதெல்பியாவில் உள்ளவர்களைப் பாராட்டி, “நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே [அல்லது, எனக்குக் கீழ்ப்படிந்தபடியினாலே], . . . இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” என இயேசு கூறினார்.—வெளிப்படுத்துதல் 3:8, 11.
20. லட்சக்கணக்கானோர் இயேசுவின் வார்த்தையை இன்று எப்படி காத்து வந்திருக்கிறார்கள், எந்த சூழ்நிலைகளில்?
20 ‘கர்த்தருடைய நாளில்’ அதாவது 1914 முதற்கொண்டு, உண்மையுள்ள மீதியானோரும் இப்போது லட்சக்கணக்கில் இருக்கும் அவர்களுடைய கூட்டாளிகளான வேறே ஆடுகளும்கூட ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவதன் மூலமாகவும் உத்தமத்தை உறுதியாக கடைப்பிடிப்பதன் மூலமாகவும் இயேசுவின் வார்த்தையை காத்து வந்திருக்கிறார்கள். தங்களுடைய முதல் நூற்றாண்டு சகோதரர்களைப் போலவே இவர்களில் சிலர் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்ததால் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்; சிறைகளுக்குள்ளும் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களுக்குள்ளும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ டாம்பீகமும் பேராசையும் நிறைந்த உலகில் வாழ்ந்தாலும் தங்கள் ‘கண்களை எளிமையாக’ வைத்திருப்பதன் மூலம் இயேசுவின் வார்த்தையை காத்து வந்திருக்கிறார்கள். (மத்தேயு 6:22, 23, NW) ஆம், உண்மை கிறிஸ்தவர்கள் எல்லா சூழ்நிலையிலும் எல்லா சந்தர்ப்பத்திலும் தங்கள் கீழ்ப்படிதலின் மூலம் தொடர்ந்து யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறார்கள்.—நீதிமொழிகள் 27:11.
21. (அ) ஆவிக்குரிய என்ன பொறுப்பை அடிமை வகுப்பு தொடர்ந்து நிறைவேற்றி வரும்? (ஆ) நாம் உண்மையிலேயே ஷைலோவுக்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புவதை எப்படி காட்டலாம்?
21 மிகுந்த உபத்திரவம் நெருங்கி வருகையில் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தங்கள் எஜமானராகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதை விட்டுக்கொடுக்காதிருக்க தீர்மானமாய் இருக்கிறார்கள். கடவுளுடைய வீட்டாருக்கு ஏற்ற வேளையில் ஆவிக்குரிய ஆகாரத்தை தயாரிப்பதும் இதில் அடங்கும். ஆகவே, யெகோவாவின் அருமையான தேவராஜ்ய அமைப்புக்கும் அது அளிக்கும் காரியங்களுக்கும் நாம் தொடர்ந்து நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக. இவ்வாறு, கீழ்ப்படிதலுள்ள குடிமக்களுக்கு பலன் அளிப்பவராகிய ஷைலோவுக்கு கீழ்ப்பட்டிருப்பதை நாம் மெய்ப்பித்து காட்டுகிறோம்.—மத்தேயு 24:45-47, NW; 25:40; யோவான் 5:22-24.
[அடிக்குறிப்புகள்]
a ‘ஏழு காலங்களைப்’ பற்றிய விளக்கத்திற்கு யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 10-ம் அதிகாரத்தைக் காண்க.
b ஏழு கடிதங்களைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் 33-ம் பக்கம் முதற்கொண்டு காண்க.
நினைவிருக்கிறதா?
• யாக்கோபு தன் மரணப் படுக்கையில் முன்னறிவித்த தீர்க்கதரிசனத்தின்படி இயேசு என்ன பாகத்தை வகிக்கவிருந்தார்?
• இயேசுவை ஷைலோவாக நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம், என்ன மனப்பான்மையை நாம் தவிர்க்க வேண்டும்?
• நம் நாளுக்கு பொருத்தமான என்ன ஆலோசனை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட கடிதங்களில் அடங்கியுள்ளது?
• பூர்வ கால சிமிர்னா மற்றும் பிலதெல்பியா சபையினரை நாம் எவ்வழிகளில் பின்பற்றலாம்?
[பக்கம் 18-ன் படங்கள்]
தம் மக்கள் உண்மையுள்ள ‘விசாரணைக்காரருக்கு’ கீழ்ப்படிவதால் யெகோவா ஆசீர்வதிக்கிறார்
[பக்கம் 19-ன் படம்]
சாத்தானின் செல்வாக்கு கடவுளுக்கு கீழ்ப்படிவதை கடினமாக்குகிறது
[பக்கம் 21-ன் படங்கள்]
யெகோவாவுடன் பலமான உறவை வைத்திருப்பது அவருக்கு கீழ்ப்படிந்திருக்க நமக்கு உதவுகிறது