வாழ்க்கை சரிதை
என் வாழ்க்கையை மாற்றிய சிறு கடிதம்
இரேனா ஹாக்ஸ்டென்பாக் சொன்னது
1972 செவ்வாய்க்கிழமை மாலை. எனக்கு அப்போது 16 வயது. அம்மா அப்பாவுடன் ஒரு மத ஆராதனைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். இந்தக் கூட்டம், நெதர்லாந்தில் பிராபன்ட் மாநிலத்திலுள்ள ஐன்ட்ஹோவன் என்ற நகரில் நடந்தது. எனக்கு ஏனோ இனம் புரியாத ஒரு பயம். இங்கு வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அப்போது இரண்டு இளம் பெண்கள், “அன்புள்ள ஐரீன், உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ரொம்ப ஆசை” என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதை என்னிடம் கொடுத்தார்கள். என்னுடைய வாழ்க்கையை அது ஒரேயடியாக மாற்றிவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு முன்னால் என் பின்னணியைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
நான் பிறந்தது இந்தோனேஷியாவில் பெலிடன் என்ற தீவில். காற்றில் அசைந்த பனை மரங்களின் சலசலப்பு, அருகில் பாய்ந்த நதியின் மெல்லொலி, எங்கள் வீட்டைச் சுற்றி விளையாடிய பிள்ளைகளின் சிரிப்பு, எங்கள் வீட்டில் வியாபித்த இன்னிசை என்று அந்த வெப்ப மண்டல தீவில் என் காதை எட்டிய சப்தங்கள் இன்னும் என் நினைவை விட்டு நீங்கவில்லை. 1960-ல் எனக்கு 4 வயதாக இருந்தபோது, நாங்கள் குடும்பமாக இந்தோனேஷியாவிலிருந்து நெதர்லாந்துக்கு வந்துவிட்டோம். கப்பலில் நீண்டதூர பயணம் செய்தோம்; எனக்கு மிகவும் பிடித்தமான பொம்மையும் என்னோடு பயணித்தது. கோமாளி முகத்தோடு டிரம்ஸ் வைத்திருந்த அந்த பொம்மையின் ஒலிதான் என் மனதில் இன்னும் ஒலிக்கிறது. ஏழாவது வயதில் என்னைத் தீண்டிய நோயோ என் காதுக் கதவுகளை அடைத்துவிட்டது. அப்போது முதல் என்னைச் சுற்றி எழும் எந்த சப்தத்தையும் என்னால் கேட்க முடியவில்லை. இப்போது எஞ்சியிருப்பது சப்த ஞாபகங்கள் மட்டுமே.
காது கேளாமலே வளர்ந்து வந்தேன்
காது கேளாமல் நான் படப்போகிற அவஸ்தைகளை ஆரம்பத்தில் புரிந்துகொள்ளவே இல்லை; அந்தளவுக்கு என் பெற்றோர் அன்பையும் பாசத்தையும் பொழிந்தார்கள். சிறு பிள்ளையாக இருந்தபோது, காது கேளாதோருக்கான அந்த பெரிய மிஷின்கூட எனக்கு வேடிக்கையாகவே இருக்கும். அது எனக்கு அவ்வளவு ஒன்றும் உபயோகமாக இருக்கவில்லை. அக்கம் பக்கத்திலுள்ள பிள்ளைகள் என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சாக்பீஸ் வைத்து நடைபாதையில் கதை கதையாக எழுதிக் காட்டுவார்கள். நான் அவர்களுக்கு வாய் திறந்து பதில் சொல்வேன். ஆனால் என்னுடைய சொந்த குரலைக்கூட என்னால் கேட்க முடியாது.
வளர வளர, நான் என்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதை புரிந்துகொண்டேன். சிலர் எனக்கு காது கேட்கவில்லை என்பதற்காக என்னைக் கேலி செய்ததையும், மற்றவர்கள் என்னோடு சேராமல் என்னிடமிருந்து ஒதுங்கிவிட்டதையும் கவனித்தேன். நான் ஒதுக்கப்பட்டவளாக உணர்ந்தேன், தனிமையில் வாடினேன். காது கேளாவிட்டால் என்னென்ன அவஸ்தை என்பதை புரிந்துகொள்ள தொடங்கினேன். எனக்கு வயதாக ஆக காது கேட்கும் ஆட்களைப் பார்த்தாலே பயமும் அதிகரித்தது.
காது கேளாதோருக்கான பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்காக லிம்பர்க் மாகாணத்திலிருந்த ஒரு கிராமத்திலிருந்து ஐன்ட்ஹோவன் என்ற நகரத்துக்கு குடும்பமாக குடிமாறி செல்ல என் பெற்றோர் தீர்மானித்தார்கள். அங்கே அப்பா வேலை தேடினார், என் தம்பியும் இரண்டு அக்காமாரும் புதிய பள்ளியில் சேர்ந்துகொண்டார்கள். எனக்காக அவர்கள் எல்லாரும் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் குரலின் சப்தத்தை மாற்றி அமைக்கவும் அதிக தெளிவாக உச்சரிக்கவும் பள்ளியில் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஆசிரியர்கள் சைகை மொழியை பயன்படுத்தாவிட்டாலும், சைகை காட்டுவதற்கு என் சகமாணவர்கள் கற்றுத் தந்தார்கள்.
எனக்கென்றே ஓர் உலகம்
வளர வளர, என்னிடம் பேசுவது என் பெற்றோருக்கு அதிக கடினமாக ஆனது, பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உதாரணமாக, என்னுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்துக் கொண்டிருந்தது எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நாங்கள் ஒருநாள் குடும்பமாக ஓரிடத்திற்கு சென்றிருந்தோம், அங்கே நிறைய பேர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர்கள் எல்லாரும் முன்புறம் பார்த்த வண்ணம் இருந்தார்கள், சில சமயங்களில் கைதட்டினார்கள், அவ்வப்போது எழுந்து நின்றார்கள்—ஆனால் இவர்கள் எல்லாரும் ஏன் இதையெல்லாம் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்குச் சென்றிருந்தோம் என்பது ரொம்ப நாட்கள் கழித்துதான் எனக்குப் புரிந்தது. ஐன்ட்ஹோவன் நகரில் ஒரு சிறிய மன்றத்திற்கும்கூட என் பெற்றோர் என்னை அழைத்துச் செல்வார்கள். அங்கே எல்லாரும் அன்பாக பழகினார்கள், என் குடும்பத்தார் முகத்தில் சந்தோஷ வெள்ளம் பெருக்கெடுத்தது, ஆகவே எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. ஆனால் நாங்கள் ஏன் எப்போதும் அங்கு சென்றோம் என்பது எனக்கு புரியவில்லை. இப்போதோ, அந்தச் சிறிய மன்றம் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் என்பது எனக்குத் தெரியும்.
நிகழ்ச்சி நிரலை எனக்கு புரியவைப்பதற்கு அந்தக் கூட்டங்களில் யாரும் இல்லை என்பதே வருத்தமான விஷயம். அங்கிருந்தவர்கள் எனக்கு உதவிசெய்ய விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்று தெரியவில்லை என்பது இப்போது எனக்கு புரிகிறது. இந்தக் கூட்டங்களில் நான் தனிமையாக உணர்ந்தேன், ‘இங்கிருப்பதற்கு பதிலாக பள்ளியில் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று நான் நினைத்தேன். ஆனால் இப்படி நான் நினைத்துக்கொண்டிருந்த போதுதான், இரண்டு இளம் பெண்கள் ஒரு துண்டு காகிதத்தில் எதையோ எழுதி என்னிடம் கொடுத்தார்கள். இதைத்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் துண்டு காகிதம், ஓர் அருமையான நட்பு மலர வழிசெய்து தனிமை உலகிலிருந்து என்னை மீட்கும் என்று நான் கடுகளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.
அருமையான நட்பு
காலெட்டும் ஹேர்மினாவும்தான் இந்தத் துண்டு காகிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் இருவருக்குமே சுமார் 20 வயது இருக்கும். அவர்கள் நான் போய்க்கொண்டிருந்த சபையில் ஒழுங்கான பயனியர்களாக அல்லது முழு நேர ஊழியர்களாக சேவை செய்ய வந்திருந்தார்கள் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு நிஜமாகவே சைகை மொழி தெரிந்திராவிட்டாலும் அவர்கள் என்னிடம் பேசியபோது உதடுகளின் அசைவை வைத்து அவர்கள் சொன்னதை புரிந்துகொண்டேன், இப்படியே நாங்கள் நன்றாக பேசிக்கொண்டோம்.
காலெட்டும் ஹேர்மினாவும் என்னோடு பைபிளை படிக்க ஆசைப்பட்டார்கள், என் பெற்றோரோ மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்கள். ஆனால் அந்த இளம் பெண்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் நடப்பதை புரிய வைத்தார்கள், சபையிலுள்ள மற்றவர்களோடு பேசும்போது என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். பிரசங்க வேலையில் அவர்கள் பேசப்போகும் பைபிள் விஷயங்களை என்னை வைத்து பழகிப் பார்த்துக்கொண்டார்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சை தயாரிப்பதற்குக்கூட அவர்கள் உதவினார்கள். சற்று யோசித்துப் பாருங்கள், காது கேட்கும் ஆட்கள் அடங்கிய ஒரு தொகுதிக்கு முன்னால் பேசுவதற்குக்கூட இப்போது எனக்கு தைரியம் வந்துவிட்டது!
அதோடு அவர்கள் இருவரும் நம்பகமானவர்கள் என்று என்னை உணர வைத்தார்கள். அவர்கள் பொறுமையாயிருந்து நான் பேசுவதைக் கேட்டார்கள். நான் செய்த தவறுகளைக் குறித்து அடிக்கடி சிரித்துக்கொண்டாலும், அவர்கள் ஒருபோதும் என்னை கேலி செய்தது கிடையாது. என்னோடு பழகுவதற்கும் அவர்கள் சங்கடப்படவில்லை. என் உணர்வுகளை புரிந்துகொள்ள முயன்று என்னை அவர்களோடு சமமாக நடத்தினார்கள். இந்த இரண்டு பெண்களும் அருமையான ஒரு பரிசை எனக்குத் தந்தார்கள்—அதுதான் அவர்களுடைய அன்பும் நட்பும்.
அதைவிட முக்கியமாக, நம்முடைய கடவுளாகிய யெகோவா நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நண்பர் என்பதை நான் ருசித்துப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் எனக்கு கற்பித்தார்கள். ராஜ்ய மன்றத்தில் நான் உட்கார்ந்திருப்பதை யெகோவா பார்க்கிறார், காது கேளாத எனக்கிருக்கும் பிரச்சினைகளை அவர் அறிவார் என்பதையெல்லாம் அவர்கள் எனக்கு விளக்கினார்கள். யெகோவாவிடம் நாங்கள் வைத்திருக்கும் அன்பு எங்கள் மூவரையும் சிநேகிதிகளாக ஒன்று சேர்த்து வைத்திருப்பதற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்! யெகோவா என்மீது காட்டிய அக்கறை என்னை நெகிழவைத்தது, அவர்மீது எனக்கிருந்த அன்பின் காரணமாக நான் அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன், அதற்கு அடையாளமாக ஜூலை 1975-ல் தண்ணீரில் முழுக்காட்டுதல் பெற்றேன்.
ஒரு விசேஷ சிநேகிதருடன் பயணம்
அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், இன்னும் பல கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு சகோதரர் எனக்கு விசேஷ சிநேகிதராக ஆனார். அவரும் நானும் 1980-ல் திருமணம் செய்துகொண்டோம். அதற்குப்பின் சீக்கிரத்தில், நான் ஒரு பயனியராக சேவிக்க ஆரம்பித்தேன், 1994-ல் என் கணவர் ஹேரியும் நானும் டச் சைகை மொழி பிராந்தியத்தில் விசேஷித்த பயனியர்களாக சேவிக்கும்படி நியமிப்பைப் பெற்றோம். அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய சவால். காது கேட்கும் என் கணவர் உதவி வட்டார கண்காணியாக பல்வேறு சபைகளுக்கு விஜயம் செய்யும்போது நான் அவரோடு செல்ல வேண்டும்.
எப்படி சமாளிக்கிறேன் தெரியுமா? முதல் தடவையாக ஒரு சபைக்குச் செல்லும்போது, முடிந்தவரை அநேக சகோதர சகோதரிகளிடமும் நானாக சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். எனக்கு காது கேட்காது என்பதால் என்னைப் பார்த்து பேசும்படியும் மெதுவாக பேசும்படியும் அவர்களிடம் கேட்டுக்கொள்வேன். சபை கூட்டங்களில் ஆரம்பத்திலேயே ஒரு பதிலையும் சொல்லிவிடுவேன். அந்த வாரத்தில் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்கு யாராவது எனக்கு உதவி செய்ய விரும்புகிறார்களா என்பதையும் கேட்டுவிடுவேன்.
இப்படி செய்வது நல்ல பலன் தருவதால் சில சமயங்களில் என் சகோதர சகோதரிகள் எனக்கு காது கேட்காது என்ற விஷயத்தையே மறந்துவிடுவார்கள். இதனால் தமாஷான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. உதாரணமாக, நான் சாலையில் நடந்துசெல்வதைப் பார்த்து எனக்கு ‘ஹலோ’ சொல்வதற்காக காரை ஹார்ன் செய்ததாக சிலர் என்னிடம் சொல்வார்கள், நானோ அதை கண்டுகொள்ளாமல் சென்றேனாம். நானும் சில சமயங்களில் எனக்கு காது கேட்காது என்பதை மறந்துவிடுவேன். என் கணவரிடம் இரகசியமாக எதையாவது சொல்ல நினைத்து அவர் காதருகில் சென்று முணுமுணுப்பேன். ஆனால் அவர் தர்மசங்கடமாக உணரும்போதுதான் “முணுமுணுப்பு” மிகவும் சப்தமாக இருந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்வேன்.
பிள்ளைகள்கூட எதிர்பாராத விதமாக உதவி செய்திருக்கிறார்கள். முதல் முறையாக ஒரு சபைக்கு நாங்கள் சென்றிருந்த போது, ராஜ்ய மன்றத்தில் சிலர் என்னிடம் பேச தயங்கினதை ஒன்பது வயது பையன் ஒருவன் கவனித்தான். ஏதாவது செய்ய வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. நேராக என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு ராஜ்ய மன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்தான். குரலை உயர்த்தி சப்தமாக: “இரேனாவை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன், அவர்களுக்கு காது கேட்காது!” என்றான். அங்கிருந்தவர்கள் என்னிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
வட்டார வேலையில் என் கணவரோடு செல்லும்போது என் நண்பர்களின் வட்டம் விரிவாகிக்கொண்டே போகிறது. ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட உணர்வோடும் தனிமை உணர்வோடும் தவித்தேன், என்னுடைய வாழ்க்கை இன்று எப்படி மாறிவிட்டது! காலெட்டும் ஹேர்மினாவும் என் கையில் அந்தத் துண்டு காகிதத்தைக் கொடுத்த அந்த மாலை முதல், நட்பின் வலிமையை நான் உணர ஆரம்பித்திருக்கிறேன், எனக்கு மிகவும் விசேஷமானவர்களான பலரை சந்தித்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மிகவும் அருமையான நண்பராகிய யெகோவாவை நான் அறிந்திருக்கிறேன். (ரோமர் 8:38, 39) அந்தத் துண்டுக் காகிதக் குறிப்பு என் வாழ்க்கையை எப்படி மாற்றிவிட்டது பாருங்கள்!
[பக்கம் 24-ன் படம்]
எனக்கு மிகவும் பிடித்த அந்த பொம்மையின் சப்தம் எனக்கு நினைவிருக்கிறது
[பக்கம் 25-ன் படங்கள்]
ஊழியத்திலும் என் கணவர் ஹேரியோடும்