ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பிரேசிலில் ராஜ்ய செய்தியை “கேட்கிறார்கள்”
பிரேசிலில் காதுகேளாதோருக்கு ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் அநேகர் பிரேசிலியன் சைகை மொழியை அரும் பாடுபட்டு கற்றுவருகிறார்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. இதைத்தான் பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.
சாவோ போலோவில் ஈவாa என்ற காதுகேளாத ஒரு பெண் தன் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு காதுகேளாத ஓர் ஆணோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். அதன்பின் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். ஷாப்பிங் சென்டர் ஒன்றில், அவளும் அவளுடைய காதலனும் காதுகேளாத சாட்சிகள் சிலரை சந்தித்தார்கள். ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி யெகோவாவின் சாட்சிகள் இவர்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். ஏதோ சமூக நிகழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி இவர்களும் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
சைகை மொழியை அப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்த ஈவாவுக்கு கூட்டத்தில் சொல்லப்பட்டது அவ்வளவாக புரியவில்லை. அதற்குப்பின், டீ சாப்பிடுவதற்காக சாட்சிகள் சிலர் இவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள் என்ற சிற்றேட்டை வைத்து, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் வரக்கூடிய பூமிக்குரிய பரதீஸ் பற்றி அவர்கள் விளக்கினார்கள். கற்றுக்கொண்ட காரியங்கள் ஈவாவுக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் தவறாமல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள்.
சில மாதங்களுக்கு பிறகு, பைபிள் தராதரங்களின்படி வாழ வேண்டும் என்ற காரணத்துக்காக தன் காதலனைவிட்டுப் பிரிந்தாள். அவளுடைய குடும்பத்தார் கடுமையாக எதிர்த்த போதிலும் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து 1995-ல் முழுக்காட்டுதல் பெற்றாள். ஆறு மாதங்களுக்குப்பின், பயனியர் அல்லது முழு நேர ராஜ்ய அறிவிப்பாளர் அணியில் சேர்ந்து கொண்டாள். அப்போதிலிருந்து காது கேளாத நான்கு பேர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதற்கு உதவியிருக்கிறாள்.
கார்லோஸ் என்பவருக்கு பிறவியிலேயே காது கேட்காது. பிள்ளைப் பருவம் முதற்கொண்டே போதைப்பொருட்களை உபயோகித்தார், ஒழுக்கக்கேட்டிலும் திருட்டிலும் ஈடுபட்டு வந்தார். போட்டியாக இருந்த மற்ற கும்பல்களில் உள்ளவர்களுக்கு பயந்து சாவோ போலோவுக்கு ஓடிப்போனார். அங்கே ஷ்வாங் என்பவரோடு சிறிது காலம் தங்கியிருந்தார். ஷ்வாங்குக்கும் இவரைப் போலவே காது கேட்காது, இவரும் தன்னிச்சையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
சில வருடங்களுக்குப்பின், கார்லோஸ் ராஜ்ய செய்தியைக் கற்றுக்கொண்டார். பைபிளின் கட்டளைகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளவும் தன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவும் இது அவரை உந்துவித்தது. பைபிள் நியமங்களின்படி தன்னை மாற்றியமைத்தபின், யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். இதற்கிடையில், கார்லோஸுக்குத் தெரியாமல் ஷ்வாங்குக்கு இந்நற்செய்தி கிடைத்தது, அவரும் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்தார். மத சம்பந்தமான உருவங்களைப் பயன்படுத்துவதை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை என்று அறிந்தபோது, புனிதர்களின் உருவச்சிலைகளை எல்லாம் தூக்கி எறிந்தார். முன்னாள் வாழ்க்கையை விட்டுவிட்டு அவரும்கூட முழுக்காட்டுதல் பெற்றார்.
இருவரும் ஒரே ராஜ்ய மன்றத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் செய்த மாற்றங்களைப் பார்த்தபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை! இருவரும் இப்போது பொறுப்புள்ள குடும்பத் தலைவர்களாகவும் ராஜ்யத்தை அறிவிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
பிரேசிலில் தற்போது 30 சைகை மொழி சபைகளும் 154 தொகுதிகளும் உள்ளன. இவற்றைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகளில் 1,500 பேர் காதுகேளாதோர். பிரேசிலில் 2001-ல் “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” என்ற மாவட்ட மாநாடு காதுகேளாதோருக்கென்று நடைபெற்றது. இதற்கு 3,000-க்கும் அதிகமானவர்கள் வந்திருந்தனர், 36 பேர் முழுக்காட்டப்பட்டனர். காது கேளாத இன்னும் அநேகர் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பலாம்.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.