வாழ்க்கை சரிதை
துன்பம் எனும் அக்கினி சூளையில் பரீட்சை
பெரக்ளிஸ் யானாரிஸ் சொன்னது
நாற்றமெடுத்த சிறையின் ஒரு சிறிய அறையில் இருந்த ஈரப்பதம் என்னை நடுநடுங்கச் செய்தது. ஒரு மெல்லிய போர்வையை போர்த்திக் கொண்டு தனியாக உட்கார்ந்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவசர காலப் படையைச் சேர்ந்தவர்கள் வீட்டிலிருந்து என்னை இழுத்து வந்தபோது, உணர்ச்சியின்றி மனதை கல்லாக்கிக்கொண்டு வெறித்துப் பார்த்த என் இளம் மனைவியின் முகம் இன்னும் என் கண் முன்னாலே இருந்தது. அவளையும் நோயுற்றிருந்த இரண்டு குழந்தைகளையும் அநாதைகளைப் போல விட்டுவிட்டு வரவேண்டியிருந்தது. பிற்பாடு, என்னுடைய மதத்தைச் சேர்ந்திராத என் மனைவி, ஒரு பார்ஸலில் ஒரு குறிப்பு எழுதி எனக்கு அனுப்பி வைத்திருந்தாள். “உங்களுக்கு இந்த பிரட் துண்டுகளை அனுப்பியிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளைப் போலவே உங்களுக்கும் வியாதி வந்து தொலையட்டும்.” திரும்பவும் நான் உயிரோடு போய் என் குடும்பத்தைப் பார்ப்பேனா?
கிறிஸ்தவ விசுவாசத்துக்காக நான் நீண்ட காலமாக அனுபவித்த கடும் போராட்டத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சிதான் இது. குடும்பம் என்னை எதிர்த்தது, சமுதாயமும் என்னை ஒதுக்கியது, சட்டப்பூர்வமாக போராட வேண்டியிருந்தது, கொடூரமான துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது. அமைதியாகவும் கடவுள் பயத்துடனும் வாழ்ந்துவந்த நான் எப்படி, ஏன் அந்த சகிக்க முடியாத இடத்திற்குள் தள்ளப்பட்டேன்? தயவு செய்து நான் சொல்லப்போவதைக் கேளுங்கள்.
உயர்ந்த கனவுகளோடு வாழ்ந்த ஏழைச் சிறுவன்
போரிலும் வறுமையிலும் பஞ்சத்திலும் போராடிக் கொண்டிருந்த கிரீட் என்ற நாட்டில் ஸ்டாவ்ரோமீனோ என்ற இடத்தில் 1909-ல் பிறந்தேன். அதற்குப்பின் எல்லா இடத்திலும் பரவின ஸ்பானிஷ் காய்ச்சலிலிருந்து என் நான்கு தம்பி தங்கைகளும் நானும் எப்படியோ தப்பித்தோம். எங்களுக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிடக் கூடாது என்பதற்காக அம்மாவும் அப்பாவும் எங்களை வீட்டில் பல வாரங்கள் பூட்டி வைத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது.
ஏழை விவசாயியான அப்பா ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர், ஆனாலும் திறந்த மனம்படைத்தவர். பிரான்சு மற்றும் மடகாஸ்கரில் வாழ்ந்திருந்தபடியால், மதத்தைக் குறித்த முற்போக்கான கருத்துக்களை கேட்கும் வாய்ப்பினை பெற்றிருந்தார். இருந்தபோதிலும், எங்கள் குடும்பம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு விசுவாசமாக இருந்தது, ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் மாஸுக்கு போய்விடுவோம், வருஷம் தவறாமல் விஜயம் செய்த உள்ளூர் பிஷப்பைக்கூட எங்கள் வீட்டில்தான் தங்க வைப்போம். நான் பாடகர் குழுவில் இருந்தேன், பாதிரியாக ஆகவேண்டும் என்பதே என் லட்சியக் கனவாக இருந்தது.
1929-ல் காவற்படையில் சேர்ந்தேன். வட கிரீஸில் தெஸ்ஸலோனிகாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது அப்பா காலமானார். மன ஆறுதலுக்காகவும் ஆன்மீக அறிவொளியைக் கண்டடையவும் துறவிகள் வாழ்ந்த மெளன்ட் ஏதோஸிற்கு அருகில் இருந்த காவற்படைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போனேன். இந்த இடத்தை “பரிசுத்த மலை” என்று கூறி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் இதன்மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர்.a அங்கு நான்கு வருடங்கள் பணி புரிந்தேன்; ஆகவே, துறவு வாழ்க்கைக்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறதென்று கண்கூடாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் கடவுளிடம் நெருங்கி வருவதற்குப் பதிலாக, துறவிமாரின் அப்பட்டமான ஒழுக்கக்கேட்டையும் ஊழலையும் நேரில் கண்டு அதிர்ச்சியில் ஆடிப்போனேன். பிஷப்புக்கு அடுத்த பதவியிலிருந்த பாதிரி ஒருவர் மீது நான் அதிக மரியாதை வைத்திருந்தேன், ஆனால் அவரே என்னிடம் ஒழுக்கக்கேடாக நடக்க முயன்றபோது வெறுத்தே போய்விட்டேன். இதெல்லாம் எனக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றமாக இருந்தாலும் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்யவும் ஒரு பாதிரியாக ஆகவுமே விரும்பினேன். பாதிரியின் உடையைப் போட்டுக்கொண்டு ஞாபகார்த்தத்திற்காக ஒரு ஃபோட்டோகூட எடுத்து வைத்துக்கொண்டேன். கடைசியாக, கிரீட்டுக்கே நான் திரும்ப வந்தேன்.
“அவன் ஒரு பிசாசு!”
1942-ல் நல்ல ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரோசினி என்ற அழகிய பெண்ணை மணந்தேன். என் மனைவியின் குடும்பத்தாரும் ஆழ்ந்த பக்தியுள்ளவர்களாக இருந்தபடியால் பாதிரியாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இன்னும் தீவிரமாகியது.b செமினரியில் படிக்க ஏதன்ஸ் போக திடத்தீர்மானம் எடுத்தேன். 1943-ல் கிரீட்டிலுள்ள இராக்லியன் என்ற துறைமுகத்துக்கும் வந்துவிட்டேன், ஆனால் முடிவில், ஏதன்ஸுக்கு செல்லவில்லை. இதற்கிடையில் எனக்கு ஆன்மீக புத்துணர்ச்சி வேறு ஒரு இடத்திலிருந்து கிடைத்தது இதற்கு காரணமாக இருக்கலாம். என்ன நடந்தது?
யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொண்டிருந்த இம்மான்வில் லியோனூடாகிஸ் என்ற சுறுசுறுப்பான இளவயது பிரசங்கி ஒருவர் சில வருடங்களாக, கிரீட் முழுவதும் அறிவொளி தரும் பைபிள் சத்தியங்களை போதித்துக் கொண்டிருந்தார்.c சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையை தெளிவாக விளக்கியதைக் கேட்ட சிலர் ஈர்க்கப்பட்டு பொய் மதத்தைவிட்டு விலகினர். அருகிலிருந்த சிட்டியா நகரில், உற்சாகமாக வேலை செய்துவந்த யெகோவாவின் சாட்சிகளுடைய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது உள்ளூர் பிஷப்புக்கு மகா எரிச்சலாக இருந்தது, ஏற்கெனவே ஐக்கிய மாகாணங்களில் இந்தப் பிஷப் வாழ்ந்து வந்ததால் பிரசங்கிகளாக யெகோவாவின் சாட்சிகளுக்கிருந்த திறமையை அவர் நேரிலேயே பார்த்திருந்தார். ஆகவே, அவருடைய பிராந்தியத்திலுள்ள ‘மாறுபட்ட கொள்கையுடைய’ இந்த மதத்தினரை அடியோடு அழித்துவிட தீர்மானித்தார். அவருடைய தூண்டுதலால் போலீஸார் இவர்களை அடிக்கடி சிறைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள், மேலும், பல பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி நீதிமன்றத்திலேயும் நிறுத்தினார்கள்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிள் சத்தியத்தை எனக்கு விளக்க முயன்றார், ஆனால் அதில் எனக்கு ஏனோ ஆர்வமில்லை என்று தானாகவே நினைத்துக்கொண்டார். ஆகவே அவர் அதிக அனுபவமுள்ள ஒரு ஊழியரை என்னிடம் பேசுவதற்காக அனுப்பி வைத்தார். இவரிடம் நான் வெடுக்கென்று பதில் பேசியதால், இரண்டாவது வந்த சாட்சியும் போய்விட்டார். “பெரக்ளிஸ் நிச்சயம் யெகோவாவின் சாட்சியாகவே முடியாது. அவன் ஒரு பிசாசு!” என்று அந்தச் சிறு தொகுதியிலுள்ளவர்களிடம் போய் கம்ப்ளெய்ன் செய்தார்.
எதிர்ப்பு—முதல் அனுபவம்
கடவுள் என்னை அப்படி நினைக்கவில்லை என்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். யெகோவாவின் சாட்சிகள்தான் சத்தியத்தை போதிப்பவர்கள் என்று உறுதியாக நம்பிய என் அண்ணன் டிமாஸ்தனிஸ் துயரப்படுகிற அனைவரையும் தேற்றுங்கள்d (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தை அக்டோபர் 1945-ல் எனக்குக் கொடுத்தார். அதில் கொடுக்கப்பட்டிருந்த விஷயங்கள் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. நாங்கள் உடனடியாக ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு போவதையே நிறுத்தினோம், சிட்டியாவிலிருந்த அந்தச் சிறு தொகுதியோடு சேர்ந்து நாங்கள் தெரிந்துகொண்ட புது மதத்தைப் பற்றி எங்கள் தம்பி தங்கைகளுக்கு சொன்னோம். அனைவரும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். பொய் மதத்தை விட்டு விலகுவதற்கு நான் தீர்மானித்தபோது, எதிர்பார்த்த விதமாகவே, என் மனைவியும் அவள் குடும்பமும் என்னை ஒதுக்கினார்கள், எதிரியை நடத்துவது போல என்னை நடத்தினார்கள். கொஞ்ச நாட்கள் என் மாமனார் என்னிடம் பேசாமல்கூட இருந்தார். வீட்டில் ஓயாது சண்டையும் டென்ஷனும்தான் இருந்தது. இப்படி இருந்தாலும், மே 21, 1945-ல் டிமாஸ்தனிஸையும் என்னையும் சகோதரர் மீநோஸ் கோக்கீனாக்கீஸ் முழுக்காட்டினார்.e
கடைசியாக என் கனவு நனவானது, நான் கடவுளின் உண்மையுள்ள ஊழியனாக ஆனேன்! வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்ட அந்த முதல் நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. பையில் 35 சிறு புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்கு பஸ்ஸில் தனியாகச் சென்றேன். அங்கே பயந்து பயந்துதான் வீடு வீடாக செல்ல ஆரம்பித்தேன். போகப் போக எனக்கு தைரியம் வந்தது. ஆத்திரமடைந்த ஒரு பாதிரி அங்கு வந்து, என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரோடு வரும்படி பலமுறை அதிகாரம் செய்தபோதும், நான் தைரியமாக மறுத்தேன். முழு கிராமத்தையும் சந்தித்துவிட்டுதான் கிளம்புவேன் என்று அவரிடம் சொன்னேன். அதையே செய்தும் காட்டினேன். அந்த சந்தோஷத்தில், பஸ்ஸுக்கும்கூட காத்திராமல் வீட்டுக்கு பதினைந்து கிலோமீட்டர் நடந்தே வந்தேன்.
இரக்கமில்லாத முரடர்களின் கையில்
செப்டம்பர் 1945-ல், சிட்டியாவில் புதிதாக உருவாகியிருந்த சபையில் எனக்கு கூடுதலான பொறுப்புகள் கிடைத்தன. கிரீஸில் உள்நாட்டுப் போர் விரைவில் தொடங்கியது. பிரிவினைக் கட்சிகள் கட்டுக்கடங்கா பகையோடு ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன. இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சாட்சிகளை தங்கள் இஷ்டப்படி ஒழித்துக்கட்டச் சொல்லி அங்குள்ள பிஷப் உள்ளூர் கொரில்லா தொகுதி ஒன்றை தூண்டிவிட்டார். (யோவான் 16:2) கொரில்லா தொகுதியினர் இதற்காக எங்கள் கிராமத்துக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, அதிலிருந்த நல்ல உள்ளம் படைத்த ஒரு பெண்ணுக்கு, இவர்கள் செய்யவிருந்த ‘தேவனுக்குத் தொண்டு’ அவள் காதில் விழவே, எங்களை எச்சரித்துவிட்டாள். நாங்கள் ஒளிந்துகொண்டோம், எங்கள் உறவினர் ஒருவர் குறுக்கிட்டு எங்களுக்கு உதவினார். நாங்கள் உயிர் தப்பினோம்.
இதைத் தொடர்ந்து இன்னும் அதிக துன்பங்கள் வந்தன. அடிப்பதும் மிரட்டுவதும் சகஜமானது. எங்கள் எதிரிகள் எப்படியாவது நாங்கள் சர்ச்சுக்கு திரும்பிவந்துவிட வேண்டும், எங்கள் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்திட வேண்டும், சிலுவை போட வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்த முயன்றார்கள். செத்தே போய்விட்டான் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு சமயம் என் தம்பியை பயங்கரமாக அடித்துப் போட்டுவிட்டார்கள். என் இரண்டு தங்கைகளின் ஆடைகளைக் கிழித்து, அவர்களை அடித்தபோது நான் மனவேதனையில் துடித்துப்போனேன். அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய எட்டு பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்கள்.
1949-ல் என் அம்மா இறந்துபோனார்கள். சவ அடக்க நிகழ்ச்சிக்கு நாங்கள் சட்டப்படி அனுமதி பெறவில்லை என்று கூறி மறுபடியும் பாதிரி பிரச்சினை பண்ணினார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது, நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டேன். இது ஒரு பெரிய சாட்சியாக இருந்தது, ஏனென்றால் வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் யெகோவாவின் பெயர் அங்கு சொல்லப்பட்டது. ‘எங்களுக்கு புத்தி வரப் பண்ணுவதற்கு’ ஒரே வழி எங்களைக் கைது செய்து நாடு கடத்திவிடுவதுதான் என்ற எண்ணம் எங்கள் சத்துருக்களுக்கு. இதையும் அவர்கள் ஏப்ரல் 1949-ல் செய்துவிட்டார்கள்.
அக்கினி சூளையிலே
கைது செய்யப்பட்ட மூன்று சாட்சிகளில் நானும் ஒருவன். என் மனைவி உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் என்னை பார்க்கக்கூட வரவில்லை. இராக்லியன் என்ற இடத்திலிருந்த சிறைக்கு எங்களை முதலில் கொண்டு சென்றார்கள். ஆரம்பத்தில் நான் சொன்ன விதமாகவே எனக்கு தனிமையாகவும் சோர்வாகவும் இருந்தது. சாட்சியாக இல்லாத இளம் மனைவியையும் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவந்திருக்கிறேன். யெகோவாவிடம் உதவிக்காக ஊக்கமாய் ஜெபித்தேன். எபிரெயர் 13:5-ல் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைகள் என் மனதுக்கு வந்தன: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” யெகோவாவின்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பது எவ்வளவு ஞானமான காரியம் என்பதை நான் புரிந்துகொண்டேன்.—நீதிமொழிகள் 3:5.
கிரீஸில் அட்டிகா கரைக்கு அப்பாலிருந்த மாக்ரானிஸாஸ் என்ற ஒரு வறண்ட தீவுக்கு நாடுகடத்தப்படப் போகிறோம் என்று தெரிந்து கொண்டோம். சித்திரவதைக்கும் அடிமை உழைப்புக்கும் அங்குள்ள சிறை கேம்ப் பேர்போனதாக இருந்ததால் அந்தப் பெயரைக் கேட்டாலே திகிலில் ஒருவர் உறைந்துபோவார். சிறைச்சாலைக்குப் போகும் வழியில் பிரியஸ் என்ற ஓரிடத்தில் நின்றோம். எங்கள் கைகள் விலங்கிடப்பட்டிருந்தாலும், எங்கள் உடன் விசுவாசிகள் சிலர் படகு இருந்த இடத்துக்கு வந்து எங்களை அணைத்துக்கொண்ட போது எங்களுக்கு உற்சாகம் தாளவில்லை.—அப்போஸ்தலர் 28:14, 15.
மாக்ரானிஸாஸ் வாழ்க்கை கோரமாக இருந்தது. படைவீரர்கள் காலையிலிருந்து இரவு வரை அங்கிருந்தவர்களை வதைத்துக் கொண்டிருந்தார்கள். சாட்சிகளாக இல்லாத நிறைய பேர் மன நோயாளிகளானார்கள், மற்றவர்கள் இறந்து போனார்கள், அநேகர் ஊனமடைந்தார்கள். இரவு நேரங்களில் சித்திரவதை செய்யப்படுகிறவர்களின் அழுகையையும் முனகல் ஒலியையும் கேட்டோம். குளிராக இருந்த இரவுகளில் அந்த மெல்லிய போர்வை எனக்கு கொஞ்சம் கதகதப்பை தந்தது.
படிப்படியாக, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் அந்தக் கேம்ப்பில் பிரபலமானது. காரணம், ஒவ்வொரு காலை ஆஜர் பதிவில் பெயர்கள் அழைக்கப்படும்போது அது சொல்லப்பட்டது. இதன் காரணமாக, சாட்சி கொடுக்க எங்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அரசியல் கைதி ஒருவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு முன்னேறியபோது அவருக்கு முழுக்காட்டுதல் கொடுக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நாடு கடத்தப்பட்டிருந்த சமயத்தில் என் அருமை மனைவிக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தேன். அவளிடமிருந்து பதில் எதுவும் வராதபோதிலும், பிரிந்திருக்கும் இந்த நிலை தற்காலிகமானதுதான், நாம் மறுபடியும் சந்தோஷமாக இருப்போம் என்று நம்பிக்கையளித்து ஆறுதலாக, அன்பாக கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தேன்.
இதற்கிடையில் இன்னும் அநேக சகோதரர்கள் அங்கு வந்துசேர்ந்தபோது எங்கள் எண்ணிக்கை அதிகமானது. அங்கு அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, அந்த முகாமில் அதிகாரி ஒருவரிடம் நெருங்கி பழகினேன். அவர் சாட்சிகள் மீது மரியாதை வைத்திருந்தார். ஆகவே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஏதன்ஸிலுள்ள எங்கள் அலுவலகத்திலிருந்து பைபிள் பிரசுரங்கள் சிலவற்றை நாங்கள் பெற முடியுமா என்று அவரிடம் கேட்டேன். “அது முடியவே முடியாது, பிரசுரங்களை உங்களுடைய லக்கேஜில் கட்டி என் பெயருக்கு உங்கள் ஆட்கள் ஏன் அனுப்பி வைக்கக் கூடாது?” என்று அவர் கேட்டார். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை! ஒரு சில நாட்களுக்குப்பின், ஒரு படகிலிருந்து சாமான்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் அதிகாரிக்கு ஒரு சலாம்போட்டு, “ஐயா, உங்கள் சாமான்பெட்டி வந்துவிட்டது” என்றார். “என்ன சாமான் பெட்டி?” என்று அவர் கேட்டார். நான் அங்கே இருந்தபடியால் இவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழ, நான் அவர் அருகில் சென்று, “நீங்கள் சொன்னபடி உங்கள் பெயருக்கு வந்திருக்கும் எங்கள் பேக்கேஜாக இருக்கும்” என்று நான் தாழ்ந்த குரலில் அவரிடம் சொன்னேன். எங்களுக்கு ஆவிக்குரிய உணவு கிடைப்பதற்கு யெகோவா செய்த வழிகளில் இது ஒன்று.
எதிர்பாராத ஆசீர்வாதம் —அதன்பின் அதிகமான துன்பங்கள்
1950-ன் முடிவில் எனக்கு விடுதலை கிடைத்தது. பலவீனமாக, வெளிறிப்போய், ஒல்லியாக, வீட்டில் எப்படி வரவேற்பு இருக்குமோ என்ற பயத்தோடு வீடு திரும்பினேன். என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் மீண்டும் பார்த்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! அதைவிடவும், ஃப்ரோசினியின் கோபம் தணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறையிலிருந்து நான் எழுதிய கடிதங்கள் ஏற்படுத்திய மாற்றம் அது. என்னுடைய பொறுமையும் விடாமுயற்சியும் அவளைக் கவர்ந்தன. அதற்குப்பின் அவளிடம் வெகு நேரம் பேசி சமாதானப்படுத்தினேன். அவள் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டு, யெகோவாவிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டாள். 1952-ல் என் மனைவியை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு ஊழியராக முழுக்காட்டிய அந்த நாள் என் வாழ்வில் பொன்னான ஒரு நாள்!
1955-ல் ‘உலகத்தின் ஒளி’—கிறிஸ்தவமண்டலமா அல்லது கிறிஸ்தவமா? (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தின் ஒரு பிரதியை ஒவ்வொரு பாதிரிக்கும் விநியோகிக்க ஆரம்பித்தோம். உடன் சாட்சிகள் பலரோடு சேர்ந்து நானும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டேன். யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக நிறைய வழக்குகள் இருந்த காரணத்தால் அவை அனைத்தையும் விசாரிப்பதற்கு விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டியதாக இருந்தது. அன்று அந்த மாகாணத்திலுள்ள நீதித் துறையைச் சேர்ந்த அனைவரும் இருந்தனர், நீதிபதிகளின் அறையில் பாதிரிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிஷப் நடைபாதையில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார். நான் மதமாற்றம் செய்வதாக பாதிரி ஒருவர் என் மீது புகார் கொடுத்திருந்தார். நீதிபதி அவரிடம்: “ஒரு சிற்றேட்டை வாசித்துவிட்டு மதத்தையே மாற்றிக்கொள்ளும் அளவுக்கு உங்கள் விசுவாசம் அவ்வளவு பலவீனமானதா?” என்று கேட்கவே, பாதிரி வாயடைத்துப் போனார். நான் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன், ஆனால் சில சகோதரர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.
அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், எங்களை பல முறை கைது செய்தார்கள். வழக்குகளும் கூடின. சாட்சிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மிகவும் பிஸியாக இருந்தார்கள். மொத்தம் 17 தடவை நான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எதிர்ப்புகள் இருந்தபோதிலும் நாங்கள் பிரசங்க வேலையை ஒழுங்காக செய்து கொண்டுதான் இருந்தோம். இந்தச் சவாலை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றோம், அக்கினி பரீட்சை எங்கள் விசுவாசத்தை சுத்திகரித்தது.—யாக்கோபு 1:2, 3.
புதிய சிலாக்கியங்களும் சவால்களும்
1957-ல் நாங்கள் ஏதன்ஸுக்கு இடம் மாறிச் சென்றோம். சீக்கிரத்தில், புதிதாக உருவான ஒரு சபையில் ஊழியம் செய்வதற்கு நியமனம் பெற்றேன். என் மனைவி எனக்கு முழுவதுமாக ஆதரவு கொடுத்ததால், நாங்கள் எளிமையாக வாழ முடிந்தது, ஆன்மீக நடவடிக்கைகளில் நாங்கள் முக்கியமாக கவனத்தை ஒருமுகப்படுத்தினோம். ஆகவே பெரும்பாலான சமயங்களை எங்களால் பிரசங்க வேலைக்காக ஒதுக்க முடிந்தது. இந்தப் பல வருடங்களில் தேவை அதிகமிருக்கும் பல்வேறு சபைகளுக்கு இடம்மாறி செல்லும்படி கேட்கப்பட்டோம்.
1963-ல் என் மகனுக்கு 21 வயதானபோது, கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டான். சாட்சிகள் நடுநிலை வகிப்பதால் கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட எல்லா சாட்சிகளும் அடிகள், ஏளனங்கள், அவமதிப்பு ஆகியவற்றுக்கு ஆளானார்கள். என் மகனுக்கும் அதே நிலைமைதான். ஆகவே முற்காலங்களில் உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்களின் வழியில் செல்ல அவனை உற்சாகப்படுத்துவதற்கு அடையாளமாக மாக்ரானிஸாஸில் பயன்படுத்திய என் போர்வையை அவனுக்குக் கொடுத்தேன். அழைக்கப்படும் சகோதரர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரித்து, பொதுவாக இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பார்கள். விடுவிக்கப்படும்போது திரும்பவும் அவர்களை கூப்பிடுவார்கள், திரும்பவும் தண்டனை அளிப்பார்கள். ஒரு மத ஊழியனாக இருந்ததால் என்னால் பல்வேறு சிறைகளுக்கும் செல்ல முடிந்தது, என் மகனையும் மற்ற உண்மையுள்ள சாட்சிகளையும் ஓரளவு சந்திக்க முடிந்தது. என் மகன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தான்.
யெகோவா எங்களைத் தாங்கினார்
கிரீஸில் மத சுயாதீனம் நிலைநாட்டப்பட்ட போது, ரோட்ஸ் தீவில் நான் தற்காலிக விசேஷித்த பயனியராக சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. அதன்பிறகு 1986-ல் கிரீட்டிலுள்ள சிட்டியாவில் தேவை ஏற்பட்டது. இது நான் என்னுடைய கிறிஸ்தவ ஊழியத்தை ஆரம்பித்த இடம். என் சிறு வயது முதல் இங்குள்ள அருமையான உடன் விசுவாசிகளை அறிந்திருந்தபடியால் மறுபடியுமாக இங்கே சேவிப்பதற்கு நியமனத்தை ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
குடும்பத்தில் வயதில் பெரியவனாக இருக்கும் நான் சுமார் 70 உறவினர்கள் யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களில் சிலர், மூப்பர்கள், உதவி ஊழியர்கள், பயனியர்கள், பெத்தேல் ஊழியர்கள், பிரயாண ஊழியர்களாக சேவித்திருக்கிறார்கள். 58 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய விசுவாசம் துன்பம் எனும் அக்கினி சூளையில் பரீட்சிக்கப்பட்டது. எனக்கு இப்போது 93 வயது. பின்னோக்கிப் பார்க்கையில், கடவுளை சேவித்ததற்காக எனக்கு எந்த வருத்தமுமில்லை. “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக” என்ற அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 23:26.
[அடிக்குறிப்புகள்]
b கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியார்கள் மணம் செய்துகொள்ள அனுமதி உண்டு.
c இம்மான்வில் லியோனூடாகிஸின் வாழ்க்கை சரிதையை செப்டம்பர் 1, 1999 தேதியிட்ட காவற்கோபுரம் இதழில் பக்கங்கள் 25-9-ல் காண்க.
d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சில் இல்லை.
e மீநோஸ் கோக்கீனாக்கீஸ் உட்பட்டிருந்த ஒரு நீதிமன்ற வழக்கில் கிடைத்த வெற்றி பற்றி காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் பெட்டி]
மாக்ரானிஸாஸ் திகில் தீவு
பத்து வருடங்களாக, 1947 முதல் 1957 வரை, மக்கள் நடமாட்டமில்லாத வறண்ட மாக்ரானிஸாஸ் தீவு 1,00,000-க்கும் அதிகமான கைதிகளின் வீடாக இருந்திருக்கிறது. அவர்களில் அநேகர் கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக் கொண்டதற்காக அங்கு அனுப்பப்பட்ட உண்மையுள்ள சாட்சிகள். கம்யூனிஸ்டுகள் என சாட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி இப்படி இவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு காரணமாயிருந்தவர்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரிகளே.
மாக்ரானிஸாஸில் இவர்களை “சீர்திருத்துவதற்காக” கையாளப்பட்ட வழிமுறைகளைக் குறித்து, கிரேக்க என்ஸைக்ளோப்பீடியா பாப்பிரோஸ் லாரூஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கொடூரமான சித்திரவதை முறைகள், . . . நாகரீகமான நாட்டுக்கு ஒவ்வாத வாழ்க்கை நிலைமைகள், கைதிகளிடமாக காவலர்களின் இழிவான நடத்தை . . . ஆகியவை கிரீஸின் வரலாற்றுக்கு அவமானமானவை.”
மத நம்பிக்கைகளை கைவிட்டாலொழிய ஒருபோதும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று சாட்சிகள் சிலரிடம் சொல்லப்பட்டது. ஆனால் சாட்சிகளுடைய உத்தமத்தை அவர்களால் முறிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், சாட்சிகளோடு கொண்டிருந்த தொடர்பால் அரசியல் கைதிகள் சிலர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
[பக்கம் 27-ன் படம்]
னத் தீவில், மீநோஸ் கோக்கீனாக்கீஸும் (வலமிருந்து மூன்றாவது) நானும் (இடமிருந்து நான்காவது)
[பக்கம் 29-ன் படம்]
இளம் வயதில் நான் சேவை செய்துவந்த கிரீட்டிலுள்ள சிட்டியாவில் உடன் சாட்சியுடன் வேலை செய்தல்