யெகோவா என் கன்மலை
இம்மானுவில் லியோனூடாகிஸ் என்பவரால் சொல்லப்பட்டது
“நீ உன் முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை” என்ற இடிச்சொற்கள் கடுகடுவென இருந்த என் அம்மாவிடமிருந்து வந்தன. முழுநேரம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்க தீர்மானித்திருந்தேன். எனினும், நான் அடிக்கடி சிறைக்குச் சென்ற அவமானத்தை என் குடும்பத்தாரால் சகிக்க முடியவில்லை.
என் பெற்றோர் பணிவானவர்கள், கடவுள் பக்தி மிக்கவர்களும்கூட. கிரேக்க தீவான கிரீட்டின் மேற்கத்திய பகுதியிலிருந்த டூலியானா என்ற கிராமத்தில் அவர்கள் வசித்தனர். 1908-ல் நான் பிறந்ததும் அங்குதான். சிறுவயதிலிருந்தே எனக்கு தெய்வ பக்தியையும் கடவுள் பயத்தையும் ஊட்டி வளர்த்தனர். நான் என் பள்ளி ஆசிரியர்களிடத்திலோ கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதகுருக்களிடத்திலோ பைபிளைப் பார்த்ததே இல்லை; ஆனாலும் கடவுளுடைய வார்த்தை என்றால் எனக்கு உயிர்.
பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சி. டி. ரஸல் எழுதிய வேதாகமங்களின் பேரில் படிப்புகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆறு தொகுதிகளையும் த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். அவருடைய மனதில் ஆழமாக பதிந்திருந்த வேதாகம விஷயங்களை என்னோடு பகிர்ந்துகொள்வதில் அவருக்கு அலாதிப்பிரியம். அப்புத்தகங்கள் பைபிள் மாணாக்கர்களால் பிரசுரிக்கப்பட்டவை; யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அழைக்கப்பட்டனர். ஆதன்ஸில் உள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் அலுவலகத்திலிருந்து ஒரு பைபிளையும் சில புத்தகங்களையும் சந்தோஷத்தோடு வரவழைத்தேன். நானும் அந்த பக்கத்து வீட்டுக்காரரும் இரவில் நெடுநேரம் கண்விழித்திருந்து யெகோவாவிடம் ஜெபித்திருக்கிறோம். மேலும் அந்தப் புத்தகங்களின் உதவியோடு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பைபிள் வசனங்களை அலசி ஆராய்ந்தோம், சத்திய முத்துக்களை கண்டெடுக்க. அந்த வசந்த நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே பசுமையாக இருக்கின்றன.
நான் புதிதாக கண்டடைந்த பைபிள் சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கையில் எனக்கு வயது 20; அருகிலிருந்த கிராமத்தில் ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்து வந்தேன். சீக்கிரத்தில் நாங்கள் நான்குபேர் டூலியானாவில் பைபிள் படிப்புக்கான கூட்டங்களை தவறாமல் நடத்தி வந்தோம். மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையான கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் நாங்கள் துண்டுப்பிரதிகள், சிறுபுத்தகங்கள், புத்தகங்கள், பைபிள்கள் என எல்லாவற்றையும் விநியோகித்தும் வந்தோம்.
1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பைபிள்பூர்வ பெயரை ஏற்றுக்கொண்ட உலகமுழுவதிலுமிருந்த ஆயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். (ஏசாயா 43:10) அதற்கு அடுத்த வருடம், எங்கள் புதிய பெயரையும் அதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகளுக்கு விளக்கும் விசேஷ ஊழியத்தில் கலந்துகொண்டோம். ஒரு பொருத்தமான சிறுபுத்தகத்தை எங்கள் பகுதியிலிருந்த ஒவ்வொரு மதகுருவுக்கும், நீதிபதிக்கும், போலீஸ் அதிகாரிக்கும், தொழிலதிபருக்கும் விநியோகிப்பதை இது உட்படுத்தியது.
எதிர்பார்த்த விதமாகவே, மதகுருமார் துன்புறுத்துதல் என்னும் ‘திரியைத்’ தூண்டிவிட்டனர். முதன்முறையாக கைதுசெய்யப்படுகையில் 20 நாட்களுக்குச் சிறைதண்டனை விதிக்கப்பட்டேன். விடுதலை செய்யப்பட்ட உடனேயே மீண்டும் காத்திருந்தது ஒருமாத கால சிறைவாசம். இனி நாங்கள் பிரசங்கிக்கவே கூடாது என ஜட்ஜ் முடிவாக சொல்லுகையில் அப்போஸ்தலர் 5:29-லுள்ள இந்த வார்த்தைகள்தான் எங்கள் பதிலாக இருந்தது: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” பின்னர் 1932-ல், டூலியானாவிலிருந்த எங்கள் சிறிய தொகுதியை சந்திக்க உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரதிநிதி ஒருவர் வந்தார்; அந்தச் சமயத்தில் நாங்கள் நால்வரும் முழுக்காட்டுதல் பெற்றோம்.
ஆவிக்குரிய குடும்பத்தைக் கண்டடைதல்
இன்னும் அதிகளவு ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்ற தீராத ஆவலால் என்னுடைய டீச்சர் தொழிலுக்கு முழுக்குப் போட்டேன். அதற்கு மேலும் என் அம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறிவிட்டார். ஆதன்ஸிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் அனுமதியோடு கிரீட், ஈராக்லியான் நகரத்திலுள்ள தாராள மனம்படைத்த கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் தன் வீட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். ஆகவே ஆகஸ்ட் 1933-ல் என் சொந்த கிராமத்திலிருந்த சகோதரர்களும் ஆர்வம்காட்டிய சில நபர்களும் பஸ் நிலையம் வரை வந்து பிரியா விடைகொடுத்து வழியனுப்பினர். ஒருவரையொருவர் இனி சந்திப்போமா என்றே சந்தேகம் எழுந்ததால் எங்கள் எல்லாருடைய கண்களும் குளமாகிவிட்டன.
ஈராக்லியானில் அன்பே உருவான ஆவிக்குரிய குடும்பத்தின் அங்கத்தினனானேன். மூன்று கிறிஸ்தவ சகோதரர்களும் ஒரு சகோதரியும் அங்கிருந்தனர். படிப்பிற்கும் வணக்கத்திற்கும் நாங்கள் தவறாமல் கூடிவந்தோம். இயேசுவின் பின்வரும் வாக்குறுதி என் சொந்த அனுபவத்தில் உண்மையாவதைக் கண்டேன்: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, . . . பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, . . . நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், . . . அடைவான்.” (மாற்கு 10:29, 30) அந்நகரத்திலும் அருகிலுள்ள கிராமங்களிலும் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டிருந்தேன். நகரத்தில் பிரசங்கித்து முடிந்தபின் ஈராக்லியானிலும் லசிதியோனிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தேன்.
தனிமையில் இனிய பயனியர் ஊழியம்
மணிக்கணக்காக கிராமங்கிராமமாய் நடந்தே சென்று பிரசங்கித்தேன். மேலும், அடிக்கடி பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படாததால் கிலோக்கணக்கில் புத்தக மூட்டைகளை சுமக்க வேண்டியிருந்தது. என் நிலை என்னவென்றால், எனக்கோ தலைசாய்க்க இடமில்லை. என்ன செய்வது? நேராக கிராமத்திலுள்ள காஃபி ஹௌஸுக்குச் செல்வேன். கடைசி கஸ்டமர் அங்கிருந்து போகும்வரை காத்திருப்பேன்; அதற்குள் நள்ளிரவு கடந்துவிடும். அங்குள்ள பெஞ்சில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு விடியலில் கடை சொந்தக்காரர் தலைகாட்டும்முன் நான் இடத்தைக் காலிபண்ணிவிடுவேன். அந்தப் பெஞ்சை கணக்குவழக்கற்ற தெள்ளுப்பூச்சிகளும் என்னோடு பகிர்ந்து கொண்டன.
சாதாரணமாக அங்கிருந்த ஆட்களுக்கு நற்செய்தியில் நாட்டமில்லை. ஆனாலும் இளமைத் துடிப்பையும் வாலிபமுறுக்கையும் யெகோவாவிற்கு சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். பைபிள் சத்தியத்தினிடம் ஆர்வம் காட்டிய நபரை கண்டுபிடித்த போது ஜீவனைக் காக்கும் ஊழியத்தைத் தொடரும் என் தீர்மானத்திற்கு அது மெருகூட்டியது. என் ஆவிக்குரிய சகோதரர்களோடு கூட்டுறவுகொண்டதும் புத்துணர்ச்சி அளித்தது. காரணம் 20 முதல் 50 நாட்களுக்கு ஒருமுறைதான் என்னால் அவர்களைச் சந்திக்க முடிந்தது; அதுவும் ஈராக்லியான் நகரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தேன் என்பதைப் பொருத்தே.
ஒருநாள் மதியம் தனிமை என்னை வாட்டியெடுத்தது இன்னும் என் நினைவில் நேற்று நடந்ததுபோல் பசுமையாக இருக்கிறது. ஈராக்லியானிலுள்ள சகோதர சகோதரிகள் அன்று மாலையில் வாராந்தர கூட்டத்திற்காக கூடிவருவார்களே என்னால் முடிவில்லையே என்ற ஆதங்கமே அதற்குக் காரணம். அவர்களைக் காண வேண்டும் என்ற என் ஆசை வெறியாக மாறியது; என்னை அவர்களிடமிருந்து பிரித்து வைத்த அந்த 25-க்கும் அதிக கிலோமீட்டர் தூரத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் புயலெனப் புறப்பட்டேன். என் வாழ்க்கையிலேயே அத்தனை வேகமாக நான் நடந்ததே இல்லை. அந்த அருமையான கூட்டுறவை அன்று மாலையில் அனுபவிக்கையில் எத்தனை ஆனந்தம், எத்தனை ஆறுதல்! தீர்ந்து போயிருந்த என் ஆவிக்குரிய பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்ததுபோல் இருந்தது என்றே சொல்லலாம்!
ஊழியத்தில் என் கடின உழைப்பு சீக்கிரத்தில் கைமேல் பலன்தர ஆரம்பித்தது. அப்போஸ்தலரின் நாட்களைப் போலவே ‘இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் எங்களோடு சேர்த்துக்கொண்டு வந்தார்.’ (அப்போஸ்தலர் 2:47) கிரீட்டில் யெகோவாவை வணங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மற்றவர்கள் என்னோடு ஊழியத்திற்கு வர ஆரம்பிக்கையில் தனிமை இருந்த இடம் தெரியாமல் என்னைவிட்டு ஓடியேவிட்டது. சரீர துன்பங்களையும் கடுமையான எதிர்ப்பையும் நாங்கள் சகித்தோம். நாங்கள் யாரிடத்தில் பிரசங்கித்தோமோ அவர்கள் பிரசுரங்களை ஏற்றுக்கொள்கையில் பண்டமாற்றாக கொடுக்கும் முட்டைகளையோ, ஆலிவ் பழங்களையோ, காய்களையோ ரொட்டியோடு சேர்த்துச் சாப்பிட்டோம். இதுதான் எங்கள் அன்றாட ஆகாரம்.
கிரீட்டின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த நகரமாகிய ஈராபெட்ராவில் மீனோஸ் கோக்கினாக்கிஸ் என்ற துணிக்கடைக்காரருக்குப் பிரசங்கித்தேன். அவருக்கு எப்படியாவது பைபிள் படிப்பு நடத்துவது என்ற என் விடாமுயற்சிக்குச் சவால்விடுவதுபோல் அவருக்கு நேரம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது; அவருடைய தொழில் அப்படி. இருந்தாலும், எப்படியும் படித்தாக வேண்டுமென ஒருவழியாக தீர்மானம் எடுத்தார். அதன்பின் அவருடைய வாழ்க்கையில் மளமளவென மாற்றங்களைச் செய்தார். நற்செய்தியை வெகு வைராக்கியத்தோடு அறிவிக்கவும் ஆரம்பித்தார். இம்மானுவேல் பெட்டராக்கிஸ் என்ற 18 வயது வாலிபர் கோக்கினாக்கிஸிடம் வேலை பார்த்துவந்தார். தன் முதலாளி வாழ்க்கையில் செய்த மாற்றங்களைக் கண்டு வெகுவாய் சத்தியத்திடம் கவரப்பட்டார்; சீக்கிரத்தில் பைபிள் பிரசுரங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தார். அவரும் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து, மிஷனரியாய் ஆனதைப் பார்த்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன்!a
இதற்கிடையில் கிராமத்திலிருந்த என் சொந்த சபை வளர ஆரம்பித்து 14 பிரஸ்தாபிகள் என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்திருந்தது. என்னுடைய அக்கா டெஸ்பினாவின் கடிதம் கிடைத்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அதில் அவளும் என் பெற்றோரும்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இப்போது யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட வணக்கத்தாராய் இருப்பதாக அவள் எழுதியிருந்தாள்!
துன்புறுத்துதலையும் நாடுகடத்தப்படுதலையும் சகித்தல்
எங்களுடைய பிரசங்க வேலையை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினர் பாழாக்கும் வெட்டுக்கிளி வாதைபோல கருதியதால் எங்களை முற்றிலும் அழித்தொழிக்க நினைத்தனர். மார்ச் 1938-ல் அரசு தரப்பு வழக்குரைஞர் முன் நான் நிறுத்தப்பட்டேன். அவரோ என்னை உடனடியாக இந்தப் பகுதியிலிருந்து வெளியேறும்படி தீர்ப்பளித்தார். எங்களுடைய பிரசங்க வேலை உண்மையில் பயனளிக்கும் ஒன்று என்றும் இவ்வேலை மேலிடத்து—எங்கள் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின்—உத்தரவின் பேரில் செய்யப்படுகிறது என்றும் சொன்னேன்.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
அதற்கு மறுநாள், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைக்கப்பட்டேன். எனக்கு சமூகவிரோதி என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகவும் எனவே ஒரு வருடகாலம் எமோர்கோஸ் எனும் ஈஜியன் தீவுக்கு நாடுகடத்தப் போவதாகவும் அவர்கள் சொன்னார்கள். சிலநாட்களுக்குப் பிறகு கையில் விலங்கிடப்பட்டவனாய் அந்தத் தீவுக்கு படகில் கொண்டுசெல்லப்பட்டேன். எமோர்கோஸில் யெகோவாவின் சாட்சிகள் யாருமில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்னொரு சாட்சியும் இந்தத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டபோது நான் எந்தளவு ஆச்சரியப்பட்டிருப்பேன் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! அவர் யார் தெரியுமா? கிரீட்டில் நான் பைபிள் படிப்பு நடத்தி வந்த மீனோஸ் கோக்கினாக்கிஸ்தான். எனக்கு ஆவிக்குரிய துணை கிடைத்ததால் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை! கொஞ்ச நாட்களுக்குப் பிறகு எமோர்கோஸின் தண்ணீரில் அவருக்கு முழுக்காட்டுதல் கொடுக்கும் பாக்கியம் பெற்றேன்.b
கிரீட்டுக்கு வந்ததும் வராததுமாக நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன்; இம்முறை, அந்தத் தீவிலிருந்த நியாபலிஸ் என்ற சிறிய ஊருக்கு ஆறு மாதத்திற்கு நாடுகடத்தப்பட்டேன். நாடு கடத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டு பத்து நாட்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டேன். பின்னர் கம்யூனிஸ்டுகள் மட்டுமே நாடுகடத்தப்பட்டிருந்த ஒரு தீவுக்கு நான்கு மாதங்களுக்கு அனுப்பப்பட்டேன். அச்சமயத்தில் அப்போஸ்தலனாகிய பவுலின் இவ்வார்த்தைகள் எத்தனை உண்மை என்பதை அனுபவத்தில் கண்டறிந்தேன்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”—2 தீமோத்தேயு 3:12.
அழுத்தத்தின் மத்தியிலும் அதிகரிப்பு
1940-44-ல் கிரீஸை ஜெர்மனி ஆக்கிரமித்ததால் எங்களுடைய பிரசங்க வேலை கிட்டத்தட்ட நின்றுவிட்டதென்றே சொல்லலாம். எனினும் கிரீஸிலிருந்த யெகோவாவின் மக்கள் சீக்கிரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டதால் புதுத் தெம்புடன் எங்களுடைய பிரசங்க வேலையைத் தொடங்கினோம். வீணாய்போன நேரத்தையெல்லாம் சரிக்கட்ட முழுமூச்சோடு பிரசங்க ஊழியத்தில் தீவிரமாக இறங்கினோம்.
எதிர்பார்த்தவிதமாகவே, மீண்டும் மத சம்பந்தமான எதிர்ப்பு தலைதூக்கி கொடூர முகத்தைக் காட்டியது. அடிக்கடி கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதகுருமார்கள் சட்டம் தங்கள் கையில் என்பதுபோல் செயல்பட்டார்கள். ஒரு கிராமத்தில், ஒரு கும்பலை எங்களுக்கு எதிராக மதகுரு ஒருவர் தூண்டிவிட்டார். அந்தப் பாதிரியே என்னை அடித்தார். அவருடைய மகனும் என்னை பின்னாலிருந்து அடித்தான். நான் பாதுகாப்பிற்காக பக்கத்திலிருந்த வீட்டுக்குள் பாய்ந்தோடினேன்; என்னுடைய பயனியர் துணையோ கிராமத்தின் பொது சதுக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு அந்தக் கும்பல்காரர்கள் அவருடைய பிரசுரத்தைக் கிழித்தனர்; ஒரு பெண்மணி தன் மாடியிலிருந்து, “அவன கொன்னு போடுங்க!” என கத்திக்கொண்டே இருந்தாள். ஒரு டாக்டரும் அந்தப் பக்கமாக வந்த ஒரு போலீஸ்காரரும் ஒருவழியாக எங்கள் உதவிக்கு வந்தனர்.
பிறகு 1952-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு நாடுகடத்தப்பட்டேன்; அது கிரீட்டிலிருந்த கஸ்தலி கிஸ்மஸ் என்ற இடம். அதன்பின் வெகு சீக்கிரத்திலேயே சபைகளை சந்திக்கவும் ஆவிக்குரிய விதமாக பலப்படுத்தவும் எனக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட பயண ஊழியத்தில் இரண்டு ஆண்டுகளைக் கழித்தபின் டெஸ்பினா என்னும் என் அக்காவின் பெயரையே உடைய ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவ பெண் என் மனைவியானாள்; அவள் யெகோவாவின் பற்றுமாறா வணக்கத்தாளும்கூட. எங்கள் திருமணத்திற்குப் பின் கிரீட்டிலுள்ள ஹானியா என்ற நகரத்தில் விசேஷப் பயனியராக நியமனம் பெற்றேன்; இன்றுவரை அதுவே என் பிராந்தியம்.
முழுநேர ஊழியத்தில் இந்த சுமார் 70 வருடத்தில் கிரீட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரசங்கித்திருக்கிறேன். இந்தத் தீவு 8,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் சுமார் 250 கிலோமீட்டர் நீளமும் உள்ளது. என் வாழ்க்கையில் அளவற்ற சந்தோஷத்தை அளித்த விஷயம் எது தெரியுமா? இந்தத் தீவில் 1930-களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இருந்த சாட்சிகள், இன்று 1,100-க்கும் அதிகமானோராய் சுறுசுறுப்பாக கடவுளுடைய ராஜ்யத்தின் அறிவிப்பாளர்களாய் உயர்ந்திருப்பதுதான். பைபிளிலிருந்து திருத்தமான அறிவையும் பிரகாசமான எதிர்கால நம்பிக்கையையும் பெற அநேகருக்கு உதவ எனக்கும் வாய்ப்பளித்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.
யெகோவா “என்னை விடுவிக்கிறவர்”
உண்மையான கடவுளை அறிந்துகொள்ளும்படி மக்களுக்கு உதவுவதற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் வேண்டும் என்பது என் அனுபவம் எனக்குக் கற்பித்த பாடம். மிக அவசியமாய் தேவைப்படும் இந்தக் குணங்களை யெகோவா தாராளமாக வாரிவழங்குகிறார். என்னுடைய 67 வருட முழுநேர ஊழியத்தில் அடிக்கடி அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகளை மனதில் அசைபோட்டிருக்கிறேன்: “எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், . . . எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.” (2 கொரிந்தியர் 6:3-5, 10) குறிப்பாக என்னுடைய ஊழியத்தின் ஆரம்ப வருடங்களில் பண கஷ்டம் பெரிய கஷ்டமாக இருந்தது. எனினும் என்னையும் என் குடும்பத்தையும் யெகோவா ஒருநாளும் கைவிட்டதில்லை. அவர் தவறாமல் உதவியளித்து வந்தார், அவர் பலம்மிக்க சகாயர் என்பதையும் ருசித்தேன். (எபிரெயர் 13:5, 6) அவருடைய அரவணைக்கும் கரங்களால் தம் ஆடுகளை கூட்டிச் சேர்த்ததையும் எங்களுடைய தேவைகளை அறிந்து அள்ளிக் கொடுத்ததையும் எப்போதும் நாங்கள் கண்டோம்.
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கையில், அப்போது ஆவிக்குரிய விதத்தில் பாலைவனமாய் இருந்தது இப்போது பூத்துக் குலுங்கும் சோலையாய் மாறியிருப்பதைப் பார்க்கையில் என் பிரயாசங்கள் வீண்போகவில்லை என்பது தெளிவாகிறது. என் ததும்பும் இளமையை விரயமாக்காமல் மிகப் பயனுள்ள விதத்தில் உபயோகித்திருக்கிறேன். எந்த வேலையைக் காட்டிலும் என் முழுநேர ஊழியம் எனக்கு அதிக அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. இந்த வயதான காலத்திலும், முழு இருதயத்தோடு இளைஞர்களை நான் உற்சாகப்படுத்துவது என்னவென்றால், ‘தங்கள் வாலிபப்பிராயத்திலே சிருஷ்டிகரை நினைக்க’ வேண்டும் என்பதே.—பிரசங்கி 12:1.
இந்த 91 வயதிலும் ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் என்னால் 120 மணிநேரத்திற்கும் மேல் செலவிட முடிகிறது. ஒவ்வொரு நாளும் காலை 7:30 மணிக்கு எழுந்திருக்கிறேன், தெருவில், கடைகளில், பூங்காக்களில் தென்படும் ஆட்களிடம் சாட்சிகொடுக்கிறேன். சராசரியாக மாதத்திற்கு 150 பத்திரிகைகளை விநியோகிக்கிறேன். காதுகேட்காததும் ஞாபக மறதியும் என் வாழ்க்கையை சற்று கசப்பாக்கி இருக்கின்றன. ஆனால் அன்பைப் பொழியும் என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அடங்கிய என் பெரிய குடும்பத்தாரும் என் இரண்டு மகள்களின் குடும்பத்தாரும் ஆரதவு எனும் கரங்களை நீட்டி வாழ்க்கையை இனிப்பாக்கி இருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவே சரணாகதி என இருக்க கற்றிருக்கிறேன். என் வாழ்நாள் எல்லாம் ‘என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவராக’ அவர் நிரூபித்திருக்கிறாரே.—சங்கீதம் 18:2, திருத்திய மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்புகள்]
a இம்மானுவேல் பெட்டராக்கிஸ்ஸின் வாழ்க்கை சரிதை, காவற்கோபுரம், நவம்பர் 1, 1996 பக்கங்கள் 22-7-ல் வெளிவந்துள்ளது.
b சட்டத்தின் கையில் வெற்றிகண்ட மீனோஸ் கோக்கீனாக்கீஸ் சம்பந்தப்பட்ட வழக்கை காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ல் காண்க. மீனோஸ் கோக்கீனாக்கீஸ் 1999 ஜனவரியில் காலமானார்.
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
கீழே: என் மனைவியோடு; இடது: 1927-ல்; எதிர்ப் பக்கத்தில்: மீனோஸ் கோக்கீனாக்கீஸுடனும் (இடது), மற்றொரு சாட்சியுடனும் 1939-ல் விடுதலையாகி வந்தபிறகு அக்ராபாலிஸில்