“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—அவருடைய வாழ்க்கை மாறியது
மாட்சபாங்—இவருடைய வாழ்க்கை எந்தளவுக்கு வெறுப்பூட்டுவதாகவும் அர்த்தமற்றதாகவும் மாறிவிட்டிருந்தது! இவர் சிறுமியாக இருந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியிலுள்ள லெசோதோவில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு கத்தோலிக்க பின்னணியில் வளர்க்கப்பட்டவர். என்றாலும், கடவுளிடம் நெருங்கி வர வழிகாட்டுவதற்கு பதிலாக, கன்னிகாஸ்திரீகள் அவரை பல வருடங்களாகவே கெட்ட கெட்ட காரியங்களை சொல்லிக் கொடுத்து அவர் மனதையே பாழாக்கினர். பண ஆசைகாட்டி ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபட வைத்தனர்.
அதனால் மாட்சபாங்குக்கு மத நம்பிக்கையே அறுந்துபோனது; மனிதரை உண்மையிலேயே காத்து பராமரிக்கிற ஓர் அன்புள்ள படைப்பாளர் இருக்கிறார் என்று நம்புவதும்கூட கடினமாக ஆனது. மற்றவர்களால் ஓரங்கட்டப்பட்டு மட்டமாக நடத்தப்பட்டார். இதனால் மாட்சபாங்கின் மனதில் ஏற்பட்ட ரணங்கள் கொஞ்சநஞ்சமல்ல; தான் எதற்குமே லாயக்கற்றவள் என்ற தாழ்வு மனப்பான்மையும் அவரை பிடித்துக்கொண்டது. காலம் செல்ல செல்ல, ஒரு முரட்டுப் பெண்ணாக, கோபக்காரியாக ஆனார். விளைவு? பல குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.
கடைசியில், ரயில்களில் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலில் மாட்சபாங் சேர்ந்துகொண்டார். இதனால் போலீஸிடம் பிடிபட்டு, தென் ஆப்பிரிக்க சிறையில் தள்ளப்பட்டார். பிற்பாடு, தன் சொந்த ஊராகிய லெசோதோவுக்கு அனுப்பப்பட்டார்; அங்கு போன பிறகும் குற்றச்செயல், குடி, வன்முறை, ஒழுக்கக்கேடு போன்ற காரியங்களை விடவேயில்லை.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ரொம்ப விரக்தியடைந்தார்; இந்நிலையில், உதவிக்காக மனங்கசந்து கடவுளிடம் ஜெபித்தார். “கடவுளே, நான் உயிர்பிழைத்தால், உமக்கு சேவை செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று சங்கல்பம் செய்தார்.
அதற்குப் பின்பு விரைவிலேயே யெகோவாவின் சாட்சிகளாக இருந்த மிஷனரிகள் அவரை சந்தித்தனர். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. கடவுள் ஒருபோதும் நம்மை அலட்சியம் செய்யமாட்டார் என்றும், அவர் நம்மீது மிகுந்த அக்கறை காட்டுகிறவர் என்றும் பைபிள் படிப்பிலிருந்து புரிந்துகொண்டார். சொல்லப்போனால், ‘பொய்க்குப் பிதாவான’ சாத்தானே சூழ்ச்சியும் வஞ்சனையுமான தந்திரங்களை பயன்படுத்தி தாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று எண்ணும்படி செய்கிறான் என்பதையும் யெகோவா அவர்களை பிரியமானவர்களாக கருதமாட்டார் என்று நம்பும்படியும் செய்கிறான் என்பதையும் மாட்சபாங் தெளிவாக கற்றுக்கொண்டார்.—யோவான் 8:44; எபேசியர் 6:11.
மறுபட்சத்தில், கடந்த காலத்தில் செய்த பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, அவரை பிரியப்படுத்த விரும்பினால், நாம் போதிய சுயமரியாதையோடு வாழ முடியும் என்பதை அறிந்தது மாட்சபாங்குக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது! ‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருக்கிறார்’ என்பதும் நம்மை அவர் எடைபோடும் விதமும் நம்மை நாமே எடைபோடும் விதமும் முற்றிலும் வித்தியாசமானது என்பதும் அவருக்கு புரிய வைக்கப்பட்டது.—1 யோவான் 3:19, 20.
“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை வாசித்தபோது மாட்சபாங் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. (சங்கீதம் 34:18) ‘நருங்குண்ட ஆவியுள்ளவர்களில்’ ஒருவராக இருந்த அவர், யெகோவா தம் ஊழியர்களை—அவர்களில் சிலர் சோர்வுற்றவர்களாகவோ உதவாக்கரையாக உணருபவர்களாகவோ இருந்தாலும்—கைவிடுவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். யெகோவா தம் ஆடுகள் அனைத்தையும் காத்து பராமரித்து, கஷ்ட காலங்களில் அவற்றை ஆதரிக்கிறார் என்ற விஷயம் அவர் இதயத்தில் ஏற்பட்ட ரணங்களுக்கு மருந்துபோல் இருந்தது. (சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:6, 7) முக்கியமாக, “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற வார்த்தைகள் அவருடைய மனதை நெகிழ வைத்தன.—யாக்கோபு 4:8, NW.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் வல்லமை சீக்கிரத்தில் மாட்சபாங்கின் வாழ்க்கையில் தெரிய ஆரம்பித்தது. அவர் கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பித்தார், கடவுளுடைய வார்த்தைக்கு விரோதமான பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டார். விளைவு? கடவுளுடைய அன்பையும் ஆதரவையும் பெற தகுதியற்றவர் என்ற உணர்வு மாயமாய் மறைந்தது. ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றதிலிருந்து, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பவராக கிறிஸ்தவ ஊழியத்தில் ஆயிரக்கணக்கான மணிநேரங்களை செலவிட்டிருக்கிறார். பழைய வாழ்க்கையின் தழும்புகள் ஒருபுறமிருந்தாலும் இப்போது அவர் மகிழ்ச்சி ததும்பும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கிறார். வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் வல்லமை பைபிளுக்கு இருக்கிறது என்பதற்கு இவருடைய அனுபவம் எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!—எபிரெயர் 4:12.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“கடவுளே, நான் உயிர்பிழைத்தால், உமக்கு சேவை செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்”
[பக்கம் 9-ன் பெட்டி]
பைபிள் நியமங்கள் செயலில்
துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களை ஆறுதல்படுத்தியிருக்கும் பைபிள் நியமங்களில் சில இதோ:
“என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 94:19, பொ.மொ.) தம் வார்த்தையில் யெகோவா தரும் “ஆறுதல்” நம்மை தாங்கிநிற்கும் அஸ்திவாரமாக விளங்குகிறது. தியானிக்கும் போதும் ஜெபிக்கும் போதும் அவற்றை சிந்திப்பது அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, நம்மை நன்கு புரிந்துகொள்கிற நண்பராக கடவுளில் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.
“இருதயம் நொறுங்குண்டவர்களைக் [யெகோவா] குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.” (சங்கீதம் 147:3) யெகோவாவின் இரக்கத்திற்கும் இயேசுவின் மீட்கும் பலியால் நம் பாவங்களை மூடுவதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாட்டுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், இனிமேலும் குற்றவுணர்வின்றி கடவுளை நம்பிக்கையோடு அணுகலாம். இது ஒப்பற்ற ஆறுதலையும் மன நிம்மதியையும் தரலாம்.
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் [இயேசு கிறிஸ்துவிடத்தில்] வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.” (யோவான் 6:44) பரிசுத்த ஆவியின் மூலமாகவும், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் மூலமாகவும் யெகோவா நம் ஒவ்வொருவரையும் தம் குமாரனிடம் இழுத்து, நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறார்.