உண்மையான ஆன்மீக மதிப்பீடுகளை எங்கே காணலாம்?
“குடும்ப பாரம்பரியத்தின் காரணமாக ஒரு மதத்தை பின்பற்றப் போகிறீர்கள் என்றால், 2,000 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் கெல்டிக் மதத்தை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது?” என கிண்டலாக கேட்கிறார் ராடால்ஃப். அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் புன்னகைக்கிறான்.
“கடவுளோடுள்ள உறவுதான் எனக்கு ரொம்ப முக்கியம். பல வருஷங்களாக, ஏன் நூற்றுக்கணக்கான வருஷங்களாக, என் குடும்பத்தினர் ஒரு மதத்தை பின்பற்றி வந்தார்கள் என்பதற்காக பாரம்பரியம் என்ற பெயரில் அதே மத நம்பிக்கைகளை எனக்குள்ளும் திணிக்க வேண்டும் என்ற கருத்தை நான் அறவே வெறுக்கிறேன்” என்கிறார் ராடால்ஃப். அவர் எல்லாவற்றையும் கவனமாக சீர்தூக்கிப் பார்த்தார்; இந்த முக்கியமான விஷயத்தை ஏதோ பரம்பரை பரம்பரையாக பெற்ற ஒன்றாக அவர் கருதவில்லை.
இப்போதெல்லாம் தலைமுறை தலைமுறையாக ஒரே மதத்தை பின்பற்றி வருவது குறைந்துவிட்டது; என்றாலும், பெரும்பாலோர் தங்களுடைய குடும்பத்தின் பாரம்பரிய மதத்தையே இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெற்றோருடைய மதத்தை அப்படியே பின்பற்றுவது எப்போதுமே சரியாகுமா? அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
40 வருட வனாந்தர வாசத்திற்கு பிறகு, மோசேக்கு அடுத்து வந்த தலைவராகிய யோசுவா இஸ்ரவேலருக்கு முன் ஒரு தெரிவை வைத்தார்: ‘[யெகோவாவுக்கு] ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்கு தோன்றினால் உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் [யெகோவாவுக்கே] ஊழியம் செய்வோம்.’—யோசுவா 24:15, பொது மொழிபெயர்ப்பு.
யோசுவா சொன்ன அந்த மூதாதையரில் ஒருவர்தான் தேராகு. அவர் ஆபிரகாமின் தகப்பன். அப்போது ஐப்பிராத் நதிக்கு கிழக்கே அமைந்திருந்த ஊர் என்னும் பட்டணத்தில் வாழ்ந்தவர். தேராகு வேறே தெய்வங்களை வழிபட்டு வந்தவர் என்ற விஷயத்தை மட்டுமே பைபிள் தருகிறது. (யோசுவா 24:2) அவருடைய மகன் ஆபிரகாமுக்கு கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும், தன்னுடைய சொந்த ஊரை விட்டுப் புறப்படும்படி யெகோவா சொன்னதும் உடனே கீழ்ப்படிந்தார். ஆம், ஆபிரகாம் தன் தகப்பனின் மதத்தை அல்ல, ஆனால் வேறு மதத்தை தேர்ந்தெடுத்தார். அவ்வாறு செய்ததால் கடவுள் வாக்குறுதி அளித்த ஆசீர்வாதங்களைப் பெற்றார். அதோடு ‘கடவுளை நம்புகிற அனைவருக்கும் தகப்பன்’ என பல மதங்கள் ஏற்றுக்கொள்கிற ஒருவராகவும் ஆனார்.—ரோமர் 4:11, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
இயேசு கிறிஸ்துவின் மூதாட்டியான ரூத்தைப் பற்றியும் பைபிள் பாராட்டி பேசுகிறது. ரூத் ஒரு மோவாபிய பெண்; அவளுடைய கணவன் ஓர் இஸ்ரவேலன். விதவையாகிவிட்ட அவள் ஒரு தீர்மானத்தை எதிர்ப்பட்டாள். அதாவது, தன் சொந்த நாட்டிலேயே இருந்துவிடுவதா அல்லது தன் மாமியுடன் இஸ்ரவேலுக்கு செல்வதா என தீர்மானிக்கும் கட்டம் வந்தது. தாய் தந்தையர் வழிபட்டு வந்த விக்கிரக தெய்வங்களோடு ஒப்பிட யெகோவாவை வணங்குவது எவ்வளவு உயர்ந்த மதிப்புடையது என்பதை ரூத் உணர்ந்திருந்தாள். அதனால்தான் தன் மாமியிடம் இவ்வாறு சொன்னாள்: “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.”—ரூத் 1:16, 17.
பைபிள் புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறும் இந்தப் பதிவின் முக்கியத்துவத்தைப் பற்றி டிக்ஸ்யானர் டா லா பிபிள் குறிப்பிடுகிறது; “அந்நிய நாட்டில், அதாவது இஸ்ரவேலருக்கு விரோதிகளும் அவர்களால் பகைக்கப்பட்டவர்களுமான புறமதத்தவர் மத்தியில் பிறந்த ஒரு பெண், யெகோவாவின் ஜனங்கள் மீதும் அவர்களுடைய வழிபாட்டின் மீதும் தனக்கிருந்த பற்றின் காரணமாக, புனித அரசரான தாவீதுக்கு மூதாட்டியாகும் அளவுக்கு எப்படி யோகக்காரியானாள்” என்பதை இப்பதிவு காட்டுவதாக அது விளக்குகிறது. தன் பெற்றோரின் மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை தேர்ந்தெடுக்க ரூத் தயங்கவில்லை. அதன் விளைவாக கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றாள்.
இயேசுவின் சீஷர்கள் ஏன் தங்கள் முன்னோர்களின் மதத்தை கைவிட்டார்கள் என்பதற்கான காரணங்கள் கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தைப் பற்றிய பதிவில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு ஒரு கூட்டத்தாரிடம் நியாயங்களை சிறப்பாக எடுத்துக்காட்டி உரையாற்றிய போது, பாவங்களிலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என உந்துவித்தார். (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 2:37-41, பொ.மொ.) குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒன்றுதான் சவுலைப் பற்றியது. யூதரான அவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார். தமஸ்குவுக்கு செல்லும் வழியில் கிறிஸ்து அவருக்கு தரிசனமானார். அதற்குப்பின் சவுல் ஒரு கிறிஸ்தவராக மாறி அப்போஸ்தலனாகிய பவுல் என அழைக்கப்படலானார்.—அப்போஸ்தலர் 9:1-9.
ஆரம்பகால கிறிஸ்தவர்களில் பலருக்கும் இத்தகைய அற்புதமான தரிசனம் கிடைக்கவில்லை. என்றாலும், அவர்கள் அனைவருமே யூத மதத்தை அல்லது பல்வேறு புறமத கடவுட்களை வழிபடும் வணக்கத்தை விட்டுவிட வேண்டியிருந்தது. கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்கள் உண்மைகளை முழுமையாக அறிந்துகொண்ட பின்னரே, முக்கியமாக இயேசுதான் மேசியா என்பதைப் பற்றி தீர விவாதித்த பின்னரே அதை ஏற்றுக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 8:26-40; 13:16-43; 17:22-34) வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதன் அவசியத்தைக் குறித்து அந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு தெளிவாக சொல்லப்பட்டது. யூதர்கள், யூதரல்லாதவர்கள் என எல்லாரிடமும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது, ஆனால் செய்தி ஒன்றே. கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு, கிறிஸ்தவம் என்ற புதிய வணக்க முறையைப் பின்பற்றுவது அவசியமாக இருந்தது.
நமக்கு பொருத்தமான தெரிவு
முதல் நூற்றாண்டில், குடும்பத்தின் மதப் பாரம்பரியங்களை, அதாவது யூத மதம், பேரரசர் வணக்கம் அல்லது புறமத வழிபாடு ஆகியவற்றை விட்டுவிட்டு யூதர்களும் ரோமர்களும் கேலி செய்த ஒரு மதத்தில் சேருவதென்றால் ரொம்பவே தைரியம் தேவைப்பட்டது. இத்தகைய தீர்மானம் விரைவிலேயே கடுமையான துன்புறுத்துதலுக்கு வழிவகுத்தது. அது போலவே இன்றும் “பாரம்பரியத்தோடு ஒத்து வாழ்தல் என்ற உலகத்தின் போக்கிற்குள் சிக்குவதைத்” தவிர்க்க ஒருவருக்கு தைரியம் வேண்டும் என வெர் ஊன் ஃப்ரான்ஸ் பேயியன்? (பிரான்ஸில் மதமாற்றமா?) என்ற நூலில் க்ளெர்மோன்ட்-ஃபெரான்டைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் இப்பாலிட் சிமான் குறிப்பிடுகிறார். சில சமயங்களில் குறைகூறப்படும் சிறுபான்மை மதமான யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து கொள்வதற்கு தைரியம் தேவைப்படுகிறது.
பால் என்ற இளைஞர் கோர்ஸிகாவிலுள்ள பாஸ்டியாவை சேர்ந்தவர், இவர் கத்தோலிக்கராக வளர்ந்தவர். கத்தோலிக்க தர்ம ஸ்தாபனத்திற்கு பணம் திரட்டுவதற்காக கேக் விற்பது போன்ற சர்ச் சம்பந்தப்பட்ட காரியங்களில் அவ்வப்போது பங்கு கொண்டார். பைபிளை நன்கு புரிந்துகொள்ள விரும்பியதால் யெகோவாவின் சாட்சிகளுடன் தவறாமல் பைபிள் விஷயங்களை கலந்தாராய சம்மதித்தார். தான் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தனக்கு நித்திய நன்மைகளைத் தரும் என்பதை போகப் போக உணர்ந்தார். இதன் விளைவாக, பைபிளின் நெறிமுறைகளை பால் முழுமையாக ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சியானார். அவர் எடுத்த தீர்மானத்தை பெற்றோர் மதித்தார்கள்; அது அவர்களுடைய நெருங்கிய குடும்ப பந்தத்தை குலைத்துப் போடவில்லை.
பிரான்சின் தென்பகுதியில் வாழ்கிறார் அமேலீ. நான்கு தலைமுறையாக அவருடைய குடும்பம் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர் ஏன் தன் பெற்றோருடைய மதத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார்? “அம்மா அப்பாவோ தாத்தா பாட்டியோ யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள் அல்லது இருந்தார்கள் என்பதற்காக யாரும் யெகோவாவின் சாட்சியாக ஆகிறதில்லை” என அவர் கூறுகிறார். “ஆனால், ‘இவையெல்லாம் என்னுடைய நம்பிக்கைகள், ஆகவே இதுதான் என்னுடைய மதம்’ என ஒருநாள் மனதுக்குள் சொல்வீர்கள்” என்கிறார். மற்ற அநேக இளம் யெகோவாவின் சாட்சிகளைப் போலவே, அமேலீயும் தன்னுடைய உறுதியான மத நம்பிக்கைகள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைத் தருகின்றன என்பதை அறிந்திருக்கிறார்; அவை நித்திய மகிழ்ச்சிக்கு ஊற்றாக இருக்கின்றன என்பதையும் அறிந்திருக்கிறார்.
கடவுளுடைய மதிப்பீடுகளை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்
கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களை நீதிமொழிகள் புத்தகம், 6-ம் அதிகாரம், 20-ம் வசனம் இவ்வாறு ஊக்குவிக்கிறது: “என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” இந்தப் புத்திமதி, கண்ணை மூடிக்கொண்டு கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்கிறதில்லை; மாறாக, தங்கள் விசுவாசத்தை வளர்ப்பதன் மூலமும் கடவுள் பக்கம் தாங்களாகவே நிலைநிற்கை எடுப்பதன் மூலமும் தெய்வீக தராதரங்களை ஏற்றுக்கொள்ளும்படியே இளைஞரை அறிவுறுத்துகிறது. ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும்படி,’ அதாவது கற்பிக்கப்படும் விஷயங்கள் கடவுளுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்திற்கும் இசைவாக இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கேற்ப நடக்கும்படி தன் கூட்டாளிகளை அப்போஸ்தலன் பவுல் உந்துவித்தார்.—1 தெசலோனிக்கேயர் 5:21.
கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இளைஞரும் முதியோருமாகிய 60 லட்சத்திற்கும் மேலான யெகோவாவின் சாட்சிகள் அப்படிப்பட்ட தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள். பைபிளை கவனமாக படிப்பதன் மூலம் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கு நம்பகமான பதில்களை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; மனிதகுலத்திற்கான கடவுளுடைய சித்தத்தைப் பற்றியும் தெளிவாக புரிந்திருக்கிறார்கள். இந்த அறிவைப் பெற்றவுடன், அவர்கள் கடவுள் தரும் நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய சித்தத்தின்படி நடக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள்.
நீங்கள் இப்பத்திரிகையின் வாசகராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பைபிளின் ஆன்மீக மதிப்பீடுகளை ஆராய்ந்து அறிவதற்கு யெகோவாவின் சாட்சிகள் அளிக்கும் உதவியை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இவ்வாறு ஆராய்கையில், ‘யெகோவா நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்க்க’ முடியும்; அதோடு, பெற்றுக்கொள்கிற அறிவை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் போது நித்திய ஜீவனையும் பெற முடியும்.—சங்கீதம் 34:8; யோவான் 17:3.
[பக்கம் 5-ன் படம்]
பிரான்சில் நான்கு தலைமுறையாக யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு குடும்பம்
[பக்கம் 7-ன் படம்]
தன் மூதாதையரின் தெய்வங்களை அல்ல, யெகோவாவையே சேவிக்க ரூத் தீர்மானித்தாள்