ஆன்மீக மதிப்பீடுகள்—எங்கே போய்க் கொண்டிருக்கின்றன?
“திருமணத்திற்கு திட்டமிடுவோருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு [கத்தோலிக்க] கூட்டத்தின் மாலை நிகழ்ச்சியில் பதினைந்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். வந்திருக்கும் 30 பேரில் 3 பேர் மட்டுமே தங்களுக்கு மத நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்கள்.”
லே க்ருவே, ஃப்ரெஞ்ச் கேத்தலிக் டெய்லி.
ஆன்மீக மதிப்பீடுகள் அல்லது நெறிமுறைகள் இன்றைக்கு அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. “கடவுள் செத்துவிட்டாரா?” இந்தக் கேள்விதான் ஜூலை 12, 1999 தேதியிட்ட நியூஸ்வீக் என்ற சர்வதேச பத்திரிகையின் முகப்பு அட்டையில் கேட்கப்பட்டிருந்தது. மேற்கு ஐரோப்பியரை பொறுத்தவரை உண்மையில் கடவுள் செத்துவிட்டதாகத்தான் தெரிகிறது என்று அப்பத்திரிகை பதிலளித்தது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரோமில் நடந்த கத்தோலிக்க சர்ச் பேரவையைப் பற்றி லெ மான்ட் என்ற பிரெஞ்சு செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “சர்ச்சின் போதனையைக் கேட்டாலே ‘அலர்ஜி’யாக கருதுகிற ஒரு கலாச்சாரத்தில் மக்களுக்கு போதிப்பது சர்ச்சுக்கு பெரும்பாடாகி வருகிறது. . . . இத்தாலியில், கத்தோலிக்க மதம் இனியும் ஒரு கட்டுக்கோப்பான மதமாக இல்லை. . . . ஜெர்மனியில், கருச்சிதைவு சம்பந்தமாக ஆலோசனை வழங்கும் மையங்கள் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கின்றன; இது, போப்புக்கும் சர்வாதிகார சட்டங்களை இனியும் ஏற்றுக்கொள்ள விரும்பாத மக்களாட்சிக்கும் இடையே உள்ள விரிசலை இன்னும் அதிகமாக்குகிறது. [நெதர்லாந்து நாட்டவர்] ஒழுக்க நெறிகள் மற்றும் கருணைக் கொலை சம்பந்தமாக துணிச்சலான நிலைநிற்கை எடுத்ததற்கு காரணம், அவர்கள் கிறிஸ்தவ மதத்தைவிட்டு திடீரென விலகியதே என சிலர் சொல்கின்றனர்.”
மற்ற இடங்களிலும் இதே நிலைமைதான். சர்ச் ஆஃப் இங்லண்ட் “ஒரே தலைமுறைக்குள் தலைமறைவாகிவிடும்” என 1999-ல் கான்டர்பரியின் தலைமை பிஷப் ஜார்ஜ் காரி எச்சரித்தார். “கிறிஸ்தவ ஐரோப்பாவின் முடிவு” என்ற தலைப்பில் லா ஃபிகாரா என்ற பிரெஞ்சு செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை இவ்வாறு சொன்னது: “எங்கும் இதே போக்குதான் நிலவுகிறது. . . . தார்மீக மற்றும் கொள்கை ரீதியிலான கருத்துக்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்கள்.”
சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கையில் சரிவு
ஐரோப்பாவில் சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து விட்டது. பாரிஸ் நகரில் வாழும் கத்தோலிக்கரில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைக்கு வருகிறார்கள். அவர்களிலும் 3 முதல் 4 சதவீதத்தினரே தவறாமல் சர்ச்சுக்கு வருகிறார்கள். பிரிட்டிஷ் கூட்டரசிலும் ஜெர்மனியிலும் ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் இதே நிலைமைதான், சொல்லப்போனால் இதைவிட மோசமாகத்தான் இருக்கிறது.
மதத் தலைவர்களுக்கு பெரும் கவலைக்குரிய மற்றொன்று பாதிரியார் பதவிக்கு ஆட்கள் பஞ்சம். பிரான்சில் ஒரே நூற்றாண்டுக்குள் பாதிரிமார்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி; 10,000 பேருக்கு 14 பாதிரிகள் என்ற எண்ணிக்கை போய் இன்று 10,000 பேருக்கு ஒருவர் என்ற எண்ணிக்கைக்கும் கீழாக சென்றுவிட்டது. ஐரோப்பா எங்கும் பாதிரிகளின் சராசரி வயது கூடிக்கொண்டே போகிறது; அயர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் பாதிரிமாரின் எண்ணிக்கை படுகுழிக்குள் செல்வதை பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் வேதபாட (catechism) வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கம்மியாகி வருகிறது; இதனால், கத்தோலிக்க சர்ச் பழைய நிலைமைக்கு திரும்ப தெம்பு இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகிவிட்டது.
மதத்தை பொறுத்தவரை, அது மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாக தெரிகிறது. “ஒரேவொரு மதத்தில் மட்டுமே சத்தியத்தை கண்டடைய முடியும்” என 1952-ல் பிரெஞ்சு மக்களில் ஐம்பது சதவீதத்தினர் நம்பினார்கள். 1981-ல் அது 15 சதவீதமாக குறைந்தது. இப்போதோ 6 சதவீதத்தினருக்கே அந்த நம்பிக்கை இருக்கிறது. மதப்பற்றின்மை எங்கும் பரவிவருகிறது. மதத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்வோரின் எண்ணிக்கை 1980-ல் 26 சதவீதம்தான். ஆனால் 2000-ல் அது 42 சதவீதமாக ஏறிவிட்டது.—லெ வேலூர் டெ ஃப்ரான்ஸா—எவாலூசியான் டா 1980 யே 2000 (பிரெஞ்சு மதிப்பீடுகள்—1980 முதல் 2000 வரையான வளர்ச்சி).
தார்மீக மதிப்பீடுகள் ஆட்டங்காண்கின்றன
தார்மீக மதிப்பீடுகளும் அதலபாதாளத்தை நோக்கி விரைவது தெளிவாக தெரிகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் சர்ச்சுக்குப் போகும் அநேகர் தங்கள் சர்ச்சின் தார்மீக சட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். நடத்தை விஷயத்தில் தராதரங்களை வகுக்க மதத் தலைவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தை அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. மனித உரிமைகள் சம்பந்தமாக போப் எடுத்த நிலைநிற்கையை கைதட்டி வரவேற்ற அதே மக்கள், அவருடைய வார்த்தைகள் தங்களுடைய வாழ்க்கையை பாதிக்கும்போது அவர் சொல்லைத் தட்டுகிறார்கள். உதாரணமாக, கருத்தடை விஷயத்தில் அவருடைய கருத்தை பொதுவாக எல்லாருமே புறக்கணிக்கிறார்கள்; கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அநேக தம்பதிகளே புறக்கணிக்கிறார்கள்.
மதப்பற்று உள்ளவர்களாக இருந்தாலும் சரி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களை இந்த மனப்பான்மை பாதிக்கிறது. பரிசுத்த வேதாகமம் தெள்ளத் தெளிவாக கண்டனம் செய்கிற பழக்கவழக்கங்களை அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு குடிமக்களில் 45 சதவீதத்தினர் ஓரினப்புணர்ச்சியை வெறுத்தார்கள். இன்றோ, 80 சதவீதத்தினர் அதை வரவேற்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பெரும்பாலோர் ஆதரித்தாலும், திருமணத்தை மீறிய உறவுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறவர்கள் 36 சதவீதத்தினர் மட்டுமே.—ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9, 10; எபிரெயர் 13:4.
மத கதம்பம்
‘உனக்கு பிடித்த மதத்தை நீயே உருவாக்கிக்கொள்’ என்ற போக்கு, அதாவது அவரவருக்கு பிடித்த மத நம்பிக்கைகளை அவரவரே தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்ற போக்கு மேற்கத்திய சமுதாயத்தில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சில கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, மற்றவையோ புறக்கணிக்கப்படுகின்றன. சிலர் தங்களை கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் மறுபிறவியில் நம்பிக்கை வைக்கிறார்கள். வேறு சிலரோ ஒரே சமயத்தில் பல்வேறு மத நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4, 20; மத்தேயு 7:21; எபேசியர் 4:5, 6) இன்று அநேக விசுவாசிகள் சர்ச் ஏற்படுத்திய வழிகளை விட்டு ஒரேயடியாக விலகிச் செல்கிறார்கள் என லெ வேலூர் டெ ஃப்ரான்ஸா என்ற புத்தகம் குறிப்பாக காட்டியது.
ஆனால், ஆளுக்கொரு மதத்தை உருவாக்கிக் கொள்ளும் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆபத்தாக இருக்கிறது. பிரபலமாக இருக்கும் எந்தவொரு மதத்தையும் விட்டுப் பிரிந்து தனக்கென ஒரு மதத்தை ஒருவர் உருவாக்குவது முடியாத காரியம் என என்ஸ்டிட்யூ டா ஃப்ரான்ஸின் அங்கத்தினரும் மத சரித்திராசிரியருமான ஷான் டெலுயுமோ ஆணித்தரமாக நம்புகிறார். “ஒரு குறிப்பிட்ட மதத்தில் வேரூன்றியிராத விசுவாசம் நிலைத்து நிற்காது” என அவர் கூறுகிறார். சிறந்த ஆன்மீக மதிப்பீடுகளும் ஒருவருடைய மத பழக்கவழக்கங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். பெரும் மாற்றத்தால் சின்னாபின்னமாகிப் போன சமுதாயத்தில் இத்தகைய பிணைப்பை எங்கே காண்பது?
நடத்தைக்கும் ஒழுக்கத்திற்கும் தகுந்த தராதரங்களை வகுப்பவர் கடவுளே என்பதை பக்கத்திற்கு பக்கம் பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்வதா அல்லது புறக்கணிப்பதா என்பதை மனிதனே தீர்மானிப்பதற்கு கடவுள் சுதந்திரம் அளிக்கிறார். காலங்காலமாய் உயர்வாக மதிக்கப்பட்டு வரும் இந்தப் புத்தகம் இன்று நடைமுறையானது, அது ‘கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது’ என்பதை லட்சோப லட்சம் பேர் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 119:105) அவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள்? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.