ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
இரத்தத்தின் புனிதத் தன்மையைக் காத்துக்கொள்வதில் உதவி
இரத்தத்தின் புனிதத் தன்மையைக் குறித்ததில் உலகெங்குமுள்ள யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுக்கு உண்மைத் தன்மையுடன் இருப்பதை செயலில் காட்டியிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு தேவையான உதவியை அளித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) பிலிப்பைன்ஸில் இதற்கு கிடைத்த பலன்களைப் பார்ப்போம்.
பிலிப்பைன்ஸ் கிளை அலுவலகம் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “புரூக்ளின் பெத்தேலை சேர்ந்த பிரதிநிதிகள் பிலிப்பைன்ஸுக்கு வந்து கருத்தரங்கு நடத்துவார்கள் என 1990-ல் எங்களிடம் சொல்லப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ளுவதற்கு கொரியா, தைவான், ஹாங்காங் உட்பட ஆசியாவிலுள்ள பல கிளை அலுவலகங்களிலிருந்து சகோதரர்கள் அழைக்கப்பட்டார்கள். அதன் நோக்கம்: அவர்களுடைய கிளை அலுவலகங்களில் மருத்துவ தகவல் சேவையை (Hospital Information Services) உருவாக்குவதும், மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களை (Hospital Liaison Committees) ஏற்படுத்துவதுமே. பிலிப்பைன்ஸில் நான்கு முக்கிய நகரங்களில் முதன்முதலாக மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.” இக்குழுவிலுள்ளோர், இரத்தம் பற்றிய நம்முடைய நிலைநிற்கையை மதித்து நம்முடன் ஒத்துழைக்க மனமுள்ள மருத்துவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். இரத்தம் சம்பந்தமாக சிக்கல்கள் எழுகையில் சகோதரர்களுக்கு தேவையான உதவியையும் அளிப்பார்கள்.
பகுயோவில் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவில் சேவை செய்யும்படி ரிமிக்யோ தேர்ந்தெடுக்கப்பட்டார். காலம் செல்லச் செல்ல, இந்தக் குழு திறம்பட்ட விதத்தில் செயல்படுவது மருத்துவர்களின் கண்ணில் பட்டது. ஒருமுறை, சாட்சியாக உள்ள நோயாளிகள் இரத்தத்தை ஏற்க மறுக்கையில் எப்படி சிகிச்சையளிப்பது என்பதை மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவினரிடம் பல மருத்துவர்கள் கேட்டறிய விரும்பினார்கள்; அந்த சந்தர்ப்பத்தில் நடந்தது ரிமிக்யோவுக்கு நினைவிருக்கிறது. “டாக்டர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்; அவை அனைத்துமே மருத்துவம் சம்பந்தப்பட்ட கேள்விகளாக இருந்ததால் பதிலளிக்க முடியாமல் விழித்தேன்” என ரிமிக்யோ சொன்னார். இந்த சவாலை சமாளிக்க அவர் யெகோவாவின் உதவி கேட்டு ஜெபித்தார். பிறகு நடந்ததை அவரே சொன்னார்: “ஒவ்வொரு கேள்வி கேட்கப்படுகையிலும் மற்ற டாக்டர்கள் கையை உயர்த்தி அத்தகைய சமயங்களில் தாங்கள் எப்படி சமாளித்தார்கள் என பதிலளித்தார்கள்.” அப்படிப்பட்ட உதவி கிடைத்ததில் ரிமிக்யோவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, ஏனெனில் அந்தக் கேள்வி நேரம் இரண்டு மணிநேரத்திற்கு நீடித்தது.
இப்போது அந்நாட்டில் 21 குழுக்கள் உள்ளன, அவற்றில் மொத்தம் 77 சகோதரர்கள் சேவை செய்கிறார்கள். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் டானீலோ ஒரு மருத்துவரும்கூட. அவர் சொல்வதாவது: “சாட்சிகளாக இருக்கும் நோயாளிகளுக்கு ஓர் அமைப்பின் ஆதரவு இருக்கிறது, அது அவர்களைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்கிறது என்பதை டாக்டர்கள் அறிந்திருக்கிறார்கள்.” ஒரு சகோதரருக்கு இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் ஒருவர் ஆரம்பத்தில் தயங்கினார். எனினும் அந்த சகோதரர் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தேறியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ தகவல் சேவை பின்வருமாறு அறிக்கை செய்கிறது: “அந்த சகோதரரின் உடல்நலம் மளமளவென்று தேறுவதைக் கண்டு அந்த டாக்டரே அசந்துவிட்டார். ‘சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதால், இனி உங்கள் அங்கத்தினர்களில் யாருக்காவது இந்த விதமான அறுவை சிகிச்சையை இரத்தமின்றி செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள், சந்தோஷமாக செய்வேன்’ என அவர் சொன்னார்.”