வாழ்க்கை சரிதை
மற்றவர்களுக்கு சேவை செய்வது நம் துன்பத்தை குறைக்கிறது
ஹூல்யான் ஆர்யாஸ் சொன்னபடி
அது 1988 ஆம் வருஷம், அப்போது எனக்கு வயது 40, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் பாதுகாப்பான ஒரு நல்ல வேலையில் இருந்தேன். அதாவது பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மண்டல இயக்குநராக இருந்தேன். அந்நிறுவனம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டின் மத்திப பகுதியில் அமைந்திருந்தது; விலை உயர்ந்த கார், கைநிறைய சம்பளம், ஆடம்பரமான ஆபீஸ் என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்தேன். அந்த நிறுவனம் அதன் தேசிய இயக்குனர் பதவியை எனக்குத் தரப்போவதாகக்கூட ஜாடைமாடையாக சொன்னது. ஆனால் வெகு சீக்கிரத்தில் என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
அதே வருஷம் ஒரு நாள், மல்ட்டிப்பில் ஸ்கிலரோஸிஸ் எனப்படும் குணப்படுத்த முடியாத நோய் எனக்கு வந்திருப்பதாக சொல்லி டாக்டர் என் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்துப் போனேன். அதன்பிறகு இந்த மல்ட்டிப்பில் ஸ்கிலரோஸிஸ் நோய் ஒரு மனிதனை உண்மையில் எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றி படித்தபோது பயம் என்னைக் கவ்வியது.a இனி ஆயுள் முழுவதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டுமே என்று நினைத்தேன். அப்படி இருக்கும்போது என்னால் எப்படி என் மனைவி மிலாக்ரோஸையும் மூன்று வயது மகன் ஈஸ்மாயிலையும் காப்பாற்ற முடியும்? நாங்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிக்க போகிறோம்? இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிப்பதற்குள், என் வாழ்க்கையில் அடுத்த புயல் மையங்கொண்டுவிட்டது.
என்னுடைய நோயை குறித்து டாக்டர் சொல்லி சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அவருடைய ஆபீஸுக்கு அழைத்தார். கம்பெனிக்கு, “நல்ல பர்ஸனாலிட்டியான” ஆட்கள்தான் தேவை என்றும், ஒரு நபருக்கு திசு சிதைவுறும் நோய் ஆரம்ப நிலையில் இருந்தாலும்கூட அவரால் அப்படி ஒரு இமேஜை கொடுக்க முடியாது என்றும் கூறி, உடனடியாக என்னை வேலையிலிருந்து நீக்கினார். திடீரென்று என்னுடைய வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது!
என் குடும்பத்தினரிடம் தைரியமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும், எனக்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய சூழ்நிலையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் தனிமையில் சிந்தித்துப் பார்க்க துடித்தேன். என்னுள்ளே வளர்ந்து வந்த மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும் முயன்றேன். எல்லாவற்றையும்விட, ஒரே நாளில் என்னுடைய கம்பெனிக்கு நான் லாயக்கற்றவனாகிவிட்டேனே என்ற எண்ணம்தான் தேள்போல் என்னை கொட்டிக்கொண்டே இருந்தது.
பலவீனத்திலும் பலத்தை கண்டுகொண்டேன்
பலவீனத்தின் மத்தியிலும் எனக்கு பலத்தை தரும் பல விஷயங்களின் மீது சார்ந்திருக்க முடிந்ததற்காக நன்றியோடு இருக்கிறேன். அதற்கு காரணம், சுமார் இருபது வருடத்திற்கு முன்பு நான் ஒரு யெகோவாவின் சாட்சியானதுதான். என்னுடைய உணர்ச்சிகளையும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் யெகோவாவிடம் ஜெபத்தில் முறையிட்டேன். சாட்சியாக இருந்த என் மனைவியும் எனக்கு உறுதுணையாக இருந்தாள். மேலும் சில நெருங்கிய நண்பர்களின் தயவும் ஆதரவும் விலைமதிப்பிட முடியாத ஆதரவை எனக்கு கொடுத்தது.—நீதிமொழிகள் 17:17.
மற்றவர்களுக்கு உதவும் பொறுப்பு எனக்கிருந்ததை உணர்ந்ததும் கைகொடுத்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், என் மகனை நன்றாக வளர்க்க வேண்டும், அவனை படிக்க வைக்க வேண்டும், அவனுடன் விளையாட வேண்டும், பிரசங்க வேலையில் அவனை பயிற்றுவிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். அதனால் நம்பிக்கையின்மைக்கு இடம் கொடுக்க முடியவில்லை. மேலுமாக, யெகோவாவின் சாட்சிகளின் கிறிஸ்தவ சபையில் நான் ஒரு மூப்பராக இருந்ததால், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய ஆதரவு அவசியமாயிருந்தது. ஒருவேளை என்னுடைய பலவீனம் என் விசுவாசத்தை அழிக்க அனுமதித்தால், என்னால் எப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைக்க முடியும்?
என் வியாதி உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் என்னுடைய வாழ்க்கையை பாதித்ததில் சந்தேகமே இல்லை. ஒருவகையில் கொஞ்சம் மோசமான நிலையை அடைந்தாலும், வேறுவகையில் உயர்ந்த நிலையை அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும். ஒருசமயம் டாக்டர் ஒருவர் இவ்விதமாக சொன்னது காதில் விழுந்தது: “ஒரு நோய், பாதிக்கப்பட்ட நபரை அழித்துவிடாது, மாறாக அது அவரை மாற்றிவிடும்.” நோயினால் கெட்ட மாற்றங்கள் மட்டுமல்ல, நல்ல மாற்றங்களும் ஏற்படுவது உண்டு என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன்.
முதலாவதாக, என் “மாம்சத்திலுள்ள முள்,” சரீரப்பிரகாரமான பிரச்சினையுள்ள மற்றவர்களின் நிலையை புரிந்துகொண்டு, அவர்களுடைய நிலையில் என்னை நிறுத்தி பார்க்க உதவியது. (2 கொரிந்தியர் 12:7) “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என்ற நீதிமொழிகள் 3:5-ன் வார்த்தைகளை முன்பைவிட நன்றாக புரிந்துகொண்டேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியமானவை எவை என்றும் உண்மையான திருப்தியையும் தன்னம்பிக்கையையும் கொடுப்பவை எவை என்றும் கற்றுக்கொள்ள இந்த புதிய சூழ்நிலை எனக்கு உதவியது. யெகோவாவின் அமைப்பில் நான் செய்ய இன்னும் அதிகம் இருந்தது. “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது” என்ற இயேசுவின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டுபிடித்தேன்.—அப்போஸ்தலர் 20:35, NW.
புதிய வாழ்க்கை
என்னுடைய நோய் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள், மாட்ரிட்டில் நடந்த செமினாரில் கலந்துகொள்ளும்படி அழைப்பு கிடைத்தது. அதில் டாக்டர்களுக்கும் சாட்சிகளான நோயாளிகளுக்கும் இடையே சுமுகமான உறவை வளர்ப்பதற்காக கிறிஸ்தவ வாலண்டியர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த வாலண்டியர்கள் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களாக (Hospital Liaison Committees) ஒழுங்கமைக்கப்பட்டார்கள். இந்த செமினாருக்கு செல்லும் வாய்ப்பு சரியான சமயத்தில் எனக்கு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், உலகப்பிரகாரமான வேறு எந்த வேலையிலும் கிடைக்காத மனதிருப்தியை இதன் மூலம் கண்டடைந்தேன்.
இவ்வாறு, புதிதாக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்கள், மருத்துவமனைகளுக்கு சென்று, டாக்டர்களை பேட்டி கண்டு, சுகாதார பணியாளர்களுக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று செமினாரில் கற்றுக்கொண்டோம். இந்த ஏற்பாடு, மருத்துவ துறையிலிருப்பவர்களுடன் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்த்து அவர்களுடைய முழு ஒத்துழைப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செய்யப்பட்டிருப்பது விளக்கப்பட்டது. இரத்தமில்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த குழுக்கள் சாட்சிகளுக்கு உதவுகின்றன. மருத்துவத்தைப் பற்றியே சுத்தமாக தெரியாத நான் மருத்துவ பெயர்கள், மருத்துவ நெறிமுறைகள், இன்னும் மருத்துவமனை அமைப்பு பற்றியும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், இந்த செமினார் என்னை ஒரு புது மனிதனாக்கியது; என் மனப்பான்மையையே அடியோடு மாற்றி, எனக்கு பூரிப்பளித்த ஒரு புதிய சவாலை சந்திக்க என்னை தயார்படுத்தியது.
மருத்துவமனை விஜயங்கள் —திருப்தியான வேலை
என் நோய் இரக்கமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஊனமாக்கிய போதிலும் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக என் பொறுப்புகள் கூடின. உடல் ஊனமுற்றோருக்காக கிடைக்கும் ஓய்வூதியம் எனக்கு கிடைத்ததால், வேறு எந்த வேலைக்கும் நான் செல்லவில்லை. அதனால் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களை சந்திக்க எனக்கு நேரம் கிடைத்தது. அவ்வப்போது ஏமாற்றங்களை சந்தித்தாலும், இந்த விஜயங்கள் சுலபமாக இருந்தன, நான் எதிர்பார்த்ததைவிட நல்ல பலனையும் கொடுத்தன. நான் சக்கரநாற்காலியே கதி என்று இருந்தாலும் அது எனக்கு ஒரு பெரிய தடையாக இல்லை. குழுவிலுள்ள ஒரு உடன் அங்கத்தினர் எப்போதும் என்னோடே வருகிறார். டாக்டர்களும் சக்கரநாற்காலியில் வரும் ஜனங்களிடம் பேசி பழக்கப்பட்டிருக்கின்றனர், அதோடு, அவர்களை சந்திக்க நான் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து கவரப்பட்டு சில சமயம் அதீத மரியாதையுடன் நான் பேசுவதை கவனமாக கேட்பார்கள்.
கடந்த பத்து வருடங்களில், நான் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலர் ஆரம்பத்திலிருந்தே சாட்சிகளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கின்றனர். டாக்டர் க்வான் டுவார்ட்டே, மாட்ரிட்டில் இருக்கும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்; நோயாளியின் மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உள்ள இவர், உடனடியாக தன்னுடைய மருத்துவ சேவையை அளித்தார். இதுவரையாக, ஸ்பெயினில் உள்ள வித்தியாசப்பட்ட இடங்களிலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை சாட்சி நோயாளிகளுக்கு இரத்தமில்லாமல் செய்துள்ளார். கடந்த சில வருடங்களாக அதிகமான டாக்டர்கள் இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு, நாங்கள் தவறாமல் அவர்களை சென்று சந்தித்து பேசியது ஒரு காரணமாக இருந்தாலும், மருத்துவ துறையின் முன்னேற்றமும் இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்ததால் கிடைத்த பலன்களும்கூட பங்கு வகித்தன. யெகோவா எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதிலும் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை செய்வதில் தேர்ச்சி பெற்ற சில டாக்டர்களின் ஒத்துழைப்பினால் நான் அதிகமாக கவரப்பட்டேன். இரண்டு அறுவை சிகிச்சை மருத்துவர்களையும் மயக்க மருந்தியல் நிபுணர்களையும் கொண்ட ஒரு குழுவை நாங்கள் இரண்டு வருடங்கள் சென்று சந்தித்தோம். இந்த துறையில் மற்ற டாக்டர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக மருத்துவம் சார்ந்த பிரசுரத்தைக் கொடுத்தோம். அதனால், 1999-ஆம் ஆண்டு நடந்த, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை மருத்துவ கருத்தரங்கின்போது எங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. எப்படியென்றால், அந்த இரண்டு அறுவை சிகிச்சை டாக்டர்களும் இங்கிலாந்திலிருந்து வந்த வேறொரு டாக்டரும் இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்ய ஒத்துக்கொண்டார்கள். இங்கிலாந்திலிருந்து வந்த அந்த டாக்டரின் தலைமையில் அவர்கள் ஒரு சாட்சி குழந்தைக்கு மிகவும் கடினமான சிகிச்சையாகிய, இருதய பெருந்தமனியின் வால்வை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை செய்தார்கள்.b ஆபரேஷன் தியேட்டரிலிருந்து ஒரு டாக்டர் வெளியே வந்து, ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்றும், குழந்தையுடைய குடும்பத்தினரின் மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்கப்பட்டது என்றும் சொன்னபோது, அந்த பெற்றோர்களோடு சேர்ந்து நானும் சந்தோஷக் கடலில் குதித்தேன். இன்றுவரை, இந்த இரண்டு டாக்டர்களும் ஸ்பெயினின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வரும் சாட்சி நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
கிறிஸ்தவ சகோதரர்களுக்கு என்னாலும் உதவ முடிகிறது என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக, வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையை சந்திக்கையிலேயே அவர்கள் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவை அணுகுகின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு ஆபரேஷன் தேவையாக இருக்கும் அந்த சமயத்தில், உள்ளூரில் இருக்கும் மருத்துவர்கள் இரத்தம் இல்லாமல் ஆபரேஷன் செய்வதற்கு விருப்பமில்லாமலோ அதை எப்படி செய்வது என்று தெரியாமலோகூட இருக்கலாம். இங்கு மாட்ரிட்டில், எல்லா விதமான சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுக்கும் அறுவை சிகிச்சை டாக்டர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும்போது சகோதரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். மருத்துவமனையில் ஒரு சகோதரரை சந்திக்க நாங்கள் சென்றவுடனேயே பீதியில் உறைந்திருந்த அவர் முகத்தில் சட்டென நிம்மதி எட்டிப் பார்க்க ஆரம்பித்ததை நானே கண்கூடாக பார்த்தேன்.
நீதிபதிகளும் மருத்துவ நெறிகளும்
கடந்த சில வருடங்களாக மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களின் அங்கத்தினர்களாகிய நாங்கள் நீதிபதிகளையும் சந்தித்து வருகிறோம். அந்த சந்திப்புகளின்போது, யெகோவாவின் சாட்சிகளுக்கான குடும்ப பராமரிப்பும் மருத்துவ சிகிச்சையும் என்ற ஆங்கில பிரசுரத்தை அவர்களுக்கு கொடுத்தோம். இது இரத்தத்தை குறித்த நம் நிலைநிற்கை பற்றியும், இரத்தம் இல்லாத மாற்று மருத்துவம் பற்றியும் உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ளுவதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சந்திப்புகள் மிகவும் அவசியமாயிருந்தன. ஏனெனில், ஸ்பெயினில் இருந்த நீதிபதிகள் நோயாளிகளின் விருப்பத்திற்கு மாறாக இரத்தம் ஏற்ற டாக்டர்களுக்கு அனுமதி கொடுப்பது ஒரு சமயம் வழக்கமாக இருந்தது.
நீதிபதிகளின் அறைகள் அனைவரின் மனதையும் கவரும் வகையில் இருக்கின்றன; ஹால் வழியாக என்னுடைய சக்கரநாற்காலியில் முதன்முறையாக சென்றபோது வெறும் துரும்பைப்போல் உணர்ந்தேன். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, போகும் வழியில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு, சக்கரநாற்காலியிலிருந்து நான் கீழே விழுந்துவிட்டேன். என் பரிதாப நிலையை கண்ட சில நீதிபதிகளும் வக்கீல்களும் எனக்கு உதவி செய்ய ஓடிவந்தார்கள், நானோ அவர்களுக்கு முன்பாக வெட்கத்தால் கூனி குறுகினேன்.
நாங்கள் நீதிபதிகளை எதற்காக சந்தித்தோம் என்பதை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளாத போதிலும், பெரும்பாலானோர் எங்களை கரிசனையோடு நடத்தினார்கள். நான் சந்தித்த முதல் நீதிபதி சாட்சிகளை பற்றி அறிந்திருந்தார், அதோடு எங்களுடன் இன்னும் அதிகமாக பேச வேண்டும் என்பதாகவும் கூறினார். அடுத்த சந்திப்பின்போது, அவரே என்னுடைய சக்கரநாற்காலியை அவருடைய அறைக்கு தள்ளி சென்றார்; அதோடு நான் சொன்ன விஷயங்களையும் கூர்ந்து கவனித்தார். இப்படியாக ஆரம்ப சந்திப்பிலேயே நல்ல பலன்களை அடைந்தது, எங்களுடைய பயத்தை போக்கி உற்சாகத்தை அளித்தது. அதைத் தொடர்ந்து விரைவில் இன்னும் அநேக நல்ல பலன்களையும் அடைந்தோம்.
அதே வருஷம், குடும்ப பராமரிப்பு பிரசுரத்தை மற்றொரு நீதிபதியிடம் கொடுத்தோம்; அவரும் அதை சந்தோஷத்தோடு பெற்றுக்கொண்டு கட்டாயம் படிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அவசர நேரத்தில் அவர் எங்களை தொடர்பு கொள்ள தோதாக, என்னுடைய டெலிபோன் நம்பரையும் அவரிடம் கொடுத்தேன். இரண்டு வாரம் கழித்து அவர் எனக்கு ஃபோன் செய்து, சாட்சி நோயாளி ஒருவருக்கு ஆபரேஷன் தேவைப்படுவதாகவும் அதனால், இரத்தம் ஏற்றுவதற்கு மருத்துவர் அனுமதி கேட்பதாகவும் கூறினார். எனவே சாட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப இரத்தம் செலுத்தாமல் இருப்பதற்கு ஒரு தீர்வைக் காண நாங்கள் உதவி செய்ய வேண்டும் என்பதாக நீதிபதி என்னிடம் சொன்னார். வேறு ஆஸ்பத்திரியை கண்டுபிடிப்பது எங்களுக்கு கடினமாக இருக்கவில்லை; அங்கிருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரத்தம் இல்லாமல் ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். இதை கேள்விப்பட்ட நீதிபதி சந்தோஷப்பட்டார், வருங்காலங்களிலும் இதைப் போலவே நல்ல முடிவை காண முயலுவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.
மருத்துவமனை விஜயங்களின்போது, மருத்துவ நெறிமுறைகளைப் பற்றிய கேள்விகள் அடிக்கடி எழும்பின; ஏனென்றால் நோயாளியின் உரிமைகளுக்கும் மனசாட்சிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். மாட்ரிட்டில், எங்களுக்கு நல்ல ஆதரவை காட்டி வந்த ஒரு மருத்துவமனை, அது ஏற்பாடு செய்திருந்த நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட வகுப்பில் பங்கு கொள்ளும்படி என்னை அழைத்தது. அங்கு கூடியிருந்த மருத்துவ துறையின் வல்லுனர்களிடம் பைபிள் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அது எனக்கு வாய்ப்பளித்தது. அதோடு டாக்டர்கள் எடுக்க வேண்டிய கடினமான தீர்மானங்களை நான் புரிந்து கொள்வதற்கும் உதவியது.
அந்த வகுப்பின் ஆசிரியர்களில் ஒருவர், டியேகோ கிராஸியா என்ற பேராசிரியர்; ஒழுக்கவியலில் முதுகலை பட்டப் பயிற்சியை ஸ்பானிஷ் டாக்டர்களுக்காக எப்போதும் ஏற்பாடு செய்யும் இவர், இரத்தமேற்றும் விஷயத்தில் விவரமறிந்து தீர்மானிக்கும் (informed consent) நம்முடைய உரிமைக்கு உறுதியான ஆதரவை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.c அவரை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வந்ததால், பேராசிரியர் கிராஸியாவின் மாணாக்கர்களில் சிலரிடம் நம்முடைய நிலைநிற்கையை விளக்க ஸ்பெயினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்பு வந்தது; அந்த மாணாக்கர்களில் சிலர் நாட்டிலே மிகச் சிறந்த டாக்டர்கள் என்ற பெயர் பெற்றிருக்கிறார்கள்.
எதார்த்தங்களை ஜீரணித்தல்
உடன் விசுவாசிகளுக்காக நான் செய்துவரும் இந்த திருப்திகரமான வேலை, என்னுடைய எல்லா சொந்த பிரச்சினைகளையும் தீர்த்துவிடவில்லை என்பது உண்மைதான். என்னுடைய நோய் முற்றிக்கொண்டே போகிறது. இருந்தபோதிலும், நல்ல காலமாக என்னுடைய மனது இன்னும் தெளிவாக இருக்கிறது. என் மனைவியும் மகனும் ஒருநாள்கூட குறை கூறியதே இல்லை, அவர்களுடைய உதவியால் இன்னமும் என் பொறுப்புகளை செய்ய முடிகிறது. அவர்களின் உதவியும் ஆதரவும் இல்லையென்றால் இது எனக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். என் பேன்ட் பட்டன்களை போடவோ என் ஓவர் கோட்டை அணியவோகூட என்னால் முடியாது. விசேஷமாக, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் என்னுடைய மகன் ஈஸ்மாயிலுடன் பிரசங்க வேலையை மகிழ்ந்து அனுபவிக்கிறேன்; என் சக்கரநாற்காலியை ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு அவன்தான் தள்ளிச் செல்வான், அதனால் வித்தியாசமான ஜனங்களிடம் என்னால் பேச முடிகிறது. சபையில் மூப்பராக தொடர்ந்து இன்னும் சேவை செய்ய முடிகிறது.
கடந்த 12 வருடங்களாக அதிர்ச்சியூட்டும் சில சம்பவங்களை சந்தித்துவிட்டேன். சில சமயம், என் நோயைவிட, என் குடும்பத்தில் உள்ளவர்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்க்கும்போதுதான் இன்னுமதிகமான வேதனை ஏற்படுகிறது. கஷ்டங்களை அவர்கள் வாய்விட்டு சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வருடத்திற்குள் என் மாமியாரும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். அதே வருடம், நானும் சக்கரநாற்காலியின் உதவி இல்லாமல் எங்குமே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னுடன் வசித்து வந்த என் அப்பா திசு சிதைவுறும் வேறொரு நோயினால் இறந்தார். அவரை கவனித்து வந்த மிலாக்ரோஸ், எனக்கு நடக்கப்போவதை இப்போதே பார்ப்பதுபோல் உணர்ந்தாள்.
அதேசமயம், நாங்கள் என்னதான் கஷ்டங்களை அனுபவித்தாலும் எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வியாபித்திருக்கிறது. நான் பொறுப்பான நாற்காலியிலிருந்து சக்கரநாற்காலிக்கு “பதவி இறக்கம்” செய்யப்பட்டிருந்தாலும், முன்பைவிட இப்போதுதான் என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளதுதான். இவ்விதமாக மற்றவர்களுக்காக சேவை செய்வது ஒருவருடைய சொந்த துன்பத்தை குறைக்கிறது; அதோடு, யெகோவா தம்முடைய வாக்குறுதிக்கு ஏற்ப, நமக்கு தேவைப்படும் சமயங்களில் பலத்தை அளிக்கிறார். ஆகையால், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்பதாக பவுலைப் போல என்னாலும் சொல்ல முடியும்.—பிலிப்பியர் 4:13.
[அடிக்குறிப்புகள்]
a மல்ட்டிப்பில் ஸ்கிலரோஸிஸ் எனப்படும் திசுக்கள் கடினமாகும் நோய் மத்திப நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறாகும். இது நாளடைவில் சமநிலையையும் கை கால்களின் அசைவையும் பாதிக்கிறது; சிலசமயங்களில் கண்பார்வையையோ, பேச்சையோ, புரிந்துகொள்ளுதலையோ பாதிக்கிறது.
b இந்த ஆபரேஷன் ரோஸ் செயல்முறை என்று அழைக்கப்படுகிறது.
[பக்கம் 24-ன் பெட்டி]
மனைவியின் கருத்து
மல்ட்டிப்பில் ஸ்கிலரோஸிஸ் வியாதியுடைய ஒருவருக்கு மனைவியாக இருப்பது, மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் சரீர ரீதியிலும் ரொம்ப கஷ்டம். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நியாயமாக தீர்மானிக்க வேண்டும், எதிர்காலத்தைப் பற்றிய தேவையில்லாத கவலைகளை தவிர்க்கவும் வேண்டும். (மத்தேயு 6:34) எனினும், கஷ்டங்களோடு வாழும்போதுதான் ஒருவருடைய மிகச் சிறந்த குணங்கள் எல்லாம் வெளிப்படும். உதாரணமாக, இப்போது எங்களுடைய திருமண பந்தம் எப்போதையும்விட இன்னும் உறுதியாக இருக்கிறது, அதோடு யெகோவாவுடன் என் உறவும் அதிக நெருக்கமாகி இருக்கிறது. மேலுமாக, இதேபோல கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்கும் மற்றவர்களின் வாழ்க்கை சரிதைகளும் என்னை பலப்படுத்தியிருக்கின்றன. மற்ற சகோதரர்களுக்காக செய்யும் மதிப்பு வாய்ந்த சேவையின் மூலம், என் கணவருக்கு கிடைக்கும் சந்தோஷங்களை அவரோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்கள் தலைதூக்கினாலும், யெகோவா நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை கண்டுகொண்டேன்.
[பக்கம் 24-ன் பெட்டி]
மகனின் கருத்து
என் அப்பாவின் சகிப்புத்தன்மையிலும் நம்பிக்கை மனப்பான்மையிலும் நான் மிகச் சிறந்த மாதிரியைப் பார்க்கிறேன், அதோடு, அவரை சக்கரநாற்காலியில் உட்காரவைத்து தள்ளி செல்லும்போது என் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருப்பதாக உணருகிறேன். அதேசமயம், நான் விரும்புவதை எல்லாம் எப்போதுமே செய்ய முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். இப்போது நான் டீனேஜர், ஆனால் வளர்ந்து பெரியவனாகி மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பைபிளின் வாக்குறுதிகளின்படி கஷ்டங்கள் எல்லாம் தற்காலிகமானது என்றும், நம்மைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்றும் எனக்கு தெரியும்.
[பக்கம் 22-ன் படம்]
என் மனைவி எனக்கு பக்கபலம்
[பக்கம் 23-ன் படம்]
இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் க்வான் டுவார்ட்டேவுடன் பேசுகையில்
[பக்கம் 25-ன் படம்]
நானும் என் மகனும் ஒன்றாக சேர்ந்து ஊழியம் செய்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கிறோம்