சாமானியர்கள் பைபிளை மொழிபெயர்த்தார்கள்
ஹென்ரி நாட் என்பவர் கொத்தனார், ஓர் ஆங்கிலேயர்; ஜான் டேவிஸ் என்பவர் பலசரக்கு வியாபார பணிக்கு பயிற்சி பெற்றவர், வேல்ஸ் நாட்டவர். இவர்கள் இருவரும் 1835-ல் இமாலயப் பணி ஒன்றை செய்து முடித்தார்கள். 30-க்கும் அதிக ஆண்டுகள் அரும்பாடுபட்டு டஹிடிய மொழியில் முழு பைபிளையும் ஒருவழியாக மொழிபெயர்த்து முடித்தார்கள். இந்த இரண்டு சாமானியர்களும் என்ன சவால்களை சந்தித்தார்கள்? பணம் காசை எதிர்பார்க்காமல் பாடுபட்டு பணியாற்றியதில் அவர்களுக்குக் கிடைத்த பலன்கள் என்ன?
“த கிரேட் அவேக்கனிங்”
18-ம் நூற்றாண்டின் கடைசி ஐம்பது ஆண்டுகளில் ‘கிரேட் அவேக்கனிங்’ அல்லது ‘அவேக்கனிங்’ என்றழைக்கப்பட்ட புராட்டஸ்டன்ட் இயக்கத்தின் அங்கத்தினர்கள் பிரிட்டனில் கிராம சதுக்கங்களிலும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் அருகிலும் பிரசங்கித்து வந்தார்கள். தொழிலாளர் வர்க்கத்துக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதே அவர்களுடைய இலட்சியம். ‘அவேக்கனிங்’ இயக்கத்தின் பிரசங்கிகள் பைபிள் விநியோகிப்பை ஆர்வத்துடன் ஊக்குவித்தார்கள்.
இந்த இயக்கத்தின் ஸ்தாபகர் பாப்டிஸ்ட் மதப்பிரிவை சேர்ந்த வில்லியம் கேரி என்பவர் ஆவார். இவர் 1795-ல் லண்டன் மிஷனரி சொஸைட்டியை (LMS) உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தென் பசிபிக் பிராந்தியத்தில் மிஷனரிகளாக சேவை செய்வதற்காக அங்கு பேசப்படும் மொழிகளை கற்றுக்கொள்ள முன்வந்தவர்களுக்கு LMS பயிற்சி அளித்தது. உள்ளூர்வாசிகளின் மொழிகளில் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே இந்த மிஷனரிகளின் நோக்கமாக இருந்தது.
அப்போதுதான் டஹிடி தீவு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது; அதுவே LMS-ன் முதலாவது மிஷனரி பிராந்தியமாக அமைந்தது. ‘அவேக்கனிங்’ இயக்கத்தினருக்கு இத்தீவுகள், புறமதம் மண்டிக் கிடந்த ‘இருண்ட பகுதிகளாக,’ அறுவடைக்கு தயாரான விளைநிலங்களாக காட்சியளித்தன.
சாமானியர்கள் சவாலை சமாளித்தார்கள்
அந்த அறுவடை வேலைக்காக, எந்தப் பயிற்சியும் பெறாத சுமார் 30 மிஷனரிகள் அவசர அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டஃப் என்ற LMS-க்கு சொந்தமான கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அப்படி அனுப்பப்பட்டவர்களை ஓர் அறிக்கை இப்படியாக பட்டியலிடுகிறது: “[முறைப்படி எந்தப் பயிற்சியும் பெறாத] பாஸ்டர்கள் நால்வர், தச்சர்கள் ஆறு பேர், ஷூ தயாரிப்பவர்கள் இருவர், கொத்தனார்கள் இருவர், நெசவாளிகள் இருவர், தையல்காரர்கள் இருவர், கடைக்காரர் ஒருவர், சேணம் தயாரித்து விற்பவர் ஒருவர், வீட்டு வேலையாள் ஒருவர், தோட்டக்காரர் ஒருவர், மருத்துவர் ஒருவர், கொல்லன் ஒருவர், பீப்பாய் செய்பவர் ஒருவர், பஞ்சு உற்பத்தியாளர் ஒருவர், தொப்பி செய்து விற்பவர் ஒருவர், துணி தயாரிப்பவர் ஒருவர், அலமாரி செய்பவர் ஒருவர், மனைவிகள் ஐவர், பிள்ளைகள் மூவர்.”
பைபிளின் மூல வாக்கியங்களை அறிந்துகொள்வதற்கு இந்த மிஷனரிகளின் கைவசம் இருந்ததெல்லாம், ஒரு கிரேக்க-ஆங்கில அகராதியும், எபிரெய அகராதியுடன் இருந்த ஒரு பைபிளும் மட்டுமே. ஏழு மாத கப்பல் பயணத்தின்போது இந்த மிஷனரிகள் சில டஹிடிய வார்த்தைகளை மனப்பாடம் செய்தார்கள்; இந்த வார்த்தைகள் முன்பு அங்கு சென்றிருந்த பல்வேறு ஆட்களால், முக்கியமாக பௌன்டி கப்பலில் கலகம் செய்தவர்களால் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒருவழியாக 1797, மார்ச் 7-ம் தேதி டஃப் கப்பல் டஹிடியை அடைந்தது; மிஷனரிகள் கப்பலில் இருந்து இறங்கி மண்ணில் கால் பதித்தார்கள். எனினும் ஒரு வருடத்திற்குப் பிறகு பெரும்பாலோர் உற்சாகமிழந்ததால் தாயகம் திரும்பினார்கள். ஏழு மிஷனரிகள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
முன்னாள் கொத்தனாரான ஹென்ரி நாட் அந்த ஏழு பேரில் ஒருவர். அப்போது அவருக்கு 23 வயதுதான். அவர் அடிப்படை கல்வி மட்டுமே பயின்றிருந்தது ஆரம்பத்தில் அவர் எழுதிய கடிதங்களிலிருந்து தெளிவாகிறது. இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே டஹிடிய மொழியைக் கற்றுக்கொள்வதில் அவர் தனித்திறமை பெற்று விளங்கினார். நேர்மையானவர், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர், இனிமையானவர் என்றெல்லாம் அவரைப் பற்றி சொல்லப்பட்டது.
1801-ல் புதிதாக வந்திறங்கிய ஒன்பது மிஷனரிகளுக்கு டஹிடிய மொழியைக் கற்றுக்கொடுப்பதற்கு நாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் 28 வயது நிரம்பிய வேல்ஸ் நாட்டவரான ஜான் டேவிஸ். இவர் கெட்டிக்காரர், கனிவும் தாராள குணமும் படைத்த கடின உழைப்பாளி. சீக்கிரத்திலேயே இந்த இருவரும் சேர்ந்து டஹிடிய மொழியில் பைபிளை மொழிபெயர்க்க தீர்மானித்தார்கள்.
இமாலய பணி
டஹிடிய மொழி அதுவரை எழுத்து வடிவம் பெறாததால் அந்த மொழியில் மொழிபெயர்ப்பது இமாலய பணியாகவே இருந்தது. அம்மொழியை மிஷனரிகள் கேட்டுக் கேட்டே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களிடம் அகராதியும் இல்லை, இலக்கண புத்தகமும் இல்லை. அம்மொழியின் மூச்சொலிகள் குரல்வளை முகப்பை அடைப்பதால் ஏற்படும் நிறுத்தங்கள், அடுத்தடுத்து வரும் அநேக உயிரெழுத்துக்கள் (சில சமயங்கள் ஒரேவொரு வார்த்தையில் ஐந்து இருக்கலாம்), அற்பசொற்பமாக உபயோகிக்கப்படும் மெய்யெழுத்துக்கள் ஆகியவை மிஷனரிகளின் உற்சாகத்தை பெருமளவு தணித்தன. “பெரும்பாலான வார்த்தைகளில் உயிரெழுத்துக்கள் மட்டுமே இருந்தன, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஒலி இருந்தது” என அவர்கள் அங்கலாய்த்தார்கள். “அந்த வார்த்தைகளின் ஒலியை தேவையான துல்லியத்தோடு அவர்களால் புரிந்துகொள்ள முடியாததை” அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஏதோ கேட்டிராத ஒலிகளை கேட்பதுபோல் அவர்களுக்குத் தோன்றியது!
டஹிடிய மொழியில் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவ்வப்போது தடைசெய்யப்பட்டது, அதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று; இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் (Synonyms) இருந்தது வேறு தலைவலியாய் போனது. உதாரணமாக “ஜெபம்” என்ற சொல்லுக்கு டஹிடிய மொழியில் 70-க்கும் அதிகமான சொற்கள் இருந்தன. ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட டஹிடிய வாக்கிய அமைப்பு (syntax) மற்றொரு சவாலை முன்வைத்தது. இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் மிஷனரிகள் மெல்ல மெல்ல வார்த்தைகளைத் தொகுத்தார்கள்; இறுதியில் 50 வருடங்களுக்குப் பிறகு 10,000 வார்த்தைகள் அடங்கிய அகராதி ஒன்றை டேவிஸால் பிரசுரிக்க முடிந்தது.
போதாக்குறைக்கு டஹிடிய மொழியை எழுதுவதும் சவாலாக இருந்தது. ஏற்கெனவே உள்ள ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி எழுத மிஷனரிகள் முயன்றார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் லத்தீன் அகரவரிசை டஹிடிய ஒலிகளுக்குப் பொருந்தவில்லை. எனவே ஒலியியல் (phonetics), எழுத்துக்கூட்டல் (spelling) பேரில் தொடர் விவாதங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் புதிய எழுத்துக்கூட்டல்களை மிஷனரிகள் கண்டுபிடித்தார்கள்; ஏனெனில், தெற்கத்திய கடல் பகுதிகளில் பேசும் மொழிக்கு முதன்முதலாக எழுத்து வடிவம் கொடுத்த பெருமை இவர்களையே சேரும். இவர்களுடைய பணி பிற்பாடு தென் பசிபிக் பகுதியில் பல மொழிகளுக்கு மாதிரியாய் அமையும் என்பதை அவர்கள் அன்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அற்பசொற்ப ஏதுக்கள், அபார திறன்
மொழிபெயர்ப்பாளர்களிடம் அற்பசொற்ப புத்தகங்களே இருந்தன. டெக்ஸ்டஸ் ரிசப்டஸ்-ஐயும் (பெறப்பட்ட வாசகத்தையும்) கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளையும் அடிப்படை வாக்கியங்களாக பயன்படுத்தும்படி LMS சொன்னது. எபிரெயுவிலும், கிரேக்கிலும் இன்னும் பல அகராதிகளையும் பைபிள்களையும் அனுப்பும்படி LMS-இடம் நாட் கேட்டிருந்தார். அவற்றை அவர் பெற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெரியாது. இலக்கிய மணம் கமழும் சில படைப்புகளை வேல்ஸைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து டேவிஸ் பெற்றார். ஒரு கிரேக்க அகராதி, ஒரு எபிரெய பைபிள், கிரேக்க மொழியில் ஒரு புதிய ஏற்பாடு, செப்டுவஜின்ட் ஆகியவையாவது அவரிடம் இருந்ததாக பதிவுகள் காட்டுகின்றன.
இதற்கிடையில், மிஷனரிகளின் பிரசங்க வேலையால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள் டஹிடியில் 12 வருடங்களைக் கழித்திருந்தபோதிலும் உள்ளூர்வாசிகளில் மருந்துக்கு ஒருவரைக்கூட முழுக்காட்டவில்லை. ஓயாமல் தலைதூக்கிய உள்நாட்டு போர்களால் இறுதியில் மிஷனரிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப் போகும் நிலை ஏற்பட்டது; ஆனால் நாட் மட்டும் அங்கே தங்கிவிட்டார். சொஸைட்டி தீவுகளிலுள்ள விண்டுவர்டு தீவுகளில் ஏகாந்த மிஷனரியாக அவர் மட்டுமே கொஞ்ச காலம் இருந்தார்; ஆனால் இரண்டாம் போமாரே அரசர் அருகிலிருந்த மோரேயா தீவுக்கு ஓடிப் போனபோது இவரும் செல்ல நேர்ந்தது.
இருந்தாலும் மொழிபெயர்க்கும் வேலைக்கு நாட் முற்றுப்புள்ளி வைக்கவில்லை; ஆஸ்திரேலியாவில் டேவிஸ் இரண்டு ஆண்டுகளைக் கழித்த பிறகு நாட் உடன் மீண்டும் வந்து சேர்ந்துகொண்டார். இதற்கிடையில் நாட் கிரேக்க, எபிரெயு மொழிகளைக் கற்று, அவற்றில் கரைகண்டார். எனவே எபிரெய வேதாகமத்தின் சில பகுதிகளை டஹிடிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். உள்ளூர்வாசிகள் எளிதில் புரிந்துகொண்டு, செயல்படுவதற்கு ஏற்ற பைபிள் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மொழிபெயர்த்தார்.
பின்னர் நாட், டேவிஸுடன் சேர்ந்து லூக்கா சுவிசேஷத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்து 1814, செப்டம்பரில் முடித்தார். டஹிடிய மொழிக்கே உரிய இயல்பான நடையை அதில் அவர் வெளிக்கொணர்ந்தார்; இந்த மொழிபெயர்ப்பை டேவிஸ் மூல வாக்கியங்களோடு ஒப்பிட்டு சரிபார்த்தார். 1817-ல் இரண்டாம் போமாரே அரசர் லூக்கா சுவிசேஷத்தின் முதல் பக்கத்தை தானே தன் கையால் அச்சிடுவதற்கு விருப்பம் தெரிவித்தார். அதை மிஷனரிகள் மோரேயாவுக்கு கொண்டு வந்திருந்த கையால் இயக்கப்படும் சிறிய அச்சுப் பொறியில் அவர் அச்சிட்டார். உண்மையுள்ள டஹிடியரான டூஹாயினி பற்றி இங்கு குறிப்பிடவில்லை என்றால் டஹிடிய பைபிள் பிறந்த கதை முழுமையடையாது; இவர் மிஷனரிகள் அங்கிருந்த காலமெல்லாம் பக்க துணையாக இருந்து அந்த மொழி சம்பந்தப்பட்ட நுட்ப விவரங்களை அவர்கள் புரிந்துகொள்வதில் பெரிதும் உதவினார்.
மொழிபெயர்ப்பு முடிவுற்றது
ஆறு வருட அரும்பணிக்குப் பின்பு 1819-ல் சுவிசேஷங்கள், அப்போஸ்தல நடபடிகள், சங்கீதங்கள் ஆகிய புத்தகங்களின் மொழிபெயர்ப்பு முடிவுற்றது. புதிதாக வந்த மிஷனரிகள் கொண்டு வந்திருந்த அச்சுப் பொறி இந்தப் பைபிள் புத்தகங்களை அச்சிட்டு, விநியோகிப்பதை எளிதாக்கியது.
மொழிபெயர்த்தல், பிழை திருத்துதல், மீண்டும் திருத்தியமைத்தல் ஆகியவை மும்முரமாக நடந்தேறின. டஹிடியில் 28 வருடங்கள் வாழ்ந்த பிறகு 1825-ல் நாட் நோய்வாய்ப்பட்டார்; அப்போது இங்கிலாந்துக்கு திரும்பி வர LMS அனுமதியளித்தது. அதற்குள்ளாக கிரேக்க வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு ஏறக்குறைய முடிவடைந்திருந்தது சந்தோஷமான விஷயம். இங்கிலாந்துக்குப் பயணிக்கையிலும், அங்கு தங்கியிருக்கையிலும் அவர் தொடர்ந்து பைபிளின் பிற பகுதிகளை மொழிபெயர்த்தார். 1827-ல் நாட் மீண்டும் டஹிடி திரும்பினார். எட்டு வருடங்களுக்குப் பிறகு 1835, டிசம்பர் மாதத்தில் மொழிபெயர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 30-க்கும் அதிக ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலனாக முழு பைபிளும் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது.
1836-ல் முழுமையாக டஹிடிய பைபிளை லண்டனில் அச்சிடுவதற்காக நாட் இங்கிலாந்து திரும்பினார். 1838, ஜூன் 8-ம் தேதி டஹிடிய பைபிள் மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பை விக்டோரியா ராணிக்கு பரிசளிக்கையில் நாட்-க்கு சந்தோஷம் பிடிபடவில்லை. 40 வருடங்களுக்கு முன்பாக டஃப் கப்பலில் பயணப்பட்டு, தன் இமாலயப் பணிக்காக டஹிட்டிய கலாச்சாரத்தில் ஊறிப்போய், அப்பணியையே தன் உயிர்மூச்சாக ஏற்றுக்கொண்ட இந்த முன்னாள் கொத்தனார் இப்போது எந்தளவுக்கு இனம் புரியா சந்தோஷத்தில் கூத்தாடியிருப்பார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட் தென் பசிபிக்கை நோக்கி பயணப்பட்டார்; அப்போது டஹிடிய மொழியில் முழு பைபிளின் 3,000 பிரதிகள் வைக்கப்பட்ட 27 பெரிய மரப்பெட்டிகளை எடுத்து சென்றார். இடையே சிட்னியில் தங்கிய போது அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டார்; ஆனால் அந்த “பொக்கிஷமிருந்த” பெட்டிகளைவிட்டு அவர் எங்கும் அசையவில்லை. சுகமடைந்த பிறகு அவர் 1840-ல் டஹிடியை அடைந்தார்; டஹிடிய பைபிள்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நிஜமாகவே கப்பலை நோக்கி படையெடுத்தார்கள். 1844, மே மாதம் நாட் தனது 70-வது வயதில் டஹிடியில் உயிர்நீத்தார்.
பெரும் தாக்கம்
அவர் மறைந்தாலும் அவருடைய படைப்பு மறையவில்லை. அவருடைய மொழிபெயர்ப்பு பாலினேசிய மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டஹிடிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்ததால் அந்த மொழி அழிந்துவிடாமல் மிஷனரிகளால் காக்க முடிந்தது. “தரமான, இலக்கண சுத்தமான டஹிடிய மொழியை நாட் பாதுகாத்தார். சுத்தமான டஹிடிய மொழியை கற்றுக்கொள்வதற்கு எப்போதும் பைபிளின் உதவியை நாடுவது அவசியம்” என ஓர் எழுத்தாளர் சொன்னார். இந்த மொழிபெயர்ப்பாளர்களின் அயராத உழைப்பால், ஆயிரக்கணக்கான வார்த்தைகள் மறைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்குப் பின்பு எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாட் மொழிபெயர்த்த சிறப்புமிக்க டஹிடிய பைபிள் டஹிடிய மொழியின் தலைசிறந்த படைப்பாகும், இதை எல்லாரும் ஏகமனதாய் ஆமோதிக்கிறார்கள்.”
இந்த முக்கிய படைப்பு டஹிடியர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கவில்லை; தென் பசிபிக் மொழிகளில் பிற மொழிபெயர்ப்புகள் உருவாவதற்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. உதாரணமாக, குக் தீவுகள், சமோவா ஆகியவற்றிலுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் இதை மாதிரியாக வைத்தே மொழிபெயர்த்தார்கள். “சொல்லப்போனால், நாட் அவர்களின் மொழிபெயர்ப்பை நான் கவனமாக ஆராய்ந்து அதையே பின்பற்றுகிறேன்” என ஒரு மொழிபெயர்ப்பாளர் சொன்னார். இன்னொரு மொழிபெயர்ப்பாளர், ‘தாவீதின் சங்கீதங்களில் ஒன்றை சமோவன் மொழியில் மொழிபெயர்க்கையில் தன் முன்பாக சங்கீத புத்தகங்களின் எபிரெய தொகுப்பையும், ஆங்கில மொழிபெயர்ப்பையும், டஹிடிய மொழிபெயர்ப்பையும்’ வைத்திருந்ததாக சொல்லப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த ‘அவேக்கனிங்’ இயக்கத்தாரின் முன்மாதிரியைப் பின்பற்றி டஹிடியிலிருந்த மிஷனரிகள் உற்சாகத்துடன் படிப்பறிவை முன்னேற்றுவித்தார்கள். சொல்லப்போனால், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக டஹிடியர்களிடம் இருந்த ஒரேவொரு புத்தகம் பைபிள் மட்டுமே. இவ்வாறு இது டஹிடியர்களின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது.
எபிரெய, கிரேக்க வேதாகமங்களில் அநேக இடங்களில் கடவுளுடைய பெயர் இடம்பெற்றிருப்பது நாட் மொழிபெயர்ப்பின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். இதனால் இன்று யெகோவாவின் பெயர் டஹிடியிலும் அதன் தீவுகளிலும் மூலைமுடுக்கெல்லாம் பிரபலமாகியிருக்கிறது. சில புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளிலும்கூட இப்பெயர் காணப்படுகிறது. எனினும் இப்போது கடவுளுடைய பெயர் முக்கியமாய் யெகோவாவின் சாட்சிகளோடும் அவர்களுடைய வைராக்கியமான பிரசங்க வேலையோடும் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது; இவ்வேலையில், நாட்-ம் அவருடைய உதவியாளர்களும் சேர்ந்து மொழிபெயர்த்த டஹிடிய பைபிளை சாட்சிகள் பெருமளவு உபயோகிக்கிறார்கள். இன்று மனிதவர்க்கத்தில் பெரும்பாலோருக்கு அவரவர் மொழியில் கடவுளுடைய வார்த்தை கிடைத்திருப்பதற்கு நாம் எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை ஹென்ரி நாட் போன்ற மொழிபெயர்ப்பாளர்களின் அயராத உழைப்பு நமக்கு நினைப்பூட்டுகிறது.
[பக்கம் 26-ன் படங்கள்]
1815-ல் முதலில் வெளியிடப்பட்ட டஹிடிய பைபிள். யெகோவாவின் பெயர் காணப்படுகிறது
ஹென்ரி நாட் (1774-1844), டஹிடிய பைபிளின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்
[படங்களுக்கான நன்றி]
டஹிடிய பைபிள்: Copyright the British Library (3070.a.32); ஹென்ரி நாட் மற்றும் கடிதம்: Collection du Musée de Tahiti et de ses Îles, Punauia, Tahiti; மதபோதனை புத்தகம்: With permission of the London Missionary Society Papers, Alexander Turnbull Library, Wellington, New Zealand
[பக்கம் 28-ன் படம்]
1801-ம் வருட டஹிடிய-வேல்ஸ் இரு மொழி மதபோதனை புத்தகத்தில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது
[படத்திற்கான நன்றி]
With permission of the London Missionary Society Papers, Alexander Turnbull Library, Wellington, New Zealand
[பக்கம் 29-ன் படம்]
பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள வாஹினி தீவில் யெகோவாவின் பெயர் முன்புறத்தில் காணப்படும் புராட்டஸ்டன்ட் சர்ச்
[படத்திற்கான நன்றி]
Avec la permission du Pasteur Teoroi Firipa