யெகோவாவின் நாள் நெருங்கி வருகையில் ஜனங்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
“கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” —2 பேதுரு 3:9.
1, 2. (அ) யெகோவா இன்று ஜனங்களை எவ்வாறு கருதுகிறார்? (ஆ) என்ன கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்?
‘சகல தேசத்து ஜனங்களையும் சீஷராக்கும்’ வேலை யெகோவாவின் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 28:19) நாம் இந்த வேலையை நிறைவேற்றி ‘கர்த்தருடைய பெரிய நாளுக்காக’ காத்திருக்கும் இந்நேரத்தில், ஜனங்களை அவர் நோக்குவதுபோல் நாம் நோக்க வேண்டும். (செப்பனியா 1:14) அவர் எவ்வாறு நோக்குகிறார்? அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) மனந்திரும்பக்கூடிய தனி ஆட்களாக மனிதரை கடவுள் கருதுகிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” (1 தீமோத்தேயு 2:4) அதுமட்டுமல்ல, ‘துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைக்கையில்’ அதில் அவர் இன்பமும் காண்கிறார்!—எசேக்கியேல் 33:11.
2 ஜனங்களை யெகோவா எப்படி கருதுகிறாரோ அதேவிதத்தில் நாமும் கருதுகிறோமா? அவரைப் போல், எல்லா இனத்தாரிலும் தேசத்தாரிலும் இருக்கும் ஆட்கள் எதிர்காலத்தில் ‘அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாக’ மாறுவார்கள் என நாம் கருதுகிறோமா? (சங்கீதம் 100:3; அப்போஸ்தலர் 10:34, 35) கடவுளுடைய நோக்குநிலையே நமக்கும் இருக்க வேண்டிய அவசியத்தைக் காட்டும் இரண்டு உதாரணங்களை நாம் கவனிக்கலாம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அழிவு அருகாமையில் இருந்தது, இந்த உண்மையைப் பற்றி யெகோவாவின் ஊழியர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. யெகோவாவின் மகா நாளுக்காக நாம் காத்திருக்கையில் இந்த உதாரணங்களை முக்கியமாய் நம் கவனத்தில் வைக்க வேண்டும்.
ஆபிரகாமுக்கு யெகோவாவின் நோக்குநிலை இருந்தது
3. சோதோம் கொமோரா பட்டணங்களில் வசித்தவர்களைப் பற்றி யெகோவாவின் நோக்குநிலை என்னவாக இருந்தது?
3 முதல் உதாரணம், உண்மையுள்ள கோத்திர பிதாவாகிய ஆபிரகாமையும், அக்கிரமங்கள் நிறைந்த சோதோம் கொமோரா பட்டணங்களையும் பற்றியது. ‘சோதோம் கொமோராவின் கூக்குரலை’ யெகோவா கேட்டபோது, அந்த நகரங்களையும் அவற்றில் வசித்த அனைவரையும் அவர் உடனடியாக அழிக்கவில்லை. முதலில் அவர் விசாரணை செய்தார். (ஆதியாகமம் 18:20, 21) தேவதூதர்கள் இருவர் சோதோமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு நீதியுள்ள மனிதனாகிய லோத்தின் வீட்டில் தங்கினார்கள். தேவதூதர்கள் வந்து சேர்ந்த இரவில், அந்த தூதர்களுடன் ஓரினச் சேர்க்கை கொள்ளும் வெறியுடன் “பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து வீட்டைச் சூழ்ந்துகொண்”டார்கள். அந்தப் பட்டணத்தில் வசித்தவர்களின் வக்கிர புத்தி காரணமாக, அது அழிவுக்கு தகுதியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. எனினும், லோத்துவிடம் அந்தத் தூதர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.” அந்தப் பட்டணங்களில் வசித்த சிலரைக் காப்பாற்றுவதற்கு யெகோவா வழிதிறந்தார்; ஆனால் முடிவில், லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும் மாத்திரமே அந்த அழிவைத் தப்பிப் பிழைத்தார்கள்.—ஆதியாகமம் 19:4, 5, 12, 16, 23-26.
4, 5. சோதோமில் வசித்தவர்களுக்காக ஆபிரகாம் ஏன் மன்றாடினார், ஜனங்களைப் பற்றிய அவரது நோக்குநிலை யெகோவாவின் நோக்குநிலையோடு ஒத்திருந்ததா?
4 இப்போது, சோதோம் கொமோரா பட்டணங்களைப் பார்வையிடுவதற்கு தாம் கொண்டிருந்த நோக்கத்தை யெகோவா வெளிப்படுத்திய சமயத்திற்கு நாம் செல்லலாம். அந்த சமயத்தில்தான் ஆபிரகாம் இவ்வாறு வேண்டினார்: “அந்தப் பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக [“உம்மால் நினைத்துப் பார்க்கவும் முடியாதது,” NW]; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக [“உம்மால் நினைத்துப் பார்க்கவும் முடியாதது,” NW]; சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ”? என்றார். “உம்மால் நினைத்துப் பார்க்கவும் முடியாதது” என ஆபிரகாம் இருமுறை சொன்னார். துன்மார்க்கரோடு நீதிமானை யெகோவா அழிக்க மாட்டாரென தன் அனுபவத்திலிருந்து ஆபிரகாம் அறிந்திருந்தார். சோதோமில் ‘ஐம்பது நீதிமான்களைக் கண்டால்’ அவர்கள் நிமித்தம் அந்த இடத்தை அழிப்பாரா என யெகோவாவிடம் ஆபிரகாம் கேட்டார்; அழிக்க மாட்டாரென யெகோவா சொன்னபோது, ஆபிரகாம் அந்த எண்ணிக்கையை பத்து வரை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டே வந்தார்.—ஆதியாகமம் 18:22-33.
5 ஆபிரகாமின் வேண்டுகோள்கள் தமது சொந்த நோக்குநிலையிலிருந்து மாறுபட்டதாக இருந்திருந்தால், யெகோவா அவற்றிற்கு செவிகொடுத்திருப்பாரா? நிச்சயமாகவே செவிகொடுத்திருக்க மாட்டார். ‘தேவனுடைய சிநேகிதனாக’ யெகோவாவின் நோக்குநிலையை அறிந்து ஆபிரகாம் செயல்பட்டார். (யாக்கோபு 2:23) யெகோவா தமது கவனத்தை சோதோம் கொமோரா மீது திருப்பியபோது, ஆபிரகாமின் வேண்டுகோள்களை கவனத்தில் வைக்க மனமுள்ளவராக இருந்தார். ஏன்? ஏனெனில், நம்முடைய பரம தகப்பன், ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்.’
ஜனங்களைப் பற்றிய யோனாவின் நோக்குநிலை முற்றிலும் எதிர்மாறாக இருந்தது
6. யோனாவின் எச்சரிப்பைக் கேட்ட நினிவே ஜனங்கள் என்ன செய்தார்கள்?
6 இப்போது இரண்டாவது உதாரணமாகிய யோனாவைப் பற்றி கவனியுங்கள். இந்த உதாரணத்தில் நினிவே நகரம் அழிவுக்காக நியமிக்கப்பட்டது. அந்நகரத்தின் அக்கிரமம் ‘யெகோவாவின் சமுகத்தில் வந்து எட்டினது’ என்று யாவரறிய அறிவிக்கும்படி யோனா தீர்க்கதரிசிக்கு சொல்லப்பட்டது. (யோனா 1:2) அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட, நினிவே ஒரு பெரிய நகரமாக விளங்கியது, ‘அதை கால்நடையாக கடக்க மூன்றுநாள் எடுத்தது.’ (NW) கடைசியாக யோனா கீழ்ப்படிந்து, நினிவேக்குள் பிரவேசித்தபோது, “இன்னும் நாற்பதுநாள் உண்டு அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்” என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார். அந்த எச்சரிப்புக்கு செவிசாய்த்து, “நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறி . . . இரட்டுடுத்திக் கொண்டார்கள்.” நினிவேயின் ராஜாவுங்கூட மனந்திரும்பினார்.—யோனா 3:1-6.
7. நினிவே ஜனங்களின் மனந்திரும்புதலை யெகோவா எவ்வாறு கருதினார்?
7 அது சோதோம் பட்டணத்தார் நடந்துகொண்ட விதத்திற்கு நேர்மாறாக இருந்தது! மனந்திரும்பின நினிவே ஜனங்களை யெகோவா எவ்வாறு கருதினார்? யோனா 3:10 இவ்வாறு சொல்கிறது: “தேவன் . . . தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.” நினிவே ஜனங்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பியதால், யெகோவா அவர்களை நடத்தும் விதத்தை மாற்றிக்கொண்டார் என்ற கருத்தில் யெகோவா ‘மனஸ்தாபப்பட்டார்’ என்று குறிப்பிடப்படுகிறது. கடவுளுடைய தராதரங்கள் மாறவில்லை, ஆனால், நினிவே நகரத்தார் மனந்திரும்பியதைப் பார்த்ததால் யெகோவா தமது தீர்மானத்தை மாற்றிக்கொண்டார்.—மல்கியா 3:6.
8. யோனா ஏன் கோபித்துக்கொண்டார்?
8 நினிவே அழிக்கப்படாது என்று யோனா அறிந்தபோது, காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் அவர் கண்டாரா? இல்லை. ஏனெனில் வசனம் இவ்வாறு சொல்கிறது: ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவர் கடுங்கோபங்கொண்டார்.’ யோனா வேறு என்ன செய்தார்? அந்த விவரம் இவ்வாறு சொல்கிறது: அவர் “கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.” (யோனா 4:1, 2) யெகோவாவின் பண்புகளைப் பற்றி யோனா அறிந்திருந்தார். எனினும் இந்தச் சமயத்தில், அவர் கோபித்துக்கொண்டார், மனந்திரும்பிய நினிவே நகரத்தாரை கடவுள் கருதிய விதமாக அவர் கருதவில்லை.
9, 10. (அ) யெகோவா என்ன பாடத்தை யோனாவுக்கு புகட்டினார்? (ஆ) நினிவே ஜனங்களைப் பற்றிய தன் எண்ணத்தை யோனா சரிசெய்து கொண்டார் என்று நாம் ஏன் யூகிக்கலாம்?
9 யோனா நினிவே பட்டணத்தை விட்டு வெளியேறி, “நகரத்துக்குச் சம்பவிக்கப் போகிறதைத் தான் பார்க்குமட்டும்” ஒரு கூடாரத்தைப் போட்டு, அதன் நிழலிலே உட்கார்ந்தார். யோனாவுக்கு நிழல் தர ஓர் ஆமணக்குச் செடி வளரும்படி யெகோவா செய்தார். எனினும், அடுத்த நாள் அந்தச் செடி உலர்ந்து போனது. அதைக் கண்ட யோனாவுக்கு கோபம் வந்தது. இதைக் கவனித்த யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீ . . . ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ”? (யோனா 4:5-11) ஜனங்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார் என்பதைக் குறித்து யோனாவுக்கு எப்பேர்ப்பட்ட ஒரு பாடம்!
10 நினிவே நகரத்து ஜனங்களுக்காக பரிதபித்ததைக் குறித்து கடவுள் சொன்னதற்கு யோனாவின் பிரதிபலிப்பு என்னவென்பது பதிவு செய்யப்படவில்லை. எனினும், மனந்திரும்பின நினிவே மக்களைப் பற்றிய தன் எண்ணத்தை இந்தத் தீர்க்கதரிசி சரிசெய்து கொண்டார் என்பது தெளிவாயுள்ளது. தேவ ஆவியால் ஏவப்பட்ட இந்த விவரத்தைப் பதிவு செய்வதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தியதிலிருந்து நாம் இந்த முடிவுக்கு வருகிறோம்.
உங்கள் மனப்பான்மை எப்படிப்பட்டது?
11. இன்று வாழும் ஜனங்களை ஒருவேளை ஆபிரகாம் எவ்வாறு கருதியிருப்பார்?
11 இன்று மற்றொரு அழிவை நாம் எதிர்ப்படப் போகிறோம்; அது, யெகோவாவின் மகா நாளில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு வரப்போகும் அழிவாகும். (லூக்கா 17:26-30; கலாத்தியர் 1:4; 2 பேதுரு 3:10) ஆபிரகாம் இன்று உயிரோடிருந்தால், சீக்கிரத்தில் அழியப்போகும் இந்த உலகத்தில் வாழும் ஜனங்களை எவ்வாறு கருதியிருப்பார்? ‘ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை’ இன்னும் கேட்டிராதவர்களைப் பற்றி பெரும்பாலும் அக்கறையுடையவராக இருந்திருப்பார். (மத்தேயு 24:14) சோதோமில் ஒருவேளை நீதிமான்கள் இருக்கலாம் என்று எண்ணி அவர்களுக்காக கடவுளிடம் ஆபிரகாம் மறுபடியும் மறுபடியுமாக மன்றாடினார். அது போலவே, நாமும் மக்கள்மீது உண்மையான அக்கறை காட்டுகிறோமா? மனந்திரும்பி கடவுளைச் சேவிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், சாத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிற அவர்கள் இவ்வுலகத்தின் வழிகளை விட்டு விலகி கடவுளைச் சேவிக்கும் ஆட்களாக மாறலாம்.—1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 18:2-4.
12. ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஜனங்கள் மீது யோனாவைப் போன்ற மனப்பான்மை ஏன் நமக்கும் எளிதில் தொற்றிக்கொள்ளலாம், இதற்காக நாம் என்ன செய்யலாம்?
12 அக்கிரமத்துக்கு முடிவு வரவேண்டும் என ஆவலுடன் காத்திருப்பது சரியானதே. (ஆபகூக் 1:2, 3) இருப்பினும், யோனாவுக்கு இருந்ததைப் போன்ற மனப்பான்மை எளிதில் நமக்கும் வந்துவிடலாம்; அதாவது, ஒருவேளை மனந்திரும்பக்கூடிய ஜனங்களின் நலனில் நாம் அக்கறையற்று இருக்கலாம். அதுவும் முக்கியமாக, ஆர்வம் காட்டாத, எதிர்க்கிற, ஏன் சண்டைக்கும் வருகிற ஆட்களை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சதா சந்திக்கும்போது இத்தகைய மனப்பான்மை நம்மை தொற்றிக்கொள்ளலாம். இந்தப் பொல்லாத உலகிலிருந்து யெகோவா இனி கூட்டிச் சேர்க்கப் போகிறவர்களை நாம் ஒருவேளை அசட்டை செய்யலாம். (ரோமர் 2:4) கவனமாக சுய பரிசோதனை செய்து பார்க்கையில், நினிவே நகரத்தார் மீது யோனாவுக்கு ஆரம்பத்தில் இருந்த அதே மனப்பான்மை நமக்கும் கொஞ்சம் இருக்கிறதென்று தெரிந்தால், யெகோவாவின் நோக்குநிலைக்கு ஏற்ப நம்முடைய நோக்குநிலையை சரிசெய்துகொள்ள உதவும்படி நாம் ஜெபிக்கலாம்.
13. இன்றுள்ள ஜனங்களைப் பற்றி யெகோவா கவலைப்படுகிறார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
13 இன்னும் தம்மை சேவிக்க ஆரம்பிக்காதவர்கள் மீது யெகோவா அக்கறையாக இருக்கிறார்; தமக்கு ஒப்புக்கொடுத்தவர்களின் வேண்டுதல்களையும் அவர் கேட்கிறார். (மத்தேயு 10:11) உதாரணமாக, அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நியாயஞ் செய்வார்.” (லூக்கா 18:7, 8) மேலும், யெகோவா எல்லா வாக்குறுதிகளையும் நோக்கங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்றுவார். (ஆபகூக் 2:3) பூமியிலிருந்து சகல பொல்லாங்கையும் நீக்குவதும் இதில் அடங்கும். நினிவே வாசிகள் மறுபடியும் அக்கிரமங்களை செய்ய ஆரம்பித்தபோது அவர் அந்நகரத்தை அழித்தது போலவே சீக்கிரத்தில் செயல்படுவார்.—நாகூம் 3:5-7.
14. யெகோவாவின் மகா நாளுக்குக் காத்திருக்கையில் நாம் என்ன செய்து கொண்டிருக்க வேண்டும்?
14 யெகோவாவின் மகா நாளில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அழிக்கப்படும் வரையில் நாம் பொறுமையுடன் காத்திருப்போமா? அதுவரை அவருடைய சித்தத்தைச் செய்வதில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவோமா? யெகோவாவின் நாள் வரும் முன்பு பிரசங்க ஊழியம் இன்னும் எந்தளவுக்கு செய்யப்படும் என்பதைப் பற்றிய நுட்ப விவரங்கள் நமக்குத் தெரியாது, ஆனால் முடிவு வருவதற்கு முன்பு ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி, கடவுளை திருப்தி செய்யும் அளவுக்கு குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் பிரசங்கிக்கப்படும் என்பதை நாம் நிச்சயமாகவே அறிந்திருக்கிறோம். யெகோவா தொடர்ந்து தமது வீட்டை மகிமையால் நிரப்பும் வகையில் இனிமேலும் கூட்டிச் சேர்க்கப் போகிற ‘விரும்பத்தக்கவர்களைப்’ பற்றி நிச்சயமாகவே நாம் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.—ஆகாய் 2:7, NW.
நம் நோக்குநிலை நம் செயல்களில் தெளிவாக தெரிகிறது
15. பிரசங்க வேலைக்கான நமது போற்றுதலை எது அதிகரிக்கலாம்?
15 ராஜ்ய செய்திக்கு அதிக ஆர்வம் காண்பிக்காத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோமென்றும், ராஜ்ய அறிவிப்பாளர் அதிகமாய்த் தேவைப்படும் இடத்திற்கு மாறிச் செல்ல நம்முடைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனுமதிக்கிறதில்லை என்றும் வைத்துக்கொள்வோம். முடிவு வருவதற்கு முன்பு நம்முடைய பிராந்தியத்தில் ஒருவேளை பத்து பேரைக் கண்டுபிடிக்கலாம் என்றும் வைத்துக்கொள்வோம். அந்த பத்து பேரை தேடிக் கண்டுபிடிப்பது தகுந்ததென்று உணருகிறோமா? இயேசு ‘திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) பைபிளைப் படிப்பதன் மூலமும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளைக் கவனமாய் வாசிப்பதன் மூலமும், இந்த உலகத்தின் நெருக்கடி நிலையை நாம் தெள்ளத் தெளிவாக காணலாம். இதனால், நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய அவசியத்தை இன்னுமதிகம் நாம் உணரலாம். மேலும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் வழங்கப்படும் பைபிள் சார்ந்த விஷயங்களின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்துவது, அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியத்தில் பிரசங்கிக்கையில் இன்னும் நயமாக பேச நமக்கு உதவக்கூடும்.—மத்தேயு 24:45-47; 2 தீமோத்தேயு 3:14-17.
16. ஊழியத்தில் நாம் எவ்வாறு அதிக பலனடையலாம்?
16 உயிரளிக்கும் பைபிள் செய்திக்கு செவிசாய்க்கப் போகிறவர்கள் மீது நமக்கிருக்கும் அக்கறை, ஊழியத்தில் அவர்களை வித்தியாசமான நேரங்களிலும் விதங்களிலும் எவ்வாறு அணுகலாம் என சிந்திக்கும்படி நம்மை தூண்டும். ஊழியம் செய்யும்போது நிறைய பேரை நாம் வீட்டில் சந்திக்க முடிவதில்லையா? அப்படியானால், நாம் சாட்சிபகரும் நேரங்களையும் இடங்களையும் மாற்றிக்கொண்டால் ஊழியத்தில் அதிக பலனடையலாம். மீன் பிடிப்பவர்கள், மீன் கிடைக்கும் சமயத்தில்தான் செல்கிறார்கள். ஆவிக்குரிய மீன்பிடிப்பு ஊழியத்திலும் அவ்வாறே நாம் செய்ய முடியுமா? (மாற்கு 1:16-18) சாயங்கால வேளையில் சாட்சி பகர்தல், சட்டம் அனுமதித்தால் தொலைபேசி மூலம் சாட்சி பகர்தல் ஆகியவற்றை முயற்சி செய்யலாம் அல்லவா? வண்டிகள் நிற்கும் இடங்கள், லாரி டிரைவர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள், பெட்ரோல் பங்க்குகள், கடைகள் ஆகியவை வளமான ‘மீன்பிடி தலங்களாக’ இருப்பதை சிலர் கண்டிருக்கின்றனர். சந்தர்ப்ப சாட்சி பகருவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்துவது, ஜனங்களை ஆபிரகாம் கருதிய விதமாகவே நாமும் கருதுகிறோம் என்பதைக் காட்டும்.
17. அந்நிய நாடுகளில் சேவிக்கும் மிஷனரிகளையும் மற்றவர்களையும் என்ன வழிகளில் நாம் உந்துவிக்கலாம்?
17 லட்சக்கணக்கானோருக்கு ராஜ்ய செய்தி இன்னும் எட்டவில்லை. எனவே பிரசங்கிப்பு வேலை செய்வது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் அத்தகைய ஆட்களிடம் நாம் அக்கறை காட்ட முடியுமா? உதாரணத்திற்கு, வெளிநாட்டில் சேவை செய்யும் மிஷனரிகள் அல்லது முழுநேர ஊழியர்களை நமக்குத் தெரியுமா? அப்படியானால், அவர்களுடைய ஊழியத்தைப் பாராட்டி அவர்களுக்கு நாம் கடிதங்களை எழுதுவது இவ்விஷயத்தில் உதவியாக இருக்கலாம். ஜனங்களிடம் அக்கறை காட்டுகிறோம் என இதை வைத்து எப்படி சொல்லலாம்? உற்சாகமூட்டியும் பாராட்டியும் கடிதங்கள் எழுதுவது, அவர்கள் தங்கள் மிஷனரி வேலையை தொடர்ந்து செய்ய பலப்படுத்தும். இவ்வாறு இன்னும் அதிகமான ஜனங்கள் சத்தியத்தை அறியும் அறிவை அடைய உதவப்படுவார்கள். (நியாயாதிபதிகள் 11:40, NW) மிஷனரிகளுக்காகவும் மற்ற நாடுகளில் சத்தியத்திற்காக வாஞ்சையோடு இருப்பவர்களுக்காகவும் நாம் ஜெபிக்கலாம். (எபேசியர் 6:18-20) அக்கறை காட்டுவதற்கு மற்றொரு வழி, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய ஊழியத்திற்கு நன்கொடை வழங்குவதாகும்.—2 கொரிந்தியர் 8:13, 15; 9:6, 7.
நீங்கள் இடம் மாறிச் செல்ல முடியுமா?
18. தாங்கள் வசிக்கும் நாட்டில் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க கிறிஸ்தவர்கள் சிலர் என்ன செய்திருக்கிறார்கள்?
18 ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குச் சென்றவர்கள், அவ்வாறு தியாகம் செய்ததற்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் மற்ற சாட்சிகளோ, தங்கள் சொந்த நாட்டில் இருந்துகொண்டே, மற்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருப்போருக்கு ஆவிக்குரிய உதவியளிப்பதற்காக மற்றொரு மொழியைக் கற்றிருக்கிறார்கள். நிச்சயமாகவே அத்தகைய முயற்சிகள் பலனளித்திருக்கின்றன. உதாரணமாக, அ.ஐ.மா. டெக்ஸஸிலுள்ள ஒரு நகரத்தில் சீனர்களுக்கு உதவும் ஏழு சாட்சிகள், 2001-ன்போது கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கு 114 ஆட்களை வரவேற்றார்கள். அத்தகைய பிற மொழி தொகுதிகளுக்கு உதவி செய்கிறவர்கள் தங்கள் வயல்கள் அறுவடைக்கு ஆயத்தமாயிருப்பதை கண்டிருக்கின்றனர்.—மத்தேயு 9:37, 38.
19. ராஜ்ய பிரசங்க ஊழியத்தை முன்னேற்றுவிக்க அயல் நாட்டுக்கு இடம் மாறிச் செல்ல நீங்கள் சிந்திக்கையில் என்ன செய்வது தகுந்தது?
19 ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகமாய் தேவைப்படும் ஓர் இடத்திற்கு மாறிச் செல்வதற்கு ஏற்ற சூழ்நிலை உங்களுக்கு இருப்பதாக நீங்களும் உங்கள் குடும்பமும் ஒருவேளை உணரலாம். அப்படியானால், முதலில் ‘உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்ப்பது’ ஞானமாயுள்ளது. (லூக்கா 14:30) முக்கியமாக, அயல்நாட்டிற்கு மாறிச்செல்ல ஒருவர் திட்டமிடுகையில் இப்படி செய்வது மிக அவசியம். அவ்வாறு செய்ய நினைக்கும் ஒருவர் பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்வது நல்லது: ‘என் குடும்பத்திற்கு தேவையான பண உதவியளிக்க முடியுமா? தகுந்த விசா கிடைக்குமா? அந்த நாட்டின் மொழி எனக்கு தெரியுமா, அல்லது அதைக் கற்றுக்கொள்ள எனக்கு மனமிருக்கிறதா? அங்குள்ள சீதோஷண நிலையையும் நாகரிகத்தையும் பற்றி யோசித்துவிட்டேனா? அந்த நாட்டிலுள்ள சக விசுவாசிகளுக்கு பாரமாயிராமல், “பக்க பலமாக” என்னால் இருக்க முடியுமா?’ (கொலோசெயர் 4:10, 11, NW) ஒருவேளை இடம் மாறிச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், அந்நாட்டில் எந்தளவு தேவையுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு அந்நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு எழுதுவது பொருத்தமானது.a
20. அந்நிய நாட்டிலிருக்கும் சக விசுவாசிகளின் நன்மைக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் ஓர் இளம் கிறிஸ்தவர் எவ்வாறு தன்னை அளித்தார்?
20 ஜப்பானில் ராஜ்ய மன்றங்கள் கட்டுவதில் ஒரு கிறிஸ்தவர் உதவி செய்து வந்தார். பராகுவேயில் ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு திறம்பட்ட வேலையாட்கள் தேவைப்பட்டதை அவர் அறிந்தார். தான் மணமாகாதவராகவும் துடிப்புமிக்க இளைஞராகவும் இருந்ததால், அந்த நாட்டுக்கு குடிமாறிச் சென்றார். அந்தக் கட்டுமான வேலையில் எட்டு மாதங்கள் பணியாற்றினார்; அவர் மட்டுமே அங்கு முழுநேர ஊழியராக இருந்தார். அங்கு அவர் தங்கியிருந்தபோது, ஸ்பானிய மொழியைக் கற்று பைபிள் படிப்புகளை நடத்தினார். அந்த நாட்டில் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு அதிக தேவை இருப்பதை கண்டார். அவர் ஜப்பானுக்குத் திரும்பி வந்தபோதிலும், விரைவில் பராகுவேக்கு மறுபடியும் சென்று, அதே ராஜ்ய மன்றத்திற்குள் ஆட்களை கூட்டிச் சேர்ப்பதற்கு உதவி செய்தார்.
21. யெகோவாவின் மகா நாளுக்காக காத்திருக்கும்போது, நம்முடைய முக்கிய அக்கறையும் நோக்குநிலையும் என்னவாக இருக்க வேண்டும்?
21 தமது சித்தத்திற்கு இசைவாக பிரசங்க ஊழியம் முழுமையாக செய்து முடிக்கப்படுவதை கடவுள் பார்த்துக்கொள்வார். இன்று, ஆவிக்குரிய கடைசி அறுவடையை அவர் விரைவுபடுத்துகிறார். (ஏசாயா 60:22) ஆகவே, யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில், அறுப்பு வேலையில் நாம் ஆர்வத்துடன் பங்குகொள்வோமாக. அதோடு, ஜனங்களை நமது அன்பான கடவுள் எவ்வாறு நோக்குகிறாரோ அவ்வாறே நாமும் நோக்குவோமாக.
[அடிக்குறிப்பு]
a பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு மாறிச் செல்வது எல்லா சமயத்திலும் பிரயோஜனமாக இல்லை. அவ்வாறு செய்வது, அத்தகைய சூழ்நிலைமைகளில் விவேகமாய் ஊழியம் செய்து வரும் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கையில், ஆட்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• சோதோமில் ஒருவேளை வாழ்ந்து வந்த நீதிமான்களைப் பற்றிய ஆபிரகாமின் கருத்து என்னவாக இருந்தது?
• மனந்திரும்பிய நினிவே ஜனங்களை யோனா எவ்வாறு கருதினார்?
• நற்செய்தியை இன்னும் கேட்டிராத ஆட்களைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையே நமக்கும் இருக்கிறதென்று நாம் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 16-ன் படம்]
மக்களை யெகோவா கருதிய விதமாகவே ஆபிரகாமும் கருதினார்
[பக்கம் 17-ன் படம்]
மனந்திரும்பிய நினிவே ஜனங்களைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையை யோனா பெற்றார்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜனங்கள் மீதுள்ள அக்கறை, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பல்வேறு நேரங்களையும் முறைகளையும் சிந்தித்துப் பார்க்க நம்மை தூண்டுகிறது