ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த சந்தோஷமான பலன்
கடைசி நாட்களில் “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். அதனால்தான், இன்று உலகின் பல இடங்களில், ராஜ்ய நற்செய்தியிடம் பொதுவாக ஜனங்கள் ஆர்வமே காட்டுவதில்லை. மதத்தைப் பற்றி பேசினாலே சிலருக்கு எட்டிக்காயாக கசக்கிறது.—மத்தேயு 24:12, 14.
இருந்தாலும், ராஜ்ய பிரஸ்தாபிகள் விசுவாசத்தோடும் பொறுமையோடும் இந்த சவாலை வெற்றிகரமாக சமாளித்து வருகிறார்கள்; இதைத்தான் செக் குடியரசிலிருந்து வந்த பின்வரும் அனுபவம் காண்பிக்கிறது.
மூடியிருந்த கதவுக்கு வெளியே நின்றவாறு இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ஒரு பெண்ணிடம் பேசினார்கள். கொஞ்ச நேரம் கழித்து, அந்தக் கதவு லேசாக திறந்தது, ஒரு கை மட்டும் கதவிடுக்கு வழியே வந்தது, அந்த சாட்சிகள் அளித்த காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை எடுத்துக்கொண்டது. “நன்றி” என்றது அந்தப் பெண்ணின் குரல், பிறகு கதவு அடைக்கப்பட்டது. “மறுபடியும் இந்த வீட்டிற்கு போக வேண்டுமா?” என்று அந்த சாட்சிகள் யோசித்தார்கள். அதில் ஒருவர் பயனியர், அதாவது முழுநேர ஊழியர்; அவர் அந்த வீட்டிற்கு மறுபடியும் போக முடிவு செய்தார்; ஆனால் திரும்பவும் அதேபோல நடந்தது; இப்படியே ஒரு வருடம் தொடர்ந்தது.
தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டுமென தீர்மானித்த அந்தப் பயனியர் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபித்தார். அடுத்த முறை பத்திரிகைகளை அளிக்கும்போது, “நீங்க எப்படி இருக்கீங்க? இந்தப் பத்திரிகைகளெல்லாம் உங்களுக்கு பிடிச்சுதா?” என்று அந்தப் பெண்ணிடம் சிநேகப்பான்மையோடு கேட்டார். ஆரம்பத்தில் எந்தப் பதிலும் வரவில்லை, ஆனால் போகப் போக, அந்தப் பெண் கொஞ்சம் சிநேகப்பான்மையாக நடக்க ஆரம்பித்தாள். ஒரு முறை அவள் கதவை அகலமாக திறந்தாள், ஆனாலும் சிறிது நேரம்தான் பேசினாள்.
கதவருகே நின்று கொண்டு பேசுவதற்கு அந்தப் பெண் தயங்கியதால், அவளை சந்திக்கும் நோக்கம் பற்றியும் பைபிள் படிப்புக்கான ஏற்பாடு பற்றியும் விளக்கமாக ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வேண்டுமென அந்தப் பயனியர் தீர்மானித்தார். கடைசியில், ஒன்றரை வருடமாக பொறுமையுடன் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது, ஆம், அந்தப் பெண்ணோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடிந்தது. அந்தப் பெண் பிற்பாடு சொன்னாள்: “பத்திரிகைகளை நீங்க எனக்கு கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்தே நான் கடவுளை நம்பத் தொடங்கிட்டேன்.” இதைக் கேட்ட பயனியர் ஆச்சரியமடைந்தாலும், உற்சாகமும் அடைந்தார்.
உண்மைதான், ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையில் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் இருந்தால் சந்தோஷமான பலன் கிடைக்கும்.—மத்தேயு 28:19, 20.