“பொறுமையாயிருங்கள்”
1 சாத்தானுடைய பழைய ஒழுங்கு முறைக்கு சாவுமணி அடிக்கும் நேரம் நெருங்குகிறது. ஆகவே யெகோவாவுடைய இரட்சிப்பின் நாளுக்கு காத்திருக்கும் நமக்கு “பொறுமை” மிகவும் அவசியம். யெகோவாவின் அரசுரிமையைப் பற்றிய விவாதமே இன்றைக்கு அதிமுக்கியமான விஷயம்; இதிலிருந்து நம்முடைய கவனத்தை திசைத்திருப்ப கொடுமையான எதிரிகள் தீர்மானித்திருக்கின்றனர். பலதரப்பட்ட சுய ஆதாயங்களை தேட நம்மைத் தூண்டி நம் கவனத்தை சிதறவைப்பதன் மூலம் இவர்கள் தங்களுடைய வேலையை காண்பிக்கின்றனர். ஏற்கனவே இவர்களுக்காக தயாராயுள்ள சவக்குழிகள், வருக! வருக!! என வரவேற்க காத்திருப்பதால் நம்மீதான தாக்குதல் இன்னும் தீவிரமாகியிருக்கிறது. ராஜ்ய வேலையில் நாம் சுறுசுறுப்பாக இருப்பதை தடைசெய்ய சாத்தான் முயற்சிக்கிறான். அல்லது குறைந்தபட்சம் நம்மை மந்தமாக்குவதற்கு அவன் தந்திரமான எல்லாவற்றையும் செய்கிறான். (யாக். 5:7, 8; மத். 24:13, 14) ஆகவே என்ன வழிகளில் நாம் இப்படிப்பட்ட அவசியமான பொறுமையை காண்பிக்க வேண்டும்?
2 துன்பத்தின் மத்தியிலும் பொறுமை: நாம் பிரசங்கிக்கும்போது மக்கள் கொஞ்சமும் அக்கறை காண்பிப்பதில்லை. மேலும் நம்முடைய ஊழியத்திற்கு முரட்டுத்தனமாகவும் இரக்கமேயில்லாமல் கடுகடுப்பாகவும் பிரதிபலிக்கிறார்கள். சில சமயங்களில் நாம் எதிர்ப்பையும் சந்திக்கிறோம். இருந்தாலும் இச்சந்தர்ப்பங்களில் நாம் பொட்டிப் பாம்பைபோல அடங்கி விடுவதில்லை அல்லது வருத்தப்படுவதுமில்லை. (1 பே. 2:23) இந்த உள்ளான பலம், நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களைப் பற்றி எதிர்மறையாக பேசுவதைத் தவிர்க்க நமக்கு உதவும். இவ்வாறு எதிர்மறையாக பேசுவது நம்மையும், உடன் ஊழியம் செய்பவர்களையும் உற்சாகமிழக்கச் செய்யும். ஆகவே நமது வேலையைக் குறித்து மக்கள் அசட்டையாகவும் வெறுப்பாகவும் இருந்தபோதிலும் நாம் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
3 தொடர்ந்து பொறுமையை காத்தல்: முதல் சந்திப்பில் ஒருவர் நன்றாக உங்களுடைய செய்திக்கு ஆர்வம் காண்பித்திருப்பார். ‘அடுத்த வாரம் கண்டிப்பா வாங்க’ என புன்முறுவலுடன் அழைப்பும் விடுத்திருப்பார். கடைசியில், வீட்டிற்கு போனால் பூட்டிய கதவுதான் உங்களை வரவேற்கும். இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு தேவை நீடிய பொறுமை. அதைப் போலவே, நம்மோடு படிக்கும் நபர்கள் ஆமை வேகத்தில் முன்னேற்றம் செய்தால் அல்லது சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தாமதித்தால் நீடிய பொறுமையாய் இருங்கள். ஏனெனில் இவ்வாறு செய்வது நல்ல பலன்களை தந்திருக்கிறது. (கலா. 6:9) பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ஒரு சகோதரி ஓர் இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் பல தடவைகள் சந்தித்தார். முதல் ஐந்து சந்திப்புகளில் பல்வேறு வேலைகளின் காரணமாக அவள் ரொம்ப பிஸியாக இருந்தாள். ஆறாவது தடவையோ, புயல் மழையில் முழுவதுமாக நனைந்துபோய் அவள் வீட்டிற்கு சென்றும் அங்கு ஒருவரும் இல்லை. இருப்பினும் நமது சகோதரி தளர்ந்து விடவில்லை. ‘இன்னும் ஒரே ஒரு தடவ ட்ரை பண்ணலாம்’ என்று சகோதரி நினைத்தார்கள். இம்முறை அந்த இளம்பெண் வழிமேல் விழி வைத்து பைபிள் படிப்புக்கு தயாராக காத்திருந்தாள். அப்புறம் என்ன, கேட்கவா வேண்டும்! அவள் படிப்பில் நன்கு முன்னேறி, கொஞ்சங் காலத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டாள்.
4 யெகோவாவின் நாள் தாமதிக்காது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தம்முடைய சித்தத்தை எவ்விதமாக நிறைவேற்றுவார் என்பதில் நாம் பொறுமையுடன் காத்திருப்போமாக. ஏனெனில் கடவுள் பொறுமையுடன் இருப்பது நல்ல பலனை உண்டுபண்ணும். (ஆப. 2:3; 2 பே. 3:9-15) யெகோவாவைப்போல நாமும் பொறுமையாக இருந்து, நம்முடைய ஊழியத்தை ஒருபோதும் விட்டுவிடாமல் இருப்போமாக. “விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும்” நம்முடைய கடினமான வேலைக்கான பலனை யெகோவாவிடத்தில் நோக்கியிருப்போமாக.—எபி. 6:10-12.