யெகோவாவை உள்ளார்வத்தோடு தேடுகிறீர்களா?
கிறிஸ்தவர் ஒருவர், தன்னோடு தினமும் ரயிலில் பயணிப்பவர்களிடம் பைபிளிலுள்ள நற்செய்தியைப் பற்றி எப்படியாவது சொல்ல வேண்டும் என ரொம்ப ஆசைப்பட்டார். (மாற்கு 13:10) ஆனால் பயம் அவரை தடுத்தது. தன் விருப்பத்தை அவர் கைவிட்டாரா? இல்லை. அதற்காக ஊக்கமாக ஜெபம் செய்தார், அதோடு உரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்பதை கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். இவருடைய வேண்டுதலுக்கு யெகோவா தேவன் பதிலளித்தார், சாட்சி கொடுப்பதற்கு பலத்தையும் அருளினார்.
யெகோவாவையும் அவருடைய அங்கீகாரத்தையும் நாடும்போது இத்தகைய உள்ளார்வம் மிகவும் முக்கியம். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் [“உள்ளார்வத்தோடு,” NW] தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபிரெயர் 11:6) யெகோவாவை வெறுமனே தேடினால் போதாது. ‘உள்ளார்வத்தோடு தேடுதல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல் ஒரு விதத்தில் தீவிரத்தையும் ஊக்கமான முயற்சியையும் அர்த்தப்படுத்துகிறது. இதில் ஒருவரின் முழு இருதயமும், முழு மனதும், முழு ஆத்துமாவும், முழுப் பலமும் உட்படுகிறது. உள்ளார்வத்தோடு யெகோவாவை தேடுவதாக இருந்தால், ஏனோதானோ என்றோ, உடலை வருத்தாமலோ, அல்லது சோம்பேறித்தனமாகவோ நாம் இருக்க மாட்டோம். மாறாக, அவரை நாடித் தேடுவதில் உண்மையான ஆர்வம் காட்டுவோம்.—அப்போஸ்தலர் 15:17, NW.
யெகோவாவை உள்ளார்வத்தோடு தேடியவர்கள்
கடின முயற்சியோடு யெகோவாவைத் தேடியவர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் பொதிந்துள்ளன. அவர்களில் ஒருவரே யாக்கோபு; மாம்ச உருவெடுத்து வந்த கடவுளுடைய தூதனை அவர் இறுக பற்றிக்கொண்டு விடியற்காலை மட்டும் அவரோடு கடினமாக போராடினார். இதனால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் (கடவுளோடு போராடியவர்) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர் கடவுளோடு ‘போராடினார்,’ அதாவது, விடாப்பிடியாக, தீவிர முயற்சியோடு, தொடர்ந்து போராடினார். உள்ளார்வத்தோடு அவர் எடுத்த முயற்சியை அந்த தேவதூதர் ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 32:24-30.
அடுத்ததாக, ஒரு கலிலேய பெண்ணைப் பற்றிப் பார்க்கலாம். அவளுடைய பெயரை பைபிள் குறிப்பிடவில்லை. அவள் 12 வருஷங்களாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு ‘மிகுந்த துன்பத்தைக்’ கொடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், அவள் யாரையும் தொடக்கூடாது. ஆனாலும் அவள் தைரியத்தை திரட்டிக்கொண்டு இயேசுவை சந்திக்க புறப்பட்டாள். ‘நான் அவருடைய ஆடைகளைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ என அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘அவருக்குப் பின்னால் நெருக்கிக்கொண்டே சென்ற திரளான ஜனங்களுக்கு’ இடையில் செல்வதற்கு அவள் எவ்வளவு பிரயாசப்பட்டிருப்பாள் என்பதை எண்ணிப் பாருங்கள். இயேசுவின் மேலாடையைத் தொட்ட மாத்திரத்தில் ‘இரத்தப் போக்கு நின்று போனதை’ அவள் உணர்ந்தாள்—அவளுடைய தீரா வியாதி குணமானது! “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என இயேசு கேட்டதும் அவள் நடுங்கிப் போனாள். ஆனால் இயேசுவோ, “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என கனிவோடு அவளிடம் சொன்னார். அவளுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.—மாற்கு 5:24-34, பொது மொழிபெயர்ப்பு; லேவியராகமம் 15:25-27.
மற்றொரு சமயம், ஒரு கானானிய பெண் தன் மகளை சுகப்படுத்தும்படி இயேசுவிடம் விடாது கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு இயேசு, பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்றார். தகுதியுடைய யூதர்களை கவனிக்காமல் இஸ்ரவேலரல்லாதவர்களை கவனிப்பது இயேசுவால் முடியாத காரியம் என்பதே அதன் அர்த்தம். அவர் சொன்ன உதாரணத்தின் குறிப்பை அவள் புரிந்து கொண்டாலும் “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே” என மீண்டும் கெஞ்சினாள். அவள் உண்மை மனதோடும் உறுதியான விசுவாசத்தோடும் கேட்டது, “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது” என சொல்லும்படி இயேசுவைத் தூண்டியது.—மத்தேயு 15:22-28.
இந்த நபர்கள் தொடர்ந்து விடாப்பிடியாக முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆரம்பத்திலேயே தடங்கல் ஏற்பட்டதன் காரணமாக அல்லது ஒதுக்கித்தள்ளும் விதத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக தங்கள் முயற்சிகளை கைவிட்டிருந்தால் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பார்களா? பெற்றிருக்க மாட்டார்கள்! இயேசு கற்பித்தபடி, யெகோவாவைத் தேடுவதில் ‘விடாப்பிடியாக’ இருப்பது சரியானது, இன்றியமையாததும்கூட என்ற குறிப்பை இந்த உதாரணங்கள் சரியாகவே எடுத்துக்காட்டுகின்றன.—லூக்கா 11:5-13, பொ.மொ.
அவருடைய சித்தத்தின்படி
அற்புத சுகப்படுத்துதலை பெற்றவர்களைப் பற்றி இதுவரை பார்த்தோம். அவர்கள் குணமடைந்ததற்கு உள்ளார்வம் மட்டுமே போதுமானதாக இருந்ததா? இல்லை, அவர்களுடைய வேண்டுதல்கள் கடவுளுடைய சித்தத்தின்படி இருக்க வேண்டியிருந்தது. அற்புதங்களை நடப்பிக்கும் வல்லமை இயேசுவுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம், அவர் கடவுளுடைய குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரத்தை அளிப்பதற்காகவே. (யோவான் 6:14; 9:33; அப்போஸ்தலர் 2:22) அதுமட்டுமல்ல, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது யெகோவா பூமியிலிருக்கும் மனித குலத்தின் மீது பெரிய அளவில் ஆசீர்வாதங்களை பொழிந்தருள்வார் என்பதற்கும் இயேசு செய்த அற்புதங்கள் முன்நிழலாக இருந்தன.—வெளிப்படுத்துதல் 21:4; 22:2.
இன்று உண்மை மதத்தைப் பின்பற்றுபவர்கள் சுகப்படுத்துதல், அந்நிய பாஷை பேசுதல் போன்ற அற்புத வல்லமையைப் பெற்றிருப்பது கடவுளுடைய சித்தமல்ல. (1 கொரிந்தியர் 13:8, 13) ஆனால், ‘எல்லா மனுஷரும் சத்தியத்தை அறிகிற திருத்தமான அறிவைப்’ பெறுவதற்காக பூமியெங்கும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பது நம் நாளுக்கான அவருடைய சித்தத்தில் உட்பட்டிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:4; மத்தேயு 24:14; 28:19, 20) கடவுளுடைய ஊழியர்கள் அவருடைய சித்தத்திற்கு இசைய உள்ளப்பூர்வமாக முயற்சி செய்வார்களானால் தங்களுடைய ஊக்கமான ஜெபங்களை அவர் கேட்டு அதற்கு பதிலளிப்பார் என சரியாகவே எதிர்பார்க்கலாம்.
சிலர் இவ்வாறு நினைக்கலாம்: ‘எப்படியானாலும் கடைசியில் கடவுளுடைய நோக்கம் நிறைவேறத்தான் போகிறது, அப்படியிருக்கும் போது நாம் ஏன் பிரயாசப்பட வேண்டும்?’ மனிதர் முயற்சி செய்கிறார்களோ இல்லையோ யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்றப் போவது உண்மை. இருந்தாலும் தம் சித்தத்தை நிறைவேற்றுவதில் மனிதர் ஈடுபடுவதை அவர் விரும்புகிறார். யெகோவாவை வீடு கட்டும் ஒருவருக்கு ஒப்பிடலாம். அந்த வேலைக்கான ஒரு முழு கட்டட வரைபடம் அந்த நபரிடம் உள்ளது; ஆனால், அவர் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே அதைக் கட்ட விரும்புகிறார். அவ்வாறே, இன்றும் ஒரு வேலையை செய்து முடிக்க யெகோவா நோக்கம் கொண்டிருக்கிறார்; அந்த வேலைக்கு தங்களை முன்வந்து அளிக்கும் ஊழியரை பயன்படுத்த அவர் விரும்புகிறார்.—சங்கீதம் 110:3; 1 கொரிந்தியர் 9:16, 17.
டோஷியோ என்ற இளைஞனின் அனுபவத்தை கவனியுங்கள். அவன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவுடன், பள்ளியையே தன் பிராந்தியமாக எடுத்துக்கொண்டு தன்னால் முடிந்தளவுக்கு அதிகமாக சாட்சி கொடுக்க நினைத்தான். பைபிள் எப்போதுமே அவன் கைவசம் இருந்தது. அதோடு முன்மாதிரியான ஒரு கிறிஸ்தவனாக திகழ கடுமையாக பிரயாசப்பட்டான். முதலாமாண்டு இறுதியில் வகுப்பு மாணவர்களின் முன்னிலையில் ஒரு பேச்சு கொடுப்பதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு கிடைத்தது. “பயனியர் சேவையை வாழ்க்கை தொழிலாக்குவதே என் இலட்சியம்” என்பது அப்பேச்சின் பொருள். பேச்சை கொடுப்பதற்கு முன்பு உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தான். வகுப்பிலுள்ள அனைவருமே கண் இமைக்காமல் தன் பேச்சைக் கேட்டதைப் பார்த்து சிலிர்த்துப் போனான். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு முழு நேர ஊழியனாக ஆவதற்கு விரும்புவதாக அவன் சொன்னான். ஒரு மாணவன் பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டு முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறினான். தான் செய்த ஜெபத்திற்கு ஏற்ப உள்ளார்வத்தோடு முயற்சி செய்ததால் அதிகமான பலன்களை பெற்றான் டோஷியோ.
நீங்கள் எந்தளவுக்கு உள்ளார்வம் காட்டுகிறீர்கள்?
யெகோவாவையும் அவருடைய ஆசீர்வாதங்களையும் உள்ளார்வத்தோடு நாடுவதை நீங்கள் பல்வேறு வழிகளில் காட்டலாம். முதலாவதாக, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நன்கு தயாரிப்பது போன்ற அடிப்படையான காரியங்களை நீங்கள் செய்யலாம். நன்கு தயாரித்த பதில்களை கூட்டங்களில் சொல்வது, உற்சாகத்தைத் தூண்டும் பேச்சுகளை கொடுப்பது, திறம்பட்ட விதத்தில் நடிப்புகளை செய்வது போன்றவற்றின் மூலம் யெகோவாவை எந்தளவுக்கு தீவிரமாக தேடுகிறீர்கள் என்பதை நீங்கள் காட்டுகிறீர்கள். ஊழியத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் உங்களுடைய உள்ளார்வத்தைக் காட்டலாம். வீட்டுக்காரரிடம் சிநேகப்பான்மையுடன் பேசுவதையும் உங்களுடைய பிராந்தியத்திற்கு பொருத்தமான பயனுள்ள அறிமுகங்களை பயன்படுத்துவதையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்? (கொலோசெயர் 3:24) தன்னையே முழுமனதுடன் அர்ப்பணிப்பதன் மூலம் ஒரு கிறிஸ்தவர் சபையின் நியமிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, ஓர் உதவி ஊழியராக, மூப்பராக அவர் சேவை செய்யலாம். (1 தீமோத்தேயு 3:1, 2, 12, 13) உங்களையே அளிக்க மனமுள்ளவர்களாக இருப்பதன் மூலம் பிறருக்கு கொடுப்பதில் வரும் சந்தோஷத்தை காணலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக கட்டுமான பணிக்கோ அல்லது கிளை அலுவலகத்தில் சேவை செய்யவோ விண்ணப்பிக்கலாம். நீங்கள் மணமாகாத தகுதிபெற்ற ஒரு சகோதரனாக இருந்தால் ஊழியப் பயிற்சி பள்ளியில் கலந்து கொள்ள விரும்பலாம்; அப்பள்ளி ஆவிக்குரிய மனிதரை சிறந்த மேய்ப்பர்களாக ஆக்குகிறது. நீங்கள் மணமானவரானால், மிஷனரி சேவையில் ஈடுபடலாம்; அது, யெகோவாவை இன்னும் அதிகமாக சேவிப்பதற்கான உங்களுடைய உள்ளப்பூர்வமான வாஞ்சையை காண்பிப்பதற்கு ஒரு வழியாக இருக்கலாம். ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகமாக தேவைப்படும் இடங்களுக்கு மாறிச் செல்வதற்கான வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.—1 கொரிந்தியர் 16:9.
உங்களுடைய நியமிப்பை என்ன மனப்பான்மையோடு நிறைவேற்றுகிறீர்கள் என்பதே உண்மையில் மிகவும் முக்கியம். உங்களுக்கு எத்தகைய பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், அதை உள்ளார்வத்தோடு, விறுவிறுப்போடு, “கபடமில்லாத இருதயத்தோடு” செய்ய பிரயாசப்படுங்கள். (அப்போஸ்தலர் 2:46; ரோமர் 12:8) ஒவ்வொரு நியமிப்பையும் யெகோவாவுக்கு புகழைச் சேர்ப்பதற்கான நம் உள்ளார்வத்தைக் காட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக நீங்கள் கருத வேண்டும். யெகோவாவிடம் உதவி கேட்டு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; அதோடு உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை செய்யுங்கள். அப்போது சிறந்த பலனைப் பெறுவீர்கள்.
உள்ளார்வத்தோடு எடுக்கும் முயற்சிகளுக்கு பலன்
பயத்தை சமாளித்து தன்னோடு பயணிப்பவர்களிடம் பிரசங்கிப்பதற்காக ஜெபம் செய்தவரைப் பற்றி நினைவிருக்கிறதா? அவருடைய உள்ளப்பூர்வமான வாஞ்சைக்கு யெகோவா பலனளித்தார். பயணிகளிடம் அன்பான முறையில் அணுகுவதற்கும், உரையாடலை ஆரம்பிப்பதற்கு பல வித்தியாசமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கும் அவர் முயற்சி செய்தார். அதன் பலனாக ஒருவரிடத்தில் பைபிளை திறம்பட பயன்படுத்தி சாட்சி கொடுக்க அவரால் முடிந்தது. அவர், மனிதருக்கிடையே சுமுகமான உறவு இல்லாதிருப்பதைப் பற்றி கவலைப்பட்டு வந்தவர். ரயிலில் போகும் போதே பல முறை அவருக்கு மறு சந்திப்புகளை நடத்தியபின் அது ஒரு பைபிள் படிப்பாக மாறியது. உள்ளார்வத்தோடு அவர் எடுத்த முயற்சிகளை யெகோவா உண்மையிலேயே ஆசீர்வதித்தார்!
உள்ளார்வத்தோடு யெகோவாவை தொடர்ந்து தேடினால் இதே போன்ற பலன்களை நீங்கள் பெறலாம். ராஜ்யம் சம்பந்தப்பட்ட எந்த வேலையில் நீங்கள் ஈடுபட்டாலும் அதை மனத்தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் தொடர்ந்து செய்தால், யெகோவா தம்முடைய நோக்கங்களுக்கு இசைவாக உங்களை பயன்படுத்துவார், ஆசீர்வாதங்களையும் அள்ளி வழங்குவார்.
[பக்கம் 26-ன் படம்]
இந்தப் பெண் தன் விடாமுயற்சியைக் கைவிட்டிருந்தால் என்ன சம்பவித்திருக்கும்?
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற நீங்கள் விடாமுயற்சியோடு மன்றாடுகிறீர்களா?
[பக்கம் 28-ன் படங்கள்]
யெகோவாவை உள்ளார்வத்தோடு தேடுவதை நீங்கள் எப்படி காட்டலாம்?