விடாமுயற்சியினால் வரும் பலன்கள்
அவள் பெனிக்கே தேசத்தில் பொ.ச. 32-ல் வாழ்ந்து வந்த கிரேக்க பெண். அவளுடைய மகள் மிகவும் கடுமையாய் வியாதிப்பட்டிருந்தாள், அந்தப் பெண் தன்னுடைய மகள் குணமடைய வேண்டும் என்று பேராவலாய் இருந்தாள். அவளுடைய பிராந்தியத்துக்கு புதியவர் ஒருவர் வந்திருந்தார்—நோயுற்றோரை சுகப்படுத்துவதற்கு வல்லமையுடைய பெயர்பெற்ற ஒரு அந்நியர்—அவள் அவருடைய உதவிக்காக கெஞ்சிக் கேட்பதற்கும் அவரைக் காண்பதற்கும் தீர்மானமாயிருந்தாள்.
அவரைச் சந்தித்தபோது, அவள் அவர் பாதத்தில் விழுந்து இவ்வாறு மன்றாடினாள்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்.” அந்த விதத்தில் அந்த கிரேக்க பெண் தன் மகளை இயேசு குணப்படுத்தும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
இதைச் செய்வதற்கு அவளுடைய பங்கில் தேவைப்பட்ட தைரியத்தையும் மனத்தாழ்மையையும் நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? இயேசு சிறிது அதிகாரமும் நற்பெயரும் பெற்றிருந்த நபராக இருந்தார், அவர் இருக்கும் இடத்தைக் குறித்து எவரும் அறிந்துகொள்ள அவர் விரும்பவில்லை என்பதை அதற்கு முன் தெரியப்படுத்தியிருந்தார். புறஜாதி அவிசுவாசிகள் மத்தியில் வேலை செய்யாமல், அதிகமாக தேவைப்பட்ட ஓய்வை எடுப்பதற்காக அவர் தம் அப்போஸ்தலர்களை பெனிக்கே தேசத்துக்குக் கூட்டிச் சென்றிருந்தார். கூடுதலாக, இயேசு ஒரு யூதராகவும் அவள் ஒரு புறஜாதியாளாகவும் இருந்தாள், இழிவாகக் கருதப்பட்ட புறஜாதியாரோடு கூட்டுறவுகொள்வதற்கு யூதர்கள் காட்டிய வெறுப்பைக் குறித்து அவள் எவ்வித சந்தேகமின்றி அறிந்திருந்தாள். இருப்பினும், அவள் தன்னுடைய பிள்ளை குணமடைய வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாயிருந்தாள்.
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அந்தச் சமயத்தில் அவருடைய உதவியைக் கேட்பதற்கு அந்தப் பெண்ணை தடுக்க முயற்சி செய்தனர். இயேசு முதலில் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பின்பு, அவள் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் கூப்பிட்டுக்கொண்டிருந்ததால் அப்போஸ்தலர்கள் எரிச்சலடைந்து இயேசுவிடம் இவ்வாறு சொன்னார்கள்: “இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும்.”
ஆனால் அவள் தன் வேண்டுகோளுக்கு உடன்பாடான பதிலைப் பெறும்வரை நிறுத்தவில்லை. மாறாக, அவள் இயேசுவின் பாதங்களில் விழுந்து, “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்” என்று கூறினாள்.
இஸ்ரவேல் புத்திரரிடமாக தமக்கிருந்த முக்கியமான உத்தரவாதத்தையும், அதே சமயத்தில் அவளுடைய விசுவாசத்தையும் உறுதியையும் சோதிப்பவராய் இயேசு இரக்கத்தோடு அவளிடம் இவ்வாறு விளக்கினார்: “ [இஸ்ரவேல] பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் [புறஜாதியார்] போடுகிறது நல்லதல்ல.”
அவளுடைய இனத்தைக் குறித்து எதிர்மறையான குறிப்பு சொல்லப்பட்டதனால் புண்பட்டுவிடுவதற்கு மாறாக, இவ்வாறு பதிலளிப்பதன் மூலம் அவள் மனத்தாழ்மையோடு தன்னுடைய வேண்டுகோளில் விடாமுயற்சியுடன் இருந்தாள்: “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே.”
அவளுடைய விசுவாசத்துக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலமும், அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்களின் பேரில் சாதகமாக செயல்படுவதன் மூலமும் இயேசு அந்தக் கிரேக்க பெண்ணின் விடாமுயற்சிக்கு பலனளித்தார். அவள் வீட்டுக்குத் திரும்பியபோது தன் மகள் முழுவதுமாக சுகமடைந்ததைப் பார்த்து அவள் சந்தோஷப்பட்டதை கற்பனை செய்து பாருங்கள்!—மத்தேயு 15:21-28; மாற்கு 7:24-30.
அந்த முதல் நூற்றாண்டு பெண்ணைப் போல, யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கும் அவருடைய ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் நம்முடைய முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். அந்தக் கிரேக்க பெண்ணின் விஷயத்தில் இருந்தது போல, “நன்மைசெய்கிறதில்” நம்முடைய விடாமுயற்சி நன்கு பலனளிக்கப்படும் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—கலாத்தியர் 6:9.
விடாமுயற்சி என்றால் என்ன? அது ஏன் தேவைப்படுகிறது? என்ன காரணங்கள் இந்தப் பண்பை நாம் இழந்துவிட அல்லது விட்டுக்கொடுத்துவிட நம்மை செய்விக்கக்கூடும்? நம்முடைய சிருஷ்டிகரும் பிதாவுமாகிய யெகோவாவை சேவிப்பதில் இப்போது நாம் விடாமுயற்சியை பிரயோகித்தால், நாம் என்ன பலன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கலாம்?
“விடாமுயற்சியுடன் இரு” என்ற வினைச்சொல்லை ஒரு அகராதி இவ்வாறு விளக்குகிறது: “இடையூறுகள், எச்சரிப்புகள் அல்லது பின்னடைவுகள் மத்தியிலும் ஏதோவொரு நோக்கத்தை, நிலையை, அல்லது மேற்கொண்ட காரியத்தை உறுதியாகவும் நிலையாகவும் பற்றியிருப்பது . . . தொடர்ந்து வாழ்ந்திருத்தல்; நீடித்து நிலைத்திருத்தல்.”
அவருடைய சித்தத்தைச் செய்வதில் விடாமுயற்சியுடன் இருக்கும்படி பைபிள் திரும்பத் திரும்ப யெகோவாவின் ஊழியர்களுக்கு அறிவுரை கூறுகிறது. உதாரணமாக, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்,’ “நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்,” “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்,” நன்மைசெய்கிறதில் “சோர்ந்து போகாமல்” இருப்போமாக என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.—மத்தேயு 6:33; 1 தெசலோனிக்கேயர் 5:21; ரோமர் 12:12; கலாத்தியர் 6:9.
அன்றாடக வாழ்க்கையின் விவகாரங்களில், நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய, உயிர்வாழ்வதற்கு வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு விடாமுயற்சி ஆகும். அது இன்றி நாம் மெய்யான, நிரந்தர மதிப்புடைய எதையும் சாதிக்க முடியாது. ஒரு குழந்தை எழுந்து நிற்க முயற்சிசெய்து, அதன் முதல் தள்ளாட்டமான படிகளை எடுத்து வைக்கும் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். ஒரு குழந்தை ஒரே நாளில் எழுந்து நின்று தாராளமாக நடப்பது அரிதான காரியம். குழந்தைகளாக இருக்கும்போது நடக்க ஆரம்பித்து இறுதியில் ஓரளவு வெற்றியை அடைவதற்கு முன் நாம் அனைவரும் பலமுறைகள் முயற்சிசெய்து தோல்வியடைந்திருப்போம். முதல் முறை விழுந்தபோது முயற்சி செய்வதை நிறுத்த நாம் தீர்மானித்திருந்தோமென்றால் என்ன நடந்திருக்கும்? நாம் இன்னும் நம்முடைய கைகள் மற்றும் முழங்கால்களில் தவழ்ந்துகொண்டிருப்போம்! பயனுள்ள இலக்குகளை அடைவதற்கும் சுய மரியாதையிலும் அதற்கு ஒத்த அதிகரிப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் விடாமுயற்சி இன்றியமையாதது. ஒரு பிரபலமான பழமொழி சொல்வது போல், “வெற்றிபெறுபவர்கள் ஒருபோதும் விட்டுச்செல்வதில்லை, விட்டுச்செல்பவர்கள் ஒருபோதும் வெற்றிபெறுவதில்லை.”
விசேஷ திறமைகள் அல்லது ஆற்றல்கள் போன்றவற்றால் வெற்றி உத்தரவாதமளிக்கப்படுவதில்லை என்பதை நெடுநாளைய பயனியர்கள் உணர்ந்திருக்கின்றனர். அது விடாமுயற்சியுடன் பற்றிக்கொண்டு உறுதியாயிருப்பது, யெகோவாவின் சித்தத்தை முழுவதுமாக செய்துமுடிக்க வேண்டும் என்று தீர்மானமாயிருப்பது, மனச்சோர்வு உட்பட தற்காலிக பின்னடைவுகளை எதிர்ப்படுகையில் தைரியமாயிருப்பது ஆகியவற்றை உட்படுத்துகிறது. கடவுளுடைய ஆசீர்வாதங்களில் என்றுமாக பங்குகொள்ள வேண்டும் என்ற இலக்கு தெளிவாக முன்னிலையில் இருக்க வேண்டும்.
ஆம், யெகோவாவின் ஆதரவைப் பெறவும், ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றிபெறவும் நாடும் நம் அனைவருக்கும் விடாமுயற்சி, தொடர்ந்து நிலைத்திருத்தல், சகிப்புத்தன்மை ஆகியவை தேவை. இப்படிப்பட்ட பண்புகள் இல்லாவிடில், நாம் ஒருவேளை யெகோவாவின் ஆதரவையும் மெய்யான வாழ்க்கையின் பலனையும் இழந்துவிடுவோம்.—சங்கீதம் 18:20; மத்தேயு 24:13; 1 தீமோத்தேயு 6:18, 19.
ஒரு கிறிஸ்தவனுக்கு தன்னுடைய ஆவிக்குரிய வேலைகளில் விடாமுயற்சியுடன் இருப்பது மற்ற கடமைகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகக் கடினமாய் இருக்கும். ஒரு நபர் தன் குடும்பத்தின் சரீரப்பிரகாரமான தேவைகளை கவனித்துக்கொள்வதற்கு உலகப்பிரகாரமான வேலையில் தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பை நடத்துவதற்கு அவர் ‘அதிக களைப்பாக’ இருக்கலாம். கிறிஸ்தவ கிரியைகளில் விடாமுயற்சியுடன் இருப்பதை என்ன காரணக்கூறுகள் அநேகருக்கு அதிக கடினமானதாக ஆக்குகின்றன?
ஒரு காரணம் உற்சாகமின்மை, அது நம்முடைய சொந்த தனிப்பட்ட குறைபாடுகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் வருகிறது. நாம் எப்போதும் நம்முடைய குறைகளையே சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்றால், யெகோவா நம்முடைய எல்லா பாவங்களையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று எண்ணி நாம் மனமுறிவடைந்து விட்டுவிடுவோம்.
ஒழுக்கக்கேடு, ஊழல், விரோதம் ஆகியவை அடங்கிய உலகப்பிரகாரமான சூழ்நிலை மற்றொரு காரணம் ஆகும். (1 யோவான் 2:15, 16) உலகப்பிரகாரமான செல்வாக்கு கெடுக்கக்கூடிய அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய ‘பயனுள்ள பழக்கங்களில்’ ஒன்று, கிறிஸ்தவ விடாமுயற்சி.—1 கொரிந்தியர் 15:33, NW.
நம்முடைய பரிசுத்த சேவைக்கு பொதுமக்கள் காண்பிக்கும் எதிர்ப்பு அல்லது அசட்டை மனப்பான்மை மூலம் பிரசங்க வேலையில் நம்முடைய விடாமுயற்சி பலவீனப்படுத்தப்படலாம். ஏமாற்றத்தின் காரணமாக நம்முடைய பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு வெறுமனே சத்தியம் வேண்டாம் என்று நாம் ஒருவேளை முடிவு செய்துவிடலாம். இது ‘என்ன பிரயோஜனம்?’ என்று நம்மை கேட்கும்படி செய்து, நம்முடைய விசேஷ ஊழிய சேவை சிலாக்கியத்தை விட்டுவிட நம்மை செய்விக்கும்.
இவ்வுலகத்தின் கட்டுப்பாடற்ற ஆவியினாலும்கூட நாம் செல்வாக்கு செலுத்தப்படலாம். மற்றவர்கள் எல்லாரும் சந்தோஷமாக அல்லது கடுமையாக உழைக்காமல் இருந்துகொண்டிருக்கும்போது, நாம் ஏன் கடுமுயற்சி செய்து இவ்வளவு தியாகம் செய்யவேண்டும்?—மத்தேயு 16:23, 24-ஐ ஒப்பிடுக.
யெகோவாவின் சித்தத்தை செய்வதில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு, நாம் கிறிஸ்தவ ஆளுமையைத் தரித்துக்கொண்டு மாம்சத்தின்படி வாழாமல் ஆவியின்படி வாழ வேண்டும். (ரோமர் 8:4-8; கொலோசெயர் 3:10, 12, 14) இவ்விஷயத்தின் பேரில் யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருப்பது, நம்முடைய முக்கியமான ஆவிக்குரிய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்க நமக்கு உதவும்.—1 கொரிந்தியர் 16:13.
விடாமுயற்சியுடன் இருந்தவர்களின் உதாரணங்கள்
அநேக கடும் சோதனைகளின் மத்தியில் தமக்கு பற்றுமாறாத்தன்மையோடும் உண்மைத்தன்மையோடும் நிலைத்திருந்த ஊழியர்களின் அநேக ஊக்கமூட்டும் உதாரணங்களை யெகோவா நமக்கு அளித்திருக்கிறார். அவற்றை சிந்திப்பதன் மூலம், கிறிஸ்தவ விடாமுயற்சியை நாம் எவ்வாறு வளர்த்து அதை பிரயோகிக்கலாம் என்பதையும் அது ஏன் அவ்வளவு மதிப்புள்ளது என்பதையும் நாம் காணலாம்.
மிகப்பெரிய உதாரணம் இயேசு, யெகோவாவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக அவர் பெரும் துன்பம் அனுபவித்தார். அவருடைய விடாமுயற்சியுடன்கூடிய பக்திக்குரிய செயல்களை கவனத்தோடு படிக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது: “ஆகையால் மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.”—எபிரெயர் 12:1-3.
ஜீவனுக்கான ஓட்டம் ஒரு சிறு தொலைவு ஓட்டம் அல்லது பாய்வு அல்ல, ஆனால் நீண்ட-தூர ஓட்டம் ஆகும். அதன் காரணமாகத்தான் நமக்கு கிறிஸ்துவைப் போன்ற விடாமுயற்சி தேவைப்படுகிறது. அதன் இலக்கு, இறுதி கோடு, ஓட்டத்தின் பெரும்பாகத்தில் காணமுடியாததாய் இருக்கலாம். நம்முடைய மனக்கண்களில் அந்த இலக்கு தெளிவாக இருக்க வேண்டும், அப்போது நம்மிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கும் அந்த ஓட்டம் முழுவதும் நாம் மனப்பிரகாரமாக அதை அடைய முயற்சி செய்யலாம். இயேசு அப்படிப்பட்ட மனக்காட்சி ஒன்றை தமக்கு முன்பாக வைத்திருந்தார், அதாவது, ‘அவருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சந்தோஷம்.’
இன்று கிறிஸ்தவர்களுக்கு இந்த மகிழ்ச்சியில் எது உட்பட்டிருக்கிறது? ஒரு விஷயம், சிலர் பரலோகத்தில் அழியாமையுள்ள வாழ்க்கையையும், அநேகர் பூமியில் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வர். யெகோவாவின் இருதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்ததாலும், கடவுளுடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாலும் வரும் திருப்தியான உணர்வு அது.—நீதிமொழிகள் 27:11; யோவான் 17:4.
இந்த சந்தோஷத்தில் உட்பட்டிருப்பது, யெகோவாவோடு கொண்டுள்ள நெருக்கமான, பெருமகிழ்ச்சி தரும் உறவு ஆகும். (சங்கீதம் 40:8; யோவான் 4:34) அப்படிப்பட்ட உறவு ஊக்குதலளிப்பதாயும் ஜீவனை ஆதரிப்பதாயும் உள்ளது, ஓட்டத்தை விட்டுவிடாமல் சகிப்புத்தன்மையோடு ஓடுவதற்கு ஒருவருக்கு பலம் அளிக்கிறது. கூடுதலாக, யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை தம் ஊழியர்கள் மீது ஊற்றுவதன் மூலம் அந்த உறவை ஆசீர்வதிக்கிறார், அது மகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியான செயல்கள் அதிகரிப்பதிலும் விளைவடைகிறது.—ரோமர் 12:11; கலாத்தியர் 5:22.
விடாமுயற்சியுடன்கூடிய விசுவாசத்தைக் கொண்டிருந்த யோபுவின் உதாரணத்தை சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளதாயிருக்கும். அவர் அபூரணராயும் தன்னுடைய நிலைமையைக் குறித்து மட்டுப்படுத்தப்பட்ட அறிவுடையவராயும் இருந்தார். ஆகையால் அவர் சில சமயங்களில் சுய-நீதியான மற்றும் மனமுறிவடைந்த மனநிலைக்குள் விழுந்துபோனார். இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து யெகோவாவிடம் தம்முடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கும், அவரை ஒருபோதும் விட்டுவிடாமல் இருப்பதற்கும் ஒரு உறுதியான தீர்மானத்தை எப்போதும் நிலையாய் வெளிக்காட்டினார். (யோபு 1:20-22; 2:9, 10; 27:2-6) யெகோவா யோபுவை அவருடைய விடாமுயற்சியுடன்கூடிய பக்திக்காக பலனளித்தார், அவருக்கு ஆவிக்குரிய மற்றும் பொருள் சம்பந்தமான ஆசீர்வாதங்களையும் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையையும் கொடுத்தார். (யோபு 42:10-17; யாக்கோபு 5:10, 11) யோபுவைப் போல் நாம் இப்போதுள்ள வாழ்க்கையில் அதிக கஷ்டங்களையும் இழப்புகளையும் அனுபவிக்கலாம், ஆனால் நம்முடைய விசுவாசமுள்ள சகிப்புத்தன்மையின் பேரில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கும் என்றும்கூட நாம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறோம்.—எபிரெயர் 6:10-12.
நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு முழு தொகுதியாக யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் கிறிஸ்தவ விடாமுயற்சியை வெளிக்காட்டியிருக்கின்றனர். உதாரணமாக, அவர்கள் விடாமுயற்சியுடன் செய்யும் வீட்டுக்கு-வீடு வேலையும் மற்ற பொதுவான பிரசங்கிப்பு வேலையும் அவர்களுக்கும் அவர்களுடைய செய்திக்கும் உலகளாவிய கவனத்தைக் கொண்டுவந்திருக்கிறது. எதிர்ப்புகள் மற்றும் சோதனைகள் மத்தியிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற அவர்களுடைய வைராக்கியத்தையும் தீர்மானத்தையும் குறித்து செய்தித்தொடர்பு சாதனங்கள் அநேக குறிப்புகளை கூறியிருக்கின்றன. அவற்றில் ஒரு கூற்று இவ்விதமாகவும்கூட அதை சிறப்பித்துக் காட்டியது: “எவருமே யெகோவாவின் சாட்சிகளைத் தவிர்க்க முடியாது!”—மத்தேயு 5:16.
யெகோவா தம்முடைய சாட்சிகளின் விடாமுயற்சியுடன்கூடிய முயற்சிகளை, ஊழியத்தில் அதிகரிக்கப்பட்ட பலன்களைக் கொடுப்பதன் மூலம் ஆசீர்வதித்திருக்கிறார். இத்தாலியில் 1960-களின்போது இருந்த சில திறமைமிக்க சாட்சிகளின் அனுபவத்தைக் கவனியுங்கள். அப்போது அங்கு 5,30,00,000-க்கும் மேற்பட்ட ஆட்கள் அடங்கிய தேசத்தில் சுமார் 10,000 சாட்சிகள் பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். 6,000 பேர் குடியிருந்த ஒரு நகரத்தில் சாட்சிகளே இல்லை. அங்கு விஜயம் செய்த சகோதரர்கள் தங்கள் ஊழியத்தில் எதிர்ப்புணர்ச்சியை எதிர்ப்பட்டனர்.
அங்கு பிரசங்கம் செய்வதற்கு சகோதரர்கள் சென்றபோதெல்லாம், அந்நகரத்தில் இருந்த பெண்களில் அநேகர், மேலும் ஆண்களும்கூட பையன்களைச் சேர்த்துக்கொண்டு சாட்சிகளைப் பின்தொடர்ந்து செல்லும்படி உற்சாகப்படுத்தி, அவர்களைப் பார்த்து விசில் அடித்து அதிக சப்தம் செய்வர். அதற்குப் பிறகு சில நிமிடங்கள் கழித்து சகோதரர்கள் அவ்விடத்தை விட்டு மற்றொரு நகரத்துக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. இந்நகரத்தில் குடியிருந்த அனைவருக்கும் ஒருமுறையாவது முழுமையான சாட்சி கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் அச்சகோதரர்கள் மழை அதிகம் இருந்த நாட்களில் மட்டுமே பிரசங்கம்செய்ய தீர்மானித்தனர். அப்போது இளைஞர் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தனர். அந்நகரத்தில் இருந்த மக்கள் பிரஸ்தாபிகளுக்கு வெறுமனே தொந்தரவு கொடுக்கவேண்டும் என்பதற்காக தங்களை மழையில் நனைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர். இந்த விதத்தில் ஒரு நல்ல சாட்சி கொடுக்கப்பட்டது. அக்கறை காண்பித்த ஆட்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் விளைவாக, அந்தச் சிறிய பட்டணத்தில் செழித்தோங்கும் சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சூரிய ஒளி வீசிய நாட்களிலும்கூட பிரசங்க வேலை ஆரம்பிக்கப்பட்டது. யெகோவா அந்தப் பிராந்தியத்திலும் இத்தாலி முழுவதும் தம் சாட்சிகளின் விடாமுயற்சியை தொடர்ந்து ஆசீர்வதித்து வந்திருக்கிறார். இப்போது அந்தத் தேசத்தில் 2,00,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கின்றனர்.
சரியானதைச் செய்வதில் விடாமுயற்சியுடன் இருப்பதனால் வரும் பலன்கள் மிகுதி. கடவுளுடைய ஆவியினுடைய வல்லமையின் மூலம் யெகோவாவின் சாட்சிகள் மனித சரித்திரத்தில் முன் என்றுமில்லாத அளவு குறிப்பிடத்தக்க வேலையைச் செய்திருக்கின்றனர், அது இலட்சக்கணக்கான ஜனங்களுக்கு வீடுகளிலும் மற்ற இடங்களிலும் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பது ஆகும். (சகரியா 4:6) பைபிள் தீர்க்கதரிசனங்களில் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் வளர்ச்சியிலும் ஆற்றலிலும் இருக்கும் வியப்பூட்டும் வளர்ச்சி நிறைவேற்றப்படுவதை அவர்கள் மகிழ்ச்சியோடு பார்த்திருக்கின்றனர். (ஏசாயா 54:2; 60:22) அவர்கள் கடவுளுக்கு முன்பாக நல்ல மனசாட்சியைக் கொண்டிருக்கின்றனர், நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையில் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, படைப்பாளராகிய யெகோவா தேவனோடு அவர்கள் ஒரு நெருக்கமான உறவை அனுபவிக்கின்றனர்.—சங்கீதம் 11:7.
[பக்கம் 25-ன் படங்கள்]
இயேசு இந்தக் கிரேக்க பெண்ணின் மனத்தாழ்மையான விடாமுயற்சிக்கு பலனளித்தார்
[பக்கம் 26-ன் படம்]
இன்று கிறிஸ்தவர்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தில் பரதீஸில் வாழ்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது