யெகோவாவை உங்கள் நம்பிக்கையாக கொண்டிருங்கள்
“கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.”—சங்கீதம் 71:5.
1. ஆடு மேய்த்து வந்த வாலிபனான தாவீது என்ன சவாலை எதிர்ப்பட்டான்?
சுமார் ஒன்பது அடி உயரமுள்ள இராட்சசன் ஒருவன் வந்து நின்றான். அணிவகுத்திருந்த இஸ்ரவேல் படை வீரர்கள் அனைவருக்கும் அவனை நேருக்கு நேர் சந்திக்க தொடை நடுங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! காலை, மாலையென அனுதினமும், வாரக்கணக்கில் அந்த பெலிஸ்த இராட்சசனான கோலியாத் இஸ்ரவேல் படையினரை ஏளனமாக பேசி, தன்னுடன் சண்டையிட ஒரு வீரனை அனுப்பும்படி அவர்களிடம் சவால் விட்டான். கடைசியில், அவனுடைய சவாலை ஒருவன் ஏற்றுக்கொண்டான்; அவன் ஒரு படைவீரன் அல்ல, ஆனால் ஒரு சாதாரண வாலிபன். ஆடு மேய்த்து வந்த அந்த வாலிபனான தாவீது தன் எதிராளிக்குப் பக்கத்தில் மிகச் சிறியவனாக தெரிந்தான். ஏன், அவனுடைய எடை கோலியாத்தின் போர்க் கவசத்தையும் ஆயுதங்களையும்விட குறைவாக இருந்திருக்கலாம்! ஆனாலும், அவன் அந்த இராட்சசனிடம் ஒற்றைக்கு ஒற்றை நிற்க முன்வந்தான்; இதனால் தாவீது அஞ்சா நெஞ்சம் படைத்தவன் என்ற பெயரெடுத்தான்.—1 சாமுவேல் 17:1-51.
2, 3. (அ) தாவீதினால் அவ்வளவு தைரியமாக கோலியாத்தை எப்படி சந்திக்க முடிந்தது? (ஆ) யெகோவாவை நம்முடைய நம்பிக்கையாக கொண்டிருப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய எந்த இரண்டு படிகளைப் பற்றி கலந்தாராய இருக்கிறோம்?
2 தாவீதுக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது? முதிர் வயதில் பெரும்பாலும் தாவீது எழுதிய இந்த வார்த்தைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள்: “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 71:5) ஆம், இளைஞனாக இருந்தபோது தாவீது யெகோவா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தான். கோலியாத்தை சந்திக்கையில் அவன் இப்படி சொன்னான்: “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.” (1 சாமுவேல் 17:45) கோலியாத் தன் மகா பலத்தின் மீதும் தன் ஆயுதங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தான்; ஆனால் தாவீதோ யெகோவா மீது தனது நம்பிக்கையை வைத்திருந்தான். சர்வலோக பேரரசரே தன் பக்கத்தில் இருந்தபோது, சாதாரண ஒரு மனுஷனைக் கண்டு எதற்காக அவர் பயப்பட வேண்டும்? அந்த மனுஷன் உருவத்தில் என்னதான் பெரியவனாக இருந்தாலும், எப்படிப்பட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தாலும் அவனைக் கண்டு எதற்காக அஞ்ச வேண்டும்?
3 தாவீதைப் பற்றி நீங்கள் வாசிக்க வாசிக்க, யெகோவா மீதுள்ள உங்கள் நம்பிக்கை இன்னும் பலமானதாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? உண்மைதான், நம்மில் அநேகர் அதைத்தான் விரும்புவோம். ஆகவே, யெகோவாவை நம்முடைய நம்பிக்கையாக கொண்டிருப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய இரண்டு படிகளைப் பற்றி இப்போது ஆராயலாம். முதலாவதாக, இப்படிப்பட்ட நம்பிக்கை வைப்பதற்கு பொதுவாக எழும் ஒரு தடையை நாம் முற்றிலும் மேற்கொண்டு சமாளிக்க வேண்டும். இரண்டாவதாக, யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை நாம் திருத்தமாக கற்றறிய வேண்டும்.
யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் பொதுவாக எழும் ஒரு தடையை சமாளித்தல்
4, 5. கடவுள் மீது நம்பிக்கை வைப்பது ஏன் அநேகருக்கு கடினமாக இருக்கிறது?
4 கடவுள் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஜனங்களுக்கு எது தடையாக இருக்கிறது? கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன என்று புரியாமல் சிலர் அடிக்கடி குழம்பிப்போவதே ஒரு தடையாக இருக்கிறது. துன்பத்திற்கு கடவுளே காரணம் என பலருக்கு கற்பிக்கப்படுகிறது. ஏதோவொரு துயர சம்பவம் ஏற்படுகையில், அதில் பலியானவர்களை தம்முடன் பரலோகத்தில் இருப்பதற்காகவே கடவுள் “எடுத்துக் கொண்டார்” என்பதாக பாதிரிமார்கள் சொல்லலாம். அது மட்டுமல்ல, இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும்—துயர சம்பவமானாலும் சரி, தீய செயலானாலும் சரி—எல்லாவற்றையும் எத்தனையோ காலங்களுக்கு முன்னரே கடவுள் தீர்மானித்துவிட்டார் என்பதாகவும் நிறைய மதத் தலைவர்கள் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கல் நெஞ்சம் படைத்த கடவுள் மீது நம்பிக்கை வைப்பது நிச்சயம் கஷ்டமாகத்தான் இருக்கும். அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கும் சாத்தான், இத்தகைய ‘பிசாசுகளின் உபதேசங்களை’ பரப்புவதிலேயே குறியாக இருக்கிறான்.—1 தீமோத்தேயு 4:1; 2 கொரிந்தியர் 4:4.
5 யெகோவா மீதுள்ள நம்பிக்கையை ஜனங்கள் இழந்துவிட வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். மனிதர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்பதற்கான உண்மை காரணங்களை நாம் தெரிந்துகொள்வதில் கடவுளுடைய எதிராளியான சாத்தானுக்கு துளிகூட விருப்பமில்லை. துன்பத்திற்கான வேதப்பூர்வ காரணங்களை அப்படியே நாம் அறிந்திருந்தாலும், அவற்றை நாம் எப்படியாவது மறந்துவிட வேண்டும் என்றே அவன் விரும்புகிறான். ஆகவே, இவ்வுலகில் ஏன் துன்பம் நிலவுகிறது என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்களை அவ்வப்போது நாம் மறுபார்வை செய்வது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு யெகோவா காரணம் அல்ல என்ற உண்மையை நம் மனதில் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.—பிலிப்பியர் 1:9-11.
6. துன்பம் வருவதற்கான ஒரு காரணத்தை 1 பேதுரு 5:8 எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
6 யெகோவாவுடைய மக்களின் உத்தமத்தன்மையை முறித்துப்போட சாத்தான் விரும்புவதே துன்பத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. யோபுவின் உத்தமத்தன்மையை அவன் முறித்துப்போட முயன்றான். அதில் தோற்றுப்போனாலும், இன்னும் அவன் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை. அவன் இந்த உலகத்தின் அதிபதியாக இருப்பதால் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை ‘விழுங்குவதற்காக’ வகைதேடி சுற்றித் திரிகிறான். (1 பேதுரு 5:8) நம் ஒவ்வொருவரையுமே அது உட்படுத்துகிறது! யெகோவாவுக்கு ஊழியம் செய்யவிடாமல் நம்மை தடுத்து நிறுத்தவே சாத்தான் விரும்புகிறான். இதற்காக அடிக்கடி துன்புறுத்துதலை தூண்டிவிடுகிறான். உண்மைதான், அப்படிப்பட்ட துன்புறுத்துதல்கள் வேதனையாகத்தான் இருக்கும்; என்றாலும் அவற்றை சகிப்பதற்கு நம்மிடம் நல்ல காரணம் இருக்கிறது. அப்படி சகிப்பதன் மூலம் சாத்தானை ஒரு பொய்யனென்று நிரூபிப்போம், அதோடு யெகோவாவையும் மகிழ்விப்போம். (யோபு 2:4; நீதிமொழிகள் 27:11) துன்புறுத்துதல்களை சகிப்பதற்கு யெகோவா நம்மை பலப்படுத்துவதை நாம் உணர உணர, அவர் மீதுள்ள நம் நம்பிக்கை வளர்ந்துகொண்டே வரும்.—சங்கீதம் 9:9, 10.
7. துன்பத்திற்கான காரணத்தை புரிந்துகொள்ள கலாத்தியர் 6:7 நமக்கு எப்படி உதவுகிறது?
7 துன்பத்திற்கான இரண்டாவது காரணம் இந்த நியமத்தில் காணப்படுகிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) சிலவேளைகளில் மக்கள் தவறான தீர்மானங்களை செய்வதன் மூலம் விதைக்கிறார்கள், அதன் விளைவாக ஓரளவு துன்பத்தை அறுக்கிறார்கள். கண்மூடித்தனமாக அவர்கள் வாகனத்தை ஓட்ட தீர்மானித்தால், அது விபத்தில் முடிவடையலாம்; புகைபிடிக்க தீர்மானித்தால், அது இருதய நோய் அல்லது நுரையீரல் புற்றுநோயில் முடிவடையலாம்; ஒழுக்கக்கேடான பாலுறவு காரியங்களில் ஈடுபட தீர்மானித்தால், குடும்ப உறவுகள் குலைக்கப்படலாம், சுய கௌரவம் இழக்கப்படலாம், அதோடு பாலியல் நோய்களினாலும் வேண்டாத கருத்தரிப்பினாலும் வேதனைகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட துன்பங்களுக்கு கடவுளையே மக்கள் குற்றஞ்சாட்டலாம், ஆனால் அவர்கள் எடுத்த மோசமான தீர்மானங்களுக்கு அவர்களே பலிகடா ஆகியிருக்கிறார்கள் என்பதே உண்மை.—நீதிமொழிகள் 19:3.
8. பிரசங்கி 9:11-ன்படி, மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்?
8 துன்பத்திற்கான மூன்றாவது காரணம் பிரசங்கி 9:11-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் நேரிடவேண்டும் [“எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது,” NW].” சில சமயங்களில், மக்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்துவிடுகிறார்கள், அவ்வளவுதான். ஆகவே, நம் பலங்கள், பலவீனங்கள் என்னவாய் இருந்தாலும்சரி, எதிர்பாரா நேரத்தில் துன்பமோ மரணமோ யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். உதாரணத்திற்கு, பூமியில் இயேசு வாழ்ந்த சமயத்தில், எருசலேமிலிருந்த ஒரு கோபுரம் விழுந்தது; அதில் 18 பேர் கொல்லப்பட்டார்கள். முன்பு செய்த பாவங்களுக்காக கடவுள் அவர்களை தண்டிக்கவில்லை என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். (லூக்கா 13:4) ஆம், அத்தகைய துன்பங்களுக்கு யெகோவா பொறுப்பாளி அல்ல.
9. துன்பத்தைப் பற்றிய விஷயத்தில், அநேகர் எதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்?
9 துன்பத்திற்கான சில காரணங்களை நாம் புரிந்திருப்பது அவசியம். ஆனால், ஒரு அம்சத்தை மட்டும் அநேகரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதாவது யெகோவா தேவன் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற விஷயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
யெகோவா ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
10, 11. (அ) ரோமர் 8:19-22-ன்படி, “சர்வ சிருஷ்டி”க்கும் என்ன ஆனது? (ஆ) சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தியது யார் என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?
10 அப்போஸ்தலன் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் ஒரு பகுதி இந்த முக்கியமான காரியத்தை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது. அவர் எழுதினார்: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, [“நம்பிக்கையின் அடிப்படையில்,” NW] அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது.”—ரோமர் 8:19-22.
11 இந்த வசனங்களின் அர்த்தமென்ன? அதை புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் சில முக்கிய கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கேள்வியை சிந்திக்கலாம்: சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தியது யார்? சிலர், சாத்தான் என சொல்கிறார்கள்; மற்றவர்களோ ஆதாம் என கூறுகிறார்கள். ஆனால் இந்த இருவருமே சிருஷ்டியை கீழ்ப்படுத்தியிருக்க முடியாது. ஏன்? ஏனெனில், சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தியவர் “நம்பிக்கையின் அடிப்படையில்” அப்படி செய்திருக்கிறார். ஆம், காலப்போக்கில், உண்மையுள்ளவர்கள் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்”படுவார்கள் என்ற நம்பிக்கையை அவர் அளித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை ஆதாமும் கொடுத்திருக்க முடியாது, சாத்தானும் கொடுத்திருக்க முடியாது. யெகோவாவால் மாத்திரமே அந்த நம்பிக்கையை கொடுக்க முடியும். ஆகவே, அவரே சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
12. “சர்வ சிருஷ்டி” எது என்பதைப் பற்றி என்ன குழப்பம் எழுந்திருக்கிறது, இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிக்கலாம்?
12 அப்படியானால் அந்தப் பதிவில் காணப்படும் “சர்வ சிருஷ்டி” என்பது எதைக் குறிக்கிறது? “சர்வ சிருஷ்டி” என்பது மிருகங்களும் தாவரங்களும் உட்பட அனைத்தும் அடங்கிய இந்த முழு உலகத்தையும் குறிக்கிறதென சிலர் சொல்கிறார்கள். ஆனால், மிருகங்களும் தாவரங்களும் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அடைய வேண்டும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றனவா? நிச்சயமாக இல்லை. (2 பேதுரு 2:12) ஆகவே, “சர்வ சிருஷ்டி” என்பது மனிதகுலத்தை மட்டுமே குறிக்கிறது. ஏதேனில் நடந்த கலகத்தின் காரணமாக பாவத்தினாலும் மரணத்தினாலும் பாதிக்கப்பட்டிருப்பது இந்த சிருஷ்டிதான், நம்பிக்கைக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பதும் இந்த சிருஷ்டிதான்.—ரோமர் 5:12.
13. ஏதேனில் நடந்த கலகம் மனிதகுலத்தை எப்படி பாதித்தது?
13 அந்தக் கலகம் மனிதகுலத்தை எப்படி பாதித்தது? அந்தக் கலகத்தின் விளைவுகளை பவுல் ஒரே வார்த்தையில் விளக்குகிறார்: மாயை.a இந்த வார்த்தை, “வடிவமைக்கப்பட்ட நோக்கத்திற்கு இசைவாக செயல்படாத ஒரு பொருளின் மாயை” பற்றி விளக்குவதாக ஒரு புத்தகம் சொல்கிறது. என்றென்றுமாக வாழும் விதத்தில்தான் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள்; பரதீஸான ஒரு பூமியை பராமரிப்பதில் ஐக்கியத்தோடு வேலை செய்யும் பரிபூரண குடும்பமாக அவர்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் படைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்ததோ குறுகிய, வேதனைமிக்க, அடிக்கடி விரக்தியளித்த வாழ்க்கை. இதைத்தான் யோபு மிகச் சரியாக சொன்னார்: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு 14:1) ஆம், உண்மையிலேயே மாயைதான்!
14, 15. (அ) மனிதகுலத்தின் மீது யெகோவா தண்டனைத் தீர்ப்பு வழங்கியதில் நீதி இருந்ததென நாம் எப்படி சொல்லலாம்? (ஆ) சிருஷ்டியானது தன் “சுய இஷ்டத்தினாலே” மாயைக்கு கீழ்ப்படுத்தப்படவில்லை என பவுல் ஏன் சொன்னார்?
14 இப்போது நாம் ஒரு முக்கிய கேள்விக்கு வருகிறோம்: “சர்வலோக நியாயாதிபதி” மனிதகுலத்தை வேதனைமிக்க, விரக்தியான வாழ்க்கை வாழும்படி ஏன் கீழ்ப்படுத்தினார்? (ஆதியாகமம் 18:25) அவர் இப்படி செய்தது நியாயமா? நம் முதல் பெற்றோர் என்ன செய்தார்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்தபோது, அவருடைய பேரரசுரிமையை எதிர்த்து மிகப் பெரிய சவாலை எழுப்பிய சாத்தானின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். ஒரு கலகக்கார ஆவி ஆளின் வழிநடத்துதலில் மனிதன் தன்னைத்தானே ஆட்சி செய்து, யெகோவாவின் உதவி இல்லாமலேயே நல்ல நிலையில் வாழ முடியும் என்ற கருத்தை தங்கள் செயல்களால் ஆதரித்தார்கள். ஆகவே, அந்தக் கலகக்காரர்களுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியதன் மூலம் அவர்கள் எதை விரும்பினார்களோ அதைத்தான் யெகோவா அவர்களுக்கு கொடுத்தார், அதாவது சாத்தானின் செல்வாக்கின்கீழ் மனிதன் தன்னைத்தானே ஆண்டு கொள்வதை அவர் அனுமதித்தார். அப்படிப்பட்ட ஒரு சூழலில், நம்பிக்கையின் அடிப்படையில் மனிதகுலத்தை மாயைக்கு கீழ்ப்படுத்துவதைத் தவிர வேறெந்த தீர்வு அந்தளவு நியாயமானதாக இருந்திருக்க முடியும்?
15 உண்மைதான், மாயைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது சிருஷ்டியின் ‘சுய இஷ்டமாக’ இல்லை. பிறக்கும்போதே நாம் பாவத்துக்கும் அழிவுக்கும் அடிமைகளாகவே பிறக்கிறோம்; இதில் தெரிவு என்ற சொல்லுக்கு இடமில்லை. ஆனால், யெகோவா தம் இரக்கத்தின் காரணமாக ஆதாமையும் ஏவாளையும் உடனடியாக அழிக்கவில்லை, பல வருடங்கள் அவர்கள் வாழும்படி அனுமதித்தார்; பிள்ளைகளைப் பெறவும் அனுமதித்தார். அவர்களுடைய சந்ததியினரான நாம், பாவம் மற்றும் மரணம் என்ற மாயைக்கு கீழ்ப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்து காட்டுவதற்கான வாய்ப்பு இப்போது நமக்கு இருக்கிறது. யெகோவாவுடைய பேரரசே நீதியானது, பரிபூரணமானது, ஆனால் அவருடைய வழிநடத்துதல் இல்லாத மனித ஆட்சியோ வேதனையையும், விரக்தியையும், மாயையையும்தான் கொண்டு வரும் என்பதை யெகோவா சொல்வதை கேட்டு கற்றுக்கொள்ள முடியும். (எரேமியா 10:23; வெளிப்படுத்துதல் 4:11) பாவமும் மரணமும் மட்டுமே நம் மோசமான நிலைமைக்கு காரணமல்ல, சாத்தானின் செல்வாக்கும்கூட நம் நிலைமையை மோசமாக்குகிறது. இந்த உண்மைகளுக்கு மனித சரித்திரம் சான்றளிக்கிறது.—பிரசங்கி 8:9.
16. (அ) இவ்வுலகிலிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் யெகோவா காரணம் அல்ல என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்? (ஆ) உண்மையுள்ள மக்களுக்கு யெகோவா அன்புடன் என்ன நம்பிக்கையை அளித்திருக்கிறார்?
16 ஆகவே, சரியான காரணங்களுக்குத்தான் மனிதகுலத்தை யெகோவா மாயைக்கு கீழ்ப்படுத்தினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், இன்று நம் ஒவ்வொருவரையும் அலைக்கழிக்கிற துன்பத்திற்கும் மாயைக்கும் யெகோவாதான் காரணம் என்று அர்த்தமா? ஒரு குற்றவாளிக்கு சரியான தீர்ப்பு வழங்குகிற ஒரு நீதிபதியை சற்று கற்பனை செய்து பாருங்கள். குற்றவாளியென தீர்க்கப்பட்டவன் தன் தண்டனைக் காலம் முடியும் வரை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம், ஆனால் அதற்காக, தன் கஷ்டத்திற்கெல்லாம் நீதிபதிதான் காரணம் என்று அவன் குற்றம்சாட்ட முடியுமா? நிச்சயமாகவே முடியாது! அதுமட்டுமல்ல, ஒருபோதும் யெகோவா பொல்லாப்பின் ஊற்றுமூலமாக இல்லை. “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என யாக்கோபு 1:13 சொல்கிறது. அதோடு, ‘நம்பிக்கையின் அடிப்படையில்தான்’ யெகோவா அந்த தீர்ப்பை வழங்கினார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். ஆதாம் ஏவாளின் உண்மையுள்ள சந்ததியார், மாயை முடிவுக்கு வருவதை கண்கூடாகப் பார்ப்பதற்கும், “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” சந்தோஷமாக பெற்றுக்கொள்வதற்கும் அவர் அன்புடன் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதன் பிறகு, மாயை எனும் வேதனைமிக்க நிலைமைக்கு எல்லா சிருஷ்டியும் மறுபடியும் தள்ளப்படுமோ என உண்மையுள்ள மனிதகுலம் கவலைப்பட அவசியமே இருக்காது. இவ்வாறு, நீதியும் நியாயமுமான வழியில் காரியங்களை யெகோவா கையாளுவது அவருடைய பேரரசுரிமையை என்றென்றைக்கும் நிலைநாட்டியிருக்கும்.—ஏசாயா 25:8.
17. இன்று உலகிலுள்ள துன்பங்களுக்கான காரணங்களை மறுபார்வை செய்வது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
17 மனிதரின் துன்பங்களுக்கான இந்தக் காரணங்களை நாம் மறுபார்வை செய்கையில், பொல்லாத காரியங்களுக்காக யெகோவாவை குற்றப்படுத்துவதற்கோ அவர் மீதுள்ள நம்பிக்கையை இழப்பதற்கோ நமக்கு எந்தக் காரணமாவது தெரிகிறதா? இல்லை, மாறாக, “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என்ற மோசேயின் வார்த்தைகளை நாமும் ஆமோதிப்பதற்கு இத்தகைய படிப்பு உதவுகிறது. (உபாகமம் 32:4) இதைப் பற்றி தியானிப்பதன் மூலம் அதுபோன்ற கேள்விகளுக்கு நம்மால் எவ்வளவு சிறப்பாக பதிலளிக்க முடியும் என்பதை அடிக்கொருதரம் மறுபார்வை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சோதனைகளை எதிர்ப்படும்போது நம் மனதில் சந்தேக விதைகளை விதைக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளை தவிடுபொடியாக்குவோம். சரி, அப்படியானால், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டாவது படியைப் பற்றியதென்ன? யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
யெகோவா மீது நம்பிக்கை வைப்பதன் அர்த்தம்
18, 19. யெகோவா மீது நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்தும் என்ன வார்த்தைகளை பைபிள் சொல்கிறது, ஆனால் அந்த விஷயத்தில் என்ன தவறான கருத்துக்களை சிலர் ஏற்றிருக்கிறார்கள்?
18 “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 3:5, 6) எவ்வளவு நம்பிக்கையூட்டும் மனநிறைவான வார்த்தைகள் இவை! கண்டிப்பாக, நம் அன்பான பரலோகத் தகப்பனைவிட நம்பிக்கையானவர் இந்த சர்வலோகம் முழுவதிலும் யாருமே கிடையாது. என்றாலும், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நீதிமொழிகளிலுள்ள வார்த்தைகள் படிப்பதற்கு சுலபமாக இருந்தாலும் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பது ஒருவேளை கடினமாக இருக்கலாம்.
19 யெகோவா மீது நம்பிக்கை வைப்பதன் அர்த்தத்தை அநேகர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளத்தில் இயல்பாக எழ வேண்டிய ஒருவித சந்தோஷ உணர்ச்சியென சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்களோ, கடவுள் மீது நம்பிக்கை வைப்பது என்றால் ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் அவர் நம்மை பாதுகாப்பார் என்றும், நம் ஒவ்வொரு பிரச்சினையையும் அவர் தீர்த்து வைப்பார் என்றும், அன்றாடம் எதிர்ப்படும் சவால்களை நாம் விரும்பும் விதமாக—அதுவும் உடனடியாக—அவர் சரி செய்வார் என்றும் எதிர்பார்ப்பதே அர்த்தம் என நம்புவதாக தெரிகிறது. ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் சரியானவை என சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம்பிக்கை என்பது வெறும் ஒருவித உணர்ச்சியைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது, அது நடைமுறையானதும்கூட. வயதுவந்த பெரியவர்களைப் பொறுத்தவரை, நம்பிக்கை வைப்பது என்பது நன்றாக யோசித்து, கவனமாக சீர்தூக்கிப் பார்த்து தீர்மானங்கள் எடுப்பதை அர்த்தப்படுத்தும்.
20, 21. யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? உதாரணத்துடன் விளக்கவும்.
20 நீதிமொழிகள் 3:5 என்ன சொல்கிறதென மறுபடியும் கவனியுங்கள். யெகோவா மீது நம்பிக்கை வைப்பதையும், நம் சுய புத்தியின்மேல் சாய்வதையும் அது வேறுபடுத்திக் காட்டி, இவ்விரண்டையும் ஒரே சமயத்தில் நாம் செய்ய முடியாது என குறிப்பிடுகிறது. அப்படியென்றால், நம் புத்தியை பயன்படுத்த நமக்கு அனுமதியில்லை என்றா அர்த்தம்? இல்லை. ஏனெனில், நமக்கு அத்தகைய புத்தியை கொடுத்ததே யெகோவாதான்; நம் புத்தியை பயன்படுத்தி அவரை சேவிக்க வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார். (ரோமர் 12:1, NW) ஆனால், நாம் தீர்மானங்களை எடுக்கும்போது எதன் மீது சாய, அதாவது சார்ந்திருக்க வேண்டும்? நம் எண்ணங்கள் யெகோவாவுடைய எண்ணங்களோடு ஒத்திசைவாக இல்லையென்றால், அவருடைய ஞானமே நம் ஞானத்தைவிட மிக மிக உயர்ந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோமா? (ஏசாயா 55:8, 9) யெகோவா மீது நம்பிக்கை வைப்பது என்பது அவருடைய எண்ணங்கள் நம் எண்ணங்களை வழிநடத்த அனுமதிப்பதை அர்த்தப்படுத்துகிறது.
21 உதாரணத்திற்கு: ஒரு காரின் பின்சீட்டில் குட்டிப் பையன் ஒருவன் உட்கார்ந்திருப்பதையும், முன்சீட்டில் அவன் பெற்றோர் உட்கார்ந்திருப்பதையும் சற்று கற்பனை செய்து பாருங்கள். அவன் அப்பா காரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதாவது வழி தெரியாமல் திண்டாடினால், சீதோஷ்ண நிலை படுமோசமானால் அல்லது ரோடு சரியில்லாமல் இருந்தால் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கீழ்ப்படிதலுள்ள ஒரு பிள்ளை என்ன செய்வான்? தன் அப்பா காரை எப்படி ஓட்ட வேண்டுமென்று பின்னால் உட்கார்ந்து கொண்டே சத்தம்போட்டு அதிகாரம் பண்ணுவானா? பெற்றோர் அப்போது எடுக்கும் தீர்மானங்களைப் பற்றி சந்தேகப்படுவானா அல்லது சீட் பெல்ட்டை போட்டுக்கொள் என நினைப்பூட்டப்படும்போது ‘மாட்டேன்’ என முரண்டுபிடிப்பானா? இல்லவே இல்லை, தன் பெற்றோர் அபூரணராக இருக்கிறபோதிலும் அப்படிப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் நல்லபடியாக சமாளிப்பார்கள் என்று முழு நம்பிக்கை வைக்கிறான். அப்படியென்றால், பரிபூரணமான நம் பரலோகத் தந்தையாகிய யெகோவா மீது அதைக்காட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லவா நாம் வைக்க வேண்டும்? குறிப்பாக, பயங்கர சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது கட்டாயம் நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.—ஏசாயா 30:21.
22, 23. (அ) பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் நாம் ஏன் யெகோவா மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அதை எப்படி செய்யலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கலந்தாலோசிக்கப்படும்?
22 என்றாலும், பிரச்சினைகளை சந்திக்கும்போது மட்டுமல்ல, ‘எல்லா வழிகளிலும் நாம் அவரை நினைத்துக்கொள்ள’ வேண்டும் என்பதாக நீதிமொழிகள் 3:6 சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, நாம் தினம்தினம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கையை தெளிவாக காட்ட வேண்டும். பிரச்சினைகள் எழும்போது, நாம் மனமுறிந்து விடக்கூடாது, நடுநடுங்கிப் போகக் கூடாது; அதுமட்டுமல்ல, காரியங்களை சிறந்த வழியில் கையாள யெகோவாவின் வழிநடத்துதல் நமக்கு கிடைக்கும்போது அதை ஏற்காமல் விட்டுவிடக் கூடாது. சோதனைகள் வருகையில், அவற்றை யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிப்பதற்கும், சாத்தானை பொய்யனாக நிரூபிப்பதற்கும், கீழ்ப்படிதலையும் யெகோவாவை பிரியப்படுத்தும் மற்ற குணங்களையும் வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிற வாய்ப்புகளாக நாம் கருத வேண்டும்.—எபிரெயர் 5:7, 8.
23 நம்மைச் சுற்றி எப்பேர்ப்பட்ட தடைகள் எழும்பினாலும் யெகோவா மீது நாம் நம்பிக்கை வைத்திருப்பதை காட்ட முடியும். நம் ஜெபங்கள் மூலமாகவும், வழிநடத்துதலுக்காக யெகோவாவின் வார்த்தையின் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் சார்ந்திருப்பதன் மூலமாகவும் அதைக் காட்ட முடியும். ஆனால், குறிப்பாக இன்றைய உலகிலுள்ள பிரச்சினைகளை எதிர்ப்படும்போது யெகோவா மீது நம்பிக்கை வைத்திருப்பதை நாம் எவ்வாறு வெளிக்காட்ட முடியும்? அடுத்த கட்டுரை அதைப் பற்றி கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a “மாயை” என்பதற்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தையும் கிரேக்க செப்டுவஜின்ட்டிலுள்ள பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் திரும்பத் திரும்பப் பயன்படுத்திய வார்த்தையும்—‘எல்லாம் வீண்’ என்ற சொற்றொடரில் இருக்கும் வார்த்தையும்—ஒன்றே.—பிரசங்கி [சபை உரையாளர்] 1:2, 14; 2:11, 17; 3:19; 12:8, பொது மொழிபெயர்ப்பு.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவை தன் நம்பிக்கையாக கொண்டிருந்ததை தாவீது எப்படி காண்பித்தார்?
• மனிதரின் துன்பத்திற்கான மூன்று காரணங்கள் யாவை, அடிக்கொருதரம் அவற்றை மறுபார்வை செய்வது ஏன் நல்லது?
• மனிதகுலத்தின் மீது யெகோவா என்ன தண்டனைத் தீர்ப்பு வழங்கினார், அந்தத் தீர்ப்பு ஏன் நியாயமானது?
• யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
[பக்கம் 8-ன் படங்கள்]
தாவீது யெகோவாவை தன் நம்பிக்கையாக கொண்டிருந்தார்
[பக்கம் 10-ன் படம்]
எருசலேமிலிருந்த ஒரு கோபுரம் விழுந்ததற்கு யெகோவா காரணம் அல்ல என்பதை இயேசு காண்பித்தார்