துன்ப காலங்களில் யெகோவாவை முழுமையாய் நம்பியிருங்கள்
“கடவுள் நமக்கு அடைக்கலம், பலம்; துன்ப காலங்களில் அவரே கைகண்ட துணை.”—சங்கீதம் 46:1, NW.
1, 2. (அ) கடவுள் நம்பிக்கை இருக்கிறதென சொன்னால் மட்டும் போதாது என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது? (ஆ) யெகோவாவை நம்புகிறோம் என வெறுமனே சொன்னால் போதாது, ஏன்?
கடவுள் நம்பிக்கை இருக்கிறதென சொல்வது எளிது. ஆனால் அதை செயலில் காட்டுவதுதான் முக்கியம். உதாரணமாக, “கடவுளே எங்கள் நம்பிக்கை” என்ற வார்த்தைகள் பல ஆண்டுகளாகவே ஐ.மா. நாட்டு நாணயங்களிலும், நோட்டுகளிலும் காணப்படுகின்றன.a இந்த வார்த்தைகளே ஐக்கிய மாகாணங்களின் தேசிய வாசகம் என அறிவித்து, 1956-ல் ஐ.மா. காங்கிரஸ் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால், அங்கு மட்டுமல்ல அகிலமெங்குமுள்ள மக்கள் பலர், கடவுளைவிட பணத்திலும், பொருள் செல்வத்திலும் அதிகமாக நம்பிக்கை வைப்பதே வேடிக்கையான விஷயம்.—லூக்கா 12:16-21.
2 உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம், கடவுள் நம்பிக்கை இருக்கிறதென வெறுமனே சொன்னால் போதாது. ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாய் இருப்பது’ போல, நாம் என்னதான் கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொன்னாலும் நமது செயல்களில் அதை வெளிக்காட்டாமல் இருந்தால், அதுவும் அர்த்தமற்றதுதான். (யாக்கோபு 2:26) யெகோவாவிடம் ஜெபம் செய்யும் போதும், அறிவுரைக்காக அவருடைய வார்த்தையை நாடும்போதும், வழிநடத்துதலுக்காக அவருடைய அமைப்பை நாடும்போதும் அவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதைக் காட்டுகிறோமென முந்தின கட்டுரையில் பார்த்தோம். துன்ப காலத்தில் இந்த மூன்று படிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
வேலையை இழந்தால் அல்லது வருவாய் மிகக் குறைவாக இருந்தால்
3. இந்தக் ‘கொடிய காலங்களில்’ யெகோவாவின் ஊழியர்கள் என்ன பொருளாதார அழுத்தங்களை சந்திக்கிறார்கள், கடவுள் நமக்கு உதவ மனமுள்ளவராய் இருப்பது நமக்கு எப்படி தெரியும்?
3 இந்தக் ‘கொடிய காலங்களில்’ கிறிஸ்தவர்களாகிய நாமும் மற்றவர்களைப் போல பொருளாதார அழுத்தங்களை சந்திக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1) ஆகவே, திடீரென நமது வேலை பறிபோகலாம். அல்லது வேறு வழியின்றி, குறைந்த சம்பளத்திற்கு பல மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ‘நம்முடைய சொந்த ஜனங்களை கவனிப்பது’ கடினமாக இருக்கலாம். (1 தீமோத்தேயு 5:8) இது போன்ற சமயங்களில் உன்னத கடவுள் நமக்கு உதவ மனமுள்ளவராக இருக்கிறாரா? ஆம், அதில் துளியும் சந்தேகமில்லை! இந்த உலகில், வாழ்க்கையில் எதிர்ப்படும் எல்லா நெருக்கடிகளிலிருந்தும் யெகோவா நம்மை பாதுகாப்பதில்லை என்பது உண்மையே. ஆனால், அவர் மீது நம்பிக்கை வைத்தால், சங்கீதம் 46:1-ல் (NW) உள்ள வார்த்தைகள் நமக்கு பொருந்தும். “கடவுள் நமக்கு அடைக்கலம், பலம்; துன்ப காலங்களில் அவரே கைகண்ட துணை” என அது சொல்கிறது. அப்படியானால், பண நெருக்கடி ஏற்படும் சமயங்களில் யெகோவாவை முழுமையாய் நம்புகிறோம் என்பதை நாம் எப்படி காட்டலாம்?
4. பணப் பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் நாம் எதற்காக ஜெபிக்கலாம், அந்த ஜெபங்களுக்கு யெகோவா எப்படி பதிலளிக்கிறார்?
4 யெகோவா மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதற்கு ஒரு வழி, அவரிடம் ஜெபம் செய்வதே. ஆனால் எதற்காக ஜெபம் செய்வது? பணப் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது நமக்கு நடைமுறை ஞானம் எப்போதையும்விட அதிகம் தேவைப்படலாம். அப்படியானால், நிச்சயம் அதற்காக ஜெபம் செய்யுங்கள்! “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என யெகோவாவின் வார்த்தை உறுதியளிக்கிறது. (யாக்கோபு 1:5) ஆம், ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள்; அதாவது, நல்ல தீர்மானங்களையும் சரியான தெரிவுகளையும் எடுப்பதற்கு அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பகுத்துணர்வையும் நன்கு பயன்படுத்துவதற்கான திறமையைத் தரும்படி கேளுங்கள். அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு நம் அன்புள்ள பரலோக தகப்பன் செவிகொடுப்பதாக உறுதியளிக்கிறார். முழு இருதயத்தோடு அவரில் நம்பிக்கை வைப்பவர்களுடைய பாதைகளை செவ்வைப்படுத்த அவர் எப்போதும் மனமுள்ளவராக இருக்கிறார்.—சங்கீதம் 65:2; நீதிமொழிகள் 3:5, 6.
5, 6. (அ) பொருளாதார அழுத்தங்களை சமாளிப்பதற்கு உதவிக்காக ஏன் கடவுளுடைய வார்த்தையை நாடலாம்? (ஆ) வேலையை இழக்கையில் கவலையைக் குறைக்க நாம் என்ன செய்யலாம்?
5 வழிநடத்துதலுக்காக யெகோவாவின் வார்த்தையை நாடுவது அவரில் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டும் மற்றொரு வழியாகும். பைபிளில் காணப்படும் அவரது ஞானமான நினைப்பூட்டுதல்கள் ‘மிகவும் உண்மையுள்ளவையாக’ நிரூபித்துள்ளன. (சங்கீதம் 93:5) தேவ ஆவியால் ஏவப்பட்ட இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்டு 1,900-க்கும் அதிகமான ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், பொருளாதார அழுத்தங்களை நன்கு சமாளிப்பதற்கு உதவும் நம்பத்தகுந்த ஆலோசனைகளும் நுணுக்கமான உட்பார்வையும் அதில் உள்ளன. பைபிளின் ஞானத்தைப் பற்றிய சில உதாரணங்களை கவனியுங்கள்.
6 “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது” என்பதை ஞானியாகிய சாலொமோன் ராஜா வெகு காலத்திற்கு முன்பே அறிந்திருந்தார். (பிரசங்கி 5:12) நமது பொருளுடைமைகளை பழுதுபார்க்கவும், சுத்தம் செய்யவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் நேரம் தேவைப்படுகிறது, பணமும் தேவைப்படுகிறது. ஆகவே, வேலையை இழந்துவிடும் சூழ்நிலை ஏற்படும்போது, நம்முடைய வாழ்க்கைப் பாணியை ஆராய்ந்து பார்க்க அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம். எவை நமக்கு அத்தியாவசியமானவை, எவை நமக்கு அத்தியாவசியமற்றவை என்பதைத் தீர்மானிக்க அப்போது முயற்சி செய்யலாம். கவலையைக் குறைப்பதற்கு சில மாற்றங்களை செய்வது ஞானமாக இருக்கும். உதாரணமாக, நம்முடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள முடியுமா? ஒருவேளை ஒரு சிறிய வீட்டிற்கு குடிமாற அல்லது தேவையற்ற பொருளுடைமைகளை கழித்துவிட முடியுமா?—மத்தேயு 6:22, NW.
7, 8. (அ) அபூரண மனிதர் பொருளாதார காரியங்களுக்காக அளவுக்குமீறி மனக்கலக்கமடைவதைக் குறித்ததில் எப்படிப்பட்ட விழிப்புணர்வை இயேசு காட்டினார்? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்க்க ஞானமான என்ன ஆலோசனையை இயேசு கொடுத்தார்?
7 மலைப் பிரசங்கத்தில், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்”b என்று இயேசு ஆலோசனை கொடுத்தார். (மத்தேயு 6:25) அபூரண மனிதர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்காக கவலைப்படுவது இயல்பு என்பதை இயேசு அறிந்திருந்தார். அப்படியானால், அவற்றிற்காக ‘கவலைப்படாதிருப்பது’ எப்படி? ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’ என்று இயேசு சொன்னார். எத்தகைய பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும் சரி, வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்வோமானால், நம்முடைய அன்றாட தேவைகள் அனைத்தையும் நம் பரலோக தகப்பன் ‘கூடக் கொடுப்பார்.’ ஏதாவது ஒரு வழியில் நம் வாழ்க்கைக்கு தேவையானதை அவர் அருளுவார்.—மத்தேயு 6:33.
8 “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்” என்ற மற்றொரு ஆலோசனையையும் இயேசு கொடுத்தார். (மத்தேயு 6:34) நாளை என்ன நடக்கலாம் என்பதைக் குறித்து தேவையில்லாமல் கவலைப்படுவது ஞானமற்ற செயல். “எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நாம் பயப்படும் அளவுக்கு உண்மையில் அத்தனை மோசமாக எதுவும் நடப்பதில்லை” என ஓர் அறிஞர் குறிப்பிட்டார். முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதையும் அந்தந்த நாளுக்காக வாழ்வதையும் பற்றி பைபிள் தரும் ஆலோசனைக்கு தாழ்மையோடு செவிசாய்க்கும்போது தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்ப்போம்.—1 பேதுரு 5:6, 7.
9. பணக் கஷ்டத்தை எதிர்ப்படும்போது, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ அளிக்கும் பிரசுரங்களில் என்ன உதவியை நாம் காணலாம்?
9 பணக் கஷ்டத்தை எதிர்ப்படும்போதுகூட ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ அளிக்கிற பிரசுரங்களின் உதவியை நாடுவதன் மூலம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டலாம். (மத்தேயு 24:45, NW) பொருளாதார கஷ்டங்களை சமாளிப்பதற்கு உதவும் தகவல்களும் ஆலோசனைகளும் அடங்கிய கட்டுரைகள் அவ்வப்போது விழித்தெழு! பத்திரிகையில் வெளிவருகின்றன. ஆகஸ்ட் 8, 1991 (ஆங்கிலம்) இதழில் வெளிவந்த “வேலை இழப்பு—வழி என்ன?” என்ற கட்டுரையில் நடைமுறையான எட்டு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தன; வேலையில்லாத காலத்தில் பொருளாதார ரீதியிலும் மன ரீதியிலும் குழப்பமடையாமல் நிலைத்திருக்க அவை அநேகருக்கு உதவியிருக்கின்றன.c ஆம், பணத்தின் உண்மையான மதிப்பைக் குறித்த சரியான நோக்குநிலையோடு அந்த ஆலோசனைகளை சமநிலைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த விஷயம் அதே இதழில் “பணத்தைவிட மிகவும் முக்கியமான ஒன்று” என்ற கட்டுரையில் கலந்தாராயப்பட்டுள்ளது.—பிரசங்கி 7:12.
உடல்நல பிரச்சினைகளால் அவதியுறுகையில்
10. பயங்கரமான வியாதிக்கு ஆளாகும்போதும் யெகோவாவில் நம்பிக்கை வைப்பது சாத்தியமே என்பதை தாவீது ராஜாவின் உதாரணம் எப்படி காட்டுகிறது?
10 பயங்கரமான வியாதிக்கு ஆளாகும்போது யெகோவாவில் நம்பிக்கை வைப்பது சாத்தியமா? ஆம், சாத்தியமே! தம் மக்கள் மத்தியிலுள்ள சுகவீனர் மீது யெகோவா அனுதாபம் காட்டுகிறார். அதோடுகூட அவர்களுக்கு உதவவும் மனமுள்ளவராக இருக்கிறார். உதாரணமாக, தாவீது ராஜாவை எடுத்துக் கொள்ளுங்கள். நேர்மையான ஒருவர் வியாதிப்படுகையில் அவரிடம் கடவுள் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை தாவீது எழுதினார்; அந்த சமயத்தில் அவர்தானே வியாதிப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்திருக்கலாம். “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்” என அவர் சொன்னார். (சங்கீதம் 41:1, 3, 7, 8) தாவீதுக்கு கடவுள் மீது உறுதியான நம்பிக்கை இருந்தது; அதனால் அவர் குணமடைந்தார். அப்படியானால், உடல்நல பிரச்சினைகளால் நாம் அவதியுறும்போது கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பதை நாம் எப்படி காட்டலாம்?
11. வியாதியால் கஷ்டப்படுகையில், நம் பரலோக தகப்பனிடம் எதைக் கேட்கலாம்?
11 வியாதியால் கஷ்டப்படுகையில் யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கு ஒரு வழி, அதை சகிப்பதற்கு உதவிக்காக அவரிடம் ஜெபத்தில் கெஞ்சிக் கேட்பதாகும். நம் சூழ்நிலை அனுமதிக்கிற அளவுக்கு ஆரோக்கியத்தைப் பெற “நடைமுறை ஞானத்தை” பயன்படுத்த உதவும்படி அவரிடம் ஜெபிக்கலாம். (நீதிமொழிகள் 3:21, NW) பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் சுகவீனத்தை தாங்கிக் கொள்ள உதவும்படியும் அவரிடம் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, என்ன நடந்தாலும் நம்முடைய சமநிலையை இழக்காமல், அவருக்கு உண்மையாய் நிலைத்திருக்க பலத்தைத் தந்து ஆதரிக்கும்படியும் யெகோவாவிடம் கேட்கலாம். (பிலிப்பியர் 4:13, NW) நம்முடைய தற்கால உயிரை பாதுகாப்பதைவிட கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வதே அதிமுக்கியமானது. நாம் உத்தமத்தைக் காத்துக்கொண்டால், மிகப் பெரிய வெகுமதியாளர் நித்திய காலத்திற்கு பரிபூரண ஜீவனையும் ஆரோக்கியத்தையும் தருவார்.—எபிரெயர் 11:6.
12. மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு என்ன வேதப்பூர்வ நியமங்கள் உங்களுக்கு உதவலாம்?
12 யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கை, நடைமுறையான வழிநடத்துதலைப் பெற அவருடைய வார்த்தையாகிய பைபிளை நாடுவதற்கும் நம்மைத் தூண்டுகிறது. பைபிளில் உள்ள நியமங்கள், மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவலாம். உதாரணமாக, ‘பில்லிசூனியத்தை’ பைபிள் கண்டனம் செய்வதை அறிந்திருப்பதால், நோய்களை கண்டுபிடிக்கும் பில்லிசூனிய முறையையோ, சிகிச்சையையோ நாம் தவிர்ப்போம். (கலாத்தியர் 5:19-21; உபாகமம் 18:10-12) பைபிள் தரும் நம்பத்தகுந்த ஞானத்திற்கு மற்றொரு உதாரணம்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்பதே. (நீதிமொழிகள் 14:15) ஆகவே, மருத்துவ சிகிச்சையைக் குறித்ததில், ‘எந்த வார்த்தையையும் நம்புவதற்கு’ பதிலாக நம்பகமான தகவலை நாடுவதே ஞானமானது. இத்தகைய “தெளிந்த புத்தி” நம்முடைய தெரிவுகளை கவனமாக சீர்தூக்கிப் பார்த்து அறிவுப்பூர்வமாக தீர்மானம் எடுக்க உதவும்.—தீத்து 2:12.
13, 14. (அ) உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல் நிறைந்த என்ன கட்டுரைகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) ஜனவரி 22, 2001 விழித்தெழு! இதழில் தீரா வியாதிகளை சமாளிப்பது பற்றி என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது?
13 உண்மையுள்ள அடிமை அளிக்கும் பிரசுரங்களை ஆராய்வதன் மூலமும் யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கையைக் காட்டலாம். குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சினைகளை மற்றும் வியாதிகளைப் பற்றிய தகவல்களை அளிக்கும் பல்வேறு கட்டுரைகள் அவ்வப்போது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.d சில சமயங்களில், பலவிதமான உடல்நல கோளாறுகளையும், தீரா வியாதிகளையும், உடல் ஊனங்களையும் சிலர் எப்படி வெற்றிகரமாக சமாளித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கட்டுரைகளையும் இந்தப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கின்றன. அதோடு சில கட்டுரைகள், தீரா வியாதிகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்வது எப்படி என்பதன் பேரில் வேதப்பூர்வ ஆலோசனைகளையும் நடைமுறையான ஆலோசனைகளையும் அளித்திருக்கின்றன.
14 உதாரணமாக, ஜனவரி 22, 2001 விழித்தெழு! (ஆங்கிலம்) இதழின் அட்டைப்பட தொடர் கட்டுரைகள் “சுகவீனருக்கு ஆறுதல்” என்ற விஷயத்தை சிறப்பித்துக் காட்டின. அந்தக் கட்டுரைகளில் பயனுள்ள பைபிள் நியமங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதோடு, பல ஆண்டுகளாகவே உடலை ஊனமாக்கும் வியாதியோடு வாழ்ந்து வந்திருக்கிற விஷயமறிந்த ஆட்களிடம் நேரடி பேட்டி கண்ட தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. “உங்கள் நோயை சமாளித்து வாழ்வது—எப்படி?” என்ற கட்டுரையில் இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது: “உங்கள் நோயைப் பற்றி எந்தளவு அறிந்துகொள்ள முடியுமோ அந்தளவு அறிந்துகொள்ளுங்கள்.” (நீதிமொழிகள் 24:5) பிறருக்கு உதவுவது உட்பட நடைமுறையான இலக்குகளை வையுங்கள்; ஆனால், மற்றவர்கள் வைக்கும் அதே இலக்குகளை உங்களால் எட்ட முடியாமற் போகலாம் என்பது நினைவிருக்கட்டும். (அப்போஸ்தலர் 20:35; கலாத்தியர் 6:4) மற்றவர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்தாதீர்கள். (நீதிமொழிகள் 18:1) மற்றவர்கள் உங்களை சந்திக்க வரும்போது அவர்களுக்கு அதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக்குங்கள். (நீதிமொழிகள் 17:22) எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவிடமும் சபையினரிடமும் இருக்கும் நெருங்கிய பந்தத்தை காத்துக் கொள்ளுங்கள். (நாகூம் 1:7; ரோமர் 1:11, 12, NW) இப்படி, தம் அமைப்பு வாயிலாக யெகோவா தரும் நம்பகமான வழிநடத்துதலுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இல்லையா?
மாம்ச பலவீனம் தொடர்ந்திருக்கையில்
15. அபூரண மாம்சத்தின் பலவீனங்களுக்கு எதிரான போராட்டத்தில் பவுலால் எப்படி வெற்றி பெற முடிந்தது, நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
15 “என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லை” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 7:18) அபூரண மாம்சத்தின் ஆசைகளோடும் பலவீனங்களோடும் எதிர்த்துப் போராடுவது எவ்வளவு கடினம் என்பதை பவுல் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே அறிந்திருந்தார். ஆனால் அவற்றை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பவுலுக்கு இருந்தது. (1 கொரிந்தியர் 9:26, 27) எப்படி? யெகோவாவை முழுமையாக நம்பியிருப்பதன் மூலம். அதனால்தான், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (ரோமர் 7:24, 25) நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நாமும் மாம்ச பலவீனங்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு போராடுகையில், ஒருபோதும் நாம் தேறப் போவதில்லை என நினைத்து நம்பிக்கையை இழந்து விடுவது எளிது. ஆனால் பவுலைப் போலவே, நம் சொந்த பலத்தில் சார்ந்திராமல் யெகோவா மீது உண்மையிலேயே சார்ந்திருந்தால் அவர் நமக்கு உதவுவார்.
16. மாம்ச பலவீனம் நம்மை தொடர்ந்து பற்றியிருக்கையில், நாம் எதற்காக ஜெபம் செய்வது அவசியம், கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மாம்ச பலவீனத்தில் வீழ்ந்துவிடுவோமானால் என்ன செய்ய வேண்டும்?
16 மாம்ச பலவீனம் நம்மை தொடர்ந்து பற்றியிருக்குமானால் யெகோவாவிடம் ஜெபத்தில் மன்றாடுவதன் மூலம் அவரில் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டலாம். பரிசுத்த ஆவியின் உதவிக்காக யெகோவாவிடம் கேட்பது, கெஞ்சிக் கேட்பதும்கூட அவசியம். (லூக்கா 11:9-13) குறிப்பாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனியின் பாகமான இச்சையடக்கத்தைத் தரும்படி கேட்கலாம். (கலாத்தியர் 5:22, 23) கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மாம்ச பலவீனத்தில் வீழ்ந்துவிடுவோமானால் என்ன செய்ய வேண்டும்? எந்த விதத்திலும் முயற்சியை கைவிடக் கூடாது. இரக்கமுள்ள நம் கடவுளிடம் மன்னிப்பையும் உதவியையும் கேட்டு தாழ்மையோடு ஜெபம் செய்வதில் ஒருபோதும் சோர்ந்துவிடாதிருப்போமாக. குற்றவுணர்வால் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான” இருதயத்தை யெகோவா ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். (சங்கீதம் 51:17) உள்ளப்பூர்வமாக, நொறுங்குண்ட இதயத்தோடு யெகோவாவிடம் மன்றாடும்போது சோதனைகளை எதிர்த்துப் போராட அவர் நமக்கு உதவுவார்.—பிலிப்பியர் 4:6, 7.
17. (அ) ஒரு குறிப்பிட்ட பலவீனத்தோடு நாம் ஒருவேளை போராடிக்கொண்டிருந்தால் அதைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதை சிந்திப்பது ஏன் பயனுள்ளது? (ஆ) முன்கோபத்தைக் கட்டுப்படுத்த, நாவைக் காத்துக்கொள்ள, ஆரோக்கியமற்ற பொழுதுபோக்குகளிடம் மனம் சாய்வதைத் தவிர்க்க நாம் போராடிக்கொண்டிருந்தால் என்ன வசனங்களை மனப்பாடம் செய்து கொள்ளலாம்?
17 உதவிக்காக யெகோவாவின் வார்த்தையை ஆராய்வதன் மூலமாகவும் நாம் அவரில் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டலாம். பைபிள் கன்கார்டன்ஸ் அல்லது உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸை பயன்படுத்தி, ‘நான் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பலவீனத்தைப் பற்றி யெகோவா எப்படி கருதுகிறார்?’ என்ற கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்கலாம். இந்த விஷயத்தைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற நம் ஆவலை பலப்படுத்தலாம். இவ்வாறு அவரைப் போல் உணரவும் அவர் வெறுப்பதை வெறுக்கவும் ஆரம்பிப்போம். (சங்கீதம் 97:10) தாங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பலவீனத்திற்குப் பொருத்தமான பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்வதை பயனுள்ளதாக சிலர் கண்டிருக்கிறார்கள். முன்கோபத்தைக் கட்டுப்படுத்த நாம் போராடிக் கொண்டிருக்கிறோமா? அப்படியானால், நீதிமொழிகள் 14:17, எபேசியர் 4:31 போன்ற வசனங்களை நாம் மனப்பாடம் செய்து கொள்ளலாம். நாவைக் காப்பது நமக்கு கடினமாக உள்ளதா? அதற்கு நீதிமொழிகள் 12:18, எபேசியர் 4:29 போன்ற வசனங்களை ஞாபகத்தில் வைக்கலாம். ஆரோக்கியமற்ற பொழுதுபோக்குகளிடம் நம் மனம் சாய்கிறதா? அப்போது, எபேசியர் 5:3, கொலோசெயர் 3:5 போன்ற வசனங்களை நினைவில் வைக்க முயலலாம்.
18. நமது பலவீனத்தை சமாளிக்க மூப்பர்களிடம் உதவி கேட்க நாம் ஏன் சங்கோஜப்படக் கூடாது?
18 சபையில் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட மூப்பர்களின் உதவியை நாடுவது நாம் யெகோவாவை சார்ந்திருப்பதைக் காட்டுவதற்கு மேலுமான ஒரு வழியாகும். (அப்போஸ்தலர் 20:28) தமது ஆடுகளை காத்துப் பராமரிப்பதற்கு கிறிஸ்து மூலமாக யெகோவா ஏற்பாடு செய்துள்ள ‘மனிதரில் வரங்களே’ இவர்கள். (எபேசியர் 4:7, 8, 11-14; NW) நம்முடைய பலவீனத்தை சமாளிக்க அவர்களிடம் உதவி கேட்பது எளிதாக இருக்காது. நம்மை மட்டமாக நினைப்பார்களோ என்ற பயத்தில் சங்கோஜப்படலாம். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சியுள்ள இந்த மனிதர்கள், தைரியமாக உதவி கேட்டு வந்ததற்காக நம்மை போற்றத்தான் செய்வார்கள். அதோடு, இந்த மூப்பர்கள் மந்தையை நடத்துவதில் யெகோவாவின் பண்புகளை பிரதிபலிக்கவும் முயலுகிறார்கள். ஆகவே, கடவுளுடைய வார்த்தையிலிருந்து இவர்கள் தரும் ஆறுதலான, நடைமுறை ஆலோசனையும் புத்திமதியும் பலவீனத்தை சமாளிப்பதற்கான நம் தீர்மானத்தை பலப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கலாம்.—யாக்கோபு 5:14-16.
19. (அ) எந்த விதத்தில் சாத்தான் இவ்வுலகின் மாயையான வாழ்க்கையை பயன்படுத்த விரும்புகிறான்? (ஆ) நம்பிக்கையில் என்ன உட்படுகிறது, நம் திடத் தீர்மானம் எதுவாக இருக்க வேண்டும்?
19 தனது காலம் குறுகியது என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (வெளிப்படுத்துதல் 12:12) நம்மை சோர்வடையச் செய்வதற்கும் முயற்சியைக் கைவிடச் செய்வதற்கும் இந்த உலகின் மாயையான வாழ்க்கையை அவன் பயன்படுத்த விரும்புகிறான். ரோமர் 8:35-39-ல் சொல்லப்பட்டுள்ள விஷயத்தில் நாம் முழு நம்பிக்கை வைப்போமாக. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என அந்த வசனங்கள் சொல்கின்றன. யெகோவாவில் நம்பிக்கையை காட்டும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! ஆனால் இப்படிப்பட்ட நம்பிக்கை வெறுமனே ஓர் உணர்வைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அதாவது, அன்றாட வாழ்க்கையில் நியாயமாக யோசித்துப் பார்த்து எடுக்கும் தீர்மானங்களை உட்படுத்துகிறது. ஆகவே, துன்ப காலத்தில் யெகோவாவை முழுமையாக நம்பியிருப்பதே நம் திடத் தீர்மானமாய் இருக்கட்டும்.
[அடிக்குறிப்புகள்]
a ஐ.மா. நாணய அச்சாலைக்கு அனுப்பப்பட்ட நவம்பர் 20, 1861 தேதியிட்ட கடிதத்தில் கருவூல செயலாளர், சால்மன் போர்ட்லண்ட் ச்சேஸ் இவ்வாறு எழுதியிருந்தார்: “கடவுளுடைய பலமின்றி எந்தத் தேசமும் பலமாக இருக்க முடியாது, அல்லது அவருடைய பாதுகாப்பின்றி தேசத்திற்கு பாதுகாப்பில்லை. மக்கள் கடவுளை நம்பியிருப்பதை நமது தேசிய நாணயங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.” இதன் விளைவாக, 1864-ல் “கடவுளே எங்கள் நம்பிக்கை” என்ற வாசகம் ஐ.மா. செலாவணியில் இருந்த நாணயம் ஒன்றில் முதன் முதலாக பொறிக்கப்பட்டது.
b இங்கு விவரிக்கப்பட்டுள்ள கவலை என்ற பதம் ‘வாழ்க்கையின் சந்தோஷத்தையே எடுத்துப் போடும் பயம் கலந்த மனக்கலக்கம்’ என சொல்லப்படுகிறது; சில மொழிபெயர்ப்புகள், ‘கவலை கொள்ளாதீர்கள்’ அல்லது ‘மனக்கலக்கமடையாதிருங்கள்’ என கூறுகின்றன. ஆனால் அவற்றின் கருத்து நாம் கவலை கொள்ள அல்லது மனக்கலக்கமடைய ஆரம்பிக்கக் கூடாது என்பதே. ஆனாலும் “கிரேக்கில் இந்த வினைச் சொல் நிகழ்காலத்தில் ஏவல் வடிவத்தில் கொடுக்கப்பட்டிருப்பது, ஏற்கெனவே செய்துவரும் ஒரு செயலை நிறுத்துவதற்கான ஒரு கட்டளை என்ற கருத்தைத் தருகிறது” என ஒரு புத்தகம் கூறுகிறது.
c அந்த எட்டு குறிப்புகளாவன: (1) பயத்தில் குழப்பமடைந்து விடாதீர்கள்; (2) நல்லதையே சிந்தியுங்கள்; (3) புது விதமான எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ள மனதைப் பக்குவப்படுத்துங்கள்; (4) மற்றவர்களுடைய வாழ்க்கைத் தரத்திற்கு சமமாக அல்லாமல் உங்களுடைய வருவாய்க்கு தக்கவாறு வாழுங்கள்; (5) கடனைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்; (6) குடும்ப ஒற்றுமையைக் காத்திடுங்கள்; (7) உங்களுடைய சுய மதிப்பைக் காத்திடுங்கள்; (8) பட்ஜெட் போடுங்கள்.
d எந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவது என்பது ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருப்பதால், பைபிளை சார்ந்த இந்தப் பத்திரிகைகள் எந்தவொரு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையையும் உயர்த்தியோ ஆதரித்தோ பேசுவதில்லை. மாறாக, குறிப்பிட்ட சில வியாதிகளை அல்லது உடல்நல கோளாறுகளைப் பற்றி தற்போது அறியப்பட்டுள்ள உண்மைகளை வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதே அதன் நோக்கம்.
நினைவிருக்கிறதா?
• பொருளாதார பிரச்சினைகளை எதிர்ப்படுகையில், நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதை என்ன வழிகளில் காட்டலாம்?
• உடல்நல பிரச்சினைகளால் அவதியுறுகையில் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதை நாம் எப்படி காட்டலாம்?
• மாம்ச பலவீனம் நம்மைத் தொடர்ந்து பற்றியிருக்கையில் நாம் உண்மையிலேயே யெகோவாவை சார்ந்திருக்கிறோம் என்பதை எப்படி காட்டலாம்?
[பக்கம் 17-ன் பெட்டி]
இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நாம் உடல்நலப் பிரச்சினைகளால் அவதியுறுகையில், வியாதிகளை அல்லது சரீர குறைபாடுகளை வெற்றிகரமாய் சமாளித்தவர்களைப் பற்றி வாசிப்பது உற்சாகமூட்டும். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள சில கட்டுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
“சகிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் யெகோவா எங்களுக்கு கற்பித்தார்.”—காவற்கோபுரம், பிப்ரவரி 1, 2002.
“என்றும் என்னை யெகோவா காத்து வந்திருக்கிறார்.”—காவற்கோபுரம், மார்ச் 1, 2001.
“ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாழ்க்கையை மாற்றினது” என்ற கட்டுரை, பக்கவாதத்தால் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நபர் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது.—விழித்தெழு!, அக்டோபர் 22, 1995.
“நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” என்ற கட்டுரை பைபோலார் டிஸ்ஆர்டர் வியாதியால் அவதியுறுகிறவரைப் பற்றி கலந்தாராய்ந்தது.—காவற்கோபுரம், டிசம்பர் 1, 2000.
“மௌனம் ‘பேசுகிறது’” என்ற கட்டுரை மூளை சார்ந்த முடக்கு வாதத்தால் போராடும் லோய்டாவின் வாழ்க்கை சரிதையைப் பற்றியது.—விழித்தெழு!, மே 8, 2000.
“உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!”—விழித்தெழு!, செப்டம்பர் 22, 1999.
“ஒளியிழந்த எனக்கு ஒளிமயமான வாழ்க்கை.”—விழித்தெழு!, பிப்ரவரி 8, 1999.
“போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்.”—விழித்தெழு!, செப்டம்பர் 8, 2002.
[பக்கம் 15-ன் படம்]
வேலையை இழந்துவிடுகையில், நம் வாழ்க்கைப் பாணியை ஆராய்வது ஞானமாக இருக்கும்
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவில் நம்பிக்கை வைப்பது சகித்திருக்க எப்படி உதவுகிறது என்பதை லோய்டாவின் வாழ்க்கை சரிதை காட்டுகிறது. (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைக் காண்க)
[பக்கம் 18-ன் படம்]
பலவீனங்களை சமாளிப்பதற்கான உதவியைக் கேட்க நாம் சங்கோஜப்பட வேண்டியதில்லை