ஒளியிழந்த எனக்கு ஒளிமயமான வாழ்க்கை
பாலிடிமி வெனட்சியானோஸ் என்பவரால் கூறப்பட்டது
நான் என்னோட அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லாரும் விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த சமயம் ஜன்னல் வழியாக ஒரு சிறிய பந்து மாதிரி ஏதோவொன்று பறந்து வந்தது. அது ஒரு வெடிகுண்டு. டமால்! என்று அது வெடித்து சிதறியது என்னோடு விளையாடிக்கொண்டிருந்த மூன்று பேரும் பீஸ், பீஸாக போய்விட்டார்கள். இவ்விபத்தில் தப்பிப்பிழைத்தது நான் மாத்திரம்தான். முழுவதுமாக குருடாக!
இக்கோரமான நிகழ்ச்சி நடந்தது ஜூலை 16, 1942. நான் அப்பொழுது ஐந்து வயது சிறுமி. பல நாட்களாக நினைவு வருவதும் போவதுமாக கோமா நிலையில் இருந்தேன். எனக்கு மீண்டும் நினைவு திரும்பிய பிற்பாடு என்னுடைய குட்டி சகோதரர்களையும் சகோதரிகளையும் பற்றி விசாரித்தேன். அவர்களெல்லாம் வெடிவிபத்தில் இறந்து விட்டனர் என கேள்விப்பட்டு வாழ்க்கையே வெறுத்துவிட்டேன். நானும் செத்துப்போயிருக்க கூடாதா என்பதாக வேதனைப்பட்டேன்.
நான் பிறந்தபோது என்னுடைய குடும்பம் கிரீஸிலுள்ள பிரேயூஸில் என்ற ஆதன்ஸ் துறைமுகத்திற்கு அருகே, சாலாமஸ் தீவில் குடியிருந்தது. நாங்கள் ஏழ்மையாக இருந்தாலும் சமாதானமான வாழ்க்கையை அனுபவித்தோம். 1939-ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபோதோ எங்களது அமைதியான வாழ்க்கை எல்லாம் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. என்னுடைய அப்பா மத்தியதரைக் கடலில் கப்பலோட்டியாக பணியாற்றி வந்தார். அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்கள், நீர்மூழ்கி எதிர்ப்புக் போர் கப்பல்கள், நீரடி ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றிலிருந்து தந்திரமாக தப்பவேண்டிய நிர்ப்பந்தம் அப்பாவுக்கு இருந்தது. அந்த சமயத்தில் கிரீஸ் ஃபாஸிஸம் மற்றும் நாசிஸத்தின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது.
கடவுளை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்
யுத்தத்தின் பயங்கரமான விளைவுகளின் காரணமாக அம்மா தனது நான்காவது பிள்ளையையும் இழந்து தவித்தார்கள். இதனால் பெரும் மனவேதனையால் அம்மா அவதிப்பட்டார். காலப்போக்கில் காசநோயாலும் பீடிக்கப்பட்டார்கள். தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு, ஆகஸ்ட் 1945-ல் மரணமடைந்தார்கள். எங்களை கடவுள் தண்டிப்பதாக எங்களுடைய மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் சொல்லத் தொடங்கினார்கள். என்கூட பிறந்தவர்களை கடவுள் பரலோகத்தில் குழந்தை தேவதூதர்களாக இருப்பதற்கு எடுத்துக்கொண்டார் என்பதாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருமார்கள் கூறினார்கள். என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து அவர்கள் இவ்விதமாக சொன்னார்கள். ஆனால் உண்மையில் அது எனக்கு கோபத்தைத்தான் கிளப்பியது.
அப்பாவுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கடவுளுக்கு கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து நான்கு குழந்தைகளை கடவுள் ஏன் அபகரிக்கவேண்டும்? கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் இப்படிப்பட்ட போதகங்கள் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவேயில்லை. கடவுளையும் மதத்தையும் பயங்கரமாக வெறுக்க ஆரம்பித்தார். ஆகவே அப்பா மதத்திற்கு முழுக்குப்போட தீர்மானித்தார். வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வேதனைகளுக்கும் அவலநிலைகளுக்கும் காரணம் கடவுள்தான் என்று வலியுறுத்தி, கடவுளை வெறுக்கும்படியும் அவரை இழிவாக கருதும்படியாகவும் எனக்கு அப்பா சொல்லிக்கொடுத்தார்.
கூண்டுக்குள் அடைபட்ட மிருகம்போல
அம்மா 1945-ல் இறந்த உடன், அப்பாவையும் காசநோய் தாக்கியது. இதன் காரணமாக சுகாதார மையத்தில் (sanatorium) அவர் சேர்க்கப்பட்டார். என்னுடைய கடைக்குட்டி தங்கச்சியோ பொது நர்சரியில் விடப்பட்டாள். சிறிது காலம் கடந்தோடியது. பிறகு அப்பா சுகாதார மையத்திலிருந்து வீட்டிற்கு திரும்பினார். முதல் வேலையாக நர்சரியில் இருக்கும் தங்கையை அழைத்துவர சென்றார். குழந்தை இறந்துவிட்டது என்ற பெரிய அதிர்ச்சியே அங்கு அவருக்கு காத்திருந்தது. என்னை பார்வையற்றவர்கள் பள்ளியில் சேர்த்துவிட்டார். என்னுடைய வாழ்க்கையின் அடுத்த எட்டு ஆண்டுகளை இப்பள்ளியில்தான் செலவிட்டேன். ஆரம்பத்தில் என் இதயமே வெடித்துவிடும்போல இருந்தது. முக்கியமாக, உறவினர்களும் நண்பர்களும் வந்து பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் எனக்கு வேதனையும் துக்கமும் தாளவில்லை. ஏனெனில் ஏறக்குறைய எல்லா பிள்ளைகளுக்கும், அவர்களை பார்ப்பதற்கு யாராவது வந்திருப்பார்கள். ஆனால் எனக்கென்று ஒருவரும் இல்லை.
கூண்டில் அடைப்பட்ட மிருகம் போல நான் நடந்து கொண்டேன். பள்ளியில் என்னை பார்த்தாலே பேய் என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டேன். இதன் காரணமாக என்னை அடித்து, ‘தண்டனை நாற்காலியில்’ உட்கார வைத்துவிடுவார்கள். பேசாமல் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நான் அடிக்கடி யோசித்ததுண்டு. ஆனால் காலம் செல்ல செல்ல, இருப்பதைக்கொண்டு திருப்தியாக இருக்கவேண்டும் என்ற உண்மை தெளிவாக புரிந்தது. பார்வையற்ற மற்ற உடன் மாணவிகளுக்கு உதவி செய்வதனால் மனநிறைவடைந்தேன். உடை உடுத்திக் கொள்வதற்கும் காலையில் படுக்கையை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றவர்களுக்கு நான் உதவினேன்.
எங்களது பெற்றோர்கள் மிகப்பெரிய தவறுதல்களை செய்ததால் நாங்கள் எல்லாரும் குருடர்களாக இருக்கிறோம் என்பதாக பாதிரியார்கள் சொன்னார்கள். இது கடவுள் மீதான என்னுடைய வெறுப்பை அதிகரிக்கத்தான் செய்தது. கடவுள் கெட்ட நோக்கமுள்ளவராகவும் கஞ்சத்தனமுள்ளவராகவும் இருப்பதுபோல எனக்கு தோன்றியது. இறந்தவர்களின் ஆவி அங்குமிங்கும் அலைந்து உயிரோடிருப்பவர்களை அலைக்கழிக்கும் என்ற மதக்கருத்தும் எனக்கு அதிக பயத்தையும் கோப உணர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறந்துபோனது என்னுடைய பிரியமான அம்மா, உடன் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் “ஆவி”யாக வருவார்கள் என்று நினைத்தாலே எனக்கு குலைநடுங்கியது.
அப்பாவின் உதவி
இந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு அப்பாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. வேதனைக்கும் மரணத்திற்கும் காரணம் சாத்தானே, யெகோவா அல்ல என்பதை பைபிளிலிருந்து கற்றறிந்த அப்பா ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். (சங்கீதம் 100:3; யாக்கோபு 1:13, 17; வெளிப்படுத்துதல் 12:9, 12) மூடநம்பிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட எனது அப்பா சீக்கிரத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு சென்றார். ஆன்மீகத்தில் நன்கு வளர்ச்சியடைந்தவராய், 1947-ல் முழுக்காட்டுதல் பெற்றார். தனது முழுக்காட்டுதலுக்கு சற்று முன்பாக அப்பா மறுமணம் செய்துகொண்டு, ஒரு மகனுக்கு தகப்பனானார். காலப்போக்கில் அப்பாவோடு சேர்ந்து என் சித்தியும் யெகோவாவை சேவிக்க தொடங்கினார்.
எனக்கு 16 வயதாகும்போது பார்வையிழந்தோர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பினேன். அன்பான கிறிஸ்தவ குடும்பத்தில் வாழ வந்ததை நினைக்கையில் ஆறுதலாய் இருந்தது! வீட்டில் குடும்ப பைபிள் படிப்பு என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். என்னையும் இப்படிப்பில் கலந்துகொள்ளும்படி அழைத்தார்கள். பெரியவர்கள் கூப்பிடுகிறார்களே என்பதற்காக மரியாதைக்காகவும் நாகரிகத்திற்காகவும் அரைகுறை மனதோடு ஒத்துக்கொண்டேன். நான் படிப்பில் ஒப்புக்கு கலந்துகொண்டேனே தவிர, எனது மனமோ அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டுதான் இருந்தது. கடவுளுக்கும் மதத்திற்கும் எதிரான வெறுப்பு எனக்குள் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
எனது குடும்பத்தினர் அன்பே கடவுளின் வழி என்ற ஆங்கில சிறுபுத்தகத்தை படித்தனர். ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம்கூட இஷ்டமே இல்லை. ஆனால் ஒரு சமயம் அப்பா இறந்தவர்களின் நிலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். இது என்னுடைய கவனத்தை ஈர்த்தது. பைபிளிலிருந்து பிரசங்கி 9:5, 10 வசனங்கள் வாசிக்கப்பட்டன: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”
இறந்தவர்களைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதை நான் உணர ஆரம்பித்தேன். என்னுடைய அம்மாவும் என் உடன்பிறப்புகளும் எனக்கு தீங்கு செய்ய முடியாது என தெரிந்துகொண்டேன். அடுத்ததாக கலந்துரையாடல் உயிர்த்தெழுதலை பற்றிய விஷயத்திற்கு தாவியது. நான் மிகவும் கருத்தூன்றி கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இயேசுவின் ஆட்சியின் கீழ், இறந்தவர்கள் மீண்டும் உயிருக்கு வருவார்கள் என்பதாக பைபிள் வாக்களிக்கிறது. இதைக் கேள்விப்பட்டபோது நான் மகிழ்ச்சியில் எவ்வளவு திளைத்துப்போனேன் தெரியுமா! (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:12, 13) இப்பொழுது படிப்பதென்றால் அல்வா சாப்பிடுவதுபோல எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. குடும்பப் படிப்பு எப்பொழுது வருமோ என காத்துக்கொண்டிருப்பேன். நான் குருடாயிருந்தாலும் பாடத்தை நன்கு தயாரித்து விடுவேன்.
ஆன்மீக பார்வை பெறுதல்
ஆன்மீக அறிவில் நான் வளர்ந்துகொண்டே இருந்தேன். ஆகவே கடவுளையும் அவருடைய செயல்களையும் பற்றிய தவறான கருத்துகள் நாளடைவில் கரைந்து போய்விட்டன. நானோ அல்லது குருடராய் பிறந்த மற்ற எவருமே கடவுளால் குருடாக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். மாறாக கடவுளுடைய எதிரி பிசாசாகிய சாத்தானே இதற்கெல்லாம் காரணம். என்னுடைய அறியாமையின் காரணமாக முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கடவுளைக் குற்றப்படுத்தினேன். அதற்காக இப்பொழுது நான் எவ்வளவு மனம் வருந்துகிறேன் தெரியுமா! பைபிளைப் பற்றி திருத்தமான அறிவை அதிகரிக்க நான் மிகத் தீவிரமாக இறங்கினேன். எங்களுடைய வீடு ராஜ்ய மன்றத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இருந்தபோதிலும் நான் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் தவறாமல் ஆஜராவதுடன் கூட்டங்களில் பதிலும் சொல்லுவேன். நான் குருடாயிருப்பதை ஒரு தடையாக கருதாமல் பிரசங்க வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டேன்.
என்னைக் குருடாக்கின அந்த கோரமான நிகழ்ச்சி நடந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஜூலை 27, 1958-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப்போனேன்! என் வாழ்க்கையில் புதிதாக நம்பிக்கையும், ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனை சேவிக்க வேண்டும் என்ற நோக்கம் இப்போது வாழ்க்கையில் வந்தது. கடவுளைப் பற்றிய அறிவை நான் பெற்றதால் பொய் போதனைகளிலிருந்து விடுதலை பெற்றேன். எனது பார்வையின்மையால் ஏற்படும் எந்தக் கஷ்டத்தையும் எதிர்ப்படும் நம்பிக்கையோடு திடமனதாய் இருந்தேன். சிறப்பு மிக்க நற்செய்தியை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதில் ஒவ்வொரு மாதமும் 75-க்கும் அதிகமான மணிநேரங்களை செலவழித்தேன்.
முறிந்தது திருமணம்
என்னுடைய வாழ்க்கை இலக்கையே தன் இலக்காக கொண்டிருந்த ஒருவரை 1966-ல் திருமணம் செய்துகொண்டேன். பிரசங்கிக்கும் வேலையை அதிகமாக செய்வதற்கு நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். ஆகவே திருமண வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். சில மாதங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து, உயிரைக்காக்கும் இந்த வேலையில் அதிக மணிநேரங்களை செலவிட்டோம். நாங்கள் இருவரும் மத்திய கிரீஸில் இருந்த லிவாடியாவிற்கு அருகே ஒதுக்குப்புறமாயிருந்த பகுதிக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கே இருந்த 1970-1972 வருடங்களில் கிரீஸில் கொடூரமான இராணுவ ஆட்சி நடைபெற்றது. இருந்தபோதிலும் அனேகர் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்டு, முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்களாக ஆவதற்கு நாங்கள் உதவினோம். இந்த இடத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சிறிய சபைக்கும் உதவி செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வருத்தகரமான விஷயம் நடந்தது. என்னுடைய கணவர் பைபிள் படிப்பையும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் தவிர்க்க ஆரம்பித்தார். கடைசியாக பைபிள் போதகத்தையே முழுவதுமாக புறக்கணித்து விட்டார். இது எங்களுடைய திருமண வாழ்க்கையில் அதிகமான மன இறுக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக எங்களது திருமண பந்தம் 1977-ல் முறிந்தது. நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன்.
பலனுள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை
என்னுடைய வாழ்க்கை சீர்குலைந்துபோன இந்த சமயத்தில் யெகோவாவும் அவருடைய அமைப்பும் மீண்டுமாக என்னுடைய உதவிக்கு வந்தார்கள். அன்பான கிறிஸ்த சகோதரர் ஒருவர் என்னை அணுகி, முன்னாள் கணவனையே நினைத்து, என் மகிழ்ச்சியை பறிகொடுக்க வேண்டாம் என்றும், அப்படி செய்தால் நான் அவருக்கு அடிமையாகி, என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமே என் கணவர்தான் என்றாகிவிடுவேன் என்றும் கூறினார். இந்த சமயத்தில் கிறிஸ்தவ சபையிலிருந்த வயதான ஒரு சகோதரி ஊழியத்தில் தன்னுடைய திறமையில் முன்னேற்றம் செய்வதற்கு உதவி வேண்டும் என கேட்டார். ஊழியத்தில் ஈடுபடுவது என்னுடைய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை அளித்ததால் அதிலேயே மூழ்கிப்போனேன்.
மற்றொரு கிறிஸ்தவர் பின்வரும் ஆலோசனையைக் கொடுத்தார்: “உங்களுடைய உதவி எங்கு அதிகமாக தேவைப்படுகிறதோ, அங்கு நீங்கள் தொடர்ந்து உதவலாமே. யெகோவாவால் பயன்படுத்தப்படும் கலங்கரை விளக்கமாக நீங்கள் இருக்கலாம்.” என்னே உற்சாகமளிக்கும் ஆலோசனை! பார்வையற்ற ஒருவர் “யெகோவாவால் பயன்படுத்தப்படும் கலங்கரை விளக்கமா!” (பிலிப்பியர் 2:14) ஆகவே உடனடியாக ஆதன்ஸிலிருந்து புறப்பட்டு, தெற்கு பகுதியிலுள்ள இவ்வோயாவிலுள்ள அமரிந்தோஸ் என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தேன். இந்த இடத்தில் பைபிள் போதகர்கள் வெகுசிலரே இருந்தனர். இக்கிராமத்திலிருந்த சகோதர சகோதரிகளினுடைய உதவியினால் ஒரு வீட்டைக் கட்டி, என்னுடைய தேவைகளை போதுமான அளவில் சமாளிக்க முடிந்தது.
ஒவ்வொரு வருடத்திலும் பல மாதங்களை ஏதாவது ஒருவகையில் ஊழியத்தை அதிகரிப்பதில் செலவிடுகிறேன். இவ்வாறு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். யெகோவா கொடுத்த பலத்தினால் ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் கலந்துகொண்டேன். மக்களை வீடுகளில் சென்று சந்தித்தல், ஆர்வம் காட்டும் நபர்களிடம் பைபிள் படிப்பு நடத்துதல், தெருவில் செல்லும் மக்களிடம் கடவுளைப்பற்றிப் பேசுதல் போன்றவை இப்படிப்பட்ட அம்சங்களில் அடங்கும். நம்முடைய படைப்பாளரில் ஆர்வத்தைக் காட்டிய நான்கு நபர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும் அரிய வாய்ப்பை நான் இப்போது பெற்றிருக்கிறேன். 20 வருடங்களுக்கு முன்பாக இந்த இடத்தில் சில சகோதரர்களே இருந்தார்கள். இன்றோ மூன்று சபைகள் இங்கு தழைத்தோங்குவதைப் பார்ப்பதில் நான் அதிக சந்தோஷமடைகிறேன்.
கிறிஸ்தவ கூட்டங்கள் ஒன்றையும் தவறவிடக்கூடாது என்பதில் தீர்மானமாயிருக்கிறேன். ஆகவே இதற்காக வாரத்திற்கு இரண்டு தடவை போகிறேன். ஒருவழி போவதற்கே 30 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்கிறேன். கூட்டங்களில் பேசுபவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் இருப்பதால் என் மனம் பல இடங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும். இதை கட்டுப்படுத்த என்ன செய்வது என யோசித்தேன். பார்வையிழந்தவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட நோட்டில் சுருக்கமான குறிப்புகள் எடுக்கக் கற்றுக்கொண்டேன். இவ்வாறு செய்வதனால் என்னுடைய செவிகளையும் மனதையும் ஒருமுகப்படுத்தி கூட்டங்களில் முழு கவனம் செலுத்துகிறேன். இன்னொரு சந்தோஷமான செய்தியும் இருக்கிறது. சபைக் கூட்டங்களில் ஒன்று என்னுடைய வீட்டிலேயே நடக்கிறது. இதை நான் அரிதான பாக்கியமாக கருதுகிறேன். சபை புத்தகப் படிப்பு என்பதாக அழைக்கப்படும் இக்கூட்டத்திற்கு அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வருவார்கள். மற்றவர்கள் என்னை வீட்டில் வந்து சந்திக்க வேண்டும் என்பதாக நான் எல்லா சமயத்திலும் எதிர்பார்த்ததில்லை. நானே முன்முயற்சி எடுத்து மற்றவர்களை அவர்களுடைய வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். இவ்வாறு செய்தது ஒருவருக்கொருவர் பரஸ்பரமான உற்சாகத்தை பரிமாறிக்கொள்ள உதவியது.—ரோமர் 1:11.
நான் இளம் பெண்ணாக இருந்தபோது என்னுடைய அப்பா என்னை பார்வையிழந்த பிள்ளையாகவே பாவிக்கவில்லை. என் வேலைகளை நானே செய்துகொள்ள அப்பா எக்கச்சக்கமான நேரத்தை செலவழித்து, பொறுமையாக, மனம்தளராமல் கற்றுக்கொடுத்தார். இப்படி அப்பா கொடுத்த பயிற்சி நல்ல பயனுள்ளதாக இருந்தது. எங்களுடைய வீட்டிலிருந்த தோட்டத்தையும், ஒருசில ஆடுமாடுகளையும் என்னால் பராமரிக்க முடிந்தது. எங்களது வீட்டில் நான் மிகவும் கடினமாக வேலை செய்தேன். வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன். வீட்டில் சமையல் வேலையையும் நானே செய்தேன். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து சிறிய காரியங்களை செய்வதன் மூலமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் அனுபவிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டேன். எனக்கு பார்வைதான் இல்லை. ஆனால் கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் போன்ற இன்னும் நான்கு உணர்வுகள் இருக்கின்றனவே! இவற்றை வைத்து நான் எவ்வளவோ சாதித்திருக்கிறேன். இது எனக்கு அளவிடமுடியாத திருப்தியை தந்திருக்கிறது. சத்தியத்தைப் படிக்காதவர்களுக்கு இது மிகச்சிறந்த சாட்சியாகவும் இருக்கிறது.
என்னுடைய கடவுளின் ஆதரவு
நான் பார்வையிழந்தும் வாழ்க்கையில் திருப்தியோடு நம்பிக்கை தளராமல் இருப்பதைப் பார்த்து அனேகர் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் எல்லா பேரும் புகழும் “ஆறுதலின் தேவனுமாயிருக்கிற” யெகோவாவையே சாரும். (2 கொரிந்தியர் 1:3) என்னுடைய கண்பார்வையை இழந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாமா என்று பலமுறை யோசித்தேன். யெகோவாவும் பைபிள் சத்தியமும் எனக்கு கிடைத்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நம்முடைய படைப்பாளர் கண்பார்வை போன்ற வேறு எவ்வளவோ பரிசுகளை நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே நாம் அவற்றைப் பயன்படுத்தி சந்தேகமின்றி மகிழ்ச்சியுடன் இருக்கலாம். என்னுடைய கிராமத்தில் பிரசங்கித்த சாட்சியிடம் ஒரு பெண் என்னைக் குறித்து இவ்வாறு சொன்னாள்: “அந்த பார்வையிழந்த ஒரு பெண் எவ்வளவோ காரியங்களை சாதிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவள் வணங்கும் கடவுள்தான்!”
நான் அனுபவித்த எல்லா சோதனைகளும் கடவுளிடம் என்னை நெருங்கி வரச்செய்தன. இது என்னுடைய விசுவாசத்தை மிகவும் பலப்படுத்தியது. இது, அப்போஸ்தலனாகிய பவுல் எதிர்ப்பட்ட துன்பங்களை என் மனதிற்கு கொண்டுவந்தது. “மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்பது, பவுலுக்கு கண் சம்பந்தமாக ஏதாவது வேதனை இருந்திருக்கலாம் என்பதை குறிக்கிறது. (2 கொரிந்தியர் 12:7; கலாத்தியர் 4:13) பவுலிடத்தில் இருந்த இந்த ஊனம் அவரை “வைராக்கிய”த்தோடு நற்செய்தியை பிரசங்கிப்பதிலிருந்து தடைசெய்யவில்லை. பவுல் சொன்னதுபோல நானும் இவ்வாறு சொல்ல முடியும்: “என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 18:5; 2 கொரிந்தியர் 12:9, 10.
மரணமடைந்த என் பிரியமான அம்மா, சகோதர, சகோதரிகள் உயிர்த்தெழுந்து வரும்போது பார்வையடைந்து என்னுடைய சொந்த கண்ணால் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்நம்பிக்கை பைபிள் ஆதாரத்தின் பேரில் இருக்கிறதால், நல்ல பாதிப்பை இது எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. பைபிள் பின்வருமாறு வாக்களிக்கிறது: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்ப”டும். “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்”டு. (ஏசாயா 35:5; அப்போஸ்தலர் 24:15) இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளின் நிமித்தம் வரவிருக்கும் சிறப்பு வாய்ந்த கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்!
[பக்கம் 15-ன் படம்]
என்னுடன் பைபிளைப் படித்த என் அப்பா
[பக்கம் 15-ன் படம்]
என் சமையலறையில்
[பக்கம் 15-ன் படம்]
ஊழியத்தில் ஒரு தோழியுடன்