ஆன்மீக உரையாடல்கள் கட்டியெழுப்புகின்றன
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.”—எபேசியர் 4:29.
1, 2. (அ) மனிதனுடைய பேச்சாற்றல் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது? (ஆ) யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு தங்களுடைய நாவை பயன்படுத்த விரும்புகிறார்கள்?
“மனிதனுடைய பேச்சாற்றல் ஒரு புரியாப் புதிர்; இது இறைவனால் அருளப்பட்ட ஒரு பரிசு, ஓர் அற்புதம்.” இப்படி எழுதியவர் அகராதி தொகுப்பாளர் லுட்விக் கோயலர். கடவுள் தந்த இந்த அரிய பரிசை நாம் ஒருவேளை லேசாக கருதிவிடலாம். (யாக்கோபு 1:17) ஆனால் நமது நேசத்திற்குரிய ஒருவர் ‘ஸ்ட்ரோக்’கால் பாதிக்கப்பட்டு பேச்சாற்றலை பறிகொடுக்கும்போது சிறந்ததோர் பொக்கிஷத்தை அவர் இழந்துவிடுவதை சற்று யோசித்துப் பாருங்கள். “எங்களுக்குள் நல்ல பேச்சுத் தொடர்பு இருந்தது, ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட பேச்சுத் தொடர்பை அனுபவிக்க முடியாததில் எனக்கு அதிக வருத்தம்!” என கூறுகிறார் சமீபத்தில் ‘ஸ்ட்ரோக்’குக்கு ஆளானவருடைய மனைவி ஜோன்.
2 உரையாடல்கள் நட்புக்குப் பாலமாக அமையலாம், தப்பபிப்பிராயங்களைப் போக்கலாம், தளர்ந்துபோனவர்களை தூக்கி நிறுத்தலாம், விசுவாசத்தைப் பலப்படுத்தலாம், வாழ்க்கைக்கு வளமூட்டலாம்—ஆனால் உரையாடல்கள் இவற்றையெல்லாம் தானாகவே சாதித்துவிடாது. ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.” (நீதிமொழிகள் 12:18) யெகோவாவின் ஊழியர்களாக, நம்முடைய உரையாடல்கள் புண்படுத்துவதாகவும் நொறுக்குவதாகவும் இருப்பதற்குப் பதிலாக காயமாற்றுவதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். வெளி ஊழியத்திலும்சரி சொந்த விஷயங்களைப் பற்றி உரையாடுகையிலும்சரி, நமது நாவை யெகோவாவுக்குத் துதியுண்டாகும் விதத்தில் பயன்படுத்த விரும்புகிறோம். “தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்” என சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 44:8.
3, 4. (அ) நம்முடைய பேச்சு சம்பந்தமாக நாம் எல்லாரும் என்ன பிரச்சினையை எதிர்ப்படுகிறோம்? (ஆ) நமது பேச்சைக் குறித்து கவனமாயிருப்பது ஏன் முக்கியம்?
3 “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது” என சீஷனாகிய யாக்கோபு எச்சரிக்கிறார். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். (யாக்கோபு 3:2, 8) நம்மில் யாருமே பரிபூரணர் அல்ல. ஆகவே, நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருந்தாலும், நம்முடைய பேச்சு எப்பொழுதும் மற்றவர்களை கட்டியெழுப்புவதில்லை அல்லது நம்முடைய படைப்பாளருக்குத் துதி சேர்ப்பதில்லை. ஆகவே நாம் பேசுகிற விஷயத்தைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அதோடு, இயேசு இவ்வாறு கூறினார்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்.” (மத்தேயு 12:36, 37) ஆம், மெய் தேவன் நம்முடைய வார்த்தைகளுக்கு நம்மிடம் கணக்குக் கேட்பார்.
4 தீங்கிழைக்கும் பேச்சை தவிர்ப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதாகும். இதை நாம் எப்படி செய்யலாம், எப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் பேசலாம், கட்டியெழுப்பும் பேச்சிலிருந்து நாம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை இந்தக் கட்டுரை கலந்தாராயும்.
இருதயத்தில் என்ன இருக்கிறதென்று கவனியுங்கள்
5. கட்டியெழுப்பும் உரையாடல்களை வளர்ப்பதில் நம்முடைய இருதயம் எப்படி முக்கிய பாகத்தை வகிக்கிறது?
5 நம்முடைய உள்ளத்தில் இருப்பதையே நமது பேச்சு பிரதிபலிக்கிறது என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும், கட்டியெழுப்பும் உரையாடல்களில் ஈடுபடும் பழக்கத்தை வளர்ப்பதற்கு இதுவே முதல் படி. “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என இயேசு கூறினார். (மத்தேயு 12:34) உண்மையில், நமக்கு முக்கியமாக இருக்கிற விஷயங்களைப் பற்றித்தான் நாம் அளவளாவ விரும்புகிறோம். அப்படியானால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘என்னுடைய இருதயத்தைப் பற்றி என்னுடைய உரையாடல்கள் எதை வெளிப்படுத்துகின்றன? என்னுடைய குடும்பத்தாரோடு அல்லது சக விசுவாசிகளோடு இருக்கும்போது என்னுடைய உரையாடல் ஆன்மீக காரியங்களைப் பற்றியதாக இருக்கிறதா அல்லது ஸ்போர்ட்ஸ், டிரெஸ், சினிமா, சாப்பாடு, லேட்டஸ்ட்டாக வாங்கிய பொருட்கள், அல்லது அற்பமான காரியங்களைப் பற்றியதாக இருக்கிறதா?’ ஒருவேளை நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையும் நமது சிந்தையும் இரண்டாம் பட்சமான விஷயங்களை சுற்றி அமைய தொடங்கியிருக்கலாம். முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுப்பது நம் உரையாடலையும் நம் வாழ்க்கையையும் முன்னேற்றுவிக்கும்.—பிலிப்பியர் 1:10, NW.
6. நம் உரையாடல்களில் தியானம் என்ன பாகத்தை வகிக்கிறது?
6 நம்முடைய உரையாடலின் தரத்தை முன்னேற்றுவிப்பதற்கு மற்றொரு வழி நோக்கமுள்ள தியானம். ஆன்மீக விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்கு நாம் கருத்தாய் முயற்சி செய்வோமாகில், ஆன்மீக உரையாடல் இயல்பாகவே வருவதை நீங்கள் காண்பீர்கள். இந்தத் தொடர்பை தாவீது ராஜா உணர்ந்ததால், “என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக” என பாடினார். (சங்கீதம் 19:14) சங்கீதக்காரனாகிய ஆசாப் இவ்வாறு கூறினார்: “உம்முடைய [தேவனுடைய] கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” (சங்கீதம் 77:12) கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களிலேயே லயித்திருக்கும் இருதயமும் மனமும் இயல்பாகவே மெச்சத்தக்க பேச்சால் நிரம்பிவழியும். யெகோவா தனக்கு கற்பித்த காரியங்களை எரேமியாவால் பேசாமல் இருக்க முடியவில்லை. (எரேமியா 20:9) தவறாமல் ஆன்மீக விஷயங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நாமும் இதையேதான் செய்வோம்.—1 தீமோத்தேயு 4:15.
7, 8. கட்டியெழுப்பும் உரையாடல்களுக்கு என்னென்ன விஷயங்கள் ஏற்றவை?
7 நல்ல ஆன்மீக பழக்கங்கள் கட்டியெழுப்பும் உரையாடல்களுக்கு தேவையான விஷயங்களை அள்ளி வழங்குகின்றன. (பிலிப்பியர் 3:16) மாநாடுகள், சபை கூட்டங்கள், புதுப் புதுப் பிரசுரங்கள், தினவசனம், அதற்குரிய குறிப்புகள் ஆகிய அனைத்தும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஆன்மீக மணிக்கற்களை நமக்குத் தருகின்றன. (மத்தேயு 13:52) நம்முடைய கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து கிடைக்கும் அனுபவங்களும் ஆன்மீக ரீதியில் எவ்வளவாய் உந்துவிக்கின்றன!
8 சாலொமோன் ராஜா இஸ்ரவேலில் பார்த்து மகிழ்ந்த பல்வகை மரங்களும் விலங்குகளும் பறவைகளும் மீன்களும் அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. (1 இராஜாக்கள் 4:33) கடவுளுடைய படைப்பின் அதிசயங்களைப் பற்றி உரையாடுவதில் அவர் இன்பம் கண்டார். நாமும் அதையே செய்யலாம். பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதில் யெகோவாவின் ஊழியர்களும் ஆனந்தம் அடைகிறார்கள், ஆனால் ஆன்மீக விஷயங்கள்தான் எப்பொழுதும் ஆன்மீக சிந்தையுடைய ஜனங்களின் உரையாடல்களில் சுவை சேர்க்கின்றன.—1 கொரிந்தியர் 2:13.
‘அவைகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருங்கள்’
9. பிலிப்பியருக்கு பவுல் கொடுத்த புத்திமதி என்ன?
9 நாம் பேசும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும்சரி, பிலிப்பியிலிருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த புத்திமதியைப் பின்பற்றினால் நமது உரையாடல்கள் மற்றவர்களை கட்டியெழுப்பும். அவர் இவ்வாறு எழுதினார்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ [“முக்கிய அக்கறைக்குரியவைகளெவைகளோ,” NW], நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே [“தொடர்ந்து,” NW] சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8) பவுல் குறிப்பிடும் விஷயங்கள் மிகவும் இன்றியமையாதவையாக இருப்பதால், ‘அவைகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருங்கள்’ என அவர் கூறுகிறார். நமது மனதையும் இருதயத்தையும் அவற்றால் நிரப்ப வேண்டும். பவுல் குறிப்பிட்ட எட்டு காரியங்களில் ஒவ்வொன்றிற்கும் கவனம் செலுத்துவது எவ்வாறு நம்முடைய உரையாடலுக்கு உதவும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
10. நமது உரையாடல்கள் எவ்வாறு உண்மையானவற்றை உட்படுத்தலாம்?
10 உண்மையுள்ளவை என்பது சரியான தகவலை மட்டுமே குறிப்பதில்லை. நேர்மையான, நம்பகமான விஷயங்களையும் குறிக்கிறது; இதற்கு ஓர் உதாரணம் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம். அப்படியானால், நம்முடைய மனதைக் கவர்ந்த பைபிள் சத்தியங்களையோ நம்மை ஊக்குவித்த பேச்சுக்களையோ, அல்லது நமக்கு உதவிய வேதப்பூர்வ அறிவுரைகளையோ பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, உண்மையானவற்றையே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். மறுபட்சத்தில், உண்மை போல தோன்றுகிற “ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற”வற்றை நாம் புறக்கணிக்கிறோம். (1 தீமோத்தேயு 6:20) அதோடு, புறங்கூறுவதையோ சந்தேகத்திற்குரிய அனுபவங்களை சொல்வதையோ தவிர்க்கிறோம்.
11. முக்கிய அக்கறைக்குரிய எந்தெந்த காரியங்களை நமது உரையாடல்களில் சேர்த்துக்கொள்ளலாம்?
11 முக்கிய அக்கறைக்குரியவை என்பது கண்ணியத்திற்குரிய விஷயங்கள், அற்பமான விஷயங்கள் அல்ல. அந்த முக்கிய விஷயங்களில் சில: கிறிஸ்தவ ஊழியம், நாம் வாழும் கொடிய காலங்கள், நன்னடத்தையைக் காத்துக்கொள்வதன் அவசியம் ஆகியவை. முக்கிய அக்கறைக்குரிய இத்தகைய விஷயங்களைப் பற்றி பேசும்போது, ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்பதற்கும், உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கும், நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கிப்பதற்கும் நாம் எடுத்திருக்கும் உறுதியை இன்னும் பலப்படுத்துகிறோம். சொல்லப்போனால், ஊழியத்தில் நமக்கு கிடைக்கும் ஆர்வமூட்டும் அனுபவங்களும், கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை நினைப்பூட்டுகிற உலக சம்பவங்களும், கட்டியெழுப்பும் விதத்தில் உரையாடுவதற்கு பல்வேறு தகவல்களை நமக்குத் தருகின்றன.—அப்போஸ்தலர் 14:27; 2 தீமோத்தேயு 3:1-5.
12. நீதியுள்ளவற்றையும் கற்புள்ளவற்றையும் சிந்திக்கும்படி பவுல் அறிவுரை கொடுப்பதால், எவற்றை நாம் தவிர்க்க வேண்டும்?
12 நீதியுள்ளவை என்ற வார்த்தை கடவுளுடைய பார்வையில் சரியாக இருப்பதை—அவருடைய தராதரங்களைப் பூர்த்தி செய்வதை—குறிக்கிறது. கற்பு என்பது சிந்தையிலும் நடத்தையிலும் தூய்மை என்ற கருத்தை தருகிறது. பழிதூற்றுதல், அசிங்கமான ஜோக்குகள், அல்லது இரட்டை அர்த்தமுடைய ஆபாச வார்த்தைகள் ஆகியவற்றிற்கு நம்முடைய உரையாடல்களில் இடமில்லை. (எபேசியர் 5:3; கொலோசெயர் 3:8) வேலை செய்யுமிடத்திலோ பள்ளியிலோ இருக்கும்போது உரையாடல்கள் இத்தகைய பாதையில் சென்றால் கிறிஸ்தவர்கள் ஞானமாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
13. அன்புள்ளவற்றையும் நற்கீர்த்தியுள்ளவற்றையும் மையமாக கொண்ட உரையாடல்களுக்கு சில உதாரணங்கள் தருக.
13 அன்புள்ளவற்றை சிந்திக்கும்படி பவுல் பரிந்துரை செய்தபோது, மனதுக்குகந்த இனிய விஷயங்களை அல்லது பகைமை, மனக்கசப்பு ஆகியவற்றிற்கு எதிரிடையான விஷயங்களை, அன்பை தூண்டுகிற விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டார். நற்கீர்த்தியுள்ளவை என்பது மெச்சத்தக்க தகவல்களை அல்லது நல்ல அறிக்கைகளை குறிப்பிடுகிறது. இத்தகைய நல்ல அறிக்கைகள் காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களில் தவறாமல் வெளிவரும் உண்மையுள்ள சகோதர சகோதரிகளின் வாழ்க்கை சரிதைகளையும் உட்படுத்துகிறது. விசுவாசத்தைப் பலப்படுத்தும் இந்தக் கட்டுரைகளை வாசித்த பிறகு ஏன் அவற்றைப் பற்றி மற்றவர்களுடன் பேசக் கூடாது? மற்றவர்களுடைய ஆன்மீக சாதனைகளைப் பற்றி கேட்பது எவ்வளவு உற்சாகமளிக்கிறது! இத்தகைய உரையாடல்கள் சபையில் அன்பையும் ஐக்கியத்தையும் வளர்க்கும்.
14. (அ) புண்ணியமானவை என்ற குணத்தை வெளிப்படுத்துவதற்கு நமக்கு எது தேவை? (ஆ) புகழத்தக்க காரியங்களையும் எவ்வாறு நமது பேச்சில் சேர்த்துக் கொள்ளலாம்?
14 “புண்ணியம் எதுவோ” என பவுல் குறிப்பிடுகிறார். புண்ணியம் என்பது நற்குணத்தை அல்லது உயர்ந்த ஒழுக்க நெறியைக் குறிக்கிறது. நாம் பேசுகிற விஷயங்கள் வேதப்பூர்வ நியமங்களின்படி இருக்கின்றனவா என்பதைக் குறித்தும், நீதியுள்ளவை, கற்புள்ளவை, புண்ணியம் ஆகியவற்றிலிருந்து வழிவிலகாமல் இருக்கின்றனவா என்பதைக் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும். புகழ் என்பது ‘பாராட்டை’ குறிக்கிறது. நீங்கள் ஒரு நல்ல பேச்சை கேட்டால் அல்லது சபையில் சிறந்த முன்மாதிரியை கவனித்தால், அதைப் பற்றி பேசுங்கள்—சம்பந்தப்பட்ட நபரிடமும் மற்றவர்களிடமும் பேசுங்கள். அப்போஸ்தலன் பவுல் தனது சக வணக்கத்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசினார். (ரோமர் 16:12; பிலிப்பியர் 2:19-22; பிலேமோன் 4-7) நமது படைப்பாளருடைய கைவண்ணமும் புகழ்ந்து பேச வேண்டிய விஷயமே. அது கட்டியெழுப்பும் உரையாடல்களுக்குத் தேவையான விஷயங்கள் பலவற்றை வாரி வழங்கும் களஞ்சியமாக திகழ்கிறது.—நீதிமொழிகள் 6:6-8; 20:12; 26:2.
கட்டியெழுப்பும் உரையாடல்களில் ஈடுபடுங்கள்
15. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடும்படி எந்த வேதப்பூர்வ கட்டளை சொல்கிறது?
15 உபாகமம் 6:6, 7 இவ்வாறு கூறுகிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் அர்த்தமுள்ள, ஆன்மீக உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்பதை இந்தக் கட்டளை சொல்கிறது என்பதில் சந்தேகமில்லை.
16, 17. யெகோவா மற்றும் ஆபிரகாமின் முன்மாதிரிகளிலிருந்து கிறிஸ்தவ பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 இயேசு தமது பூமிக்குரிய நியமிப்பைக் குறித்து தமது பரலோக தகப்பனுடன் எவ்வளவு நீண்ட நேரம் உரையாடியிருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். “நான் பேச வேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்” என இயேசு தமது சீஷர்களிடம் கூறினார். (யோவான் 12:49; உபாகமம் 18:18) தங்களையும் தங்களுடைய முன்னோர்களையும் யெகோவா ஆசீர்வதித்ததைப் பற்றி முற்பிதாவாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிடம் மணிக்கணக்காக பேசியிருக்க வேண்டும். கடவுளுடைய சித்தத்திற்கு தாழ்மையுடன் கீழ்ப்படிவதற்கு இத்தகைய உரையாடல்கள் இயேசுவிற்கும் ஈசாக்கிற்கும் நிச்சயமாகவே உதவி செய்தன.—ஆதியாகமம் 22:7-9; மத்தேயு 26:39.
17 கட்டியெழுப்பும் உரையாடல்கள் நமது பிள்ளைகளுக்கும் தேவை. அதிக வேலைகள் மத்தியிலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். முடிந்தால் ஒரு நாளில் ஒரு தடவையாவது குடும்பமாக சேர்ந்து சாப்பிட ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது? சாப்பிடும் நேரத்திலும் அதற்குப் பிறகும், குடும்பத்தின் ஆன்மீக ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிற கட்டியெழுப்பும் உரையாடல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
18. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நல்ல பேச்சுத் தொடர்பு இருப்பதால் வரும் நன்மைகளை காட்டும் அனுபவத்தை விவரிக்கவும்.
18 சுமார் 20 வயதுடைய ஆலிகான்ட்ரோ என்ற பயனியர் 14-வயது சிறுவனாக இருந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நினைத்துப் பார்க்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “பள்ளிக்கூட பையன்களும் ஆசிரியர்களும் அதிக செல்வாக்கு செலுத்தியதால் கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றியும் பைபிள் நம்பத்தகுந்ததா என்பதைப் பற்றியும் எனக்கு சந்தேகங்கள் ஏற்பட்டன. என்னுடைய பெற்றோர் பொறுமையுடன் என்னிடம் நியாயங்காட்டி பேசுவதற்கு மணிக்கணக்காக நேரத்தை செலவிட்டார்கள். கஷ்டமான இந்த சமயங்களில் என் சந்தேகங்களைப் போக்குவதற்கு மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையில் நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும் இத்தகைய உரையாடல்கள் எனக்கு உதவியாக இருந்தன.” ஆனால் இப்பொழுது? அவர் தொடர்ந்து கூறுகிறார்: “நான் இன்னும் என் வீட்டாருடன்தான் இருக்கிறேன். எங்களுக்கு அதிக வேலைகள் இருப்பதால் என்னுடைய அப்பாவும் நானும் தனியாக பேசுவதற்கு நேரமே கிடைப்பதில்லை. ஆகவே வாரத்திற்கு ஒருமுறை அவர் வேலை செய்யுமிடத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறோம். உரையாடும் அந்த நேரத்தை பொன்னான நேரமாக நான் கருதுகிறேன்.”
19. நம் அனைவருக்கும் ஏன் ஆன்மீக உரையாடல்கள் தேவை?
19 பலனளிக்கும் ஆன்மீக உரையாடல்களில் நமது சக விசுவாசிகளுடன் ஈடுபட கிடைக்கும் வாய்ப்புகளை நாமும் பொக்கிஷமாக கருதுகிறோம் அல்லவா? கூட்டங்களில், வெளி ஊழியத்தில், சமூக கூட்டுறவுகளில் அல்லது பயணம் செய்கையில் இந்த வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றன. ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுடன் பேசுவதற்கு பவுல் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கு, உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்’ என அவர் எழுதினார். (ரோமர் 1:11) “சக கிறிஸ்தவர்களுடன் ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசுவது இன்றியமையாத ஒரு தேவையை பூர்த்தி செய்கிறது” என யோஹானஸ் என்ற கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் கூறினார். “அவை இதயத்திற்கு இதமளிக்கின்றன, அன்றாட பாரத்தை குறைக்கின்றன. வயதானவர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் உண்மையுடன் நிலைத்திருப்பதற்கு எது அவர்களுக்கு உதவி செய்தது என்பதைப் பற்றியும் சொல்லும்படி நான் அவர்களிடம் அடிக்கடி கேட்பதுண்டு. இப்படி பல வருடங்களாக அநேகருடன் நான் பேசியிருக்கிறேன், ஒவ்வொருவரும் சிறிதளவிலாவது ஞானத்தை அல்லது என் வாழ்க்கைக்கு வளமூட்டிய அறிவொளியை எனக்கு தந்திருக்கிறார்கள்.”
20. கூச்ச சுபாவமுடைய ஒருவரை சந்தித்தால் நாம் என்ன செய்யலாம்?
20 நீங்கள் ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போது சிலர் அதற்கு ஆர்வம் காட்டவில்லையென்றால் என்ன செய்யலாம்? அதற்காக நீங்கள் மனம் தளர்ந்துவிடாதீர்கள். ஒருவேளை மற்றொரு சமயத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என சாலொமோன் குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 25:11) கூச்ச சுபாவமுள்ளவர்களிடம் புரிந்துகொள்ளுதலோடு நடவுங்கள். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.”a (நீதிமொழிகள் 20:5) மிக முக்கியமாக, மற்றவர்களுடைய சுபாவங்கள் எப்படியிருந்தாலும்சரி, உங்கள் மனதைத் தொட்ட விஷயங்களைப் பற்றி பேசாமல் இருந்துவிடாதீர்கள்.
ஆன்மீக உரையாடல்கள் பலனளிக்கின்றன
21, 22. ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடும்போது நாம் அடையும் நன்மைகள் யாவை?
21 “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என பவுல் அறிவுரை கூறினார். (எபேசியர் 4:29; ரோமர் 10:10) உரையாடல்களை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு முயற்சி தேவைப்படலாம், அதனால் வரும் பலன்களோ அநேகம். மற்றவர்களுடன் நமது நம்பிக்கைகளைப் பற்றி சொல்வதற்கும் நமது சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதற்கும் ஆன்மீக உரையாடல்கள் நமக்கு உதவுகின்றன.
22 அப்படியானால், மற்றவர்களை கட்டியெழுப்புவதற்கும் கடவுளை துதிப்பதற்கும் பேசும் வரத்தைப் பயன்படுத்துவோமாக. இத்தகைய உரையாடல்கள் நமக்கு திருப்தியையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் அளிக்கும். எல்லாவற்றையும்விட, அவை யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கும், ஏனென்றால் அவர் நமது உரையாடல்களை கவனித்துக் கேட்கிறார், நமது நாவை தகுந்த முறையில் பயன்படுத்தும்போது ஆனந்தம் அடைகிறார். (சங்கீதம் 139:4; நீதிமொழிகள் 27:11) நமது உரையாடல்கள் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையாக இருக்கும்போது, யெகோவா நம்மை மறக்க மாட்டார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். நம்முடைய நாளில் யெகோவாவுக்கு சேவை செய்து வருகிறவர்களைக் குறிப்பிட்டு பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” (மல்கியா 3:16; 4:5) நமது உரையாடல்கள் ஆன்மீக ரீதியில் கட்டியெழுப்புபவையாக இருப்பது எவ்வளவு இன்றியமையாதது!
[அடிக்குறிப்பு]
a இஸ்ரவேலில் சில கிணறுகள் அதிக ஆழமாக இருந்தன. சுமார் 80 அடி ஆழமுள்ள ஒரு நீர்த்தேக்கத்தை கிபியோனில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். தண்ணீரை மொண்டெடுக்க அதற்குள் இறங்குவதற்கு வசதியாக அதில் படிக்கட்டுகள் இருக்கின்றன.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நமது உரையாடல்கள் நம்மைப் பற்றி என்ன சொல்கின்றன?
• கட்டியெழுப்பும் என்னென்ன விஷயங்களைப் பற்றி நாம் பேசலாம்?
• குடும்ப வட்டாரத்தில், கிறிஸ்தவ சபையில் உரையாடல்கள் என்ன பாகத்தை வகிக்கின்றன?
• கட்டியெழுப்பும் உரையாடல்களால் வரும் நன்மைகள் யாவை?
[பக்கம் 12-ன் படங்கள்]
கட்டியெழுப்பும் உரையாடல்கள் இவற்றின் மீது ஊன்றியிருக்கும்:
‘உண்மையுள்ளவற்றில்’
‘முக்கிய அக்கறைக்குரியவற்றில்’
‘புகழ்ச்சிக்குரியவற்றில்’
‘நற்கீர்த்தியுள்ளவற்றில்’
[படங்களுக்கான நன்றி]
Video cover, Stalin: U.S. Army photo; Creator book cover, Eagle Nebula: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA
[பக்கம் 13-ன் படம்]
ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடுவதற்கு சாப்பாட்டு நேரம் சிறந்த வாய்ப்பளிக்கிறது