‘அவர்களின் சத்தம் பூமியெங்கும் செல்கிறது’
‘சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.’—மத்தேயு 28:19.
1, 2. (அ) இயேசு தமது சீஷர்களிடத்தில் என்ன வேலையை ஒப்படைத்தார்? (ஆ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் எப்படி அந்தளவுக்கு செய்ய முடிந்தது?
இயேசு பரலோகத்திற்கு செல்வதற்கு சற்று முன்பு தம் சீஷர்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்தார். ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்’ என அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:19) எப்பேர்ப்பட்ட மலைப்பூட்டும் வேலை!
2 சற்று யோசித்துப் பாருங்கள்! பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியைப் பெற்ற சுமார் 120 சீஷர்கள் இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்கள்; வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மேசியாவே இயேசு என்றும், அவராலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்றும் மற்றவர்களுக்கு சொல்வதன் மூலம் இந்த வேலையை செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 2:1-36) இந்தச் சிறிய தொகுதியினரால் எப்படி “சகல ஜாதிகளையும்” சென்றெட்ட முடியும்? மனித கண்ணோட்டத்தில் இது முடியாத விஷயமே, ஆனால் “தேவனாலே எல்லாம் கூடும்.” (மத்தேயு 19:26) ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் ஆதரவு இருந்தது, அவர்களுக்கு அவசர உணர்வும் இருந்தது. (சகரியா 4:6; 2 தீமோத்தேயு 4:2, NW) ஆகவே, சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே, “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருவதாக அப்போஸ்தலன் பவுலால் சொல்ல முடிந்தது.—கொலோசெயர் 1:23.
3. மெய்க் கிறிஸ்தவமாகிய “கோதுமை” கண்ணில் படாதவாறு எது மறைத்துப்போட்டது?
3 ஏறக்குறைய முதல் நூற்றாண்டு முழுவதிலும் மெய் வணக்கம் பரவிக்கொண்டே வந்தது. ஆனால், எதிரியாகிய சாத்தான் களைகளை விதைக்கும் காலம் வரும், அப்போது “கோதுமை”யாகிய மெய்க் கிறிஸ்தவம் அறுப்புக் காலம் வரையில் பல நூற்றாண்டுகளுக்கு கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டுவிடும் என இயேசு முன்கூட்டியே சொல்லியிருந்தார். அப்போஸ்தலர்கள் இறந்த பின்னர் அந்த விஷயம் உண்மையாயிற்று.—மத்தேயு 13:24-39.
இன்று அதிவேக அதிகரிப்பு
4, 5. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் 1919 முதற்கொண்டு என்ன வேலையை செய்ய ஆரம்பித்தனர், அது ஏன் பெரும் சவாலாக இருந்தது?
4 மெய்க் கிறிஸ்தவமாகிய கோதுமையை களைகளிலிருந்து தனியாக பிரித்தெடுக்க வேண்டிய காலம் 1919-ல் வந்தது. இயேசு கொடுத்த அந்த மாபெரும் வேலை இன்னும் முடிவடையவில்லை என்பதை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அறிந்தனர். தாங்கள் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வந்ததை அவர்கள் உறுதியாக நம்பினர்; “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்ற இயேசுவின் தீர்க்கதரிசனத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். (2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 24:14) ஆம், இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர்.
5 இருந்தாலும், பொ.ச. 33-ல் வாழ்ந்த சீஷர்களைப் போன்று அவர்களும் பெரும் சவாலை சந்தித்தனர். ஏனெனில் ஆங்காங்கே சில நாடுகளில் சில ஆயிரம் கிறிஸ்தவர்களே இருந்தனர். நற்செய்தியை அவர்களால் எப்படி ‘பூலோகமெங்கும்’ பிரசங்கிக்க முடியும்? இதை சற்று நினைவில் கொள்ளுங்கள்: இராயர்களின் காலத்தில் மக்கள்தொகை ஒருவேளை 30 கோடி இருந்திருக்கும்; ஆனால் முதல் உலகப் போருக்குப் பின் அது 200 கோடியாக அதிகரித்திருந்தது. 20-ம் நூற்றாண்டு முழுவதிலும் அது தொடர்ந்து அதிகரிக்கும்.
6. நற்செய்தியை பரப்புவதில் 1930-களுக்குள் எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது?
6 என்றாலும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த ஊழியர்களும் யெகோவாவில் முழு விசுவாசம் வைத்து தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை தொடங்கினர்; யெகோவாவின் பரிசுத்த ஆவியும் அவர்கள் மீது இருந்தது. 1930-களின் மத்திபத்தில் 115 நாடுகளில் சுமார் 56,000 சுவிசேஷகர்கள் பைபிள் சத்தியத்தை அறிவித்து வந்தனர். பெருமளவு வேலை ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை அது காட்டியது, ஆனால் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது.
7. (அ) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன புதிய சவாலை சந்தித்தார்கள்? (ஆ) ‘வேறே ஆடுகளின்’ ஆதரவோடு இந்தக் கூட்டிச் சேர்க்கும் வேலை இன்று வரை எவ்வாறு முன்னேறியுள்ளது?
7 அடுத்ததாக, வெளிப்படுத்துதல் 7:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘திரள்கூட்டத்தாரை’ பற்றிய அடையாளத்தை ஆழமாக புரிந்துகொண்டது மற்றொரு புதிய சவாலை முன்வைத்தது; கடினமாய் உழைத்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் மூலமாக உதவி கிடைக்கும் என்ற உறுதியையும் அது அளித்தது. ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த பூமிக்குரிய நம்பிக்கையுடைய எண்ணிலடங்கா கூட்டத்தாரை “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” கூட்டிச் சேர்க்க வேண்டியிருந்தது. (யோவான் 10:16) இவர்கள் ‘இரவும் பகலும் யெகோவாவை சேவிப்பார்கள்.’ (வெளிப்படுத்துதல் 7:15) அதாவது, பிரசங்கித்து கற்றுக்கொடுக்கும் வேலையில் இவர்களும் கைகொடுப்பார்கள். (ஏசாயா 61:5) அதன் விளைவாக, சுவிசேஷகர்கள் பத்தாயிரங்களாகவும் பிற்பாடு லட்சங்களாகவும் அதிகரித்ததைப் பார்த்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். 2003-ல் புதிய உச்சநிலையாக 64,29,351 பேர் பிரசங்க வேலையில் ஈடுபட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் திரள்கூட்டத்தினரே.a இவர்களுடைய உதவிக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்; வேறே ஆடுகளோ, அபிஷேகம் பண்ணப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு தோள்கொடுக்க கிடைத்த சிலாக்கியத்திற்காக நன்றியுடன் இருக்கிறார்கள்.—மத்தேயு 25:34-40.
8. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் மீது கொண்டுவரப்பட்ட பயங்கரமான சோதனைகளுக்கு அவர்கள் எப்படி பிரதிபலித்தனர்?
8 கோதுமை வகுப்பார் மீண்டும் தென்பட ஆரம்பித்தபோது, அவர்களுக்கு எதிராக சாத்தான் கடுமையாக போர் தொடுத்தான். (வெளிப்படுத்துதல் 12:17) திரள் கூட்டத்தார் தோன்ற ஆரம்பித்தபோது அவன் என்ன செய்தான்? கடும் மூர்க்கமாக செயல்பட்டான்! இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் உலகம் முழுவதிலும் மெய் வணக்கத்திற்கு ஏற்பட்ட தாக்குதலுக்கு அவனே காரணமாக இருந்தான் என்பதை சந்தேகிக்க முடியுமா என்ன? போரிட்ட இரு தரப்பினராலும் கிறிஸ்தவர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாயினர். அருமையான சகோதர சகோதரிகள் அநேகர் பயங்கரமான சோதனைகளை அனுபவித்தனர், சிலர் தங்கள் விசுவாசத்தின் நிமித்தம் உயிரையும் இழந்தனர். இருந்தாலும், சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளை அவர்கள் எதிரொலித்தனர்: “தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (சங்கீதம் 56:4; மத்தேயு 10:28) யெகோவாவின் பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் வேறே ஆடுகளும் ஐக்கியமாக உறுதியுடன் நிலைத்து நின்றனர். (2 கொரிந்தியர் 4:7) அதன் பலனாக, “தேவவசனம் விருத்தியடைந்தது.” (அப்போஸ்தலர் 6:7) 1939-ல் போர் தொடங்கியபோது, 72,475 உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையில் பங்குகொண்டதாக அறிக்கை செய்தனர். ஆனால், போர் முடிவுக்கு வந்த ஆண்டாகிய 1945-ல் 1,56,299 கிறிஸ்தவ சாட்சிகள் நற்செய்தியைப் பரப்புவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதை அந்த ஆண்டிற்கான முழுமை பெறாத அறிக்கை காட்டியது. சாத்தானுக்கு எப்பேர்ப்பட்ட அடி!
9. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் எந்த புதிய பள்ளிகளைப் பற்றி அறிவிக்கப்பட்டது?
9 இரண்டாம் உலகப் போர் உலகையே உலுக்கிவிட்ட சமயத்திலும் பிரசங்க வேலையை செய்து முடிக்க முடியுமா என கடவுளுடைய ஊழியர்கள் சந்தேகிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சொல்லப்போனால், 1943-ல் போர் அதன் உச்சக்கட்டத்திற்கு சென்ற சமயத்தில் இரண்டு புதிய பள்ளிகளை துவங்குவதைப் பற்றி அறிவிக்கப்பட்டது. முதல் பள்ளி, தேவராஜ்ய ஊழியப் பள்ளி என இப்போது அழைக்கப்படுகிறது; பிரசங்கித்து சீஷராக்குவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவ சாட்சிக்கும் பயிற்சி அளிப்பதற்காக எல்லா சபைகளிலும் இப்பள்ளியை நடத்த வேண்டியிருந்தது. இரண்டாவது பள்ளி, உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளி. இது, வெளி நாடுகளில் பிரசங்க வேலையை விரிவுபடுத்த மிஷனரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக நடத்தப்பட்டது. ஆம், போரின் கொட்டம் ஒருவழியாக அடங்கியபோது, மெய்க் கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையில் தீவிரமாக இறங்குவதற்கு தயாரானார்கள்.
10. கடந்த ஆண்டில் யெகோவாவின் மக்கள் தங்கள் வைராக்கியத்தை எப்படி காட்டினர்?
10 அவர்கள் எவ்வளவு அருமையாக தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்! தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பயிற்சி பெற்ற எல்லாருமே—சிறியோர் பெரியோர், பெற்றோர் பிள்ளைகள், சுகவீனரும்கூட—இயேசு கொடுத்த மாபெரும் வேலையில் பங்குகொண்டனர், தொடர்ந்து பங்குகொண்டும் வருகின்றனர். (சங்கீதம் 148:12, 13; யோவேல் 2:28, 29) 2003-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8,25,185 பேர் தற்காலிகமாக அல்லது தொடர்ச்சியாக பயனியர் சேவையில் ஈடுபட்டதன் மூலம் அவசர உணர்வை மெய்ப்பித்துக் காட்டினர். அதே ஆண்டில், ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் 123,47,96,477 மணிநேரங்களை செலவிட்டனர். தம்முடைய மக்களின் வைராக்கியத்தைக் கண்டு யெகோவா நிச்சயமாகவே சந்தோஷப்படுகிறார்!
வெளிநாடுகளில்
11, 12. மிஷனரிகளின் சிறந்த பதிவை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
11 பல ஆண்டுகளாகவே கிலியட் பட்டதாரிகளும், சமீப ஆண்டுகளில் ஊழியப் பயிற்சி பள்ளி பட்டதாரிகளும் அற்புதமான பதிவை ஏற்படுத்தியிருக்கின்றனர். உதாரணத்திற்கு, 1945-ல் மிஷனரிகள் முதன்முதலாக பிரேசிலில் கால் பதித்த சமயத்தில் 400-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே அங்கு இருந்தனர். இவர்களும் பிற்பாடு வந்த மிஷனரிகளும் பிரேசிலைச் சேர்ந்த வைராக்கியமான சகோதரர்களுடன் ஒன்று சேர்ந்து அயராது உழைத்திருக்கின்றனர், அதனால் அவர்களுடைய பிரயாசங்களை யெகோவா மிகுதியாய் ஆசீர்வதித்திருக்கிறார். எப்படியெனில் 2003-ஆம் ஆண்டில் பிரேசில் புதிய உச்சநிலையாக 6,07,362 பேரை அறிக்கை செய்திருக்கிறது; இதை அந்தக் காலத்து பிரஸ்தாபி ஒருவர் கண்டால் எவ்வளவாய் பூரித்துப்போவார்!
12 இப்போது ஜப்பானைப் பற்றி சிந்திக்கலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு அந்நாட்டில் சுமார் நூறு ராஜ்ய பிரஸ்தாபிகளே இருந்தனர். போர்க் காலத்தில் மூர்க்கத்தனமான துன்புறுத்துதலின் காரணமாக அவர்களுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. போர் முடிவுறும் தறுவாயில் ஆவிக்குரிய ரீதியிலும் சரீர ரீதியிலும் உயிரோடு மீதமிருந்தவர்கள் வெகு சிலரே. (நீதிமொழிகள் 14:32, NW) உத்தமத்தைக் காப்பதில் சிறந்து விளங்கிய அந்தச் சிலர், 1949-ல் கிலியட் வகுப்பில் பயிற்சி பெற்று வந்த முதல் 13 மிஷனரிகளை வரவேற்பதில் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆர்வமும் உபசரிக்கும் குணமும் படைத்த ஜப்பான் சகோதரர்களோடு அந்த மிஷனரிகள் விரைவில் பாசத்தோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2003-ல் உச்சநிலையாக 2,17,508 பிரஸ்தாபிகளை ஜப்பான் அறிக்கை செய்தது! அந்த நாட்டில் யெகோவா தம் மக்களை உண்மையில் அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். மற்ற அநேக நாடுகளும் இதேவிதமாக அறிக்கை செய்திருக்கின்றன. வெளிநாட்டு பிராந்தியங்களில் பிரசங்கிக்க முடிந்தவர்கள் நற்செய்தியை பரப்புவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்; அதன் விளைவாக, 2003-ல் உலகம் முழுவதும் 235 நாடுகளிலும் தீவுகளிலும் பிராந்தியங்களிலும் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ‘சகல ஜாதிகளிலிருந்தும்’ திரள் கூட்டத்தார் வந்துகொண்டிருக்கின்றனர்.
“சகல . . . கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து”
13, 14. நற்செய்தியை ‘சகல பாஷைகளிலும்’ பிரசங்கிப்பதன் முக்கியத்துவத்தை யெகோவா எவ்விதத்தில் காட்டினார்?
13 பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற சீஷர்கள் அங்கு கூடிவந்திருந்தவர்களுக்கு முன்பாக பல பாஷைகளில் பேசியதே முதல் அற்புதமாகும். அவர்கள் பேசியதை கேட்டவர்கள் சர்வதேச மொழியை, ஒருவேளை கிரேக்கு மொழியை பேசுபவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் ‘தேவபக்தியுள்ள யூதர்களாக’ இருந்ததால் ஆலயத்தில் எபிரெயு பாஷையில் நடத்தப்பட்ட ஆராதனைகள் அவர்களுக்கு புரிந்திருக்கும் என தோன்றுகிறது. ஆனாலும் தங்கள் தாய்மொழியில் நற்செய்தியைக் கேட்டபோது அது அவர்களுடைய கவனத்தை உண்மையிலேயே ஈர்த்தது.—அப்போஸ்தலர் 2:5, 7-12.
14 இன்றும்கூட அநேக மொழிகளில் பிரசங்க வேலை செய்யப்பட்டு வருகிறது. திரள் கூட்டமான ஜனங்கள் சகல ஜாதிகளிலிருந்து மட்டுமல்ல, சகல ‘கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்தும்’ வருவார்கள் என முன்னறிவிக்கப்பட்டது. இதே போன்ற தீர்க்கதரிசனத்தை சகரியாவின் வாயிலாக யெகோவா இவ்வாறு உரைத்தார்: ‘பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.’ (சகரியா 8:23) அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை யெகோவாவின் சாட்சிகள் பெற்றிராவிட்டாலும், மக்கள் பேசும் மொழியில் கற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
15, 16. உள்ளூர் மொழிகளில் பிரசங்கிக்கும் சவாலை மிஷனரிகளும் மற்றவர்களும் எப்படி சந்தித்திருக்கிறார்கள்?
15 ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற அதிக பரவலாக பேசப்படும் சில மொழிகள் இன்று இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், பிற நாடுகளில் சேவிப்பதற்காக தங்கள் தாயகத்தை விட்டு வந்தவர்கள் அந்நாட்டு மொழியை கற்றுக்கொள்ள முயலுகிறார்கள்; “நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வு உடையவர்கள்” நற்செய்தியை எளிதில் புரிந்துகொள்வதற்காக அவ்வாறு செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 13:48, NW) அது கடினமாக இருக்கலாம். துவாலூ என்ற தென் பசிபிக் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கு தங்களுடைய சொந்த மொழியில் பிரசுரங்கள் தேவைப்பட்டபோது ஒரு மிஷனரி அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். அந்த மொழியில் ஓர் அகராதிகூட இல்லாததால், துவாலூ சொல் அகராதி ஒன்றை அவர் உருவாக்க ஆரம்பித்தார். நாளடைவில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்b என்ற புத்தகம் துவாலூ மொழியில் பிரசுரிக்கப்பட்டது. குரசோவுக்கு மிஷனரிகள் முதன்முதலாக சென்ற சமயத்தில், அங்கு பேசப்படும் பாபியமென்டோ மொழியில் எந்தவொரு பைபிள் பிரசுரமும் கிடையாது, அகராதியும் கிடையாது. அந்த மொழியில் எப்படி எழுதுவது என்பதன் பேரில் வித்தியாசமான அபிப்பிராயங்கள் வேறு இருந்தன. என்றாலும், மிஷனரிகள் சென்ற இரண்டு வருடத்திற்குள், அந்த மொழியில் முதல் பைபிள் துண்டுப்பிரதி பிரசுரிக்கப்பட்டது. இன்றோ, காவற்கோபுர பத்திரிகை பிரசுரிக்கப்படும் 133 மொழிகளில் பாபியமென்டோ மொழியும் ஒன்று; ஆங்கில பதிப்பு பிரசுரிக்கப்படும் சமயத்திலேயே இம்மொழியிலும் பிரசுரிக்கப்படுகிறது.
16 நமிபியாவுக்கு சென்ற முதல் மிஷனரிகளுக்கு மொழிபெயர்ப்பில் உதவ அந்நாட்டைச் சேர்ந்த தகுதிவாய்ந்த ஒரு யெகோவாவின் சாட்சி கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, நமது பிரசுரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் “பரிபூரணம்” போன்ற வார்த்தைகளுக்கு ஒத்த வார்த்தைகள் அங்கு பேசப்படும் மொழிகளில் ஒன்றாகிய நாமா மொழியில் இல்லை. ஒரு மிஷனரி இவ்வாறு தெரிவிக்கிறார்: “பைபிளைப் படித்துவந்த ஸ்கூல் டீச்சர்களையே முக்கியமாக மொழிபெயர்க்கும் வேலைக்கு பயன்படுத்தினேன். சத்தியத்தை பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாததால் நான் அவர்களோடு உட்கார்ந்து ஒவ்வொரு வாக்கியமும் திருத்தமாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.” இருந்தாலும், நாளடைவில் புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதி நான்கு நமிபிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றோ, காவற்கோபுர பத்திரிகை குவானியாமா, ன்டோங்கா மொழிகளில் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகிறது.
17, 18. மெக்சிகோவிலும் பிற நாடுகளிலும் என்னென்ன சவால்கள் சமாளிக்கப்பட்டு வருகின்றன?
17 ஸ்பானிய மொழியே மெக்சிகோவில் பேசப்படும் முக்கிய மொழி. ஆனால், ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பாகவே, அங்கு பல மொழிகள் பேசப்பட்டு வந்தன; அவற்றில் பல இன்னும் பேசப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் ஏழு மெக்சிகன் மொழிகளிலும், மெக்சிகன் சைகை மொழியிலும் பிரசுரிக்கப்படுகின்றன. அமெரிக்க இந்திய மொழியில் பிரசுரிக்கப்பட்ட முதல் மாதாந்தர பதிப்பு மாயா மொழி ராஜ்ய ஊழியம் ஆகும். சொல்லப்போனால், மெக்சிகோ நாட்டிலுள்ள 5,72,530 ராஜ்ய பிரஸ்தாபிகளின் மத்தியில் மாயா மற்றும் அஸ்தெக் மொழியினர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
18 சமீப காலங்களில், கோடிக்கணக்கான ஜனங்கள் அகதிகளாக அயல்நாடுகளுக்கு தப்பி சென்றிருக்கிறார்கள், அல்லது பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அயல்நாடுகளில் குடிபுகுந்திருக்கிறார்கள். இதனால், இப்போது அநேக நாடுகளில் இதுவரையில்லாத அளவுக்கு வேற்று மொழி பிராந்தியங்கள் உள்ளன. யெகோவாவின் சாட்சிகள் இதை ஒரு சவாலாக ஏற்றுள்ளனர். இத்தாலியை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அங்கு இத்தாலி மொழி தவிர 22 மொழிகளில் சபைகளும் தொகுதிகளும் உள்ளன. வேற்று மொழி பேசும் ஆட்களுக்கு பிரசங்கிப்பதில் சகோதரர்களுக்கு உதவ சமீபத்தில் வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன; அவற்றில் இத்தாலிய சைகை மொழி உட்பட 16 மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தங்கள் நாட்டில் குடிபுகுந்துள்ள பெரும் எண்ணிக்கையானோருக்கு பிரசங்கிப்பதற்காக வேறுபல நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் இதுபோன்ற முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆம், யெகோவாவின் உதவியால் உண்மையிலேயே அநேக பாஷைக்காரரிலிருந்து திரள் கூட்டமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
“பூமியெங்கும்”
19, 20. பவுல் கூறிய என்ன வார்த்தைகள் இன்று குறிப்பிடத்தக்க விதத்தில் நிறைவேறி வருகின்றன? விளக்கவும்.
19 முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவர்களின் சத்தம் பூமியெங்கும் அவர்களின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.’ (ரோமர் 10:18) முதல் நூற்றாண்டிலேயே அவர் அப்படி சொன்னார் என்றால் நமது நாளில் அது எந்தளவுக்கு உண்மையாயிருக்கிறது! லட்சோப லட்சம் மக்கள்—ஒருவேளை சரித்திரத்தில் முன்னொருபோதும் இருந்திராத எண்ணிக்கையானோர்—“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என சொல்கிறார்கள்.—சங்கீதம் 34:1.
20 அதுமட்டுமல்ல, இந்த வேலை சுணங்கி விடவில்லை. ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரசங்க வேலையில் அதிகமதிகமான மணிநேரங்கள் செலவிடப்படுகின்றன. கோடிக்கணக்கான மறுசந்திப்புகளும் லட்சக்கணக்கான பைபிள் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. சத்தியத்தின் பேரில் ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில், இயேசுவின் நினைவு நாள் ஆசரிப்புக்கு புதிய உச்சநிலையாக 1,60,97,622 பேர் ஆஜராயினர். இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, கடும் துன்புறுத்துதலை சகித்த நம் சகோதரர்களின் உறுதியான உத்தமத்தன்மையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோமாக. அதுமட்டுமல்ல, 1919 முதற்கொண்டு யெகோவாவின் சேவையில் தங்களையே அர்ப்பணித்து வந்திருக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் காண்பித்த வைராக்கியத்தை நாமும் காட்டுவோமாக. “சுவாசமுள்ள யாவும் யாவைத் துதிப்பதாக. ஜனங்களே, யாவைத் துதியுங்கள்” என்ற சங்கீதக்காரனின் பாடலை எல்லாரும் தொடர்ந்து எதிரொலிப்போமாக!—சங்கீதம் 150:6, NW.
[அடிக்குறிப்புகள்]
a இப்பத்திரிகையில் 18 முதல் 21 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள வருடாந்தர அறிக்கையைப் பாருங்கள்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• 1919-ல் சகோதரர்கள் என்ன வேலையை ஆரம்பித்தனர், அது ஏன் சவாலாக இருந்தது?
• பிரசங்க வேலையை ஆதரிக்க வேறு யாரும் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள்?
• வெளிநாடுகளில் சேவிக்கும் மிஷனரிகளும் மற்றவர்களும் என்ன பதிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்?
• இன்று தமது மக்கள் செய்யும் வேலையை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சியை குறிப்பிடுவீர்கள்?
[பக்கம் 18-21-ன் அட்டவணை]
2003 உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
(பவுண்டு வால்யூமைப் பார்க்கவும்)
[பக்கம் 14, 15-ன் படங்கள்]
இரண்டாம் உலகப் போர் உலகையே உலுக்கிவிட்ட சமயத்திலும் பிரசங்க வேலையை செய்து முடிக்க முடியுமா என கடவுளுடைய ஊழியர்கள் சந்தேகிக்கவில்லை
[படத்திற்கான நன்றி]
குண்டுவெடிப்பு: U.S. Navy photo; others: U.S. Coast Guard photo
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து திரள் கூட்டத்தார் வருவார்கள்